புதன், ஆகஸ்ட் 21, 2019

வாத்தியார் கதைகள் - 1 -மனோ சார்


வாத்தியார் கதைகள் - 1

மனோ சார்

பத்தாம் வகுப்புத் தேர்வுகள் முடிந்து சில நாட்கள் ஆகியிருக்கும். தேர்வின் சுமை  நீங்கியதன் வெளிப்பாடாக நூலகத்தில் சென்று இளைப்பாறிக் கொண்டு இருந்தேன். கடந்த ஒரு வாரமாக நூலகத்திற்கு வராததால் பார்க்க முடியாமல் போன பத்திரிகைகளை  இப்போது ஆர்வமாகப் புரட்டிக் கொண்டிருந்தேன். ரீடர்ஸ் டைஜஸ்ட், இம்பிரிண்ட், கலைமகள், அமுதசுரபி ஆகிய  பத்திரிகைகளை வந்தவுடன் படிக்கும் முதல் வாசகனாக நான் இருந்ததால், நான் வராத நாட்களில்  அவை தபாலில் வந்தால் கவரைப் பிரிக்காமலேயே வைத்திருப்பார் நூலகர். என்மீது  அன்புமிகக்  கொண்டவர். அப்படி மூன்று பத்திரிகைகள் புத்தம் புதிதாகக் கிடைத்தன. அவற்றை ஓர் இரவு கொண்டுபோய் அடுத்த நாள் காலையில் திருப்பித் தந்துவிடும் விசேஷ அனுமதியும் அவர் கொடுத்திருந்தார். அதற்குப் பிரதியுபகாரமாக இரவு 8 மணிக்கு நூலக நேரம் முடியும்போது அவருக்கு உதவியாக நாளிதழ்களையும், வார-மாத-   பத்திரிகைகளையும்  ஒழுங்காக அடுக்கி வைத்து, ஜன்னல்களை சாத்தி, கதவைப் பூட்டி, சாவியை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். சில நேரம் காற்றுப்  போயிருக்கும் அவருடைய சைக்கிளுக்குக்  காற்று அடித்துக் கொண்டு வரும்   தொண்டையும் நான் ஏற்கவேண்டி வரும்.
நானும் ஒருகாலத்தில் வாத்தியார் தான்!

அன்றும் அப்படித்தான் நூலகத்தை மூடிவிட்டு, உரிய அனுமதியோடு கையில் சில பத்திரிகைகளை எடுத்துக்கொண்டு, நான் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது, எதிர்ப்புறம் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மனோ சார் என்னைப் பார்த்தவுடன் நின்றார். "என்னப்பா பரீட்சை எல்லாம் நன்றாக எழுதி இருக்கிறாயா?" என்றார்.

நான் அவருக்கு வணக்கம் சொல்லி, "நன்றாக செய்து இருக்கிறேன் சார்" என்றேன்.

மனோ சார் எங்களுக்கு சோஷியல் ஸ்டடீஸ் பாடம் எடுக்கும்  ஆசிரியர். மனோகரன் என்ற அவருடைய பெயர்  மிகவும் நீளமாக இருந்ததால் மனோ என்று சுருக்கப்பட்டதாகப் பேசிக்கொண்டார்கள். அவருடைய வகுப்பில் இருந்தால் நேரம் போவதே தெரியாது. அவ்வளவு அழகாக பாடம் எடுப்பார்.

மாணவர்களை அவர் மீது மையல் கொள்ளச் செய்த இன்னொரு இயல்பு, அப்போதைய சினிமாத் துறையைப் பற்றி அவருக்கிருந்த  விரிவான அறிவு. அவர் தீவிரமான எம்ஜிஆர் ரசிகர். ஏதாவது ஒரு வருடத்தைச் சொன்னால் போதும், அந்த வருடத்தில் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை எம்ஜிஆரின் எந்தெந்த படங்கள் வெளியாகின, அவற்றில் யார் யார் கதாநாயகி, படம் வெற்றியா தோல்வியா என்ற தகவல்கள் அவரிடம் விரல் நுனியில் இருக்கும்.

"ரொம்ப நல்ல விஷயம். சரி என்னுடைய பாடத்தில் எப்படிச் செய்திருக்கிறாய்?" என்று கேட்டார் மனோ சார்.

"ரொம்ப நன்றாகச் செய்து இருக்கிறேன் சார். ஒழுங்காகத் திருத்தினால் 90 மார்க் வரும். ஆனால் ஸோஷியல் ஸ்டடீஸ்- இல் 75-க்கு மேல் போட  மாட்டார்களே" என்று வருத்தத்துடன் கூறினேன்.

மனோ சார் என் முதுகைத் தட்டிக் கொடுத்தார். "கவலைப்படாதே, மார்க்குகள் முக்கியமில்லை. நீ நன்றாக எழுதி இருக்கிறாய் என்ற திருப்தி உனக்கு ஏற்பட்டால், அது போதும். 40 மார்க் எடுத்தாலும் பாஸ், 90 மார்க் எடுத்தாலும் பாஸ் - இல்லையா? தன்னம்பிக்கை தான் முக்கியம்" என்று சொன்னவர், "என் ரூம் உனக்குத் தெரியும் தானே? நாளை காலை 7 மணிக்கு வந்து விடு. கொஞ்சம் பேப்பர்கள் திருத்த வேண்டும். உதவி செய்வாய் அல்லவா? ஆனால் விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது" என்று என் முகத்தை உற்றுப் பார்த்தார்.

ஒவ்வொரு வருடமும் தேர்வுகள் முடிந்தவுடன் யாராவது ஒரு ஆசிரியருக்கு அம்மாதிரி உதவிகள் செய்வது என்னுடைய கடமையாகவே ஆகியிருந்தது. அதில் எனக்கு உற்சாகம் ஏற்படுவதுண்டு. ஆகவே "சரிங்க சார்! வந்துவிடுகிறேன்" என்று மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டேன்.

***
மனோ சார் குடும்பம் வேலூரில் இருந்தது.ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை காலை வேலூரிலிருந்து இராணிப்பேட்டைக்கு பஸ்ஸில் வருவார். இன்னும் திருமணம் ஆகவில்லை. சனிக்கிழமை வரை தங்குவதற்காகப் பள்ளிக்கு அருகில் இருந்த  நவல்பூரில் ஒரு மாடி அறையை வாடகைக்கு எடுத்து இருந்தார். சனிக்கிழமை மாலை 4 மணிக்கு வேலூர் போய்விடுவார்.

நான் போனபோது ரூம் கதவு திறந்தே இருந்தது. "சார்" என்று அழைத்துக் கொண்டே நுழைந்தேன். எனக்கு முன்னால் அங்கே இருந்தான் என் வகுப்பு மாணவன் பன்னீர். அவன் கையில் ஒரு சில விடைத்தாள்கள் இருந்தன. தரையில் அமர்ந்தபடி சிகப்பு கலர் பென்சிலால் அவனும் விடைகளைத் திருத்திக் கொண்டிருந்தான். சிறிய அறைதான்.  மேஜை எதுவும் இல்லை. ஒரே ஒரு நாற்காலி இருந்தது. தரையில் பாய் போட்டு இரட்டைத் தலையணையில் சாய்ந்தபடி அவனுக்கு உத்தரவுகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார் லுங்கி பனியனில் இருந்த மனோ சார்.

பன்னீர் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் அவன் கையால் விடை திருத்தப்படும் மாணவர்கள் மீது தான் வருத்தம் ஏற்பட்டது. ஏனென்றால் எந்தப்  பாடத்திலும் பன்னீர் 50 க்கு மேல் மதிப்பெண் எடுத்தது கிடையாது. அந்த அறிவை வைத்துக்கொண்டு மற்றவர்கள் அறிவை எப்படி அவனால் எடை போடமுடியும்  என்று கடவுளுக்குத்தான் வெளிச்சம். ஆகவே தயக்கத்தோடு நின்றேன்.

"வாப்பா செல்வம், நீயும் உட்கார். பன்னீர் எட்டாம் வகுப்பு சோஷியல் ஸ்டடீஸ்  திருத்துகிறான். அவனுக்கு ஏதாவது டவுட் வந்தால் நீ தான் கிளியர் பண்ண வேண்டும். சரியா?" என்றார். எட்டாம் வகுப்பு தானே பரவாயில்லை என்று எண்ணிக் கொண்டேன். கடவுள்  இருக்கின்றார். பலமாகத் தலையசைத்தேன். உட்கார்ந்தேன்.

"இந்தா இதெல்லாம் பத்தாம் வகுப்பு பேப்பர்கள். நீ நன்றாகப் படிப்பவன் என்பதால் தான் உன்னை அழைத்தேன். மிகவும் சரியாகத் திருத்த வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் நம்பியார்மீது  எம்ஜிஆர் மாதிரி நீ செயல்பட வேண்டும்" என்றார் மனோ சார்.

இதுதான் சாக்கு என்று அவரை ஒரு பிடி பிடித்தேன். சில மாதங்கள் முன்பு ஒரு சமயம் பள்ளியில் இலக்கிய வகுப்பின் பொழுது எம்ஜிஆரா சிவாஜியா என்ற விவாதத்தை அவராகவே எழுப்பி, வசூல் மன்னன் என்றால் எம்ஜிஆர்தான் என்று நிரூபித்து இருந்தார். அப்போது எம்ஜிஆரின் 'படகோட்டி' படம் வெளியாகி யிருந்தது. (1964 நவம்பர் 3- தீபாவளி ரிலீஸ்). அதற்குப் போட்டியாக சிவாஜி கணேசனின் இரண்டு படங்கள் 'நவராத்திரி', 'முரடன் முத்து' வெளியாகியிருந்தன. ஆனால்  ‘படகோட்டி’ வசூலில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. "இனிமேல் சிவாஜி சினிமாவை விட்டுவிட்டு சூரக்கோட்டைக்குப் போய்க் குதிரை மேய்க்க வேண்டியதுதான்"  என்று அவர்  கம்பீரமாக சொல்லிச் சிரித்தது இன்னும் நினைவில் இருக்கிறது.   (சூரக்கோட்டை யில் சிவாஜிக்கு பெரிய பண்ணையும், பல குதிரைகளும்  இருந்ததாகச் சொல்வார்கள்). 

ஆகவே சொன்னேன்: "சாரி சார்,  எம்ஜிஆர் மாதிரி என்னால் திருத்த முடியாது. சிவாஜிதான் படிக்காத மேதை. அதுவே சிவாஜி மாதிரி திருத்தட்டுமா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டேன்.

"ஓ படுபாவி, நீ சிவாஜி ரசிகனா? தொலைந்து போ. ஒழுங்காக மார்க் போடு. டவுட் இருந்தால் என்னிடம் கேட்டுக் கொள்" என்று  எழுந்தார் மனோ சார்.  கீழ் போர்ஷனில் போய் அவர் குளித்துவிட்டு வருவதற்குள் 20 பேப்பர்கள் திருத்திவிட்டேன்.

அதுவரையில் ஆங்கிலப் பேப்பர்களும் கணக்குப் பேப்பர்களும்தான் நான் திருத்தி இருக்கிறேன். அதில் எது சரியான விடை, எது தவறான விடை என்று சுலபமாகத் தெரிந்து கொள்ள முடியும். அதுவே வேலை எளிதாக இருந்தது. ஆனால் இங்கோ சோஷியல் ஸ்டடீஸ். ஒவ்வொரு மாணவனும் சொந்தமாகக் கதை அளந்து இருந்தான். அதாவது பரவாயில்லை. ஒரு மாணவன் இப்படி எழுதியிருந்தான்: "ஐயா நான் மூன்றாவது வருடம் இந்தத் தேர்வை எழுதுகிறேன். என்மேல் இரக்கப்பட்டு பாஸ் மார்க்  போடுங்கள்" என்று.

இன்னொரு மாணவன்  கொஞ்சம் மேலே போய், "ஐயா, எனக்கு அதிக  மார்க்கு வேண்டாம், ஐம்பதிலிருந்து அறுபது போடுங்கள் போதும். 35, 40 போட்டு விடாதீர்கள். வாத்தியார் பிள்ளை மக்கு என்பார்கள். என் அப்பாவும் ஒரு வாத்தியார் தான்" என்று எழுதி இருந்தான். இது வேண்டுகோளா மிரட்டலா என்று தெரியவில்லை.

குளித்துவிட்டு வந்த பிறகு மனோ சார் முகம் மிகத் தெளிவாக இருந்தது. அந்த இரண்டு விடைத்தாள்களையும் அவரிடம் காட்டினேன். "தொலைந்து போகிறார்கள். பாவம்! அவனுக்கு நாற்பதும் இவனுக்கு 62 ம் போட்டுவிடு" என்றார். மிகுந்த சிரமப்பட்டு அந்த மார்க் வரும்படி ஒவ்வொரு கேள்விக்கும் கொஞ்சம் கூடுதல் மார்க் கொடுத்தேன்.

மனோ சார் பன்னீரைப் பார்த்து மூணு பேருக்கும் பொங்கல் வடை மசாலாவும்,  பிளாஸ்க்கைக்  கொடுத்து  காப்பியும் வாங்கி வரச் சொல்லிப் பணம் கொடுத்தனுப்பினார். 

காலை உணவு உள்ளே போனதும் உற்சாகம் பிறந்தது. பகல் ஒரு மணிக்குள் மேலும் 50 பேப்பர்கள் திருத்திவிட்டேன். நல்ல வெயில். அறையைச்  சுற்றிலும் வெளிப்புறத்தில் மரங்கள் எதுவும் கிடையாது. எனவே  அனல் தகித்தது.

சிறிது நேரத்தில் மனோ சார் எழுந்து பேண்ட் சட்டை அணிந்து கொண்டார். "டேய் பன்னீர், நீ திருத்தியது போதும். உங்க ரெண்டு பேருக்கும் பிரிஞ்சியும் பரோட்டாவும் வாங்கிக்கொண்டு வா. நாலு மணி போல நான் வந்து விடுவேன். அதற்குள் இரண்டு பேரும் எல்லாவற்றையும் முடித்து விடுங்கள். நான் வெரிஃபை செய்து கொள்கிறேன். ரூம் சாவி இந்தா!" என்று என்னிடம் சாவி கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டார்.

பன்னீர் என்னைப் பார்த்து, "செல்வம் இப்பவே போகட்டுமா, இல்லை ஒரு மணி நேரம் ஆகலாமா?" என்றான்.  எப்படியும் அவன் போய் சாப்பாடு வாங்கி வர ஒரு மணி நேரம் ஆகும் என்பதால் அவனை உடனே அனுப்பினேன். நெற்றியிலும்  கழுத்திலும் வழிந்த வேர்வையைத் துடைத்துக்கொண்டு செயலில் இறங்கினேன்.

அப்போதெல்லாம் அந்தப் பாடத்தில்  35 மதிப்பெண் எடுத்தால் பாஸ். மனோ சார் ரொம்பவும் இரக்கம் உள்ளவர். "யாரையும் பெயிலாக்கி விடக்கூடாது" என்று உத்தரவு போட்டிருந்தார். ஆனால் சில மாணவர்களின் விடைத்தாள்கள் எனக்கு சவாலாக இருந்தன. 

அக்காலத்தில் சோஷியல் ஸ்டடீஸ் பாடத்தில் சிறிய வினாக்கள் Part A வில் 15, பெரிய வினாக்கள் Part B இல் 7 என்று எழுத வேண்டும். Part A  வினாக்களுக்கு தலா 2 மதிப்பெண். Part B வினாக்களுக்கு தலா 10 மதிப்பெண்கள். ஆக 30 + 70  = மொத்தம் 100.

ஒரு குறிப்பிட்ட மாணவனுக்கு எப்படித்தான் கருணையோடு மார்க் போட்டாலும் 30 தான் வந்தது. இன்னும் ஐந்துக்கு எங்கே போவது? Part B இல் தான் மார்க்குகளைக் கொஞ்சம் உயர்த்துவதற்கு வழி உண்டு. ஆகவே அவற்றைக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பலமுறை படித்தேன். 10 மார்க் கேள்விகளுக்குக் குறைந்தது 10 வரிகள் கூட எழுதவில்லை அவன். அப்படி இருந்தும் அவன் எழுதிய நான்கு கேள்விகளுக்கும் தலா 5 மதிப்பெண் முதலிலேயே கொடுத்துவிட்டேன். யார் பெற்ற பிள்ளையோ! வேறு வழி இல்லாததால் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரை மார்க்கு, ஒரு மார்க்கு என்று உயர்த்தினேன். அப்படியும் மொத்தம் 34 வந்தது. இன்னும் ஒரு மார்க்கு வேண்டும்.

Part A வில் தான் இனி கை வைக்க வேண்டும். அவனுடைய அதிர்ஷ்டமோ அல்லது என்னுடைய அதிர்ஷ்டமோ, ஒரு கேள்விக்கு மார்க் போடாமல் X போட்டிருந்தேன். அதாவது பூஜ்யம். அந்த விடையை மறுபடியும் படித்தேன். "முதலாம் பானிபட் போருக்குக் காரணம் யாது?" என்ற 2 மார்க் கேள்வி அது. மாணவனின் பதில்: "இருதரப்புக்கும் இடையில் இருந்த கருத்து வேற்றுமையே காரணம்!"

இது சரியான விடை இல்லை என்பது தெளிவு. ஆனால் அவனுக்கு எப்படியும் ஒரு மார்க் கொடுத்தாக வேண்டுமே! இல்லையெனில் பெயில் ஆகிவிடுவான். "கருத்து வேற்றுமை யினால்தான் போர் உண்டாகிறது" என்ற சிந்தனை, அரிஸ்டாட்டில், பிளேட்டோ போன்ற அறிஞர்களுக்கே உரிய சிந்தனை அல்லவா! அதை ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் வெளிப்படுத்தினால் கௌரவப்படுத்த வேண்டாமா? ஆகவே அந்த  விடைக்கு அவனுக்கு 2 மதிப்பெண் கொடுப்பதில் அறப்பிறழ்வு ஏற்படாது என்று நம்பினேன். அப்பாடா, ஒருவழியாக 36 கிடைத்துவிட்டது. அவன் பாஸ் ஆகி விட்டான்.

சிறுநீர் கழிப்பதற்காக நான் மாடியில் இருந்து இறங்கிக் கீழ் போர்ஷனுக்கு போய்த் திரும்பினேன். அதற்குள் பாயின்மீது பிரிஞ்சியும் பரோட்டாவும் கமகமத்துக் கொண்டிருந்தன. அதாவது பன்னீர் அவற்றை வைத்துவிட்டு, சொல்லிக் கொள்ளாமல் நழுவிவிட்டான் என்று பொருள்!

அடுத்த இரண்டு மணி நேரத்தில் என்னிடம் இருந்த எல்லாப்  பேப்பர்களும் தீர்ந்து விட்டன. எனவே பன்னீர் பாக்கி வைத்திருந்த பேப்பர்களையும் எடுத்து நானே திருத்தினேன். மாலை மணி ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது. மனோ சார் வருவதாகக் காணோம்.

நான் பகல் உணவுக்கு வரவில்லையே என்று வீட்டில் தேடிக் கொண்டிருப்பார்கள். மனோ சார் வீட்டுக்கு தான் போய் இருக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் பரவாயில்லை. ஆனால் இப்போது மாலையும் ஆகி விட்டதே!

செய்வதற்கு வேறு வேலை இல்லாததால் அறையை நோட்டமிட்டேன். அதிகம் பொருள்கள் இல்லை. ஒரு சில சினிமா பாட்டுப் புத்தகங்கள் இருந்தன. அட்டையில் எம்ஜிஆர் போட்ட 'பேசும் படம்' ஒன்று கண்ணில் பட்டது. அதைப் படித்து முடித்தேன். இன்னும் மனோ சார் வரவில்லை. ஆறரை மணி ஆகிவிட்டது. சூரியன் மறைந்து இருள் பரவத் தொடங்கிவிட்டது. விளக்கைப் போடலாம் என்று பார்த்தால் பல்ப் ஃப்யூஸ் ஆகியிருந்தது. 

மெழுகுவர்த்தி  இருக்குமா என்று  தேடப் போனதில் பழையகுமுதம்இதழுக்கு நடுவில் மேலட்டை இல்லாத மிகவும் பழைய புத்தகம் ஒன்று தென்பட்டது. மாடிப் படியில் இறங்கி நின்றுகொண்டு தெருவிளக்கின் ஒளியில் அதைப் புரட்டினேன்.
 ஆங்கிலத்தில்  இருந்ததால் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்ற எண்ணம்  எழவில்லை. சில படங்கள் இருந்தன. மேலோட்டமாக ஏதோ தெரிந்தாலும் தெளிவாக இல்லை. வயது வந்தவர்கள் படிக்கும் புத்தகங்களில் ஒன்று என்று கல்லூரியில் சேர்ந்த சில வருடங்களுக்குப் பிறகு தெரிந்தது.
கீழ் போர்ஷன் உரிமையாளர் படியேறி வந்தார். வயது அறுபதுக்குமேல் இருக்கும்.ஏன் இன்னும் நிற்கிறாய், அப்பா? சார் வரும்வரை நீ இருக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை. சாவியை என்னிடம் கொடுத்துவிட்டு நீ போகலாம், நான் பூட்டிக் கொள்கிறேன். சார் ஒன்றும் சொல்லமாட்டார்”  என்றார். அப்படியே செய்தேன்.
சில நாட்களுக்குப் பிறகு, பன்னீரைக் கடைத்தெருவில் பார்க்க நேர்ந்தது. ஆர்வமாக ஓடிவந்தான்.படித்து முடித்துவிட்டாயா?” என்றான். எதை என்றேன். அந்தப் புத்தகத்தை  என்றான்.இல்லையே, அதை அங்கேயே வைத்துவிட்டேனேஎன்றேன்.சரிதான், யாரோ லவட்டிக் கொண்டுவிட்டார்கள் போல் இருக்கிறது. சார் என்னிடம் கேட்டார். நீ எடுத்துக்கொண்டு வருவாய் என்றுதான் நான் விட்டுவிட்டு வந்தேன். இல்லாவிட்டால் நானே  கொண்டுவந்திருப்பேன். நல்ல சான்ஸ் போய் விட்டதே! இப்படி யாருக்கும் இல்லாமல் பண்ணிவிட்டாயேஎன்று புலம்பினான். எனக்கென்னவோ அந்தக் கீழ் போர்ஷன் உரிமையாளர்மீது சந்தேகப்படுவது நியாயமாகப் படவில்லை. ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம், ஆனால் ஒரே ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது எனபது தானே அறம்!
****
அடுத்த வருடம் பள்ளி திறந்து நாங்கள் பதினொன்றாம் வகுப்பிற்குப் போனபோது மனோ சார் வரவில்லை. வேலூரில் - சொந்த ஊரில் - மிகப்பெரிய தொழில் நிறுவனத்தில் மேலாளராக அவருக்கு வேலை கிடைத்துவிட்டதாம். அந்த உற்சாகத்தில் அவர்  எம்ஜிஆரை மறந்து விட்டிருக்கலாம்.  பன்னீர் மட்டும் (அந்த!) ஆங்கிலப் புத்தகத்தை மறக்கமுடியாமல் புலம்பிக்கொண்டே இருந்தான். அதற்காகவே வேகமாகவும் நன்றாகவும் ஆங்கிலம் கற்றுக்கொண்டான் என்று கேள்வி. 

(c) இராய செல்லப்பா     



26 கருத்துகள்:

  1. திருத்த வேண்டியவர் திருத்தவும் இல்லை, திருந்தவும் இல்லை போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருத்த வேண்டியவர்தான் அந்தத் தொழிலே வேண்டாம் என்று போய்விட்டாரே!

      நீக்கு
  2. மனோ சார் - இப்படியும் சிலர்.

    எனக்குத் தெரிந்த ஒரு கல்லூரி பேராசிரியர் பேப்பர் திருத்தும்போது எடை பார்ப்பார் - கைகளில் தூக்கி - நல்ல கனம் - விஷயம் இருக்கும் போல! என்றும் சொல்வார்! :(

    வாத்தியார் கதைகள் - தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவம், தன்னுடைய குடும்ப பாரத்தை அதனோடு ஒப்பிட்டிருப்பார் போலும்!

      நீக்கு
  3. மாணவர்கள் ஆசிரியர்களுக்கு இப்படி உதவுவது (??????) உண்டு என்று கேள்விப்பட்டதுண்டு. ஆனால் நான் படித்த பள்ளி ரொம்பவே கட்டுப்பாடுகள் நிறைந்தவை. ஆசிரியைகள் வகுப்பிலேயே பெரும்பாலும் திருத்திவிடுவார்கள். எங்களுக்கு பாட சம்பந்த வேலைகள் கொடுத்துவிட்டு அப்புறம் ஆசிரியர்களின் ஓய்வு அறையில் திருத்தி விடுவார்கள். வீட்டிற்கு எடுத்துச் சென்று திருத்தக் கூடாது என்ற கட்டுப்பாடு அப்போது இருந்ததால்.

    அந்த மனோ சார் கல்லூரிப் பேப்பர்களை எப்படித் திருத்தியிருப்பார் என்று நான் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்!

    பதிவை மிகவும் ரசித்தேன் சார். உங்கள் எழுத்து நடை!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்லூரிகளில் பேப்பர் திருத்தும் வழக்கம் இருக்கிறதா என்ன? மொத்தமாகப் படித்துவிட்டு குத்துமதிப்பாக மார்க் போடுவதைத்தான் பெரும்பாலும் பின்பற்றுகிறார்கள் என்று கேள்வி. அதாவது அறிவியல் அல்லாத பாடங்களில்.

      நீக்கு
  4. எழுத்து நடை ரசிக்கும்படி இருந்தது.

    நான் டைப்ரைடிங் லோயர் நல்லா பயிற்சி செய்யும்போதே, லோயர் பரீட்சை பேப்பர்களைத் திருத்தியது (அரசு பரீட்சை பேப்பர்கள்) நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் திறமையை அப்போதே புரிந்துகொண்டிருக்கிறார்கள்! அதிர்ஷ்டசாலி ஐயா நீங்கள்!

      நீக்கு
  5. இவ்வளவையும் நினைவில் வைத்துக்கொண்டு எழுதியது பிரமிப்பாக இருக்கிறது.

    உங்களது நினைவாற்றலுக்கு ஒரு சபாஷ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயய்யோ, அதெல்லாம் ஒன்றுமில்லை. பல நேரங்களில் கூகுள் உதவியை நாடவேண்டியுள்ளது. ஆனால் ஒன்றை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்த மனம் இருக்கிறதே, அது, தேவையானதையெல்லாம் மறந்து விடுகிறது. தேவையற்றதை மறக்காமல் வைத்திருக்கிறது. அதனோடு மல்லுக்கட்டுவது
      மிகவும் சிரமம் ஐயா!

      நீக்கு
  6. // நம்பியார்மீது எம்ஜிஆர் மாதிரி // ஹா... ஹா...

    அறப்பிறழ்வு - என்னவொரு அழகான தமிழ்...

    வாசித்து முடித்தவுடன், என்னையும் கோவை ஆவியையும் நீங்கள் பிரம்பால் மிரட்டிய காட்சி, மனதில் வந்து போனது... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே, அதே, அந்த புகைப்படத்தைத்தான் தேடினேன், கிடைக்கவில்லை. இருந்தால் அனுப்புவீர்களா?

      நீக்கு
  7. எவ்விதப் பிசிறும் இன்றி அழகான ஓட்டத்தில் அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல நேரங்களில் உங்கள் பதிவுகள் எனக்கு எழுத்துக்கலையின் சில நுட்பங்களை விளக்கியிருக்கிறது என்று சொன்னால், குருதட்சிணையாகக் கட்டைவிரலைக் கேட்டுவிட மாட்டீர்களே!

      நீக்கு
  8. //2 மதிப்பெண் கொடுப்பதில் அறப்பிறழ்வு ஏற்படாது என்று நம்பினேன். அப்பாடா, ஒருவழியாக 36 கிடைத்துவிட்டது. அவன் பாஸ் ஆகி விட்டான்.//

    உங்கள் நல்லமனம் வாழ்க!

    சிறு வயது நினைவுகளை தங்கு தடையின்றி அப்படியே பகிர்ந்து கொண்டது வியப்பு.
    நீங்கள் சொல்வது போல் சில நினைவுகள் அழிவது இல்லை. சில நினைவுகள் நினைவில் நிற்பது இல்லை அது ஒரு ஆச்சரியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில், அந்த ஒன்றிரண்டு மார்க்குகளில் எதிர்காலத்தை இழந்த மாணவர்களை நான் பார்த்த்துண்டு. ஆகவே பின்னாளில் நான் ஆசிரியனாக இருந்த போதும் யாருக்கும் 35 க்குக் கீழாகக் கொடுத்ததில்லை. அந்தக் குற்றத்திற்குத்தான் இந்தியன் பீனல் கோடில் தண்டனை கிடையாதே!

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    தங்கள் பதிவு அழகான வார்த்தை கோர்வைகளுடன் மிகவும் அருமை. ரசித்துப்படித்தேன். சரி வர பதில்களை எழுதாத மாணவர்களுக்கு கூட்டிக்குறைத்து 35 மார்கை கொண்டு வருவதில் உள்ள சிரமங்களை தெளிவாக விளக்கி விட்டீர்கள். சுவாரஸ்யமாக இருந்தது. என் வலைதளம் வந்து பதிவுகளை படித்து கருத்துக்கள் வழங்குவதற்கு மனமார்ந்த நன்றிகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூடுமானவரை, எல்லாருடைய எல்லா வலைப்பதிவுகளையும் படிக்க முயற்சி செய்பவன் நான். ஆனால் எல்லாப் பதிவுகளும் பின்னூட்டம் போடுமளவுக்கு ஏற்றதாய் இருப்பதில்லை. ஆகவே படித்துவிட்டு நகர்ந்துவிடுவேன். அதனால் நான் வந்ததும் போனதும் சில நேரங்களில் டெஹ்ரியாமல் இருக்கலாம். உங்கள் வரவுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
    2. 'தெரியாமல்' என்பது "டெஹ்ரியாமல்" என்று வந்துவிட்டது!

      நீக்கு
  10. பன்னீர் பாவம். தெளிந்த குளத்தில் கல் எறிகிற மாதிரி விஷயங்கள் இதெல்லாம்.

    சிக்மண்ட் ப்ராய்டு இந்த மாதிரி சிறார் வயது மனப் போராட்டங்கள் பற்றி நிறைய சொல்கிறார். மாணவர்களை வெண்சுருட்டு (நன்றி: தமிழ்வாணன்) வாங்கி வரச் சொல்லும் ஆசிரியர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரி சின்னச்சின்ன உதவிகளை ஆசிரியருக்குச் செய்யவேண்டும் என்பதல்லவா இந்தியப் பண்பாடு! பழைய குருகுலமாக இருந்தால் சுள்ளி பொறுக்கிக்கொண்டு வரும் வேலையெல்லாம் இருந்ததே! ஆனால் என் வாழ்னாளில் பேப்பர் திருத்திக் கொடுத்தது மனோ சார் ஒருவருக்கே!

      நீக்கு
  11. அருமையான படைப்பு
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  12. மிகச் சுவையாகவும் கருத்துத் தெளிவுடனும் எழுதியிருக்கிறீர்கள் .

    பதிலளிநீக்கு
  13. மிகச் சுவையாகவும் கருத்துத் தெளிவுடனும் எழுதியிருக்கிறீர்கள் .

    பதிலளிநீக்கு
  14. “கனவு காட்சியில் கதாநாயகியை எம்.ஜி.ஆர். எத்தனை முறை கட்டி அணைப்பார்” ... ஆஹா ஆசிரியர் என்றால் இவர்தான் ஆசிரியர் ... பரீட்சை பேப்பர் திருத்தும் பொறுப்பை மாணவர்களிடம் ஒப்படைத்து விட்டு இவர் வேறு எதையோ ..... ஒரு அழகான பழமொழி நினைவிற்கு வருகிறது ஆனால் அதை இங்கு சொல்வது நன்றாக இருக்காது.!!??? கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    பதிலளிநீக்கு