செவ்வாய், செப்டம்பர் 06, 2022

நிலமே நீ வாழ்க!

 நிலமே நீ வாழ்க!

(அமெரிக்காவில் 148 வது நாள்)

புதுடில்லிக்கு மாற்றலாகி, கரோல்பாக் ஆரிய ஸமாஜ் ரோட்டில் இருந்த மண்டல அலுவகத்தில் நான் பணியில் சேர்ந்த புதிதில் நடந்த கதை இது. 


நேருபிளேஸ் என்ற வர்த்தக மையம் அப்போதுதான் உருக்கொள்ள ஆரம்பித்திருந்தது. சிறுசிறு கடைகள் எல்லாம் திடீரென்று இடிக்கப்பட்டு அவற்றின் தொகுதியாகப் பெரிய வர்த்தக வளாகங்கள், ஏழெட்டு மாடிகளைக் கொண்டனவாய் எழும்பத் தொடங்கின. நொய்டா (New Okhla Industrial Development Authority) என்ற பேரில் ஓக்லாவில் தொழில் வளாகம் தோன்றியதும் அக்காலமே. மண்ணோடிய குறுகலான சாலைகளுக்குப் பதில், நான்கு வழிச் சாலைகளும் அவற்றின் தொடர்ச்சியாகப் பல்வேறு பாலங்களும் அசுரகதியில் உண்டாக்கப்பட்டன. எதற்கும் லாயக்கில்லாத நிலங்களும் லட்சக்கணக்கில் விலைபேசப்பட்டு, நகரின் முக்கிய வர்த்தகக் குடும்பங்களால்  போட்டிபோட்டுக்கொண்டு வாங்கப்பட்டன. 


அந்தப் பகுதியில் எங்கள் வங்கியின் கிளையொன்று திறக்கப்பட்டு,  திறந்த வேகத்திலேயே பலகோடி ரூபாய் வர்த்தகத்தைப் பெற்றுவிட்டது. (அப்போதெல்லாம் தென்னிந்திய வங்கி என்றால் டில்லியில் மிகவும் நல்ல பெயர்). தானாக வரும் டெபாசிட் (‘வாக்கிங் டெபாசிட்’) கொட்டோ  கொட்டென்று கொட்டியது। லாக்கர்கள் அனைத்தும் இரண்டே நாளில் நிரம்பிவிட்டன. கிளை மேலாளர்களும் வங்கியின் வளர்ச்சிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களாக இருந்ததால், வாடிக்கையாளர் சேவைக்கு இலக்கணமாகத திகழ்ந்தது அந்த வங்கி. எனவே சேவிங்க்ஸ் கௌண்டர் எப்போதும் பிஸியாக இருந்தது.    ஆனால் தில்லியைப் போன்ற தொழில்வளம் மிக்க நகரத்தில் வங்கிக் கிளையை ஆரம்பித்த நோக்கமே, தொழில்துறையினருக்கு அதிகக் கடன்களை வழங்கவேண்டும் என்பதுதான். அவர்களிடமிருந்து பெறும் வட்டியில் தான் வங்கியின் செல்வ வளமே அடங்கியிருக்கிறது. ஆகவே, மேலாளர்கள்  அருகாமையில் எழுந்திருந்த வணிக வளாகத்தை ஒரு கோவிலாகக் கருதி ஒரு நாளைக்குப் பலமுறை சுற்றிவருவார்கள். அங்கிருந்த ஒவ்வொரு கடையும் ஒரு கரண்ட் அக்கவுண்டு தொடங்கி,  கூடவே ஒரு வர்த்தகக் கடனும் பெறும்வரையில் ஓயமாட்டார்கள். அப்படித்தான் அந்த 70 வயது வர்த்தகரை சந்தித்தார் விவேக், வங்கியின் கிளைமேலாளர். 

அந்த வர்த்தகரின் பெயர் மறந்துவிட்டது. (ஏதோ ஒரு அரோரா அல்லது அகர்வால்). அகர்வால் என்றே வைத்துக்கொள்வோம். அவர் தன் தொழிலில் பழம் தின்று கொட்டைபோட்டு, பின்னர்  அவற்றிலிருந்து மரங்கள் முளைத்து அவையும் பழமாகி நிற்பதைக் கண்டு அனுபவித்தவர். நான்கு தலைமுறைகளாக அவர்கள் அரிசி ஏற்றுமதித் தொழிலில் மட்டுமே   இருந்தார்கள். வேறு எத்தனையோ கவர்ச்சிகரமான தொழில்கள் அடுத்தடுத்த தலைமுறையில் காணப்பட்டாலும், தங்கள் ஆதாரமான அரிசி ஏற்றுமதியை மாற்றிக்கொள்ள  அவர்கள் மறுத்துவிட்டார்கள். ஆனால் அதனால் எந்த நஷ்டமும் இல்லை. ஒவ்வொரு தலைமுறையிலும் திருமகளின் அருள் வேண்டியமட்டும் கிடைத்தது. பஞ்சாபில் ஒரு சிற்றூரில் இருந்தபடியே தொழில் நடத்தியவர்கள், மூன்றாவது தலைமுறையில் டில்லியில் குடியேறினார்கள்.  


அந்த வரிசையில் நமது அகர்வால் (70) கோதுமை வண்ணத்தில் ஆஜானுபாகுவான மேனியும், சுருக்கம் விழாத முகமும் ஓரளவே நரைத்த தலைமுடியுமாக எப்போதும் புன்சிரிப்பைத் தாங்கிய வெற்றிகரமான வர்த்தகராக இருந்தார். அந்தச் சிரிப்புக்குப் பின்னால் விவேகமும் நல்லெண்ணமும் பின்னிப் பிணைந்திருந்தன. யாராலும் அவரை ஏமாற்ற முடியாது. அவரும் யாரையும் ஏமாற்றியதில்லை.       


‘ராஜேஷ் அகர்வால் எக்ஸ்போர்ட்ஸ்’ என்ற பெயரில் முதல் கரண்ட் அக்கவுண்ட்டைத் தொடங்கினார் அவர். ராஜேஷ் அவருடைய கடைசி மகன். தனது நான்கு மகன்கள் பெயரிலும் ஆளுக்கொரு பிஸினஸ் தொடங்கப்போவதாகச் சொன்னவர், முதலில் இளைய மகன் பெயரில் தொடங்கியதற்குக் காரணம் என்ன என்று கேட்டேன்.  நாம் தோட்டம் போடும்போது, சிறு குழந்தையின் கையில் செடியைக் கொடுத்து நடச் சொல்வோமே அதே காரணம்தான்! இளையவர்கள் பெயரில் தொடங்கினால் வேகமாக வளருமாம். 


அடுத்த சில நாட்களில் மற்ற மூன்று பிள்ளைகளின் பெயரிலும் கணக்குகள் தொடங்கப்பட்டன. பெரியவர் அகர்வாலும் தனது கணக்கை ‘ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ்’-லிருந்து எங்கள் வங்கிக்கு மாற்றிக்கொடுத்தார். 


ஆனால் வங்கியில் கடன் பெறுவதைப் பற்றி அவர் வாயே திறக்கவில்லை. நல்ல வர்த்தகர் ஒரு வங்கியில் கடன்பெற்று அவருடைய செக்குகள் வர்த்தகர்களிடையே  புழங்க ஆரம்பித்தால்தான் மற்ற வர்த்தகர்களும் அந்த வங்கிக்கு வரத்  தொடங்குவார்கள். எனவே அவரை எப்படியாவது கடன் வாங்க வைத்துவிட வேண்டுமென்று  கிளை மேலாளர் விவேக் எப்போதும் கடன் விண்ணப்பத்தைக் கையில் ஏந்திக்கொண்டு அவரை வலம் வந்து கொண்டிருந்தார்.  


சில மாதங்கள் ஆயின. ஆனால் கடன் விண்ணப்பம் மட்டும் வருவதாயில்லை. 


பங்குதாரர்களின் சொத்து விவரங்கள், ஆடிட் செய்யப்பட்ட ‘பேலன்ஸ் ஷீட்’,  இலாப நஷ்டக்  கணக்கு, வருமானவரிப் படிவங்கள் போன்ற முக்கியத் தகவல்களைக் கொடுத்தால் எந்த வங்கியும் கடன் கொடுப்பது எளிது. ஆனால் டில்லியைப் பொறுத்தவரை, (அநேகமாக வட இந்தியா முழுவதுமே என்றும் கூறலாம்), வர்த்தகர்கள் இந்த விவரங்களை முதல் எடுப்பில்  கொடுக்க மாட்டார்கள்.  வங்கிக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக, தங்கள் கரண்ட் அக்கவுண்ட்டில் தொடர்ந்து சில மாதங்கள் வரவு-செலவு நடத்துவார்கள். அனுபவப்பட்ட மேலாளர்கள் அதைப் பார்த்தாலே வர்த்தகத்தின் தன்மையைப் புரிந்துகொண்டுவிடுவார்கள். வர்த்தகரின் எதிர்பாராத தேவைகளுக்கு மேலிடத்தின் அனுமதி பெறாமலேயே இந்த வரவு செலவின் அடிப்படையில் ‘தற்காலிக ஓவர்டிராப்ட்’ கொடுப்பதுண்டு. அவ்வாறு கொடுத்த கடனை ஒரு வாரத்திற்குள்ளோ, அல்லது, வர்த்தகத்தின் தன்மையைப் பொறுத்து  ஒரு மாதத்திற்குள்ளோ  மேலாளர் வசூல் செய்துவிடவேண்டும். அந்த விவரம் மேலதிகாரிக்கு முறைப்படித் தெரிவிக்கப்பட வேண்டும். 


இவ்வாறு தற்காலிக ஓவர்டிராப்ட் பெறுவதும் அதைக் குறிப்பிட்ட தவணைக்குள் திரும்பிச் செலுத்துவதும்தான் நல்ல கடன்தாரருக்கான  அறிகுறிகள். இவ்வாறு ஒருசில முறைகள் அனுபவப்பட்டபிறகே கிளைமேலாளர்களுக்கு அந்த வர்த்தகர்மீது பெரிய தொகையை நீண்டகாலக் கடனாகக் கொடுப்பதற்கு தைரியம் பிறக்கும்.  


பெரியவர் அகர்வாலுக்கு எங்கள் வங்கியின்மீது மிகுந்த மரியாதை உண்டு. பஞ்சாபில் ஒரு முக்கிய நகரத்தில் அவருடைய சகோதரர்  எங்கள் வங்கியில் நல்ல தொடர்பு வைத்திருந்தாராம். ஆனால் இந்த நேரு பிளேஸ் வங்கியின் கிளைமேலாளர் விவேக் அதே போன்ற ஒத்துழைப்பைத் தருவாரா என்று அவருக்கு இன்னும் நம்பிக்கை ஏற்படவில்லை போலும். 


அதற்கும் ஒரு சரியான சந்தர்ப்பம் அவருக்குக்  கிடைத்தது. 


அன்றைய க்ளியரிங்கில் பெரியவரின் கணக்கில் அவர் கொடுத்த நான்கைந்து செக்குகள் வந்திருந்தன. மொத்தம் பத்து லட்ச ரூபாய் தேவை. அவர் கணக்கில் இருந்ததோ ஒரு லட்சம்தான்! 


கிளைமேலாளர் விவேக் ‘குதிரைஉணர்வு’ (‘ஹார்ஸ் ஸென்ஸ்’)  கொண்டவர். யாருக்குத் தற்காலிக ஓவர்டிராப்ட் தரலாம், யாருக்குத் தரக்கூடாது என்று அவருக்கு நன்றாகத் தெரியும். எல்லாம் அனுபவ அறிவுதான்.  மங்களூர்க்காரர் என்பதால் காலையில் வெறும் வயிற்றில் அவர் வழக்கமாகக் குடித்த   கொள்ளு ரசமும் ஒரு காரணமாக இருக்கலாம். தன் உதவியாளரை அழைத்து “எல்லா செக்கையும் பாஸ் செய்துவிடுங்கள். தற்காலிக ஓவர்டிராப்ட் ரிப்போர்ட்டை மண்டல அலுவலகத்துக்கு அனுப்பிவிடுங்கள்” என்று உத்தரவிட்டார்.    


பிறகு பெரியவர் அகர்வாலுக்கு போன் செய்தார். “உங்கள் செக்குகள் வந்துள்ளன. பாஸ் செய்துவிட்டேன். ஒரு வாரத்துக்குள் பணம் கட்டிவிடுவார்கள் அல்லவா?” என்று கேட்டார். “இன்னும் நீங்கள் கடன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்பவில்லையே!” என்றும் நினைவுபடுத்தினார்.


அகர்வால் அதிர்ச்சி அடைந்தவர்போல் பேசினார். “இல்லையே, இந்த வாரம் என்னுடைய செக் எதுவும் வராதே!” என்றவர், “கொஞ்சம் பொறுங்கள், என் கணக்கப்பிள்ளையைக் கேட்டுவிட்டு லைனில் வருகிறேன். எதற்கும் செக் நம்பர்களைச் சொல்லுங்கள்” என்று குறித்துக்கொண்டார். 


சற்று நேரம்  கழித்து அகர்வால் பேசியபோது அவரது குரலில் காரம் அதிகமாக இருந்தது.  “இந்த செக்குகளை அடுத்த மாதம்தான் போடச் சொல்லி இருந்தேன். அதற்குள் அந்த ஆள் போட்டிருக்கிறான்! எல்லாவற்றையும் திருப்பி அனுப்புங்கள்” என்று கூறிவிட்டுப் போனை அணைத்துவிட்டார். 


(இந்த விஷயம் கிளைமேலாளரைத் தவிர்த்து வேறு யாருக்கும் தெரியாது).


விவேக்கிற்கு  ஒரு நிமிடம் மூச்சு ஒடுங்கிவிட்டது. ஏனென்றால், செக்குகளைத் திருப்பி அனுப்புவதற்கான நேரம் கடந்துவிட்டது. அத்துடன், பணம் இல்லாமல் செக்குகளைத் திருப்பி அனுப்பினால் அது சந்தையில் வங்கிக்கிளையின் மீதும் அவமதிப்பை உண்டாக்கும். எனவே அகர்வாலை நேரடியாகச் சென்று சந்திக்கக் கிளம்பினார். 


ஆனால் அகர்வால் ஒருவாரம் வரமாட்டார், பஞ்சாப்  சென்றுவிட்டார் என்று தகவல் கிடைத்தது. பஞ்சாபில் அவருடன் பேசுவதற்கு போன் நம்பர் தெரியவில்லை. அவருடைய மகன்களையும் சந்திக்க முடியவில்லை. விவேக்  மிகவும் சோர்ந்துபோய்விட்டார். பத்து லட்ச ரூபாய் அல்லவா ஆபத்தில் இருக்கிறது? 


குதிரைஉணர்வு என்று சொன்னேன் அல்லவா? அது இப்போது அவரை உந்தித் தள்ளியது. அகர்வால் யார் யாருக்குச் செக் கொடுத்திருந்தார் என்று பார்த்தார். வெவ்வேறு பெயர்களில் இருந்தாலும், அவர்கள் அனைவரும் ஒரே நிறுவனத்தின் பங்குதாரர்கள் என்று தெரிந்தது. அவர்களுடைய வங்கியில் சென்று மேற்கொண்டு விவரம் சேகரித்தார்.  


டில்லிக்கு மிக அருகில் ‘பிளாட்’ போட்டு விற்றுக்கொண்டிருந்த  புதிதாக நிலம் விற்கும் ஒரு குழுமம் அது. அதில் நமது அகர்வால் ஐந்து பிளாட் முன்பதிவு செய்திருக்கிறார். அதற்கான தொகையைத்தான் செக் மூலம் கொடுத்திருக்கிறார். உடனே அந்த பில்டரை நேரில் சந்தித்தார் விவேக். 


“எனக்கு இரண்டு பிளாட் வேண்டும். நிலத்தைப் பார்வை யிடலாமா?” என்றதுதான் தாமதம், பில்டர் சௌதரி தானே ஓடிவந்து இவரை அழைத்துச்சென்று காட்டினார். நல்ல இடம், ஒரு சில ஆண்டுகளிலேயே விலை மூன்று மடங்காகிவிடும் என்று விவேக் புரிந்துகொண்டார். பிறகு தன்னை முறைப்படி அறிமுகப்படுத்திக்கொண்டார். 


வங்கியின் பெயரைச் சொன்னதும் சௌதரி உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார். “ராஜேஷ் அகர்வால் உங்கள் வங்கியின் கஸ்டமர் அல்லவா? அவர் என்னிடம் ஐந்து பிளாட் வாங்கியிருக்கிறார்! மேலும் ஐந்து வேண்டுமென்று கேட்டார். பணம் கொண்டுவருவதற்கு பஞ்சாப் போயிருக்கிறார்” என்றார். 


விவேக்கின் குதிரைஉணர்வு இப்போது வெளிக்கிளம்பிப் பிரகாசித்தது. சௌதரியுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார். அதாவது, அவரிடம் பிளாட் வாங்க வருபவர்களை அவர் விவேக்கிடம் அனுப்பவேண்டும். அவர்கள் எல்லாருக்கும்  பிளாட் விலையில் 50 சதம் தொகை கடனாக வழங்கப்படும். 


அடுத்த சில நாட்களில் நாற்பது பிளாட்கள் முன்பதிவு செய்யப்பட்டன. அவ்வளவு பேர்களுக்கும் விவேக் சொன்னபடி கடன் கொடுத்தார். அந்த நாட்களில், காலிமனைக்குக் கடன்கொடுக்கும் திட்டம் வங்கிகளில் கிடையாது. ஆகவே இவர்கள் அனைவரையும் கரண்ட் அக்கவுண்ட் ஆரம்பிக்கச் சொல்லி, ஒவ்வொருவருக்கும்  தற்காலிக ஓவர்டிராப்ட் கொடுத்தார். நிலம் பதிவுசெய்யப்பட்டதும், பத்திரங்கள் வங்கியின் வசம் ஒப்படைக்கப்படும் என்று பில்டரிடம் எழுதிவாங்கிக்கொண்டார். கடனுக்கான வங்கியின் ஆவணங்களையும் ஒவ்வொருவரும் கையெழுத்திட்டு வாங்கிவைத்தார். 


இந்த விஷயத்தை முறைப்படி மண்டல அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தினார். 


சூட்டோடு சூடாக, ராஜேஷ் அகர்வால் வாங்க ஒப்பந்தம் செய்துகொண்ட பிளாட்களுக்கான பத்திரங்கள் மீதும் வங்கிக்கு ‘லீன்’ இருப்பதாகவும், அந்தப் பத்திரங்களையும் வங்கியிடமே ஒப்படிப்பதாகவும் பில்டரிடம் எழுதிவாங்கினார் விவேக். பிறகு தான் அவருக்கு நிம்மதியான உறக்கம் வந்தது. 


அகர்வால் தானாகப் போன் செய்யட்டும் என்று விட்டுப் பிடித்தார் விவேக். 


மேலும் ஒரு வாரம் கழித்து அகர்வால் போன் செய்தார். “விவேக், அந்தச் செக்குகளைத் திருப்பி அனுப்பிவிட்டீர்களா?” என்றார். 


“ஆமாம் அகர்வால் ஜி! நீங்கள் சொன்னபிறகு செய்யாமல் இருப்பேனா?” என்று பதிலளித்துவிட்டு அவரது எதிர்வினைக்காகக் காத்திருந்தார். 


“அப்படியா?” என்றார் அகர்வால் நம்பமுடியாதவராக. 


“ஆமாம், வேறு ஏதாவது பேச வேண்டுமா? கவுண்ட்டரில் கூட்டமாக இருக்கிறது” என்று போனை வைத்துவிட்டார் விவேக். 


அவர் எதிர்பார்த்தபடியே அகர்வால் அடுத்த அரைமணி நேரத்தில் வந்துவிட்டார். 


“மிஸ்டர் விவேக், அந்த செக்குகளை நிஜமாகவே திருப்பி அனுப்பிவிட்டீர்களா?” என்று அதிர்ச்சியோடு கேட்டார். 


அவரை அலட்சியமாகப் பார்த்தபடி, “ஆமாம், அதில் என்ன சந்தேகம்?” என்றார் விவேக். 


“தயவுசெய்து அவற்றை அதே தேதியில் பாஸ் ஆனதாகச் செய்யமுடியுமா? இல்லையென்றால் எனக்கு மிகுந்த நஷ்டம் ஏற்படும்” என்று வேண்டினார் அகர்வால். அவர் குரலில் மிகுந்த பணிவு இருந்தது. 


உள்ளுக்குள் சிரித்துக்கொண்ட விவேக், இருவருக்கும் பாதாம்பால் வாங்கிவரச் சொல்லி பியூனை அனுப்பினார். பிறகு வேண்டுமென்றே அகர்வாலைப் புறக்கணிப்பதுபோல் எழுந்து கவுண்ட்டருக்குப் போய் மற்ற வாடிக்கையாளர்களைக்   கவனிக்கத் தொடங்கினார்.


பாதாம்பால் வந்தது.  ஒரு பாலை அகர்வாலுக்குக் கொடுக்கும்படி கை காட்டிய விவேக், தான் மட்டும் கவுண்ட்டரிலேயே நின்றுகொண்டு பாலருந்தத் தொடங்கினார். அதுவும் மெதுவாக, மிக மெதுவாக. 


கிட்டத்தட்ட அரைமணி நேரம் காத்திருந்த அகர்வால் பொறுமை யிழந்தவராக எழுந்து விவேக்கை நோக்கி நடந்தார். 


“மிஸ்டர் விவேக், நீங்கள் ஏதாவது செய்து அந்த செக்குகளை பாஸ் செய்துகொடுக்க வேண்டும். இதோ பத்து லட்ச ரூபாய் என் கணக்கில் செலுத்துகிறேன்” என்றார். செலுத்தினார். 


இப்போது பந்து தன் வசம் வந்துவிட்ட திருப்தியோடு, விவேக் அவரை எதிர்கொண்டார். 


“அகர்வால் ஜி, நீங்கள் பிஸினஸ்மேன். நாங்கள் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்கள். உங்கள் பெயரையும் உங்கள் தொழிலின் கௌரவத்தையும் நம்பி நாங்கள்  தற்காலிக ஓவர்டிராப்ட் கொடுக்கிறோம். ஆனால், நீங்களோ, பணமே இல்லாமல் செக்கைக் கொடுத்துவிட்டு, எங்களை உங்கள் வீட்டு வேலைக்காரன் மாதிரி, செக்கைத் திருப்பி அனுப்பச்  சொன்னீர்கள். இன்றோ பாஸ் பண்ணவேண்டும் என்கிறீர்கள். இது சரியா என்று நீங்களே கூறுங்கள். அதன் பிறகு என்ன செய்யவேண்டுமோ நான் செய்கிறேன்” என்று போடுபோட்டார் விவேக். 


அகர்வால் நெருங்கிவந்து விவேக்கின் கைகளைப் பிடித்துக்கொண்டார். “விவேக் ஜி, என்னை மன்னித்துவிடுங்கள். என் மூத்த மகன், என்னிடம் கூறாமல் இந்த செக்குகளைக் கொடுத்திருக்கிறான். அதனால் எனக்குத் தெரியாமல் போய்விட்டது. என் கணக்குப் பிள்ளைக்கும் விஷயம்  தெரியவில்லை” என்றவர், “நல்ல இடத்தில் பிளாட் விலைக்கு வருகிறது என்றவுடன், கார்னர் பிளாட்களாகப் பார்த்து புக் செய்திருக்கிறான். அப்போதே செக் கொடுத்தால் ஒரு விலையும், பத்துநாள் கழிந்தால் 25 சதம் உயர்ந்துவிடும் என்றும் பில்டர் சொன்னதால் அப்படிச் செய்திருக்கிறான். மறுநாளே அவன் மலேசியாவுக்கு வேறு வேலையாகச் சென்றுவிட்டான். அதனால் என்னிடம் அவன் விவரம் கூறவில்லை” என்று சொன்னார். 


“இப்போது பில்டர் அதன் விலையை 30 சதமாக உயர்த்திவிட்டார். நல்ல டிமாண்ட் ஏற்பட்டுவிட்டது. ஆகவே எனக்கு தயவு செய்யுங்கள்” என்று கெஞ்சினார் அகர்வால். 


விவேக் சிரித்துக்கொண்டே, பில்டருக்கு போன் செய்து அவரை நேரில் வரவழைத்தார்.


பில்டர் நடந்த விவரங்களைச் சொல்லச் சொல்ல, விவேக் மீது அகர்வாலுக்கிருந்த மரியாதை ஆயிரம் மடங்கு அதிகரித்தது. தன்னுடைய பிளாட்கள், தான் ஒப்பந்தம் செய்திருந்த விலையிலேயே கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டவுடன், அதையும் மீறி, இந்த வங்கியில் வடிக்கையாளர் மீது மேலாளர்கள் காட்டும் கரிசனத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்தது. 


உடனே வேறு வங்கியில் இருந்த தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய கணக்குகளையும் இந்த வங்கிக்கு மாற்றிக்கொடுத்தார். அவருக்குத் தெரிந்த வர்த்தகர்கள் பலரையும் அப்படியே செய்யவைத்தார். அதனால் வங்கியின் மொத்த பிஸினஸ் இரண்டே வருடத்தில் நூறு கோடியாக உயர்ந்தது. அக்காலத்தில் இது ஒரு அபூர்வ சாதனையாகும்.   


எல்லாவற்றிற்கும் அடிப்படையான காரணம், நிலம்! அதாவது காலிமனை!  விவேக் பல ஆண்டுக்காலம் இதை மறக்கவில்லை. வர்த்தகர்களுக்கு எந்தக் கடன் கொடுத்தாலும், காலிமனை அல்லது கட்டி முடிக்கப்பட்ட வீடு ஒன்றாவது  நிச்சயமாக  ஈடு (‘கொலேட்டரல் செக்யூரிட்டி’)  வைக்கப்படவேண்டும் என்பதை உறுதியாகச் சொல்லிவிடுவார். அவர் ஓய்வு பெறும்வரையில் அவர் கொடுத்த கடன்கள் எதுவும் வாராக் கடனாக ஆகவில்லை என்பதில் ஆச்சரியமென்ன? 


 • இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து. 

     

10 கருத்துகள்:

 1. அப்பா...இப்போதான் உங்கள் அனுபவத்திற்கு வந்திருக்கிறீர்கள். மிக அருமை

  பதிலளிநீக்கு
 2. அப்போதைய வங்கி மேலாளர்கள் எப்படி இருந்தார்கள்.... பிறகு எப்படி கெட்டுப்போனார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. உங்கள் தொடர்பு முன்பே இருந்திருந்தால், தில்லியில் சில பல இடங்களை வாங்கிப்போட்டிருக்கலாம் ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சென்னையை விட இப்போது துபாயில் அடுக்குவீடுகள் விலை குறைவாகக் கிடைப்பதாகச் சொல்கிறார்களே!

   நீக்கு
  2. ஏந்தான் வெறுப்பேற்றுகிறீர்களோ..... என்னுடன் வேலை பார்த்தவர்கள் நிறையபேர், அப்போது துபாயில் இந்த மாதிரி வீடுகள் 200,000 திர்ஹாம் இருந்தபோதே புக் பண்ணினார்கள். அப்போதெல்லாம் இந்த கான்செப்ட் வெற்றி பெறும் என்று துபாயில் யாருக்கும் தெரியாது. ஓரு வருடத்திலேயே அந்த வீடுகள் பல லட்சம் விலை அதிகமாகிவிட்டது. பஹ்ரைனிலும் 40,000 தினாருக்கு அடுக்கு வீடுகள் வந்தன. அங்க வாங்கி என்னசெய்யறது என்று அந்த எண்ணமே வரலை.

   நீக்கு
 3. இப்படி எல்லாம் நல்ல மனிதர்கள் இருந்திருக்கிறார்கள்... ம்...

  பதிலளிநீக்கு
 4. வியப்பான, சுவாரஸ்யமான செய்தி.  அரசாங்க, மற்றும் வங்கிகளில் பணிபுரியும் எத்தனை பேர்களுக்கு இந்த மாதிரி ப்ரசன்ஸ் ஆஃப் மைண்ட், திறமை இருக்கும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாலில் ஒருவர் அப்படிப்பட்ட உள்ளுணர்வு கொண்டவர்களாகவே இருந்தார்கள். அதனால்தான் பொதுத்துறை வங்கிகள் உறுதியாக நிற்க முடிந்தன. இன்றோ கணினியை மட்டுமே பார்த்து கணக்கு திறப்பதால் வாடிக்கையாளரின் முக தரிசனம் இல்லாமல் போய்விட்டது. அதனால் இழந்தது ஏராளம்.

   நீக்கு
 5. நானும் இனிமேல் காலையில் வெறும் வயிற்றில் கொல்லு ரசம் குடிக்கலாம் என்று பார்க்கிறேன் .

  விவேக்கிற்கு எவ்வளவு மூளை. அசத்தல்.இந்த பிசினஸ் மேன்களை எல்லாம் நம்ப முடியாது. சமயத்தில் கழுத்த அறுத்து விடுவார்கள். பணம் ஒன்றே அவர்களின் குறி.

  பதிலளிநீக்கு
 6. திறமையான மேலாளர் கூடவே அனுபவ அறிவும், உள்ளுணர்வும் சேர்ந்து அவரைத் திறம்படச் செயல்படுத்த வைத்திருக்கின்றன. இப்படியான திறன்கள் அமையப்பெறுவது அபூர்வம்

  துளசிதரன்

  பதிலளிநீக்கு