ஞாயிறு, பிப்ரவரி 23, 2014

உமா மகேஸ்வரி கொலையின் பின்னணியில்...( ‘அபுசி-தொபசி’-31)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

கடந்த இரண்டு மூன்று நாட்களாகப் பத்திரிகைகளில்  உமா மகேஸ்வரி பற்றிதான் பேச்சு. சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த  ஓவிய ஆசிரியரின் மகள். 23 வயது. ஐ.ட்டி. நிறுவனமான டி.சி.எஸ்.ஸில் சென்னையில் சிறுசேரியில் பணியாற்றிக்கொண்டிருந்தவர். கடந்த 13ஆம் தேதி இரவுப்பணி முடிந்து சென்றவர், தன் தோழியரோடு தங்கியிருக்கும் வீட்டிற்குத் திரும்பவில்லை. சில நாள் கழித்து அழுகிய நிலையில் அவரது பிணம், அதே சிறுசேரியில் ஒரு முட்புதர் அருகே கண்டெடுக்கப்பட்டது. இது பற்றி துப்பு கொடுத்தால் இரண்டு லட்சம் பரிசாம். போலீஸ் அறிவிப்பு.

வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள் அதிகரித்துவரும் இந்நாளில், தன் வயதுக்கொத்த இளம்பெண்கள் கம்பீரமாகக் குளுகுளு அறையில் அமர்ந்து கைநிறையச் சம்பளம் வாங்குவதைக் காணப்பொறாத ஒருவர்தான் இக்கொலையைச் செய்திருக்கவேண்டும். பக்குவமில்லாத இத்தகைய கிராமத்து இளம்பெண்களைக் காதல் என்ற பெயரில் கவர்ந்திழுத்து, பின், கொலை செய்துவிடும் போக்கும் நிலவுகிறது. (டில்லி, பெங்களூரில் இது சர்வசாதாரணம்.) பெற்றோர்களின் பார்வையில் இத்தகைய நிகழ்வுகளை எப்படித் தடுக்க முடியும் என்று பார்க்கிறேன்.

இரவுநேரப் பணிகளுக்குச் செல்லாதே என்று தடுக்கமுடியுமா? வழியில்லை. நல்ல பணியில் இருந்தால் தானே பெண்களுக்குத் திருமணம் நடக்கிறது! அது மட்டுமன்றி, முதலில் இரவுப் பணியில் ஓராண்டாவது இருந்தவர்களுக்குத்தான் பகல்நேரப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

அலுவலகத்திலிருந்து அவர்களின் வாகனத்தில்தான் வந்துபோகவேண்டும் என்று எதிர்பார்க்கலாமா? அதுவும் இயலாது. நகரின் எல்லாப் பகுதிகளுக்கும் வாகனம் செலுத்தமுடியுமா எந்தக் கம்பெனியாலாவது? அதே சமயம், வாகன வசதி இல்லை என்பதற்காக, நல்ல கம்பெனியிலிருந்து வரும் வாய்ப்பை உதறித் தள்ள முடியுமா?

நிகழ்ச்சி நடந்த சிறுசேரிக்கு நான் அடிக்கடி போகிறேன். வானளாவியதும் தரையளாவியதுமான கட்டிடங்கள் நிறைந்த தனிப் பகுதி. நடக்க இடமின்றி, கம்பெனி பஸ்கள் எங்கும் முகாமிட்டிருக்கும். ஆனால் இரவு ஆறரை ஆகிவிட்டால் தெரு விளக்குகள் கிடையாது. ஆட்டோ போன்ற வசதி கிடையாது. யார் லிஃபட் கொடுத்தாலும் ஏற்றுக்கொண்டுதான் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரமுள்ள நெடுஞ்சாலையின் முகப்பிற்கு வரமுடியும்.

சிறுசேரியின் அலுவலகங்களிலிருந்து பின்புறமாக, சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம், ஆள் அரவமற்ற, முட்புதர்கள் நிறைந்த, நல்ல சாலைகளற்ற, தரைவழியே நடந்து போனால்தான் எல்-அண்ட-ட்டி என்ற பல கோபுரக் குடியிருப்பு வரும். (இங்கும் மனிதர்கள்தாம் வாழ்கிறார்கள்!) எனவே, அலுவலகம் முடிந்து, எந்த இளம் பெண்ணையாவது இந்த இருட்டில்  கடத்திக்கொண்டுவந்து கற்பழித்தால் போலீசுக்குத் தெரியவே ஒருவாரம் ஆகும். (இந்தப் பகுதியில் போலீஸ் ரோந்து என்று எதுவும் கிடையாது என்று தெரிகிறது. அப்படியே போலீஸ் ரோந்து வந்தாலும், அந்த ரோந்து வண்டி நகர்ந்தபிறகு நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அவர்களை எப்படிப் பொறுப்பாக்கமுடியும்?)

சிறுசேரி, பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத பகுதிதான். இரவுப் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வரும் இளைஞர்களைத் தாக்கி, மொபைல்போன், கிரெடிட் கார்டுகளைப் பறித்துக்கொள்ளும் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடந்துள்ளன.

எனவே, முதலாகச் செய்யவேண்டியது:

 1. சிறுசேரியிலுள்ள கம்பெனிகள், உடனடியாக, சிறுசேரிக்குள் தனிப்பட்ட பாதுகாவல்படை ஒன்றை அமைக்கவேண்டும். அது, சிறுசேரி முகப்பிலிருந்து,  எல்-அண்ட-ட்டி குடியிருப்புவரை பாதுகாப்பில் ஈடுபடவேண்டும்.
 2. முட்புதர்கள் முழுமையாக அகற்றப்படவேண்டும். சரியான சாலைவசதி செய்யப்படவேண்டும்.
 3. சென்னைக்கு வெளியிலிருந்து வந்து, சிறுசேரியில் பணியாற்றும் பெண்களின் கூட்டமொன்றை சிறுசேரிக் கம்பெனிகள் கூட்டி, அவர்களின் பிரச்சினைகளைக் காதுகொடுத்துக் கேட்கவேண்டும். அந்தக் கூட்டத்தில் அப்பகுதி காவல்துறை உயர்அதிகாரிகள் பங்கேற்று உரிய நடவடிக்கை எடுக்க உறுதி வழங்கவேண்டும்.
 4. சென்னை நகரில் சட்டம் ஒழுங்கு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. நகரின் எந்தப் பகுதியிலும் பெண்களின் கழுத்திலுள்ள தாலிச்சங்கிலி பத்திரமாக இருப்பதற்கான உத்தரவாதம் இல்லை. இதனால் சென்னையில் காலை நேரங்களில் வாக்கிங் செல்வதும் கோலம் போடுவதுமான பணிகளில் ஈடுபடுவதைப் பெண்கள் குறைத்துக்கொண்டிருக்கிறார்கள். வயதானவர்கள், ஆண்களாயினும் சரி, பெண்களாயினும் சரி, வீட்டில் தனியாக இருந்தால் தாக்கிவிட்டுக் கொள்ளையடிக்கும் நிகழ்வுகள் ஏராளம். "நகரம் பெரியது - இருக்கும் காவல்துறையின் ஆள்பலமோ சிறியது" என்ற வாதம் உண்மையாகவே இருப்பினும், மக்களின் கவலையை அது தீர்க்குமா? இன்று பிறந்தநாள் காணும் தமிழக முதல்வர் இந்தப் பிரச்சினைகளில் சற்று கவனம் செலுத்தினால் நிச்சயம் பொதுமக்களுக்கு நம்பிக்கை பிறக்கும். விஷயம் அவருடைய காதுகளுக்குச் சென்றுவிட்டது என்றால் போதும், காவல்துறை மும்முரமாக ஈடுபட்டுக் குற்றவாளிகளை வழிக்குக் கொண்டுவந்துவிடும். உமாமகேஸ்வரி கொலை வழக்கிலும் முதல்வர் தலையிட்டு உடனடி நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளது ஆறுதல் அளிக்கிறது.

(மற்ற வழக்கமான பதிவுகள் அடுத்த இதழில்.)

நான் ரசித்த கேள்வி-பதில்
கேள்வி: தமிழா, இன உணர்வு கொள்” என்கின்றனரே..எதற்காக?
பதில்: இவன் குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டிக்கொண்டிருந்தால்தானே, அவன் மாட மாளிகை கட்ட முடியும்!
               (நன்றி: அந்துமணி பதில்கள்: தினமலர்-16-2-2014 பக்.10)
சிரிப்பு
“நீங்கள் எங்கும் தனியாக இருப்பதில்லை. எப்போதும் உங்களுடன் கோடிக்கணக்கில் பாக்டீரியாக்களும் நுண்ணுயிரிகளும் உள்ளன!” (தமிழ் இந்துவில் ஒரு மேற்கோள்).

குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’ அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள். நன்றி.

 © Y Chellappa 

16 கருத்துகள்:

 1. // (இங்கும் மனிதர்கள்தாம் வாழ்கிறார்கள்!) // அது தான் சந்தேகமாக உள்ளது...

  தமிழக முதல்வர் காதுகளுக்கு எட்டி, விரைவில் நல்லது நடக்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
 2. சந்தேகப்படவேண்டாம். எனது நண்பர் ஒருவர் அங்குதான் வாழ்கிறார். பிள்ளைகள் வெளிநாடுகளில். கார் இருப்பதை நம்பி வாழ்கிறார். Gated Community. அதைவிட்டு வெளிவராமல் இருக்கும்வரை, எல்லாம் சௌக்கியமே!

  பதிலளிநீக்கு
 3. ஒரு தந்தையின் நிலையில் இருந்து சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் பாதுகாப்பு குறித்து நல்ல ஆலோசனைகள் தந்து இருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே! இந்தியாவைப் பொறுத்தவரை, மென்பொருள்துறையில் இருப்பவர்களில் தமிழர்கள் தான் மிகுதி. அடுத்து ஆந்திரர்கள், பிறகு கர்னாடகத்தவர். தமிழ்நாட்டிலும் சென்னையில் தான் அதிகமான பெண்கள் இத்துறையில் இருக்கிறார்கள். இவர்களில் பாதிப்பேராவது வெளியூர்களிலிருந்து வந்தவர்கள். இதுதவிர, வெளி மாநிலங்களிலிருந்து வந்து அறை எடுத்துத் தங்கியிருக்கும் பெண்கள் குறைந்தது பத்தாயிரம் பேராவது இருப்பார்கள். இவ்வளவு பேரின் பெற்றோர்களுக்கும் இதயம் எப்படித் துடித்திருக்கும் உமாமகேச்வரி கொலைச் செய்தியைப் படித்தவுடன்? காவல்துறை உயர் அதிகாரி ராமானுஜம் மிக நேர்மையானவர். கண்டிப்பானவர். முதல்வரின் பரிவுக்குப் பாத்திரமானவர். அவர் நிச்சயம் நல்ல முயற்சியில் ஈடுபட்டு இதுபோன்ற கொலைகள் எதிர்காலத்தில் நடவாதிருக்கும்படி ஆவன செய்வார் என்று நம்பலாம்.

   நீக்கு
 4. பொதுவாகவே இங்கே கண்முன் நடக்கும் தவறுகளை பெரும்பாலோர் கண்டுகொள்வதில்லை. அதை தவறுசெய்வோர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

  இவர்கள் வீரமெல்லாம் மாடுகளிடம்தான் காட்டப்படுகிறது. ஒரு சிறுவனின் உயிர் அப்படிப்பட்டவர்களால் பறிக்கப்பட்டிருக்கிறது.

  கோபாலன்

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்
  ஐயா.

  உமா மகேஸ்வரி பற்றிய தகவலை படிக்கும் போது.. மனம் கனத்தது.....நிகழ்வு நடந்த இடத்தின் குறைபாடுகளை மிக நன்றாக சொல்லியுள்ளீர்கள்...இதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக சொல்லிய செய்தி ஆறுதல் அளித்துள்ளது..

  நகைச்சுவை....கேள்வி பதில் எல்லாவற்றையும் நானும் ரசித்தேன் ஐயா.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 6. வணக்கம்

  த.ம 7வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 7. current technology allows everyone to work from their own homes. indian companies should encourage this instead of making people travel to work at odd times.

  பதிலளிநீக்கு
 8. மனிதர்கள் ஏன் இப்படி வர வர கீழ்த்தரமாக மாறிக்கொண்டு வருகிறார்கள். வாழவே தகுதியில்லாத மாநிலமாக நம் மாநிலம் மாறிக்கொண்டு வருகிறது!?

  பதிலளிநீக்கு
 9. மனுச ஜென்மத்தின் மீது நம்பிக்கையே இல்லாமல் போயிருச்சே:(

  பதிலளிநீக்கு
 10. நம் நாடு மிகவும் மோசமாகி வருவது தெரிகின்றது! பெண்கள் பாதுகாப்பு பற்றித் தாங்கள் கூறியிருக்கும் கருத்துக்கள் மிகவு சரியே ஆனால் யாருக்குத் தெரிய வேண்டுமோ அவர்களைச் சென்றடையுமா?

  நல்ல பகிர்வு!

  பதிலளிநீக்கு
 11. பெண்கள் பாதுகாப்பு பற்றிய தங்கள் ஆலோசனைகளை, உயர் அதிகாரம் கொண்டவர்கள் நிச்சயம் செயல்படுத்த வேண்டும். இவ்வாறான பாதுகாப்பு எற்பாடுகளைச் செய்ய வேண்டியது மிக அவசியம் ஐயா!

  பதிலளிநீக்கு