பதிவு 04/2015
தமிழ் சோறு போடுமா?
எழுத்தாளர் லக்ஷ்மியின் சுயசரிதை
சென்னை புத்தகக் கண்காட்சியில் திடீரென்று சில அபூர்வமான முத்துக்கள்
கிடைப்பதுண்டு. இந்த முறை எனக்குக் கிடைத்தது, அமரர் எழுத்தாளர் லக்ஷ்மியின்
சுயசரிதையான ‘கதாசிரியையின் கதை- இரண்டு பாகங்கள்’.
நான் வலைப்பதிவு எழுத ஆரம்பித்த புதிதில் லக்ஷ்மியின் மிதிலாவிலாஸ்
நாவலைப் பற்றி எழுதியிருக்கிறேன். மிதிலாவிலாஸ்–நாவல்–லக்ஷ்மி (http://chellappatamildiary.blogspot.com/2013/03/1_5.html). அவரது சுயசரிதை குங்குமத்தில் தொடராக வந்தபோது பார்த்திருக்கிறேன்,
ஆனால் படிக்க நேரவில்லை. இப்போதுதான் அந்த வாய்ப்பு கிட்டியது. அவரது வாழ்க்கையில்
நடந்த சில சுவையான சம்பவங்களை அவரது வார்த்தைகளிலேயே தெரிவிப்பதுதான் இந்தக்
கட்டுரையின் நோக்கம்.
முதலில் அவரது வாழ்க்கை, சில வரிகளில்:
சிதம்பரத்தை அடுத்துள்ள
அம்மாபேட்டை என்ற சிறு கிராமத்தில் 1921ம்
வருஷம் மார்ச்சு மாதம் 23ஆம் தேதி பிறந்த லக்ஷ்மியின்
இயற்பெயர் திரிபுரசுந்தரி. பெற்றோர் திருச்சி மாவட்டம் தொட்டியம் கிராமத்தைச்
சேர்ந்த டாக்டர் ஸ்ரீனிவாசன், பட்டம்மாள் என்ற சிவகாமி. உடன்
பிறந்தவர்கள் ஐவர், நான்கு சகோதரிகள், ஒரு
தம்பி.
தொட்டியம் தொடக்கப் பள்ளியிலும், முசிறி உயர் நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்ற
லக்ஷ்மி, தனது உயர் நிலைக் கல்வியைத் திருச்சியிலுள்ள ஹோலி
க்ராஸ் கல்லூரியில் தொடர்ந்தார். இண்டர் முடித்தவுடன் சென்னை ஸ்டான்லி
மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சேர்ந்தார். கண்ணபிரான் என்ற தென்னாப்பிரிக்கத் தமிழரை 1955இல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப்
பின் லக்ஷ்மி இருபத்தியிரண்டு வருஷங்கள் தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்தார்.
மகப்பேறு வைத்தியராகப் பணியாற்றினார். இத்தம்பதிகளுக்கு மகேஸ்வரன் என்ற ஒரு
பிள்ளை. அவரும் மருத்துவர்.
1966இல்
கணவர் மறைந்தபின் 1977இல் சென்னைக்கு வந்தார். 1987 ஜனவரி ஏழாம் தேதி சென்னையில் காலமானார் லக்ஷ்மி.
பதினான்கு வயதிலேயே எழுத ஆரம்பித்த லக்ஷ்மி நாற்பத்தைந்து
ஆண்டுகள் படைப்பிலக்கியம் செய்து, ஆயிரத்துக்கும்
மேலான சிறுகதைகள், நூற்றுக்கும் மேலான நாவல்கள்
வெளியிட்டுள்ளார். மருத்துவம், மகப்பேறு போன்ற பல்வேறு
தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். இவரது
முதல் நாவல் பவானி. மற்ற முக்கிய எழுத்துக்கள்: பெண் மனம், மிதிலா
விலாஸ்என்ற இரு நாவல்கள் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசையும், ஒரு காவிரியைப் போல 1984ல் சாகித்திய அகாதெமி விருதையும் பெற்றன. காஞ்சனையின் கனவு,
பெண் மனம் என்ற நாவல்கள் காஞ்சனா, இருவர்
உள்ளம் என்ற தலைப்புகளுடன் மூன்று தென் மொழிகளில் திரைப் படங்களாயின.
இருவர் உள்ளம் படத்திற்கு, திரைக்கதை, வசனம்
எழுதியது கலைஞர் மு.கருணாநிதிஅவர்கள்.
எப்படி
எழுத்தாளர் ஆனார்?
லக்ஷ்மி மருத்துவம் படித்த காலம் இரண்டாவது உலக மகா
யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம். கல்லூரி மற்றும் ஹாஸ்டல் செலவுகளுக்கு மாதம் அறுபது
ரூபாய் தேவைப்பட்ட நிலையில், தந்தையால் முப்பது ரூபாய் மட்டுமே அனுப்பமுடிந்தது. ‘மேற்கொண்டு
அனுப்ப இயலாது, எனவே நீ படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு வந்துவிடு’ என்று
தந்தை கண்டித்தார். பெரிய டாக்டராகவேண்டும் என்ற கனவுகளுடன் இருந்த லக்ஷ்மிக்கு
வானமே இடிந்துவீழ்ந்ததுபோல் ஆகியது. அன்று மூர்மார்க்கட் போனபோது ஒரு பழைய
அமெரிக்கப் பத்திரிகையை நான்கணாவுக்கு வாங்கினார். அதில் வந்த ஒரு கட்டுரைதான்
அவரது வாழ்க்கையையே மாற்றியது. (‘ஒரு வைத்தியக் கல்லூரி மாணவன், படிக்கும்
காலத்தில் பணத்தட்டுப்பாடு காரணமாக, இரவு நேரங்களில் காய்கறி லாரியை ஓட்டி அதில்
கிடைத்த ஊதியத்தில் தன் படிப்பை முடித்து இப்போது பெரிய அறுவை சிகிச்சை நிபுணனாக
இருக்கிறானாம்...”)
அதேபோல் தானும் சம்பாதிக்க வழியுண்டா என்று யோசித்தார்
லக்ஷ்மி. பெண்களுக்கு உகந்ததாகவும் படிப்பைப் பாதிக்காததாகவும் இருக்கவேண்டுமே!
அப்போது அவருடைய ஹாஸ்டலுக்கு அருகில் பிராட்வேயில் ஆனந்தவிகடன் அலுவலகம் இருந்தது.
டிராமிலிருந்து இறங்கி நேராக விகடன் அதிபர் எஸ்.எஸ்.வாசனைப் பார்க்கப் போனார். (1940
ஜனவரி முதல் வாரம்). எவ்வளவு துணிச்சல் இருக்கவேண்டும்! அதுவரை லக்ஷ்மி கதையோ
கட்டுரையோ எழுதியது கிடையாது. விகடனில் எழுதிப் பணம் சம்பாதிக்கலாம் என்று எப்படி
அவருக்குத் தோன்றியதோ கடவுளுக்கே வெளிச்சம்.
வாசனின் செயலாளர் டி.வி.சுப்பிரமணியத்தைப் பார்த்தார்.
“நான் ஒரு வைத்தியக் கல்லூரி மாணவி.
உபகாரச் சம்பளம் கிடைக்காது சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என் படிப்பைத் தொடர,
புத்தகங்கள் வாங்க எனக்கு பணம் தேவைப்படுகிறது. எனக்கு விகடனில் எழுத ஒரு
வாய்ப்புத் தரமுடியுமா என்று நேரில் கேட்க விரும்புகிறேன். ஐந்து நிமிஷ அவகாசம்
கிட்டினால் போதும்” என்றார் லக்ஷ்மி. வெகுநேர காத்திருப்புக்குப்பின் ஐந்தே
நிமிடம் சந்திக்கலாம் என்ற அனுமதி கிட்டியது.
முழங்கை கீழ் வழிந்த கதர் சட்டையும்
சிவப்புக் கரை வேட்டியும் – இடது தோள்மீது துண்டுமாக அலமாரியிலிருந்த ஃபைல் ஒன்றை
ஆராய்ந்து கொண்டிருந்த மனிதர் சட்டென்று திரும்பினார்.
“உட்காருங்க அம்மா..உங்களைப் பத்தி
டி.வி.எஸ். சொன்னார்” என்று புன்முறுவலித்துக்கொண்டு சுழல்நாற்காலியில் அமர்ந்துகொண்டார். புகழ்பெற்ற ஆனந்த விகடனின்
அதிபர் வாசன் இவர்தானா? எத்தனை எளிமையாக இருக்கிறார் என்று வியந்தவண்ணம்
அமர்ந்தேன். கண்டிப்பான குரலில் கருணையாகப் பேசினார்.
“கதைகள் எழுதி ஏதேனும் அனுபவம் உண்டா?”
எடுத்த எடுப்பில் கேட்டார்.
“பள்ளிப் பருவத்திலே எழுத
ஆரம்பித்தேன். ஒன்றும் பிரசுரமாகவில்லை”.
“எங்கள் பத்திரிகையில் பிரசுரமாகும்
என்று என்ன நிச்சயம்?” என்று சிரித்தார் வேடிக்கையாக.
“ஒரு மாணவிக்கு எழுத வாய்ப்புக்
கொடுத்து உதவ வேண்டும் என்று நீங்கள் நினைத்தால்...பிரசுரிக்கலாமே?”
“நன்றாகப் பேசுகிறீர்கள். நன்றாக
எழுதத் தெரிந்தால் கட்டாயம் வாய்ப்புக் கொடுப்போம். ஒரு காரியம் செய்யுங்கள் –
நாளை காலைக்குள் ஒரு சிறுகதை எழுதிக்கொண்டு வர முடியுமா?”
“கொண்டு வருகிறேன். கடுமையாகப்
பரிசீலனை செய்யாது கருணையோடு பார்த்து வாய்ப்புக் கொடுத்தால்...?” சொன்னதையே நான்
சொல்லிக் கொண்டிருந்தேன்.....
இரவு முழுதும் மூளையைக் கசக்கி எப்படியோ ஒரு சிறுகதையைத் தயார்
செய்துவிட்டார் லக்ஷ்மி. அடுத்த நாள் மாலை வாசன் அவர்களைச் சந்தித்தபோது விகடன்
ஆசிரியராக இருந்த கல்கியிடம் அனுப்பினார், வாசன். அப்போது விகடனில் ‘கள்வனின்
காதலி’ தொடர்கதையை எழுதிப் பிரபலமாக இருந்தார் கல்கி. அப்படிப்பட்ட
இலக்கியமேதையிடம் தனது ‘அரைவேக்காடு படைப்பைக் கொடுக்க மிகவும் பயமாகவும்
வெட்கமாகவும்’ இருந்ததாம் லக்ஷ்மிக்கு.
“கதையைப் படித்துவிட்டு பதில் எழுதுவோம். கவலைப்படாதீர்கள்”
என்று அன்புடன் சொல்லி அனுப்பி வைத்தார், கல்கி. ஒரே வாரத்தில் பதில் வந்ததாம். “உங்கள்
கதையைப் படித்தேன். மிகவும் நன்றாக இருக்கிறது. அடுத்த வாரம் ஆனந்த விகடனில்
வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றது கடிதம்.
(பக்கம் 32-37 பாகம் 2)
தான் எழுதுவது மற்ற மாணவர்ளுக்குத் தெரிந்துவிடக் கூடாது
என்பதற்காக, பத்து வயதிலேயே விதவையாகி, வாழ்க்கையில் சுகம் என்பதையே அறியாத தன்
பாட்டியின் சகோதரியின் பெயரான ‘லக்ஷ்மி’ என்பதையே
தனது புனைபெயராகக் கொண்டார் அவர்.
தமிழ் எப்படி அவருக்குக் கைவந்தது?
(இன்டர்மீடியட் வகுப்பில்) ஆரம்பத்தில்
சமஸ்கிருதத்தைத்தான் இரண்டாவது மொழியாகப் படித்துக்கொண்டிருந்தார். ஆனால் சமஸ்கிருத
ஆசிரியருக்குக் காய்ச்சல்வந்து படுத்துவிட்டதால் தமிழ் வகுப்பிற்கு
மாற்றப்பட்டாராம்.
முதல்நாளே எனக்குத் தமிழ் மிகவும் பிடித்துவிட்டது.
வெள்ளைத் தலைப்பாகையும் – நெற்றியில் விபூதிப் பட்டையும் கறுப்புக் கொட்டும் –
பின்சுற்று வேட்டியுமாக இருந்த தமிழ் ஆசிரியர்... மிகவும் சாந்தமானவராகத்
தெரிந்தார்.
கம்பராமாயணத்திலிருந்து அழகான குரலில்...
“மன்னவன் பணியொன்றாகில் நின்பணி மறுப்பனோ..
என் பின்னவன் பெற்ற செல்வம்...” என்ற வரிகளைப் பாடி விளக்கம் கொடுத்து கொண்டிருந்தார்.
அப்போது..
நான் அப்படியே மயங்கிப் போனேன்.
கம்பன் கவிதையில் இத்தனை சுவை ஒளிந்து கொண்டிருக்கிறதா? தமிழ் மொழி இத்தனை
இனிமையானதா?... என்று வியந்து அன்றே என் தந்தையிடம் என் ஆசையைச் சொல்லிவிட்டேன். “எனக்கு
சமஸ்கிருதம் படிக்க விருப்பமில்லை. தமிழ் வகுப்புக்கு மாறிவிடப் போகிறேன்”.
அப்பா கோபத்துடன் வெறித்தார்.
பகவத்கீதையைப் படித்துப் பொருள்தெரிந்து கொள்ள வேண்டும் – காளிதாசனது காவியங்களை
ரசிக்க வேண்டும்..என்று சமஸ்கிருதத்தை படிக்க உன்னை சேர்த்திருக்கிறேன்.
முட்டாள்தனமாகப் பேசறியே...சிடுசிடுத்தார்.
கம்பராமாயணத்தையும் –
சிலப்பதிகாரத்தையும் படித்து மகிழ தமிழ் அறிவு தேவையாயிற்றே.. சொல்ல விரும்பினேன்.
ஆனால் திருதிருவென்று விழித்தேன்.
ஒழிஞ்சு போ – நாளையிலிருந்து தமிழுக்கு
மாற்றிக்கொள். வீட்டிலே சமஸ்கிருதம் சொல்லிக்கொடுக்க ஒரு ஆளை ஏற்பாடு செய்கிறேன். ஆனால்
ஒன்று மட்டும் நீ தெரிஞ்சுக்கணும். தமிழ் சோறு போடாது. அதனால் இங்கிலீஷை நன்றாகப்
படிக்கணும்...அதுதான் உதவும் என்றார்.
டில்லியில் சாகித்ய அகாதமி பரிசினைப்
பெற மேடை ஏறியபோது – அன்றையதினம் என் தந்தையை நினைத்துக் கொண்டேன்.
தமிழ் எனக்குப் புகழையும் –பெருமையையும்
வாங்கித் தந்ததோடு இன்னமும் சோறு போடுகிறது ..சொல்ல விரும்புகிறேன்.
அதைக் கேட்க அப்பா இப்போது உயிருடன்
இல்லையே... என்று என் உள்ளம் வருந்தியது.
(பக்கம் 95-96 பாகம் 1)
****
லக்ஷ்மியின் கதைகளைப் போலவே அவரது சுயசரிதமும் சுவையானதும்
உணர்ச்சிகரமானதுமாகும். ஒரே மூச்சில் இரண்டு பாகங்களையும் படித்துவிட்டேன்.
உங்களுக்கும் சிபாரிசுசெய்கிறேன். கிராத்துப் பிள்ளைகளுக்குக் கல்வி என்பதே எட்டாக்கொம்பாக
இருந்தநிலையில், அதிலும் பெண்கல்வி என்பது பெரிதும் மறுக்கப்பட்டிருந்த காலத்தில்,
சுய முயற்சியில் ஒரு பெண் எழுத்தாளராகவும் மருத்துவராகவும் ஒரே சமயத்தில் உருவான
கதையை நீங்கள் படிக்காமல் விடலாமா?
கதாசிரியையின் கதை – லக்ஷ்மி –
இரண்டு பாகங்கள்: (நான்காம் பதிப்பு 2010 : விலை ரூ.75 + 70) பூங்கொடி பதிப்பகம்
14, சித்திரைக் குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை 600004. தொலைபேசி 044-24943074.
(பின்
குறிப்பு: தமிழ் சோறு போடுமா என்று லக்ஷ்மியின் தந்தை அன்று கேட்ட கேள்வி இன்றும்
சாகாமல்தானே இருக்கிறது – கமல்ஹாசனும் பெருமாள்முருகனும் மறுக்கவா போகிறார்கள்?)
எனது மனம் நிறைந்த எழுத்தாளர்களுள் லக்ஷ்மியும் ஒருவர்..
பதிலளிநீக்குஅவரைப் பற்றிய தகவல்களை அளித்தமைக்கு மகிழ்ச்சி..
மூத்தோராகிய தங்களுக்கு - பொங்கல் திருநாளில் அன்பின் வணக்கங்கள்..
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
நல்ல எழுத்தாளரின் கதை பற்றி அருமையாக சொல்லியுள்ளீர்கள்.... படிக்க படிக்க நன்றாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் த.ம2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தமிழ் சோறு போடுமா? என்ற கேள்விக்கு எழுத்தாளர் லக்ஷ்மியின் சுயசரிதையிலிருந்து ஒரு நிகழ்வை சுருக்கமாக சொன்ன தங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குத.ம.3
அவசியம் வாங்கிப் படிக்கின்றேன் ஐயா
பதிலளிநீக்குதம +1
நிச்சயம் வாங்கிப் படித்துவிடுவேன்
பதிலளிநீக்குஉதாரணத்திற்கு எடுத்துக் கொண்ட பகுதிகளும்
சொல்லிச் சென்ற விதமும் மனம் கவர்ந்தது
இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்
tha.ma 5
பதிலளிநீக்குசோறு போடுவது சந்தோசம் தராது....!
பதிலளிநீக்குஉள்ளத்தை உருக்கியது.
பதிலளிநீக்குலக்ஷ்மி ஒரு ஆதர்ச பெண்மணி.
அவரது சரிதை சரித்திரம் படைக்கிறது.
படிக்கவேண்டும் என்ற ஆவல் .
புத்தக விழா வுக்குச் சென்று வாங்க உடல் நிலை இடம் கொடுக்காது.
அருகில் எங்கேனும் கிடைக்குமா ?
பொங்கல் வாழ்த்துக்கள்.
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
www.subbuthatha.blogspot.com
அந்தக் காலத்தில் லக்ஷ்மியின் கதைகள் அனைத்தையும் தொடராகவே ஆர்வத்தோடு படித்தவன்! இன்று உங்கள் மூலமாக அவர்களின் சொந்தக் கதையை ஒரளவு அறிந்தேன்!
பதிலளிநீக்குநன்றி! நண்பரே!
மிகவும் அருமையான ஒரு பதிவு சார்! லஷ்மியின் கதைகள் அப்போது எங்களுக்கு வாசிக்கத் தூண்டியவை. தமிழ் சோறு போடாது என்பது இன்னும் சில குடும்பங்களிலும், சமூகத்திலும் இருக்கத்தான் செய்கின்றது. அருமையான புத்தக அறிமுகம். மிக்க நன்றி சார்!
பதிலளிநீக்குஅனைத்து நண்பர்களுக்கும் வலைத்தளத்தில் அறிமுகப்படுத்திய மனோ சாமிநாதன் அவர்களுக்கும் எனது நன்றிகள்! பின்னூட்டங்களுக்குப் பதில் கொடுக்க முடியாத ஏதோ ஒரு பிரச்சினை நிலவுகிறது. எனவே தனித்தனியாக உங்களின் பின்னூட்டத்திற்குக் கீழே பதில் தெரிவிக்கமுடியாமல் இருக்கிறது. கூகுள் 'whoops! its an error' என்கிறது. சரி செய்வார்களா பார்க்கலாம்.
பதிலளிநீக்குஅன்பு நண்பரே!
பதிலளிநீக்குவணக்கம்!
மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM
சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக!
நித்திரையில் கண்ட கனவு
சித்திரையில் பலிக்க வேண்டும்!
முத்திரைபெறும் முழு ஆற்றல்
முழு நிலவாய் ஒளிர வேண்டும்!
மன்மத ஆண்டு மனதில்
மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
மங்கலத் திருநாள் வாழ்வில்!
மாண்பினை சூட வேண்டும்!
தொல்லை தரும் இன்னல்கள்
தொலைதூரம் செல்ல வேண்டும்
நிலையான செல்வம் யாவும்
கலையாக செழித்தல் வேண்டும்!
பொங்குக தமிழ் ஓசை
தங்குக தரணி எங்கும்!
சீர்மிகு சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக! வருகவே!
புதுவை வேலு
எழுத்தாளர் லஷ்மி அவர்களின் சுய சரிதை படித்ததும் தமிழ் கண்டிப்பாக சோறு போடும்னுதான் தோணுது. கோபாலகிருஷ்ணா சாரின் அறிமுகம் பார்த்து இங்க வந்தேன் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு