திங்கள், ஜூன் 01, 2015

எது வேண்டும் சொல் தோழா-BLOG ஆ, FACEBOOK ஆ ?

கடந்த நான்கு மாதங்களாக  உங்களை BLOG வழியாகச் சந்திக்காமல் இருந்துவிட்டேன் தோழர்களே. மன்னித்துவிடுங்கள். காரணம் என்ன தெரியுமா?

ஃபேஸ்புக் என்னும் முகநூலில் எப்படியோ இணைந்துவிட்டேன். எனக்குத் தெரியாமலேயே எனது பொன்னான நேரம் முழுதும் வீணாகிக்கொண்டிருக்கிறது. (உதாரணம் சொல்லவேண்டும் என்றால் விஜய் டிவியில் கோபிநாத் நடத்தும் 'நீயா நானா' பார்க்கும் அனுபவம் மாதிரி.)

ஒன்றா இரண்டா என்று எண்ணிக்கொண்டிருந்த காலம் போக, இப்போது ஆயிரக்கணக்கில் நட்பு அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. ஓரளவுக்கு அழைப்பாளர்களின் முகநூல் பக்கத்திற்குச் சென்று விசாரித்துவிட்டுத்தான் அழைப்பை ஏற்கிறேன். என்றாலும் சிலரை மறுக்கவேண்டியிருக்கும்போது மனது சங்கடப்படுகிறது. அதே சமயம் எனது நட்புவட்டத்தில் எழுதுபவர்களும் அதிகரித்துக்கொண்டே போகிறார்கள். அவர்களின் படைப்புகளைப் பார்வையிடுவதில் அதிக நேரம் கழிந்துபோகிறது.

பெரும்பாலும் அரட்டை அடிப்பவர்கள்தான் மிகுதி என்றாலும்,  முகநூலை BLOGGER மாதிரியே பயன்படுத்தும் மேலானவர்களும் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். செங்கோட்டை  ஸ்ரீராம், கீழாம்பூர் முதலிய பத்திரிகையாளர்களின் முகநூல் பதிவுகளும் புகைப்படங்களும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம் போன்ற ரகம். ஹோசூர் கண்ணன் ஒரு நாளைக்கு நான்குமுறையாவது ஜோக்குகளை அள்ளித் தெளிக்கிறார். அரவிந்த அன்னை, ரமண மகரிஷி, வியாழக்கிழமைதோறும்  ஷீரடி சாயிபாபா -என்று  ஆன்மிகப் பக்கங்கள் பலரால் நடத்தப்படுகின்றன. காலையில் விழிக்கும்போதும் இரவில் படுக்கப்போகும்போதும் பக்திபூர்வமான இம்முகநூல் பதிவுகளைப் பார்க்கும்போது  மனதுக்கு எவ்வளவு ஆறுதல் கிடைக்கிறது தெரியுமா?

நாள்தோறும் ஒரு திருக்குறளை அதன் பொழிப்புரையுடன் ஒருவர் தருகிறார். இன்னொருவரோ, திருக்குறளை அழகான பாடலாக்கித் தினமும் அளிக்கிறார். அண்மையில் ஒரு பேராசிரியர், தான் பழகிய தமிழ்ச்சான்றோர்களைப் பற்றி தினம் ஒருவர் வீதம் வரலாற்று ஆவணம்போல அறிமுகப்படுத்திவருகிறார்.

கவிஞர்களைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. BLOG கவிஞர்கள் எல்லாருமே அநேகமாக முகநூலுக்குத் தாவிவிட்டார்கள் என்று தோன்றுகிறது. நொடிக்குநொடி ஐந்துமுதல் பதினைந்துவரையான வரிகளில் கவிதைகள்  அருவி மாதிரி கொட்டுகின்றன. அந்தக் கவிதைகளுக்கு அவர்கள் இணைக்கும் அழகிகளின் படங்கள் ...அம்மம்மா... அவற்றின் தரமே தனி!

சிலர் இப்போது தொடர்கட்டுரைகளையும் தொடர்கதைகளையும்கூட முகநூலில் எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

குமுதம், விகடன் முதல் பெரும்பாலான  இதழ்களும் இப்போது முகநூலின் வழியாகப் படிக்கவும் விமர்சிக்கவும் கிடைக்கின்றன.

அதெல்லாம் விடுங்கள்.  தொலைக்காட்சியைவிட வேகமாகச் செய்தியைத் தாங்கிவரும்    சாதனமாக முகநூல் உருவெடுத்துவிட்டது. தனக்குப் போட்டியாக வளரவிருந்த 'வாட்ஸ்-அப்'பை  19 பில்லியன் டாலர்கள் கொடுத்து வளைத்துப்போட்டுவிட்ட மேதாவித்தனம் நம்மை அசரவைக்கிறது.

அன்றாட நிகழ்வுகளைப் பற்றிய விவாதங்கள் சுடச்சுட நம்மை வந்துசேருவது முகநூல் மூலமாகத்தான். சிலசமயம், பின்னூட்டப் போர்கள், ஆயுதம்தாங்கிய போர்களைவிட அனல்பறக்கும் வகையில் நிகழ்கின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தோழர்களே சொல்லுங்கள், BLOG களுக்கு எதிர்காலம் இருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அல்லது, BLOG எழுதும் நாமெல்லாம் இனி முகநூல் மூலமாகவே பேசிக்கொள்வது  சிறப்பானது என்று கருதுகிறீர்களா?

"BLOGஐ படிக்காமல் இருந்துவிடலாம். ஆனால், FACEBOOKஐ படிக்காமல் இருக்கமுடியுமா? எனவே, FACEBOOKஐ நாம் விரும்பியவண்ணம் பயன்படுத்திக்கொண்டு மேல்நோக்கி நகர்வதுதானே அறிவுடைமை?" என்று ஓர் அறிவார்ந்த நண்பர் கூறினார். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? BLOG ஐ  ஒரேயடியாக மூடிவிட்டு FACEBOOKஐ வளர்த்தால் அது தவறாகுமா?

தயவு செய்து எனக்கு ஆலோசனை தாருங்கள். பின்னூட்டம் இடுங்கள்.

உங்கள் கருத்தை வைத்தே நான் இனிமேல் BLOG ஆ, FACEBOOK ஆ என்று முடிவெடுக்கவேண்டும்.
செய்வீர்களா? செய்வீர்களா?

அன்புடன்,

இராய செல்லப்பா, சென்னை
(செல்லப்பா  யக்யஸ்வாமி)
chellappay@yahoo.com

29 கருத்துகள்:

  1. BLOG ஆ, FACEBOOK ஆ
    எது வேண்டும் சொல் தோழா
    என்றால் BLOG என்றே சொல்வேன்!

    பதிலளிநீக்கு
  2. அவசரமாக காலையில் அலுவலகத்துக்கு
    ஓடுகையில் மனைவி கொடுத்த காஃபியை
    வாயில் கொட்டியபடி ஓடுவதற்கும்

    மாலையில் கைலியை அணிந்து
    ஈஸி சேரில் சாயந்தபடி காஃபியை
    குடிப்பதற்குமான வித்தியாசமே

    இரண்டுக்குமான வித்தியாசமாகப் படுகிறது
    எனக்கு

    இரண்டும் தேவையானதாகத்தான் படுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களிடமிருந்து நான் வேறுபடுகிறேன் நண்பரே! (௧) அலுவலகம் செல்லும்போது என் மனைவி காப்பி கொடுத்ததில்லை. மோர் தான் கொடுப்பார். (௨) மாலையில் நான் கைலி அணிவதில்லை. காரணம் என்னிடம் கைலி ஒன்றுகூட கிடையாது! இருந்தாலும் தங்கள் கருத்துதான் சரியானதாக இருக்கும் என்று தோன்றுகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாமே எதோ ஒரு சமயத்தில் நமக்குப் பயன்படத்தக்கவைதான்.

      நீக்கு
  3. எனது விருப்பம் வேலைப் பூ தான் ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அதுவேதான் விருப்பம். இருந்தாலும் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் -ஆண், பெண், குழந்தைகள், ஈ, எறும்பு, காக்கை, பூனை, நாய் உள்பட - எல்லாரும் முகநூலில் வந்து அமர்ந்துகொண்டு வேளைக்கொருதரம் சுயபடத்தை வெளியிட்டு, லைக் போடச் சொல்கிறார்கள் என்னும்போது, நமக்கும் சபலம் தட்டுகிறதல்லவா? அதனால் வந்த குழப்பம். அவ்வளவே.

      நீக்கு
  4. அடடா...! நீங்களுமா ஐயா...?

    வதனப் புத்தகம் : சிற்றின்பம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படிச் சொல்லிவிட்டீர்களே நண்பரே! 'சிற்றின்பம் இல்லாமல் பேரின்பம் ஏது' என்ற கண்ணதாசனின் வரிகள் பயமுறுத்துகின்றனவே!

      நீக்கு
  5. வணக்கம்
    ஐயா.

    முகநூல் வழி பல பிரச்சினைகள் வரும் ... விட்டு விலகுவது நன்று.. என்னைப்பொறுத்த வரையில்..... வலைப்பூ நல்லது என்றுதான் நான் சொல்லுகிறேன் ஐயா. தங்களின் பதிவுகளைவிரும் பிபடிப்பவன் நான் நீண்ட நாட்கள் பதிவு இல்லாத காரணத்தால் நான்விரக்தி அடைந்து விட்டேன் .. வலைப்பூவை தொடர்வது சிறந்தது. பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்துலகத் தமிழ்ப் பதிவர்களின் மேலான யோசனைப்படி, இனி நான், தொடர்ந்து வலைபதிவுகள் எழுதுவேன் என்று உறுதியளிக்கிறேன். நண்பர்களின் வலைப்பூக்களையும் சென்று சேகரிப்பேன் என்றும் உறுதியளிக்கிறேன். சரியா?

      நீக்கு
  6. ஏன் ஏதாவது ஒன்றுதான் என்று முடிவெடுக்கிறீர்கள்? இரண்டையும் சரியான அளவில் உபயோகிக்கலாமே... நான் இரண்டிலுமே இருக்கிறேன். இரண்டிலும் குறை வைக்கவில்லை! வலைப்பூவில் எழுதி விட்டு, அதையும் ஃபேஸ்புக்கில் பகிர்கிறேன். மற்ற பொழுது போக்கு அம்சங்களையும் அங்கு ரசிக்கிறேன். பாஸிட்டிவ் செய்திகள சிலவற்றை பகிர இடம் இல்லை என்பதால் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து லிங்க் தருகிறேன்.

    இரண்டையும் சரியான அளவில் உபயோகிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் ஆலோசனைப்படியே, இனி முகநூலிலும், வலைப்பூவிலும் தொடர்ந்து வலம்வருவேன் என்று உறுதியளிக்கிறேன் நண்பரே!

      நீக்கு
  7. வலைப்பூ முகநூல் இரண்டுமே கருத்துப் பரிமாறல் என்றால், வாட்சப் அந்த இடத்தை வேகமாக பிடித்துக்கொண்டு வருகிறது.

    கருத்துக்கள் என்னங்களாகத் தோன்றி, சொல்வடிவம் பெறுவதற்கு முன்பே ஒரு உருவாகத் தோன்றுவது சாத்தியம்.

    இதை அறிந்த இன்ச்டாக்ராம் இன்னொரு வழியிலும் டம்பளர் பிறிதோர் வழியிலும் சென்று கொண்டு இருக்கிறது.

    பெரியதோர் வித்தியாசம் இவைகளிடையே தற்போது இல்லை.

    பொழுது போகாதவர், பொழுது போகாதவருக்காக, பொழுதைப் போக்குவதற்காக, செயல்படுவதே இவைகள் எல்லாம்.

    இதெல்லாம் நடைபெறுவதால், தனி மனிதருக்கு ஆக்க பூர்வமான முன்னேற்றம் ஏற்படுகிறது என்பதை கூற இயலவில்லை.

    இருந்தும் உபயோகிக்கிறோம். !!

    உடனடி காரணம். செல்லப்பா சாருடன் சிலவில்லாமல் பேச சாத்தியம்.

    சுப்பு தாத்தா
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுப்புதாத்தாவுக்கே உரிய சொல்லாடல். நன்றி ஐயா! தங்களுடன் பேசுவதற்கென்றே தாங்கள் வலம்வரும் ஊடகங்களில் நானும் வருவேன். நன்றி!

      நீக்கு
  8. எங்கள் கருத்து....ஒருவர் வதனத்தில் வதனத்தைக் காட்டுவதில்லை!!! மற்றொருவர் இருந்தாலும் வருவது அரிது. எங்கள் தளத்துப் பதிவுகளை வதனத்தில் பிரதிபலிக்க வைத்து இரண்டையும் கையாளுதலே சரி என்று தோன்றுகின்றது. அது தங்களின் நேரத்தைப் பொறுத்தது.

    வதனம் சந்திரபிம்பமாகி குளிர்வித்தாலும், வலைப்பூ தானே நேரில் மணம் வீசும். உங்கள் புகைப்படத்திற்கு எத்தனை லைக்குகள் சார்?! ராயச் செல்லம்மா என்று ஒரு பெண்ணின் ஃபோட்டோவும் போட்டீர்கள் என்றால் உங்களுக்கு நிறைய லைக்ஸ் கிடைக்கும் சார்!

    வலைப்பூவில் எத்தனை வண்டுகள் உங்களுக்கு வருகின்றன.....என்னடா இது இரண்டும் என்று சொல்லிவிட்டு இப்படி எழுதுகின்றார்களே என்று நீங்கள் யோசிக்கின்றீர்களா? இரண்டும் என்பதுதான் எங்கள் கருத்து......வாதம் பிரதிவாதம் போல் உங்களுக்காகத்தான் இந்த ப்ராஸ் அண்ட் கான்ஸ்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைப்பூவில்தான் வாசகர்கள் அதிகம். அதிலும் சீரியசான வாசகர்கள். முகநூலில் அந்த அளவுக்கு ரசனை முன்னேற இன்னும் சில வருடங்களா ஆகலாம். நீங்கள் சொன்னதுபோல், இரண்டுமே நமக்குத் தேவைதான் என்பதை ஒப்புக்கொள்கிறேன். (பெண்கள் பெயரில் fake ID போடுவதில் எனக்கு அச்சம் மிகுதி என்பதை அறியவும்!)

      நீக்கு
  9. என்னால் வலைப்பூவை விடமுடியாது.i feel more comfortable with blog and more at homeஇதெல்லாம் அவரவர் மனப்பாங்கைப் பொறுத்தது.உங்களுக்கு எது வசதியோ,எது பிடிக்கிறதோ அதைப் பிடித்துக் கொள்ள வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும்அப்படித்தான் தோன்றுகிறது ஐயா! வலைப்பூவை ஆறுமாதம் கழித்தும் படித்துப் பயன்பெற முடிகிறது. முகநூலில் வருவது குறிப்பிட்ட அளவுக்குமேல் ஆனதும் மறைந்துபோகிறது. எனவே வலைப்பூவே அதிக மனம் தரக்கூடியது என்பதை ஒப்புக்கொள்கிறேன்!

      நீக்கு
  10. இவ்வாறு நன்கு விவாதிக்கவும், தேடும்போது (பொருளடக்கம் போல) எளிதில் கண்டுபிடிக்கவும், ஆவணப்படுத்தவும் வலைப்பூதான் சரி என்பது என் கருத்து. தங்களை மறுபடியும் வலைப்பூவில் கண்டதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியர்கள் உரைக்கும்போது எளியவனால் மறுக்கவும் இயலுமோ? வலைப்பூவை விடமாட்டேன். தொடர்ந்து எழுதுவேன். தங்கள் எழுத்துக்களையும் விடாமல் தொடருவேன். நன்றி.

      நீக்கு
  11. இவ்வாறு நன்கு விவாதிக்கவும், தேடும்போது (பொருளடக்கம் போல) எளிதில் கண்டுபிடிக்கவும், ஆவணப்படுத்தவும் வலைப்பூதான் சரி என்பது என் கருத்து. தங்களை மறுபடியும் வலைப்பூவில் கண்டதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  12. சிங்கம் சிங்கிளாத்தான் வரும் ,பன்னி கூட்டமாத்தான் வரும் ......வலைப்பூ சிங்கம் மாதிரி ,நீங்க சிங்கமா இருக்கப் போறீங்களா ,அல்லது ...................நீங்களே முடிவு பண்ணிக்குங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயய்யோ, வேண்டாம் பகவானே! நான் சிங்கிளாகவே வரத்தயார்! சிங்கமாகவே இருக்கச் சம்மதம்!

      நீக்கு
  13. ungal blog.ku nan indruthaan muthal varukai.
    march 01, 2013 ningal ezuthiya muthal pathivaiyum thedi sendru vasikka mudikirathu endral athu blog oda thani sirapputhane sir.
    ithu mathiri ellam fb la vaasikka mudiyathu sir.

    fb la instant aa status ku like-comments kidaikkalam thavira
    ethanai nallukku facebook irukkum enpathu santhekam.

    Orkut pochu, facebook down achu, tharpothu whatsap top aa irukku. ivai ellam karuthu parimaatrathirkku uthavalam thavira
    namakku pirakum namathu ezuthu adayaalamaka iruppathu blog mattum tan enathu karuthu sir.

    பதிலளிநீக்கு
  14. எது வேண்டும் சொல் தோழா-BLOG ஆ, FACEBOOK ஆ ? – என்ற உங்கள் கேள்விக்கு ஒரு பதிவே எழுதலாம்.”நான் ஒரு வலைப்பதிவர்” ( IAM A BLOGGER ) – என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்.

    மேலை நாடுகளில் FACEBOOK – ஐ உண்மையிலேயே, ஒரு சமூக வலைத்தளமாகவே (மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களாகவே) பாவிக்கின்றனர். இங்கோ இந்தியாவில் FACEBOOK என்பது பெரும்பாலும் ஜாதி, மதம், கட்சி போன்ற குழுக்களால் ஆதிக்கம் செய்யப்படுகின்றது.

    த.ம.8

    பதிலளிநீக்கு
  15. முகம் பார்க்க முகநூல் அகம் காண வலைப்பூ என்பதே என் கருத்து!
    முகத்தில் பூச்சு பொய் அகத்தில் ஆனந்தம் நிஜம் ஆக்கம் வாழும் இடம் வலை.

    பதிலளிநீக்கு
  16. அடிக்கடி இணையச்சிக்கல் விரைவில் தொடர்ந்து வலையில் சந்திப்போம் ஐயா!

    பதிலளிநீக்கு
  17. எழுத்தின் தரத்தை வைத்து, வலைப்பூ நடத்துபவர்களோடு நண்பர்களாகிறோம். அவர்களைப் பற்றிய விபரங்கள், நமக்கு நன்கு தெரியும்.
    முகநூலில் சிலரின் உண்மையான அடையாளம் தெரிய வாய்ப்பில்லை. அவர்கள் விடுக்கும் நட்பு அழைப்பை ஏற்றுக்கொண்டால், எதிர்காலத்தில் பிரச்சினை வர வாய்ப்பிருக்கிறது. அதிலும் பெண்களுக்குப் பிரச்சினைகள் அதிகம் என்பதால், நான் வலைப்பூவையே அதிகம் பயன்படுத்துகிறேன்.
    ஒரு நாள் வலைப்பூ, மறுநாள் முகநூல் என்றும், நீங்கள் திட்டமிட்டுக் கொள்ளலாம். தேவையில்லாத அரட்டையில், நம் பொன்னான நேரம், வீணாகாமல் பார்த்துக்கொள்வது தான் முக்கியம்.

    பதிலளிநீக்கு