புதன், ஜனவரி 31, 2024

வண்ணம் கொண்ட வெண்ணிலவு- 3

 வண்ணம் கொண்ட வெண்ணிலவு- 3 

(குறுநாவல்)

-இராய செல்லப்பா

 இதன் முந்தைய பகுதி   -"  வண்ணம் கொண்ட வெண்ணிலவு - 2  " படிக்க இங்கே சொடுக்கவும்.

(5)

அன்று மாலை வங்கியின் குவார்ட்டர்ஸைக்  காலிசெய்துவிட்டுத் தன்  வீட்டுக்கே வந்துவிட்டாள் பொன்னி. சரண்யாவும் பாலுவும் “பெரியம்மா” என்று ஆசையோடு கட்டிக்கொண்டார்கள். சாந்தி வடை பாயசத்துடன் விருந்து தயாரித்தாள்.  


“வாசுவையும் அழைக்கலாமா சாந்தி?” என்று பொன்னி கேட்டபோது, நாணத்தை  மறைத்தவளாக, “உம்” என்றாள் சாந்தி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல். 

 வாசு புதிய காரில் வந்தான். “இது உங்களுக்கான கார், பொன்னி” என்று புன்முறுவல் பூத்தான். காரைக் கண்டதும் குழந்தைகளுக்குத் தான் எவ்வளவு மகிழ்ச்சி! 

 பகலுணவு முடிந்ததும் பொன்னியும் வாசுவும் மாடிக்குச் சென்றார்கள். தான் தொடங்கப்போகும் புதிய கம்பெனிக்கான ‘ப்ராஜெக்ட் ரிப்போர்ட்’டை அவளுக்கு விரிவாகச் சொன்னான் வாசு.  ‘ரிசர்வ் பேங்க் பர்மிஷன் வாங்கிவிட்டேன்’ என்று சான்றிதழைக் காட்டினான். மற்றும் பல பேப்பர்களில்  

அவளிடம் கையெழுத்து வாங்கினான்.

எங்கெங்கு கிளைகள் திறக்கவேண்டும் என்று முடிவு செய்தார்கள். முதல் மாதம் மயிலாப்பூர், தி.நகர், வேளச்சேரி, அண்ணா நகர் ஆகிய நான்கு கிளைகள்.  அதற்கு மேலாளர்களாகத் தன்னுடன் ஏற்கெனவே பணிபுரிந்து இப்போது வீஆர்எஸ் வாங்கிய நான்குபேரைத் தேர்ந்தெடுத்தாள் பொன்னி. அவர்களும் ஆர்வமாக ஒப்புக்கொண்டார்கள்.

 மயிலாப்பூர் கிளைக்குத் தமிழ்ச்செல்வி,  தி.நகருக்கு லலிதா, வேளச்சேரிக்கு  மகேஸ்வரன்,  அண்ணா நகருக்கு கோவிந்தராஜன்.

 நகை மதிப்பீடு செய்பவர்களுக்குத்தான் மிகவும் டிமாண்ட். ஒரே ஒருவர்தான் கிடைத்தார். பெயர் நவநீத கிருஷ்ணன். பொன்னியின் வங்கியில் ஐந்தாண்டு அனுபவமுள்ளவர். நேர்மையின் மறுவடிவம். “பொண்ணுக்குக்  கல்யாணம் பாத்துக்கிட்டிருக்கேன். அதனால ஃபீஸ் கொஞ்சம் சேர்த்துக் குடுங்கம்மா” என்றார் பணிவாக.

அலுவலகத்திற்கு ஏற்கெனவே அடையாறில் இடம் பார்த்திருந்தான் வாசு.

“கம்பெனியின் பெயர் - பொன் பைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் லிமிடெட் “ என்றான்.  “இதில் பொன் என்பது தங்கத்தைக் குறிப்பது; உங்கள் பெயரை அல்ல” என்று சிரித்தான். அவனது குறும்பை ரசித்தவாறே பொன்னியும் சேர்ந்து சிரித்தாள். கம்பெனி தொடங்குவதற்கு நல்லநாள் பார்த்து முடிவுசெய்தபின் வாசு கிளம்பினான்.

(6)

சென்னைக்கு இந்தியாவின் தங்க நகரம் என்று பெயர் உண்டு. தங்க நகைகளின் சில்லறை விற்பனை இங்குதான் அதிகம். அதிலும் ‘அட்சய திருதியை’ என்ற பண்டிகை நாளில்  குடும்பப் பெண்களை,  ஒரு கிராம் தங்கமாவது வாங்க வைத்துவிடும் சாதனையைப் பல்லாண்டுகளாக  வர்த்தகர்களும் சோதிடர்களும் பத்திரிகைகளும் இணைந்து நிகழ்த்தியிருந்தார்கள்.

 அதன் ஒரு பகுதியாக, பழைய தங்கத்தின் பேரில் கடன் வாங்கிப் புதிய தங்கம் வாங்கும் வழக்கம் தமிழ்நாட்டில் நன்கு வேரூன்றிவிட்டது. அதையே தங்கள் கம்பெனியின் விளம்பர உத்தியாகப் பயன்படுத்திக்கொண்டான் வாசு.  

 எப்படியென்றால், தங்கள் நான்கு கிளைகளையும் அட்சய திருதியைக்கு முன்பே திறந்துவிட்டான். நகரத்தின் முக்கிய நகைக்கடைகளுடன் பேசி,  அவர்களுடைய விளம்பரத்தில்  “நகைக்கடன் வேண்டுமா? பொன் ஃபைனான்ஸை அணுகுங்கள்” என்ற வாசகமுள்ள சிறு கட்டம் இடம்பெறுமாறு ஒப்பந்தம் செய்துகொண்டான். நகைக்கடன் பெறுபவர்களுக்கு, மேற்படிக் கடைகளின் ‘டோக்கன்’கள் விநியோகிக்கப்பட்டன. அந்த டோக்கனைக் காட்டினால் அட்சய திருதியை அன்று கிராமுக்கு ஐம்பது ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.

 இந்த உத்தியால் ‘பொன் ஃபைனான்ஸ்’ கம்பெனியின் நகைக்கடன் வழங்கும் வேகம் அதிகரித்தது. சென்னையிலுள்ள நகைக்கடைகளுக்கும் விற்பனை அதிகரித்தது.

அதே சமயம், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் செல்வாக்குள்ள ஊடகவியலாளர்களைக் கொண்டு விளம்பரமும் செய்தான் வாசு. இந்தப் பொறுப்பைத் தானே ஏற்று நடத்தினாள் பொன்னி. குறுகிய காலத்தில் பொன் ஃபைனான்ஸ் மக்கள் மத்தியில் பிரபலமாகியது.

 மூன்று மாதம் கழித்து, கம்பெனியின் வரவு செலவு கணக்கை ஆடிட் செய்தபோது, தாங்கள் திட்டமிட்டபடியே எல்லாம் நடப்பதைக் கண்டு வாசுவும் பொன்னியும் திருப்தியடைந்தார்கள்.

 ஆனால் கம்பெனியின் அஸ்திவாரமே, சரியான தரமுள்ள தங்கம்தான் என்பதால், நகை மதிப்பீட்டாளரின் மேல் எப்போதும் ஒரு கண் வைத்திருந்தார்கள். அதற்காக ஒரு துப்பறிவாளரையும் நியமித்தார்கள்.

மேலும், ஒரு கிளையில் வழங்கப்பட்ட நகைக் கடன்களை இன்னொரு கிளையின் மேலாளரைக் கொண்டு முன்னறிவிப்பின்றி ஆடிட் செய்யும் வழக்கத்தையும் ஏற்படுத்தினாள் பொன்னி.  அடகுவைக்கப்பட்ட நகைகள் எல்லாவற்றையும் தலைமை அலுவலகத்தில்,  பலகோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ்  உள்ள விசேஷமான பெட்டகத்தில் வைத்து அதற்கென்றே ஒரு தரமான பாதுகாப்பு ஏஜென்சியின் காவலர்களை 24 மணிநேரமும் நியமித்தாள். விரைவில் ரிசர்வ் பேங்க் அதிகாரிகளும் வந்து ஆவணங்களையும் நடைமுறைகளையும் சரிபார்த்து ‘திருப்திகரம்’ என்று தங்கள் ஆடிட் ரிப்போர்ட்டை வழங்கினார்கள்.

 பொன்னிக்குத் தன் வாழ்நாளின் வசந்தகாலம் இதுதான் என்று தோன்றியது. இத்தனை ஆண்டுகள் வங்கிப் பணியில் கடிகாரத்தின் அடிமையாக இருந்தவளுக்கு இப்போதுதான் சொந்தமாக ஒரு நிறுவனம் நடத்துவதிலுள்ள அதிகாரமும் கௌரவமும் பிடிபட ஆரம்பித்தன. சமூகத்தில் அவளுக்கென்று புதிய அந்தஸ்து ஏற்பட்டது. அதில் முக்கியப் பங்கு வாசுவுடையது என்பதை அவள் மனம் மறுக்கவில்லை.  

“இரண்டு நாள் ஊட்டிக்குப் போய் ஓய்வெடுக்கலாமா என்று பார்க்கிறேன்” என்றான் வாசு. பொன்னி பொய்க் கோபத்துடன் எரிந்து விழுந்தாள்.

“மிஸ்டர் வாசு! நகைக் கடன் வழங்கும் கேரளாக் கம்பெனிகள் ஒவ்வொன்றும் தலா நூறு கிளைகளை வைத்திருக்கிறார்கள். நீங்களோ நான்கு கிளைகளுக்கே ஓய்வெடுக்கவேண்டும் என்கிறீர்களே! ரொம்பத்தான் உழைத்துவிட்டீர்கள்!”

வாசு எழுந்து அவளருகில் வந்தான். “சிஈஓ  மேடம்! நான் ஓய்வு என்றது சும்மா! உண்மையான காரணம் இதுதான்” என்று ஒரு விஷயத்தை அவளுக்கு மட்டுமே கேட்கும்படியாகக் கூறினான். “இது நமக்கு ஒரு பெரிய வாய்ப்பு அல்லவா?” 

சனிக்கிழமை காலை அவர்கள் ஊட்டியில் இருந்தார்கள்.

சாந்தியிடமிருந்து போன் வந்தது. “ஊட்டி ரொம்பக் குளிராக இருக்கிறதா?” என்று கேட்டாள் சாந்தி.  டவர் சரியாகக் கிடைக்காததால் பொன்னியின் பதில் அவளுக்குத்  தெளிவாகக் கேட்கவில்லை. “ஸ்பீக்கர் போட்டுப் பேசு” என்றாள்.

பொன்னி ஸ்பீக்கரில் பேசினாள். “குளிர் எனக்கு ஆகாதுதான், என்ன செய்வது!  தொழில் என்று வந்துவிட்டால் வாய்ப்பு வரும்போது உடனே பற்றிக்கொள்ள வேண்டுமல்லவா என்கிறார் வாசு! அடுத்த முறை ஊட்டி வரும்போது நீயும் குழந்தைகளும் கட்டாயம் வரவேண்டும்” என்றாள்.

“ஆமாம் அக்கா! நீயே பார்த்து ஏற்பாடு செய்!” என்ற சாந்தி, “அது சரி, அந்த ஆள் எந்த ஓட்டலில் தங்கி இருக்கிறார்?” என்று கேட்டாள். அவள் குரலில் பொதிந்திருந்த ஆர்வம்  பொன்னிக்குப் புரிந்தது. அது வாசுவுக்கும் கேட்டது. ‘சாந்தியின் குரல்தானே?” என்று தனக்குள் கேட்டுக்கொண்டான்.

“யார், வாசுவைக் கேட்கிறாயா சாந்தி? இதே ஓட்டலில்தான் தங்கியிருக்கிறார்” என்றாள் பொன்னி.

“அப்படியா? நீ வேறு ரூம், அவர் வேறு ரூம் தானே?”

“இல்லையே, இருவரும் ஒரே ரூமில் தான் இருக்கிறோம்” என்றான் வாசு ஸ்பீக்கரின் அருகில் வந்து.

"என்னது?" என்று அதிர்ச்சியோடு கேட்டாள் சாந்தி. அடுத்த நிமிடம் அவள் கையிலிருந்து போன் கீழே விழும் ஓசை பலமாகக் கேட்டது பொன்னிக்கு.  

(7)

பாரம்பரியமிக்க தேயிலைத் தோட்டம் அது. பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி ஒருவரின் பொறுப்பில் இருந்து, இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பல கைகள் மாறி, இப்போது பிரபல அரசியல்வாதியிடம் வந்திருக்கிறது. அவருடைய பினாமியைத்தான் சந்திக்கப் போகிறார்கள் வாசுவும் பொன்னியும்.

“வாங்க சார், வாங்கம்மா, வணக்கம்” என்று வரவேற்றார் மலர்வண்ணன். ஊட்டியின் காலைப் பொழுதின் குளுமை பொன்னி அணிந்திருந்த  ஸ்வெட்டரை ஊடுருவி அவள் மனதுவரை பாய்ந்தது. “ஓ, எவ்ளோ ஜில்லுன்னு இருக்கு” என்று குழந்தைபோல் குதூகலித்தாள். அதே சமயம், சரண்யாவும் பாலுவும் இருந்தால் எப்படி அனுபவித்து ரசிப்பார்கள் என்ற எண்ணமும் தோன்றியது. அடுத்தமுறை அவர்களோடு குடும்பமாக வரவேண்டும்.

உரிமையாளர் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த விசேஷமான காட்டேஜில் வெதுவெதுப்பு ஊட்டப்பட்ட அறையில் வசதியான இருக்கைகளில் அவர்கள்     

உட்கார்ந்துகொண்டார்கள். ஆவிபறக்கும் தேநீர் வந்தது.

“இது எங்கள் தோட்டத்தில் விளைந்த தேநீர்” என்று பெருமையாகச் சொன்னார் மலர்வண்ணன். “ஆவணப்படி நான்தான் இத்தோட்டத்தின் உரிமையாளன். ஆனால் உண்மையில் இதன் சொந்தக்காரர் இவர்தான்” என்று சுவரில் மாட்டியிருந்த ஓர் பிரபல அரசியல் தலைவரின் புகைப்படத்தைக் காட்டினார். ‘இவரா?’ என்று திகைத்தாள் பொன்னி. எம்எல்ஏ கூட ல்லாத ஒருவரிடம் இவ்வளவு சொத்தா!

அவள் எண்ண ஓட்டத்தைப் புரிந்தவராக, “இதைப்போல நாற்பது மடங்கு காபித் தோட்டமும் அவருக்கு இருக்கிறது,  கர்நாடகாவில்!” என்று சிரித்தார் மலர்வண்ணன். 

அவர்களின் அலைபேசிகளை வாங்கி இன்னொரு அறையில் பீரோவில் வைத்துப் பூட்டினார் மலர்வண்ணன். “ஒரு பாதுகாப்புக்காகத்தான்” என்று சிரித்தார். மூவரும் நெருக்கமாக அமர்ந்துகொண்டார்கள்.

“மிஸ்டர் வாசு! உங்கள் பொன் ஃபைனான்ஸ் கம்பெனி நன்றாக நடப்பதாக ஐயாவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதனால் உங்களிடம் அவர் பெரிய தொகையை முதலீடு செய்ய விரும்புகிறார். அதற்கான டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் பற்றி எங்கள் ஆடிட்டர் பேசுவார். உங்களுக்குத் சரியென்று பட்டால் மேற்கொண்டு பேசலாம். விருப்பமில்லை என்றால் விட்டுவிடலாம். விஷயம் நமக்குள் இருக்கவேண்டும்” என்றார் மலர்வண்ணன்.

ஆடிட்டர் பேசினார். முதலீடு செய்வதற்கு அரசியல்வாதிகளிடம் எக்கச்சக்கமாகப் பணம் இருக்கிறது. ஆனால் எப்போது அந்தப் பணம் அவர்களுக்குத் தேவைப்படும் என்று தெரியாது. அதனால், போட்ட பணத்தை ஒரே வாரத்தில் திருப்பித்தரும் சக்தி உங்களுக்கு உண்டா என்று கேட்டார். முப்பது கோடிவரை ஏற்றுக்கொள்வதாக வாசு சொன்னான்.

 ஆடிட்டருக்கு ஏமாற்றமாக இருந்தது. நூறு கோடியாவது எடுத்துக்கொள்ள முடியாதா என்றார். கையிலுள்ள பணத்தைப் பத்திரமான இடத்திற்கு மாற்றவேண்டிய  கவலை அவருக்கு.

 “நடுத்தர மக்களுக்கு நகைக்கடன் வழங்குவதே எங்கள் நோக்கம். அதில்தான்  போட்ட பணம் திரும்பிவரும். எனவே நூறு கோடி, இருநூறு கோடி என்றெல்லாம் எங்களால் பற்றுவரவு செய்யமுடியாது. மன்னிக்கவேண்டும்” என்றான் வாசு.

“எதற்கும் ஐயாவிடம் ஒரு வார்த்தை பேசிவிட்டு முடிவெடுங்களேன். இதோ அவரை கனெக்ட் செய்கிறேன்” என்றார் ஆடிட்டர். 

 அடுத்து ஐயாவே பேசினார். “வணக்கம் தம்பி! இப்பத்தான் தொழில் ஆரம்பிச்சீங்கன்னு கேள்விப்பட்டேன். நல்லா வளரணும் தம்பி. என்னோட வாழ்த்துக்கள். சீக்கிரம் என்னோட தொகுதில ரெண்டு கிளை ஆரம்பிங்க. மலர் கிட்ட சொன்னா நம்ப ஆபீஸ் காம்ப்ளெக்சே ரெண்டு மூணு காட்டுவாரு. மேனேஜர் போஸ்ட்டுக்கும்  நம்ப பசங்க  நாலஞ்சு பேர் இருக்காங்க. எவ்ளோ இன்வெஸ்ட்மெண்ட் வேணும்னாலும் பண்ணலாம். தைரியமா நடங்க. நான் இருக்கேன். வெச்சிடட்டுமா?”  

 ஊட்டியில் இருந்த புகழ்பெற்ற ஓட்டலில் இருந்து காலைச் சிற்றுண்டி வந்தது. மலைத்தேனும் நீலகிரித் தைலமும் உள்ளூர் சாக்லேட்டும் இரண்டு கூடை நிறையப் பழங்களும் பச்சைக் காய்கறிகளுமாகக் காரில் கொண்டுவந்து வைத்தார் மலர்வண்ணன்.

 “இதே காரில் சுற்றிப் பார்த்துவிட்டு சென்னை போகலாம். நம்ப வண்டிதான்” என்று வழியனுப்பினார்.  

(தொடரும்)

இதன் அடுத்த பகுதி   -"  வண்ணம் கொண்ட வெண்ணிலவு - 4  " படிக்க இங்கே சொடுக்கவும்.

5 கருத்துகள்:

  1. இன்றைய பகுதி ஏனோ cafe coffee day சித்தார்த் அவர்களை நினைவூட்டியது. முடிவு அவரது முடிவு போல் இருக்காது என்று நம்புகிறேன்.
    Jayakumar​​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சித்தார்த் எமது வங்கியின் முக்கிய வாடிக்கையாளராகப் பல்லாண்டுகள் சிறப்பாக விளங்கியவர். பின்னர் வேறு வங்கிகளுக்கு மாறினார் என்று கேள்வி. அன்னாரின் துர்மரணம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்திய ஒன்று. வாசுவுக்கும் அது தெரியும். எச்சரிக்கை யாக இருப்பார் என்று நம்புகிறேன்.

      நீக்கு
  2. ஜெயக்குமார் சாருக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கிறது. நான் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. புள்ளி என்னவோ சின்னதுதான் ஆனால் இந்தப் பெரிய புள்ளியிடம் சிக்காமல் இருக்க வேண்டுமே ..

    கீதா

    பதிலளிநீக்கு
  4. மலர்வண்ணன் அரசியல் தலைவரின் பினாமியா. கர்நாடகா - தலைவியை தலைவர் ஆக்கிவிட்டீர்களோ கதையில்! இப்போதெல்லாம் எல்லா அரசியல்வாதிகளின் கையிலும் கோடிகள் தானே!

    கதை நாயகனும் நாயகியும் மலர்வண்ணனிடம் மாட்டிக் கொண்டார்களா இல்லை தப்பித்தார்களா? அடுத்த பகுதியில் தெரியும் என்று நினைக்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு