வண்ணம் கொண்ட வெண்ணிலவு-1
(குறுநாவல்)
-
இராய செல்லப்பா
(1)
“அம்மா, என் பிரெண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்களே, அது உண்மையா?”
என்று ஆவலும் திகைப்புமாகக் கேட்டபடி உள்ளே நுழைந்தாள் சரண்யா. பள்ளிக்கூடப் பையைக்
கழற்றிவிட்டு, லஞ்ச்பாக்ஸை எடுத்தவள், மௌனமாக
நின்ற சாந்தியைப் பார்த்து மறுபடியும் கேட்டாள். “நிஜமா அம்மா?”
சாந்திக்கு நெஞ்சை அடைத்தது. ஆமாம், இந்த வீட்டைச் சீக்கிரம்
காலிசெய்ய வேண்டும் என்று சொல்லிவிடலாம்தான். அதன்பிறகு எங்கு போவதென்று கேட்டால் தன்னிடம் பதில் இல்லையே! பேசாமல் போர்ன்வீட்டா கலப்பதில் முனைந்தாள்.
‘என் ஸ்கூலுக்கு இந்த வீடுதான் பக்கம். மாற்றவேண்டாம்’
என்று சரண்யா அடம் பிடிக்கலாம். பாலு இன்னும் வரவில்லை. அக்காவைப் பார்த்து அவனும்
புரண்டுபுரண்டு அழுவான். இவள் ஐந்தாவது, அவன் இரண்டாவது படிக்கிறார்கள். நன்றாகப் பழகிவிட்டது
இந்த வீடு.
 |
pic courtesy-IndiaMart ad |
“என்ன சொன்னாங்க உன் பிரெண்ட்ஸ்?” என்று பொதுவாகக்
கேட்டு சரண்யாவை உற்றுப்பார்த்தாள் சாந்தி.
போர்ன்வீட்டா குடிப்பதைப் பாதியில் நிறுத்திய சரண்யாவுக்குக் குரல் கம்மியது. “நாம்ப ஏழைகளாம். பெரியம்மா தயவுல
வாழறமாம். வேலைல இருந்து ரிட்டையர் ஆகி, பெரியம்மாவே
இந்த வீட்டுக்கு வரப்போறாங்களாம். அதனால் நாம்ப காலி பண்ணிட்டு டவுனை விட்டு ரொம்ப
தூரமா ஏதாச்சும் ஹவுசிங்போர்டு பிளாட்டுக்குப் போயிடுவமாம். சொரூபாவும் சந்திராவும் சொல்றாங்க.”
வெறுமையாகச் சிரித்தாள் சாந்தி. “இது ஒனக்குத் தெரிஞ்ச
விஷயம் தானே, சரணு! அப்பா திடீர்னு இறந்து போனப்ப
ஒங்க பெரியம்மா தானே நமக்கு சப்போர்ட்டா இருந்து, அவளோட வீட்டை நமக்கு வாடகையில்லாம
குடுத்தா! இப்ப பேங்க்கிலிருந்து விஆர்எஸ் வாங்கிக்கப் போறாளாம். அப்படீன்னா அவ குவார்ட்டர்ஸைக் காலி பண்ணியாகணும் இல்லையா? இங்க தான வருவா?” என்றவள், “பொன்னினு எங்க அக்காவுக்குச் சும்மா பேர் வெக்கல, அவ மனசெல்லாம் பொன்னு தான்!
நிச்சயம் நம்பளைத் தவிக்க விட மாட்டா. நீ கவலைப்படாம ஹோம்வொர்க் பண்ணு. பாலு கிட்ட
ஏதாச்சும் சொல்லி அவன் மூடையும் கெடுத்துறாதே” என்று சரண்யாவின் நெற்றியில் ஒரு முத்தம்
வைத்தாள்.
அதற்குள் உள்ளே நுழைந்துவிட்ட பாலு, தன் ஸ்கூல்பையைக்
கழற்றாமலே அவள் அருகில் ஓடிவந்து, “அம்மா, எனக்கு?” என்றான். அவனுக்கும் நெற்றியில் முத்தமிட்டாள் சாந்தி.
“எனக்குப் பால் மட்டும்தான், போர்ன்வீட்டா
வேண்டாம்” என்று கூவிக்கொண்டே தன் அறைக்குப் போனான் பாலு.
அவன் போனபிறகு அம்மாவின் அருகில் வந்த சரண்யா, “எப்பம்மா
பெரியம்மா வீஆர்எஸ்-ல போறாங்க?” என்று காதுக்குள் கேட்டாள். சாந்திக்குத் தெரியவில்லை.
பொன்னியிடம் கேட்கலாம். வீஆர்எஸ் பணத்தில் கடன் கேட்பதற்கு அடிபோடுவதாக அவள் நினைத்துவிட்டால்?
“இன்னும் ரெண்டு மாசம் ஆகும்னு நினைக்கறேன்.”
இரவு சுமார் எட்டுமணி. கதவில் ‘டொக், டொக்’ என்று யாரோ
தட்டினார்கள். கூரியர்! ஒரு சிறிய அட்டைப்பெட்டி! முகவரியில் ‘செல்வி பொன்னி அவர்களுக்கு’ என்று இருந்தது.
சாந்தியின் மனம் குற்ற உணர்ச்சியால் துணுக்குற்றது.
பத்து வயது சிறியவளான தான், திருமதி ஆகி, இரண்டு குழந்தைகளைப் பெற்று, கைம்பெண்ணாகவும்
ஆகிவிட்டேன். பொன்னியோ திருமணமே வேண்டாமென்று செல்வியாகவே
இருந்துவிட்டு இப்போது பணியிலிருந்தும் ஓய்வுபெறப்போகிறாள். நாளைக்கு அவளுக்கு
யார் துணை?
அட்டைப்பெட்டியைக் கையில் வாங்கிப்பார்த்த சரண்யா,
“அம்மா, அனுப்பியவர் பெயர் ‘வாசு’ன்னு போட்டிருக்கும்மா!” என்றாள்.
திகைத்துப் போன சாந்தி, அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், “சரி, உள்ளே
கொண்டுபோய் வை. பத்திரமாகப் பெரியம்மாவிடம் கொடுக்கவேண்டும்” என்றாள்.
(2)
அந்த வங்கிக்கிளை
அன்று பரபரப்பாக இருந்தது. மேலாளர் பொன்னி விருப்ப ஓய்வு பெறப்போகிறாள்.
அந்த வங்கியை வேறொரு பெரிய வங்கியுடன் இணைப்பதாக அரசு
முடிவெடுத்தவுடனேயே ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பல அதிகாரிகளும் விருப்ப ஓய்வுக்கு மனதளவில்
தயாராகிவிட்டார்கள்.
காரணம், வங்கிகள் இணைக்கப்பட்டவுடன், இவர்களுடைய கிளைகள் சீரமைக்கப்படலாம். ‘சீரமைத்தல்’ என்றால்
சிறிய வங்கியின் பாதி ஊழியர்களைப் பெரிய வங்கியின்
பிற மாநிலக் கிளைகளுக்கு மாற்றிவிடுதல். அதில் மறைந்திருந்த உத்தி என்னவோ இவர்களைத்
துன்புறுத்தி விருப்ப ஒய்வு பெறச் செய்வதுதான்.
பொன்னிக்கு அத்தகைய அச்சம் இல்லை. அவள் தன்னுடைய வங்கியில்
சாதனை மேலாளராகத் திகழ்ந்தவள். ஆனால் சொந்தமாகத் தொழில் புரியவேண்டும் என்ற ஆசை அடிமனதில்
இருந்துகொண்டே இருந்தது. அதே சமயம் ஆண் துணையின்றி ‘செல்வி’யாகவே ஐம்பது வயதை எட்டிவிட்டவளுக்கு
என்ன தொழில்செய்வது, எங்கே, எப்போது தொடங்குவது என்ற புரிதல் ஏற்படாமல் இருந்தது.
வங்கிகளின் இணைப்பினால் வீஆர்எஸ் திட்டம் அறிவிக்கப்பட்டபோது
முதல் ஆளாக மனு கொடுத்தாள். வழக்கமான பென்ஷனுடன், கிராஜுவிட்டி இருபது லட்சமும், எதிர்காலச்
சம்பளமாகப் பதினைந்து லட்சமும் கிடைக்கும் என்று தெரிந்தது. கையில் மொத்தமாகப்
பணம் வரட்டும், பிறகு என்ன தொழில் என்று தீர்மானிக்கலாம் என்று முடிவெடுத்தாள்.
இன்று அந்த வங்கியில் அவளுக்குக் கடைசி நாள்.
வங்கியில் அவளுக்கு மிகவும் நெருக்கமான தோழி என்றால்
அது ஷோபனாதான். அவள் கணவர் பிரபலமான ஜெராக்ஸ் கடையை நடத்திவந்தார். நல்ல வருமானம்.
ஆனால் இவள் வீஆர்எஸ் எடுத்தால் வரும் பணம் மொத்தமாகக் கணவரின் பிசினஸில் முடங்கிவிடும். பிறகு ஐந்துக்கும் பத்துக்கும்
அவர் கையையே நம்பியிருக்க வேண்டும். ஆகவே வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.
“உனக்கென்னம்மா, கணவனா, பிள்ளையா குட்டியா? உனக்கு நீயே ராணி! எல்லாருக்கும் அப்படி
வாய்க்குமா?” என்றாள் ஷோபனா.
தேவிகா மட்டும் கவலைப்பட்டாள். துபாயில் நல்ல உத்தியோகத்தில்
இருப்பதாகச் சொல்லி அவளை மணந்துகொண்டவன், அங்கு ஒரு சாதாரண ஓட்டலில் சப்ளையர் என்று
தெரிந்தவுடன், அடுத்த விமானத்தில் ஏறி ஊருக்கு வந்துவிட்டவள்
தேவிகா.
“பொன்னி, இத்தனைநாள் தனியாவே இருந்துட்டே. அதனால ஆம்பளைகளைப்
பத்தி ஒனக்கு அதிகம் தெரியாது. கையில பணம் இருக்குன்னு தெரிஞ்சா ஒன்னையே சுத்துவானுங்க.
ஜாக்கிரதையா இருக்கணும்” என்று எச்சரித்தாள் தேவிகா.
உடன்பணிபுரிபவர்கள் அந்த அலுவலக சம்பிரதாயப்படி ஆளுக்கு
ஐநூறு ரூபாய் பங்களிப்பு செய்தார்கள். அதில் ஸ்வீட், காரம்,
காபி போக மீதிப்பணத்தில் பொன்னிக்கு ஒரு மொபைல் போன் அன்பளிப்பாகக் கொடுக்க முடிந்தது.
அப்போதுதான் அங்கு வந்தாள் சாந்தி, கூரியரில் வந்த
அட்டைப்பெட்டியை எடுத்துக்கொண்டு.
‘வாசு’ என்ற பெயரைப் பார்த்ததும் பொன்னியும் சாந்தியும்
ஒருவரையொருவர் திகைப்புடன் பார்த்துக்கொண்டார்கள். “அவனாக இருக்குமோ?” என்றாள் சாந்தி.
“அவனாகத்தான் இருக்கவேண்டும். வேறு எந்த வாசு தடியனும்
எனக்குத் தெரியாது” என்றாள் பொன்னி.
“இத்தனை வருஷம் கழித்து இப்போது ஏன் வருகிறான்? எனக்கென்னவோ பயமாக இருக்கிறது” என்றாள்
சாந்தி.
தேவிகாவுக்குப் புரிந்துவிட்டது. “பார்த்தாயா, பொன்னி! உன் கைக்குப் பெரிய தொகை வரப்போவதை உன் பழைய
நண்பன் மோப்பம் பிடித்துவிட்டான்” என்று சிரித்தாள் பலமாக.
“ஒரு திருத்தம். வாசு என்னுடைய நண்பன் அல்ல. சாந்தியுடைய
நண்பன்!” என்றாள் பொன்னி வெறுப்புடன். “இல்லையா சாந்தி?”
“மண்ணாங்கட்டி! ஏதோ வந்தான், பெண் பார்த்துவிட்டுப்
போனான். ஜாதகம் சரியில்லை என்று கடிதம் வந்தது. அவனா எனக்கு நண்பன்? கழிசடை!” என்றாள் சாந்தி கோபத்துடன்.
வாசுவைப் பற்றி தேவிகாவுக்குத் தெரியும். “பாவம்டி,
வாசுமேல ஒரு தப்பும் இல்லை. நீ ஏழைன்னு அவங்கப்பா தட்டிக் கழிச்சிட்டாரு. அதுக்கு அப்பறமும்
அவன் எவ்ளோ தடவை உன்னோட பேசறதுக்கு முயற்சி பண்ணினான் இல்லையா?
நீதான் பிடிகொடுக்கல..”
ஷோபனா இடைமறித்தாள். “ஒருவேளை வாசுவுக்கு இவ சரின்னு சொல்லியிருந்தா இப்படி வெறும் கழுத்தா நிக்கவேண்டி
இருக்காதோ என்னவோ!”
சாந்திக்கு இதைப்பற்றி மேற்கொண்டு விவாதம் வேண்டாம்
என்று தோன்றியது. “பொன்னி, சரண்யாவும் பாலுவும் மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கிறாங்க. நீ எப்ப வீட்டைக் காலி பண்ணைச் சொல்வியோன்னு பயந்துகிட்டே இருக்காங்க."
“எதுக்கடி நீ காலி பண்ணணும், முட்டாள்?” என்றாள் பொன்னி
அவளை ஆழமாகப் பார்த்துக்கொண்டே. “மாடியில் ஒரே ஒரு ரூம் எனக்குப் போதும். மற்றதெல்லாம்
உங்களுக்குத்தான். ரெண்டுபேர் படிப்பும் முடியுற வரைக்கும் என்னோடயே இருங்கள். நான்
குவார்ட்டர்ஸைக் காலிபண்ணிட்டு நாளைக்கே வந்துடறேன்.”
சாந்தியின் வயிற்றில் பாலை வார்த்ததுபோல் இருந்தது.
அவளுக்கும் ஒரு ஸ்வீட் காரம் காபி நீட்டினாள் ஷோபனா. ஆனால் அதைத் தின்ன விடாமல் வாசுவைப் பற்றி அவள் சொன்ன
கருத்து சாந்தியின் மனதில் ஈட்டி போல் குத்தி நின்றது. வாசுவின் வருகையால் தனக்கு என்னெவெல்லாம் நிகழுமோ என்று நினைத்தபோது குழந்தைகளின் எதிர்காலம் நல்லபடி அமையவேண்டுமே என்ற பயமும் மேலோங்கியது.
(தொடரும்)
இதன் அடுத்த பகுதி -" வண்ணம் கொண்ட வெண்ணிலவு-2
" படிக்க இங்கே சொடுக்கவும்.
துவக்கம் நன்று. ஆனாலும் தொடரும் போடுவதற்கு முன் கொஞ்சம் சஸ்பென்ஸ் உண்டாக்கி இருக்கலாம்.
பதிலளிநீக்குபிட்ஸ்பர்க் யுனிவெர்சிடியில் ஏதேனும் கோர்ஸில் சேர்ந்து படிக்கிறீர்களா?
Jayakumar
(2) அங்கு படிக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டது உண்டு. காலம் கடந்து விட்டது! எனவே அந்தப் பல்கலையின் அருகில் நின்று படம் எடுத்த தோடு சரி! (1) சஸ்பென்ஸ் இல்லாமல் எழுதவேண்டும் என்று முயற்சித்த சோதனை முயற்சி இது...
நீக்குநல்ல தொடக்கம். என்ன நடக்கப் போகிறது? தொடர்ந்து படிக்க காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குவாசுவிடமிருந்து வந்திருக்கும் செய்தி என்ன என்பதே சஸ்பென்ஸ்தானே? தொடர்கிறேன். முதல் அத்தியாயத்தில் ஏற்படுத்தப்பட்ட டென்ஷன் முதல் அத்தியாயத்திலேயே முடிக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குவாசு அந்தப் பெட்டிக்குள் என்ன சஸ்பென்ஸ் வைத்திருப்பான்? சாந்திக்கும் பொன்னிக்குமே அது சஸ்பென்ஸ்தான்!!! அடுத்த பகுதி வந்துவிட்டது அதில் வாசித்தால் தெரியும் என்ன என்று.
பதிலளிநீக்குகீதா
நல்ல துவக்கம் - அனுபவங்கள் பேசுகின்றன- குவிகம் சுந்தரராஜன்
பதிலளிநீக்குதங்கள் வரவுக்கு நன்றி ஐயா!
நீக்குInteresting start. Look forward to
பதிலளிநீக்குfurther episodes.
மிக்க மகிழ்ச்சி ஐயா!
நீக்கு