திங்கள், ஜனவரி 29, 2024

வண்ணம் கொண்ட வெண்ணிலவு- 2


வண்ணம் கொண்ட வெண்ணிலவு- 2
 

-இராய செல்லப்பா

இதன் முந்தைய பகுதி   -"  வண்ணம் கொண்ட வெண்ணிலவு - 1  " படிக்க இங்கே சொடுக்கவும்.

 (3)

 அட்டைப்பெட்டியைப் பிரித்தாள் பொன்னி.

“மெரீனாக் கடற்கரையில் ஔவையார்  சிலையருகில் நாளை மாலை ஆறுமணிக்குச் சந்திக்கலாமா? - வாசு” என்றது அட்டைப்பெட்டியின் உள்ளிருந்த சிறிய கடிதம். 

வாசுவுக்கு இப்போது என்ன வயதிருக்கும் என்று யோசித்தாள் பொன்னி.  நாற்பத்தைந்துக்குக் குறையாது. தன்னை விடச் சின்னவன்தான். எந்த ஊரில் என்ன வேலையில் இருக்கிறானோ? குழந்தைகள் எத்தனை? மனைவி என்ன செய்கிறாள்?

 சரியாக ஆறுமணிக்கு உழைப்பாளர் சிலையருகே அவள்  ஆட்டோவிலிருந்து இறங்கியபோது வாசு அங்கே நின்றுகொண்டிருந்தான். அதே தோற்றம். பழைய வாசுவேதான். வயதினால் முகம் மட்டும் முற்றியிருந்தது. 


படத்துக்கும் கதைக்கும் தொட்ர்பில்ல்லை!

 “மிஸ்டர் வாசு, உங்களை அன்று ஒரே ஒருமுறை பார்த்ததுதான். சாந்தியாவது பலமுறை பார்த்திருக்கிறாள். எத்தனை வருடம் ஆயிற்று! காரணம்  சொல்லாமல் மாலையில் கடற்கரைக்கு வா என்று ஒரு பெண்ணை அழைப்பது முறையா?” என்று சீறினாள் பொன்னி. அவனைவிட்டுச் சற்று தூரத்திலேயே நின்றாள். கடற்காற்றில் அவள் கேசம் இழை இழையாகப் பறக்க ஆரம்பித்தது. அதை ஒருகையால் அழுத்திக்கொண்டாள்.

“ஹ் ஹ் ஹா” என்று சிரித்தான் வாசு. ஒப்பனைகள் ஏதுமில்லை. மாலையில் களைப்பாக வீடு திரும்பும் சராசரி ஊழியனைப்போலவே இருந்தான். “உண்மையைச் சொல்லட்டுமா? நீங்கள் இங்கு வருவீர்கள் என்று நான் நம்பவேயில்லை” என்றான்.

“நானே கூடத்தான் நம்பவில்லை. பிறகு என் வந்தேன் தெரியுமா?” என்று அவனை ஏறிட்டாள் பொன்னி, நிஜமான கோபத்துடன்.

 வாசு கலகலவென்று சிரித்தான். “தெரியுமே! உங்களைபோலவே நானும் இன்னும் மணமாகாதவன் என்பதால் தானே?”

 “சீ !” என்றவள், “உங்களுக்கு எப்படியோ, எனக்கு, இந்த வயதில் திருமணம் செய்யும் நோக்கம் இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் அனுப்பிய கூரியர் சாந்தியின் கையில் கிடைத்துவிட்டது. அவள் என்னைப் பற்றி என்ன நினைப்பாள்? அதனால்தான் உங்களைப் பற்றி முழுசாகத் தெரிந்துகொண்டு அவளிடம் சொல்லவேண்டும் என்று  வந்திருக்கிறேன்” என்றாள்.

 வாசுவுக்குத் தன் தவறு புரிந்தது.  “மன்னித்துவிடுங்கள் பொன்னி!” என்றான். பிறகு பேச ஆரம்பித்தான்.

(4)

 சாந்தியைப் பெண்பார்க்க வந்தபோது, வாசு ஒரு நடுத்தரக் குடும்பத்தின்  ஒரே பிள்ளை. பி காம்,  சிஏ (இண்ட்டர்) படித்து  ஒரு தனியார் வங்கியில் அதிகாரியாக இருந்தான். தற்செயலாக அவன் தந்தையின் நண்பர் கொடுத்த தகவலின்பேரில் பெண்பார்ப்பு நடந்தது.

 சாந்தியை அவனுக்குப் பிடித்திருந்தது. ஆனால் பெற்றோர்களோ மேலும்  வசதியான இடமாகப் பார்க்கலாமே என்று தாமதித்தார்கள். ஆனால் பழியை ஜாதகத்தின்மேல் போட்டார்கள். அவன் துருவித் துருவிக் கேட்டதில், பெண் வீட்டில் சம்மதிக்கவில்லை என்றாள் அம்மா.  

“பெண் என்ன சொன்னாளாம்?” என்று கேட்க அவனுக்கு நாணமாக இருந்தது. சில மாதங்களில் அவன் மும்பையில்  இன்னொரு நிதி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான். என்றாலும் சாந்தியின் அப்பாவியான முகம் அவன் மனதை விட்டு நீங்கவில்லை.

இரண்டுமுறை சென்னைக்கு வந்தபோது சாந்தியைச் சந்திக்க முயற்சி செய்தான். அவள் முகம்கொடுத்துப் பேசவில்லை. மூன்றாவது முறை அவளைப் பார்த்தபோது அவள் கழுத்தில் தாலி ஏறியிருந்தது.

 முதலில் பார்க்கும் பெண்ணையே மணந்துகொள்வது  என்ற தன் இலட்சியம் நிறைவேறாததில் வாசு மனம் தளர்ந்துவிட்டான். கவனத்தைப் படிப்பில் செலுத்தி சிஏ முடித்தான். இரண்டே வருடத்தில் ஒரு தனியார் பங்குச்சந்தை முகவரின் கம்பெனியில் ஆடிட்டராகச் சேர்ந்தான்.

“சில ஆண்டுகள் மத்தியக் கிழக்கு நாடுகளிலும், பிறகு கனடாவிலும் இருந்தேன். வங்கிகள் மட்டுமின்றி, மருந்துக் கம்பெனிகள்,  பார்மா, ஐடி, விமானத்துறை என்று     வெவ்வேறு துறைகளில் அனுபவம் கிடைத்தது. கடந்த பத்தாண்டுகளாகச் சுதந்திரமான ஆலோசகராக இருக்கிறேன். இந்த இரண்டு வருடங்களாக ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ஆலோசனை சொல்லும் பொறுப்பு கிடைத்தது. அப்போதுதான் உங்களைப் பார்த்தேன்…” என்று நிறுத்தினான் வாசு.

 பொன்னிக்குத் தூக்கிவாரிப்போட்டது. “நான் எப்போது ரிசர்வ் பேங்குக்குப் போனேன்?” என்று தன் மூளையைக் கசக்கிக்கொண்டாள்.

வங்கிகளில் வாராக்கடன் அதிகரித்து வரும் நிலையில், முற்றிலும் ஆபத்து இல்லாததும், இந்திய மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படுவதுமான  தங்க நகைக்கடன்களை வங்கிகள் இன்னும் அதிக ஊக்கத்துடன் வழங்கவேண்டும்  என்பதற்காக, சில முக்கிய வங்கிகளை ரிசர்வ் பேங்க் பேச அழைத்தது. அவளது ஜிஎம் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சி அது. கடைசி நேரத்தில் அவர் வரமுடியாமல், பொன்னியைக் கலந்துகொள்ளச் சொன்னார்.

 “அந்த நிகழ்ச்சியில் நீங்கள் ஆணித்தரமாகச் சொன்ன சில கருத்துக்களை டெபுடி கவர்னரே மிகவும் பாராட்டினார். அதற்குப் பிறகுதான் உங்களைப் பற்றி  நன்றாக விசாரித்துத் தெரிந்துகொண்டேன்”  என்றான் வாசு.

“ஆனால் என்னுடைய மொபைல் நம்பரை மட்டும் தெரிந்துகொள்ளவில்லை. இல்லையா?” என்று கேலியாகக் கேட்டாள்  பொன்னி.

 “அதற்குக் காரணம் உண்டு. உங்கள் வங்கி இன்னொரு பெரிய வங்கியில் ‘மெர்ஜ்’ ஆவதால் நீங்கள் வீஆர்எஸ் பெறுவதாகத் தெரிந்தது. அப்போது மொபைல் நம்பரும் மாறக்கூடும் அல்லவா? நேரில் வாங்கிக் கொள்ள நினைத்தேன்”   என்றான் வாசு.

 “சரி, என்னைப் பற்றி வேறு என்னென்ன விசாரித்தீர்கள்? யார் யாரிடம்?”

 அவள் சற்றே இறங்கிவருவதுபோல் தோன்றியது. “அதை விட, ஏன் விசாரித்தீர்கள் என்று கேட்க மாட்டீர்களா?” என்று கொக்கி போட்டான் வாசு.

ஒரு சிறுவன் ‘தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்’ என்று அவர்கள் இருந்த பக்கமே நின்று குரல் கொடுத்துக்கொண்டிருந்தான். இரண்டு பொட்டலங்கள் வாங்கிக்கொண்டு அவனை விரட்டினான் வாசு. சுண்டலைக் கொறித்தபடி, “ஏனாம்?” என்றாள் பொன்னி.

 “நடந்துகொண்டே பேசலாம். இன்னும் அரைமணிக்குள் நான் வீட்டில் இருக்கவேண்டும்” என்று அவசரப்படுத்தினாள். 

 “எனக்கு நாடு நாடாகப் போய் ஆலோசனை சொல்லும் தொழில் அலுத்துவிட்டது. சொந்தமாகத் தொழில்செய்ய  முடிவுசெய்து ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன். அதில் என்னோடு பங்குதாரராகச் சேர்வதற்கு நீங்கள்தான் சரியானவர் என்று தோன்றியது. காரணம், அந்தத் தொழிலுக்கான எல்லாத்  தகுதிகளும் உங்களுக்கு உண்டு..”

“போர் அடிக்காதீர்கள் வாசு! ஆனாலும் பரவாயில்லை. ரொமான்டிக்காக ஏதும் பேசிவிடுவீர்களோ என்று பயந்தேன். சரி, அது  என்ன தொழில்  என்று சட்டென்று சொல்லுங்கள்” என்று மீதமிருந்த சுண்டலை ஒரே வாயாகப் போட்டுக்கொண்டவள், பச்சை மிளகாயைக் கடித்துவிட்டதால் “சூ..” என்று அலறினாள். “மிளகாய்..மிளகாய்” என்று குழறினாள்.

“கவலைப் படாதீர்கள். சூடாக ஒரு மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டால் சரியாகிவிடும். இங்க வாப்பா” என்று பஜ்ஜி விற்பவனை அழைத்தான் வாசு, சிரித்துக்கொண்டே.

அவனை அடிக்க வருவதுபோல் கையை ஓங்கினாள் பொன்னி.

“நீங்கள் ஒரு வங்கியில் மேலாளராக இருந்து நல்ல பெயர் வாங்கி இருக்கிறீர்கள். தங்க நகைக்கடன் கொடுப்பதில் உங்கள் வங்கி கவனமும் எச்சரிக்கையும் கொண்டதாக விளங்குகிறது. நகை மதிப்பீடு செய்யும் பயிற்சியில் கலந்துகொண்டு சான்றிதழ் பெற்றிருக்கிறீர்கள். கஸ்டமர் சர்வீஸில் நீங்கள் சூப்பர் என்று சேர்மனிடமே பாராட்டு பெற்றிருக்கிறீர்கள்…  முக்கியமாக, உங்கள் பெயரிலேயே பொன் இருக்கிறது..” 

“போதும், போதும். நானும் சொந்தத் தொழில் செய்யத்தான் நாள் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அறிவுக்கு வேலை இல்லாத நகைக்கடன் தொழிலில் நான் ஏன் இறங்கவேண்டும்? அதுவும் எனக்கு அதிகம் தெரியாத உங்களுடன்?” என்று குரலை உயர்த்தினாள் பொன்னி.

 சடக்கென்று அவளுடைய கைகளைப்  பற்றிக்கொண்டான் வாசு. “என்ன மேடம் இப்படிச் சொல்லிவிட்டீர்கள்? தமிழ்நாடு முழுவதும் கேரளாக் கம்பெனிகள் எவ்வளவு மும்முரமாக நகைக்கடன் கொடுக்கின்றன? பார்க்கவில்லையா? முதலுக்கு மோசமில்லாத தொழில். அதிலும்  நான் மேனேஜிங் டைரக்டர், நீங்கள் சி ஈ ஓ. உங்கள் சம்பளம் இரண்டு லட்சம். அத்துடன் நிகரலாபத்தில் 2 சதம் போனஸ். கார் உண்டு.  ஹெட் ஆபீசில் அமர்ந்துகொண்டு சூபர்வைஸ் செய்தால் போதும். பத்து கிளைகளை ஆரம்பிக்கப் போகிறோம். அதற்கான திறமையுள்ள மேலாளர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள். நாணயமான நகை மதிப்பீட்டாளர் இரண்டு பேர் வேண்டும். அவர்களும் உங்கள்மூலம் தான் தேர்வாக வேண்டும். உங்களுக்கு என்ன ரிஸ்க் இதில்?”

அவனிடமிருந்து கைகளை விடுவித்துக்கொண்ட பொன்னி, தெளிவாகத் திட்டமிட்டு வைத்திருக்கிறான் என்று அவனை மனதிற்குள் பாராட்டினாள்.  “மற்றதை நாளை போனில் பேசலாம். எதற்கும் சாந்தியிடம் விஷயத்தைச் சொல்லிவிடுகிறேன்” என்று தன் அலைபேசி எண்ணைக்   கொடுத்தாள்.

முகம் மலர்ந்த வாசு, “காத்திருக்கிறேன் பொன்னி! உங்களுக்காக! எவ்வளவு நாள் வேண்டுமானலும்!” என்றான்.  

முகத்தில் இலேசான வெறுப்பைக் காட்டியபடி, “வாசு, ஒரு முக்கிய விஷயம்: எனக்குத் திருமணம் என்ற ஒன்று இந்தப் பிறவியில் கிடையாது. ஆகவே நீங்கள் காத்திருக்கவும் வேண்டாம். வீண் கற்பனைகளும் வேண்டாம். அத்துடன் என்னைவிட வயதில் சிறியவர் நீங்கள். புரிந்ததா?” என்று ஆட்டோவில் ஏறினாள் பொன்னி.

 (தொடரும்)

இதன் அடுத்த பகுதி   -"  வண்ணம் கொண்ட வெண்ணிலவு - 3  " படிக்க இங்கே சொடுக்கவும்.

10 கருத்துகள்:

 1. தொடர்கதைகள் அடுத்த பாகங்கள் துவக்கத்தில் ஒரு சிறு கதைச்சுருக்கம் தந்தால் கதை இதுவரை என்ன நடந்தது என்பதை நினைவில் கொண்டு வர முடியும். இது என்னுடைய தாழ்ந்த அபிப்ராயம். ஏனென்றால்....
  உங்களுடைய கதையில் நீங்கள் நிறைய மாந்தர்களை வைத்து ஒவ்வொருத்தருடைய கதையையும் தனித்தனியே கொண்டு சென்று கடைசியில் அந்த மாக்கதைமாந்தர்களுக்கிடையே உள்ள உறவையும், முழு கதையில் அவர்களுடைய பங்கையும் வெளிப்படுத்தி முடிப்பீர்கள். இது உங்களுடைய பாணி. அதுவரை எல்லாக் கதைகளையும், கதை மாந்தர்களையும் நினைவில் நிறுத்த முடியாது.
  Jayakumar

  பதிலளிநீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. ஐயா, உங்கள் கவலை எனக்குப் புரிகிறது. 'மணிகர்ணிகா' வை நினைத்துப் பேசுகிறீர்கள் என்று புரிந்துகொள்கிறேன். இப்போது நீங்கள் படிக்கும் கதை, ஒரு குறு நாவல் தான். மொத்தம் ஐந்தே பகுதிகள்தான் வரும். இதில் வரும் பாத்திரங்களும் எண்ணிக்கையில் குறைவுதான். எனவே உங்களுக்கு அதிகம் வேலை யிருக்காது. நிச்சயம் நினைவில் வைத்துக்கொண்டு படிக்க முடியும். தங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. வாசு திருமணம் சம்பந்தமாக எதுவுமே பேசாத நிலையிலும் பொன்னியிடமிருந்து ஏன் அப்படி ஒரு ரீயாக்ஷன்?  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் பெண்களே இப்படித்தான் நண்பரே! எப்போது எப்படி நடந்துகொள்வார்கள் என்று தெரியாது!

   நீக்கு
 5. பொன்னி ஏதோ மனதில் கற்பனையில் பேசுவதாகத் தோன்றுகிறது! வாசு எதற்கு வந்திருக்கிறான் என்று கூடத் தெரிந்து கொள்ளாமல் எடுத்த எடுப்பிலேயே அவன் ஏதோ திருமணம் சம்பந்தமாகச் சந்திப்பதாக நினைத்துக் கொண்டு.....ஆனால் வாசுவின் மனதில் வேறு கணக்கு....இத்தனை ஆராய்ந்து தெரிந்து கொண்டவன் சாந்திதான் பொன்னியின் தங்கை என்பதும் தெரியாமல் இருக்குமா என்ன?!!! எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் பொன்னியின் சீற்றம் கொஞ்சம் அதிகமோ?!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காரணம் சொல்லாமல் மாலையில் கடற்கரைக்கு வா என்று ஒரு பெண்ணை அழைப்பது முறையா?” //

   கேட்பவள் செயலில் காட்டியிருக்கலாமே! சென்றிருக்க வேண்டாமே. அல்லது அந்தக் கேள்வியைத் தவிர்த்திருக்கலாமே.

   கீதா

   நீக்கு
  2. பொன்னி எப்போதுமே அப்படித்தான் சீற்றமாக இருப்பாளாம். அவளுடைய வங்கியில் கேட்டபோது சொன்னார்கள்!

   நீக்கு
 6. பொன்னியின் சீற்றம் குறித்து மற்றவர்கள் சொன்னதை நானும் நினைத்தேன். கதை எப்படி முன்னே செல்லும் என்ற எண்ணத்தோடு அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. அப்பாடா, நீங்கள் ஒருவராவது பொறுமை காக்கிறீர்களே!

  பதிலளிநீக்கு