சுப்ரமணிய பாரதியும் சுத்தானந்த பாரதியும்
சுத்தானந்த பாரதியாரின்
வாழ்க்கை வரலாற்றிலிருந்து ஒரு பகுதி…..
29. கண்டேன் கவிக்குயிலை !
பாரதியாரை நான் சிறுவயதில் மதுரையில் பார்த்தேன். அப்போது அவர் வாட்டசாட்டமாகக் களை நிரம்பியிருந்தார், புதுச்சேரியில் பார்த்தபோது மெலிந்திருந்தார். நெற்றி நாமமும், வீர விழிகளும், பாவறா வாயும், தைரிய மீசை தாடியும் பாரதியை விளக்கின. இப்போது எவ்வளவு வேற்றுமை! ஆள் இளைத்திருந்தார். ஆனால் விழியில் அதே கனல் ; வெற்றிலைக்காவியேறிய உதட்டில் அதே முத்துநகையைக் கண்டேன். மீசை "ஜயமுண்டு பயமில்லை" என்று பேசியது. தாடியில்லை.
நான் அவர்கள் வாயை அடக்கினேன். "ஐயா தமிழ் நாடு முழுவதும் கொண்டாடும் கவிக்குயிலை காகமும் கூகையும் வெறுத்தால் பரவாயில்லை. அவர் பெருமையை நான் அறிவேன்" என்றேன்.
ஒருவர் மட்டும் கடையம் சத்திரத்திண்ணையிலிருந்து வந்து, “அதோ அந்த ஆற்றங்கரைத் தோப்பில் தாண்டு கால் போடுகிறார்; போம்" என்றார். ஓடினேன்.
பசுஞ்சோலையில் தங்கமுலாம் பூசியது போல் மஞ்சள் வெய்யில் படர்ந்தது. ஆற்றின் சலசலப்பும் புட்களின் கலகலப்பும் இயற்கையழகில் உள்ளிசையுடன் கொஞ்சி விளையாடின. இந்தக் காட்சியில் கட்டற்ற கருடனைப்போல் என் உள்ளம் வட்டமிட்டு, பாரதியாரின் கவியுருவில் சொக்கிக் கொண்டிருந்தது. அந்தக் கறுப்புக் கோட்டையோ, கிரிகிக் கட்டையோ, குச்சி போன்ற கால்களையோ நான் பார்க்கவில்லை. அவர் உடலான கூண்டில் "ஓம்சக்தி ஓம் சக்தி ஓம்" என்று பாடித்துள்ளும் அமரக் குயிலையே கண்டேன்.
“நமஸ்காரம்" என்னுமுன் படபடவென்று பேசினார்..... பேசினோம்.
அவர்: ஓம் சக்தி ; வரவேண்டும் பாரதி. பாரதசக்தியைப் பார்த்தோம், நன்றாயிருக்கிறது, கம்பீரமாயிருக்கிறது. ஐயர் மெச்சினார் - நாமும் மெச்சுகிறோம்.
நான்: பராசக்தியின் அருளால் அந்தக் காவியம் நிறைவேற வேண்டும், சக்தி அருள்பெற்ற தங்கள் ஆசி எனக்குப் பூரணமாயிருக்க வேண்டும்.
அவர்: நிறைவேறும்; ஓம் சக்தி நிறைவேறும் ; ஆக்ஷேபனையில்லை ... எடுத்த காரியம் யாவினும் வெற்றி, எங்கும் வெற்றி" மகா காவியம் என்றார் ஐயர். அதைப் பூர்த்தி பண்ணும்; தமிழுக்கு அரிய கலைச் செல்வமாகும். அத்யாத்ம நிதியாகும்.
நான்: திருவருளால் காவியம் நிறைவேறும். ஆனால் இந்தக் காலம் யார் அதை மதிக்கப் போகிறார்கள். ஐயர் மதிப்பார், நல்ல ரசிகர். தாங்கள் மதித்தால் அது கவி வாணியே மதித்ததாகும். ஆனால் தமிழகம் அதை அறிய வெகுகாலம் ஆகும்.
அவர்: அறியும், அறியும் தமிழகம் எழுந்து விட்டது தலை நிமிர் தமிழா என்று பாடினீரே... தலை நிமிர் தமிழா. தலைநிமிர் தமிழா.... தமிழ் நாடு எழுந்து விட்டது. இதோ எழுந்து விட்டது.
நான்: இப்படி உட்காருவோம்.
அவர்: சரி. அஸ்தமனத்தைப் பார்த்து உட்காருவோம்.
நான்: உதயத்தைப் பார்த்தே அமர்வோம்.
அவர்: சபாஷ் பாண்டியா, நமக்கு அஸ்தமனம் இல்லை ; என்றும் உதயமே. நாம் அமரத்தன்மை பெற்றுவிட்டோம்..... சாகாவரம் பெற்று விட்டோம்.
நான்: ஆம், இந்த உடம்பில் துடிப்பது அமராத்மாதானே. தங்கள் வாக்கு அமரத்தன்மை பெற்றது. இன்று அதை உலகம் சரியாக அறியவில்லை . நாளை அறியும்;
அவர்: பாண்டியா, பாரதி, நாம் என்ன செய்யப் போகிறோம் தெரியுமா.... அமிர்தம் என்ற புதிய ஸஞ்சிகை நடத்தப் போகிறோம். ஆயிரம் பதினாயிரம் லக்ஷம் என்று சந்தா சேரும். நமது பாட்டு வசனம் எல்லாம் புதிய மோஸ்தரில் அழகாக வெளியிடுவோம். பணம் குவியும்.
நான்: அப்படி வெளிவந்தால் நாட்டுக்கே நல்லது. தங்கள் தைரியம் எனது சோர்வை விரட்டியடித்தது. நம்மை நாம் அறிந்தால் உலகம் நம்மை அறியும்.
அவர்: சபாஷ்! நல்ல ஞானம். சரி, நாடகங்கள் எப்படியிருக் கின்றன? நாடக சிருஷ்டி செய்யும். தமிழை அபிவிருத்தி செய்ய வேண்டும். நான் கவிதை, நீ நாடகம், அவன் கதை, இன்னொருவன் கட்டுரை என்று காரியம் நடத்தினால், இலக்கியம் நிறைவாக வளரும்.
நான்: இயற்கையிலும் அப்படியே, அததன் சக்தியைக் காட்டி அதது உலகை வளர்க்கிறது. சூரியன் ஒளி, மேகம் மழை, கடல் ஆவி, நதி நீர், மண் பயிர் தருவதுபோல், நமது புலமையைத் தந்து தேசந்தழைக்க வாழ வேண்டும். முரசுப் பாட்டை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வந்தால்
போதும். வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே!
பாரதியார் விரைப்பாக நின்று “வேதம் என்றும் வாழ்க வென்று கொட்டு முரசே" என்று தொடங்கி முரசுப் பாட்டை, ஆவேசமாகப் பாடினார். பிறகு "இங்கே தேவர் சங்கம் கூடும்" என்ற பாட்டை உரக்கப்பாடியதும் அப்படியே சோர்ந்து உட்கார்ந்து விட்டார்.
நான்: இவ்வளவு பலமாகப் பாடினால், உடம்பு தளரும்; மூச்சு வீணாகுமே.
அவர்: 'நாம் அமரத்தன்மை பெற்று விட்டோம் ஐயா" என்று நாலுதரம் சொன்னார்.
நிலாக்காலம். சந்திரன் எழுந்தது. நானும் குற்றாலம் நோக்கிச் செல்லக் காலெடுத்தேன். "சாப்பிட்டுப் போகலாமே" என்றார் பாரதியார். தங்கள் வாக்கமுதமே போதும் என்று புறப்படும் போது
ஒரு கவி எழுந்தது:
வீரங் கனலும் விழிக்கனலும், பிள்ளை போல்
ஈரந் திகழும் இளநெஞ்சும் - பாரதியின்
சொல்லும் பொருளும் சுதந்திரப் பேரிகையும்
வெல்லும் புவியை விரைந்து.
இத்துடன் நான் விடைபெற்றேன்.
பத்து நாட்களுக்குப் பிறகு நான் திருச்செந்தூர் சென்றேன். அங்கே நாழிக்கிணற்றில் குளித்தேன். அப்போது கடலோரத்தில் பாரதியார் அமர்ந்து சூரியோதயத்தைப் பார்த்தார். நான் அவரைக் கண்டேன். ஓம் சக்தி என்று அன்புடன் என்னை அழைத்துக் கொண்டு முருகன் சந்நிதிக்குச் சென்றார். ஆனால் முருகனைக் கும்பிடவில்லை. நிமிர்ந்து பார்த்துக்கொண்டே ஐந்து நிமிஷம் இருந்து, உடனே கடற்கரைக்கு ஓடினார். நானும் தொடர்ந்தேன். அங்கிருந்து கம்பீரமாக "முருகா, முருகா, முருகா" என்று பாடினார். கோயில் மணி கேட்டது. தீபாராதனை காண நான் சென்றேன். பாரதியாரும் எங்கோ சென்றார். ஒரு சோலையில் கூடி, இரைதேடப் போகும் பறவைகள் போல் நாங்கள் பிரிந்தோம்.
கடைசி முறையாக நான் பாரதியாரை, திலகர் கட்டத்தில் ஒரு கூட்டத்தில் பாரத சமுதாயம் என்ற பாட்டை ஆவேசமாகப் பாடக் கண்டேன். அக்கூட்டத்தில் ஐயரும் இருந்தார். ஆனால் திடீரென்று மழை வந்து கூட்டம் கலைந்தது.
பாரதியார் திருவல்லிக்கேணி யானை மிதித்து நோய்வாய்ப்பட்டதாகச் செய்தி வந்தது. ஒரு நாள் ஒத்துழையாமையைப் பற்றி ஆசிரியர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். பாரதியார் இறந்த செய்தி வந்தது. கவிக்காணிக்கை செலுத்திக் கண்ணன் பாட்டை ஒருதரம் அன்பருக்குப் பாடிக்காட்டினேன். "பாரதி விளக்கம்" "கவிக்குயில் பாரதியார்" ஆகிய நூல்களைப் பிற்காலம் பாரதியாருக்கு அர்ப்பணித்தேன்.
****
(குறிப்பு: சுத்தானந்த பாரதியாரின் நூல்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டவை. இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும். இந்தக் கட்டுரையின் நீளமான சில பத்திகள் வாசிப்பதற்கு எளிமையாக இருக்கும் பொருட்டு சிறு பத்திகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன).
பாரதியாரின் இறப்புச்செய்தி- 1921 சுதேசமித்திரனில் படிக்க இங்கே சொடுக்கவும்
-இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து
Wonderful reading!
பதிலளிநீக்குபாரதியாரின் நினைவு நாளில் நல்லதொரு பதிவு. சுத்தானந்த பாரதிக்கு நாங்கள் உறவு!
பதிலளிநீக்குஅப்படியா? மிக்க மகிழ்ச்சி. அவரைப் பற்றிய நினைவலைகளை நீங்கள் வலைப்பதிவில் பகிர்ந்துகொள்ளலாமே! இதற்குமுன்பே பகிர்ந்திருந்தால் அதை மீள்பதிவும் செய்யலாமே!
நீக்குசரித்திர புருஷர்கள், அதிலும் கவிகள் வாழ்க்கை விளங்கிக்கொள்ள கஷ்டமானது. மிக நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குஎன் பசங்களைத் தூங்க வைக்க, சிறுவயதில் வெட்டி எட்டுத் திக்கும் என, பாடலைத்தான் பாடி, அவங்களை மடியில் போட்டுத் தூங்கவைப்பேன் (மனுஷனை நிம்மதியாத் தூங்க விடாம இது என்ன பாட்டு.. என்று அவங்க நினைத்திருப்பார்களா... தெரியாது)
பதிலளிநீக்குBeautiful fascinating reminiscence.. a word portrait of that great poet! Thanks for sharing
பதிலளிநீக்குThanks for sharing.
பதிலளிநீக்குசிறப்பு...
பதிலளிநீக்குஇதுவரை அறிந்திராத தகவலுள்ள பதிவு. மிகச் சிறப்பான பதிவு இன்றைய நாளிற்கு. சுத்தானந்தபாரதி நம் ஸ்ரீராமிற்கு உறவினராயிற்றே! அவர் ஒரு பதிவில் சொல்லியிருக்கிறார்.
பதிலளிநீக்குகீதா
கடையம் சென்று பாரதியார் பாட்டு எழுதும் பாறையில் வெகு நேரம் அமர்ந்து கண்ணை மூடி தியானம் செய்து இருக்கிறேன். அவர் வாழ்ந்த வீடு கூட அவர் வீடு இல்லை. அவருடைய மாமனார் வீடு அது. பக்கத்தில் ஒரு இராமர் கோயில்.
பதிலளிநீக்குஇப்போது அந்த வீட்டை ஒரு சப்-ரிஜிட்ரார் வாங்கி இருக்கிறார்.
மிக அருமை. யாரேனும் கூறினால மட்டுமே
பதிலளிநீக்குஅறியக் கூடிய செய்திகள் இவை. தங்கள்
வாயிலாக அறியக் கிடைத்தமைக்கு நன்றி
சகோதரா!
திருமகள் சிறிபதமநாதன்
நீக்குரொம்ப மனசை அசைத்தது
பதிலளிநீக்கு