பதிவு 06/15 – ஜூன் 04, 2015
ஆப்கனிஸ்தானத்தில் பட்டம் விரட்டும் போட்டி பார்த்ததுண்டா?
காலித் ஹுசைனியின் நாவல்:
‘பட்ட விரட்டி’ –
The Kite Runner by Khaled Hosseini
பலூசிஸ்தானில் ஒரு கரடியுடன் எந்த ஆயுதமும்
இல்லாமல் வெறுங்கையுடன் எனது அப்பா சண்டையிட்டிருந்தார். இந்தக் கதை வேறு எவரைப்
பற்றியதாகவோ இருந்திருந்தால் அப்போதே அது கட்டுக்கதை என்று ஒதுக்கப்பட்டிருக்கும்.
ஏனெனில் எதனையும் மிகைப்படுத்திக் கூறுதல் ஆப்கானிய குணம் என்பது வருத்தமான ஒன்று.
எவராவது தனது மகன் ஒரு டாக்டர் என்று கூறினால், அவரது குழந்தை உயர்நிலைப்
பள்ளியில் நடந்த உயிரியல் பாடத் தேர்வில் தேறியிருக்கக்கூடும் என்பதற்கான
வாய்ப்புகளே அதிகம். ஆனால் எனது அப்பாவைப் பற்றிய கதைகளின் நம்பகத்தன்மை பற்றி
எவரும் எப்போதும் சந்தேகித்ததில்லை. எனது அப்பாவின் முதுகில் இருக்கும் மூன்று
தழும்புகளும் சந்தேகங்களைத் தெளிய வைக்கும். எனது அப்பா மல்யுத்தமிடுவதை எண்ணற்ற
முறை நான் கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். என், கனவுகள் கூட கண்டிருக்கிறேன்.
(பக்கம் 18).
***
இந்தப் பட்டம் விடும் போட்டி ஆப்கானிஸ்தானின்
மிகப் பழைய குளிர்கால பாரம்பர்ய வழக்கம். அது போட்டி நடக்கும் காலைப் பொழுதில்
துவங்கி வெற்றி பெற்ற ஒரு பட்டம் மட்டும் வானில் பறக்கும்வரை நடக்கும். ஒரு ஆண்டு
பகல் பொழுது முடிந்தும் போட்டி தொடர்ந்துகொண்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது.
தங்கள் குழந்தைகளை உற்சாகப்படுத்த சாலை முழுவதும் மாடிகள்மீதும் மக்கள் கூடி
இருப்பார்கள். தெருக்கள் முழுவதும் தங்களது கண்ணாடி நூல்களை (‘மாஞ்சா’)
வெட்டிவெட்டி இழுத்துக்கொண்டு வானத்தில் படத்தை ஏற்றிக்கொண்டே தனகளது போட்டியாளனின்
கண்ணாடி நூலை அறுப்பதற்காந நிலையை முயற்சித்துக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு
போட்டியாளனுக்கும் ஒரு உதவியாளன் கையில் நூல் பந்தைப் பிடித்துக்கொண்டிருப்பான்.
எனக்கு ஹஸன் உதவியாளனாக இருந்தான்.....
(பட்டம் விடும் போட்டியில்) விதிகள் மிக எளியவை.
அதாவது விதிகளே இல்லை. பட்டத்தை விடு, எதிரிகளின் பட்டத்தை அறு. வாழ்த்துக்கள்.
அவ்வளவுதான்.
அதனுடன் முடிந்துவிடுவதில்லை. உண்மையான
வேடிக்கையே பட்டம் அறுபட்டவுடன்தான் தொடங்கும். அது, அறுபட்ட பட்டம் காற்றில்
அடித்துச் செல்லப்பட்டு எவருடைய வீட்டுக் கொல்லைப்புறத்திலோ, ஏதாவது மரத்திலோ
அல்லது எவர் வீட்டுக் கூரையிலோ தங்கும்வரை அதனை பட்டம் விரட்டும் சிறுவர் கூட்டம்
விரட்டிச்சென்று எடுப்பதாகும். கூட்டம் கூட்டமான சிறுவர்கள் தெருக்களில் அப்படிச்செல்வது,
தள்ளுமுள்ளுகளில் ஈடுபடுவது நான் எங்கோ படித்த ஸ்பெயின் தேசத்து காளைச் சண்டை போன்றிருக்கும்.ஒருமுறை
ஒரு பட்டத்தை எடுப்பதற்காக பக்கத்து வேட்டுச் சிறுவன் ஒரு பைன் மரத்தின்
மீதேறினான். அவன் ஏறிய கிளை முறிந்து முப்பது அடி உயரத்திலிருந்து விழுந்தான்.
அவன் முதுகெலும்பு முறிந்துவிட்டது. அவனால் அதற்குப் பின்னர் எப்போதுமே நடக்க
முடியவில்லை. ஆனால் அவன் கைகளில் பட்டம் இருந்தது. ஒரு பட்டவிரட்டியின் கையில்
பட்டம் பிடிபட்டால் அதனை அவரிடமிருந்து எவராலும் பிடுங்க முடியாது. அது சட்டவிதி
அல்ல, தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம்…….
பல ஆண்டுகளாக நிறைய பட்ட விரட்டிகளை நான்
பார்த்திருக்கிறேன். ஆனால் நான் பார்த்தவர்களிலேயே ஹசன்தான் சிறந்த பட்டவிரட்டி.
அவனுக்கு எதோ ஓர் உள்ளறிவு இருந்ததைப்போன்று பட்டம் எங்கு விழும் என்பதை அவன்
மிகச் சரியாக கணிப்பது பயங்கரமானதொரு உண்மையாகும். (பக்கம் 62-64).
***
இதில் ‘நான்’ எனப்படுபவன் பெயர் அமீர். ஹஸன்,
என்பவன் அவனுக்கு சமவயதுள்ள இன்னொரு சிறுவன். அமீர் வீட்டிலேயே வளர்கிறான்.
அவனுடைய தாயார், ராணுவ சிப்பாய்களுக்குக் களிப்பூட்டுபவளாகத்
தொழில்செய்திருக்கக்கூடும் என்று கதையில் வருகிறது. பிறகு என்னவானாள் என்று
தெரியவில்லை. தாயில்லாத ஹஸனை அமீரின் தகப்பனார் அன்போடு வளர்க்கிறார். இது ஆரம்பக்
கதை.
பிறகு ஆப்கனில் தாலிபான்கள் ஆதிக்கம் கொள்ளத்
தொடங்குகிறார்கள். அடக்குமுறையும் உள்நாட்டுப் போராட்டங்களும் அன்றாட
நிகழ்வுகளாகின்றன. அமைதியை விரும்பிய பல ஆப்கானியர்களும் நாட்டைவிட்டு வேறு
நாடுகளுக்குப் பறக்கத் தொடங்கினார்கள். அமீரின் அப்பா அவனை அமெரிக்காவுக்கு
அனுப்பி மருத்துவராக்குகிறார். ஹஸன் ஆப்கனிலேயே தங்கிவிடுகிறான். தாலிபான்களுடன் சேர்ந்துவிடுகிறான்.
முதலில் தாலிபன்களுக்குப் பால்சோறுபோட்டு வளர்த்த அமேரிக்கா, பின்னாளில் அவர்களின்
எதிரியாகிவிடுகிறது. ஒசாமா பின் லேடன் செய்தசதியால், அமெரிக்காவின் இரட்டைக்
கோபுரங்களைக் குறிவைத்து விமானத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட பின்னர்,
இருநாடுகளுக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் போகிறது. அமெரிக்கா என்றாலே ஆப்கனில்
குரோத உணர்வு ஏற்பட்டுக் கொந்தளிக்கிறது. அப்படிப்பட்ட நிலையில், பல ஆண்டுகளுக்குப்
பிறகு, அமீர், தன் நண்பன் ஹசனைத் தேடி, தன் அமெரிக்க மனைவியோடு வருகிறான்.
மற்றதெல்லாம் அண்மைக்காலச் சரித்திரம். ஹசன்
உயிரோடில்லை. கத்தி எடுத்தவனுக்குக் கத்தியில்தான் மரணம் அல்லவா? எப்போதோ கொல்லப்பட்டுவிட்டான்.
அமீர் கண்ணில் படுவதெல்லாம் வறுமையும், கட்டிட இடிபாடுகளும், தாலிபான்களின் இஸ்லாமிய
அடிப்படைவாதக் கட்டுப்பாடுகளும்தான். அமீரும் அவர் மனைவியும் மீண்டும் அமெரிக்க
செல்லவிடாமல் தடுக்கப்படுகிறார்கள். முற்போக்கான அமெரிக்காவின் சுதந்திரமான வாழ்க்கைக்குப்
பழக்கமாகிவிட்ட அமீரால் பழமைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தன்
குடும்பத்தையும் தன் தாய்நாட்டையும் சிறிதும் சகித்துக்கொள்ள இயலாமல் போகிறது. அமெரிக்க
மனைவியின் பாடோ கேட்கவே வேண்டாம். வேதனைதான். இறுதியில், இடைத்தரகர்களுக்குப்
பெருந்தொகை வழங்கி, இருவரும் ‘விடைகொடு எங்கள் நாடே’ என்று கண்ணீரோடு அங்கிருந்து
தப்பி அமெரிக்கா சென்றடைகிறார்கள்.
****
ஒரு மனிதனுக்கு ஏற்படும் துக்கங்களிலேயே
மிகப்பெரிய துக்கம், தானிப் பெற்றெடுத்த தாய்நாட்டை இழப்பதுதான். லட்சக்கணக்கான ஈழத்
தமிழர்களின் ரத்தம்படிந்த கண்ணீர்க் கதையை நாம் கேட்டிருக்கிறோம்;
படித்திருக்கிறோம். ஆனால், இரு ஏகாதிபத்தியங்களின்
விளையாட்டுப்பொருளாகவும், ஆயுதம் ஏந்தியோரின் எடுப்பார் கைப்பிள்ளையாகவும்
மாறிவிட்ட ஓர் ஏழை நாடான ஆப்கனிஸ்தானத்தின் கதையை அவ்வளவு விளக்கமாக இன்னும் உலகம்
அறியவில்லை என்றே தோன்றுகிறது. காலித் ஹுசைனியின் உணர்ச்சிமிக்க நாவலான ‘பட்டம்
விரட்டி’ அந்த வகையில் ஒரு முன்னோடியாக விளங்குகிறது. 55 மொழிகளில் இதுவரை இரண்டு கோடி பிரதிகளுக்குமேல் விற்பனையாகியுள்ள நாவல் இது.
***
இந்த நாவல் அதே பெயரில் (The Kite Runner )ஹாலிவுட் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. பத்து
துண்டுகளாக யூடியூபில் கிடைக்கும் இதன் முதல் துண்டு இதோ:
****
ஆப்கன் நிலைமையை அடிப்படையாக வைத்து இவர்
எழுதியுள்ள நாவல்கள் மொத்தம் மூன்று. அவையாவன:
The Kite Runner, A Thousand
Splendid Sons, And The Mountains Echoed.
காலித் ஹுசைனி பற்றியும் அவரது பிற
எழுத்துக்கள், தாய்நாட்டின் மறுமலர்ச்சிக்காக அவர் நிறுவியுள்ள
அமைப்பு ஆகியவை பற்றியும்
தெரிந்துகொள்ளவேண்டுமானால் கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கலாம்: http://khaledhosseini.com
யூசுப் ராஜாவின் மொழிபெயர்ப்பு மிக அருமையானது.
தெளிந்த நீரோட்டம்போல, மூல நாவலின் உணர்ச்சிப் பரவசத்தைச் சற்றும் குறைக்காமல்
தருகின்ற திறனை அவரது எழுத்தில் காண முடிகிறது. அனைவரின் நூலகங்களிலும்
இடம்பெறவேண்டிய நூல் இது என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள் யூசுப் ராஜா!
காலித் ஹுசைனியின் நாவல்:
‘பட்ட விரட்டி’ – The Kite Runner by Khaled Hosseini
தமிழ் மொழிபெயர்ப்பு: எம்.யூசுப் ராஜா.
எதிர் வெளியீடு, பொள்ளாச்சி. பக்கம் 384, விலை ரூ. 250.
Email: chellappay@yahoo.com
பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குநெடு நாள்களுக்கு நீண்ட பதிவு என்று நினைக்கிறேன். நல்ல அலசல். ரசித்தேன். நன்றி.
பதிலளிநீக்கு55 மொழிகளில் - 2 கோடி : நூலின் சிறப்பு புரிகிறது... நன்றி ஐயா...
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
அரிய தகவல் திரட்டு ஐயா. அறிந்தேன் தங்களின் பதிவு வழி த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-