சனி, பிப்ரவரி 11, 2017

அஷ்டமி நவமி கௌதமி

 பதிவு எண் 10/2017
அஷ்டமி நவமி கௌதமி
-இராய செல்லப்பா

எப்போது சினிமாத்துறையின் செல்வாக்கு தமிழக அரசியலில் படியத் தொடங்கியதோ, அப்போதுமுதலே தமிழகத்தின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

தனிக்கட்சி ஆரம்பிப்பதற்கு  சமயம் பார்த்துக்கொண்டிருந்த சி என் அண்ணாதுரை (பின்னாளில் அறிஞர் அண்ணா), பெரியார் ஈ வெ ரா அவர்களின் பொருந்தாத் திருமணத்தைச் சாக்காக வைத்து ஒரு மழைநாளில் வெளியேறி திமுக என்ற அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார். அக்காலத்தில் காங்கிரஸ் கட்சியும்  கம்யூனிஸ்ட்டு கட்சியும்தான் தமிழ்நாட்டின்  பலமான அரசியல் கட்சிகளாக இருந்தன. அவற்றோடு போட்டியிட்டு மக்களைத் தம்வசம் ஈர்க்க சினிமாவை உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டார் அறிஞர் அண்ணா. அவரோடு மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், கேஆர் ராமசாமி, சிவாஜி கணேசன் போன்றவர்களும் இந்த அரசியல்-சினிமா பிணைப்பை வலுப்படுத்தும் சங்கிலிகளாக விளங்கினார்கள். பின்னாளில் சிவாஜி கணேசன் காங்கிரசுக்குப் போனதும், அந்த இடத்தை எம்ஜி ராமச்சந்திரன் பிடித்துக்கொண்டதும் தெரிந்த வரலாறே.
 
படம்: இணையத்தில் இருந்து 
ஆனால் அதுமட்டுமே அறிஞர் அண்ணாவின்  வெற்றிக்குக் காரணமல்ல. இரா நெடுஞ்செழியன், சி.பி.சிற்றரசு, மதியழகன், நாஞ்சில் மனோகரன்,  ஏவிபி ஆசைத்தம்பி, என்வி நடராசன், (இன்னும் எவ்வளவோ பேர்கள் – பெயர் மறந்துவிட்டது) -முதலிய தகுதியுள்ள அரசியல்வாதிகளைத் தன்னுடைய இரண்டாம் கட்டத் தலைவர்களாக உருவாக்கி வழிநடத்தியது இன்னுமொரு தலையாய  காரணமாகும்.

அதே மரபைப் பின்பற்றித்தான், எழுபதுகளில் எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்தபோது தன்னுடைய சினிமா பிம்பத்தை மட்டுமே நம்பிவிடாமல், திமுகவில் இருந்த மூத்த அரசியல்வாதிகளை ஒருவர் பின் ஒருவராகத் தன்னுடன் இழுத்துக்கொண்டார். அதன் காரணமாகவே அரசியலில் பழம்தின்று கொட்டை போட்டவராகக் கருதப்பட்ட கலைஞர் கருணாநிதியையே அவரால் வீழ்த்தமுடிந்தது. இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் எம்ஜிஆரைப் பின்பற்றி எந்த நடிகரும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்றால் அதற்கான காரணம் இதுதான். கர்நாடகத்தில் அப்போது பலம்பெற்றிருந்த, எம்ஜிஆரை விடவும் அதிக மக்கள் தொடர்புள்ள, பழகுவதற்கு இன்னும் எளிமையான, அதிக வெற்றிப்படங்களைத்தந்த ராஜ்குமார் கூட அரசியலுக்கு வர சில முயற்சிகளை மேற்கொண்டபோது அவை தோற்றுப்போயின. ஆந்திரத்தில் என்.டி.ராமராவ் முதல்முறை ஒன்றரை ஆண்டும் அடுத்தமுறை ஐந்தாண்டும்  மட்டுமே ஆட்சியமைப்பில்  வெற்றிபெற முடிந்தது. அடுத்தமுறை ஆட்சியைத் தன் சொந்த மருமகனிடமே பறிகொடுக்க வேண்டியாதாயிற்று.வெற்று சினிமா பிம்பம் மட்டுமே அரசியலில் வெற்றியைத் தந்துவிடாது என்ற உண்மை மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அதே சமயம், மக்கள் தொடர்புக்கு மிக முக்கியமான, தவிர்க்கமுடியாத,  காரணியாக அமைந்துவிட்ட சினிமாத்துறையைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாத  காரணத்தால் தமது அரசியல் வாழ்க்கையை  இழந்த தலைவர்கள் தமிழ்நாட்டில் உண்டு. காமராஜரின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம், அவர் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், சிவாஜிகணேசன், கண்ணதாசன் போன்ற சினிமாக் கலைஞர்களை உரியமுறையில் பயன்படுத்தாமல் அவர்களுக்குரிய அங்கீகாரத்தை வழங்காமல் போனதுதான் என்பதை நாம் நன்கறிவோம். அரசியலும் சினிமாத்துறையும் ஒன்றுக்கொன்று இட்டு நிரப்புபவர்களாக இருந்தால் மட்டுமே தமிழக அரசியலில் அது வெற்றியைத் தந்திருக்கிறது.  

இன்று தமிழக அரசியலில் நேர்ந்துள்ள வெற்றிடத்திற்கு முழுப் பொறுப்பும் தன்னை மட்டுமே முன்னிறுத்தி, வேறு எவரையும் இரண்டாம் கட்டத் தலைவர்களாக அங்கீகரிக்க மறுத்த ஜெயலலிதாவின் அகம்பாவத்தையே சாரும். இன்று அமைச்சராக இருப்பவர் நாளை வீதியில் தூக்கி எறியப்படுவார் என்ற நிலையில் எந்த அமைச்சரும் மாவட்டச் செயலாளரும் தன்முனைப்போடு அரசியல் செய்ய முன்வராததில் ஆச்ச்சரியம் என்ன? கட்சி என்பது படிப்படியாகக் குடும்பச் சொத்தாக ஆகியதில் வியப்பென்ன?

ஆனால் அரசியலைக் குடும்பச்  சொத்தாக்குவதற்கான  வழிகாட்டும் நெறிமுறைகளை வகுத்தளித்த பெருமையைக் கலைஞர் கருணாநிதி அவர்களிடமிருந்து எவராலும் பறித்துவிடமுடியாது. சர்க்காரியா கமிஷனில் ஆரம்பித்து கனிமொழி-மாறன் சகோதாரர்கள்  என்று அது தொடர்ந்து வருகிறது. காந்திஜி, நேருஜி, ராஜாஜி-க்குப் பிறகு 2-ஜி என்பதுதானே தமிழநாட்டில் புகழ்பெற்ற ஜி?

ஆனால் ஒரே வித்தியாசம்: ஜெயலலிதாவிற்குக் குடும்பம் இல்லை. ஆகவே, அவர்மூலம் வந்தவை எல்லாம் அவருக்குக் காவலாக இருந்த இன்னொரு குடும்பத்திற்குப் போய்விட்டன என்கிறார்கள். கலைஞரின் அரசியலுக்கு அவர் குடும்ப வாரிசுகள் இருப்பதுபோல், ஜெயலலிதாவின் அரசியலுக்கு அவரது நிழலாக இருந்தவர்கள் சொந்தம் கொண்டாடுவதில் வியப்பென்ன?

அப்படி அதிரடியான நியாயத்தை ஓரளவு ஒப்புக்கொண்டாலும், கலைஞரின் அரசியல்ஞானத்தைப் பாராட்டியே ஆகவேண்டும். மகனை அரசியல் வாரிசாக அறிவித்தாலும், அவருக்கு உரிய அரசியல் அனுபவத்தைப் படிப்படியாக வழங்கி, தனக்குப் பின் கட்சியை ஏற்று நடத்துவதற்கான தலைமைப் பண்புகளை வளர்த்துவிட்டவர் கலைஞர். ஆனால் அத்தகைய பயிற்சிவகுப்புகள் எதையும் தன் தோழிக்கு எடுத்தாரா ஜெயலிதா என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. அதுதான் இன்றைய குழப்பங்களுக்கெல்லாம் காரணம்.

பன்னீர்செல்வமா, சசிகலாவா என்பதல்ல தமிழ்நாட்டின் பிரச்சினை. அரசியலைப் புரிந்துகொண்டு, மக்கள் நலனுக்காகப் பணியாற்ற வேண்டும் என்ற தத்துவத்தை யாரால் செயல்படுத்தமுடியும் என்பதே கேள்வி. அடிவாங்கிய குழந்தை என்பதால் பன்னீருக்கு  இப்போதுஅனுதாபம் கிடைக்கலாம். ஆனால் தொடர்ந்து தைரியமாக இயங்கவல்ல  பிடிவாதம் அந்தக் குழந்தைக்கு இருக்கிறதா என்பது கவனிக்கப்பட வேண்டியது.  

பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகப் பல நடிகர்கள் நடிகைகள் களம் இறங்கி யிருக்கிறார்கள். அவர்களில் முதலாவதாகக் களம் இறங்கியவர், நடிகை கௌதமி. நன்கு படித்தவர். நல்ல திறமையான நடிகை. மார்பகப் புற்றுநோயில் இருந்து கவனத்தோடு மீண்டவர். தெளிவாகச் சிந்திக்கின்றவர். பன்னீர்செல்வம் இவரை உரியமுறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஒருகாலத்தில் நாஞ்சில் சம்பத்திற்கு இன்னோவா கொடுத்து கட்சிப் பிரச்சாரம் செய்வித்ததை விட,  கருணாஸை எம்எல்ஏ ஆக்கியதைவிட, மக்களின் மரியாதைக்குரிய கௌதமி போன்றவர்களை இப்போது உடனடியாகத் தமது அணியில்  இணைத்துக் கொள்வது தமிழக அரசியலுக்கு மிகவும் நல்லதென்றே தோன்றுகிறது. அந்தவகையில் தமிழரான ஹேமமாலினிக்கு எம்பி பதவி கொடுத்து, கட்சியின் உயர்மட்டத்தில் வைத்திருக்கும் பாஜக -வின் உதாரணம் கவனிக்கத்தக்கது.
 
படம்: இணையத்தில் கிடைத்தது
சினிமாக்காரர்களை வெறும் கவர்ச்சியாளர்களாக மட்டுமே பார்க்காமல் அவர்களிடமிருக்கும் மக்கள்-ஈர்ப்பு சக்தியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.  சிவாஜி கணேசனையும் கண்ணதாசனையும் அங்கீகரிக்காமல் காங்கிரசை தமிழ்நாட்டில் செல்லாத காசாக்கியவர் காமராசர். சினிமா மட்டுமே போதும், தன் கட்சியில் அரசியல்வாதிகள் வேறு யாரும் பலம் பெற்றுவிடக் கூடாது  என்று அதிமுகவை இக்கட்டில் கொண்டுபோய் நிறுத்தியவர், ஜெயலலிதா.  

இருவரிடமிருந்தும் பாடம் கற்பவரே தமிழ்நாட்டிற்குச் சரியான தலைமையை வழங்கமுடியும் என்று தோன்றுகிறது.

புதன், ஜனவரி 18, 2017

பணமா சாபமா ?


பதிவு 04/2017 

பணமா சாபமா?

காகிதப் பணத்தைச் செலாவணியில் இருந்து அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதா?

சிறிய தேவைகளுக்குப் பயன்படும் பொருட்டு, சில குறைந்த மதிப்புள்ள நோட்டுக்களை மட்டும் இருத்திக்கொண்டால் போதும், அவற்றையும் நாணயங்களாக வெளியிடுவதே நல்லது  என்ற நிலைமைக்கு நமது பொருளாதாரம் தயாராகி விட்டதா?

“ஆம்” என்றுதான் சொல்லவேண்டும், என்கிறார் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர், கென்னத் ரகாஃப், சில மாதங்களுக்கு முன் வெளியான  தனது CURSE OF CASH என்ற புத்தகத்தில்.

இந்தியாவில் உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழக்கம் செய்யப்படுவதற்குச் சில மாதங்கள் முன்புதான் இந்தப் புத்தகம் வெளியாகியது என்பதால், தில்லியின் செயலுக்கு இப்புத்தகத்தில் கூறப்பட்ட கருத்துக்கள் உந்துதலாக இருந்திருக்கலாம் என்றால் மிகையில்லை.

அதற்கு இன்னொரு காரணமும் உண்டு: கென்னத் ரகாஃப், இதற்கு முன்பாக ஐ.எம்.எப். (இன்டர்நேஷனல் மானிட்டரி பண்ட்) - இன்  தலைமை பொருளாதார அறிஞராக (சீஃப் எக்கனாமிஸ்ட்) இருந்தவர். உயர்மதிப்புள்ள பணத்தாள்களைச் செலாவணியில் இருந்து அகற்றவேண்டும் என்பதை நீண்ட நாட்களாகவே எடுத்துச் சொல்லிவந்தவர்.

பொருளாதார மாணவர்கள் மட்டுமின்றி அனைவருமே விவாதிக்கவேண்டிய புத்தகம் இது என்பது என் கருத்து.

பணத்தாள் மதிப்பிழக்கத்தால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய ஆரம்பகாலச் சிரமங்களைப் பார்க்கிலும், நாட்டிற்கு ஏற்படக்கூடிய நன்மைகள் ஏராளம் என்கிறார். 

கண்ணுக்குத் தெரியாத வழிகளில், பெயர் தெரியாத மனிதர்களால் மிகப் பெரிய தொகைகள், நாட்டிற்கு உள்ளேயும் நாடுகளுக்கு இடையேயும் பரிவர்த்தனை ஆகிக்கொண்டுதான் இருக்கின்றன. எத்தகைய முன்னேற்பாட்டினாலும் இப்பரிவர்த்தனைகளைத் தடுக்க முடியவில்லை. இவற்றால் சம்பந்தப்பட்ட நாடுகளின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் நெருக்கடிகள் ஏராளம். இப்பரிவர்த்தனைகள் பெரும்பாலும் உயர்மதிப்பு பணத்தாள்கள் மூலமே நடைபெறுகின்றன. இதற்கென்றே சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு வெளியே சதிக்குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. போலியான பணத்தாள்களை அசல்போலவே அச்சிடும் உயர் தொழில்நுட்பம் இவர்களிடம் உண்டு. ஆகவே,   பணத்தாள் மதிப்பிழக்கத்தை அமல்படுத்துவதன் மூலம் இச்சதிக் குழுக்களின் இரத்த ஓட்டத்தை நிச்சயம் கட்டுப்படுத்தமுடியும்.

எதிர்பார்க்கும் வெற்றியில் பாதி கிடைத்தாலும் அதனால் நாட்டின் பொருளாதாரம் பெறக்கூடிய நீண்டகாலப் பயன்கள் அதிகம் என்கிறார் ஆசிரியர்.

உயர்மதிப்புள்ள பணத்தாள்கள்,  பொதுமக்களிடம் தொடர்ந்து செலாவணியில் இருப்பதில்லை. வெளிவந்த உடனேயே, பெருமளவில் கறுப்புச் சந்தைக்குச் சென்றுவிடுகிறது. 

அதில் ஒரு பகுதி, தங்கம், வைரம், பிளாட்டினம் போன்ற உலோகங்களிலும், இன்னொரு பகுதி நிலங்கள், கட்டிடங்கள் போன்ற அசையாச் சொத்துக்களிலும் வேறொரு பகுதி, வரி செலுத்தாமல் புழங்கும் சந்தைப் பொருட்களிலும் (அல்லது, போதை மருந்துகளிலும் தீவிரவாதிகளுக்கான ஆயுதங்களிலும்) முதலீடு செய்யப்படுகிறது. 

எஞ்சியுள்ள பணம், ரொக்கமாகவே கட்டில்களுக்கு அடியிலும், குளியலறைச் சுவர்களிலும் பதுக்கப்பட்டு அதன் ஒரு பகுதி கரையான்களுக்கு உணவாகவும் பயன்படுகிறது. 

எனவே, உயர்மதிப்புள்ள பணத்தாள்களால் அரசுக்குக் கிடைக்கவேண்டிய வரியானது மிகப்பெரும் அளவில் ஏய்க்கப்படுவது தெளிவு. அப்படி இழந்த வரியில் பத்து அல்லது பதினைந்து சதவிகிதம் திரும்பிவருமானாலும் போதும், பணத்தாள் மதிப்பிழப்பு நடவடிக்கையை அது நியாயப்படுத்தியதாகும்.

ஐரோப்பாவில் 5௦௦ யூரோ மதிப்புள்ள நோட்டுக்களை வெளியிட ஆரம்பித்தவுடன், அமெரிக்காவில் பெரிய கேள்வி எழுந்தது. அதுவரையில் 1௦௦ டாலர் நோட்டு தான் அமெரிக்காவில் இருந்த உயர்மதிப்பு நோட்டாகும். உடனே  5௦௦ டாலர் நோட்டு வெளியிடாவிட்டால், அமெரிக்காவிலுள்ள பணக்காரர்கள் தங்கள் பணத்தை 5௦௦ யூரோக்களாக மாற்றிக்கொள்ளும் அபாயம் நேரும் என்று எச்சரிக்கப்பட்டது.  ஏனோ அந்த எச்சரிக்கை ஏற்கப்படவில்லை.

ஆனால், அரசாங்கங்கள் எதற்காக இன்னமும் உயர்மதிப்பு நோட்டுக்களை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்றால், நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடுவதான தொழிலில் அரசுகளுக்கு  நிகர லாபம் கிடைப்பதே  என்று ஆசிரியர் கூறுகிறார். இந்த லாபத்தை (SEIGNIORAGE) மொத்த உள்நாட்டு உற்பத்தி   (GDP) யின் விகிதமாகக் கூறுவார்கள். 2006-2015 காலகட்டத்தில் அமெரிக்காவில் இந்த லாபம், 0.44% of GDP, ஆஸ்திரேலியாவில் ௦.25%, சிங்கப்பூரில் 0.62%, ரஷியாவில் 1.37% (உலகிலேயே அதிகம்). ஸ்வீடனில் இது நெகடிவ் ஆக இருந்தது. -0.06%.

(இந்தியாவில் நோட்டுக்களை அச்சடிக்க ஆகும் செலவு பற்றி ரிசர்வ் வங்கி வழங்கிய விவரம் இது: 

    ரூ.1- (ரூ.0.785),   ரூ.10 –(ரூ. 1.220)
ரூ.20 – (ரூ.1.216),   ரூ.50 – (ரூ.0.864)
ரூ.100 – (ரூ.1.544)  ரூ.1000 – (ரூ.3.732)   

ஆதாரம்: Security Printing and Minting Corporation of India Limited, New Delhi vide: CHO(HR /RTI / 10-8/2016/ Vol.III /4655 dated 06.10.2016.

ஆனால், ரூபாய் நோட்டு அச்சடிப்பால் வரும் லாபம் என்ற இனம் ரிசர்வ் வங்கியால் தனியாகக் கணிக்கப்படுகிறதா என்று தெரியவில்லை.)

அமெரிக்காவில் இதே அச்சடிப்பு செலவு எவ்வளவு தெரியுமா? 1 டாலர் நோட்டுக்கு  0.049 டாலரும்,  100 டாலர் நோட்டுக்கு  0.123 டாலரும் தான். 1௦௦ டாலர் தான் அங்குள்ள மிகப்பரிய நோட்டு. (அதே சமயம் பொதுமக்களிடமிருந்து 1௦௦ டாலர் நோட்டைக் கடைக்காரர்கள் வாங்கத் தயங்குகிறார்கள்: கள்ள நோட்டுக்கள் அதிகமாகப் புழக்கத்தில் உள்ளதால்!)

ஆசிரியர் என்ன கூறுகிறார் என்றால், நோட்டுக்களை அச்சடிப்பதால் வரும் நிகர வருமானம் குறைந்துகொண்டே வருகிறது; அதே சமயம், உயர்மதிப்புள்ள பணத்தாள்கள் பதுக்கப்படுவதால் அரசுக்கு வரவேண்டிய வரி மிக அதிக அளவில் ஏமாற்றப்படுகிறது; அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கப்படுகின்றன. தீவிரவாதிகளும் சமூக விரோதிகளும் செழிக்கிறார்கள். ஏழைகள் மென்மேலும் ஏழைகளாகவே நீடிக்கவேண்டி இருக்கிறது. அவர்களுக்குரிய சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கான வருவாய் கிடைக்காமல் அரசு தடுமாறுகிறது.

எனவே, குறைந்த மதிப்புள்ள பணத்தாள்களை மட்டும் விட்டுவிட்டு அதிக மதிப்புள்ளவற்றை ஒழித்தாகவேண்டும். ஆனால் அதைச் செய்வதற்கு முன், அரசாங்கம் செய்யவேண்டிய கடமைகள் உண்டு என்கிறார். அவையாவன:
  1. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்காக டெபிட் கார்டுகளும், கிரெடிட் கார்டுகளும் குறைந்த செலவில் வழங்க ஆவன செய்யவேண்டும். 
  2.  ரொக்கமில்லாப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கு மானியவிலையில் ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படவேண்டும். 
  3.  மின்னணுப் பரிமாற்றத்திற்கென்று  வங்கிகளுக்குச் செலுத்தவேண்டிய கட்டணங்களை வெகுவாகக் குறைக்க வேண்டும். 
  4. சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும் வங்கிக் கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்படவேண்டும். (financial inclusion.) 
  5. அரசாங்கம், மக்களுக்குத் தருகின்ற அனைத்து மானியங்களும், ஓய்வூதியம், சம்பளங்களும் பிறவும் வங்கிக்கணக்கு மூலமே வழங்கப்படவேண்டும்.

 ஆக, நமது நாட்டில் அமல்படுத்தியுள்ள உயர்மதிப்புள்ள பணத்தாள்கள் மதிப்பிழப்பு நடவடிக்கை, உலகளவில் பொருளாதார நிபுணர்களால் ஆலோசிக்கப்பட்ட வழிமுறைகளின்படியே நடந்தேறியுள்ளதை உணர முடிகிறது.
                 ********************** 

 பொதுமக்களை அதிகம் பாதிக்காமல் உயர்மதிப்புள்ள பணத்தாள்களை ஒழிக்கும் வழிமுறைகளைப் பற்றி ஆலோசிப்பதற்காக நடந்த கூட்டம் ஒன்றில் (2௦௦9) ஒரு ஆராய்ச்சி மாணவர் சொன்ன கருத்து இது: உதாரணமாக, 1௦௦ டாலர் நோட்டை ஒழிக்கவேண்டும் என்பது நோக்கமாக இருந்தால்:
  •          அதுவரை வெளியிடப்பட்ட அந்த நோட்டுக்களின் தொடர்வரிசை எண்களை அடிப்படையாக வைத்து மாதாந்திர லாட்டரி நடத்தப்படவேண்டும். வெற்றிபெறும் எண்ணை வைத்திருப்பவருக்கு பத்தாயிரம் டாலர் பரிசு வழங்கலாம். தெளிவாகச் சொல்வதென்றால், ‘A’ என்ற எழுத்தை முதலாவதாகக் கொண்ட எண்களின் மீது ஜனவரிமாதம் லாட்டரி நடத்துவது. ஒருவருக்கு மட்டும் பத்தாயிரம் பரிசு; ‘A’ வரிசையின் மற்ற எண்களைக் கொண்ட நோட்டுக்கள் அனைத்தும் உடனடியாக மதிப்பிழந்துவிடும். (வங்கிகளில் சென்று அடுத்த ஒரு மாதத்திற்குள் மாற்றிக்கொள்ளலாம்.)
  •           பிப்ரவரி மாதம், ‘B’ எழுத்தை முதலாவதாகக் கொண்ட எண்களின் மீது லாட்டரி நடத்துவது; ஒரு நோட்டுக்கு மட்டும்  பத்தாயிரம் டாலர்; மற்ற நோட்டுகளுக்கு நாமம். (ஆனால் வங்கிகளில் சென்று அடுத்த ஒரு மாதத்திற்குள் மாற்றிக்கொள்ளலாம்.)
  •          இப்படியே, ஒரு வருடத்திற்குள் அனைத்து நோட்டுக்களும் ஒழிக்கப்படும்.

·         மேற்படி ஒரு வருடத்திற்குள் வங்கிகளுக்குள் வந்துசேராத நோட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்படும். அதாவது, ஒரு வருடத்திற்குப்பின் வந்தால், ஒவ்வொரு நூறு டாலருக்கும் ஐந்து டாலர் அபராதம் (என்பது போல்) வைக்கலாம்.

மேற்படி ஆலோசனையை வெளியிட்டவுடன் அந்த மாணவரின் ஆசிரியருக்குக் கிடைத்த “பாராட்டு”க்கள் கொஞ்ச நஞ்சமா? அவரைப் பதவியிலிருந்து தூக்குங்கள் என்று ஹார்வர்டு பல்கலைக்கு அழுத்தம் தரப்பட்டதாம்...
*******

கென்னத் ரகாஃப் -இன் CURSE OF CASH நூலில் மேலும் பல அரிய தகவல்கள் அடங்கியுள்ளன. MBA, MA -Economics, Public Finance, MCom பயிலும் மாணவர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய நூல் இது.

உதாரணமாக, ஆண்டுக்கு இரண்டுமுறை, ரிசர்வ் வங்கியானது தனது வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கிறது. இதற்கான அடிப்படைக் கோட்பாடு என்னவென்று தெரியுமா?

        i = x + (0.5)(pi-2) + (0.5) y  (original Taylor’s formulation)

இதில் ‘i’ என்பது ரிசர்வ வங்கி அறிவிக்கப்போகும் வட்டிவிகிதம்.
‘x’ என்பது, நடப்பிலுள்ள வட்டிவிகிதம்.

‘pi’ என்பது (அடுத்த அரையாண்டில்) எதிர்பார்க்கப்படும் பணவீக்க விகிதம்.

‘y’ என்பது, நாட்டின் மொத்த உற்பத்தியில், ‘முழு வேலை’ (total employment) இன்மையால் குறைந்துபோன உற்பத்தி யளவு.
ஜேனட் எல்லன்

தற்போது IMF தலைவியாக இருக்கும் ஜேனட் எல்லன் (Janet Yellen) இதில் சிறிய மாற்றம் செய்கிறார்:

        i = x + (0.5)(pi-2) +  y   (Yellen’s preferred  formulation)

(இதெல்லாம் நமக்கு அதிகப்படி என்று தோன்றுகிறதல்லவா? நிறுத்தி விடுகிறேன்.)

 -    இராய செல்லப்பா , நியூ ஜெர்சி.


Curse of Cash - Kenneth S. Rogoff  (Princeton  Press, 2016$ 29.95

ஞாயிறு, ஜனவரி 08, 2017

1650 பக்கமுள்ள தமிழ் அகராதி இலவசம்!

பதிவு எண் ௦3/2௦17
1650 பக்கமுள்ள தமிழ் அகராதி இலவசம்!

உயர் மதிப்பு நோட்டுக்கள் மதிப்பிழந்த செய்தியும், 75 நாள் மர்ம மரணமும் நாட்டை ஆக்கரமித்துக்கொண்டுள்ள வேளையில், நம் கண்ணுக்குத் தெரியாமல் எவ்வளவோ நல்ல காரியங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன என்பது எவ்வளவு பேருக்குத் தெரியும்?

மத்திய அரசின் உதவியோடு, பழைய நூல்களைக் கணினிவழி ஆவணப்படுத்தும் பெரியதொரு முயற்சியில் பெங்களூரிலுள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் இறங்கியுள்ளது. தமிழில் வெளிவந்த, தற்போது அச்சில் வரமுடியாத மிகப்பழைய நூல்கள் பல அவ்வாறு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 35,௦௦௦ க்கும் அதிகமான நூல்களும் வார, மாதப் பத்திரிகைகளும் அவ்வாறு காகிதத்திலிருந்து கணினிக்கு மாறியுள்ளன. எவ்வளவு பெரிய முயற்சி!
அவற்றுள் ஒன்றுதான், பூவிருந்தவல்லி ராமநாதன் (முதலியார்) அவர்களின் முயற்சியால் 19௦9 -இல் வெளிவந்த 1650 பக்கமுள்ள “இருபதாம் நூற்றாண்டு தமிழ் அகராதி” ஆகும்.

சிறந்த தமிழறிஞராகவும் அப்போதைய ‘மெட்ராஸ் லா டைம்ஸ்’ இதழின் சிறப்பு ஆசிரியராகவும், லண்டனில் இருந்த பல்வேறு அமைப்புகளின் கௌரவ  உறுப்பினராகவும் விளங்கியவர், ராமநாதன். தனியொருவரின் உழைப்பினால் உருவான அகராதி இது! காஞ்சீவரம் வித்வான் ராமஸ்வாமி நாயுடு மிகவும் ஒத்துழைப்பு நல்கியதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
கோபால் நாயக்கரை உரிமையாளராகக் கொண்ட T. GOPAUL & Co, சென்னை அவர்களால் வெறும் பத்து ரூபாய் விலையில் வெளியிடப்பட்ட நூல் இது. அதற்கே  ‘இவ்வளவு விலையா?’ என்று கோபப்பட்டிருக்கிறார் ஒரு விமர்சகர். ‘உயர்ந்த நூல் அல்லவா, சரி இருந்துவிட்டுப் போகட்டும்’ என்று அவரே பிறகு சமாதானமும் படுகிறார்.

ஆங்கில மொழிக்கு முதல் அகராதியை உருவாக்கிய சாமுவேல் ஜான்சனின் முயற்சிக்கு ஒப்பானது, ராமனாதனின் இந்தத் தமிழ் அகராதி முயற்சி என்று மதிப்புரை வழங்கிய ஹென்றி ஒயிட்ஹெட் (அப்போதைய சென்னை மாநில பிஷப்) பாராட்டியிருக்கிறார். தமிழ் பேசும் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்கவேண்டிய பொக்கிஷம் என்று மேலும் பல தமிழ்-ஆங்கிலப் பண்டிதர்கள் தம் வாழ்த்துரையில் கூறியிருக்கிறார்கள்.
‘தமிழ்த் தாத்தா’ என்று இப்போது மரியாதையோடு அழைக்கப்படும் உ..வே.சாமிநாதய்யர் இந்நூலுக்குக்  கவிதையால் வாழ்த்து கூறியிருக்கிறார்:
=======================================================================
சென்னை பிரிசிடென்சி காலேஜ்
தமிழ்ப்பண்டிதரும் மகா மகோபாத்தியாயர் பட்டமும் பெற்ற
பிரம்மஸ்ரீ – வே. சாமிநாத அய்யர் அவர்கள்
விருத்தம்
முன்னுபசுந் தமிழ்மொழியி னுளவாய நூல்களிற்சேர் மொழிகள் பல்ல
துன்னுபல புலவர்களைக் கொடுபலனாண் மிகமுயன்று தொகுப்பித் தியாரும்
உன்னுதமிழ்க் கருவூல மிதெனப்பே ரகராதி யொன்றி யற்றி
மின்னுமெழு தாவெழுத்தி லமைந்துவழங் கினனவன்யார் விளம்பென் பீரேல்,

நாவிருந்த வல்லியொடு பூவிருந்த வல்லிமரீஇ நலமார்ந் தோங்கும்
பூவிருந்த வல்லிவரு சுப்பராயக்குரிசில் புதல்வன் முக்கட்
டேவிருந்த வுளத்தினனா கியராச ரத்தினப்பேர்ச் சீமான் பின்னோன்
பாவிருந்த நயசுகுணன் ராமனாதப் பெயர்கொள் பயன்மிக்கோனே.
============================================================================

பதிப்பாளர் கோபால நாயக்கர் தம் பதிப்புரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். (அந்த நாளில் தமிழ் உரைநடை எப்படி இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா?)
“ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த சொரூபியும், அநாதிமல முத்தபதியுமான பரமேசுவரனது கருணா வீட்சண்யத்தினால் வெளியாகி அகத்திய மகாமுனிவர் மூலமாகப் பொதிய மலையினிடத்திற் றோன்றி, பாண்டிய மகாராஜனாற் புகழப்பட்டு, சங்கப் பலகையிற் கிடந்து செந்நாப் புலவர்கள் என்னும் செவிலித் தாய்மார்களாற் போற்றப்பட்டு, வைகை யேட்டிலே தவழ்ந்து சமணர்களிட்ட நெருப்பினிடத்து யாதொரு பின்னமு முண்டாகாதபடி நின்று,  பூவுலகின் கண் பொலிவுற நடந்து, எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐம்பெரு விலக்கணங்கள் பொருந்த விருந்து, அறம், பொருள், இன்பம், வீடு என்னும் அரிய நாற் பொருட் பயனைப் பயந்து, நிலவாநிற்பது அமிழ்தினுஞ் சிறந்த தமிண்மொழி யென்பதை மறுக்க வல்லார் யார்?”
************ **********  ***********
“இதன்கண், பழைய அகராதிகளிற் காணப்படும் பதங்களுக்குமேல் பதினாயிரத்து முன்னூற்று நாற்பத்தொரு புதிய பதங்கள் சேர்க்கப்பட்டிருப்பதோடு பெரும்பாலும் பெருக்கியும் புதுக்கியும் விளக்கியும் இருநூற்றுப்பதினைந்து றாயல்பாரங்கள் கொண்டதும், ஆயிரத்து எழுநூற்று இருபது பக்கங்களடங்கியதுமான புத்தகமாய் உயர்ந்த கிளேஸ் காயிதத்தில் அச்சிடப்பட்டு அதி உசிதமான அரைத்தோற் கட்டடத்திற் சிறந்த புத்தகமாய் இயற்றப்பட்டிருப்பதால், இஃது எவ்வாற்றானும் மற்றைய அகராதிகளிலும் பன்மடங்கு சிறந்ததென்பது வெளிப்படை. இவ்வரிய அகராதி ஒவ்வொரு கலாசாலைப் புத்தகசாலையிலும் அவசியமிருக்கவேண்டியது. இதை 
வித்தியாதலைவர், ஆசிரியர், பிரபுக்கள், துரைமக்கள், பாதிரிமார் தமிழ்ப்பாஷாபிமானிகள், ஆகிய எத்திறத்தவரும் நன்கு மதித்துப் பரிபாலித்தல் வேண்டுமென்பதே எம்கோரிக்கை.”

இந்த அகராதி இப்போது அச்சில் இல்லை. அச்சிட்டாலும் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது விலை வைக்கவேண்டியிருக்கும். உங்களுக்கு இந்த நூலை ஒரு பைசா செலவில்லாமல் கிடைக்கும் வழியைச் சொல்லட்டுமா? கீழ்க்கண்ட இணைப்பில் சொடுக்குங்கள்:
‘டவுன்லோட்’ பொத்தானை அழுத்தினால் உங்கள் மேசைக் கணினியில் அல்லது தொடைக்கணினியில் இறக்கிக்கொள்ளலாம். (மடிக்கணினி என்று சொல்லி ‘போர்’ அடித்துவிட்டது!) (அலைபேசியில் வேண்டாம்.) 400 mb அளவுள்ள பெரிய கோப்பு என்பதால் இறங்குவதற்கு முப்பதிலிருந்து ஐம்பது நிமிடங்கள் ஆகலாம். அதற்கேற்ப நேரத்தைத் தேர்வுசெய்யவும்.
*********** *********
மேற்படி இணைப்பின் ‘HOME’ பக்கத்தில் சென்று பாருங்கள்.
‘search’ பெட்டியில் tamil என்று எழுதிச் சொடுக்குங்கள். எல்லாத் தமிழ்ப் புத்தகங்களும் அடங்கிய பக்கம் வரும்.
வேறு என்னென்ன புத்தகங்களை இறக்கிக்கொள்ள முடியும் என்று பாருங்கள். எல்லாமே இலவசம்தான். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒன்றிரண்டு நூல்களை இறக்கிக்கொண்டால் எப்போதாவது பயன்படும்- நமக்கில்லாவிடினும், மற்ற ஆராய்ச்சி மாணவர்களுக்காவது!
நான் இறக்கிக்கொண்ட இன்னொரு நூல், சென்னை பல்கலையில் சரித்திரம் மற்றும் தொல்பொருளாராய்ச்சித் துறையில் பேராசிரியராக இருந்த வி.ஆர். ராமச்சந்திர தீட்சிதரின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு. 1949இல் வெளியானது. அடையாறு தியசாபிகல் சொசைட்டியின் வசந்தா பிரஸ் வெளியிட்டது. ஆங்கில மொழி வித்தகரும், அப்போதைய மைசூர் அரசின் திவானாக இருந்தவருமான  ஏ.ராமசாமி முதலியார் (ஆம், ஆற்காடு இரட்டையர்கள் என்று அறியப்பட்டவர்களில் ஒருவர்; சென்னை பல்கலையின் நீண்டநாள் துணைவேந்தரான ஏ.லட்சுமணசாமி முதலியாரின் அண்ணன்) இந்த மொழிபெயர்ப்பைப் பெரிதும் பாராட்டி இருக்கிறார் என்றால் வேறு அத்தாட்சியே தேவையில்லை.
இந்த மொழிபெயர்ப்பைச் சரிபார்த்துக்கொடுத்தவர்களில் ஒருவர், டாக்டர் மு.வரதராசன் அவர்கள். அப்போது சென்னைப் பல்கலையில் உதவி விரிவுரையாளராக இருந்தவர். பின்னாளில் அதன் துணைவேந்தராகவும் ஆனவர்.
பல அதிகாரங்களை நானும் படித்துப் பார்த்தேன். இவ்வளவு சரளமான, எளிமையான ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்க்க முடியுமா என்று வியப்பு தான் ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் இந்த நூலைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாகப் பிறமொழி மாணவர்களுக்குத் திருக்குறளை அறிமுகப்படுத்த இந்த நூல் பெரிதும் பயன்படும்.
இதற்கான இணைப்பு: http://www.new.dli.ernet.in/handle/2015/506984

-இராய செல்லப்பா  நியுஜெர்சியில் இருந்து.

வெள்ளி, ஜனவரி 06, 2017

வந்தது தெரியும் போவது எங்கே?

பதிவு எண் 02/2017

“வந்தது தெரியும், போவது எங்கே?
வாசல் நமக்கே தெரியாது” – கண்ணதாசன்

மரணம் பற்றி நினைப்பதும் எழுதுவதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

நியுஜெர்சியில் வெளியாகும் தினசரி பத்திரிக்கை ‘ரெக்கார்டு’. இதில் மரணச் செய்திகளும், மரணம் அடைந்தவரைப் பற்றி, அவர்களது உறவினர்கள் தரும் நினைவஞ்சலி விளம்பரங்களும் முழுதாக இரண்டு முதல் நான்கு பக்கங்கள் வருகின்றன. (பிற மாநிலங்களிலும் தினசரிகளில் இந்த வழக்கம் இருக்கிறது.) இறந்தவரின் புகைப்படத்துடன் அவரது பிறந்த தேதி, பிறந்த இடம், கல்வி கற்றது, பணியாற்றிய விவரங்கள், தற்போதுள்ள உறவினர்களின் விவரங்கள், திருமணம், விவாகரத்து, குழந்தைகள் பற்றிய தகவல்கள் ஆகியவை மிக விரிவாக எழுதப்பட்டிருக்கும். 



(ஹிந்து பத்திரிகையில் இந்த அளவுக்கு வெளியிட்டால் குறைந்தது ஒரு லட்ச ரூபாய் விளம்பரக் கட்டணமாக வாங்கிவிடுவார்கள். அங்கே வார்த்தைகளைக் கணக்கிட்டு வரிவிளம்பரம் கொடுப்பதுதானே வழக்கம்! இறந்துபோனவருக்குத் திதி தான் கொடுக்கிறோமே,  பத்திரிகை விளம்பரம் ஒரு கேடா என்று யாரோ பேசுவது கேட்கிறது.)  

ஆனால் நியுஜெர்சியில் மரணம் அடைவதென்பது அவ்வளவு சிக்கனமான விஷயம் அல்ல என்று தெரிகிறது.

இங்கே மரணங்கள் ஏதேனும் ஒரு மருத்துவமனையில் தான் நிகழ்ந்தாகவேண்டும், அல்லது சான்றளிக்கப்படவேண்டும். அத்துடன், இறந்த உடலை வீட்டிற்குக் கொண்டுவர அனுமதி கிடையாது. அரசாங்கத்தால் உரிமம் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு FUNERAL HOUSE -இல் தான் சடலங்கள் கிடத்தப்படவேண்டும்.  எவ்வளவு நாள் வேண்டுமோ அவ்வளவு நாள் தரமான  குளிரூட்டப்பட்ட சூழ்நிலையில்  அவை பாதுகாக்கப்படும்.

பிணங்களைப் புதைப்பதோ அல்லது எரிப்பதோ உரிமம பெற்ற FUNERAL DIRECTOR முன்னிலையில் தான் நடைபெறவேண்டும்.

சூரியன் மறைவதற்குள் பிணத்தை இடுகாட்டிற்கு அனுப்பிவிடும் பழக்கம் நம்முடையது. (கருமம் செய்யவேண்டிய  வாரிசுதாரர் வருவதற்குத் தாமதமானால் மட்டுமே இது  தாமதப்படும்.) நியுஜெர்சியில் அப்படியில்லை. பிணத்தை எரிப்பதானால்,  இறந்து இருபத்திநாலு மணி நேரம் ஆன பிறகே அதற்கு அனுமதி உண்டு. புதைப்பதானால் அதற்குரிய சம்பிரதாயமான சடங்குகளை முடிப்பதற்கு சில நாட்கள் ஆகும் என்பதால் அது பற்றி தனியாக விதிகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

எரிக்கப்பட்டவரின் சாம்பலைக் கடலில் கரைக்கவோ, தூவவோ  அனுமதி உண்டு. ஆனால் மூன்று கடல்மைல்களுக்கு அப்பால் தான் செய்யவேண்டும். அது பற்றி முப்பது நாட்களுக்குள் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகாரிக்கு முறையாகத் தகவல் அளிக்கவேண்டும். கடல் அல்லாத நிலப்பரப்பின் மீதும் சாம்பல் தூவப்படலாம். ஆனால்  தனது நிலத்தில் அது விழக்கூடாது என்று ஆட்சேபிக்க மற்றவர்களுக்கு உரிமை உண்டு.

இறந்தவர்கள் விட்டுச்செல்லும் சொத்துமதிப்பின் மேல் ‘மரணவரி’ (எஸ்டேட் டாக்ஸ்) கட்டியாகவேண்டும்.  இந்தியாவிலும் இந்த வரி இருந்தது. பிணத்தை எடுப்பதற்குள் அந்த வரியைச் செலுத்தியாகவேண்டும் என்று அதிகாரிகள் கட்டாயப்படுத்திய கதைகள் ஏராளம். இதை நிரந்தரமாக ஒழித்த பெருமை நமது ப. சிதம்பரம் அவர்களைச் சாரும். (தான்  பதவியேற்றவுடன் இந்த மரண வரியை ரத்து செய்வதாக டொனால்டு ட்ரம்ப்   கூறியிருக்கிறார்.)

ஜாதி, மத வித்தியாசமின்றி யார் வேண்டுமானாலும் FUNERAL DIRECTOR ஆகமுடியும்.

தனக்கு என்னவிதமாக இறுதிச் சடங்குகள் நடைபெறவேண்டும் என்று முன்னதாகவே இவர்களிடம் பலர் பதிவுசெய்துகொண்டு அதற்காகப்  பெருந்தொகையையும் வைப்புநிதியாகச செலுத்துகிறார்கள்.  அப்படிப்  பதிவு  செய்தவர் இறந்துபோகும் நிலையில், சம்பந்தப்பட்ட  FUNERAL DIRECTOR முன்னின்று ஆகவேண்டிய காரியங்களைக் கவனித்துக்கொள்கிறார். உறவினர்களுக்குத் தகவல் தெரிவிப்பது, பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்பது, பிணத்தைப் பாதுகாப்பாக  வைப்பது, காப்பீட்டு  நிறுவனங்களுக்குத் தகவல் கொடுத்து அவர்களிடமிருந்து பணம் பெறுவதற்கு ஆவன செய்வது, இறந்தவரின் சமய  முறைப்படி பத்தாம் நாள் அல்லது வேறொரு நாளில் அஞ்சலிக்கூட்டம் நடத்துவது, அதற்கான அழைப்புகளை அனுப்புவது, அவர்களுக்கு உணவு முதலிய வசதிகளைச் செய்வது  ....என்று எல்லாவற்றையும் இந்த  FUNERAL DIRECTOR குறையின்றி நடத்திவைப்பார். (கொஞ்சம் செலவாகும், அவ்வளவே!)

தான் இறந்தபிறகு தனக்குரிய இறுதிச்சடங்குகளை இன்னமுறைப்படி இன்னார்தான் செய்யவேண்டும் என்று உயிலில்  ஒருவரின் பெயர் குறிப்பிட்டிருந்தால்,  அந்தச் சடங்குகளைப் பொறுத்தவரை அந்த நபருக்கு மட்டுமே முழு உரிமை உண்டாம். சட்டபூர்வ வாரிசுகள் அதை மதித்தாகவேண்டுமாம்.

இதையெல்லாம் பார்க்கும்போது, ‘நம்மூரு போலாகுமா?’ என்று தோன்றுகிறதல்லவா? உண்மைதான்; தப்பித்தவறி அமெரிக்காவில் மரணம் அடைந்துவிட்டால் சடலத்தைப் பதப்படுத்தி அடுத்த விமானத்தில் ஊருக்கு அனுப்பிவிடுவதுதான் சிக்கனமான விஷயம்.

 (சென்னையில் டிசம்பர் 5/6 இல்  நடந்த ஒரே ஒரு மரணத்தைப் பற்றி தினமும் சமூக வலைத்தளங்களில் நடக்கும் கலாட்டாவின் பிரதிபலிப்பு?)

-இராய செல்லப்பா, நியூஜெர்சி

ஞாயிறு, ஜனவரி 01, 2017

மாறுவதேயில்லை சில விஷயங்கள்


பதிவு எண் ௦1/2017


ஆண்டுகள் உருண்டோடினாலும் நமது வாழ்க்கையில் சில விஷயங்கள் மாறுவதேயில்லை. 

பருவப் பெண்ணின் நாணம், விடலைப் பையனின் விஷமம், கருவுற்ற பெண்ணின் முகச்சோர்வு, நல்ல மதிப்பெண் பெற்ற மாணவனின் பெருமிதம், மனதாலோ செயலாலோ நேர்மறையாக  நம்மைப் பாதித்தவர்களின் இழப்பினால் வரும் துயரம் ....போன்ற உணர்வுகள் காலம் காலமாக மாறியதேயில்லை. இனியும் மாறாது.

அதேபோல், அரசியல்வாதிகள் எவ்வளவு நல்லவர்களானாலும் சரி, நேரடியாகவே நமக்கு நல்லது செய்திருந்தாலும் சரி,  அவர்களின் மரணம் ஒரு சில மணித்துளிகளுக்கு  மேல் நம்மைப் பாதிப்பதில்லை. இன்னும் நல்லது செய்யாமல் போனார்களே என்ற அதிருப்தியே மேலோங்கி நிற்கும். சற்றே மர்மமான சூழ்நிலையில் அண்மையில் மறைந்துபோன ஓர்  அரசியல் தலைவரின் மரணமும் அப்படியே; கூடு புதைந்தவுடன் கூடாரம் நகர்ந்து விட்டது.  கிரீடம் இடம் மாறிவிட்டது. மறைந்தவரின் புகழ் மறக்கப்பட்டுவிட்டது. சராசரி மனிதர்கள் தொலைக்காட்சிப் பெட்டி முன்பு சில நாட்கள் தவம் கிடந்தார்களேயன்றி,  அம்மரணம் மனதைத் தொடாமலே போய்விட்டது.

இயற்கையும் ஒரு காரணம்-  வாராது வந்த வார்தாப் புயல்.  சென்னையில் தொடர்ந்து ஏழுநாட்கள் மின்சாரமோ, அலைபேசி கோபுரங்களோ, போக்குவரத்தோ இயங்காமல் முடங்கிப்போன நிலையில், இறந்தவர்களுக்காக எவ்வளவு நாள் துக்கம் காப்பது? காந்திக்கும், நேருவுக்கும், அறிஞர் அண்ணாவுக்கும், எம்ஜியாருக்கும் ஏற்பட்ட  பின்-மரணத்துவ நிலைதான் இது.

சில விஷயங்கள் மாறுவதேயில்லை.... 

வானவில்லின் வண்ணம் தான் சாயம் போகுமோ?” என்றார்,  நா. முத்துக்குமார். அவரது மரணமும் அப்படியே: பாரதிக்கும் பட்டுக்கோட்டைக்கும் பிறகு அகால மரணமடைந்த அற்புதக் கவிஞர் வரிசையில் நா முத்துக்குமாருக்கு (வயது 41) நிச்சயமான இடம் உண்டு. அவருடைய முதல் பாடலான “எனக்குப் பிடித்த பாடல்” என்ற பாடலின் ஆழத்தை அண்மையில்தான் நான் அனுபவிக்கமுடிந்தது. பாலு மகேந்திராவின் ‘ஜூலி கணபதி’ என்ற படத்திற்காக எழுதப்பட்டது. 



ஸ்ரேயா கோஷல் பாடியது.  பாடலைப் படத்தில் சரியான  முறையில் பயன்படுத்தத் தவறியதற்காகவே  பாலு மகேந்திராவை நாடுகடத்தி யிருக்கவேண்டும்.  வைரமுத்துவின் முதல் பாடலான ‘பொன்மாலைப் பொழுது’க்குக் கிடைத்த வரவேற்பு இந்தப் பாடலுக்குக் கிடைக்காமல் போனதற்கு பாலுமகேந்திராவின் மோசமான காட்சியமைப்பே காரணமாக இருக்கவேண்டும்.

விடுங்கள்...2016 ஆம் ஆண்டு முடிந்து விட்டது;   2017 இதோ பிறந்துவிட்டது. அதனால் எல்லாம் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிடப் போவதில்லை.  அதே சாலைகள், அதே பேருந்துகள், அதே மளிகைக்கடைகள், அதே பேப்பர் பையன், பால்பாக்கெட் போடும் அதே பெண்மணி, திடீர் திடீரென்று ஏதோ ஒரு கால்சென்ட்டரில் இருந்து வரும் அதே அழைப்பு,  அதே மேலதிகாரி, தேநீர் கொண்டுவரும் அதே பையன், அடிக்கடி இயங்காமல் போகும் அதே இணையத் தொடர்பு... அதே மனைவி (அல்லது கணவன்)...இவையெல்லாம் மாறவா போகின்றது?

இவையெல்லாம் நமக்குப் பழகிவிட்ட சங்கதிகள். மாறினால் தான் தொல்லை. கருவாட்டுக் கூடையருகில் அமர்ந்து பேருந்தில் பயணிப்பவனுக்கு, மல்லிகைப்பூக்காரி யருகில் அமர்ந்தால் வாந்தி வரும் என்பார்களே,  அது போன்ற நிலைமை. எனவே, வேறு வழியில்லை,

“வந்ததை வரவில் வைப்போம்,
சென்றதை  செலவில் வைப்போம்,
இன்று போல் என்றும் இங்கே
ஒன்றாய்க் கூடுவோம்”

என்ற கண்ணதாசனின் வரிகளோடு  இந்தப் புத்தாண்டை வரவேற்போம்! பிறகு வழக்கம்போல் நடக்கத் தொடங்குவோம்!

(பத்துநாள் முன்புதான் நியுஜெர்சி வந்தேன். ஓராண்டாக வலைத்தளத்தின் பக்கம்  வராமலே இருந்து விட்டேன். இனி அப்படி நேராது.  அடிக்கடி எழுதுவேன். இது தகவலா எச்சரிக்கையா என்று தெரியவில்லை..... என்ன செய்வது, வாழ்க்கையில் சில விஷயங்கள் மாறுவதே யில்லையே! மனதைத் திடப்படுத்திக்கொண்டு படித்துவிடுங்கள்.)
-      
-          - இராய செல்லப்பா (என்னும் செல்லப்பா யக்யஸ்வாமி)


இணைப்பு: 'எனக்குப் பிடித்த பாடல்' 
http://www.youtube.com/watch?v=bG7_FskQ1oM