செவ்வாய், ஆகஸ்ட் 06, 2019

சுயமரியாதை - ஓர் உண்மைக் கதைசுயமரியாதை - உண்மைக் கதை

சுமார் ஆறடி  உயரம் இருக்கும் அவருக்கு. மாநிறம். மெலிந்த தேகம். பார்ப்பவர்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு உடல் பல கோணல்களாக இருக்கும். எவ்வளவு வெயில் காலமாக இருந்தாலும் காலில் செருப்பில்லாமல் தான் நடப்பார். பேச்சும் தெளிவில்லாமல்  இருக்கும். வயது 60 ஆவது இருக்கும்.

அவருடைய உண்மையான பெயர் எனக்குத் தெரியாது. அவரை வைத்தி மாமா என்று சிலர் அழைப்பார்கள். சிலர் பிச்சை மாமா என்றும் அழைப்பார்கள். மாமா என்பதில் உள்ள 'மா' என்று ஓசை காதில் விழுந்ததுமே அவர் திரும்பிப் பார்ப்பார். நாம் பேசுவதில் பெரும்பகுதி அவர் காதிற்குள் போகுமா என்று எனக்கு சந்தேகம் உண்டு. ஏனென்றால் நாம் எது கேட்டாலும் அவராக ஏதோ ஒன்றைச் சொல்வாரே தவிர, கேள்விக்கு பதிலாக அது இருக்காது.
 
நல்ல வேளை, இணையத்தில் கிடைத்தது, தையல் இலையின் படம்.  
நான் நான்காவது அல்லது ஐந்தாவது படித்துக் கொண்டிருந்த நேரம். திடீரென்று ஏதாவது ஒரு மாலை நேரம் அவர் வந்திருப்பார். தன் கிராமமான முள்ளண்டரத்தில்   இருந்து இராணிப்பேட்டைக்கு அவர் குறுக்கு வழியில்  நடந்தே வந்திருப்பார் (சுமார் 25 கிலோமீட்டர்). ஆனால் ஆற்காடு வரை பஸ்ஸில் வந்து விட்டு மீதமிருக்கும் இரண்டு கிலோமீட்டர் தூரம் மட்டுமே நடந்து வந்ததாகக் கூறுவார். யாருடைய பரிதாபத்தையும் ஏற்க வேண்டாத மனநிலை.

வரும்போது கையில் ஒரு கோணிப்பையோடு வருவார். அதை வாசல் திண்ணையில் வைத்துவிட்டு, கிணற்றடிக்குப் போய் முகம்-கை-கால் கழுவிக்கொண்டு வருவார். அம்மா தரும் காப்பியை நின்றுகொண்டே மெதுவாகக்  குடிப்பார். “எல்லாரும் சௌக்கியம். நீங்கள்  எல்லாரும் சௌக்கியம் தானே?” என்று  கேட்பார்.

கோணிப்பையில்  என்ன இருக்கும் என்று எனக்குத் தெரியும். தையல் இலை மூன்று கட்டு இருக்கும். கிராமத்தில் பெரிய ஆலமரம் உண்டு. அதன் இலைகளையோ அல்லது பலாச மரத்து இலைகளையோ மெல்லிய தென்னம் குச்சி ஈர்க்கினால் இணைத்து, சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் வட்டவடிவமாகத் தைக்கப்பட்ட இலைகள். அவ்வாறு 50 இலைகள் கொண்டது ஒரு கட்டு.

வாழை இலை விலை அதிகம் என்பதால் சாப்பாடு ஓட்டல்களில் இந்தத் தையல் இலைகளுக்கு மிகுந்த வரவேற்பு உண்டு. மாதம் மூன்று முறையாவது வைத்தி மாமா இப்படி மூன்று கட்டுகளைக் கொண்டு வந்து இராணிப்பேட்டையில் அப்போது இருந்த 'பாலார் கபே' என்ற ஓட்டலில் கொடுப்பார். அதற்கு என்னுடைய துணை அவருக்கு அவசியம். மூட்டையைக் கல்லாவுக்கு அருகில் வைத்துவிட்டு, முகம் கைகளை கழுவிக் கொண்டு, அங்கிருந்த குடிநீர் அண்டாவிலிருந்து தானாகவே ஒரு பெரிய தம்ளரை எடுத்து மடக்கென்று  இரண்டு டம்ளர் தண்ணீர் குடிப்பார்.

பாலார் கபே என்பது கடைத் தெருவில் இருந்த பெரிய ஹோட்டல் தான். ஆனால் மிகவும் பழையது. பல ஆண்டுகளாக வெள்ளை அடிக்கப்படாமல் இருக்கும். வேலை செய்பவர்கள் இரண்டு அல்லது மூன்று பேர்தான் இருப்பார்கள். அதில் உரிமையாளரும் ஒருவர். வாடிக்கையாளர்களும் குறைவுதான். வெள்ளிக்கிழமை சந்தை நாளில் கூட்டம் இருக்கும். வாடிக்கையாளர்களைக் கவனித்து விட்டு நிதானமாக வைத்தி மாமா பக்கம் திரும்பி, "அடடே வந்து ரொம்ப நேரம் ஆச்சா?" என்பார் உரிமையாளர். பதிலுக்குக் காத்திராமல் மூன்று ரூபாய் எடுத்துக் கொடுப்பார். ராஜா தலை போட்ட மூன்று ஒரு ரூபாய் நாணயங்கள். ஒரு கட்டுக்கு விலை ஒரு ரூபாய்.

இலைகள் எல்லாம் நன்றாகக் கழுவித்தான் மாமா கொண்டு வந்திருப்பார். இருந்தாலும் இன்னொருமுறை தன் கண்பார்வையில் சுத்தம் செய்தால்தான் திருப்தி  உரிமையாளருக்கு. “டேய், மணி  ஒரு கட்டை மட்டும் எடுத்து அலம்பி வைடா!” என்பார்.

ரூபாயைப் பெற்றுக்கொண்டு வைத்தி மாமா உடனே நகர மாட்டார். ஒரு நாள் முழுக்க நடந்துவந்த களைப்பு அவர் முகத்தில் தெரியும். காலியான நாற்காலியொன்றில்  அமர்ந்துகொள்வார்.  என்னையும் அருகில் அமரச் சொல்வார். ஆனால் நான் நின்றுகொண்டுதான் இருப்பேன். உடனே உரிமையாளர் தானே ஒரு கப் காப்பி கொண்டு வந்து கொடுப்பார். எவ்வளவு சூடாக இருந்தாலும் ஒரே மடக்கில் அதைக் குடித்துவிட்டு, "வரட்டுமா" என்று கிளம்புவார் மாமா.

ஓட்டல் காப்பி எப்படி இருக்கும் என்று பார்க்க  எனக்கு ரொம்ப நாளாக ஆசை. ஆனால் வீட்டில் அதற்கு அனுமதி இல்லை. சரி இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிடுவேன். 

அடுத்து மாமா என்ன காரியம் செய்வார் என்று எனக்குத் தெரியும். ஓட்டலுக்கு எதிரில் ஒரு ரேஷன் கடை இருந்தது. அதில் அரிசி, சர்க்கரை, மைதா மாவு, கோதுமை எல்லாம் கிடைக்கும். இங்கு மைதா மாவு அரைப்படி வாங்கிக் கொள்வார். 'படி' என்பதெல்லாம் மாறி கிலோ வந்து கொண்டிருந்த காலம். இருந்தாலும் மாமா "அரைப்படி மைதா" என்றுதான் கேட்பார். கடைக்காரர் புரிந்துகொண்டு அதற்கு சமமாக ஒரு கிலோ அல்லது ஒன்றேகால் கிலோ கொடுப்பார். ஹோட்டலில் கிடைத்த மூன்று ஒரு ரூபாய் நாணயத்தில் இருந்து ஒரு நாணயத்தைக் கொடுத்து மீதிச் சில்லரையைக் கவனமாக வாங்கிக்கொண்டு, அதில் ஒரு ஓட்டைக் காலணாவை எனக்கு அன்பளிப்பாகக் கொடுப்பார்.
 
இதுதான் ஓட்டைக் காலணா! இணையமே உனக்கு நன்றி!
அந்த ஓட்டைக் காலணாவை என் ஆள்காட்டி விரலில் நுழைத்துக் கொண்டு அவருடன் நடப்பேன்.

அன்று இரவு அவருக்கு மைதாமாவு கரைத்த தோசைதான். வேறு எந்த உணவையும் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது என்பார். தோசைக்கு சட்டினி எல்லாம் எதிர்பார்க்க மாட்டார். குழம்பு, கூட்டு, ஊறுகாய் எது இருந்தாலும் சரி. மூன்று தோசை சாப்பிட்டு விட்டுத் திண்ணையில் படுத்து விடுவார். “இருபது மைல் நடந்து வந்திருக்கிறார், இன்னும்  இரண்டு தோசை சாப்பிடக்கூடாதோ?” என்று அம்மா கேட்பார். அவரோ வேண்டாம் என்று கையசைத்துவிட்டு எழுந்துவிடுவார். வீட்டில் வேறு யாரும் மைதா தோசை சாப்பிடுவதில்லை என்பதால் அவருக்கு மட்டும் தேவையான மாவைக் கரைத்துவிட்டு மீதியை அந்தக் காகிதப் பொட்டலத்திலேயே சுற்றிச் சணல் போட்டு கெட்டியாகக் கட்டிவைப்பார் அம்மா. அதை வைத்தி மாமா திரும்பிப் போகும்போது  மறவாமல் எடுத்துக் கொண்டு போவார்.

ஆனால் திண்ணையில் படுப்பதற்கு  முன்பு அவர் தவறாமல் செய்யும் காரியம் ஒன்று உண்டு. எங்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடன் வலது பக்கமாகக் கிணறு இருக்கும். அதற்குப் பக்கத்திலேயே சிமெண்ட் தொட்டி  ஒன்று இருக்கும். கிணற்றில் இருந்து இரும்பு வாளியில் சுமார் 40 வாளி தண்ணீர் சேந்தி தொட்டியில்  ஊற்றுவார். தொட்டி வழிந்து ஓடும் வரை ஊற்றுவார். வேண்டாம் என்றாலும் கேட்க மாட்டார். வீட்டில் தங்கியதற்கு வாடகையாக  அதைக் கருதினாரோ என்னவோ!

காலையில் ஆறு மணிக்கு நான் எழுந்து பார்க்கும்பொழுது திண்ணை காலியாக இருக்கும். விடியற்காலை நாலு மணிக்கே எழுந்து கிளம்பி விட்டதாக அம்மா கூறுவார்.

அதுவரையில் நான் கிராமத்திற்குப் போனதில்லை யாகையால்  அவருடைய வாழ்க்கைமுறை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. மிகவும் வறுமையான குடும்பமாக இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். குழந்தைகள் கிடையாது.  மனைவி மட்டும் இருந்தார். அவருக்கும் என்ன பெயர் என்று தெரியாது. வைத்தி மாமி என்றுதான் கூப்பிடுவோம்.

மாமாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மாமி அந்த இலை மூட்டையைத் தானே எடுத்துக் கொண்டு ஆரணி வழியாக பஸ்ஸில் வருவதுண்டு. அப்போது மூட்டையை ஓட்டலுக்குச் சுமந்துபோய் விற்பனை செய்துவரும் கூடுதலான வேலை என் மேல் விழும். ஆனால் மாமியிடம் இருந்து  ஒரே ஒரு ஓட்டைக் காலணா  கூடக் கிடைக்காது என்பது என் அந்த மாதத்தியப் பொருளாதார நிலையை பாதித்த மிக முக்கியமான சோகம்.

மாமா மாமி இருவரிடமும்  நல்ல வேட்டி, புடவை கிடையாது. அழுக்குப் படிந்து கிழிந்திருக்கும். ஆகவே அப்பா, தனக்குத் தெரிந்தவர்கள் யாராவது திதி கொடுக்கும் போது இவர்களை அழைத்துக்கொண்டுபோய்  வேட்டி புடவை தானமாகப் பெற்றுக் கொடுப்பது உண்டு. ஆனால் அதையும் வருடத்துக்கு இரண்டு தடவைக்கு மேல் இவர்கள் பெற்றுக் கொள்ள மாட்டார்கள். "எங்களுக்குப் போதும், வேறு யாராவது ஏழைகளுக்கு வாங்கிக் கொடுங்களேன்" என்று மாமி கூறிவிடுவார். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். மாமியுடன் வரும்போது மட்டும் இருவரும் இராணிப்பேட்டையில் இருந்து பஸ்ஸில் ஏறிப் போவார்கள்.  எனது சேவைக் கட்டணமாக ஓர்  ஓட்டைக் காலணா கொடுக்க வேண்டும் என்று மாமாவுக்கு ஆசை இருக்கும். ஆனால் மாமியைக்  கண்டு பயம். ஆகவே கொடுக்காமல் போய்விடுவார். அப்படியானால் இவ்வளவுநாளும் மாமிக்குத் தெரியாமல்தான் என்னோடு வரவு செலவு நடத்துகிறாரா? சரி, அடுத்த முறையாவது கொடுக்கலாம் அல்லவா? அதையும் செய்யமாட்டார். எனவே மாமியை நான் உள்ளுக்குள் வெறுக்க ஆரம்பித்தேன்.

எதிர்பார்ப்பை உண்டாக்கி விட்டு அதை நிறைவேற்றாமல் போகிறவர்களைப் பார்த்தால் இப்போது எனக்கு ஏற்படும்  ஆத்திரம், அப்போது ஏற்பட்ட பழக்கமாகத்தான் இருக்க வேண்டும்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு மாமா மாமி இருவரும்  வருவதே இல்லை. ஒருவர் பின் ஒருவராகக் காலமாகி விட்டார்கள் என்று தெரிந்தது.

என்றாலும், கடைசி வரையில் இலவசம் கூடாது, தன் உழைப்பினால் மட்டுமே சாப்பிட வேண்டும், மற்றவர்களுக்குச் சுமையாக இருக்கக்கூடாது, தேவைக்கு மேல் ஆசைப்படக்கூடாது என்பதற்கு உதாரணமாக விளங்கிய இவர்களை என்னால் மறக்க முடியவில்லை.

*****
அதே முள்ளண்டரம் கிராமத்தில் என்னுடைய அத்தை ஒருவர் இருந்தார். திருமணமாகிச் சிறிது காலத்திலேயே கைம்பெண் ஆனவர். அந்தணர்க் குடும்பங்களில் விசேஷ நாட்களுக்கு சமையல் வேலைகளுக்கு உதவி செய்து அதன் மூலம் தனக்கும் தன் மகளுக்கும் ஆன  தேவைகளைச் சமாளித்துக் கொண்டிருந்தவர்.

அவரும் இப்படித்தான் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வருவார். யாராவது ஒரு வீட்டிலிருந்து அழைப்பு வந்திருக்கும், அதற்காகத்தான். அந்த வீட்டு விசேஷங்கள் முடிந்த பிறகு இரவு எங்கள் வீட்டில் தங்கிவிட்டு விடியற்காலை பஸ்ஸில் கிளம்புவார். அப்போது அவருக்குத் துணையாக பஸ் நிலையம் வரை நான் போய் வருவேன். பஸ் வந்து நின்றவுடன், தன் இடுப்பில் இருக்கும் சுருக்குப் பையை எடுத்து அதிலிருந்து ஓரணா நாணயத்தை எனக்குக் கொடுத்து, "நன்றாகப் படி" என்று வாழ்த்திவிட்டுப் பிறகுதான் பஸ்ஸில் ஏறுவார். அதற்குள் கண்டக்டர் பொறுமை இல்லாமல் "இந்தாம்மா, சீக்கிரம்  வண்டியில் ஏறு" என்று கோபப்படுவார்.

வாய் விட்டுத் தன் கஷ்டங்களை அவர் கூறியதில்லை. ஒரு ரூபாய் கடன் கொடு என்று யாரிடமும் கேட்டதில்லை. சொந்தமாக ஓர் இடிந்த வீடு இருந்தது. மழை பெய்யாத நாட்களில் அதில் இருப்பதில் அதிகச் சிரமம் கிடையாது.

இரண்டு பெரிய திண்ணைகள் இருந்தது, சரியான அறைகள் இல்லாத குறையை ஓரளவு ஈடுசெய்தது. வீட்டின் பின்புறம் சற்றுத் தொலைவில் இருந்த மரம், செடி, கொடிகளும் புதர்களும் வழக்கமான காலை நேரத் தேவைகளுக்கு வேண்டிய மறைப்பை வழங்கியிருந்தன. எப்படியோ கிராமத்து சூழ்நிலையில் மிகக்குறைந்த தேவைளைப் பூர்த்தி செய்துகொண்டு தன் மகளையும் திருமணம் செய்வித்தார்.
 
இணையத்தில் செய்த கைமுறுக்கு. சோயாமாவினால் அல்ல!
அத்தை கைமுறுக்கு செய்வதில் மிகவும் கெட்டிக்காரர். ஒருமுறை அவரது மகள் அங்கன்வாடியில்   வேலைக்குப் போனார். அப்போது அமெரிக்காவில் இருந்து இலவசமாகப் பெறப்பட்ட  சோயா மாவு அங்கன்வாடிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. நமது தமிழ்நாட்டுச் சூழ்நிலைக்கு அந்த மாவினால் தயாரிக்கப்படும் எந்தப் பலகாரமும் பொருத்தமாக இல்லாததால்  குழந்தைகள் அவற்றை உண்ண மறுத்தன. எனவே சோயா மாவு அதிகமாக மீந்துபோய் வீணாகிக் கொண்டிருந்தது. அப்போது தான் அத்தைக்கு  அந்த யோசனை தோன்றியது.

சோயா மாவினால் கைமுறுக்கு செய்தால் என்ன என்ற யோசனைதான் அது. உடனே செயல்படுத்தினார். அப்போது தமிழ்நாட்டில் பாமாயில் கிடைக்க ஆரம்பித்து இருந்தது. அதனுடைய வாசனை (அல்லது துர் நாற்றம்) முதலில் நம்மைத் துரத்துவதாக இருந்தாலும் பழக்கப்பட்ட பிறகு அதை மக்கள் பயன்படுத்தத் தொடங்கினார்கள். ஆனால்  சோயா மாவில், பாமாயில் கொண்டு செய்யப்பட்ட கை முறுக்கு  மோசமான வாசனை எதுவும்  இல்லாமல்  கடலை எண்ணெயில் செய்தது போலவே அருமையாக இருந்ததாம். அதைக் குழந்தைகள் விரும்பிச் சாப்பிட்டார்களாம்.

இந்தத் தகவல் பரவியதும், மற்ற அங்கன்வாடிகளிலும்  இதே மாதிரி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். உப்பு சப்பில்லாத சோயாமாவுப் பலகாரங்களை விட இந்தக் கைமுறுக்கு கொறிப்பதற்கு ஏற்றதாகவும், அதிகக் கரகரப்பாகவும்  இருந்ததால் வழக்கத்தைவிட அதிகமாகவே அங்கன்வாடிக்குக் குழந்தைகள் வர ஆரம்பித்தார்கள். அதனால் அதிகாரிகளிடமிருந்து அத்தையின் மகளுக்குப் பாராட்டும் கிடைத்தது.

ஒருமுறை என் வீட்டு விசேஷம் ஒன்றுக்கு அத்தை வந்தபோது ஒரு பெரிய அலுமினிய அடுக்கில் கிட்டத்தட்ட நூறு கை முறுக்குகள் சீர்வரிசை மாதிரி செய்துகொண்டு வந்திருந்தார். மூன்று சுற்று முதல் ஏழு, ஒன்பது சுற்றுவரை செய்திருந்தார். அனைவரும் அதை விரும்பிச் சாப்பிட்டார்கள். அது சோயா மாவினால் செய்தது என்று அத்தை கடைசியாகச் சொன்னபோது யாருக்கும் நம்பிக்கை ஏற்படவில்லை!

பல ஆண்டுகள் கழித்து அத்தை மறைந்து போனார்கள். ஆனால் அவர்கள் செய்த கைமுறுக்கு இன்றும் என் நினைவில் இருக்கிறது. அதைவிடவும் யாருக்கும் சுமையாக இல்லாமல் யாரிடத்திலும் கடன் கேட்காமல் யாரையும் தனக்கு உதவவில்லையே என்று குறை கூறாமல் பெருந்தன்மையோடு வாழ்ந்து மறைந்த அவர்களின் வாழ்க்கை இன்றும் நினைவில் இருக்கிறது.

சுயமரியாதை, சுயமரியாதை என்கிறார்களே இதல்லவா சுயமரியாதை!

© இராய செல்லப்பா

18 கருத்துகள்:

 1. நல்ல தலைப்பு. இரண்டு சம்பவங்களும் மனதில் நிற்கும் சம்பவங்கள். ஒரு ஓடைக்காலணாவுக்கு உங்கள் காலத்தில் என்னென்ன பொருட்கள் வாங்கி இருக்க முடியும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீட்டில் இருந்து பள்ளிக்குப் போகும்போது இரண்டு பெரிய போண்டாக்கள் வாங்கி உங்களுக்கு ஒன்றும் எனக்கு ஒன்றும் எடுத்துக் கொள்ளலாம். இன்னும் பல. மறந்துவிட்டது.

   நீக்கு
 2. "வேண்டாம், சில்லறையாக கொடுங்கள் இல்லை நாளை சேர்த்து கொடுங்கள்..."

  ஒரு ரூபாய் கூட அதிகம் வாங்காதவர்கள் இன்னமும் வாழ்கிறார்கள்... எனக்கு தெரிந்து கீரை கொண்டு வருபவரும், பூ விற்கும் அம்மாவும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், நம் வாழ்விற்கு அர்த்தத்தை ஏற்படுத்துபவர்கள் அவர்கள்!

   நீக்கு
 3. சார் அருமையான இரு நபர்கள் குறித்து சொல்லியிருக்கீறீர்கள். நிச்சயமாக இதுதான் சுய மரியாதை.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமோதிப்பிற்கு நன்றி. பெரும்பாலும் மனைவி அல்லது அம்மா போன்ற பெண்மணிகள் தான் சுயமரியாதையை நமக்கு விடாமல் உணர்த்துகிறார் கள்.

   நீக்கு
 4. ஓலா ஆட்டோக்காரர்களில் சிலர் ஒரு ரூபாய் மீறுவதைக் கூட நாம் கொடுத்தாலும் வாங்காதவரள் இருக்கிறார்கள். அது போல சென்னையில் நான் ஜியோ ரீசார்ஜ் செய்யும் கடையில் 399 க்கு மீதி ஒரு ரூபாயை தரமாட்டார்கள். ஆனால் இங்கு அந்த ஒரு ரூபாயையும் தந்துவிடுகிறார்கள் சார்ஜ் செய்யும் கடையில்.

  இப்படியும் சிலர் இருக்கிறார்கள் தான். ஆனால் பாட்டாவில் (செருப்பு கடையில்) பெரும்பாலும் தருவதில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெங்களூரில் ஆட்டோக்காரர்கள் சென்னையை விட நியாயமாக வே நடந்துகொள்கிறார்கள். ஆனால் இப்போது நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. சென்னை ஆசாமிகள் அங்கே வீடு எடுத்துக் கொண்டு இருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன. ஜாக்கிரதை! பாட்டா மட்டுமல்ல, ஆங்கிலப் புத்த்கங்கள் விளையும் 299, 499 என்றுதான் இருக்கும். மீதி ஒரு ரூபாய் தருவதில்லை.

   நீக்கு
 5. சுயமரியாதை - உண்மையான சுயமரியாதை என்பது என்ன என்பதை இந்த பதிவு சொன்னது. இரண்டாவது நபர் எங்கள் அம்மாவின் அத்தையை நினைவுக்குக் கொண்டுவந்தார். ருக்கு அத்தை என்ற தலைப்பில் என் பக்கத்தில் ஒரு பதிவு எழுதினேன் அவர் குறித்து.

  ருக்கு அத்தை இப்படி தையல் இலையில் தான் சாப்பிடுவார். அவருக்கு நெய்வேலியின் குண்டான்குளம் கரையில் இருந்த அரச/ஆல மரங்களிலிருந்து இலைகள் பறித்து வந்து தந்தது இன்னமும் பசுமையாய் நினைவில்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறிப்பாக அக்காலத்தில் கைம்பெண் ஆனவர்கள் மிக உயர்ந்த அறநெறி யைக் கொண்டிருந்தார்கள். சுய கட்டுப்பாடு சுயமரியாதையை கொண்டுவந்து நிறுத்தியது. தன்னால் மற்றவர்களுக்கு பணக் கஷ்டம் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருந்தார்கள். பல வீடுகளில் அவர்கள் கண்டிப்பின் வடிவமாகவே இருந்திருக்கிறார்கள்.

   நீக்கு
 6. வைத்தி மாமா-- மாமி, அத்தை மாமி -- ரெண்டு பேருமே அருமையான பழைய வார்ப்புகள்..

  மதுரையில் மொட்டைக் கோபுரத்திற்கு எதிரே அன்னக்குழி மண்டபம் ஸ்கூல் என்று ஒன்று இருந்தது. மிடில் ஸ்கூல். என் ஆறாம் வகுப்பு படிப்பு அங்கே தான். ஒரு காலத்தில் யாகசாலையாக இருந்திருக்கும். ஞாயிறு விடுமுறை நாட்களில் இந்த ஸ்கூல் மணல்வெளி பிரதேசத்தில் யாகங்கள் நடக்கும். இந்த ஓட்டை காலணாவை நிறைய
  யாகத்தீயில் இடுவார்கள். யாகத்தீ அடங்கி, சாம்பலாய் பூத்ததும் அடுத்த நாள் நீர் தெளித்து ஒட்டை காலாணாவை வேண்டுவோருக்கு வழங்குவார்கள். அந்த மாதிரி வழங்கிய ஒரு ஓட்டை காலாணாவை என் சிறு வயதில் அரைநாண் கயிரில் ரட்சை மாதிரி கோர்த்துப் போட்டிருந்த நினைவு வருகிறது. சொல்லும் பொழுது ஓட்டை காலணா என்று சொல்ல மாட்டோம். காலணா தான். காலணா, அரையணா, ஓரணா.
  ஒரு ரூபாய்க்கு 16 அணாக்கள்.

  ஓரணா மட்டும் முனை நெளிநெளியாக இருக்கும். 'ஓரணா போல நெளிநெளியான கூந்தல்' என்று கலைஞர் வசன வரி ஒன்று உண்டு. பணம் என்னும் படத்தில் என்று நினைக்கிறேன்.

  நல்ல பல பழைய நினைவுகளை மீட்டியமைக்கு நன்றி, ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், ஐயா..சில நினைவுகளை மறக்க முடிவதில்லை. 'என்னை எழுது' என்று திடீரென்று எங்கிருந்தோ வந்து வற்புறுத்துகின்றன.

   நீக்கு
 7. வைத்தி மாமா முறுக்கு சுற்றிய அத்தை போன்றவர்களை நானும் நேரில் பார்த்திருக்கிறேன்...

  என் உறவினர்கள் சிலர் இப்படி வாழ்ந்து மறைந்திருக்கின்றனர்...

  இங்கே அவர்களைப் பற்றிப் படிக்கும்போது மனம் கலங்கி கண்கள் கசிவதைத் தடுக்க முடியவில்லை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே, நமது முந்தைய தலைமுறையினர் எவ்வளவு உயர்ந்த நெரிகளோடு வாழ்ந்து இருக்கிறார்கள்! வரவுக்கு நன்றி.

   நீக்கு
 8. வைத்தி மாமா மற்றும் உங்கள் அத்தை...இருவரும் மனதில் பதிந்துவிட்டனர்.

  பதிலளிநீக்கு
 9. தையல் இலை இப்போதும் எங்கள் ஊரில் கிடைக்கின்றன ... ஆனால் ஓட்டை காலணாதான் இதுவரை கண்ணில் சிக்கவில்லை... கூகிள் ஆண்டவர் தயவாலும் உங்கள் தயவாலும் காண கிடைத்தது மகிழ்ச்சி !!! கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

  பதிலளிநீக்கு