வெள்ளி, ஏப்ரல் 17, 2020

உலகை உலுக்கும் மரணங்கள்


BLOG-17 April 2020

உலகை உலுக்கும் மரணங்கள் 

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு  25-3-2020 முதல் அமலில் உள்ளது.
நாள்தோறும் தொலைக்காட்சியிலும் சமூக ஊடகங்களிலும் இறந்தோரின் எண்ணிக்கை பெரிதாகக்  காட்சிப்படுத்தப்படுகிறது.

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் மரணம் அடைவதாகவும், அந்த உடல்களைப் பாதுகாத்துவைக்க இடமின்மையால், வீதிகளிலெல்லாம் தார்பாலின் கொட்டகை அமைத்து சவப்பெட்டிகள் இடப்பட்டிருப்பதாகவும் தெரியவரும்போது நெஞ்சம் திடுக்கிட்டுத்தான் போகிறது. 


நமது பிள்ளைகளும் தெரிந்தவர்களின் பிள்ளைகளும் இரண்டு வீட்டிற்கு ஒருவராவது அமெரிக்காவில் பணிபுரிந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் நல்ல செய்தி வரவேண்டுமே என்பதைவிடவும், தீய செய்தி வந்துவிடக்கூடாதே என்றுதான் எண்ணவேண்டி இருக்கிறது. 

வரிசை வரிசையாக சவப்பெட்டிகளைப் பார்த்தேன். நியூயார்க்கில் மட்டுமின்றி ஸ்பெயினிலும்  இத்தாலியிலும் இராணுவ வண்டிகளில் சவங்கள் எடுத்துச்செல்லப்படுவதைக் கண்டேன். ஏன், நமது விழுப்புரத்திலேயே ஒரு காட்சி வந்தது. டில்லி மாநாட்டில் கலந்துகொண்டு கொரோனாவைப் பெற்றுக்கொண்டு விழுப்புரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்துபோன ஒருவரின் உடலை உறவினர்கள் பதினைந்தடி தூரத்தில் இருந்துகொண்டே, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூலமாகவே சவக்குழிக்குள் வழியனுப்பிவைத்ததைப்  பார்த்தபோது, இந்திய ரூபாயின் மதிப்பை விடவும் மனித வாழ்வின் மதிப்பு  எந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்துவிட்டது என்பதைக் கண்கூடாகக் கண்டேன்.

வாய்விட்டு அழவும் முடியாமல், கைதொட்டு உடலைத் தூய்மைப்படுத்தவும்  முடியாமல், மத வழக்கங்களின்படி சடங்குகளைச் செய்யவும் முடியாமல், சவப்பெட்டியின் மீது கூடக்  கைவைக்க முடியாமல்….என்ன ஒரு துரதிர்ஷ்டம்! 

இறந்துபோனவர்களில் நல்லவர்கள் இருக்கலாம், வாய்மையாளர்கள் இருக்கலாம், சாதனையாளர்கள் இருக்கலாம், சமுதாயத்தின் நன்றிக்குப் பாத்திரமானவர்கள் இருக்கலாம். பட்டாசுகள் முழங்க, பறையடித்துக்கொண்டும் கூத்தாடியும் வழியனுப்பிவைக்க ஏராளமான நண்பர்களும் உறவினர்களும் தயாராக இருக்கலாம். ஆனால் யாருக்கும்  எந்த வாய்ப்பும் அளிக்காமல் கொரோனா என்னும் கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சி மனித சமுதாயத்தின் கைகளைக் கட்டிப்போட்டுவிட்டதை  என்ன சொல்வது!

கொரோனா இல்லாமலே தினமும் பலபேர் இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களின் இறுதி ஊர்வலங்களின் கதியும் இதேதான். என்னுடன் வங்கியில் நாற்பதாண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த நண்பர் ஒருவர் இந்த  கொரோனா காலத்தில் இயற்கை மரணம் எய்தினார். அது ஒன்றுதான் அவர் செய்த பாவச்செயல். ஏனெனில் அவர், எறும்புக்கும் தீங்கு விளைவித்ததில்லை. உடன் பணியாற்றியவர்களுக்கு அவர் என்றுமே தொல்லை தந்தவரில்லை. வீண் வம்பு பேசாதவர். பொய்யான தகவல் சொல்லிப் பயணப்படி பெற்றதில்லை. தன் நெற்றியில் மெல்லிய கோடாக மின்னிய விபூதியைப் போலவே மென்மையான மனம் படைத்தவர்.

அவருடைய இறுதி ஊர்வலத்திற்கு நாங்கள் யாருமே போகமுடியாதபடி கொரோனா ஊரடங்கு சதிசெய்துவிட்டது. அவருடைய முகத்தையும் இறுதியாகப் பார்க்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

எனக்கு அருகாமையில் இருந்த இன்னொருவீட்டில் நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டிருந்த தாயார், ஊரடங்கு நாளில் மரணம் அடைந்துவிட்டார். ஒரே மகன் வெளிநாட்டில் இருக்கிறார். விமானப் பயணங்களுக்குத் தடை இருப்பதால், பாவம், பெற்ற தாய்க்கு இறுதிச் சடங்கு செய்யவும் பேறிழந்தவரானார் அவர்.

நல்ல இடத்தில் திருமணம் ஆகவேண்டுமா? அதிர்ஷ்டம் வேண்டும். நல்ல பிள்ளைகள் பிறக்கவேண்டுமா? அதிர்ஷ்டம் வேண்டும். நல்ல வேலை, நல்ல பதவி, தேர்தலில் வெற்றி ..கிடைக்க வேண்டுமா? அதிர்ஷ்டம் வேண்டும். தொலையட்டும். 

செத்துப் போவதற்குமா அதிர்ஷ்டம் வேண்டும், ஐயா?

எல்லா வசதிகள் இருந்தும், கொள்ளிவரை வருவதற்குக்  கூட்டம் தயாராக இருந்தும், அனாதை பிணம்போல் மரணிப்பதை வேறெப்படிக் காரணப்படுத்துவது?

விரைவில் விலகட்டும் கொரோனா என்று வேண்டுவோமாக. அரசின் கெடுபிடிகளுக்கு உட்படுவோமாக.  சமூக விலகலைக் கடைப்பிடிப்போமாக. மூக்கையும் வாயையும் மூடுதுணியால் இறுக்குவோமாக. நம்மால் யாருக்கும் கொரோனா பரவாமல் இருப்பதாக.

நம்மைவிட்டுப் பிரிந்துபோனவர்களின் நினைவுகளுக்கு அமைதியாக அஞ்சலி செலுத்துவோமாக.

-இராய செல்லப்பா, சென்னை 

20 கருத்துகள்:

 1. மோசமான சூழல் தான்.... விரைவில் நலமாக வேண்டும் என்பதே அனைவருடைய பிரார்த்தனை.

  பதிலளிநீக்கு
 2. மோசமான் சூழலானாலும் தைரியமாக இருக்க வேண்டும் கோழை தினம் தின்ம் செத்து மடிகிறான் தைரியசாலிக்கு தவிர்க்க முடியத ஒரே ம்ரணம்தான்

  பதிலளிநீக்கு
 3. ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது "எத்தனை கோடி கண்ணீர்
  மண் மீது
  விழுந்திருக்கும்
  அத்தனை கண்ட பின்னும்
  பூமி இங்கு பூ பூக்கும்

  கரு வாசல் விட்டு வந்த
  நாள் தொட்டு
  ஒரு வாசல் தேடியே
  விளையாட்டு
  கண் திறந்து
  பார்த்தால் பல கூத்து
  கண்மூடி கொண்டால் ...

  போர் களத்தில் பிறந்து
  விட்டோம் வந்தவை போனவை
  வருத்தம் இல்லை
  காட்டினிலே
  வாழ்கின்றோம்
  முட்களின் வலி ஒன்றும்
  மரணம் இல்லை.....

  பதிலளிநீக்கு
 4. வருந்துவதைத்தவிர வேறெதுவும் சொல்ல இயலவில்லை.

  பதிலளிநீக்கு
 5. உங்கள் எழுத்து நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.ஆன்டவன் கிருபை ஒன்றே அனைத்து உயிர்கலின் பாதுகாப்பு.

  பதிலளிநீக்கு
 6. நெஞ்சை உறுக்கு தின்றது.இறைவனை வேண்டுதலை தவிர வேறு வழி தெரியவில்லை.இதுவும் விரைவில் கடந்து போகும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாக இறையருள் துணைசெய்யும் என்பதே என்னுடைய கருத்தும்.

   நீக்கு
 7. மனதை உருக்குவதாகத்தான் இருக்கிறது நிலைமை.

  சென்னை வெள்ளத்தின்போது மறைந்த எழுத்தாளர் விக்ரமன் அவர்களை மனது நினைக்கும். சாகும்போதும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் பலரும் அறியக்கூடிய செய்தியாகும், நல்லன்பர்கள் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும் என்று. அதுபோலத்தான் டைரக்டர் விசு அவர்களுக்கும்.

  பதிலளிநீக்கு
 8. அதிருக்கட்டும். ஒரு இடுகைக்கும் அடுத்த இடுகைக்கும் இடையே 6 மாத இடைவெளியாவது இருக்கவேண்டும் என்று நினைத்துவிட்டீர்களா? பின்பு மக்களை அரசு ஆறடி இடைவெளியிட்டு நடக்கவேண்டும் என்று சொல்லும் என்பதை முன்னறிந்து ஆறு மாத இடைவெளி கொடுத்துவிட்டீர்களோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை நண்பரே இனிமேல் இடைவெளி இருக்காது என்று நம்பலாம்...!

   நீக்கு
 9. கோதை.ஏப்ரல் பிற்பகல் 9.20
  நெஞ்சை நெகிழ வைக்கின்ற நிகழ்வு தான்.இறைவனை வேண்டுவதை தவிர வேறு வழி தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் பதிலுக்கு நன்றி. எல்லாம் அவன் செயல் அன்றோ?

   நீக்கு
 10. விரைவில் சூழல் மாறும் என நம்புவோம்

  பதிலளிநீக்கு
 11. மனதை திடப்படுத்திக் கொள்வதை தவிர வேறு வழியில்லை... தொலைக்காட்சியால் பல தகவல்கள் தெரிந்தாலும், அதைப் பற்றி(யே) வீட்டில் அதிகம் விவாதிப்பதில்லை... அப்புறம் :-


  // செத்துப் போவதற்குமா அதிர்ஷ்டம் வேண்டும், ஐயா? //

  வாழ்வின் இறுதிப் பகுதியை எதிர்கொள்வதற்கு திருக்குறளில் ஒரு அதிகாரம் உள்ளது...!

  பதிலளிநீக்கு
 12. ஒரு நுண்ணுயிரி உலகையே கட்டிப் போட்டு வைத்துள்ளது! இத்தனைக்கும் அது வெளியில் இருந்தால் ஜுஜூபி. செல்லுக்குள் சென்றால்தான் மெதுவாக வேலையைக் காட்டும். அதுவும் நம்முள் இருக்கும் வீரர்கள் எதிர்க்கத் திராணியின்றிப் போனால்...

  மாயாவி போல என்ன ஆட்டம் போடுகிறது. ஆமாம் சார் இந்த வேளையில் இறப்பவர்களின் நிலை...நேற்று அதிகாலை என் அப்பாவின் மாமா பையன் அதிகம் வயதில்லை 59 தான். தொற்றினால் மரணம் அல்ல. கார்டியாக் அரெஸ்ட். ஆனால் யாராலும் செல்ல முடியவில்லை. அருகில் இருக்கும் உறவினர் கூடச் செல்ல முடியவில்லை. இந்தத் தொற்று அவர்கள் ஏரியாவிற்கு சிவப்பு மரியாதை கொடுத்திருந்தது. இது என் ஏரியா உள்ள வராதேன்னு. அவரின் ஒரே மகன் அமெரிக்காவில். பாவம். என்ன கொடுமை சரவணா..

  அமெரிகாவின் இந்த விபரீதமான நிலைமைக்குக் காரணம் அதன் தலைமையே என்று அந்த மக்கள் சொல்லி வருகிறார்கள்.

  விரைவில் இந்த நிலை மாறி இயல்பு நிலைக்கு உலகம் திரும்ப வேண்டும்.

  கீதா

  பதிலளிநீக்கு
 13. நான் பெயர் சொல்லமாட்டேனாக்கும்!!

  இதைப் பற்றிய செய்திகள் எதுவும் அதிகம் பார்ப்பதில்லை. பேசுவதில்லை. டிவியும் இல்லை!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 14. மனம் சங்கடப் படுகிறது. நிலைமை விரைவில் சீராக இறைவனை வேண்டலாம். 

  பதிலளிநீக்கு
 15. வருத்தமாக இருக்கிறது நிலமை சீரடைய இறைவன் தான் வழி விட வேண்டும்

  பதிலளிநீக்கு