வியாழன், ஜனவரி 04, 2024

லட்டுக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

லட்டுக்கும் உண்டோ அடைக்கும் தாழ்? 

இப்போதுதான் நுவார்க்கில் வந்து இறங்கியது போல் இருக்கிறது. அதற்குள் ஆறுமாதம் முடியப்போகிறது. இன்னும் ஒரு வாரத்தில் இந்தியா திரும்ப வேண்டும்.

இரண்டு வருடங்களாக உலகைப் புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கும் கோவிட்-19 பெருந்தொற்று இன்னும் அடங்கியபாடில்லை. ஆனால் பெரும்பாலான அமெரிக்கர்களிடம் தாங்களாகவே முன்வந்து பூஸ்டர் போட்டுக் கொள்ளும் உந்துதலைக் காண முடியவில்லை. போகட்டும், மாஸ்க் அணியும் பழக்கமாவது  பரவலாக வேரூன்றியுள்ளதா என்றால் அதுவும் இல்லை. நம்மூரில் இருந்து போனவர்கள் கொஞ்சம் தேவலை. இதனால் ஒன்றரை வயதுக்  குழந்தையோடு  வெளியூர் செல்வது என்றால் அபாயகரமான விஷயமாகவே தோன்றியது.

மருமகள் புவனாவுக்கு இதில் பெரிதும் மனக்குறை. மாமனார் மாமியாரைப்  புதிய இடங்களுக்கு அழைத்துப் போக முடியவில்லையே என்று வருந்தினாள். ஃபிளஷிங் விநாயகர், பிரிட்ஜ்வாட்டர் பாலாஜி, பொமோனா லக்ஷ்மிநரசிம்மர், மார்கன்வீல் குருவாயூரப்பன், ராபின்ஸ்வீல் ஸ்வாமிநாராயணர்   என்று முக்கியக் கோவில்களைப்  பார்த்தாயிற்று. ப்ளெமிங்க்டனில் மகாபெரியவா பாதுகைக் கோவிலும் தரிசனம் ஆகிவிட்டது.  ஆகவே இதுவரை பார்க்காத டெலாவர் மகாலட்சுமி ஆலயத்திற்கு மட்டுமாவது எப்படியும் அழைத்துப் போவது என்று முடிவு செய்தாள். எடிசனில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் இருந்த டெலாவர் மாநிலத்தின் ஹாக்கஸின் என்ற ஊரில் அமைந்திருந்தது அக்கோவில்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை வெங்கட்டும் புவனாவும் தங்கள் குழந்தை கிருஷ்ணாவுடன் தயாரானார்கள். மாமனார் பரசுராமனும் மாமியார் ஞானமும் வழக்கம்போலச் சுறுசுறுப்பாக எழுந்து உடன்வந்தார்கள். வெங்கட் திறமையான டிரைவர். வண்டி போவதே தெரியாமல் அமெரிக்காவின் 40ஆம் எண் நெடுஞ்சாலையில் நழுவிக்கொண்டு ஓடியது. மணிக்கு நூறு கிலோமீட்டருக்குக் குறைந்து ஓட்டக்கூடாது என்பதால் சரியாக இரண்டுமணி நேரத்தில் டெலாவர் எல்லையைத் தொட்டார்கள்.


தற்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் ஜோ பைடனின் சொந்த ஊர் டெலாவர் என்றாலும் ஆடம்பரமில்லாத எளிய சூழலே வழியெங்கும் தென்பட்டது. நீண்ட பாலங்களும், இடையிடையே குறுக்கிடும் ஆறுகளும் மற்ற நீர்வழிகளும் ஆங்காங்கே தென்படும் நகர்ப்புறம் சார்ந்த பசுமைகளும் கவர்ச்சியானவையாக இல்லை. இதனுடன் ஒப்பிட்டால் நியூஜெர்சி மாநிலம் பலமடங்கு இயற்கையெழில் கொண்டதாக விளங்குகிறது. இயற்கையின் விளையாட்டு!

மாநிலத்தின் எல்லையிலேயே ஹாக்கஸின் நகர் அவர்களை வரவேற்றது. நெடுஞ்சாலைக்கு அருகில் யார்க்ளின் ரோடில் அமைந்திருந்தது மகாலக்ஷ்மி ஆலயம். அதன் வாசலில் திறந்தவெளியில் வானத்தைப் பார்த்து நின்றுகொண்டிருந்தார் 25 அடி உயரமான ஆஞ்சநேயர். சமீபத்தில் அங்கு நிலைநாட்டப்பெற்றவராம். காரிலிருந்து இறங்கியவுடனேயே குழந்தை கிருஷ்ணாவுக்கு அந்த ஆஞ்சநேயரைப் பிடித்துவிட்டது. அவரை நோக்கி ஓடினான். ஆனால் கோவிலுக்குள் நுழைந்து முக்கியத் தெய்வங்களைத் தொழுதபிறகே ஆஞ்சநேயரைத் தொழவேண்டும் என்பதால் அவனை இறுக்கிப் பிடித்துக்கொண்டாள் புவனா.

வழக்கமான தென்னிந்தியக் கோயில் அமைப்பில் கட்டப்பட்ட ஆலயம். தெலுங்கு பேசும் இந்தியர்களின் குழுவால் நிர்வகிக்கப்பட்டுவருகிறது.  முக்கியத் தெய்வமாக மகாலக்ஷ்மி இருந்தாலும் வழக்கம்போல மற்ற தெய்வங்களுக்கும் தனித்தனிச் சன்னதிகள் இருந்தன. கம்பீரமான விநாயகர் அவர்களை அன்போடு வரவேற்றார். சிவன் மற்றும் தக்ஷிணாமூர்த்தி, முருகன் (கார்த்திகேயன்), விஷ்ணு (சத்யநாராயணா), ஐயப்பன், ராதா-கிருஷ்ணா, சீதா-ராம-லக்ஷ்மணர், நரசிம்மர் ஆகியோரும் கடல்தாண்டி அமெரிக்காவில் வாசம்செய்யும் நம்மவர்களைக் காப்பதற்குத் தயாராக அங்கு  காத்திருந்தார்கள். சிவன் இருந்தால் நவக்கிரகங்களும் இருப்பார்கள் அல்லவா? இருந்தார்கள். 

அழகாகப் பராமரிக்கப்பட்ட ஆலயம். சற்றே அதிகம் நிதிவசதி இருந்தால் இன்னும் அழகூட்டமுடியும் என்று தோன்றியது. அர்ச்சகர்கள் அருமையாக மந்திரங்கள் சொல்லிப் பூஜை செய்தார்கள். கற்பூரதீபம் காட்டியவுடன் பக்தர்கள் சன்னதியில் கட்டப்பட்டிருந்த பெரிய மணியின் நாக்கைப்   பற்றிக்கொண்டு மணியடிப்பதைக் கண்ட குழந்தைக்கு, தாத்தாவின் தோளில் ஏறிக்கொண்டு, தானும் மணியடிக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. ஒரு முறை மணி அடித்தவன், அர்ச்சகர் ஏதாவது சொல்வாரோ என்ற தயக்கத்துடன்  அடுத்த மணியும் அடித்தான். அவர் ஏதும் சொல்லாததால் அதன் அருகில் இருந்த சிறிய மணியையும் அடித்துக் குதூகலித்தான்.

அமெரிக்கக் கோவில்களில் அர்ச்சனைக்கு ஆப்பிள் பழங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். (வாழைப்பழம் கிடைப்பது அரிது). அதை நிவேதனம் செய்து பக்தர்களுக்கே கொடுக்கிறார்கள். பாதாம், முந்திரி, திராட்சை அடங்கிய கலவையைப்  பொதுவாக எல்லோருக்கும் விநியோகிக்கிறார்கள். இந்த மகாலக்ஷ்மி ஆலயத்தில் ‘லட்டு அர்ச்சனை’ என்று சிறப்பு அர்ச்சனை செய்கிறார்கள். (48 டாலர் கட்டணம்). இரண்டு பெரிய லட்டுகளை நிவேதனமாகச் சமர்ப்பித்து நமக்கே திருப்பித் தருகிறார்கள்.

கற்பூர தீப ஆராதனையின் அற்புதமான வெளிச்சத்தில் பளபளக்கும் ஆபரணங்களுடன் மகாலக்ஷ்மியின் தெய்வீகத் தோற்றத்தைக் கண்ட கிருஷ்ணா, தானாகவே தன் இரண்டு கைகளையும் கூப்பிக்கொண்டான். அர்ச்சகர் அவன் கைகளில் ஒரு லட்டை வைத்தார். இன்னொன்றைக் குங்குமப் பிரசாதத்துடன் புவனாவிடம் அளித்தார்.

கிருஷ்ணா அந்த லட்டை ஆச்சரியத்துடன் பார்த்தான். அவன் கைகளை மீறிய அளவில் பெரியதான அந்த உருண்டை வடிவம் அவனைக் கவரவில்லை. அம்மாவிடமே கொடுத்துவிட்டான்.

எல்லாச் சன்னதிகளையும் தரிசித்து முடித்தபோது, திருப்பதி மாதிரி துணி கட்டிய உண்டியலைப் பார்த்தான் கிருஷ்ணா. அவன் கையில் ஐந்து டாலர் நோட்டை வைத்தார் பரசுராமன். எல்லையற்ற மகிழ்ச்சியுடன் அந்தப் பணத்தை உண்டியலுக்குள் போட்டான் கிருஷ்ணா.

வாசலை நோக்கி அனைவரும் நடந்தார்கள். அப்போது பிரசாதம் விற்கும் இடம் வந்தது. என்ன வாங்கலாம் என்று யோசித்தபடி புவனா நின்றபோது, “ம்மா! ம்மா!” என்று கைகாட்டினான் கிருஷ்ணா. அங்கே சிறிய அளவிலான இரண்டிரண்டு லட்டுகள் தனித்தனி பிளாஸ்டிக் பொட்டலங்களாக இருப்பதை அவன் கண்டுபிடித்துவிட்டான். அவன் முகத்தில் ஆனந்தத்தின் வெளிச்சம் அரும்பியது.  அம்மாதிரி சிறு லட்டுகளை அவன் ஏற்கெனவே பார்த்திருக்கிறான். விரும்பிச் சாப்பிட்டும் இருக்கிறான்.

கிருஷ்ணாவின் முகத்தைப் பார்த்து புவனாவும் வெங்கிட்டும் சிரித்துக்கொண்டனர். ஆளுக்கு ஒன்று என்று ஐந்து பொட்டலங்களை வாங்கினார்கள். தனக்கு ஒன்று தரப்பட்டவுடன், பிடிவாதமாக அந்தப் பொட்டலத்தைப் பிரித்து, இரண்டு கைகளிலும் இரண்டு லட்டுகளை எடுத்து வைத்துக்கொண்டு சந்தோஷமாக அங்குமிங்கும் ஓடினான் கிருஷ்ணா.

“கொஞ்சம் லட்டு தின்னுடா கண்ணு” என்று பாட்டி கூறினாலும் அந்த உருண்டை வடிவ லட்டைச் சிதைக்க அவன் உடன்படவில்லை. “நோ நோ நோ நோ” என்று தலையை பலமாக ஆட்டினான். தனக்குப் பிடிக்கவில்லை என்றால் நான்கைந்துமுறை ‘நோ’ சொல்லுவது கிருஷ்ணாவின் இயற்கை. “சரி, அப்படியே வெச்சுக்கோ. ஆனா கையெல்லாம் பிசுபிசுன்னு ஆயிடும்” என்று சமாதானம் ஆனார் பாட்டி.

முறுக்கு, மிக்ஸ்சர், காராபூந்தி எல்லாம் கொஞ்சம் வாங்கினார்கள். பிரசாதம் விற்கும் கோவில் பணியாளர், “காபி, டீ யும் கிடைக்கும். வேண்டுமா?” என்றார். காபியை வேண்டாம் என்று சொல்வதற்கு எக்கச்சக்கமான மன  உறுதி வேண்டுமல்லவா? அது பரசுராமனிடம் இல்லை என்பது ஞானத்திற்குத் தெரியும். “அவருக்கு ஒரு காபி. எனக்கு ஒன்று. அவருக்கு சர்க்கரை போடலாம்” என்று அறிவித்தார். (தனக்குச் சர்க்கரை போட வேண்டாம் என்பதை அவர் தெரிவிக்கும் சாதுர்யம் அது). அப்போது தூரத்தில் சென்று கொண்டிருந்த ஒரு பக்தரின் காதுகளில் இது விழுந்ததற்கு அடையாளமாக அவரும் “ஒரு காபி” என்று ஐந்து டாலரை நீட்டினார்.

எதிர்பார்த்தபடியே கிருஷ்ணாவின் கைகளில் இருந்த லட்டுகள் பிசுபிசுக்கத் தொடங்கின. அவனுக்குச் சற்றே என்னவோ போலிருப்பதை முகம் காட்டியது. ஆனால், “என்னிடம் கொடுக்கறியா? வீட்டுல வந்ததும் குடுக்கறேன்” என்று பாட்டி சொன்னதும் முடியாது என்பதுபோல் “நோ நோ நோ நோ” என்று தலையாட்டினான்.

“சரி, அப்படீன்னா அம்மா கிட்டயாவது குடு” என்று கைநீட்டினாள் புவனா. “இல்லேன்னா கையில எறும்பு கடிச்சுடும்.” சொல்லும்போதே அவளுக்குச் சிரிப்பும் வந்துவிட்டது. ஏனென்றால் அவனுக்கு எறும்பு என்றால் என்னவென்றே தெரியாதே! அடையாளம் காட்டுவதற்குக் கூட ஒன்றிரண்டு எறும்புகள் அவர்கள் வீட்டில் காணப்பட்டதே இல்லை.  மீண்டும் “நோ நோ நோ நோ” தான் பதில். பிறகு வெங்கிட்டும் கேட்டான், “அப்பாகிட்ட ஒரு லட்டு குடு” என்று. அவனுக்கும் நான்கு “நோ” தான் பதில்.

தரைத் தளத்தில் காயத்ரி விக்ரகம் இருந்தது. நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் மட்டும் அங்கு பூஜை நடக்கும்போல் இருந்தது. அழகான விக்கிரகம். அங்கு சென்றபோது, எதிர்ப்பக்கத்தில் இருந்த ஒரு சிறுவன் கிருஷ்ணாவைப்  பார்த்துவிட்டான். அவனும் அவனது இளம் பெற்றோர்களும் ஏற்கெனவே பூஜையை முடித்து, ஒரு மேஜையில் உணவருந்திக் கொண்டிருந்தனர். இவன் கையில் இரண்டு மஞ்சள் நிறமான உருண்டைகளைப் பார்த்தவுடன் அவனுக்கும் ஆசை வந்திருக்கவேண்டும். “அம்மா, லட்டு, லட்டு!” என்று தன் தாயிடம் கூறினான். தமிழ்க் குடும்பம்.

அதற்குள் கைகழுவிக்கொண்டு வந்த சிறுவனின் தந்தை, “ராகுல், வா, உனக்கும் லட்டு வாங்கலாம்” என்று பிரசாதக் கடைக்குச் சென்றார். ஆனால் அங்கு லட்டுகள் எல்லாம் விற்றுத் தீர்ந்துவிட்டன. தட்டில் மீதமிருந்த உதிர்ந்த லட்டுத் துண்டுகளைக் கடைக்காரர் அவன் கையில் கொடுத்தபோது, சிறுவன் ராகுல் உதறிவிட்டு,  ஏமாற்றத்தில் அழத் தொடங்கினான். “எனக்கு லட்டுதான் வேணும்” 

அவனைப் பார்த்தால் கிருஷ்ணாவை விட இரண்டு வயது பெரியவனாகத் தோன்றியது. ஆனால் குழந்தைகள் எப்போதும் குழந்தைகள்தானே! ராகுல் நிறுத்தாமல் அழ ஆரம்பித்தான். அவனுடைய தாய், வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்த சாக்லேட், முறுக்கு இன்னும் பல உணவுப் பண்டங்களைக் கொடுப்பதாகச் சொன்னாலும் “எனக்கு லட்டுதான் வேணும்” என்று உரக்கக் கத்தினான் ராகுல். அவனை எப்படிச் சமாதானம் செய்வது என்று அவன் தாயாருக்குத் தெரியவில்லை.

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.

இரண்டு கைகளிலும் லட்டுகளுடன் கிருஷ்ணா அவன் எதிரில் ஓடிப்போய் நின்றான். கிருஷ்ணாவுக்கு இன்னும் பேச்சு வரவில்லை. ஒன்றரை வயதுதானே! அதிலும் மூன்று மொழிகளின் தாக்கம் அவனுக்கு இருந்தது. பெற்றோர்கள் பேசுவது தமிழில். ரைம்ஸ்கள் கேட்பது ஆங்கிலத்தில். அவனுடைய பேபிஸிட்டர் உரையாடுவது ஸ்பானிஷ் மொழியில். ஆகவே அவனுடைய மழலையில் மூன்று மொழிகளும் கலந்து ஒலிப்பது வழக்கம். இப்போதோ, தன்னை விடப் பெரிய பையனைப் பார்த்து அவன் ஏதோ சொல்ல வருகிறான். எந்த மொழியில் பேசுவான், என்ன பேசுவான் என்று புவனா ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டு நின்றாள்.   

ராகுலின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தான் கிருஷ்ணா. “சோ..ச்..சோ..” என்றான். அதற்கு ‘அழாதே’ என்று அர்த்தம் என்பது ராகுலுக்கு எப்படிப் புரிந்ததோ தெரியவில்லை. சட்டென்று அழுகையை நிறுத்தினான்.

தன்  வலது கையை ராகுலை நோக்கி நீட்டினான் கிருஷ்ணா. விரல்களை விரித்து அதிலிருந்த லட்டை ‘எடுத்துக்கொள்’ என்பதுபோல் அவன் வாயருகில் கொண்டுசென்றான். அவன் முகத்தில் புன்சிரிப்பு தவழ்ந்தது.

ராகுலுக்கும் முகத்தில் சிரிப்பு திரும்பியது. ஆனால் அரை மனதுடன் “நோ” என்றான். தன்  அம்மா சாந்தியைப் பார்த்தான். அவளோ புவனாவைப் பார்த்தாள். புவனா, “ராகுல், ப்ளீஸ் டேக் இட்” என்றாள் முறுவலுடன்.

அதன்பிறகே கிருஷ்ணாவிடம் இருந்து லட்டைப் பெற்றுக்கொண்டான் ராகுல். ஒரு நிமிடம் முன்பு அழுத பையனா இவன் என்றால் யாராலும் நம்ப முடியாத அளவுக்கு ஆனந்தப் பரவசத்தில் குதிக்க ஆரம்பித்தான். அவ்வளவுதான் இரண்டு குழந்தைகளும் நெருங்கிய நண்பர்களாகி விட்டனர்.

சற்று நேரத்தில் மஹாலக்ஷ்மி ஆலயத்தில் இருந்து கிளம்பத் தயாராயினர் இரண்டு குடும்பங்களும்.

ஆலயத்தின் வெளிப்புறத்தில் நின்று அருள் புரியும் ஆஞ்சநேயரைப் பார்த்து வணங்கிவிட்டுப் போகலாம் என்று அனைவரும் ஆஞ்சநேயரின் பாதங்களுக்கு அருகில் வந்து நின்றனர். “‘வடைமாலை சேவை’ இருக்கிறது, செய்கிறீர்களா?”  என்றார் அங்கிருந்த ஒரு பெரியவர். கையில் ரசீது புத்தகத்துடன் அருகில் ஒரு சிறு குடிலில் அமர்ந்திருந்தார்.

அதாவது 108 வடைகளால் கோர்க்கப்பட்ட மாலை தயாராக உள்ளது, அதற்குரிய கட்டணம் செலுத்தினால்  ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்படும் என்று அர்த்தம். ராகுலின் தந்தை வேகமாகத் தன் பர்ஸிலிருந்து டாலர்களை எடுத்தார்.

பொதுவாக, ஆஞ்சநேயருக்குச் சார்த்தப்படும் மாலையிலுள்ள வடைகள், தமிழ்நாட்டில் என்றால் தட்டையான மிளகுவடைகளாக இருக்கும். சென்னையில் ஆழ்வார்ப்பேட்டையில் ‘லேண்ட் டெவெலப்மெண்ட் பேங்க்’ ஆஞ்சநேயர் கோவிலில் இந்த மிளகுவடைகள் உலகப் பிரசித்தம். பத்து நாள் வெளியில் வைத்தாலும் கெடாது. ஆனால், பெங்களூரில் இட்லியோடு சாப்பிடும் மெதுவடையைத்தான் மாலையாக்குகிறார்கள். சார்த்தப்பட்ட மாலையைப்  பிரித்து பக்தர்களுக்கு விநியோகம் செய்வதற்குள் கிழிந்த துணி போலாகிவிடும். பெரும்பாலும் இவை உண்ணப்படாமலே வீணாவதுண்டு. இந்த டெலாவர் ஆஞ்சநேயரின் பாக்கியம், அவருக்கும் அதே மெதுவடையால் ஆன மாலைதான் அன்று சார்த்தினார்கள்.    

அர்ச்சனை முடிந்து பிரசாதமாகச் சில வடைகளைக் கொடுத்தார் அர்ச்சகர். அவற்றில் இருந்து ஒரு வடையை ஆசையோடு எடுத்துக்கொண்டான் ராகுல்.

அவனே சாப்பிடுவான் என்று எதிர்பார்த்தால், ஓடி வந்து கிருஷ்ணாவிடம் அதைக் கொடுத்தான். “இந்தா, சாப்டு!” என்று அன்போடு கூறினான். வடைக்கும் கிருஷ்ணாவின் வாய்க்கும் மிகக் குறைந்த இடைவெளிதான் இருந்தது. 

ஆனால் கிருஷ்ணா அதை ஏற்கவில்லை. புன்சிரிப்புடன் “நோ நோ நோ நோ“ என்றான். ராகுல் மீண்டும் வற்புறுத்தினான். சாந்தியும், “ப்ளீஸ் டேக் இட் கிருஷ்ணா!” என்று அருகில் வந்து அவனிடம் குழைந்தாள். ஆனால் கிருஷ்ணா மசியவில்லை. “அவனுக்கு வடை அதிகம் பிடிக்காது” என்று புன்முறுவலுடன் கூறினாள் புவனா.

அது மட்டுமல்ல, ராகுல் நீட்டிய வடையைத் திடீரென்று பிடுங்கிய கிருஷ்ணா, அதை ராகுலின் வாயில் அடைப்பதுபோல் கொண்டுபோனான். “ஓப்பன், ஓப்பன்” என்று அவனை வாய் திறக்கச் சொல்லி, வடையை உள்ளே நுழைத்த பிறகே அமைதியடைந்தான். 

பார்த்துக்கொண்டிருந்த இரு குடும்பங்களே யன்றி, அர்ச்சகர்களும் இதைப்  பார்த்து வியப்போடு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்தச் சிறப்பான தருணத்தைத் தன் கேமிராவில் பிடித்துக்கொண்டான் வெங்கிட். எந்தத் தூண்டுதலும் இல்லாமல் ராகுலும் கிருஷ்ணாவும் தாங்களாகவே ஒருவரை யொருவர் அணைத்துக்கொண்டு படத்திற்கு போஸ் கொடுத்தது, நிலைமையின் இனிமையை அதிகப்படுத்தியது.

அப்போது இன்னொரு அதிசயம் நிகழ்ந்தது. புவனாவின் கார் நம்பரைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்த சாந்தி, “நீங்க அபிதா பர்த்டேக்கு வந்திருந்தீர்களா?” என்று தயங்கித் தயங்கி கேட்டாள்.

ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்த புவனா,”ஆமாம்! இப்போது நினைவுக்கு வருகிறது” என்றாள். அது மூன்று வருடங்களுக்கு முன்பு! அப்போது கிருஷ்ணா உருவாகக் கூட இல்லை. “என் நாத்தனார் வேலை செய்யும் பேங்கில் நீங்களும் வேலை செய்கிறீர்கள் அல்லவா? அவளுடைய கொலீகின் பெண்தான் அபிதா!” என்றாள்.

“உங்களுக்கு நல்ல மெமரி பவர்! இப்போது நான் அங்கு இல்லை. டெலாவரிலேயே சொந்தமாகத் தொழில் செய்கிறேன்” என்றாள் சாந்தி.

அவ்வளவே, தங்கள் குழந்தைகளைத் தொடர்ந்து தாங்களும் நெருங்கி வந்து விட்டதை உணர்ந்தார்கள் அவர்கள்.

சாந்தியின் வீடு, ஹாக்கஸின் நகரில்தான் இருந்தது. “எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டுப் போகவேண்டும்” என்று கேட்டுக்கொண்டாள் சாந்தி. “அடுத்த தெருவிலேயே ஒரு பிள்ளையார் கோவில் இருக்கிறது. பிள்ளையார்ப்பட்டியில் இருக்கும் அதே கற்பக விநாயகர் இங்கும் இருக்கிறார்! அவரையும்  பார்த்துவிட்டுப் போகலாம்!” என்றாள். ஆனால் புவனாவுக்கு அன்று இரவுக்குள் முடிக்கவேண்டிய எடிட்டிங் வேலை பாக்கி இருந்தது. முகவரியை வாங்கிக்கொண்டு “இன்னொரு ஞாயிற்றுக்கிழமையில் வருகிறோம்” என்று உறுதியளித்தாள். “உங்களுக்கும் நல்ல ஞாபக சக்திதான்! பாராட்டுக்கள்” என்றாள்.

“ஒரு நாள் முன்பு சொன்னால் போதும். நீங்கள் வரும்போது கிருஷ்ணாவுக்காக விசேஷமாக லட்டு செய்து வைக்கிறேன்” என்று சிரித்தாள் சாந்தி. “கிருஷ்ணா, உனக்கு லட்டு வேணுமா? டு யூ லைக் லட்டு?” என்று கேட்டாள்.

“யா, யா, யா, யா” என்று நான்குமுறை மகிழ்ச்சியோடு சொன்னான் கிருஷ்ணா.

“குட். உனக்கு எத்தனை லட்டு வேணும்? ஒன், டூ ஆர் த்ரீ?” என்றாள் சாந்தி.

“டூ, டூ, டூ, டூ“ என்றான் கிருஷ்ணா உற்சாகமாக. 

அவனை ஓடிவந்து அணைத்துக்கொண்டு ராகுல், “எனக்கு த்ரீ, த்ரீ, த்ரீ” என்றான். கலகலப்பாக விடைபெற்றுக்கொண்டார்கள் இரு குடும்பத்தினரும். 

லட்டுக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

 - இராய செல்லப்பா

****

(இருவாட்சி- பொங்கல் சிறப்பு மலர்-2023 இல் வெளிவந்தது).

 

10 கருத்துகள்:

  1. சுவாரஸ்யம்.  (எப்படியும் கமெண்ட் ஸ்பாமுக்குப் போய்விடும்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போகாது! Comments are to be approved என்று செட்டிங் கில் வருகிறது. Approve செய்ததும் திரையில் தோன்றும்!

      நீக்கு
    2. பட்டுப்பாவாடை சிறுகதைக்கான என் கமெண்ட் இன்று வரை வெளிவரவில்லையே...  ஸ்பாமில் இருக்கலாம்.

      நீக்கு
    3. உங்களுக்குச் சொந்தமான எதையும் நான் எடுத்துக்கொள்வேனா? உங்கள் கமெண்ட் அங்கேயே பத்திரமாக இருக்கிறது!

      நீக்கு
  2. அமெரிக்காவில் இந்து கோயில்கள் நிறைய உண்டாகி விட்டன.சின்ன ஊர்களிலும் கூட ஒன்றை காணலாம். அதே போன்று தெலுகு மக்களும். கோயில்களை நிர்வகிப்பவர் அவர்களே.

    லட்டு டிப்ளமசி ஓர் கதையாக இல்லாமல் பயண குறிப்பாகவும் இருந்தது. சின்ன சின்ன விஷயங்களைக் கூட நினைவில் வைத்திருந்து கதையில்/கட்டுரையில் புகுத்தியது சிறப்பு. உதாரணம் NH 40.

    புளியோதரை, பொங்கல் பிரசாதங்கள் கிடைக்க வில்லையா?
    Jayakumar

    பதிலளிநீக்கு
  3. கண்ணா லட்டு திங்க ஆசையா!!! என்ற ஒரு படத்தின் தலைப்பு டக்கென்று நினைவுக்கு வந்தது!

    வழக்கம் போல் கதையில் நிறைய தகவல்கள். கொஞ்சம் அனுபவங்களும் கலந்து கட்டியோ!

    கீதா

    பதிலளிநீக்கு