திங்கள், டிசம்பர் 23, 2013

நடிகை ரேவதி, தோழர் ஆர்.நல்லகண்ணு, ஜெயமோகன் ... ( ‘அபுசி-தொபசி’- 16)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல் 
கடைசியில் நான் சொன்னதுதான் நடக்கும்போல் தெரிகிறது. ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கேஜ்ரிவால் தில்லியில் ஆட்சி அமைக்கப் போவதாக இன்று அறிவிக்கவிருக்கிறார். காங்கிரஸ் கட்சி அவருக்குத் துணைபோகும் என்று தெரிகிறது. பா.ஜ.க. எப்படியும் 2014 பொதுத்தேர்தல் சமயத்தில் தில்லியில் ஆட்சியில் இல்லாமல் போனால் தங்களுக்கு நல்லது என்று காங்கிரஸ் நினைக்கிறது. அதே சமயம், திடீரென்று முளைத்த ஆம் ஆத்மியைச் சமயம் பார்த்து காலைவாரிவிடவும் அது தயங்காது என்பதில் சந்தேகமில்லை. அனுபவமில்லாத ஆம் ஆத்மி கட்சி, தில்லி என்ற ஒரு சிறிய மாநிலத்தையே ஆளமுடியாமல் போகுமானால் அது, மேற்கொண்டு எந்த மாநிலத்திலும் கால்கொள்ளமுடியாமல் போகும். பா.ஜ.க.வுக்கும் இது மகிழ்ச்சி தரும் விஷயமே.பொது எதிரி ஒழிந்தால் நிம்மதி தானே!

ஜெயந்தி நடராஜன், மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஆந்திராவில் ஜகன் ஜாமீனில் வெளிவிடப்பட்டதுமாதிரி இதுவும் ஒரு திட்டமிட்ட நிகழ்வு என்று கூறுகிறார்கள்.

காங்கிரசுக்கு எதிராகப் போட்டியிட்டு பாராளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றவேண்டியது, பிறகு, காங்கிரசுக்கே ஆதரவு தெரிவிக்க வேண்டியது – என்ற இரு அம்சக் கொள்கையை ஜகன் ஒப்புக்கொண்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் (நான் அல்ல!) தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டிலும், ஜி.கே.வாசன் விரைவில் காங்கிரசிலிருந்து விலகி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் உயிர்பெறச்செய்து, தி.மு.க. துணையுடன் சில பாராளுமன்ற இடங்களை வென்று, அதன் பிறகு ஒரு சுபயோக சுபதினத்தில் காங்கிரசுடன் ஐக்கியமாக வேண்டுமென்று திட்டமிடப்பட்டுள்ளதாக அதே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அந்தக் கட்சியில் சேருவதற்கு ஜெயந்தி நடராஜனுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  

ஆக, மூன்றாவது அணி, தேசீய அளவில் எழுச்சிபெறுவது இயலாத காரியம் போல் தோன்றுகிறது. பார்க்கலாம்!

புத்தகம்
சனிக்கிழமை (21-12-2013) மாலை அகநாழிகை புத்தகக் கடையில் நடந்த இலக்கிய சந்திப்புக்குச் சென்றிருந்தேன். (சென்னையைவிட்டுச் சற்று தூரமுள்ள குடியிருப்பில் வசிப்பதால் இம்மாதிரி மாலைநேர விழாக்களில் பங்குபெறுவது கடினமாகிக்கொண்டுவருகிறது. விரைவில் இதற்கொரு தீர்வு காணவேண்டும்.) சைதாப்பேட்டையில் மிக முக்கியமான, அனைத்துப் பேருந்துகளும் நிற்கும் அண்ணாசாலையில், வாசன் ஐ  கேருக்கும் ஆந்திரா வங்கிக்கும் இடையில், ஒரு பெரிய மரநிழலின் பின்னணியில் முதல்மாடியில் அகநாழிக புத்தகக் கடை அமைந்துள்ளது. சில மாதங்களிலேயே சென்னையின் இலக்கிய வாழ்வில் மிக முக்கிய இடத்தை அடைந்துவிட்டது.

மேற்படி சந்திப்பு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஏற்பாடுசெய்திருந்த விழா ஆகும். 88 வயதான தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களால் எழுதப்பட்டு நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டிருக்கும் “டாலர் தேசத்து அனுபவங்கள்” என்ற நூலின் விமரிசனக் கூட்டம் அது.

தோழர் நல்லகண்ணு அவர்கள் சென்ற ஆண்டு இருபது நாட்கள் அமெரிக்காவின் முக்கியப் பகுதிகளுக்குச் சென்றுவந்த பயணத்தின் விளைவாக எழுதப்பட்டிருக்கும் நூல். அழகான தமிழில், இதுவரை அமெரிக்கா போகாதவர்களுக்கு ஆர்வமூட்டும் வகையிலும், பொதுவுடைமைக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருந்தாலும், அமெரிக்க முன்னேற்றங்களைக் காழ்ப்புணர்ச்சியின்றிப் பதிவிடுவதாகவும் உள்ளது.

சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட வாசகர்கள்/ரசிகர்கள் வந்திருந்தனர். ஓர் இலக்கியக் கூட்டத்திற்கு முப்பது என்பதே வெற்றிகரமான எண்ணிக்கை.

சில மாதங்களுக்கு முன்புதான் வெளியாகியுள்ள நூல். (நூறு பக்கம். நூறு ரூபாய்.) விலை கொடுத்து வாங்கினேன். தோழர் நல்லகண்ணு அவர்களின் கையொப்பமும் பெற்றேன்.

சினிமா & தொலைக்காட்சி
நேற்று (22-12-2013) ஞாயிற்றுக்கிழமை இரவு சன் டிவியில் மாற்றுத்திறனாளிகளுக்கான (நடனப்)போட்டி ஒன்று வெளியாகிக் கொண்டிருந்ததைப் பாதியில் பார்த்தேன். பழம்பெரும் நடிகை, ‘பொத்திவச்ச மல்லிக மொட்டு’ பாடல் மூலம் திரைக்கு வந்த ரேவதி, பட்டிமன்றங்களில் அசடுவழிந்தபடியே கைதட்டல் வாங்கிவிடும் ராஜா, மற்றும் நடிகர் அப்பாஸ் ஆகியோர் நடுவர்கள்.

போலியோ நோயினால் கை கால்கள் இரண்டும்  முழுவளர்ச்சி பெறாத ஒருவர், பீஷ்மர் மாதிரி ஒரு முள்படுக்கையில் சிரசாசனம் உள்படப் பல யோகா ஆசனங்களைச் செய்து காட்டியது வியப்பூட்டியது. பாண்டிச்சேரியில் அவர் யோகாமாஸ்டராம். முயன்றால் முடியாததில்லை என்று நிரூபித்தார். சன் டிவியில் இம்மாதிரி ஆளுமைகளுக்கும் இடமளிப்பது, அவர்களின் அழுகை சீரியல்களுக்குப் பிராயச்சித்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

பத்திரிகை
நம் காலத்து சிறந்த எழுத்தாளரும் சிந்தனையாளரும் ஆவார், ஜெயமோகன். தமிழிலும் மலையாளத்திலும் புகழ்பெற்றிருக்கும் இவர், தமது சுதந்திரமான கருத்துக்களால் அனைவரின் சிந்தனையையும் தொடுபவர். (இவரையும் சாரு நிவேதிதாவையும் எதிர்ப்பதற்கென்றே வலைப்பூக்களையும் முகநூல் பக்கங்களையும் நடத்துகிறார்கள் சிலர் என்பதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.)

அண்மைக்காலமாகத் தமிழ் இந்துவில் ஜெயமோகன் கட்டுரைகள் அடிக்கடி வருகின்றன. டிசம்பர் 16 தேதியிட்ட இதழில் எட்டாம் பக்கத்தில் ‘காந்தியம்’ என்ற தலைப்பில் இவரது கட்டுரை வெளியாகியுள்ளது. இளைஞர்களைக் கவரும் விதமாக, அதே சமயம், காந்தியத்தில் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியதாக இக்கட்டுரை உள்ளது. மாணவர்களுக்குக் கட்டுரைப் போட்டிக்கும், விவாத மேடைக்கும் இது மிகவும் பயன்படும். தமிழ் இந்துவின் இணையதளத்திலிருந்து இறக்கிக்கொள்ளலாம்.

இக்கட்டுரையில் ஜெயமோகன் குறிப்பிடும் முக்கியமான கருத்து: காந்தியம் என்றால் காந்தி சொன்ன கருத்துகள் என்று பொருள்கொள்ளவேண்டாம். ஏற்கெனவே இருந்த இந்தியச் சிந்தனைகளை முதன்முதலாகத் தொகுத்துச் செயல்பாட்டுக்குறிய வழியாக அறிவித்தவர் தான் காந்தி. எனவே, “காந்தியத்தின் தொடக்கம் தான் காந்தி” என்கிறார். “இன்றைய உலகில் நிர்வாகவியல் முதல் எண்ணற்ற நவீன துறைகளில் செல்வாக்கு செலுத்திவரும் அதிநவீன சிந்தனை. நாளைய உலகுக்கான வாசலும் கூட” என்று ஜெயமோகன் கூறுவதை மறுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை.

சிரிப்பு
வட இந்தியப் பத்திரிகைகளில் சர்தார்ஜி ஜோக்குகள் பிரபலம். அதேபோல், தமிழ்ப் பத்திரிகைகளில் புறமுதுகுகாட்டி ஓடும் மகாராஜாக்களின் ஜோக்குகள் பிரபலமாகிவிட்டன. தமிழ் இந்துவிலும் இப்போது வர ஆரம்பித்துவிட்டார், மகாராஜா.16-12-2013 அன்று பக்கம் 12இல் பர்வீன் யூனுஸ் எழுதிய ஜோக் இது:

“மன்னர் என் கடுப்பாக இருக்கிறார்?”
“பதுங்குகுழி ரெடி ஆகவில்லை என்று அவரை பாதாள சாக்கடையில் ஒளிந்துகொள்ளச் சொன்னார்களாம்”

ஒரு முக்கிய அறிவிப்பு:
என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பு “தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்” என்ற பெயரில் தயாராகிக்கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் வந்துவிடும். பதிப்பாளர் அகநாழிகை பொன். வாசுதேவன் அதன் அட்டைப் படத்தை அவரது முகநூலில் வெளியிட்டிருக்கிறார். 

(நூல் வெளிவந்த பிறகு  அட்டைப்படத்தைப் பற்றிய முக்கியத் தகவலைச் சொல்லுவேன்.) 144 பக்கம். 12 சிறுகதைகள். பிரபல பதிவரும், தஞ்சைத் தமிழரும், சிறந்த எழுத்தாளரும், அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியருமான ‘ஹரணி’ என்கிற முனைவர் க. அன்பழகன் அவர்கள் ஆழமான மதிப்பீடு வழங்கியிருக்கிறார். (விலை நூற்றி இருபதுக்குக் குறையாது என்று தெரிகிறது.)

குறிப்பு : இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள 'தமிழ்மணம்' பட்டையில் இடதுபுறமுள்ள 'மேல்நோக்கிய' கட்டைவிரல் அடையாளத்தின் மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.நன்றி.

© Y.Chellappa

35 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா.

  பதிவு சிறப்பாக உள்ளது .. தங்களின் சிறுகதை தொகுப்பு மிக விரைவில் வெளிவர எனது வாழ்த்துக்கள்.
  த.ம 2வது வாக்கு.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. முதலில் உங்களுக்கு எங்கள் மனப்பூர்வமான பாராட்டுக்கள்!! வாழ்த்த வயதில்லை!! கலைமகள் - "சாந்தி நிலவ வேண்டும்" என்ற தங்கள் கதைக்கு பரிசு கிடைத்திருப்பதற்கு!! தங்கள் இலைக்கியப் பணி மேன் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு அருள் வழங்கப் பிரார்த்திக்கின்றோம்!!

  வழக்கம் போல தங்கள் அபுசி தொபுசி, நல்ல அரசியல் ஆய்வுடனும், (கெஜ்ர்வாலை நம்புவதற்கில்லை ஐயா!!) சன் டி.வி.யின் நல்ல விஷயத்தை எடுத்துச் சொன்னதற்கும் அதுவும் சிறு நகைச் சுவை உணர்வுடன்...அருமை.

  ஜெயமோகனும் அவர் எழுத்துக்களும் அதிகமாக விமர்சிக்கப்படுவது வழக்கமாக நடப்பதுதான். சமீபத்தில் அவரது எழுத்துருக்கள் பற்றிய சிந்தனைக் கட்டுரை எல்லோராலும் எதிர் மறையாக விமர்சிக்கப்பட்டதே!

  தங்கள் புத்தகம் விரைகில் வெளிவர காத்திருக்கிறோம்.!!

  நன்றி பகிர்தலுக்கு!!!

  பதிலளிநீக்கு
 3. சிறுகதைத் தொகுப்பு “தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்” சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 4. அட்டைப்படம் அருமை. நூல் வரக் காத்திருப்பேன்.

  பதிலளிநீக்கு
 5. திங்கட்கிழமை என்றால் அபுசி தொபசி
  என்கிற ஞாபகம் வரும்படியாக
  மிக நேர்த்தியாக கதம்ப மாலையாக
  அரசியல் இலக்கியம் நாட்டு நடப்பு என
  பயனுள்ள தகாவல்களை சுவாரஸ்யமாகத் தருவது
  மனம் கவர்ந்தது
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. எப்போதும் போல இப்போதும் அருமை

  பதிலளிநீக்கு
 7. அருமையான பகிர்வு!!.... தங்கள் சிறுகதைத் தொகுப்பு சிறப்புடன் அமைய‌ என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!!..

  பதிலளிநீக்கு
 8. //என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பு “தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்” என்ற பெயரில் தயாராகிக்கொண்டிருக்கிறது.//

  வாழ்த்துக்கள் ஐயா!
  ஆக, இன்னும் ஒரு சில வாரங்களில் தங்களின் 'அபுசி - தொபசி'-யில் இந்தப் புத்தகத்தைப் பற்றியும் எழுதுவீர்கள்தானே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் முகவரியை எனது மின்னஞ்சலில் அனுப்புங்கள். ( chellappay@yahoo.com). புத்தகம் அனுப்புகிறேன். நீங்களே அது பற்றி எழுதலாமே!

   நீக்கு
  2. நன்றி. எனது முகவரியை மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிறேன், ஐயா!

   //விலை நூற்றி இருபதுக்குக் குறையாது என்று தெரிகிறது//
   - - ரூ.120 என்று விலை குறிக்கப்பட்டு தயாரான அட்டைப்படத்தையும் பதிவிட்டிருக்கிறீர்கள். இன்னும் ஏன் விலையில் உங்களுக்கு சந்தேகம் ஐயா?

   நீக்கு
 9. கலைமகள் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் !
  உங்கள் வயதில் குறைந்த ரேவதியை பழம்பெரும் நடிகையாக்கி விட்டீர்களே ,மல்லிகை மொட்டு வாடி விடப் போகிறது !
  +1

  பதிலளிநீக்கு
 10. நண்பரே! இப்போது திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்காத நடிகை என்றால் பழம்பெரும் நடிகை என்றுதானே பொருள்? மற்றபடி, ரேவதி எனக்கு மிகவும் பிடித்த நடிகையருள் ஒருவர். (அவரிடம் ஏதும் சொல்லி நீங்கள் கோள் மூட்ட மாட்டீர்களே!) கருத்துரைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 11. கலைமகள் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் !முதல் சிறுகதைத் தொகுப்பு “தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்” என்ற பெயரில் தயாராகிக்கொண்டிருக்கிறது. அட்டைப்படம் அருமையாக இருக்கிறது..பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
 12. பதிவு சிறப்பாக உள்ளது .. தங்களின் சிறுகதை தொகுப்பு மிக விரைவில் வெளிவர எனது வாழ்த்துக்கள்.
  tha/ma/15

  பதிலளிநீக்கு
 13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 14. ***காந்தியம் என்றால் காந்தி சொன்ன கருத்துகள் என்று பொருள்கொள்ளவேண்டாம். ஏற்கெனவே இருந்த இந்தியச் சிந்தனைகளை முதன்முதலாகத் தொகுத்துச் செயல்பாட்டுக்குறிய வழியாக அறிவித்தவர் தான் காந்தி. எனவே, “காந்தியத்தின் தொடக்கம் தான் காந்தி” என்கிறார். ***

  இதை ஜெயமோகன் சொல்லித்தான் நாங்க தெரிஞ்சுக்கணுமா என்ன? Dont give credit to Jeyamohan for this "statement" either! WE ALL KNOW THAT fact already!

  பதிலளிநீக்கு
 15. நூல் விரைவில் வெளியீடுகான என் வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
 16. அன்புள்ள ஐயா.

  வணக்கம்.

  தங்களின் சிறுகதைத் தொகுதி தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் அட்டைப்படம் நேர்த்தியாக வந்திருக்கிறது. எனக்கு எங்களின் குலதெய்வக்கோயிலில் இருக்கும் கருப்புசாமியின் வெள்ளைக் குதிரையை நினைவூட்டுகிறது. அருகே இருக்கும் சிறுவன் மரபின் தொடர்ச்சியாக நிற்கிறான். இயற்கையான சூழமைவுடன் அட்டைப்படம் வந்திருக்கிறது.

  தங்களின் அன்பிற்கு நன்றிகள்.

  என்னுடைய நண்பர் ஜெயமோகன் குறித்த கட்டுரைக்கு கருத்துரை வழங்கியிருக்கிற திரு வருண் என்பவர் இது ஜெயமோகன் சொல்லித் தெரிவதில்லை என்று பதிவிட்டிருக்கிறார். அவருடைய கருத்தாக இருந்தாலும் எல்லாம் தெரிந்தவர்கள் எதையும் சொல்லாமலிருப்பதோடு இதுபோன்ற சூழல்களில் கருத்துரைப்பது நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. எதை சொன்னாலும் அது ஏற்கெனவே எல்லோருக்கும் தெரிந்தது என்றாலும் அதன் நுட்பத்தையும் ஆழத்தையும் மறுவாசிப்பு செய்யத் துர்ண்டவுமான போக்கில்தான் ஜெயமோகன் கட்டுரைகள் இருக்கும். இதை காலம் உணர்த்தும்.

  ஜெயமோகனின் பங்களிப்பு என்பது தமிழ் படைப்புலக வரலாற்றில் மிகமிக ஆழமான அழுத்தமான செம்மையான பக்கங்கள் என்பதையும் உலகம்றியும் நாள் உண்டு.

  நன்றிகள்.

  பதிலளிநீக்கு