திங்கள், ஜூன் 06, 2022

வக்கீல் மேனேஜரின் திடீர் அன்பு


வக்கீல் மேனேஜரின் திடீர் அன்பு

(நான்கு தூண்கள் நகரம் - 5)

அமெரிக்காவில் 55வது நாள் (05-6-2022)


நாங்கள் தங்கியிருந்த கட்டிடத்திற்குப் பெயர் இருந்ததா என்று தெரியவில்லை. மிகவும் பழைய கட்டிடம். உரிமையாளரான முதிய வக்கீல்  மூன்றாவது மாடியில் குடியிருந்தார். ஆனால் நான் அவரைப் பார்த்ததில்லை. அவரிடம் மேனேஜராக இருந்த ஒருவர்தான் வாடகை வசூல் உட்பட எல்லா விஷயங்களையும் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் பெயர் மறந்துவிட்டது. நாயுடு என்று வைத்துக்கொள்வோம்.


நடுத்தர உயரம். ஒல்லியாக இருப்பார். நிறம் கருப்பு. முகத்தில் இல்லாதது சிரிப்பு. கை வைத்த வெள்ளை பனியன் அணிந்து அதற்குமேல் வேட்டியை இறுக்கமாகக் கட்டி இருப்பார். விடுமுறை நாட்களில் தான் கீழே இறங்கி வருவார். ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டே வருவார். எந்த அறையிலாவது  ஒரு நிமிடத்திற்கு மேல் அவர் செலவழித்தால் அடுத்த நாள் அந்த ரூம்வாசி தூக்கி எறியப்படுவார் என்பது விதி. ஆகவே நாயுடு வருகிறார் என்றால் அறைவாசிகள் மிகுந்த அச்சத்தோடுதான் நெளிவார்கள்.  


ஹைதராபாத் உயர்நீதி மன்றம் -படம்-நன்றி-இணையம்


பேச்சிலர்கள் தங்கும் இடம் என்பதால், ஆண் பெண் உறவு சம்பந்தப்பட்ட தவறுகள் நடந்துவிடாதபடி கண் கொத்திப் பாம்பாக கவனிப்பார் நாயுடு. எந்த அறையில் கால் வைத்தாலும் முதலில்  குப்பைக் கூடையில்தான் கவனம் செலுத்துவார். அவருக்கு வேண்டிய தகவல் அதில் கிடைத்துவிடும். யாரும் மழுப்ப முடியாது. நீண்ட கூந்தல் இழைகளோ,  உடைந்த வளையல்களோ, பெண்களின் உள்ளாடைகளோ எந்த அறையில் இருக்கும் என்ற தகவல் அவருக்கு எப்படிக் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் உடனடி நடவடிக்கை நாயுடுவால் எடுக்கப்படுவது  நிச்சயம்.


கட்டிடத்தில் இருந்து இறங்கி வந்தால் சற்று தூரத்தில் ஒரு இஸ்திரி வண்டி இருக்கும். கணவன் மனைவி மாறி மாறி வேலை செய்து கொண்டு இருப்பார்கள். கணவனைவிட மனைவி பத்து வயது குறைந்தவள். எடையில் ஒன்றரை மடங்கு அதிகமானவள்.  சராசரிப்  பெண்களை விட அழகானவள். கணவன் இஸ்திரி போடப்போட, மனைவி அந்தத் துணிகளை ஒவ்வொரு அறையாகச் சென்று கொடுத்துவிட்டு பணம் வசூலித்து வருவாள். அவள்தான் நாயுடுவுக்கு இன்பார்மர் என்று அருகில் இருந்த சலூன்காரர் கூறுவதுண்டு. ஆனால் உண்மை என்னவென்றால் நாயுடுதான் எங்களிடம் அந்தப் பெண்ணிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று அடிக்கடி கூறுவார். 


விடுமுறை நாளிலும் நாங்கள் மூவரும் வங்கிக்குச்  சென்று விடுவோம் என்பதால் இரவில் உறங்கும் நேரம் மட்டும்தான் அறையில் இருப்போம். ஆகவே நாங்கள் அவளைப்பற்றிக் கவலைப்படவில்லை.


என்றாலும் இரவு பத்து மணி போல நாயுடு ஒரு முறை மேலோட்டமாக எல்லா அறைகளையும் பார்வையிடுவார் என்று அவள் சொன்னாள். பதினோரு மணிக்கு ஈரானிய ஓட்டலில் இஞ்சி டீ அருந்துவாராம். இடைப்பட்ட நேரத்தில் அவர் என்ன செய்வார் என்று நான் கேட்கவில்லை.

 

நாங்கள் அறைக்கு வருவதற்கு முன்னால்  ஒரு நாள் நாயுடு என்னுடைய வங்கிக்கு வந்திருந்தார். முதிய வக்கீலின் சில சேவிங்ஸ் கணக்குகள் எங்கள் கிளையில் இருந்தன. கையால் பாஸ் புத்தகம் எழுதப்பட்ட காலம் அது. ஒவ்வொரு கிளார்க்குக்கும் ஒவ்வொருவிதமான கையெழுத்து. 6 போட்டால் 8 மாதிரியும் அல்லது 0 மாதிரியம் இருப்பதுண்டு. வங்கி லெட்ஜரில் சரியாகவும், ஆனால் பாஸ்புக்கில் தவறாகவும் இருப்புத்தொகை குறிக்கப்பட்டு விடுவதுண்டு. நாயுடு கொண்டுவரும் பாஸ் புத்தகங்களில் இம்மாதிரி பிழைகள் அடிக்கடி வரும். அதற்குக் காரணம் தெரியாது. 


வங்கிக்கு அருகில் இருந்த 'மாடர்ன் டிபன் ரூம்' என்ற உணவகத்தில் இருந்து ஸ்பெஷல் காபி வரவழைத்துக் கொடுக்கும் வரையில் நாயுடு மேனேஜர் கேபினை விட்டு நகர மாட்டார். காபி அருந்திய பிறகு வாடிக்கையாளர் அரங்கில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு பத்து,  பதினைந்து நிமிடம் அமர்ந்து கொள்வார். பாஸ் புத்தகங்களை மீண்டும் ஒரு முறை அலசி ஆராய்ந்து தன்னைத் திருப்திப்படுத்திக் கொண்ட பிறகே கிளம்புவார்.


அனேகமாக அன்று மாலை என்னுடைய அறைக்கு வருவார். 'உங்கள் வங்கியின் சர்வீஸ் பற்றி வக்கீல் சாருக்கு மிகவும் திருப்தி'  என்பார். அப்படி அவர் ஆரம்பித்தால் மேற்கொண்டு அரை மணி நேரம் என்னோடு பேச விரும்புகிறார் என்று அர்த்தம். உடனே நான் பாம்பே ஆனந்த பவனில் இருந்து ஆளுக்கு ஒரு காபி ஆர்டர் செய்வேன். 


அப்படித்தான் அவர் தன்னுடைய பெங்களூர் முதல் கடலூர் வரையான ரயில் பயணத்தைப் பற்றி ஒருநாள்  கூறினார்.  


பெங்களூரிலிருந்து விருத்தாசலம் வழியாகச் சென்னை செல்லும் வண்டி அது. இவர்  பெங்களூர் டு கடலூர் டிக்கெட் எடுத்திருக்கிறார். இவர் போக வேண்டிய இடம் கடலூர் பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் இருந்த ஒரு முகவரிக்கு. அருகிலேயே ரயில்வே ஸ்டேஷன் இருந்தது. அதற்கு கடலூர் என் டி என்று பெயர். என்.டி. என்றால் நியூ டவுன். அதற்கு திருப்பாதிரிப்புலியூர் என்றும் பெயர் உண்டு. இதைத்தான் பொதுவாகக் கடலூர் என்று கூறுவார்கள். 


ஆனால் ரயில்வேயைப்  பொறுத்தவரை, கடலூர் என்றால் அது கடலூர் ஓ.டி. என்னும் ஓல்டு டவுன் தான். கடலூர் என்ற டிக்கெட் வாங்கியவர்கள் இங்குதான் இறங்க வேண்டும். இதைக் கடந்து போனால்தான் திருப்பாதிரிப்புலியூர் ஸ்டேஷன் வரும். 


எனவே நாயுடு அவர்கள் கடலூர் டிக்கெட் வாங்கிக்கொண்டு, ஓ.டி.யில் இறங்காமல் திருப்பாதிரிப்புலியூர் சென்று  இறங்கியிருக்கிறார். நூற்றுக்குத் தொண்ணூறு பேர் இப்படித்தான் செய்வார்கள். அது முழுக்க முழுக்க ரயில்வேயின் தவறு. ஆனால் பயணிகளுக்குத் தான் அபராதம் விதிக்கப்படும். டிக்கெட் இல்லாமல் கடலூர் டு திருப்பாதிரிப்புலியூர் பயணம் செய்ததற்காக 250 ரூபாய் நாயுடுவிடம் கறந்து விட்டார்கள்.


தன் வேட்டியைச் சற்று மேலே தூக்கி உள்ளிருந்த அரை நிஜாரில் கைவிட்டு சாயம் போன ஒரு ரயில்வே ரசீதை எனக்குக் காட்டினார் நாயுடு. 


"இதைக் கொடுங்கள், ரயில்வே மீது நஷ்ட ஈடு கேட்கலாம் என்று வக்கீல் சார் கூறினார்.  நான் வேண்டாம் என்று மறுத்து விட்டேன். என்றாலும் இந்த ரசீதைக் கிழித்துப் போட எனக்கு மனம் வரவில்லை" என்றார்.


பேச்சுவாக்கில் நானும் திருப்பாதிரிப்புலியூரில் இன்னொரு வங்கியில் பணியாற்றிவிட்டு இங்கு வந்திருக்கிறேன் என்பதை அவர் தெரிந்து கொண்டதும் என் மீது விசேஷம் நாட்டம் ஏற்பட்டுவிட்டது. 


அடுத்த சில நாட்களில் எங்கள் அறைக்கு மட்டும்,  உள்ளே சிறிய குளியலறையைக் கட்டிக் கொடுத்தார் நாயுடு. "இனிமேல் காமன் பாத்ரூமை யூஸ் பண்ணாதீர்கள். ஆனால் வேற்று மனிதர்கள் யாரும் வந்து குளிக்க அனுமதியில்லை” என்றார். 


ஆனால் கடைசி வரையில் அவர் திருப்பாதிரிப்புலியூருக்கு  ஏன் சென்றார் என்பதைக் கூறவில்லை. எது அவருடைய சொந்த ஊர், எப்படி ஹைதராபாத் நகருக்கு வந்தார் என்ற கேள்விகளுக்கும்  விடை இல்லை. முக்கியமாக அவருக்குத் திருமணம் ஆகிவிட்டதா இல்லையா என்றும் தெரியவில்லை. 


ஆனால் ஓர் இளம் டாக்டர்,  அரசு மருத்துவக் கல்லூரியில் சந்தேகத்துக்கிடமான முறையில் மரணம் அடைந்தபோது, முதிய வக்கீல் அந்த வழக்கில் ஆஜராகி, உண்மையை நிரூபித்து, இழப்பீடாகப் பெருந்தொகை ஒன்றை இளம் விதவைக்குப் பெற்றுத் தந்தது பற்றிய முழு விவரம் அவரிடம் இருந்தது. அதைத் தெரிந்து கொள்ள நான் ஆவலாக இருந்ததால் மற்றவற்றில் கவனம் செலுத்தவில்லை.

 

கணவனை இழந்த அவ்விளம் பெண் யாரென்று தெரிந்தபோது அதிர்ச்சியடைந்தேன்.

  • இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து.


(தொடரும்)




ஞாயிறு, ஜூன் 05, 2022

பாம்பே ஆனந்த பவனும் வாயில்லா ஜீவன்களும்

பாம்பே ஆனந்த பவனும் வாயில்லா ஜீவன்களும்  

(நான்கு தூண்கள் நகரம்-4)

அமெரிக்காவில் 54 ஆவது நாள் (04-6-2022)


48 வருடங்களுக்கு முன்பு இடம்பெயர்ந்து சென்னைக்கு முதன்முதலாக  வந்தபோது மாம்பலம் ரயில் நிலையத்தின் படிகளில் இருந்து ரங்கநாதன் தெருவை நோட்டம் விட்டபோது அதிர்ச்சி அடைந்தேன். என்ன மாதிரி ஒரு மக்கள் வெள்ளம்! 


அதைவிடவும் அதிசயமாக இருந்தது அந்த மக்கள் கூட்டத்தைப் பற்றிச் சற்றும் கவலைப்படாமல் மெல்ல நடந்து கொண்டிருந்த சில யானைக் குட்டிகள்!

சுல்தான் பஜார் கடைகள் -படம்-நன்றி-இணையம்

ஆம், அவற்றை யானைக் குட்டிகள் என்று தான் நினைத்தேன். அருகில் சென்று பார்த்தபோது தான் அவை காளை மாடுகள் என்று தெரிந்தது. ரங்கநாதன் தெருவில் காய்கறிக் கடைக்காரர்கள் வீசும் அழுகிய காய்கறிகளை உண்டு மலைபோல் வளர்ந்து திரிந்தன அம் மாடுகள்.


சென்னை வாழ்க்கை எப்படி இருக்குமோ என்று தயக்கத்தோடு குடிவந்த எனக்கு இது ஒரு வகையில் நம்பிக்கையை  ஊட்டியது. அழுகிய காய்கறிகளைத் தின்றே இத்தனை வளர்ச்சி காணமுடியும் என்றால், நல்ல காய்கறிகளைத் தின்று வாழும் மனிதன் நிச்சயம் சென்னையில் ஆரோக்கியமாகத் தான் இருப்பான்!


ஹைதராபாத்திலும் இதேபோன்ற யானைக்குட்டி போன்ற மாடுகளை சுல்தான் பஜார் அருகில்  பார்த்தேன். 'கோட்டி'யில் இருந்த ஆந்திரா வங்கியின் பழைய தலைமையகத்தின் முன்பு விடியற்காலை ஐந்து மணிக்கே இந்த மாடுகள் திரண்டு நிற்கும்,  எதிர்ப்புறச் சந்தில் இருந்த "பாம்பே ஆனந்த பவன்" என்ற ஓட்டல் திறக்கும் வரை.


அது உடுப்பிக்காரர்கள் நடத்திய ஓட்டல். விடியற்காலை ஐந்து மணியிலிருந்தே வெங்கடேச சுப்ரபாதமும் கிருஷ்ணர் பாடல்களும் அதன் உரிமையாளர் சற்றே உரக்கச் சொல்லும் அழகை, அதற்கு அடுத்த கட்டிடத்தில் இருந்த நான் படுத்துக் கொண்டே ரசிப்பேன். இந்த மாடுகள் அசைந்தசைந்து  வந்து ஓட்டல் கதவில் தங்கள் கொம்புகளால் தட்டி 'மா' என்று கூவும் குரல் கேட்கும். 


படம்-நன்றி-இணையம்

சிறிது நேரத்தில் ஊதுவத்தி மணமும், சாம்பிராணிப் புகையும்,  அவர் கையில் இருந்து குலுங்கிக் குலுங்கி ஒலிக்கும் மணியின் இன்னிசையும்  என் அறையை நிரப்பும். 


படுக்கையை விட்டு எழுந்து ஜன்னல் வழியாகப் பார்ப்பேன். இரண்டு பெரிய மாடுகள்,  ஓட்டல் கதவைத் திறந்து உரிமையாளர் வெளியே வருவதற்கும் இடம் தராமல் நெருக்கமாக  நின்று கொண்டிருக்கும். 


'உடுப்பி கிருஷ்ணா' என்று பிரார்த்தனை செய்தபடியே கதவைத் திறப்பார் உரிமையாளர். ஒரு தட்டில் உப்புமாவும்,  ரவா கேசரியும், சமைத்த உருளைக் கிழங்கும் ஏந்திக் கொண்டு அந்த மாடுகளுக்கு முன்னால் நீட்டுவார். அவை இடத்தை விட்டுச் சற்றும் அசையாமல் ஆசையோடு சாப்பிடும். 


ஒரு சமயம்  மாடு இந்த உருளைக்கிழங்கைச் சாப்பிட மறுத்து விட்டதை நான் பார்த்தேன். அவ்வளவுதான் உரிமையாளருக்கு வந்ததே கோபம்! உள்ளே இருந்த ஊழியரை அழைத்தார். "எத்தனை முறை சொல்வது? நேற்றைய  உருளைக்கிழங்கை கஸ்டமர்களுக்கு வைத்துக்கொள், மாடுகளுக்குப் போடாதே என்று! வாயில்லா ஜீவனின் பாவத்தை ஏன் கொட்டிக் கொள்கிறாய்?" என்று கன்னடத்தில் இரைந்தார். 


ஊழியர் பதில் சொல்லாமல் உள்ளே போய் அடுப்பிலிருந்து சுடச்சுட உருளைக்கிழங்கையும் கொஞ்சம் உப்புமாவையும்  எடுத்து வந்து அந்த மாட்டுக்கு வைத்தார். 


அப்படியானால் அந்தப்  பழைய (கொஞ்சம் ஊசிப்போன) உருளைக்கிழங்கு என்ன ஆகும்? லேசாகச் சூடுபடுத்தினால் காலையில் பூரி-கிழங்கு ஆர்டர்  செய்யும் முதல் வாடிக்கையாளர்களுக்குப் போய்ச் சேருமாம்! 


இதனால்தான் நான் காலையில் எட்டரை மணிக்குப்பிறகே  அந்த ஓட்டலுக்குச் சென்று சாப்பிடுவேன்.  


சரி, சீத்தாப்பல் மண்டியிலிருந்து இங்கு எப்படி வந்தேன் என்பதைச்  சொல்ல வேண்டுமல்லவா?


படீ சவ்டி  வங்கிக் கிளையில் நான் சேர்ந்த சில நாட்கள் கழித்து லட்சுமி நாராயணன் என்ற நண்பர் வந்து சேர்ந்தார். இளைஞர். திருமணமாகாதவர். ராஜமுந்திரி என்னும் மாம்பழ நகரைச் சேர்ந்தவர். (பிரபல தெலுங்கு நடிகை ஒருவரைப் பற்றி அவர் சொன்ன முக்கியச் செய்தி பின்னால் வரும்). 


தாத்தாக்கள் மூலம் சொத்துக்கள் பெறும் பேரன்கள் உண்டு. லட்சுமி நாராயணனுக்கோ தாத்தா மூலம் விபரீதமான பதவி கிடைத்தது! 


அவருடைய தாத்தா ராஜமுந்திரியில் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை நடத்திக் கொண்டிருந்தார். பல வருடங்களுக்கு முன்பு அதில் கட்டுரை எழுதிக் கொண்டிருந்த ஒருவர் பெயர் என்.என்.பை. (N.N.Pai).  இவர் பின்னாளில் கார்ப்பொரேஷன் வங்கியின் சேர்மன் ஆனபோதுதான் என்னை இன்டர்வியூ செய்து வேலை கொடுத்தவர். இவர் சேர்மன் ஆன விஷயம் தெரிந்து லக்ஷ்மி நாராயணனின் தாத்தா இவருக்கு ஒரு கடிதம் எழுதினார். இவரும் உடனே பேரனை அனுப்புங்கள், உங்களுக்காக அவனுக்கு ஒரு வேலை கொடுக்கிறேன் என்று அன்போடு கடிதம் எழுதினார். 


லட்சுமி நாராயணன் நேரில் வந்தார். பட்டப்படிப்பின் இறுதித் தேர்வு எழுதி ரிசல்ட் வர வேண்டிய நேரம். நல்ல புத்திசாலி. களையான முகம். ஆனால் பாவம் ஆள் மட்டும் குள்ளம். என்.என்.பை உயரமாக, ஆஜானுபாகுவாக இருப்பார். அதனால்  உயரமானவர்களிடம் அவருக்கு நல்ல மரியாதை உண்டு. "உங்கள் தாத்தாவின் பெயருக்காக உங்களை ஆபீஸர் ஆகவே எடுக்கலாம்; ஆனால் உயரம் குறைவாக இருக்கிறீர்கள். மற்றவர்களை  நிர்வாகம் செய்யும்போது சங்கடமாக இருக்கும். ஆகவே உங்களை  கிளார்க்காக நியமிக்கிறேன்" என்று கையோடு ஆர்டர் கொடுத்து அனுப்பினார். 


ஆனால் அவரால் உடனடியாக வந்து சேர முடியவில்லை. மூன்று மாதம் எக்ஸ்டென்ஷன் கேட்டுப் பிறகுதான் வந்தார்.  அந்த மூன்று மாதத்திற்குள் ஒரு விபரீதம் நிகழந்துவிட்டது. எப்படித் தெரியுமா? 


லட்சுமிநாராயணன்  ஆபீஸர் பதவிக்காகப் பல வங்கிகளுக்கு  விண்ணப்பித்திருந்தார். வங்கிகள் தேசியமயமான சூழ்நிலையில் எல்லா வங்கிகளும் போட்டி போட்டுக்கொண்டு  ஆள் எடுத்துக்கொண்டிருந்தன. கார்ப்பொரேஷன் வங்கியில்  நடைபெற்ற எழுத்துத் தேர்வில்  லட்சுமி நாராயணன் வெற்றி பெற்று இன்டர்வியூக்கு அழைக்கப்பட்டிருந்தார். தேர்வில் அவருக்கு நல்ல ரேங்க் இருந்ததால் எப்படியும் வேலை கிடைத்துவிடும் என்று அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டார்களாம். 


உள்ளே போனவரிடம் கேட்ட முதல் கேள்வி 'இப்போது என்ன செய்கிறீர்கள்' என்பதே. இதே வங்கியில் தனக்கு கிளார்க் போஸ்ட் கிடைத்திருப்பதை அவர் சொன்னார். உடனே அவருக்கு வாழ்த்து தெரிவித்து சீக்கிரம் சேர்ந்து கொள்ளுங்கள் என்று அனுப்பி விட்டார்களாம். தாத்தாவின் சிபாரிசு மட்டும் இல்லாமலிருந்தால் ஆபீஸராகவே சேர்ந்திருப்பார் பாவம்!


(பின்னாளில் ராஜமுந்திரி சென்று அவர் தாத்தாவை நேரில் சந்தித்திருக்கிறேன். தன் தோட்டத்தில் விளைந்த மாம்பழத்தை நறுக்கிக் கொடுத்தார். கோதாவரி நதியின் கரையோரம் நடந்தீர்களா என்று கேட்டார். பேச்சின் இடையே  அந்த நடிகையைப் பற்றிய விஷயம் உண்மைதான் என்றும் தெரிந்தது. அது பின்னால் வரும்).


பாம்பே ஆனந்த பவன் ஓட்டல் அருகில் ஒரு முதிய வக்கீலுக்குச் சொந்தமாக இருந்த மூன்று மாடிக் கட்டிடத்தின் தரைத்தளத்திலும்  முதல் தளத்திலும் சுமார் இருபது  சிறு சிறு அறைகள் கட்டி வாடகைக்கு விட்டிருப்பதை மோப்பம் பிடித்து வந்தவர் லட்சுமி நாராயணன் தான். 


அதேசமயம் என்னைப் போலவே இதே வங்கியில் அதிகாரியாக வேலை கிடைத்து ஹைதராபாத்தி லேயே வேறொரு கிளையில் சேர இருந்த கிருஷ்ணகிரி நண்பர் ஒருவரும் ரூம் தேடிக்கொண் டிருந்தார். அவரும் இதே இடத்தைக் கண்டுபிடித்து விட்டார். பிறகென்ன, மூன்று பேராக ஒரே அறையில்- அதாவது அந்த வீட்டில்- தங்கிக் கொண்டோம்! 


தரைத்தளத்தில் எங்கள் ரூம் இருந்தது. (ஒரே மாதிரி மொத்தம் எட்டு ரூம்கள் இருந்தன). அனைவருக்கும் பொதுவாக இரண்டு குளியல் அறைகளும் இரண்டு கழிப்பறைகளும் இருந்தன. எங்கள் மீது அன்பு மிகக் கொண்ட கட்டிட உரிமையாளரின் டைப்பிஸ்ட், எங்கள் அறைக்குள்ளேயே சிறியதொரு குளியலறையைக் கட்டிக் கொடுத்தார். (அந்த அன்புக்குக் காரணம் என்ன என்பது பின்னால் வரும்). 


ஹைதராபாத்தில் பணியாற்றிய மூன்றாண்டுகளும்  இதே  அறையில்தான் இருந்தேன். அதற்கு முன்பே கிருஷ்ணகிரி நண்பர் தன் திருமணத்தைக் காரணம் காட்டி மலக்பேட்  என்ற இடத்திற்குத் தனிவீடு பிடித்துச் சென்று விட்டார். லட்சுமி நாராயணனுக்குச் சொந்த ஊருக்கு அருகில் மாற்றல் கிடைத்துக் கிளம்பிவிட்டார்.


கிளம்புவதற்கு முன் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது தான் அந்த நடிகையைப் பற்றித் தெரிவித்தார். 


அவருடன் அதே பள்ளியில் அந்தப் பெண்ணும் படித்துக் கொண்டிருந்தாள். நல்ல அழகு. அநாவசியமாக யாருடனும் பேசமாட்டாள். கவர்ச்சியாக இருந்தாள். ஆனால் யாரும் துரத்தி வரும் அளவுக்குத் தன்னை அவள் அலங்கரித்துக் கொண்டதில்லை. "இனிமையான குத்துவிளக்கு போல இருந்தாள்" என்று அவர் அடிக்கடி குறிப்பிட்டார். 


தெலுங்கில் இராமாயணம் பலமுறை திரைப்படம் ஆகியுள்ளது. அவ்வாறு சில வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒன்றில் சீதையாக நடித்து அசத்தியிருந்தாள் அவள். ஒரே படத்தின் மூலம் தெலுங்கில் உச்சபட்ச ஊதியம் பெறும் நடிகையாகி விட்டாள் என்றால் அவளுடைய நடிப்புத் திறமைதான் காரணம். (பின்னாளில் அகில இந்திய நடிகை யாகவும் அரசியல்வாதியாகவும் ஆனார்).


"அவளோடு நெருங்கிப் பழகியதோ பேசியதோ உண்டா?"


பெருமூச்செறிந்தார் நண்பர். சிலமுறை இவர் அவளைப் பார்த்துச் சிரித்ததுண்டாம். அவள் இவரைப் பார்த்தும் புன்முறுவல் பூத்ததுண்டாம். "ஆனால்…" என்று இழுத்தார்.


"சொல்லுங்கள், சொல்லுங்கள்..மறைக்காதீர்கள்!" என்றேன்.


"ஒன்றுமில்லை. ஒரு சின்ன வருத்தம்…" என்றார்.


பள்ளியில் திடீரென்று ஒருமுறை இருவருக்கும் தனிமை கிடைத்ததாம். அப்போதுதான் அவள் இவரைக் கேட்டாளாம். இவர் மறுத்துவிட்டாராம். தாத்தா கோபக்காரர் ஆயிற்றே!


"அப்படி என்ன கேட்டார்?" என்றேன் அடங்காத ஆசையுடன். ஏதோ விஷயம் இருக்கிறது. கள்ளரை  நம்பினாலும் குள்ளரை நம்பக் கூடாது. இந்த மூன்று வருடங்களாக எப்படி இதைச் சொல்லாமல் மறைந்தார்? எவ்வளவு அழகான நடிகை! அவள் கேட்டாளாம், இவர் மறுத்தாராம்! இதை நம்பாலாமா கூடாதா?


"நினைத்தால் சோகமாக இருக்கிறது. வேண்டாமே!" என்றார். 


நான் அவரைத் தேற்றினேன். "நண்பர்களுக்குள் இரகசியம் இருக்கவே கூடாது. எதுவானாலும் சொல்லுங்கள்.. எந்த சோகமானாலும் வெளியில் சொல்லிவிட்டால் சுமை குறையும் அல்லவா?"


"எப்படி சார் சொல்வது? சிரிக்க மாட்டார்களா! ஜெயப்ரதாவே அருகில் வந்து என் சயின்ஸ் நோட்சைக் கேட்டபோது தாத்தாவுக்கு பயந்து கொடுக்க மறுத்துவிட்டேன் என்று எப்படிச் சொல்வது?" 


அதற்குப் பிராயச்சித்தமாக ஜெயப்ரதா நடித்த படங்களை எல்லாம் இரண்டிரண்டு தடவை பார்த்து விடுவதை வழக்கமாக்கிக் கொண்டாராம் நண்பர்! 


(நான் மங்களூரில் பணியாற்றிக் கொண்டிருந்த கால கட்டத்தில் அவர் சென்னைக்கு மாற்றலாகி யிருந்தார். ஒரு விடுமுறை நாளில் அவரைச் சந்திக்க முயன்றபோது சோகம் என்னைச் சூழ்ந்து கொண்டது. சில நாள் முன்புதான் அவர் இந்த மண்ணுலகத்திலிருந்தே விடுதலை பெற்றிருந்தார்! உடல்நலம் திடீரென்று பாதிக்கப்பட்டதாம்).

  • இராய  செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து

 


சனி, ஜூன் 04, 2022

ஹைதராபாத்தில் ஒரு சீத்தாப்பழம்

 ஹைதராபாத்தில்  ஒரு சீத்தாப்பழம் 

(நான்கு தூண்கள் நகரம்-3)

அமெரிக்காவில் 53 ஆவது நாள்


ஹைதராபாத்தில் சென்று இறங்கியவுடன் என் மனைவியின் உறவினர் வீட்டில் சில நாள் தங்கியிருந்தேன். அவள் அப்போது கடலூரில் அரசுப்பணியில் இருந்ததால் நான் மட்டும்தான் ஹைதராபாதில் இருக்கவேண்டும் என்றும் முடிவானது. எனவே ஒரு பேச்சிலர் ரூம் இருந்தால் போதுமென்று தோன்றியது.  ஒரே வாரத்தில் பிடித்துக் கொடுப்பதாக ஒரு ப்ரோக்கர் நூறு ரூபாய் அட்வான்ஸ் பெற்றுக்கொண்டார்.  


அப்போதெல்லாம் ஹைதராபாதில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பிரபலமாகவில்லை.  தனி வீடுகளின் மாடி அறையில் அல்லது அவுட்-ஹவுசில் தான் பேச்சிலர் ரூம் கிடைக்கும்.  வங்கிக்கு  அருகில் இருந்தால் நல்லது என்று  ‘கோட்டி’  பகுதியிலேயே கவனம் செலுத்தினேன்.  ஐந்தாறு நாட்கள் ஆன போதிலும் சரியான ரூம் கிடைக்கவில்லை. அதற்குள் ஓர் ஆச்சரியமான விபரீதம் நிகழ்ந்தது.


அது ஒரு சனிக்கிழமை. அரை நாள்தான் வங்கி. மூன்று மணிக்குக்  கதவைப் பூட்டிக்கொண்டு நான் கிளம்பிய போது என்னை விட சற்றே உயரமான, ஆனால் பருமனான, சிவப்பான ஒரு நண்பர் அவசரமாக என்னை நோக்கி ஓடிவந்தார். 


"சார், உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். கதவைத் திறந்து  மேலே போய்ப் பேசலாமா?" என்றார்.  


முன்பின் தெரியாத ஒருவரோடு பேசுவதற்காகப் பூட்டிய வங்கியைத் திறப்பது சரியான காரியமாகத் தெரியாததால், “பரவாயில்லை,  இங்கேயே பேசலாம். நீங்கள் யார்?” என்றேன்.


"என்னைப் பற்றி யாரும் உங்களிடம் கூறவில்லையா என் பெயர் ஜம்புநாதன். நான் ஹூப்ளி  கிளைக்கு மாற்றல் கேட்டதால் தான் உங்களை இங்கே போட்டிருக்கிறார்கள்" என்றார் அவர். எனக்காகத் தியாகம் புரிந்த தோரணையில் அவர் பேசியதாகத் தோன்றியது. 


ஆனால் மாற்றல் உத்தரவு கிடைப்பதற்கு ஒரு மாதம் முன்பே தன் திருமணத்தை முன்னிட்டு அவர் விடுமுறையில் இருந்ததால் அவர் கேட்டுக்கொண்டபடி 'இன் அப்சென்ஷியா' வாக அவர் ‘ரிலீவ்’ செய்யப்பட்டிருந்தாராம். எனக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக, என்னோடு பணியாற்றும் ஊழியர்களின் பெயர்களையெல்லாம் சொன்னார். 


"வாருங்கள், கோட்டி 'காமத்'தில் சாப்பிட்டபடியே பேசலாம்" என்று அவரை அழைத்துக் கொண்டு நடந்தேன். கோட்டி பஸ் நிலையத்தின் அருகில், ஒரு மாடியில் இருந்த ஹோட்டல் அது. ஐந்து நிமிடத்தில் அடைந்து விட்டோம்.


"நான் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டு இருக்கிறேன். நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்.  அதற்காகத்தான் அவசர அவசரமாக ஓடி வந்தேன்" என்றார் ஜம்புநாதன்.


இரண்டு சாப்பாடு ஆர்டர் செய்துவிட்டு அவரை உற்று நோக்கினேன்.


"நீங்கள் இந்த ஊருக்குப் புதிது அல்லவா, வீடு பார்த்து விட்டீர்களா?" என்றார் மிகுந்த ஆர்வத்தோடு.


"வீடு வேண்டாம், ஒரு ரூம் இருந்தாலே போதும், ஆனால் இன்னும் கிடைக்கவில்லை. இன்றோ நாளையோ எப்படியாவது முடிவு செய்தாக  வேண்டும். உறவினர் வீட்டில் தங்கி இருக்கிறேன். அவர் நாளை வெளியூர் போகிறார். அதற்குள் இன்று மாலை போய் என்னுடைய பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு வெளியேற வேண்டும். ஒரு புரோக்கரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது தான் நீங்கள் வந்தீர்கள்" என்றேன் கவலையுடன்.


அப்போது அவர் முகத்தில் தோன்றிய மலர்ச்சியைப் பார்க்க வேண்டுமே!


"எந்த புரோக்கரும் வேண்டாம். கவலையை விடுங்கள். உங்களுக்காக ஒரு வீடு நான் ஏற்கனவே பார்த்து வைத்திருக்கிறேன். சாப்பிட்டு விட்டு நேராக உங்கள் உறவினர் வீட்டுக்குப் போய் சாமான்களை எடுத்துக்கொண்டு அந்த வீட்டில் வைத்து விடலாம்" என்று கம்பீரமாகக் கூறினார் ஜம்புநாதன். 


இரண்டு தட்டுகளில் சாப்பாடு வந்தது. பரிமாற வந்த சர்வர் ஜம்புநாதனைப் பார்த்து, "சென்னாகித்தீரா ஸ்வாமீ?" என்று கன்னடத்தில் கேட்டார். "நீங்கள் மாற்றலாகிப் போன பிறகு இன்னும் வங்கிக்கு நான் போகவில்லை."


இன்னொரு கிளையில் பணியாற்றும் நண்பர் ஒருவரும் சாப்பிட வந்திருந்தார். ஜம்புநாதனைப் பார்த்து கண்ணைச் சிமிட்டிக் கொண்டே, "புதுமாப்பிள்ளை, ஜாலி லைஃப்!  சரிதானே?" என்றார். 


எனவே ஜம்புநாதன் இந்த வங்கிக் கிளையின் ஊழியர்தான் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டானது. ஆனால் அவர் பார்த்திருக்கும் வீட்டின் முழுத் தகவல் தெரியாமல் பெட்டி படுக்கையுடன் போய் நிற்க முடியுமா என்று மனதிற்குள் புதிய கவலை தோன்றியது.


ஆட்டோவில் ஏறிக்கொண்டு "ஈஸ்ட் மாரட்பள்ளி" என்றேன். உறவினர் வீடு. ஜம்புநாதன் உற்சாகமாக மேல் விவரங்களைக் கூறத் தொடங்கினார்.


மூன்று வருடமாக மாற்றல் கேட்டும் கிடைக்காத நிலையில்,  திடீரென்று திருமணம் திகைந்து விடவே, சரி ஹைதராபாதிலேயே இருந்து விடலாம் என்ற எண்ணத்தில் வீடு பார்த்து அட்வான்ஸ் கொடுத்து விட்டாராம். அப்போதுதான் அவருக்கு மாற்றல் உத்தரவு வந்ததாம். 


"அந்த வீட்டை நீங்கள் எடுத்துக் கொண்டால் உங்களுக்கும் நன்மை, எனக்கும் கொடுத்த அட்வான்ஸ் திரும்பக் கிடைக்கும்" என்று மகிழ்ச்சியோடு கூறினார் ஜம்புநாதன்.


புது மனைவியோடு குடியிருப்பதற்கு ஏற்ற வீடு என்றால் நல்ல வீடாகக் தான் இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. "வாடகை 400 ரூபாய், மூன்று மாத அட்வான்ஸ் கொடுத்து இருக்கிறேன்" என்றார். 


அந்த நாளில் அந்த வாடகை  மிகவும் அதிகம் என்றாலும் உடனடியாக வீடு கிடைக்கிறது என்ற வசதியை முன்னிட்டு என் மனம் ஏற்றுக்கொண்டது. எந்த வீடானால் என்ன,  நான்கு சுவர்கள் தானே இருக்கப் போகிறது!


பெட்டி படுக்கையோடு நானும் அவரும் ஆட்டோவிலிருந்து இறங்கியபோது அந்த வீட்டின் பிரம்மாண்டம் எனக்கு அதிர்ச்சி அளித்தது. "சீத்தாப்பல் மண்டி" என்ற பகுதி அது. நூறடி தொலைவில் ரயில்வே ஸ்டேஷனும், நிறையச் சிறுகடைகளும், தனிவீடுகளுமாகப் போக்குவரத்து நிறைந்த பகுதியாக இருந்தது.


இரண்டு தெருக்களை அடைத்துக் கட்டிய புராதன காலத்து வீடாக அது விளங்கியது. வீட்டின் முன் பகுதி சீரமைக்கப்பட்டு அதில் உரிமையாளர் குடியிருந்தார். வீட்டின் பின்புறம்தான் ஜம்புநாதன் பார்த்த பகுதி.  அடுத்த தெருவில் இருந்து தான் அதற்கு  வாசல். 


நுழைந்தவுடன் மாட்டுத் தொழுவம் இருந்தது. அதற்கே உரிய இயற்கை மணமும் குணமும் காற்றில் நிறைந்திருந்தது. கவனமாகக் கால் பதித்துக் கொண்டு முன்னேறினால், மூன்றே அடி அகலம் உள்ள பாதை. இடதுகை மதில் சுவரை இடிக்கும், வலதுகை ஒரு கிணற்றின் சுற்றுச் சுவரை இடிக்கும். நூறு ஏக்கர் நிலத்திற்குத்  தண்ணீர் பாய்ச்சுவதற்கென்று உரிமையாளரின் தாத்தா அந்த நாளில் கட்டிய பெரிய கிணறு.  


"சீத்தாப்பல் மண்டியில் உள்ள 15 தெருக்களும் எங்கள் தாத்தாவிடம் இருந்து  மற்றவர்கள் வாங்கியது தான்" என்று பெருமையோடு சொன்னார் அந்த வீட்டின் பெண்மணி. 


அவர் அப்படிப் பேசிக்கொண்டிருந்தபோது, உள்ளிருந்து ஓர்  அழகான இளம் பெண் வந்தாரா, அவர் இவருக்கு மகளா, அவர் அருகிலிருந்த கல்லூரியில் முதல் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாரா, இளஞ்சிவப்பு நிறத்தில் பூப்போட்ட நைலக்ஸ் சேலை அணிந்திருந்தாரா என்பதெல்லாம் ஞாபகத்தில் இல்லை.  


"இந்தக் கிணறு எனக்கு பிடிக்கவே இல்லை. இடித்துவிட்டு மாடி வீடு கட்டலாம் என்றால் அப்பா ஒப்புக்கொள்ள மாட்டார்"  என்று கிளி மொழி தெலுங்கு மொழியில் சொன்னது மட்டும் ஞாபகத்தில் இருக்கிறது. 


"பசுமாட்டை இங்கு தான் கட்டுவோம். கொம்பு நீளம்.  ஆனால் முட்டாது. என்றாலும் கதவைத் திறக்கும்போது நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்றாள் கிளிமொழி. 


சுகாதாரமற்ற இடம் என்பதை என் மூக்கு முதலில் உணர்ந்து கொண்டது. அதை உடனடியாகப் புரிந்துகொண்ட ஜம்புநாதன் அவசரமாக, "ரொம்ப நல்ல விஷயம் என்னவென்றால், தினமும் காலையில் மகாலட்சுமி முகத்தில் விழிக்க முடியும் என்பதுதான்" என்று பசுமாட்டைக் காட்டினார். (கிளிமொழியின் பெயரும் மகாலட்சுமி என்று பிறகு தெரிந்தது).


உள்ளே நுழைந்தோம். ஒரு ஹால், காற்றோட்டமுள்ள படுக்கையறை, சிறிய சமையலறையும்  குளியலறையும் என்று வீடு ஓரளவு  சுத்தமாகவே இருந்தது. என்றாலும் விஜயநகர சாம்ராஜ்யக் காலத்துப் பழைய வீட்டிற்கு நானூறு ரூபாய் மிக அதிகம்தான்.


எனக்கு வேறு வழி இல்லை. எனவே அட்வான்ஸ் தொகையை ஜம்புநாதனுக்குக்  கொடுத்துவிட்டு, அந்த வீட்டை எடுத்துக் கொண்டேன். பெட்டி படுக்கையை உள்ளே வைத்தேன். அவர்களே கொடுத்த சிறிய பூட்டின்  உதவியால் கதவைப் பூட்டிக்கொண்டு வெளியே வந்து தேநீர் அருந்தினோம்.


சாலை முழுதும் பழ வண்டிகள். எல்லாமே சீதாப் பழங்கள்! அதனால்தான் அந்த இடத்திற்கு "சீத்தாப்பல்" மண்டி என்று பெயராம். பல் என்றால் இந்தியில் பழம். ஆனால் எந்த மொழியில் சாப்பிட்டாலும் சீத்தாப்பழம் இரண்டுக்கு மேல் சாப்பிட்டால் சளி பிடிக்கும்  என்று எச்சரித்துவிட்டு விடைபெற்றுக்கொண்டார்  ஜம்புநாதன். 


இவ்வாறாக ஒரு சனிக்கிழமை இரவு அந்த வீட்டிற்கு நான் குடிவந்தேன். எப்படியும் ஒரு வாரத்திற்கு மேல் அங்கு நான் இருக்கப் போவதில்லை என்று முதலிலேயே முடிவு செய்துவிட்டேன். வங்கியிலிருந்து தூரம் என்பதுடன்,  நூறு  ரூபாய் அட்வான்ஸ் பெற்றுக்கொண்ட ப்ரோக்கரின் திறமையில் எனக்கிருந்த நம்பிக்கையும் தான் காரணம். 


அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை என்பதை நாளை பார்க்கலாம். 


  • இராய செல்லப்பா, நியூ ஜெர்சியில் இருந்து

வெள்ளி, ஜூன் 03, 2022

ஜேஜே என்னும் புதிர் மனிதர்

ஜேஜே என்னும் புதிர் மனிதர்  

(நான்கு தூண்கள் நகரம்-2)

அமெரிக்காவில் 52 ஆவது நாள்


ஐதராபாத்தில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது என்னுடைய வங்கிக் கிளைக்கு தினமும் ஒரு முறையாவது வருகை தருவார் 'ஜேஜே' என்ற  நண்பர். 


என்னை விடப் பெரியவர் என்று நினைக்கத் தோன்றியது.  கருத்த மெல்லிய சரீரம்.  அறிவாளிகளுக்கே உரிய  முன் தலை வழுக்கை அவருக்கு இருந்தது. ஆனால்  அவரை அறிவாளியாக யாரும் ஏற்றுக் கொண்டார்களா என்றால் இல்லை. 



குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அவர் எங்கள் வங்கி ஊழியரோ, வாடிக்கையாளரோ அல்ல.  ஆனால் எங்கள் ஊழியர்கள் அனைவரைப் பற்றியும், அவர்கள் உள்ளூர்க்காரர்கள் என்றால் அவர்களுடைய உறவினர்களைப் பற்றியும் நன்கு தெரிந்து வைத்திருந்தார்.  பகல் உணவு நேரத்தில் சுதந்திரமாக வந்து அனைவரின் டிபன் பாக்ஸிலிருந்தும் தலா ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்வார்.  மாலை நேரங்களில்  கையில் ஒரு பிஸ்கட் பொட்டலம் கொண்டு வருவார்.  அதை தேவலோகத்து அமுதம் மாதிரி பயபக்தியோடு ஒவ்வொருவருக்கும் கொடுப்பதைப்  பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் யார் இவர் என்ற பிரமை சிறிது காலம் நீடித்தது.


மாத இறுதி நாளில் வங்கியில் சம்பளம் வழங்கப்படும் என்று அகில உலகுக்கே தெரியும். ஆனால் எங்கள் ஒவ்வொருவர்  சேவிங்ஸ் கணக்கிலும் கடன் போக மீதம் எவ்வளவு தொகை  வரவு வைக்கப் பட்டிருக்கும் என்று ஜேஜேவுக்கு எப்படித்  தெரியும் என்று எனக்கு சத்தியமாகத் தெரியாது.  


அன்று காலையிலிருந்தே அவருடைய நடமாட்டம் வங்கியில் பசையுள்ள இரண்டு குமாஸ்தாக்களைச் சுற்றியே இருக்கும். அவர்கள் நிலப்பிரபுக் குடும்பத்தவர்கள். பொழுதுபோக்குவதற்காக வங்கிப் பணியில் சேர்ந்திருக்கவேண்டும். மாதச் சம்பளத்தை இரண்டே நாட்களில் காலிசெய்துவிடுவார்கள். அப்படியும் கணக்கில் ஐயாயிரம் எப்பொழுதும் இருக்கும். அந்த இருவரில் ஒருவரிடமிருந்து ஒரு சம்பள நாளின் உணவு இடைவேளையில் ஜேஜே கைமாற்றாக  மூவாயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டார். 


ஜேஜேயிடமிருந்த நல்ல குணம், தனக்குக் கடன்கொடுத்தவரை  வானளாவப் புகழ்ந்து தள்ளுவார். வங்கியில் மட்டுமின்றி, வங்கி இருந்த வளாகத்தின் எல்லாக் கடைக்காரர்களுக்கும்  பறையடிக்காத குறையாக இத்தகவலைச் சொல்லிவைப்பார். கடன் கொடுத்த நண்பரோ புளகாங்கிதம் அடைந்து இரகசியமாக இன்னொரு மூவாயிரத்தை அவர் கேளாமலேயே கொடுத்து உதவுவார்.  ஜேஜே உபயத்தில் அன்று மாலை எங்கள் அனைவருக்கும் அருகில் இருந்த ‘கனரா டிபன் ரூம்’ இலிருந்து செட்தோசை வந்துசேரும்!


யாரிடமிருந்தும் இம்மாதிரி கைமாற்றுப் பெறும் சாமர்த்தியம்   ஜேஜேக்கு இருந்தது என்பதை அங்கீகரிக்கும் விதமாக எங்கள் மண்டல  அலுவலகத்தில் இருந்த சில பேர், ஜேஜேயிடமிருந்தே கைமாற்று பெற்றுக்கொண்டதாகவும் தெரிந்தது. மற்றப்படி ஜேஜே அதிகாரபூர்வமாக எந்தக் கடனையும் வங்கியில் கேட்டதில்லை.  அதனால் அவரை யாரும் தொந்தரவாகக்  கருதவில்லை. 


வாங்கிய கைமாற்றைத் திருப்பித்தரும்போதும் நாலு பேருக்குத் தெரியும்படிதான் செய்வார் ஜேஜே. இதில் அவரது பாணியே அலாதியானது. 


முன்னர் குறிப்பிட்ட நபரிடம் மூவாயிரம் பெற்றார் அல்லவா? அதற்கு அடுத்த நாளே அதில் ஆயிரத்தை எங்கள் வங்கியின் இன்னொரு கிளையில் பணியாற்றும் ஒரு பியூன் மூலம் இவருக்குத் திருப்பித் தந்துவிட்டார். இவருக்கு ஆச்சர்யம்! ஏனென்றால் அடுத்த மாதம் திருப்பித் தருவதாகத்தான் ஏற்பாடு. 


“மூவாயிரம் தேவையிருக்கும் என்று எண்ணினேன். ஆனால் அவ்வளவு செலவு ஆகவில்லை. அதனால் ஆயிரத்தைத் திருப்பிவிட்டேன். எப்பொழுதும் தேவையில்லாமல் கடன் வாங்கவே கூடாது என்பது என்னுடைய இலட்சியம்” என்று கூறினார் ஜேஜே. எங்கள் மதிப்பில் உயர்ந்தார்.


அடுத்த சில நாட்களில் இன்னும் ஓர் ஆயிரம் ரூபாயைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்.  இதனால் அவருடைய ‘கிரெடிட் ரேட்டிங்’ நண்பர்கள் மத்தியில் அதிகரித்தது. அடுத்த சம்பள நாளன்று ஜேஜே மீதமிருந்த ஆயிரத்தைக் கொடுக்கவந்தபோது, ‘இப்போது என்னய்யா அவசரம்?” என்று சொல்லியும் கடனைத் தீர்த்துவிட்டே போனார் ஜேஜே. இதனால் எங்கள் மதிப்பில் இன்னும் அதிக உயரத்துக்குப் போனார்.


இவ்வாறாக, ‘ஜேஜே’ என்று கடன் வாங்குவதும் திருப்பிக் கொடுப்பதுமாக இருந்தார் ஜேஜே. பல மாதங்கள் கழித்து அவரைப் பற்றி ஒரு தகவல் கிடைத்தது. அது என்னவென்றால், ஒவ்வொருமுறை வாங்கிய கடனைத் திருப்பித்தரும்போதும், அதைப் போல இரண்டு மடங்கு தொகையை எங்கள் இன்னொரு கிளையில் இருந்த யாரிடமாவது கடனாக வாங்கிவிடுவார் என்றும், அதில் பாதியை அடுத்த சில நாளில் திருப்பிக் கொடுப்பதும், மீதியில் பாதியை அடுத்த வாரத்தில் திருப்பிக் கொடுப்பதுமாக நடந்துகொள்வார் என்றும் தெரிந்தது. திடீரென்று ஒரு மாதம் முழுதும் அவரை வங்கியின் எந்தக் கிளையிலும் காண முடியாமல் போனபோதுதான் அவர் வாங்கியிருந்த மொத்தக் கடன் சில லட்சங்கள் போல இருக்கும் என்று கிசுகிசு எழுந்தது.  


எங்கள் கிளையில் பகிரங்கமாக வாங்கிய கைமாற்று போக, பலரிடமிருந்து இரகசியமாக 2000, 3000 என்று வாங்கியிருந்தார் ஜேஜே என்ற தகவலும் வெளியில் வந்தது. இவ்வளவு தொகையை என்ன செய்திருப்பார்  என்ற  ஆராய்ச்சி தொடங்கியது.  


அவருடைய வீடு மிகவும் எளிமையாக இருந்தது. வீட்டில் அவரும் மனைவியும்தான். அவரது மனையின் ஆரோக்கியம் சரியில்லை என்று பார்த்தாலே தெரிந்ததாம். ஜேஜே அப்போது வெளியில் போயிருந்தாராம். இரவு வரை இவர்கள் காத்திருந்துவிட்டுத் திரும்பினார்களாம். 


மறுநாள் வங்கிக்கு வந்த அதிர்ச்சித் தகவலின் பேரில் இரண்டு மூன்று ஊழியர்கள் ஜேஜே வீட்டுக்கு விரைந்தார்கள். திடீரென்று ஜேஜேவுக்கு நெஞ்சுவலி வந்துவிட்டதாம். மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்களாம்.  அவருடைய வீட்டிற்கு வந்த கூட்டத்தைப் பார்த்து தன் கணவர் மீது அன்பு கொண்டவர்கள் இவ்வளவு பேரா என்று அவருடைய மனைவி அசந்து போனாராம்.   அவ்வளவு பேரும் அவருக்கு கைமாற்றுக் கொடுத்தவர்கள் என்று பாவம், அவருக்குத் தெரியவில்லை!


பக்கத்து வீட்டுக்காரர் விஷயத்தைப் போட்டு உடைத்தார். ஜே ஜே வுக்கு வேலைவெட்டி  என்று எதுவும் கிடையாதாம்.  அவர் பார்த்ததெல்லாம் வெட்டிவேலை தானாம். ஒருமுறை குதிரைப்  பந்தயத்தில் அவருக்கு ஆயிரம் ரூபாய் போட்டதில் ஒரு லட்ச ரூபாய் கிடைத்ததாம்.  அன்று முதல் எல்லோரிடமும் கடன் வாங்கி குதிரைப்பந்தயம் ஆடுவதில் மும்முரமாகிவிட்டாராம். ஆனால் வாங்கிய கடனை எல்லாம் ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்து விடுவாராம்.  இதுவரை யாரும் வீடு தேடி வந்து கடனைத் திருப்பிக்  கேட்டதில்லையாம்.  


என்னிடம் அவர் கடன் வாங்கியது இல்லை,  நானும் அவரிடம் வாங்கியதில்லை.  என்றாலும் விஷயம் சுவாரசியமாக இருந்ததால் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குச் சென்று பார்த்தேன்.  வார்டுக்கு வெளியே  அவருக்காக ஒரு பத்து பேர் காத்திருந்தார்கள். கடன் கொடுத்தவர்கள் என்று அவர்கள் முகத்திலிருந்த கவலையிலிருந்து புரிந்துகொண்டேன்.  


என்னைப் பார்த்தவுடன் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முயன்றார் ஜேஜே.   வேண்டாம் என்று தடுத்தேன்.  பேச முடியாத அளவுக்கு பலவீனமாக இருந்தார்.  நான் யாருடைய குணாதிசயத்தைப் பற்றியும் முன்முடிவு கொள்வதில்லை என்பதால்  ஜேஜே நல்லவரா கெட்டவரா என்று ‘நாயகன்’  பாணியில் ஆராயவில்லை.  உடல் நலத்தை மட்டும் விசாரித்து விட்டு எழுந்தேன். என் கையைப் பிடித்து அமர்த்தினார் ஜேஜே.


தன் தலையணையின் கீழிருந்து  ஒரு கனமான காகித உறையை என்னிடம் கொடுத்தார். அதற்குள் சிறுசிறு ‘மொய்’  கவர்களில் ரூபாய்கள் இருந்ததைக் கண்டேன். ஒவ்வொரு கவரின்மீதும்  பெயரும், தொகையும்  எழுதப்பட்டிருந்தன. பெரும்பாலும் எங்கள் வங்கி ஊழியர்கள்தான். “இதை அவர்களிடம் கொடுத்துவிடுங்கள்” என்றார். மனதுக்குள் கூட்டிப் பார்த்தேன். எப்படியும் எண்பதாயிரம் இருக்கும்!


“இத்துடன் இனிமேல் யாருக்கும் பாக்கி இல்லை” என்று வலிந்து புன்சிரித்தார் ஜேஜே. 


அதற்குள் மருத்துவமனையின் விசிட்டர் நேரம் வந்துவிட்டதால், வெளியில் காத்திருந்தவர்கள் திபுதிபுவென்று உள்ளே நுழைந்தனர். அவர்கள் அதனை பேருக்கும் என்னிடம் கவர்கள் இருந்தன!


எங்கே கடனைத் திருப்பாமல் ஆசாமி கப்பலேறி விடுவாரோ என்று அவநம்பிக்கையோடு வந்தவர்கள் கண்ணில் நீர் வழிய நின்றார்கள். இவரையா சந்தேகப்பட்டோம்! 


அனைவரும் வெளியில் வந்துகொண்டிருந்தபோது ஜேஜேயின் மனைவி அழும் சத்தம் கேட்கவே உள்ளே எட்டிப்பார்த்தேன்.         “உங்க புத்தி இப்படியா போகும்? குதிரைப்பந்தயம் வேண்டாம் வேண்டாம் என்று எத்தனை சொல்லியும் உங்கள் பேராசை அடங்கவில்லையே! இப்போது என்னிடம் இருந்த பத்து பவுன் சங்கிலியையும் எனக்குத் தெரியாமல் விற்றுவிட்டீர்களே, பணத்தை என்ன செய்தீர்கள்? எங்கே வைத்திருக்கிறீர்கள்?” என்று அவர் தலையணை பக்கம் சோதனை செய்துகொண்டிருந்தார். 


எவ்வளவு அற்புதமான மனிதர் ஜேஜே! கைமாற்று கொடுத்த  அனைவரிடமும் நல்ல பேர் எடுத்துவிட்டார். ஓரிடத்தில் வாங்கி, இன்னோரிடத்தில் கொடுத்து, யாருக்கும் சந்தேகமில்லாமல் குதிரைப் பந்தயம் ஆடும் கலையை மட்டும் அவர் யாருக்கும் கற்றுத்தரவில்லை என்பது மிகப் பெரிய ஆறுதல். நிகர நஷ்டம் மனைவிக்குத்தான்!


-இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து.

 



வியாழன், ஜூன் 02, 2022

வெள்ளிக்கிழமை மிளகாய் பஜ்ஜி

 வெள்ளிக்கிழமை மிளகாய் பஜ்\ஜி

(நான்கு தூண்கள் நகரம்-1) 

(அமெரிக்காவில் 51 ஆவது நாள்)


(நான்கு தூண்கள் நகரம்)

1978  ஆம் வருடம் ஜனவரி 24 ஆம் தேதி கார்ப்பொரேஷன் பேங்க் என்னும் தனியார் வங்கியில் அதிகாரியாகப்  பணியில் சேர்ந்தேன். ஹைதராபாத் நகரில். சுல்தான் பஜார் பகுதியில்  அமைந்திருந்த படீ சவ்டி (Badi Chowdi) என்ற   கிளையில் தான் எனது வங்கி வாழ்க்கை ஆரம்பமானது. மூன்றாண்டுகள் அங்கு  பணிபுரிந்தேன்.


படம் - நன்றி: இணையம் 


சிறுவயதிலேயே எனக்கு தெலுங்கு மொழியை எழுதப் படிக்கத் தெரிந்திருந்த காரணத்தால் ஹைதராபாத்தில் மொழிப பிரச்சினை வராது என்று எண்ணியிருந்தேன். ஆனால், அந்த நகரம், நைஜாம் என்னும் முஸ்லீம் மன்னரின் ஆட்சியில் நீண்டகாலம் கிடந்ததால், அவருடைய மொழியான உருதுவில் பேசுவதையே ஹைதராபாத் மக்கள் -குறிப்பாக வணிகர்கள்-  கௌரவமாகக் கருதினார்கள் எனபது அங்கு சென்றபிறகுதான் தெரிந்தது. நாம் சரளமான தெலுங்கில் பேசினாலும் அவர்கள் உருதுவில் அல்லது உருது மாதிரியான இந்தியில் தான் பதிலளிப்பார்கள். ஆங்கிலம் தெரிந்தவர்கள் கூட, தமிழர்கள் என்றால் இந்தி தெரியாதவர்கள் என்று ஏளனம் செய்வதற்காகவே இந்தியில் மட்டுமே பேசுவார்கள்.  


பள்ளிப்பருவத்தில் இந்தி படித்திருந்தேன் என்றாலும் பேசும் பயிற்சி இல்லாததால் அவர்கள் பேசும் இந்தியைப் புரிந்துகொள்ள முடிந்தாலும் உடனடியாக இந்தியில் பதிலளிக்க முடியவில்லை. என்றாலும் சில மாதங்களில் அதுவும் கைவந்துவிட்டது.


தமிழர்களைத் தவிர மற்ற மொழிக்காரர்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்கவில்லை. என்னோடு வங்கியில் தெலுங்கர்களைத் தவிர கன்னடர்கள், மலையாளிகள், ஒரியாக்காரர்கள், மராட்டியர்கள், வங்காளிகள் ஆகிய பல்வேறு மொழிக்காரர்கள் உடன்பணியாளர்களாக இருந்தார்கள். எல்லாருமே பள்ளியில் இந்தி படித்தவர்கள். இந்தியில் சரளமாக உரையாடவும் தெரிந்தவர்கள். நாம் தான் திராவிட மாடல் ஆயிற்றே! திருதிருவென்று முழிக்கவேண்டி இருந்தது. 


இருங்கள் மிளகாய் பஜ்ஜிக்கு வருவோம்.


எங்கள் வாங்கி இருந்த இடத்தின் கீழ் ஒரு ஹனுமான் ஆலயம் இருந்தது. அந்தப் பகுதியில் மிகவும் புகழ்பெற்ற ஆலயம்.  ‘தம்மாத்தூண்டு’ இடத்தில்  அமைந்திருந்தாலும் வியாழக்கிழமைகளிலும்  விடுமுறைநாட்களிலும் நல்ல கூட்டம் வரும்.


கூட்டத்திற்கு இன்னொரு காரணமாகச்  சொல்லப்பட்டது, ஆலயத்தின் அருகே இருந்த மிளகாய் பஜ்ஜி வண்டிதான். 


நான்கு சக்கரங்கள்மீது பலகைவைத்த வண்டி. அதில் ஒரு கெரசின் அடுப்பில் அகலமான வாணலி. அருகில் ஒரு பெரிய கிண்ணத்தில் பிசைந்த கடலை மாவு.  இன்னொரு கிண்ணத்தில் கழுவித் துடைத்துவைத்த பச்சை மிளகாய்கள். எல்லாமே ஊசி மிளகாய்கள் என்பதைக் கவனிக்கவும். வண்டியின் அடியில் கெரசின் டப்பாக்கள் சிலவும், அவசரத்துக்காக இன்னொரு அடுப்பும் சில பாத்திரங்களும் இருக்கும். சற்றுத் தொலைவில் அண்டா ஒன்றில் கைகழுவத்  தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும். 


1978 ஆம் வருட டயரி இன்னும் என்னிடம் இருக்கிறது. (ஆனால் சென்னையில் இருப்பதால்) அப்போது மிளகாய் பஜ்ஜியின் விலை என்னவாக இருந்தது  என்பதை ஆதாரப்பூர்வமாக இங்கு வெளியிட இயலவில்லை என்பதை வருத்தத்துடன்  தெரிவித்துக்கொள்கிறேன். 


எங்கள் வங்கிக்கிளையில் மொத்தம்  இருந்ததே ஏழிலிருந்து ஒன்பது பேர்தான்.  அருகிலிருந்த கட்டிடத்தில் வசித்த வாடிக்கையாளர் ஒருவர் மாலை நேரங்களில் வந்து எங்களுடன் அரட்டை அடிப்பதுண்டு. மற்ற கிளைகளில் பணிபுரியும் நண்பர்களும் சில சமயம் வருவதுண்டு. எப்படிப் பார்த்தாலும் பன்னிரண்டு பேர் தேறாது. 


எதற்குச் சொல்கிறேன் என்றால் வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் ஆளுக்கு இரண்டு என்ற கணக்கில் 24 மிளகாய் பஜ்ஜிகள் எங்கள் பியூன் வாங்கிவரும்  வழக்கம் எப்படி ஏற்பட்டது என்று உங்களுக்குத் தெரியவேண்டும் அல்லவா?  


வெள்ளிக்கிழமை மாலையில் வங்கியில் பூஜை நடக்கும். சாமி படங்களுக்குச் சூடம் காட்டி, பொரி-கடலை-வாழைப்பழம்-தேங்காய் -வெல்லம் முதலியன படையல் இடப்படும். உடைத்த தேங்காயைச் சிறுசிறு துண்டங்களாக்கி, பொரி-கடலை-வெல்லத்துடன் சேர்த்து, அனைவருக்கும் விநியோகிக்கப்படும். அத்துடன் ‘இருக்கட்டுமே’ என்று இந்த மிளகாய் பஜ்ஜிகளையும் சாப்பிடத்  தொடங்கினோம். நாளாவட்டத்தில் ஒவ்வொரு மாலையும் மிளகாய் பஜ்ஜி சாப்பிடும் தவிர்க்க முடியாத வழக்கத்திற்கு ஆளானோம் என்பதை நீங்களே புரிந்துகொண்டிருப்பீர்கள்.   


இந்த வெள்ளிக்கிழமை பூஜைக்கென்று நாங்களே ஆளுக்கு ஐந்துரூபாய் போட்டுக்கொள்வோம்,  எப்படியும் நாங்கள்தானே சாப்பிடப் போகிறோம் என்பதால். ஆனால் மிளகாய் பஜ்ஜிக்கு ? அது கொஞ்சம் விலை உயர்ந்த சங்கதி ஆயிற்றே! அதற்காக இப்படி ஒரு வழக்கம் உருவானது.


அதாவது, மாதத்தின் முதலாவது வெள்ளிக்கிழமை மேனேஜர் கணக்கில் 24 பஜ்ஜிகள் வாங்கப்படும். இரண்டாவது வெள்ளிக்கிழமை உதவி மேனேஜர் கணக்கில். இப்படியே, வருகை பதிவேட்டில் உள்ள வரிசைப்படி ஒவ்வொருவரும் ஒரு வெள்ளிக்கிழமைக்குப் பொறுப்பேற்கவேண்டும். 


இந்த “வெள்ளிக்கிழமை+ மிளகாய் பஜ்ஜி” நடைமுறை அமலுக்கு வந்தது உலகம் முழுதும் சீக்கிரமே விளம்பரமாகிவிட்டதால், வெள்ளிக்கிழமைகளில் எதிர்பாராத விருந்தினர்கள் வர ஆரம்பித்துவிட்டனர். பெரும்பாலும் மற்ற கிளைகளில் பணியாற்றும் சக ஊழியர்கள்தான். அதனால் 24 என்ற எண்ணிக்கையை மீறவேண்டியதாகிவிட்டது. இந்த அதிகப்படியான பஜ்ஜிகளுக்கு யார் பணம் கொடுப்பது? சராசரியாக ஐந்து பேராவது ஏதேனும் சாக்கிட்டுக்கொண்டு வந்துவிடுவதைக் கண்டுபிடித்துவிட்டோம். 


விருந்தினர்கள் தேவர்களுக்குச் சமம் என்பது பழமொழி. ஆனால் இந்த தேவர்களோ சாப்பிட மட்டுமே வந்தார்களே அன்றி, ஒருநாளும் தங்கள் கையிலிருந்து எங்களுக்கு பஜ்ஜி வாங்கி கொடுக்க முன்வரவில்லை. இதனால் எங்கள் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால் வேறு வழியின்றி, அந்த வழக்கமான விருந்தினர்களும் இனிமேல் ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமையை ஸ்பான்சர் செய்யவேண்டும் என்று விதிசெய்தோம். 


சக ஊழியர்கள் எல்லாரும்  நம்மைப் போல் தானே இருப்பார்கள்! உடனே ஒப்புக்கொண்டார்கள். காலண்டரைப் பார்த்து ஆளுக்கொரு வெள்ளிக்கிழமையை ரவுண்டு செய்து தங்கள் பேரை எழுதிவிட்டார்கள். அப்பாடா ஒரு பிரச்சினை  தீர்ந்தது என்றிருந்தோம்.


கேவி என்று ஒரு நண்பர். இதே கிளையில் முன்பொருதரம் மேனேஜராக இருந்தவர். அடுத்து வந்த வெள்ளிக்கிழமை பஜ்ஜிக்கு அவர்தான் ஸ்பான்சரர். அந்த மாதம் மூன்று வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் வந்த விருந்தினர் அவர்.


வெள்ளிக்கிழமை பூஜை ஆரம்பிக்கும் வேளையில் பஜ்ஜி வண்டிக்காரர்  வருவார். எவ்வளவு பஜ்ஜி வேண்டுமென்று தெரிந்துகொள்வார். பூஜை முடிவதற்கும் சூடான பஜ்ஜி வருவதற்கும் சரியாக இருக்கும். அவரே அன்பு மிகுதியால் அனைவருக்கும் டீயும் வாங்கிவருவார். அதற்கும்  சேர்த்து பணத்தைப் பெற்றுக்கொண்டு கடலை-பொரியிலும் தன்  பங்கைப் பெற்றுக்கொண்டு செல்வார்.


கேவி- யின் வெள்ளிக்கிழமை என்று 38 பஜ்ஜிகள் வாங்கப்பட்டன. ஆனால் கேவி மட்டும் வருவதாகக் காணோம். அப்போது மொபைல் போன் கிடையாதே!  எப்படியெப்படியோ அவரைத் தொடர்பு கொள்ள முயன்றோம்.  ஆள் கிடைக்கவில்லை.


சரியென்று எங்களில் ஒருவர் அதை கேவி-க்கு கடன் கொடுத்ததாக எழுதிக்கொண்டு தன்  கை காசைக்  கொடுத்து கணக்குத் தீர்த்தார். மறுநாள் க்ளியரிங் ஹௌசுக்குப்  போகும்போது அவரை எப்படியாவது கண்டுபிடித்துப் பணத்தை வசூலித்துக்கொண்டு வரவேண்டும் என்ற பொறுப்பு எம். பிரபு என்ற  குமாஸ்தாவுக்கு  வழங்கப்பட்டது. 


ஆனால் அடுத்த வெள்ளிக்கிழமை வரை கேவி  கிடைக்கவேயில்லை. ஆனால் பூஜை நேரத்தில் மட்டும் சரியாக வந்து மிளகாய் பஜ்ஜியைச் சுவைக்க ஆரம்பித்தார். 


அன்று எம். பிரபு விடுமுறையில் இருந்தார். ‘நேற்று பிரபு வந்து நான் தரவேண்டிய பாக்கியை வசூலித்துவிட்டார்!” என்று சிரித்தார் கேவி. ‘பாக்கியைக் கொடுத்த நேர்மைக்காக எனக்கு போனஸாக ஒரு பஜ்ஜி!’ என்று கூடுதலாக ஒரு பஜ்ஜியை  எடுத்துக்கொண்டு கிளம்பினார். 


பிறகுதான் தெரிந்தது, பிரபு,  கேவி-யைச் சந்திக்கவே இல்லை என்பது! எல்லோருக்கும் அதிர்ச்சி. அப்போதுதான் வங்கியில் சேர்ந்திருந்த எனக்கு அதிகப்படியான அதிர்ச்சி. இந்த வங்கியில் மேனேஜர்கள் இப்படித்தான் மிளகாய் பஜ்ஜிக்குக் கூட பொய் சொல்வார்களா? (என்னுடைய மேனேஜர் வேறு என்னிடம் கொஞ்சம் கைமாற்று வாங்கியிருந்தார்).


அதற்குள் இன்னொரு வெள்ளிக்கிழமை வந்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த வாரம் கேவி வந்திருந்தார். ராஜ கம்பீரமாக பஜ்ஜியைத் தின்ன ஆரம்பித்தார். குறிப்பிட்ட குமாஸ்தா கொஞ்சம்  தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பாக்கியைக் கொடுங்கள் என்று கேட்டார். ‘என்னது? பாக்கியா?  பிரபுவிடம்  கொடுத்துவிட்டேன்! அவர் உங்களிடம் தரவில்லையா?” என்றார். 


‘நான் தானே பிரபு! உங்களை சந்திக்கவே முடியவில்லையே’ என்றார்  எம்.பிரபு. அவர் விசுக்கென்று எழுந்தார். ‘நான் உங்களைச்  சொல்லவில்லை. ஆர்.கே. பிரபுவைச் சொன்னேன்’ என்றார். 


ஆர்.கே.பிரபு என்ற குமாஸ்தா இதே கிளையில் முன்பு பணியாற்றியவர். இப்போது மாற்றலாகி அருகில் ஏதோ ஒரு கிளையில்  இருப்பதாகத் தெரிந்தது. “அவர் இங்குதான் வேலை செய்கிறார் என்றல்லவா அவரிடம் பணம்  கொடுத்தேன்!” என்று விளக்கினார் கேவி. “எப்படியும் க்ளியரிங்  ஹவுஸுக்கு வருவார் அல்லவா, கேட்டு வாங்கி விடுங்கள்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் கேவி. மேனேஜராயிற்றே, நாங்கள் என்ன செய்ய முடியும்? தொகையும் பெரிய தொகை அல்லவே!


மறுநாள் அலசி ஆராய்ந்து பார்த்ததில் அந்த ஆர்.கே.பிரபு ஆறு மாதத்திற்கு முன்பு ராஜினாமா செய்துவிட்டு ஆந்திரா பேங்கில் சேர்ந்து இப்போது கர்னூலில் பணியாற்றுவது தெரிந்தது!


அடப்பாவி! ‘பிசாத்து’ தொகைக்காகவா இப்படியொரு பொய் சொல்வது! 


அதன் பிறகு வந்ததுதான் ஆன்டி-க்ளைமேக்ஸ்! அந்த கேவி-யும்  மாற்றலாகி வேறு மாநிலத்துக்குச் சென்றுவிட்டார்! நானும் மாற்றலாகிவிட்டேன். 


வங்கியில் அனைவரும் கூடி நிலைமையை ஆராய்ந்தார்களாம். இனி வெள்ளிக்கிழமைகளில் மிளகாய் பஜ்ஜியை வங்கிக்குள் வாங்கிவருவதில்லை என்றும், அனைவரும் வண்டிக்கே சென்று தனித்தனியாகக்  காசுகொடுத்து வாங்கிக்கொள்வது என்றும் முடிவுசெய்யப்பட்டதாம்!  கேவி கொடுக்காமல் ஏமாற்றிய காசை அனைவரும் பங்கிட்டு ஈடுசெய்தர்களாம். 


இந்தப் புதிய ஏற்பட்டால் பலன் பெற்றவர் பஜ்ஜி வண்டிக்காரர்தானாம். முன்பு ஆளுக்கு இரண்டு பஜ்ஜிகள் விற்றது மாறி, இப்போது சிலர் மூன்று நான்கு என்றும் வாங்க ஆரம்பித்துவிட்டார்களாம். ‘எல்லாம் ஹநுமான்ஜியின் கருணை’ என்றாராம் அவர்!


இப்போதும் என்னால் மிளகாய் பஜ்ஜியை விட முடிவதில்லை. ஆனால் ஹைதராபாத் ஊசிமிளகாயில் செய்த பஜ்ஜி இங்கு  (சென்னையில்) கிடைப்பதில்லை. மாடு மாதிரி பெருத்த, காரமில்லாத மிளகாயில்தான் பஜ்ஜி கிடைக்கிறது!  காலம் கெட்டுவிட்டது சார்!


  • இராய செல்லப்பா, நியூ ஜெர்சியில் இருந்து.  



புதன், ஜூன் 01, 2022

மறுவாசிப்பில் கண்ணதாசனின் ‘வனவாசம்’

 மறுவாசிப்பில் கண்ணதாசனின் ‘வனவாசம்’

(இன்று கிழமை செவ்வாய்-8)

அமெரிக்காவில் 50ஆவது நாள்

(மணித்திருநாடு)

தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத ஆளுமையான கண்ணதாசனின் ஆரம்ப கால அரசியல் வாழ்க்கையின் வரலாறுதான் “வனவாசம்.” 


என் கல்லூரிப் பருவத்தில்தான்  முதன்முதலாக வனவாசத்தைப் படித்தேன்.  கடந்த 40 ஆண்டுகளில் பல சென்னை புத்தகக் கண்காட்சிகளில் மீண்டும் மீண்டும் இந்தப் புத்தகத்தை வாங்கி இருக்கிறேன்.  மீண்டும் மீண்டும் படித்து இருக்கிறேன். (என்னிடமிருந்து யாராவது ‘சுட்டு’க்கொண்டு போய்விடுவார்கள்!) இப்போது நியூஜெர்சியில் கிடைத்த ஓய்வு நேரத்தில் மறுபடியும் படிக்க எடுத்திருக்கிறேன்.


“காந்தியடிகளின் சுயசரிதை படித்த பின்பு இதனை எழுதியதால் உண்மையை நிர்வாணமாகக் கூறுவதில் அதிக ஆசை எழுந்தது” என்ற முன்னுரையோடு இந்த நூல் ஆரம்பிக்கிறது. 


“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த நிலையிலும்- எனக்கு மரணமில்லை”  என்று தன் கவிப்பெருமையை எழுதிய கண்ணதாசன், வாழத்தெரியாமல் வாழ்ந்துவிட்டதாகக் கழிவிரக்கம் கொண்டு வனவாசத்தில் இப்படி எழுதுகிறார்:


“ஒரு பெருமிதம் எனக்கு உண்டு என் தலைமுறையில் வாழும் எந்த மனிதனுக்கும் தலைவனுக்கும் கவிஞனுக்கும் இத்தகைய சுயசரிதம் அமையாது என்பதே   அது.  அப்படி ஒன்று அமைய வேண்டுமென்றால் யாரும் நீண்டகாலம் முட்டாளாக இருக்க வேண்டும்.  அது எல்லோருக்கும் கை வரக்கூடிய கலை அல்ல.”


சென்னை கடற்கரையில் அலைகளைப் பார்த்துக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்த இளைஞன் கண்ணதாசனுக்கு இப்படித் தோன்றுகிறது:


“ஓர் அலை மூலம் மிகப் பெரிய நண்டு ஒன்று கரையில் வந்து விழுந்தது.  பயந்து அவன் எழுந்து நின்று விட்டான்.  நண்டு கரையிலேயே ஓடும் என்று எதிர்பார்த்தான்.  ஆனால் மீண்டும் கடலுக்குள்ளே ஓடிற்று.  கடல் அதை ஏற்றுக்கொண்டது.


அவனுக்கு நம்பிக்கை  தோன்றியது. சமுதாயம்,  நம்மை வெளியில்  தூக்கி எறிந்தாலும், நாம் மீண்டும் சமுதாயத்திற்குள்ளேயே ஓடித்தான் இடம் பிடிக்க வேண்டும்.  வெறுப்பினால் அல்ல  அலை நண்டை  வெளியே தள்ளியது. நண்டு சரியாக ஊன்றிக் கொள்ளாததாலே தான் வெளியில் வந்து விழுந்தது.  சமுதாயத்தில் ஒரு உயர்ந்த இடத்தில் காலூன்றி நின்று விடுவது என அவன் முடிவு கட்டிக் கொண்டான்.” 


இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்த வைரவரிகள் என்பேன். எப்படியென்றால், கண்ணதாசனைப் போலவே நானும் எதிர்காலம் பற்றிய கவலையில் மூழ்கியிருந்த காலம்  ஒன்று உண்டு. கல்லூரிப்படிப்பு எனக்குக்  கைகூடுமோ, கூடாதோ என்ற அவநம்பிக்கை நிலவிய நேரத்தில் இந்த வரிகள்தான் எனக்குக்  கலங்கரை விளக்கமாகத் தெரிந்தவை. பட்டப்  படிப்பு போதுமென்று சக நண்பர்கள் வேலைதேடிச் சென்றுவிட்ட நிலையில், நான் பட்ட மேற்படிப்பு படித்தே தீருவதென்று கடுமையான பொருளாதாரச் சூழலிலும் எதிர்நீச்சல் போட்டேன். வங்கியில் குமாஸ்தா வேலை கிடைத்தால் போதுமென்று ஆயிரம் பேர் காத்திருக்கையில், நான் ஆபீஸராகத் தான் சேருவேன் என்று சரியான வாய்ப்புக்காகப் பல மாதங்கள் காத்திருந்து வென்றேன்.  “உயர்ந்த இடத்தில் காலூன்றி நின்றுவிடுவது” என்பது ஒரு கவிஞனின் சாதாரண வார்த்தைகள் அல்ல. இலட்சக் கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு எம்பிஏ என்று பட்டம் தருகிறார்களே, அக்கல்வி நிலையங்கள் கற்றுத்தரும் தன்னம்பிக்கையின்  இலக்கு தான் இது!


*** 

“அப்போது அவனுக்கு ஓர் உண்மை புலனாயிற்று.  வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்குத்  திறமை இருந்தால் மட்டும் போதாது.  சந்தர்ப்பம் அமைவது மிகவும் முக்கியம்….. சந்தர்ப்பம் என்றால் என்ன அது தானாக வருவதா, மனிதன் உண்டாக்கிக் கொள்வதா? … சில நேரங்களில் மனிதர்கள் தாமே உண்டாக்கி கொள்கின்ற சந்தர்ப்பங்களைப் பற்றி அவன் எண்ணிப் பார்த்தான். அந்த சந்தர்ப்பங்களை உண்டாக்குவதற்கு அவர்களுக்குத் துணிவு மட்டும்தான்  தேவையாக இருந்திருக்கிறது..


“இந்த உலகம் அத்தகையது. பயமும் பணிவும்  இங்கே பலனளிப்பதில்லை.  அன்பும் அறமும் இங்கே வாழ்வளிப்பதில்லை. பகட்டும்  படாடோபமும் தேவைப்படுகிறது.  தெரியாததை எல்லாம் தெரிந்தமாதிரி காட்டிக் கொள்பவனுக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது. அய்யோ அவனா அசகாயசூரன் ஆயிற்றே என்று பத்து பேரை பேச வைக்கிறது.  சிலர் அவனை மதிக்கத் தலைப்படுகிறார்கள்.  ஏதாவது ஓரிடம் அவனை இழுத்துப் போட்டுக் கொள்கிறது.” 


இதில் இரண்டு வழிமுறைகளைக் கண்ணதாசன் குறிப்பிடுகிறார்: (1)  சில சந்தர்ப்பங்கள் தாமாகவே நம்மைத் தேடிவரும்.  அப்போது நண்டு மாதிரி அவற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். (2)  சில சந்தர்ப்பங்களை  நாமே உண்டாக்கிக் கொள்ளவேண்டும்.  அதற்குத் துணிவு முக்கியம். என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை முக்கியம் .


நான் வங்கிப் பணியில் சேர்ந்த பிறகு இந்த இரண்டு வழிமுறைகளையும்  வேதமாகக் கருதிப் பின்பற்றினேன். ஊர் மாற்றங்களை ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டேன். ஒரு பணிப்பிரிவில் இருந்து புதிய பணிப்பிரிவிற்கு மிகுந்த ஆர்வத்துடன்  மாறிக்கொண்டேன். புதிய அறிவுக்கூறுகளை இடைவிடாமல் கற்றுவந்தேன். அதனால் என் தொழிலில் எனக்கென ஓர் ஆளுமையை ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது. நன்றி, கவிஞரே நன்றி!


** 

“வளர வேண்டும் உயர வேண்டும் என்ற ஆசைகள்…. அவனது நெஞ்சில் மேலோங்கி நின்றன.  பயங்கரமான உலகத்தில்  பருந்துகளுக்கும் வல்லூறுகளுக்கும் நடுவே  இந்தக்  கிளி எப்படிப்  பறக்கப்  போகிறது என்ற அச்சமும் அவனுக்கு இருந்தது. தன்னம்பிக்கை, துணிச்சல், திடமான உள்ளம் இவற்றை வழங்கும்படி இறைவனை வேண்டினான்…” 


தன்னையே ‘அவன்’ என்று படர்க்கையில் எழுதுவது இந்நூலுக்கு தனிப்பட்ட சிறப்பைச் சேர்க்கிறது. ஒரு கவிஞனின் தேதியிடப்படாத வரலாறாக இருந்தபோதும், இது ஒரு வாழ்வியல் பாடநூலே ஆகும். புத்தகம் முழுவதும், தான் புரிந்த அல்லது பங்குகொண்ட தவறுகளை சற்றும் மிகையோ குறைவோ இல்லாமல் கண்ணதாசன் தெரிவிப்பதன் மூலம் வாசகனைத் தன்னோடு இணைத்துக்கொண்டு விடுகிறார். மனிதனுக்குத் தன்னம்பிக்கை வேண்டும் என்பதைப் பல இடங்களில் வலியுறுத்துகிறார். திடமான  உள்ளம் இருந்தாலே போதும், துணிச்சல் வந்துவிடும் என்று பல இடங்களில் எடுத்துக்காட்டுகிறார். 


*** 

சுவாரஸ்யமான ஒரு நாவலைப் போல் எழுதப்பட்ட ‘வனவாசம்’ ஒவ்வொரு தமிழனின் கையிலும் இருக்கவேண்டியது. ‘தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்ற வாசகத்தை இதை முதன்முதலாகப் படிப்பவர்கள் உடனே உணர்ந்துகொள்வர். நமது இளைஞர்களுக்குப் பரிந்துரைக்கவேண்டிய நூல் இது.


**** 

நமக்கு இதுவரை தெரியாத பல சமூக வழக்கங்களைப் பற்றி - உதாரணமாக,  நகரத்தார் சமூகத்தில் ‘சுவீகாரம்’ -அதாவது தத்தெடுப்பது- பற்றிய நடைமுறையை விவரமாக எழுதுகிறார் கண்ணதாசன். அதேபோல் சுவாரஸ்யமான அனுபவங்கள் நூல் முழுதும் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கின்றன. 


தானும் கருணாநிதியும் தங்கியிருந்த அறையில்,  சாப்பிடும் தட்டருகே பாம்பு சுருண்டு படுத்திருந்ததை  இரவில் கண்டு அலறி நடுங்கியதையும், விறகுக் கட்டையால் அதை அடித்துக்  கொன்றுவிட்டு, இரவு  முழுதும் அதே அறையில் ஒரே கட்டிலில் இருவரும் படுத்துக்கொண்டதையும் கண்ணதாசன் வர்ணிப்பது திகிலின் உச்சம் எனலாம்.


தமிழக அரசியலின் கிட்டத்தட்ட முப்பதாண்டு வரலாறுதான் இந்த நூல். கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டது. நூறு சுயமுன்னேற்ற நூல்களை வாங்குவதை விட, இந்த ஒரு நூல் வாங்கிப் படிக்கப்பட்டால், சொல்லாற்றலும் சிந்தனையும் வளர்வதோடு, துணிந்து முன்னேறும் பேரார்வமும் இளைஞர்களிடையே பொங்கிப் பெருகும் என்பது உறுதி.


  • இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து.