ஞாயிறு, நவம்பர் 24, 2013

“என்னைச் சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கோயேன், ப்ளீஸ்” என்கிறாள் ஆர்த்தி ( ‘அபுசி-தொபசி’- 12)

“என்னைச் சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கோயேன், ப்ளீஸ்” என்கிறாள் ஆர்த்தி (அபுசி-தொபசி- 12)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல் 
கடந்த 2009ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மதுரை தொகுதியில் மு.க. அழகிரி வெற்றி பெற்றார். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த  பி.மோகன் என்பவர் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டுப் பெறப்பட்ட வெற்றி அது என்பது வாதம். இதற்கிடையே உடல் நிலை பாதிக்கப்பட்ட மோகன் உயிரிழந்ததால், அவரது தேர்தல் முகவரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான லாசர் வழக்கைத் தொடர்ந்து நடத்தினார். நான்கு வருடங்களுக்குப் பிறகு வழக்கு தோற்றுப்போய், அழகிரியின் வெற்றி நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காலமே ஐந்தாண்டுகள் தான். அதிலும் அழகிரி தனது அமைச்சர் பதவியை ஏற்கெனவே ராஜினாமா செய்துவிட்டார். கட்சியிலும் அவருக்கு இன்று செல்வாக்கு குறைந்துவிட்டதாகச் சொல்லப்படும் நிலையில் இந்த வழக்கின் வெற்றி அவருக்கு எந்த வகையில் பயன்படும் என்று தெரியவில்லை.

இதுகூடப் பரவாயில்லை. பன்னிரண்டு வருடத்துப் பழைய நிகழ்ச்சி ஒன்றுக்கு இப்போது நீதிமன்றத்தில் உயிரூட்ட முயற்சி எடுக்கப்பட்டுள்ளது தான் விந்தை.

கடந்த 2001-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி, புவனகிரி, ஆண்டிப்பட்டி மற்றும் புதுக்கோட்டை ஆகிய நான்கு  தொகுதிகளில் போட்டியிட முதல்-அமைச்சர் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்திருந்தார் அல்லவா, அவ்வாறு  இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனு தாக்குதல் செய்வது தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பானது என்று அப்போது தி.மு.க. எம்.பி.யாக இருந்த குப்புசாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

அம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வழக்கைச்  சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றியது. அதன்படி வழக்கு நடைபெற்று வருகையில் குப்புசாமி காலமாகிவிட்டார். மனுதாரரின் மரணத்தைக் காரணம் காட்டி சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. ஆனால் இந்த வழக்கைத் தொடர்ந்து விசாரிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் நாகப்பட்டினம் தொகுதி எம்.பி.யான ஏ.கே.எஸ்.விஜயன் தாக்கல் செய்துள்ள மனு இப்போது விசாரணைக்கு வந்துள்ளது.


 
விசாரணையின்போது (பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து) எந்த  அடிப்படையில் இம்மனுவை தாக்கல் செய்ய முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

2001-ம் ஆண்டில் விதிமுறைகளுக்குப் புறம்பாக ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ததை எதிர்த்து மறைந்த குப்புசாமியுடன் இணைந்து ஏ.கே.எஸ்.விஜயனும் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்மனு அளித்திருந்தார். அதன் அடிப்படையில் ஒரு மனுதாரர் குப்புசாமி காலமாகி இருந்தாலும் இந்த விஷயத்தில் தற்போதைய  மனுதாரர் ஏற்கனவே தேர்தல் கமிஷனில் புகார் தாக்கல் செய்திருப்பதால் இவ்வழக்கைத் தொடர அனுமதிக்கவேண்டும் என்று மனுதாரர் தரப்பு வக்கீல் தெரிவித்தார்.

அவரது வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் இந்த மனுவின் மீது மேலும் விசாரணை தொடரும் வகையில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நோட்டீசு வழங்குமாறு உத்தரவிட்டனர். நான்கு வாரங்களுக்குப்பிறகு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்றார் பாரதிதாசன். நமது நீதியமைப்பிலோ பழையதோர் உலகை மீட்டெடுக்கவே பல வருடங்கள் தேவைப்படுகிறது.

இதுபற்றி மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார்: “எப்படி மருத்துவர்கள் தொடர்ந்து பிழைப்பதற்கு ஏற்றாற்போல் நமது உடல் சிக்கலாகப் படைக்கப்பட்டிருக்கிறதோ, அதுபோல, வாதிகளும் வழக்கறிஞர்களும் தொடர்ந்து பிழைப்பதற்கென்றே நமது அரசியல் சட்டம் சிக்கலாக அமைக்கப்பட்டுள்ளது!”

புத்தகம்
இந்த வாரத்திற்காக வேறு இரண்டு புத்தகங்களைக் குறித்துவைத்திருந்தேன். ஆனால் “என்னைச் சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கோயேன், ப்ளீஸ்” என்று  ஆர்த்தி கண்ணீர்விட்டுக் கெஞ்சும்போது நான் என்ன செய்வது? ஆர். வெங்கடேஷின் ‘இடைவேளை’ நாவலைத்தானே சொல்லியாகவேண்டும்?

‘இருவர்’ என்ற நாவலை முதல் முதலில் படித்தபொழுது (இணையத்திலா?) அதை எழுதியவர் நிச்சயம் இன்னொரு சுஜாதாவாகத்தான் ஆகப்போகிறார் என்று தோன்றியது. ஆனால் அப்போது நான் வலைத்தளத்தில் இல்லாததால் ஆர். வெங்கடேஷ் பற்றி யாரிடமும் விமர்சிக்க முடியாமல் போயிற்று. சினிமாவிலோ அல்லது பத்திரிகையிலோ நுழையவேண்டுமென்ற கனவுகளுடன்  சென்னை வந்த இரண்டு இளைஞர்கள் இவ்விரு கனவுத்தொழிற்சாலைகளிலும் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்ற யதார்த்தத்தை உஷ்ணவரிகளால் தகித்திருந்தார் வெங்கடேஷ்.     

‘இருவர்’, வெங்கடேஷின் முதல் நாவல். இரண்டு சிறுகதைத் தொகுதிகளுக்குப் பின் வந்த முதல் நாவல். ‘புனைகதையின் ஊடாகச் சமகால வரலாற்றைப் பதிவுசெய்ய முயன்றதாக’த் தன் முன்னுரையில் வெங்கடேஷ் கூறியிருந்தார். ஆனால் அம்முயற்சியின் சவால்களையும் அவர் தெரிந்துகொள்ளாமல் இல்லை. “சமகால வரலாறு என்பதில் தீர்வுகளையோ, மதிப்பீடுகளையோ உருவியெடுக்க முடியாது. விமர்சனங்களை வைக்கவும் காலம் கனிந்திருக்காது. போக்குகளையும் திசைகளையும் மட்டுமே தொட்டுக்காட்ட முடியும்”.  

எனவே இவரது அடுத்த நாவலை நான் ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன். ‘கல்கி’யில் தொடராக வந்தபோது ‘இடைவேளை’யைப் படித்தேன். ஆனால் தொடரமுடியவில்லை. அவ்வளவு வேகமாகக் காட்சிகளின் ஓட்டம். திரைப்படத்திற்கென்றே  எழுதிய மாதிரி பாத்திரங்கள் கண்ணுக்கு முன்னால் வந்து நின்றன. ஒவ்வொரு வீட்டிலும் இன்று நடமாடிக்கொண்டிருக்கும் ஐ.டி.த்துறை இளைஞர்களின் அன்றாட வாழ்க்கையின் நிலையில்லாமையை மில்லிமீட்டர்களில் அளக்கும் துல்லியம். அமெரிக்க நாட்டில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக வேலையின்மையைத் தோற்றுவித்துவிட்ட ‘சப்-பிரைம் கிரைசிஸ்’ என்ற ஆக்டோபஸ், தன் எட்டுக்கரங்களால் ஐரோப்பாவில் தொடங்கி பெங்களூர் வரை   எட்டுத்திக்கிலும் ஐ.டி.ப்பணியாளர்களின் வேலையிழப்புக்குக் காரணமானதும் அதனால் சராசரி இந்திய இளம்குடும்பங்களின் சுயநம்பிக்கை சுரண்டப்பட்டதும்தான் இத்தொடர்கதையின் உயிரோட்டமான கருத்து. நாவலாகப் படிக்கிறபோது நெஞ்சம் கனக்கிறது.

கதையின் ஒரு சிறு பகுதியைக் கோடிட்டுக் காட்டாமல் முடிப்பதற்கில்லை. காதலனா, இல்லை, கணவனாகப் போகிறவனா என்று தெரியாமல், ஆனால் எல்லை மீறாமல் ஆர்த்தியுடன் பழகுகிறான் நோயல். அவள் ஒருத்திதான் குடும்பத்திற்கே படியளக்கவேண்டும். அவளுக்கு வேலை போய்விடுகிறது. தகப்பனார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்....

“வேலையில் இருந்தவரை, அலுவலகத்தில் மெடிக்ளைம் இருந்தது. அப்பாவையும் அம்மாவையும் அதில் சேர்த்திருந்தாள். வெறும் அடையாள அட்டையை மட்டும் நீட்டிவிட்டு, மருத்துவம் பார்த்துக்கொள்ளும் வசதி. இன்று இல்லை. சொந்தமாக மருத்துவக் காப்பீடு எதுவும் எடுத்திருக்கவில்லை. பர்சனல் லோன் போடலாம். கடுமையான வட்டிவிகிதம் பயமுறுத்தியது. முதலில் வேலையில் இருந்தால்தான் லோன் போடமுடியும்.

“யாரைப் போய் கேட்கமுடியும்? எவர் உதவுவார்கள்? திட்டமிடாமல், மனம் போன போக்கில் வாழ்ந்துவிட்டோமா? சிக்கனம், சேமிப்பு என்று கையை இறுக்கிப் பிடித்து வாழ்ந்தவள் ஆர்த்தி. மனதோரம் இப்படி ஓர் இக்கட்டு எந்நேரமும் ஏற்படலாம் என்ற பயம் இருந்ததுண்டு. ஆனால், அதற்குத் தான் தயாராகவில்லை; முன்னேற்பாடுகள் ஏதும் செய்துகொள்ளவில்லை. இத்தனை மாதங்களாக, தன்னுடைய சேமிப்பில் இருந்துதான் வாழ்ந்தாள். இன்று அதுவும் தீர்ந்து போயிருந்தது.

“வேலையும் சம்பளமும் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிக்கும் சாதாரண மத்தியவர்க்க குடிமகள். பெரிய கனவுகளுக்கு இடமில்லை. தரையில் கால் பாவாமல் நடந்ததெல்லாம் வெற்றுத் திமிர்த்தனம்....

வாசலில் நோயலின் கார் நின்றது. ஆர்த்தியின் தந்தையிடம் போய்த் தேறுதல் சொன்னான். தாயிடமும் கைபிடித்து ஆறுதல் சொன்னான். “எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்திருந்தாள் ஆர்த்தி. இவனை என்னவென்று புரிந்து கொள்வது? இவனது கரிசனமும் கனிவும் பொய்யில்லை. அக்கறை போலியில்லை. ஆனால், மனத்துக்குள் என்னவோ குழப்பம்.

“அறையை விட்டு வெளியே வந்து நின்றுகொண்டாள் ஆர்த்தி. ஜன்னலுக்கு வெளியே சாலையில் மாலை நேரத்து பிரகாசம். ஒன்றிரண்டு கார்கள் போகும்போது கூடுதல் வெளிச்சம் சாலையை அலசும். உள்ளடங்கிய சாலையின் மௌனம், அவளது சிந்தனைகளைப் போன்றே, காற்று மெல்ல கரைந்து சென்றது. சற்று நேரத்தில் நோயல் வந்து நிற்பது தெரிந்தது. மனத்தில் பொங்கிய உணர்வுகள் இன்னதென்று இனம்புரியாமல் தத்தளித்தன. தவறுகள், எதிர்பார்ப்புகள், பயம், ஆதரவு, கருணை,கனிவு என்று என்னென்னவோ காட்சிகள், காட்சிகள். தான் பெற்றதைவிட, இழந்தவையே அதிகம் என்ற எண்ணம் சட்டென மேலோங்கியது. தொடர்ந்து அடி, வழுக்கல், சரிவு. வாழ்க்கை, குவிந்த கையில் நழுவும் நீரென ஏமாற்றிக்கொண்டே இருந்தது.   

“ஏன் பேசமாட்டேன்கற ஆர்த்தி? என்னாச்சு?”

அவனுடைய அண்மை, அவள் வார்த்தைகளைத் தொலைக்க வைத்தது. நிமிர்ந்து பார்த்தவள், அவனைப் புதுசாகப் பார்ப்பது போல் பார்த்தாள். அப்பா, அம்மா போல்  (இவனும் நானும்) என்றும் நீடித்து வாழ முடியும் என்று அவள் மனது அழுத்திச் சொன்னது. உடலும் மனசும் கனிந்து குழைந்திருப்பதை அவளால் உணர முடிந்தது. அவன் கைகளை எடுத்து விரல்களைக் கோத்துக்கொண்டவள், குரல் கம்ம, வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசினாள், “என்னைச் சீக்கிரம்  கல்யாணம் செஞ்சுக்கோயேன், ப்ளீஸ்”.

வேலை போனவுடன் தனி மனிதர்கள் எப்படிச் சிதறிப்போனார்கள் என்று சொல்வதுதான் வெங்கடேஷுக்கு முக்கியம். (ஐ.டி.த்துறையில்) “பல இளைஞர்களின் கற்பனைகள் தகர்ந்து போயின. திடீரென்று காலுக்குக் கீழே பூமியைச் சரித்துவிட்டார்கள். சிலர் மனநிலை பிறழ்ந்து போனார்கள். சிலர் தற்கொலை செய்துகொண்டார்கள். சுயபிம்பம் சுக்குநூறானது. சமூக மதிப்பு புரிந்துபோனது. கனவுகள் தொலைந்துபோனது.”

“குழப்பங்கள் நீடிக்கின்றன. பிரச்சினைகள் தொடர்கின்றன. மதிப்பீடுகளும் தம்மைப் புதுப்பித்துக்கொண்டே வருகின்றன. என்னால் முடிந்ததெல்லாம் இவையனைத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைப் பதிவுசெய்வதே” என்று ‘இருவரி’ன் முன்னுரையில் வெங்கடேஷ் எழுதினார். ‘இடைவேளை’க்கும் அது பொருந்தும். வெங்கடேஷ் பதிவு செய்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றது....

(‘இடைவேளை- நாவல்-  152 பக்கம், ரூபாய் 100, வெளியீடு: ‘நேசமுடன்’. கிடைக்குமிடம்: வேத பிரகாசனம்,  142 முதல் மாடி, கிரீன்வேஸ் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை- 600028. தொலைபேசி:   044-24641600.)  

சினிமா & தொலைக்காட்சி
புதுயுகம்’ என்ற பெயரில் புதிய தலைமுறை தொலைக்காட்சியிடமிருந்து  புதியதொரு சேனல் கிளம்பியுள்ளது. இதற்கு நான் இன்னும் சந்தா செலுத்தவில்லை என்றாலும் திடீரென்று இன்று மாலை ரிமோட்டை அழுத்தியவுடன் திரையில் வந்தது. ஒருவேளை, ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் இலவசமாகக் காட்டுவார்களோ என்னவோ!

தமிழில் தொலைக்காட்சியின் தரத்தை ஒரு புதிய பரிமாணத்திற்குக் கொண்டுசென்ற பெருமை, ‘புதிய தலைமுறை’யையே சாரும். அவ்வகையில் ‘புது யுகம்’ நிச்சயம் ஒரு புதுயுகத்தைப் படைக்கும் என்று நம்பலாம். ஆனால் பெரும்பாலான நிகழ்ச்சிகள் சினிமாவையே சார்ந்துள்ளதாகத் தெரிகிறது.      அடிக்கடி பெரியதிரையில் வர வாய்ப்பளிக்கப்படாத, இன்னமும் உடலமைப்பைக் கவர்ச்சிகரமாகக் கொண்டுள்ள, தமிழில் நல்ல பேச்சுத்திறனும் பார்வையாளர்களை ஈர்க்கும் சிரிப்பும் இயல்பாகக் கொண்ட,  அதிகம் வயதாகிவிடாத, முன்னாள் நடிகையர் சிலரும் புதுயுகத்தில் ஒப்பந்தமாகியிருப்பது ஆறுதலான விஷயமே.

பத்திரிகை
பொதுவாக ஆங்கில ‘இந்து’வின் சென்னைப் பதிப்பில் முன்பெல்லாம் தமிழைப் பற்றிய செய்திகளுக்கு முன்னுரிமை தந்ததில்லை என்பது தெரிந்ததே. (மாறாக, பெங்களூரில் வெளியாகும் இந்துவின் பதிப்பில் வாரம் ஒருமுறையாவது கன்னட மொழி பற்றியோ, கன்னட இலக்கியம் பற்றியோ, கன்னட எழுத்தாளர்களின் நிகழ்ச்சிகள் பற்றியோ பெரிய அளவில் வருவதை ஆறு ஆண்டுகள் பார்த்திருக்கிறேன்.) இதற்குப் பிராயச்சித்தமாகத்தானோ என்னவோ, தமிழ்’இந்து’வில் மொழியும் இலக்கியமும் பற்றி  வேறெந்த தினசரிகளைவிடவும் அதிக அளவிலும், வித்தியாசமாகவும், உலகத்தரமாகவும் கட்டுரைகளும் செய்திகளும் வர ஆரம்பித்துள்ளன. விகடனும், குமுதமும், கல்கியும், இந்தியாடுடே-தமிழ்ப்பதிப்பும்   இனி போட்டியிடவேண்டியது தங்களுக்குள் அல்ல, தமிழ் இந்துவுடன் தான் என்று தோன்றுகிறது.  

தினத்தந்தி-சிந்துபாத் கதைக்குப் போட்டியாக இரண்டாம் பக்கம் மேல்பகுதியில் ஏழு-பத்தி அளவில் வெளியாகும்  சித்திரத்தொடரை
விரைவில் முடித்துவிட்டு, அதன் பிறகு,  ‘சிலப்பதிகாரம்’ அல்லது ‘மணிமேகலை’ போன்ற காவியக்கதைகளைச் சித்திரத்தொடராக வெளியிட்டால் ஆங்கில மீடியம் படிக்கும் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் விளக்கிச் சொல்லித் தமிழ் கற்பிக்க  உதவி செய்ததாகும். குறைந்தபட்சம், கண்ணகி மதுரையை எரிக்கும்வரை அல்லது மணிமேகலையின் அட்சயபாத்திரம் காலியாகும்வரை சந்தாதாரர்கள் தொடர்ந்து வாங்குவார்கள் என்பது உறுதி.

சிரிப்பு
“என் நண்பருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது எழுப்பும் எல்லா ஓசைகளையும் பதிவுசெய்துகொண்டு வருகிறேன். ஏனென்றால் என்றாவது ஒருநாள் அவன் எழுப்பிய ஓசைகளுக்கு என்ன அர்த்தம் என்று  கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் அல்லவா?” – ஸ்டீவன் ரைட், ரீடர்ஸ் டைஜஸ்ட், இந்தியப் பதிப்பு, நவம்பர் 2013, பக்கம் 63. இருவருக்கும் நன்றி.  

சந்திப்பு
இந்த வாரம் மூத்த பதிவர்களில் ஒருவரான திரு எஸ். ரமணி (“தீதும் நன்றும் பிறர்தர வாரா”) அவர்களைச் சந்திக்கவும் உடனமர்ந்து உணவருந்தவுமான நல்வாய்ப்பு, வலைப்பூ  நண்பர் கவியாழி கண்ணதாசனின் தகவலால் கிடைத்தது. பின்னர் நாங்கள் மூவரும் இன்னொரு மூத்த பதிவரான புலவர் இராமானுஜம் அவர்களைச் சந்தித்தோம். இந்தச் சந்திப்பைப்பற்றித் தமது ‘கவியாழி’ வலைப்பூவில் கண்ணதாசன் அவர்கள் எழுதக்கூடும் என்று தெரிவதால், நான் அளவோடு நிறுத்திக்கொள்கிறேன். (புகைப்படங்களும் அங்கு வரும்.)

ரமணி அவர்கள், குடியிருப்பால் மதுரைவீரன். ஆனால் சரியான காரணங்களுக்காக அடிக்கடி பெங்களூருக்குப் பயணிப்பவர். (சென்னைக்கும், அதே காரணங்களுக்காக.) அவருடன் நான் இருந்த சிறிது நேரத்திற்குள் தன்னை அதிகம் வெளிப்படுத்திக்கொள்ள அவருக்கு வாய்ப்பில்லை என்றாலும் ஒரு முக்கியமான தகவல் அவரையும் மீறிக் கசிந்தது: அவர் ஒரு தேர்ந்த சோதிடராம்.  சொன்னதெல்லாம் பலிக்கிறதாம். (பதிவர்களுக்கு முன்னுரிமை உண்டா?)

© Y.Chellappa
Email: chellappay@yahoo.com

22 கருத்துகள்:

 1. எல்லா தகவல்களும் அருமை.! தி இந்து தமிழ் நாளிதழ் பற்றி நான் எழுத வேண்டிம் என்று நினைத்திருந்தேன். நீங்கள் அதைப் பதிவு செய்து விட்டீர்கள். நன்றி! தொடர வாழ்த்துக்கள். த.ம. +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்களும் எழுதுங்கள், தமிழ் இந்து பற்றி. நல்லன கண்டபோதெல்லாம் வாழ்த்துவோம். அது அவர்களுக்கு மேலும் உற்சாகத்தைத் தருமல்லவா?

   நீக்கு
 2. அவரவர் அரிப்பைச் சொறிந்து கொள்ள நீதிமன்றங்களின் பொன்னான நேரத்தை ஏன் விரயம் ஆக்குகிறார்களோ தெரியவில்லை !
  அதிக சேனல்கள் வருவதால் நமக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும் வாய்ப்பு கூடுகிறது !வரவேற்போம் !
  த.ம 3

  பதிலளிநீக்கு
 3. நல்ல தொகுப்பு! என் இல்லம் வந்த உங்கள் மூவருக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அய்யா! தங்கள் இல்லத்தில் தரப்பட்ட தேநீரும் சுவையாக இருந்தது என்பதைப் பதிவுசெய்யாமல் விட்டதற்கு மன்னிக்கவும்.

   நீக்கு
 4. சுவாரஸ்யமான பதிவு
  நான் வெங்கடேஷ அவர்கள் கதைகளைப் படித்ததில்லை
  அவசியம் படிக்கவேண்டும் என தங்கள் பதிவைப்
  படித்ததும் புரிந்து கொண்டேன்
  என்னைப் பற்றிச் சொன்னவிஷயத்தில்
  இறுதிப் பகுதியை நீக்கினால் மகிழ்வேன்
  மனம் கவர்ந்த பதிவு
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் அவசியம் அவரைப் படிக்கவேண்டும். (2) இதுவரை இருநூறு பேருக்குமேல் படித்துவிட்டர்களே, இனிமேல் நீக்கி என்ன பயன்? அடுத்த வாரம் நீக்கிவிடுகிறேன். சரியா? வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

   நீக்கு
 5. ஆர்.வெங்கடேஷ் அவர்களின் கதையைப் படிக்க ஆவல் மேலிடுகிறது. இந்நேரத்தில் அன்றைய குமுதத்தில்
  புஷ்பா தங்கதுரையும் இந்துமதியும் இணைந்து
  'இரண்டு பேர்' என்ற தொடர்கதையை எழுதியது
  நினைவுக்கு வருகின்றது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுவேறு வகை. இது வேறு வகை. கட்டாயம் படியுங்கள். வரவுக்கு நன்றி.

   நீக்கு
 6. வயதாகிவிடாத, முன்னாள் நடிகையர் சிலரும் புதுயுகத்தில் ஒப்பந்தமாகியிருப்பது ஆறுதலான விஷயமே//// யாருக்கு??? தங்களுக்கா? புரியவில்லையே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் சொல்லவந்தது, 'அந்த' நடிகையருக்கு ஆறுதலான விஷயம் என்று தான். எனக்கோ உங்களுக்கோ அல்ல. இருந்தாலும் நீங்கள் புதுயுகத்தை ஒருமுறையாவது பார்த்துவிட்டுங்களேன்!

   நீக்கு
 7. தாங்கள் சிற்பங்கள் அற்புதங்கள் தாரமங்கலம் பதிவுக்கு கருத்துரை அளித்தமைக்கு மகிழ்ச்சி கலந்த நன்றிகள்..

  மற்றொரு முறை கோவிலுக்குச்சென்றபோது பகிர்ந்தவை ..

  http://jaghamani.blogspot.com/2012/05/blog-post_09.html
  தரம் நிறை தாரமங்கலம்

  பதிலளிநீக்கு
 8. //விகடனும், குமுதமும், கல்கியும், இந்தியாடுடே-தமிழ்ப்பதிப்பும் இனி போட்டியிடவேண்டியது தங்களுக்குள் அல்ல, தமிழ் இந்துவுடன் தான் என்று தோன்றுகிறது. //

  'இந்து தமிழ்' தினசரியின் பார்முலாவிலிருந்து விலகி நடைபோடுகிறது, என்பதை மிக தெளிவாக சொல்லிவிட்டீர். இது சரியானதுதானா என்பது போகப்போகத்தான் தெரியவரும்.

  பதிலளிநீக்கு
 9. ஒவ்வொரு வாரமும் வெளிவரும் தங்களின் பதிவுகள் மூலமாக பல செய்திகளை அறிந்துகொள்ளமுடிகிறது. நான் தவறாமல் படிக்கும் பதிவுகளில் ஒன்று தங்களின் பதிவுகள். சில சமயங்களில் கருத்து கூற தாமதமாகிறது. பொறுத்துக்கொள்க.

  பதிலளிநீக்கு
 10. பல புதிய செய்திகளைத் தெரிந்து கொண்டேன். வெங்கடேஷ் கல்கியில் தொடர்கதை எழுதினாரா? நினைவில் வரவில்லை. படித்தால் ஒருவேளை நினைவில் வருமோ? அல்லது நான் படிக்காமல் விட்டு விட்டேனா என்று புரியவில்லை. இப்போது கல்கி வாங்குவதை நிறுத்தி ஓராண்டுக்கு மேல் ஆகிறது. :))))

  பதிலளிநீக்கு
 11. திரு ரமணிக்கு ஜோசியம் தெரியும் என்பது புது விஷயம். தகவலுக்கு நன்றி. உங்கள் சந்திப்புக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு