திங்கள், டிசம்பர் 02, 2013

நடிகர் சிவகுமார்- தமிழ்த் திரையுலகின் அதிசயம் ( ‘அபுசி-தொபசி’- 13)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)
அரசியல் 

அரசியல் அநீதிகளைத் தட்டிகேட்கும் தைரியம் இல்லாதிருந்த பத்திரிகைகளுக்கு நடுவே எரி நட்சத்திரம் மாதிரிக் கிளம்பி வந்தது, ‘தெஹெல்கா’ .கூடவே சமுதாய பிரச்சினைகளையும் மேலெடுத்துப் போராடிய பெருமையும் அதற்கு உண்டு. அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் தெஹெல்காவுக்குத் தனியான வாசகர் வட்டமே உண்டு. இதெல்லாம் ஒருவாரம் முன்புவரை.


(பழைய இதழ் மேலட்டை. இப்போதைய நிகழ்ச்சிக்கு சம்பந்தமில்லை)
தன்கீழ்ப் பணியாற்றும் பெண்செய்தியாளரைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக தருண் தேஜ்பால் சனிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டிருக்கிறார். கைது ஆவதை எப்படியாவது தவிர்ப்பதற்காக அவர் ஆடிய ஆட்டமும், மத்திய ஆளும்கட்சி அவர்சார்பாகச் செய்ததாகச் சொல்லப்படும் முயற்சிகளும் முன்னுக்குப் பின் முரணான அவரது அறிக்கைகளும் இவ்வளவு காலம் தெஹெல்கா சேர்த்துவைத்திருந்த புகழை அடியோடு அழித்துவிட்டன என்றால் மிகையாகாது. வழக்கின் முடிவு எப்படியிருந்தாலும், இனி தெஹெல்காவின் ஆயுள் அவ்வளவுதான் என்று தோன்றுகிறது. 


ஒரு கற்பனை: இதேபோன்ற நிகழ்ச்சி வேறொரு பத்திரிகையில் நடைபெற்றிருந்தால், தெஹெல்கா எப்படியெல்லாம் குதித்துக்கொண்டு செய்தி வெளியிட்டிருக்கும்! இந்த ஒரு நிகழ்வை வைத்துக்கொண்டே நாற்பது வாரங்கள் இதழை ஓட்டியிருப்பார்கள், மற்றும், நாலுமுறை தேஜ்பாலின் அமெரிக்கப் பயணமும் நடந்திருக்குமே!

அருமையான துப்பறியும் இதழாக விளங்கிக்கொண்டிருந்த தேஹெல்காவின் வீழ்ச்சிக்கு அதனுடைய அண்மைக்கால  காங்கிரஸ்சார்பும் அதன் காரணமாகக் கிடைத்த அசட்டுத்துணிச்சலும் முக்கியக் காரணங்களாக இருக்கக்கூடும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். (எதற்கென்று தெரியாமலே தெஹெல்காவுக்கு ஐந்துலட்சம் கொடுத்தாராமே கபில் சிபில்!)

புத்தகம்

நீர்க்கோல வாழ்வை நச்சி (கவிதைகள்) – லாவண்யா சுந்தரராஜன்
(வெளியீடு: அகநாழிகை,மதுராந்தகம்/சென்னை. 64 பக்கம் ரூபாய் 40. இணையத்தில் வாங்க: www.aganazhigaibookstore.com)

லாவண்யா என்ற இளம்கவிஞரின் முதல் கவிதைத் தொகுப்பு. ‘முதல்’ என்று போட்டதால் தான் இது முதல் படைப்பு என்று தெரியும். இல்லையெனில் ஒரு தேர்ந்த கவிஞரின் படைப்பு என்று மிக எளிதாகக் கொள்ளப்பட்டுவிடும். அவ்வளவு ஆழமான கவிதைகள். கவிஞர் கலாப்ரியாவின் முன்னுரை இந்த நூலை மிகவும் உயரத்திற்குக் கொண்டுபோவதில் வியப்பில்லை. மாதிரிக்குச் சில வரிகள்:

உனக்காக காத்திருக்கையில்
கடந்துபோகும் எத்தனை கேள்விகளுக்கு
போலியாகப் புன்னகைப்பது? (ப.35)
**
எல்லாம் இருந்தும்
நகர்ந்து கொண்டு இருந்தது
யாருமற்ற நதி. (ப.37)
**
எதைக் கொண்டும்
நிரப்ப முடிவதில்லை
யாரோவாகிப்போன
நீ தந்த
நிராகரிப்பின் ரணத்தை. (ப. 41)
**
எப்போதும் நேர்த்தியாகவே
இருக்கின்றன
நமதற்ற வரவேற்பறைகள். (ப.50)
**
உனது குடை விரிப்புகளில்
சட்டென அடங்கியது
எனக்கான வான். (ப.56)
**
வாசல் தாண்டி
உள் வருவதில்லை
அழகிய கோலங்கள் கூட. (ப.60)
 
வெகுவிரைவில் மிகச்சிறப்பான கவிஞராக மலரப்போகிறவர், லாவண்யா சுந்தரராஜன். வாங்கிப் படியுங்கள்!

சினிமா

ஒரு சினிமா நடிகரின் புத்தகம் இந்த வாரம்.
என் செல்லக் குழந்தைகளுக்கு – (சொற்பொழிவு)- நடிகர் சிவகுமார்
(வெளியீடு: அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை-4. 120 பக்கம் ரூபாய் 65)

நடிகர் சிவகுமாருக்கு ஒருமுறை பணமுடை ஏற்படவே, (எம்ஜிஆரை வைத்துப் படங்கள் தயாரித்துக் கொண்டிருந்த) சாண்டோ சின்னப்பதேவரிடம் கடன் பெற்றாராம். சிறிது காலம் ஆனபிறகு அதைத் திருப்பிக் கொடுக்கப் போனபோது தேவருக்கு ஆச்சரியம். எம்ஜிஆர் உள்பட யாருமே அவரிடம் வாங்கிய கடனைப் பணமாகத் திருப்பித் தந்ததில்லை. படத்தில் நடித்துத்தான் கடனைக் கழித்திருக்கிறார்கள். எனவே சிவகுமாரிடம் ‘பணம் வேண்டாம், நடித்துக் கழித்துவிடலாமே’ என்றாராம். ஆனால் சிவகுமார் நடிக்கும்படியான படங்களை அப்போது தேவர் எடுக்கும் சந்தர்ப்பம் அமையுமா என்று தெரியவில்லை. எனவே சிவகுமார், ‘மன்னிக்கவேண்டும், கடனை முதலில் கழித்துவிடுங்களேன்” என்று உறுதியாக நின்று பணத்தைக் கொடுத்துவிட்டுத்தான் போனாராம். திரை உலகில் இது அதிசயமான நிகழ்ச்சி என்றார்கள். சுய ஒழுக்கத்திற்கு முன்னுதாரணமாகத்திகழும் நடிகர் என்றால் தமிழில் நினைவுக்கு வரும் முதல் நடிகர் சிவகுமாரே.

நூறு பூக்களின் பெயர்களை ஒரு தசாவதானியின் நினைவாற்றலோடு சிவகுமார் ஒப்புவிக்கும் சொற்பொழிவை நீங்கள் விஜய் தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம். அந்தச் சொற்பொழிவு தான் இந்தப் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. எளிதில் படிக்கத்தக்க பெரிய எழுத்துருவில், வரிக்கொரு பத்தியாக, மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவனும் புரிந்துகொள்ளும்விதமாகப் பதிப்பித்திருக்கிறார்கள். எழுபத்தைந்து ரூபாய் கொடுத்து ‘டின்க்கிள்’ வாங்கிக்கொடுக்கும் பெரியோர்கள், அதிலும் பத்து ரூபாய் குறைவில் இந்தப் புத்தகத்தை வாங்கிக்கொடுத்தால் நிச்சயம் சிறுவர்களின் தமிழ் அறிவு மேன்மையடையும். உருக்கமானதொரு எடுத்துக்காட்டு:

எங்க நடிப்பு ஜாதியைச் சேர்ந்த ஒரு அம்மா. தன் பையனை கொண்டுபோய் ஏற்காடுல போட்டாங்க! (போர்டிங் பள்ளியில்)
3..4.. வயசுலேயே போட்டுட்டாங்க. அந்தப் பையனுக்கு அம்மா ஏக்கம். அம்மா...அம்மா...ன்னு சொல்லி அழுதுகிட்டே இருப்பான்.. ஏக்கம் குறையவே இல்ல! ‘ஹோம்சிக் வேற...இந்த அம்மா ஏக்கம் வேற. அப்படியே இருந்தான்...படிக்கவே முடியல..

ஒவ்வொரு வகுப்பா தூக்கி தூக்கி போட்டாங்க! தூக்கி போட்டு...+2 பாஸ் பண்ணல..! அங்கிருந்து துரத்திவிட்டாங்க! வீட்டுக்கு வந்தான். அம்மா கதறிக் கதறி அழுதா..!

பையன் சொன்னான்..அம்மா..நீ அழுவாதே! உன் அழுகையைப் பாத்து எனக்கு அழுகை வரல..!

சின்ன வயசில உன்னைக் கட்டி பிடிச்சிட்டு ...ராத்திரி தூங்கனும்னு ஆசைப்பட்டேன். காலைல எழுந்தவுடனே.. நீ என்னை குளிப்பாட்டி விடுவேன்னு ஆசைப்பட்டேன்!

தலை சீவி விட்டு..சோறு ஊட்டி விடுவேன்னு ஆசைப்பட்டேன்!

பள்ளிக்கூடத்துல கொண்டுபோய் விடுவேன்னு ஆசைப்பட்டேன்!

சாயங்காலம் ..வீட்டுக்கு கூட்டிட்டு வந்து ..பீச்சுக்கு கூட்டிட்டு போவ..ஐஸ்கிரீம் வாங்கித் தருவேன்னு ஆசைப்பட்டேன்!

லீவு நாள்ல மகாபலிபுரம் போகலாம்னு ஆசைப்பட்டேன்!

ஒருநாள் உன் மடில உட்கார்ந்து சினிமா பார்க்கணும்னு ஆசைப்பட்டேன்!

எதுவுமே நீ செய்யலியே! இப்ப நீ அழுகிறத பார்த்து எனக்கு எப்படி அழுகை வரும்?

ஆடு..மாட அடைக்கிற மாதிரி..போர்டிங்கில கொண்டுபோய் அடைச்சுப்புட்ட.. 14  வருஷம் எங்கயோ இருந்துட்டுதான் வந்தேன்!.. எனக்கு அம்மா பாசம் எங்கேயிருந்து வரும்..??” –அப்படின்னு சொன்னான்!  (பக்கம் 85-86-87)

தொலைக்காட்சி
‘புதுயுகம்’ சேனலில் டிசம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை பகல் பன்னிரண்டு மணிக்கு ‘வினா-விடை வேட்டை’ என்ற நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது. நான்கு அணிகளுக்கிடையில் போட்டி. பொது அறிவுக் கேள்விகள் தான். வாய்மொழிக் கேள்வி, ஆடியோ-விடியோ கேள்விகள் எனப் பலதரப்பட்ட கேள்விகள். மாணவர்கள் நிச்சயம் பார்க்கவேண்டும்.
 


வேற்று மொழிக்காரர்களான குஷ்புவையும் சிம்ரனையும் அழைத்துத் தமிழ்ப் பயிருக்கு நீரூற்றும் வேலையைச் செய்tதுவரும்  தொலைக்காட்சிகளுக்கு நடுவே, தமிழ்நாட்டில் பிறந்து தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு பெண் இந்த நிகழ்ச்சியை நடத்த நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றால் அதுவே ஆச்சரியம் தானே! 
நடிகை கஸ்தூரி இவ்வளவு அழகாகத் தமிழ் பேசுபவரா!
 (இப்பவும்கூட இவ்வளவு அழகாக இருக்கிறாளே – என்று வீட்டில் சொன்னார்கள். ஆமாம் என்று சொல்ல வந்ததை அடக்கிக்கொண்டேன். பின்விளைவுகளைத் தாங்கும் சக்தி குறைந்துகொண்டே வருகிறதல்லவா?)

பத்திரிகை

அந்நிய சக்திகள், பன்னாட்டு நிறுவனங்களின் போர்வையில் இந்தியாவில் அரசியல் சூத்திரதாரிகளாக விளங்கமுற்படுவது புதிய விஷயமல்ல. ஆனால் கோல்ட்மேன் சாக்ஸ் என்ற நிதித்துறை நிறுவனம் அத்தகைய செயலில் இறங்கியிருப்பது ஆட்சேபகரமானது என்கிறது ‘அவுட்லுக்’ வார இதழ்.   (25-11-2013 பக்கம்: 38-39)

டாலருக்கெதிரான ரூபாய் மதிப்பு கடந்த சில மாதங்களில் வீழ்ச்சி அடைந்தவுடன், இந்தியாவின் நம்பகத்தரத்தைக் (Credit Rating)  குறைத்து அறிவித்த நிறுவனம் கோல்ட்மேன் சாக்ஸ். இப்போது நாடு முழுதும் நரேந்திர மோடி பிரதமராக வரக்கூடும்போன்ற தோற்றம் இருப்பதைப் பயன்படுத்திக்கொண்டு, ‘மோடி பிரதமரானால் இந்தியாவின் நம்பகத்தரம் உயரும்’ என்று அறிக்கை விடுகிறது அந்த நிறுவனம்! “மே  2014இல் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் பாரதீய ஜனதா ஆட்சி, மோடியின் தலைமையில் பதவியேற்கும் என்றும்,  மோடியை மாற்றங்களைக் கொண்டுவரும் காரணியாக முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள்” என்றும் அது தெரிவித்திருக்கிறது.

இது நியாயமா என்கிறது அவுட்லுக். 2004  தேர்தலின்போது ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்து, வெற்றி பெறுவதுபோல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருந்த  பாரதீய ஜனதா கூட்டணியை ஆதரித்து அப்போது ஒன்றும் சொல்லாத இந்நிறுவனம்,   2009 இல் காங்கிரஸ் கூட்டணி ஜெயிக்கக்கூடும் என்று ஒருவார்த்தை சொல்லாத நிலையில், இப்போதுமட்டும் மோடிக்கு ஆதரவாகச் சந்தையில் நேர்மறைக் கருத்தை உருவாக்க வந்திருப்பதின் அரசியல் பின்னணி என்ன என்கிறார், கட்டுரை ஆசிரியர் லோலா நாயர்.

சிரிப்பு

எந்த வயதில் தான் காதலிப்பது? பாக்கியராஜின் பதில். (நவம்பர் 29-டிசம்பர் 5   பாக்யா’ வார இதழில் பக்கம் 14-15.)
15 வயதுக்கு உட்பட்டவர்னா: “முளைச்சு மூணு இல விடல, அதுக்குள்ளே உனக்கு லவ் கேக்குதோ?”

16-20 வயதுன்னா: “படிக்கிற வயசுல கழுதைக்கு லவ் கேக்குதோ?”

21-28 வயது என்றால்: “வேல வெட்டி இல்லாத துடப்பக்கட்டை! நீயே தண்டம். உனக்கு ஒரு தண்டமா?”

36-45 வயதுன்னா: “பிள்ளை குட்டிகள் லவ் பண்ற வயசுல உனக்கெல்லாம் காதலா?”

46-60 வயதுன்னா: “பேரன் பேத்திய காண்ற வயசுல கிழடுக்கு காதல் கேக்குது”

60க்கு மேல்: “காடு வாவாங்குது, வீடு போபோங்குது, இந்த வயசுல காதலா?”

(அது சரி, 28-35 வயதைப் பற்றி ஏன் கூறவில்லை? அது தான் காதலிக்கச் சரியான தருணமா? அல்லது, அப்போது தான் அவர் பூர்ணிமாவைக் காதலித்தாரா? உங்கள் அனுபவம் என்ன? –சொல்லக்கூடியதானால் மட்டுமே!)
© Y.Chellappa
Email: chellappay@yahoo.com
குறிப்பு : இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள  'தமிழ்மணம்' பட்டையில் இடதுபுறமுள்ள 'மேல்நோக்கிய' கட்டைவிரல் அடையாளத்தின் மீது  ஒரு கிளிக் செய்யுங்கள்.நன்றி.

35 கருத்துகள்:

  1. அனைத்துமே அருமை ஐயா.
    சிவகுமாரின் நூலினை ஏற்கனவே படித்திருக்கின்றேன் ஐயா. அற்புத மனிதர். அற்புதமான ஞாபக சக்தி உடையவர்.
    லாவண்யா சுந்தரராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
    2. தங்களின் கருத்துக்களைப் பாடித்தாலே பதிவின் சுருக்கத்தை அறிந்துகொள்ள முடியும். நன்றி ஐயா..

      நீக்கு
    3. வணக்கம்...

      நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?

      அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..

      சரியா...?

      உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

      அப்போ தொடர்ந்து படிங்க...

      ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!

      நீக்கு
  2. எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுப்பது அமெரிக்க கம்பெனி முதலாளிகள் என்றால் ஆச்சிரியப்பட வேண்டியதில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேர்தலுக்குப் பணம் தேவைப்படுகிறது. பணம் கம்பெனிகளால் உருவாக்கப்படுகிறது. எனவே தேர்தலுக்குக் கம்பெனிகள் தேவைப்படுகின்றன. அமெரிக்கா முதல் அன்டார்ட்டிகா வரை இதுவே உண்மைநிலை! தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  3. தங்கள் பதிவு ஒரு அருமையான
    பல்சுவைப் பதிவாக வெளிவருவது
    மகிழ்வளிக்கிறது
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அனைத்து pulsuvavai தகவல்கள் அருமை ஐயா.... நன்றி...

    கட்டுரைப் போட்டி தகவல் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

    பதிலளிநீக்கு
  5. உங்க சினிமா ஆர்வம் புரிகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு நடிகையை விடமாட்டீங்க போல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாரம் ஒரு நடிகை என்பது மிகச் சிறிய இலக்கு தானே நண்பரே!

      நீக்கு
  6. நடிகர் சிவகுமார் ஒரு வித்தியாசமான நடிகர் அறுபது வயதுக்கு மேல் கம்பராமாயணம் படித்துப் பலபகுதிகளை மனானம் செய்து மடைவெள்ளம்போல் சொற்பொழிவு நிகழ்த்துவது ஆசசரியம் அளிக்கிறது. அவரது அகரம் முயற்சியும் குறிப்பிடத்தக்கது.பகிர்வுக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி திரு GMB அவர்களே! அவர் மட்டுமல்ல, அவரது மகன் சூர்யாவும் இப்போது நூறு பூக்களை ஒப்பிக்க ஆரம்பித்திருக்கிறார்! ஒரு தொலைக்காட்சியில் பார்த்தேன்!

      நீக்கு
  7. சிவகுமார் அவர்களுக்கு முன் நடிகர் என்ற பெயர் கூட பொருத்தமில்லை.அபூர்வமான நற்பண்புகள் நிறைந்தவர்...

    பதிலளிநீக்கு
  8. தெளிவான கருத்துக்கள்...பதிவுகள் தனிப்பிரிவுகளாக இருந்தால் பகிர்ந்து கொள்ள சுலபம்..நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே! தனிப்பதிவுகளாக வெளியிட்டால் பலமுறை இந்த ஒரு வலைத்தளத்திற்கே வந்துபோக வேண்டியிருக்குமே! அதன்றியும், அவியலை சாம்பார் மாதிரி சாப்பிட்டால் சுவைக்காது அல்லவா?

      நீக்கு
  9. (இப்பவும்கூட இவ்வளவு அழகாக இருக்கிறாளே – என்று வீட்டில் சொன்னார்கள். ஆமாம் என்று சொல்ல வந்ததை அடக்கிக்கொண்டேன். பின்விளைவுகளைத் தாங்கும் சக்தி குறைந்துகொண்டே வருகிறதல்லவா?)

    சிந்தித்தேன்! சிரித்தேன்! நல்ல தொகுப்பு! சுவைத்தேன்!

    பதிலளிநீக்கு
  10. பல்சுவைப் பதிவு!!!.. லாவண்யா சுந்தர்ராஜன் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி!!

    பதிலளிநீக்கு
  11. அருமையான தொகுப்பு.. அனைத்துமே அருமை.. !

    குறிப்பாக நீர்க்கோல வாழ்வை நச்சி (கவிதைகள்) – லாவண்யா சுந்தரராஜன் புத்தக - ஆசிரிய அறிமுகம் அருமை..

    வணக்கம்...

    நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?

    அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..

    சரியா...?

    உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

    அப்போ தொடர்ந்து படிங்க...

    ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துரைக்கும் செல்போன் பற்றிய ஆலோசனைக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  12. அனைத்துமே மிக அருமை! நடிகர் சிவக்குமார் பற்றிச் சொல்லவேத் தேவையில்லை! celluloid உலகில் அருமையான, உண்மையான மனிதர்! அதே நோக்கில் வாழ்வையும் நோக்கியதால்தான் அவரால் தன்னைச் சுற்றி நடந்த அனுபவங்களிலுருந்து தான் கற்றுக் கொண்டவைகளை எல்லாருக்கும் அருமையாக நல்ல விதத்தில் சொல்ல முடிகிறது!.
    28-35 "இந்த வயசுல உன் வேலைய ஒழுங்கா பாத்து, லவ்வோ, கிவ்வோ பண்ணி கல்யாணம் கட்டி 2 பிள்ளைக் குட்டிய பெத்தமா ஒழுங்கா குடும்பம் நடதினமானுப் பாருய்யா.....இப்படியும் இருக்கலாம். (அவரும் செய்திருப்பார்)

    "இப்பவும்கூட இவ்வளவு அழகாக இருக்கிறாளே – என்று வீட்டில் சொன்னார்கள். ஆமாம் என்று சொல்ல வந்ததை அடக்கிக்கொண்டேன். பின்விளைவுகளைத் தாங்கும் சக்தி குறைந்துகொண்டே வருகிறதல்லவா?" ரசித்தேன்!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைப் போன்ற அற்புதமான வாசகர்களைப் பெற்றது என் பாக்கியமே!

      நீக்கு
  13. சிவக்குமார் நூலை முழுவதும் படிக்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டது உங்களது பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் படிக்கப்படவேண்டும். படித்துவிட்டு யாராவது ஓர் ஏழைச் சிறுவனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிடுங்கள். அடுத்த தலைமுறை உங்களை வாழ்த்தும்.

      நீக்கு
  14. லாவண்யா சுந்தர்ராஜன் அவர்களின் கவிதைப் புத்தகமும் சிவகுமார் அவர்களின் உரை தொகுப்பு நூலும் பற்றிய
    தங்கள் விமரிசனம் நல்லதோர் அறிமுகம். நன்றி!

    பதிலளிநீக்கு
  15. ரசிக்கவைக்கும் தொகுப்புகள்.. பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  16. வணக்கம்
    ஐயா

    பல்சுவை நிறைந்த கதம்ப மாலை என்றுதான் சொல்ல வேண்டும் அப்படியாக பல விடயங்கள் உள்ளடங்கியதாக உள்ளது.. வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  17. சினிமா உலகில் நான் அதிகம் விரும்பிப் பார்க்கும் ஒரு சிறந்த
    நடிகர் அதைவிட அறிவும் பண்பும் நிறைந்த மனிதர் சிவகுமார்
    அவர்கள் .எனது தந்தையார் அடிக்கடி சொல்வார் ஓர் ஏழாண்டு
    காலம் இவரது வலசாரவாக்கம் இல்லத்துக்கு எதிர் வீட்டில் தான் எனது
    தந்தையாரும் குடியிருந்தார் .இந்தக் குடும்பத்தைப் பொறுத்தவரைக்கும்
    அனைவரும் நல்ல இதயம் படைத்தவர்கள் எல்லோரிடமும் சகஜமாக
    பழகும் தன்மையுடையவர்கள் என்றெல்லாம் சொல்வார் .தங்களது
    பகிர்வினைப் பார்த்த போதும் இதே உணர்வுகள் தான் தோன்றியது .
    சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .

    பதிலளிநீக்கு
  18. மிக்க நன்றி - லாவண்யா சுந்தரராஜன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. உங்கள் அடுத்த கவிதைத் தொகுதி எப்போது வருகிறது?

      நீக்கு
  19. "சிவகுமாருக்கு ஒருமுறை பணமுடை ஏற்படவே, (எம்ஜிஆரை வைத்துப் படங்கள் தயாரித்துக் கொண்டிருந்த) சாண்டோ சின்னப்பதேவரிடம் கடன் பெற்றாராம். சிறிது காலம் ஆனபிறகு அதைத் திருப்பிக் கொடுக்கப் போனபோது தேவருக்கு ஆச்சரியம்"

    இதைப் பற்றி நீங்கள் பிறகு படித்துத் தெரிந்துகொண்டிருக்கலாம். நான் படித்ததைக் கொடுத்துள்ளேன்.

    சிவகுமாருடைய திருமண ஏற்பாடு கோவையில் நடந்துகொண்டிருந்தது. அவருடைய மாமா (அல்லது ஆசிரியர்) இன்னும் கொஞ்சம் பணம் தேவையிருக்கும் என்று கடைசி நேரத்தில் சொன்னபோது, சிவகுமார், தேவரிடம் சென்று கடன் வாங்கினார். அதுவரை கல்யாணச் செலவுகள் எல்லாம் சிவகுமார் அவர்கள் சம்பாதித்துச் சேமித்த பணம். (கேட்டவுடன் உடனே ஒன்றும் சொல்லாமல் பணம் கொடுத்தார் தேவர் அவர்கள்). ஆனாலும் இது கடன் வாங்கிய பணம் என்பதால், அதனைத் தனியாக எடுத்துவைத்து, அவசியம் என்றால்தான் அதிலிருந்து பணம் எடுத்துச் செலவழிக்கவேண்டும் என்று சிவகுமார் அவர்கள் தீர்மானித்தார். கடைசியில் அந்தப் பணம் செலவழியவேயில்லை. திருமணம் முடித்து சென்னைக்குத் திரும்பியபின், தேவரை உடனே அதிகாலைல சந்தித்து பணத்தை மிகவும் வற்புறுத்தி திரும்பக்கொடுக்கிறார். தேவருக்கு அதில் ரொம்பவும் வருத்தம். அவருக்கு எப்போதும் கொடுத்துத்தான் பழக்கம். பிறகு நடித்துக் கழித்துக்கொள்வார்கள் வாங்கியவர்கள் (எம்.ஜி.ஆர் உள்பட). சிவகுமார் ஒருவர்தான் அவரிடம் உடனே பணத்தைத் திருப்பித் தந்தது. ஆனால் சிவகுமார்தான் முடிந்த அளவு நெறிப்பட வாழ்க்கையில் வாழ்பவராயிற்றே. அதனால் பணத்தை உடனே திருப்பித் தருகிறார். அவருடைய தன் வரலாறும், வாலியினுடைய (இந்த நூற்றாண்டும் நானும்) தன் வரலாறும் மிகவும் ருசிகரமானது.

    பதிலளிநீக்கு