திங்கள், டிசம்பர் 09, 2013

இளையராஜாவின் மூன்று அறிவுரைகளும் அரவிந்த் கேஜ்ரிவாலின் வெற்றியும் ( ‘அபுசி-தொபசி’- 14)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல் 
இதை எழுதிக்கொண்டிருக்கும்போது இந்தியாவில் நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகள் வந்தவண்ணம் இருக்கின்றன. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் சத்திஸ்கார் மூன்றிலும் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றியைக் கண்டிருக்கிறது. டில்லியில் காங்கிரஸ் அடியோடு அழிக்கப்பட்டுவிட்டது. எழுபதில் எட்டே எட்டுதான்! அங்கு பா.ஜ.க.ஆட்சி அமைக்கப்போகிறது என்றாலும் அதுவல்ல செய்தி.  31 இடங்களைப் பெற்ற பா.ஜ.க.வை இடித்து நெருக்கிக்கொண்டு 29 இடங்களைப் பெற்று அதன் அடுத்த பெரும் கட்சியாக எழும்பியிருக்கும் ‘பொதுமக்கள் கட்சி’ யின் (ஆம் ஆத்மி பார்ட்டி) மகத்தான வெற்றிதான் தலைப்புச் செய்தியாகும்.
 
இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று அரசியல்வாதிகள் பெருமையாகச் சொல்லிக்கொள்வர், தேர்தல் நேரம் தவிர! ஏனெனில் தேர்தலின் போது பண நாயகத்தின் ஆட்சிதானே நடைபெறும்! நாட்டுநலனில் அக்கறைகொண்டு தியாக உணர்வுடன் ஒரு புதிய தலைமுறை வீறுகொண்டு எழுந்து புதிதாகக் கட்சி துவங்கித் தேர்தலில் போட்டியிடுகிறது என்றவுடன் எத்தனை பேர் அதை ஏளனமாகப் பார்த்தார்கள்! தலையில் காந்தி குல்லாயுடன் அரவிந்த கேஜ்ரிவால் (தமது சின்னமான) துடைப்பக்கட்டை ஏந்தி தில்லிநகரில் வலம்வந்தபோது ஊடகங்களைத்தவிர வேறு எந்த அரசியல் நோக்கர்களும் அவரைச் சட்டை செய்யவில்லையே!

பிற கட்சிகளோ ஆரம்பத்தில் அவரைப் புழுமாதிரி எண்ணினாலும் தேர்தல்நாள் நெருங்க நெருங்க அச்சம்கொள்ள ஆரம்பித்தன. அவருக்கு வெளிநாட்டுப் பணம் வருகிறது என்று பிதற்ற ஆரம்பித்தன. முதுபெரும் தாத்தா அன்னா ஹஜாரேயும் கேஜ்ரிவாலிடமிருந்து தன்னைத் தூரப்படுத்திக்கொண்டார். காங்கிரசின் சக்திவாய்ந்த  ஏஜெண்ட்டான சி.பி.ஐ.யும், தில்லியில் எப்போதுமே சக்திமிக்கதான  பா.ஜ.க.வின் காவிப்படையும் கண்ணில் விளக்கெண்ணெய்   ஊற்றிக்கொண்டு 'பொதுமக்கள் கட்சி'யைக் கண்காணித்தபடி இருந்தன. எல்லாத்  தடங்கல்களையும் மீறி அக்கட்சி மூன்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வென்றிருக்கிறது. இந்திய ஜனநாயகத்தில் இது இரண்டாவது மாபெரும் சாதனை. வாக்களித்தவர்களுக்கு நமது பாராட்டுக்கள்.

முதலாவது அத்தகைய சாதனை, தமிழ்நாட்டில் விஜயகாந்த் புதுக்கட்சி ஆரம்பித்து, ‘ஒரே குட்டையில் ஊறிய’ அந்த  இரண்டு ‘மட்டைகளையும்’  ஒதுக்கிவிட்டு, தன்னந்தனியாகத் தேர்தலில்  நின்று, மக்கள் மூன்றாவது சக்தியை ஆதரிக்க முன்வருவார்கள் என்ற நம்பிக்கையை நிரூபித்துக்காட்டியது. ஆனால் உள்நோக்கம் கொண்ட ஊடகங்களால் பெரிதுபடுத்தப்பட்ட அவரது  தனிப்பட்ட பலவீனங்களும், மெருகேற்றப்படாத தலைமைப்பண்புகளும் முன்னெழுந்து, மிகப்பெரும் அளவில் சட்டமன்றத் தொகுதிகளில் வென்றிருந்தும், அவ்வுறுப்பினர்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியாத நிலை உருவாகி, விஜயகாந்த் இன்று அரசியல் நோக்கர்களின் ஏளனத்திற்கும், வாக்களித்த மக்களின் அவநம்பிக்கைக்கும்  உரியவராகி இருக்கிறார்.
 
இந்த அபாயம் அரவிந்த கேஜ்ரிவாலுக்கு நிச்சயம் இல்லை. அது மட்டுமன்றி, அவரது ஆதரவாளர்களும் வாக்களித்தவர்களும் சினிமா ரசிகர்கள் இல்லை, தேர்ந்த உலகியல் ஞானம் கொண்ட நடுத்தர மக்களாவர். எனவே இந்த வலிமையை முன்னெடுத்துச் சென்று இந்திய அரசியலில் புதியதொரு அத்தியாயம் படைக்க அவர் முன்வரவேண்டும். பகுத்தறிவுள்ள அனைவரும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும்.
கடைசியாக வந்த செய்தி: தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு காங்கிரஸ் உறுப்பினர்களில் சிலர் ‘பொதுமக்கள் கட்சி’க்கு ஆதரவளித்து அதை ஆளும்கட்சியாகக் கொண்டுவர உதவுவார்கள் என்று தெரிகிறது. இது நடந்தால் பா.ஜ.க.வின் ஆட்சிக்கனவும் தகர்ந்து போகும். பாவம் ஷீலா தீட்சித் அம்மையார்! பாவம் மோடி!
 
Moral of the Story:  இன்று காங்கிரசுக்கு மாற்று, பா.ஜ.க. தான் என்று மக்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். அதே சமயம், காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டுக்கும் மாற்றாக மூன்றாவது ஒரு சக்தி, நேர்மையும் தூய்மையும் கொண்டவர்களால் முன்னிறுத்தப்ப்படுமானால், அதை ஆதரிக்கத்  தயார் நிலையில் இருக்கிறார்கள் மக்கள் என்பது கேஜ்ரிவாலின் வெற்றியிலிருந்து உறுதியாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் அந்த மூன்றாவது சக்தியாக நிற்கப்போவது யார்?
 
புத்தகம்
ஏற்கெனவே குமுதத்தில் தொடராக வந்தது தான், நீங்கள் படித்திருக்கவும் கூடும், சென்ற வருடமே புத்தகமாக வந்துவிட்டது,  இளையராஜாவின் ‘பால்நிலாப் பாதை’. ( 208  பக்கம், ரூபாய்  125, குமுதம் வெளியீடு).
 
குமுதம் நிருபர் யாரோதான்  ghost-writing செய்திருக்கவேண்டும். இளையராஜா சொல்லச்சொல்ல மனிதர் அட்டகாசமாக எழுதியிருக்கிறார் போலும். (வாழ்க!). படிக்கும்போதே இளையராஜா அனுபவித்த இன்னல்கள், துயரங்கள் இவற்றைமீறி அவருடைய ஒவ்வொரு இதயத்துடிப்பையும் நீங்கள் உணரமுடியும்படியான எழுத்து.

அதிகம்பேர் படித்துவிட்டிருப்பீர்கள் என்பதால் இதில் இடம்பெற்றுள்ள இளையராஜாவின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் எதையும் நான் எடுத்துக்காட்டப்போவதில்லை. இளைஞர்களுக்கு மிகவும் பயன்படத்தக்க அவரின் மூன்று அறிவுரைகளை மட்டுமே இங்கு பார்க்கலாம். இவ்வறிவுரைகளைத் தருவதற்கு இளையாராஜவுக்குத் தார்மீகத் தகுதி உண்டு என்பதை எவரும் ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்!

(1)    உங்களைச் சுற்றி இருக்கும் எதுவும் உங்களால் உருவாக்கப்படவில்லை. தன்னால் அமைந்தது. அது உங்களுக்கு விதிக்கப்பட்டது. அதனால், இருக்கும் சூழ்நிலையை மாற்றிக்கொள்ள முயல்வதைவிட, மனத்தின் எதிர்பார்ப்புகளைத் தொடர்ந்து சென்று, அழியாது, மனதை நல்ல நிலையில் அலைக்காது வைத்துக்கொள்வது சாலச்சிறந்தது! அது வாழ்க்கையில் நாம் எந்த இடத்தில், எந்த நிலையில் இருந்தாலும், சிறு அளவும் நம்மைப் பாதிக்காது.
(2)    சோர்வு – மனிதனுக்கு முதல் எதிரி. அது வெளியில் இல்லை! நமக்குள்ளே இருக்குமதை நாமே அழிக்கவேண்டும்.
(3)    கிடைத்ததை வைத்துத் திருப்திப்படும் சமமான மனநிலை வேண்டும்! அது எப்போதும் நமக்கு மகிழ்வைத் தரும். ஏன்? அந்த மனநிலையை உடையவர்கள் சந்தோஷக் கர்வம் கொண்டு மார்பு தட்டிகொள்ளலாம்! ஏனெனில், கிடைத்தது போதும் என்ற திருப்தி வந்துவிட்டால், அவர்கள் இறைவனைக்கூட வேண்டிபெறுவது ஒன்றுமில்லையல்லவா? (பக்கம்  98-99).
 
 இளைராஜாவை இசைஞானி என்று சொன்னதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. அவரிடம் இசை இருக்கிறது. ஞானமும் இருக்கிறது.
 
சினிமா & தொலைக்காட்சி

முரசு’ தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சூப்பர் சிங்கரில் இக்கால மாணவர்கள் பாடுவதற்கேற்ற பழைய பாடல்களாகத் தேர்ந்தெடுத்து  ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள். ஒரு சுவையான பாடல் வந்தது.
 
எம் எஸ் விஸ்வநாதன் உற்சாகமான நடுத்தர வயதினராக கோட் சூட் அணிந்து இரண்டு கைகளையும் நொடிக்கொருமுறை அசைத்தபடி தன் குழுவினரோடு பாடல் இசைக்கும் காட்சியை அப்படியே படமாக்கியிருக்கும் “அவளுக்கென்ன அழகிய முகம்” பாடல் (படம்: ‘சர்வர் சுந்தரம்’). இசைக்கருவிகளை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு ஆனந்தம்! தங்கள் முகங்களையும் திரையில் காண்பிக்கப்போகிறார்கள் என்ற அளப்பரிய ஆனந்தம்! ஆனால் அவர்களின் பெயர்களை அடையாளம் சொல்ல இன்று யாரும் இல்லையே! (பெரியவர் பிலிம்நியூஸ் ஆனந்தன்?)

பத்திரிகை
கீழே உள்ள படத்தைப் பாருங்கள்! சுதந்திரம் அடைந்து அறுபத்தாறு ஆண்டுகள் ஆகியும் நமது வீட்டுப் பெண்கள் எதற்காகவேனும் கியூவில் நிற்பதை நம்மால் தவிர்க்க முடியவில்லையே! காஞ்சிபுரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
இவர்கள் எல்லாம் நிற்பது அரிசி வாங்கவோ, பருப்பு வாங்கவோ, மண்ணெண்ணெய் வாங்கவோ அல்ல நண்பர்களே, மணல் வாங்கத்தானாம்! வீடுகட்ட ஆற்றுமணல் வாங்குவதற்காக ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு நிற்கிறார்கள். தினமலர் 03-12-2013 தேதியிட்ட காஞ்சிபுரம் இணைப்பில் இடம்பெற்ற படம். (அது சரி, நீங்கள் வீடு கட்டிவிட்டீர்களா?)

சிரிப்பு
மனைவி: நேத்திக்கு மவுனவிரதம் இருந்தீங்களே, எதுக்கு?
கணவன்: மறந்துட்டியா, நேத்திக்கு தானே நம்ம கல்யாண நாள்!
          (நன்றி- தினமலர்- வாரமலர்  08-12-2013  பக்கம் 22)

© Y.Chellappa
Email: chellappay@yahoo.com

குறிப்பு : இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள 'தமிழ்மணம்' பட்டையில் இடதுபுறமுள்ள 'மேல்நோக்கிய' கட்டைவிரல் அடையாளத்தின் மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.நன்றி.

29 கருத்துகள்:

  1. அனைத்தும் அருமை ஐயா...

    தமிழ்மணம் [+1] இணைத்து விட்டேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலத்தால் செய்த உதவிக்கு நன்றி. ஒரு திருமணத்தை முன்னிட்டு நேற்று இரவே வெளியூர் போகவேண்டி இருந்தது. அதனால் schedule செய்துவிட்டுப் போய்விட்டேன். நன்றி.

      நீக்கு
  2. 'மேல்நோக்கிய' கட்டைவிரல் அடையாளத்தின் மீது ஒரு கிளிக் செய்யுது விட்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் ஒரு கிளிக் செய்தால் நூறு கிளிக் செய்தமாதிரி அய்யா! நன்றி!

      நீக்கு
  3. எதை சொன்னாலும் தெளிவாகச் சொல்கிறீர்கள் .கடைசி குறிப்பிலும்கூட!
    த.ம 6

    பதிலளிநீக்கு
  4. \\கிடைத்ததை வைத்துத் திருப்திப்படும் சமமான மனநிலை வேண்டும்! அது எப்போதும் நமக்கு மகிழ்வைத் தரும்.\\ரஹ்மான் வந்த பின்னர் இவர் ஆள் ஆட்டம் கண்டது ஏன்? முதலில் இவர் தனக்கு இந்த அறிவுரைகளை apply செய்து கொண்டால் நல்லது............

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா! ரஹ்மான் வந்த பிறகு இளையராஜாவுக்கு இறங்குமுகம் தான். ஆனால், முப்பதாண்டுகள் அவருடைய ஆட்சி நடந்ததே! அது போதாதா? அதன் பிறகு அவர் அடங்கித்தான் வாசிக்கிறார் என்று தோன்றுகிறது. இருந்தாலும் இன்னமும் இளையராஜாவைத்தான் தங்கள் முதல் சாய்ஸ் என்று கமல், ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் கூறுகிறார்களே!

      நீக்கு
  5. தேர்தல்நாள் நெருங்க நெருங்க அச்சம்கொள்ள ஆரம்பித்தன////உண்மை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்று விருதுநகரில் காமராஜர் சீனிவாசன் என்ற மாணவரிடம் தோற்றது போல, 'மோடி வித்தை' டில்லியில் ஆம் ஆத்மி கட்சியிடம் தோற்றுப்போனது.

      நீக்கு
  6. ம்ம் இன்னும் கீயூதான் அதிகம் எங்கும் ஐயா!

    பதிலளிநீக்கு
  7. தகவல்களும் நடுநிலையான அரசியல் விமர்சனமும்
    மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த
    நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. இனிய வணக்கம் ஐயா..
    ஆம் ஆத்மி கட்சி கெஜ்ரிவாலின் நடப்பு வெற்றி
    மகத்தானது. நாடு முழுதும் பரவ வேண்டிய நல்விதை...
    ==
    இசை ஞானியின் மூன்று அறிவுரைகள் ஏற்றுக்கொள்ள வேண்டியவைகள்.
    அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'நல்ல கருத்துக்கள் எங்கிருந்தும் வந்து எம்மைச் சேரட்டும்' என்கிறது ரிக்வேதம். இளைராஜாவின் கருத்துக்களும் அத்தகையவே. தங்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. உண்மையிலேயே நம்பமுடியாத சாதனை இது! தமிழ்நாட்டிலும் இதுபோல நடக்கவேண்டும். அப்போதுதான் பொதுவாழ்வில் புக நினைப்போர் நல்ல விழுமியங்கலைப் பாதுகாக்க முன்வருவர். ஆனால் இங்கு ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் தந்து 'திருமங்கலம் பார்முலா'வைப் பயன்படுத்தி அல்லவா வெற்றி பெறுகிறார்கள்! அதை வாங்க மறுத்தாலும் மிரட்டுகிறார்களாமே!

      நீக்கு
  10. மிக மிக அருமையான பதிவுகள்.!!! ரொம்பவே தெளிவான, அழுத்தமான பதிவுகள்!!!! மிகவும் அழகாக எழுதுகின்றீர்கள்!!

    த.ம.1

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்
    ஐயா.

    நடுநிலையான விமர்சனம் நன்றாக எழுதியுள்ளிர்கள்... பதிவு அருமை வாழ்த்துக்கள் ஐயா.
    த.ம12 வது. வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  12. தலைமுறை இடைவெளி என்று கேஜ்ரிவாலின் வெற்றியைக் குறிப்பிடத் தோன்றுகிறதுமாற்றம் தேடும் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் பெருவாரியாக வந்து ஓட்டுப் போட்டதன் விளைவே அவரது வெற்றி.குற்றம் குறைகள் கூறுவது ஒன்று அவற்றைச் செய்யாமல் செயல் படுவது ஒன்று,டெல்லியில் பெண் ஒருத்தி பாலியல் பலாத்காரத்திலுயிர் இழந்ததும். அண்ணா ஹஜாரேயின் லஞ்சத்துக்கு எதிரான எழுச்சி போராட்டமும் இளைஞர்களை ஈர்த்திருக்கிறது. புது துடைப்பம் நன்கு துப்புரவு செய்யும். நாளாவட்டத்தில் விஜயகாந்த் கட்சி மாதிரிப் போய் விடக் கூடாது. வெற்றி அவர்கள் தலைக்கனமாக மாறக் கூடாது. வாழ்த்துவோம்.
    இளைய ராஜாவினிரண்டாவது அறிவுரை ஏற்புடையது. மூன்றாவதாகச் சொல்லப் படுவது சற்று நெருடுகிறது. தமக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்து விட்ட பிறகே அந்த சம நிலை பற்றி அவரால் பேச முடிந்திருக்கிறது. முதலாவது பற்றி ஏதும் கூற விரும்பவில்லை. பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  13. தில்லி அரசியல் நிலவரம் பற்றி அவசரத்தில் எழுதிவிட்டீர்கள் என்று தோன்றுகிறது. பாஜக ஆட்சி அமைக்க இயலாதவாறு இரண்டு இடங்கள் குறைவாகி விட்டது. அதாவது, பாஜக கூட்டணிக்குக் கிடைத்தது 33. இன்னும் இரண்டு இடங்கள் கிடைத்திருந்தால், சுயேச்சையை கைக்குள்போட்டு ஆட்சி அமைத்திருக்கும்.
    அடுத்தது, விஜய்காந்த் பற்றிய மதிப்பீடு. அவருக்குக் கிடைத்த வெற்றி கருணாநிதி அரசுக்கு எதிராக எழுந்த அலையில் அடித்துக்கொண்டு வந்த வெற்றிதானே தவிர, எந்த வகையிலும் மூன்றாவது சக்தியாகக் கிடைத்ததல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஜயகாந்த்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம், கருணாநிதிக்கு எதிரான ஒட்டு மட்டுமல்ல, பா.ம.க.வின் (அப்போதைய) சந்தர்ப்பவாத அரசியலுக்கு எதிராக எழுந்த இளைஞர்களின் உணர்வுபூர்வமான எதிரொலியுமாகும். ஆனால் அதை முறையாகக் கையாள அவருக்கு இயலாமல் போனது வருந்தத்தக்கதாகும்.

      நீக்கு
  14. தில்லி தேர்தல் குறித்து நான் பேஸ்புக்கில் எழுதியிருக்கிறேன்.
    https://www.facebook.com/photo.php?fbid=658842664138510&set=a.368701183152661.79964.100000383483109&type=1&theater

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் முகநூலுக்குப் போய்விட்டீர்களா? அது வெறும் அரட்டை அரங்கம் அல்லவா சுவாமி? (இருந்தாலும் தங்களுக்காகப் படிக்கிறேன். சரியா?)

      நீக்கு
  15. இவ்வார பதிவில் மனதில் நின்றவை இளையராஜாவின் மூன்று அறிவுரைகள். எக்காலத்துக்கும் எவருக்கும் பொருந்துபவவை.

    பதிலளிநீக்கு