திங்கள், நவம்பர் 18, 2013

தமிழ்த் திரைப்படத்துறைக்கு இந்த விஷயம் தெரியுமா? ( ‘அபுசி-தொபசி’- 11)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)
(முக்கிய அறிவிப்பு: இந்த வாரம் முதல் மேலும் ஒரு பிரிவு சேர்க்கப்படுகிறது: ‘சந்திப்பு’.)

அரசியல் 
இந்த வாரம் வேண்டாமே! (‘அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!’-வடிவேலு)

புத்தகம்
கேள்வி: மனிதனுக்கு ஏழு பிறவிகள் உண்டு என்பது நம்பிக்கை. இதுதான் கடைசிப் பிறவி என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?



பதில்: மனிதன் இறைவனின் குழந்தை. ஆதலால் பக்தியால் பெருகும் அவனது கண்ணீரே அவனுக்குப் பலமான ஆயுதமாம். இறைவனது நாமத்தைக் கேட்ட மாத்திரத்தில் எவனுக்கு மயிர்க்கூச்சலெடுத்து கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகுமோ அவனுக்கு அதுவே கடைசி பிறவியாம். (சொன்னவர்: பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர். –‘தினம் ஒரு தியானம்’ பக்கம்  181- இராமகிருஷ்ண மடம், சென்னை வெளியீடு- ரூபாய்  30).

சினிமா
தமிழ்த் திரைப்படத்துறைக்கு இந்த விஷயம் தெரியுமா?
பிறந்தநாள் விழாக்களில்  “Happy Birthday to You” என்ற பாடலைப் பாடுவது இப்போதெல்லாம் வழக்கமாகிவிட்டது. ஆங்கிலம் பயிலும் மாணவர்களேயன்றி, கிராமப்புறத்துச் சிறுவர்கள் வீட்டிலும் இந்தப்பாடல் புகுந்துவிட்டது. தமிழ் சினிமாவில் இந்தப்பாடல் சகட்டுமேனிக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அப்படிப் பயன்படுத்துவதற்கு ராயல்ட்டி கொடுக்கவேண்டும் என்பது திரைப்படத்துறையினருக்குத் தெரியுமா?

 
பேட்டி ஹில், மில்ரெட் ஹில் (Patty & Mildred Hill, Sisters) என்ற சகோதரிகளால் எழுதப்பட்டோ அல்லது இசை மட்டும் போடப்பட்டோ அல்லது இரண்டுமே செய்யப்பட்டோ, நூற்றி இருபது வருடங்களுக்கு முன்பு (1893) வெளியிடப்பட்ட இந்தப் பாடல்தான் ஆங்கில மொழியில் அதிகம் பாடப்பட்ட (பாடப்படும்) பாடல் என்கிறார்கள். (இதற்கு அடுத்தபடியாக வருவது He’s  a Jolly Good Fellow  என்ற பாடலாம்.)
இப்பாடலை 1935 இல் பதிப்புரிமை செய்துகொண்டது “ஸம்மி கம்பெனி” என்ற இசைவெளியீட்டு நிறுவனம். அக்கம்பெனியை  1988 இல் விலைக்கு வாங்கியது ‘வார்னர் மியூசிக் குரூப்’ நிறுவனம். எனவே இன்றைய தேதியில் இவர்களுக்கு ராயல்டி தராமல் சினிமாவில் யாரும் ஹேப்பி பர்த்டே பாடிவிட முடியாது. தவறினால் அடுத்த பர்த்டே அவர்களுக்கு ‘அன்ஹேப்பி பர்த்டே’ ஆகிவிடும்!

அது சரி, ராயல்டி எவ்வளவு என்கிறீர்களா? எழுநூறு டாலரில் ஆரம்பித்து இரண்டு மில்லியன் வரை போகுமாம்!
தொலைக்காட்சி
அப்பாடா, ஒருவழியாக சச்சின் ஓய்வு பெற்றுவிட்டார். வெறும் கையோடு அல்ல, ஒரு கையில் சிலகோடி ரூபாய்களும், மறு கையில் ‘பாரதரத்னா’ விருதுமாக. மும்பையில் பிறந்ததால் கிடைத்த வரம். ராஜாவீட்டுக் கன்றுக்குட்டி. சரத் பவாரும் ரிலையன்ஸ் அம்பானியும் கைகொடுக்கிறார்கள். இதற்கு முன்னால் லதா மங்கேஷ்கருக்கு பாரதரத்னா கொடுத்தார்கள். அதுவும் அம்மையாரோ அவர் சார்பாக யாரோ அழுதுபுரண்டு அடம்பிடித்ததால் கொடுத்ததுதான் என்கிறார்கள். (அந்தக் காலத்தில் வாணிஜெயராமுக்கு வாய்ப்பளிக்கும் இசையமைப்பாளர்களுக்குத் தான் பாடமுடியாது என்று மறுதலித்தவர் லதா  என்பதை நீங்களும் நானும்தான் நினைவில் வைத்திருக்கிறோம்.)
சச்சினுக்குக் கிடைத்த முக்கிய காரணம், கிரிக்கெட் ஊழல்களில் அவர் எப்போதுமே சம்பந்தப்பட்டது கிடையாது என்ற சுயநேர்மையைப் பாராட்டித்தான். மேலும்  பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்ட ஆட்டக்காரர் என்பதாலுமே. வாழ்த்துவோம்.
சச்சினை விட பெரியதான உலக சாதனை படைத்த விஸ்வநாதன் ஆனந்துக்கு ஏன் கொடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. பதிலும் நம்மிடமே இருக்கிறது. தமிழக அரசியலைப் பொறுத்தவரை ஆனந்த் ஓர் அநாதை. கலைஞரும்  அவருக்காகப் பேசமாட்டார். அம்மா பேசினாலும் டில்லியில் யாரும் கேட்கப்போவதில்லை.  சிதம்பரமோ வாசனோ எதுவும் செய்யப் போவதில்லை. தற்போது நடந்துகொண்டிருக்கும் கார்ல்சன்-ஆனந்த் உலக சாம்பியன் போட்டியில் ஆனந்த் ஒருவேளை தோற்றுப்போய்விட்டால் அவரை வசதியாக எல்லாருமே மறந்துவிடுவார்கள்.

பத்திரிகை
கரிசல் எழுத்தாளர் சோ.தர்மனுடன் ஒரு பேட்டியை வெளியிட்டிருக்கிறது தமிழ் இந்து. (நவம்பர் 9, பக்கம் 10). இதற்கு முன் இவரது பேட்டியை நான் படித்ததில்லை. மிக விவரமாகவும் தைரியமாகவும் பேசியிருக்கிறார் தர்மன். ‘தூர்வை’ நாவல் மூலம் தலித் இலக்கியத்தின் சிறப்பான குரலாக அறியப்படுகிறவர். ஐந்து சிறுகதைத் தொகுப்புகளும் எழுதியிருக்கிறார்.

பேட்டி கண்டிருப்பவர் ‘மண்குதிரை’. (இயற்பெயர் என்னவோ?)  உலகத்தரமான இவரது பேட்டிகளைப் படிப்பவர்களுக்கு இவர் மண்குதிரை அல்ல, பொன்குதிரை என்பது விளங்கும்.


கேள்வி: உங்களுடைய ‘தூர்வை’ நாவல் இதுவரை காட்டப்பட்ட தலித் வாழ்க்கைக்கு மாறுபட்ட ஒன்றைச் சித்திரிக்கிறது.....

சோ.தர்மன்: இந்த நாவலை வாசித்த பலரும் இதைச் சொன்னார்கள். எங்களுக்கு இதுவரை காட்டப்பட்ட தலித், தலைக்கு எண்ணெய் தடவாமல் பரட்டைத் தலையுடன் இருப்பான். அழுக்காக, நாற்றமுடையவனாக, வன்முறை விரும்பியாக இருப்பான். தலித் பெண்கள் எளிதில் சோரம் போகிறவர்களாக இருப்பார்கள். இப்படித்தான் தலித்துகள் குறித்து சித்திரிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய கதையில் வரும் தலித், நிலங்கள் வைத்திருக்கிறான், உழவு மாடுகள் வைத்திருக்கிறான், மாட்டுவண்டி கட்டிப் போகிறான். இது என்ன முரணாக இருக்கிறதே எனச் சிலர் என்னிடம் கேட்கிறார்கள். இதுவரை காண்பிக்கப்பட்ட தலித் வாழ்க்கை ஒருபக்கச் சார்புடையவை. ஏற்கெனவே காட்டப்பட்டுள்ள தலித் குறித்தான சித்திரங்கள் எல்லாம் இடதுசாரி மார்க்சிய எழுத்தாளர்களால் காட்டப்பட்டவையே. தலித் எழுத்தாளர்களும் இதைத் தொடர்ந்தார்கள். என்னுடைய கதைகள் இவை எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கின. தலித்துகளுக்குத் தொடக்க காலத்தில் நிலங்கள் கிடையாதுதான். ஆனால் பின்பு அவர்கள் நிலவுடைமையாளர்களாகச் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தார்கள். அந்த வாழ்க்கையைத்தான் என் கதைகளில் பதிவு செய்தேன்.

கேள்வி: தொடக்கத்தில் நிலங்கள் இல்லை என்றால் தலித்துகள் எப்படி நிலவுடைமையாளர்கள் ஆனார்கள்?

சோ.தர்மன்: முன்பெல்லாம் ஊரின் நிலங்கள் அத்தனையும் அந்த ஊரில் உள்ள பிராமணர்களுக்குச் சொந்தமாகவே இருக்கும். அதில்தான் எல்லோரும் விவசாயக் கூலிகளாகப் பாடுபடுவார்கள். அந்தப் பிராமணர்கள் அரசு வேலை கிடைத்து பட்டணங்களில் குடியேறத் தொடங்கினர். அவர்கள் சென்ற பிறகு அந்நிலங்களை நிர்வகித்தவர்கள் பெரும்பாலும் தலித்துகளே. பிற்காலத்தில் அந்நிலங்களை அதில் பாடுபட்ட தலித்துக்களுக்கே பிராமணர்கள் கையளித்துவிட்டார்கள். பிராமணர்கள் சிலர் இலவசமாகவும் கொடுத்தார்கள். கொடுப்பதைக் கொடு எனச் சிறு தொகைக்கு நிலத்தைக் கொடுத்துச் சென்றவர்களும் உண்டு. இப்படித்தான் தலித்துகளுக்கு நிலங்கள் கிடைத்தன. எங்கள் பகுதியைப் பொறுத்தவரை இதுதான் உண்மை. இன்று பிராமணர்கள் தலித்துகளுக்கான எதிரிகளாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். இது மாபெரும் தவறு.

கேள்வி: தலித் எழுத்துக்களை வாசிக்கிறீர்களா?

சோ.தர்மன்: தலித் எழுத்துகள் மட்டுமல்ல, பலரின் எழுத்துக்களை இன்று என்னால் வாசிக்க முடியவில்லை. தனக்குத் தெரிந்த விஷயங்களை அம்பாரமாகக் குவித்து வைக்கிறார்கள். சில பக்கங்களுக்கு மேல் வாசிக்கவே முடியவில்லை....... (சாகித்ய அகடமி விருது பெற்ற) ‘தோல்’ என்னால் வாசிக்கவே முடியவில்லை. ‘காவல் கோட்ட’த்திலும், ‘அஞ்ஞாடி’யிலும் எனக்கு வாசிக்கச் சில பக்கங்களே உள்ளன. மற்றவை எல்லாம் எனக்குத் தெரிந்த வரலாற்றுத் தகவல்கள்தாம். அதை வரலாற்றுப் புத்தகங்களிலே படித்துக் கொள்வேன். எதற்கு நாவல் வாசிக்க வேண்டும்? புனைவு என்பது தனக்குத் தெரிந்த விஷயங்களைக் கொட்டிவைப்பதல்ல. அதை நெய்யவேண்டும்.

சிறு பத்திரிகைகளில் மட்டுமே வரக்கூடிய தீவிரமான இலக்கிய விவாதங்கள் தமிழ்இந்துவில் வரத்தொடங்கியிருப்பது தமிழுக்கு ஓர் ஆரோக்கியமான ஆரம்பம். வாழ்க அவர்களின் முயற்சி!

சிரிப்பு
“தரிசா இருந்த நிலத்துல எப்படி இவ்வளவு விளைச்சலை கொண்டு வந்தீங்க?”

“இந்த இடத்துல தங்கம் இருக்குன்னு புரளிய கிளப்பிவிட்டேன். ஊரெல்லாம் சேர்ந்து தோண்டிப் பார்த்தாங்க. அப்படியே விவசாயம் பண்ணிட்டேன்..”
(17-11-2013 தினமலர் வாரமலரில் பக்கம் 24இல்- ப. உமாமகேஸ்வரி எழுதிய துணுக்கு. இருவருக்கும் நன்றி.)

சந்திப்பு
இந்த வாரம் மூத்த பதிவர்களில் ஒருவரான திரு ஜி.எம்.பி. எனப்படும் ஜி.எம்.பாலசுப்ரமணியன் அவர்களைச் சந்திக்க முடிந்தது. பெங்களூர்வாசி. மகனைப் பார்க்கவேண்டி சென்னை வந்தவரை நானும் மனைவியும் சென்று சில மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அடுத்த நாள் மேலும் சில பதிவர்கள் சந்திக்கவிருப்பதாகச் சொன்னார்.



பதினோராம் வகுப்பு முடித்தவுடனே அரசுத்துறையில் பணியில் சேர்ந்து அதிலேயே நீடித்து பின் விருப்ப ஓய்வுபெற்றவர். இரண்டு பிள்ளைகள். பணிவும் புரிதலுமுள்ள துணைவி. எழுபத்து ஐந்து வயதிலும் எழுத்தில் துள்ளும் வேகம். எதையோ சாதிக்கவேண்டும் என்ற வெறி. வேறென்ன வேண்டும்?

தனது முதல் சிறுகதைத் தொகுப்பைக் கொண்டுவந்திருகிறார். 144  பக்கம். அறுபது ரூபாய்.   2014 புத்தகத் திருவிழாவில் மணிமேகலை பிரசுரத்தில் கிடைக்கும். ”வாழ்வின் விளிம்பில்” என்பது தலைப்பு. பதினாறு சிறுகதைகள். இன்னும் முழுதாகப் படிக்கவில்லை. ஒருகதை மட்டும் படித்தேன். ‘மனசாட்சி’ என்ற புரட்சிகரமான கதை. மனதை என்னவோ செய்கிறது. உண்மையின் இயல்பே அதுதானே! (அது என்ன உண்மை? நீங்களும் படித்தால் தானே தெரியும்!)

பெங்களூர் வரும்போது தம் இல்லத்திற்கு வரவேண்டுமென்று அன்போடு அழைத்தார்கள் தம்பதியர். அவர்கள் விருப்பம் விரைவில் நிறைவேறலாம்.

© Y.Chellappa
Email: chellappay@yahoo.com

22 கருத்துகள்:

  1. பயனுள்ள தகவல்களுடன் சுவாரஸ்யமான
    அருமையான அபசி-தொபசி
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அருமையான தொகுப்புரைகளுடன் கூடிய பதிவு..
    பதிவிட்ட தங்களுக்கு நன்றி!..

    பதிலளிநீக்கு
  3. சச்சின் பற்றி நாசூக்காக குட்டியிருக்கிறீர்கள். நான் பாரத ரத்னா பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். படித்திருப்பீர்கள் என்று தெரியும். தர்மனுக்கு தைரியம்தான்.

    பதிலளிநீக்கு
  4. பதிவின் அம்சங்களும் எழுதிய விதமும் சூப்பர்

    பதிலளிநீக்கு
  5. பயனுள்ள நல்ல தகவல்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  6. மூத்த பதிவரைத் தேடிச் சென்று உரையாடியது நன்று!

    பதிலளிநீக்கு
  7. எங்களைப் பற்றிய செய்திகளுக்கு நன்றி. பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் காப்புரிமை பெற்றது என்னும் செய்தி தெரியாதது. திரைப்படப் பாடல்களை மேடைகளில் பாடியே பலரது பிழைப்பு நடக்கிறது. திரைப் பாடல்கள் இல்லாமல் தொலைக் காட்சி இருக்க முடியுமா தெரியவில்லை. நம் திரைப் பாடல்கள் ஏன் காப்புரிமை கேட்பதில்லை?கேட்காததால்தான் பாடல்கள் பிரபல மடைகிறதோ?

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. ராமகிருஷ்ணரின் வாக்கு மிக அருமையான ஒன்று. இறைவனின் பெயரில் மூடநம்பிக்கைகளிலும், சடங்குகளிலும் பற்று வைத்து பின்பற்றுவதை விட ஒரு சில நிமிடம் இறைவனின் முன் கண் மூடி நின்று தியானித்தல் அதுவும் கண்ணீர் மல்க....இதை பின்பற்றினால் எத்தனையோ சாதி, சமூகம் சார்ந்த சமூகப் பிரச்சினைகள் இல்லாதிருக்கும்.

    கரிசல் எழுத்தாளர் தர்மனின் தூர்வை நாவலில் அவர் கூறியுள்ளக் கருத்து அதாவது தலித்துகளுக்கு பிராமணர்களிடமிருந்துதான் நிலம் கிடைத்தது என்பதும், இன்று பிராமணர்கள் தலித்துகளுக்கான எதிரிகளாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். இது மாபெரும் தவறு. அநீதிகள் செய்து வந்தவர்கள் என்று சொல்லப்பட்ட அவர்களும் இது போன்ற சமூக நன்மை பயக்கும் காரியங்களும் செய்திருக்கிறார்கள் என்பது இதன் மூலம் அறிந்தது மிக நல்லதொரு இதுவரை அறியப்படாத விஷயம்தான். இதை அறியப்படுத்திய திரு தர்மன் அவர்களுக்கும், ப்திந்த உங்களுக்கும் நன்றி.

    பதிவுகள் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  10. சுவாரஸ்யமான தகவல்கள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  11. ஜி. எம். பி. ஐயா அவர்களின் சிறுகதைத் தொகுதி வெளிவருகிறதென்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.

    பதிலளிநீக்கு
  12. ரசித்துப் படிக்க வைத்த சுவராஸ்யமான தகவல்கள் ஐயா...
    அருமை.

    பதிலளிநீக்கு
  13. வாணி ஜெயராம் மிக உன்னத கலைஞர். அவரது 'மேகமே' ஒன்று போதும் அவரது புகழ்பாட.
    வாணி ஜெயராம் என்று இல்லை விஸ்வனாதன் ஆனந்த் போன்ற ஜாம்பவான்களுக்கு உரிய இடம் கிடைக்கப்படுவதில்லை. ஏனென்றால் அவர்கள் பிறப்பிடம் தமிழ நாடு. அதனாலயே அவர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த நிலைமை மாறவேண்டுமானால் தமிழ்நாட்டில் திராவிடக்கட்சிகளின் ஆட்சி மறைந்து தேசியக்கட்சிகளின் ஆட்சி மலரவேண்டும். அதுவரை நாம் புலம்புவதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்?

      நீக்கு
  14. வணக்கம்
    ஐயா

    ரசிக்கும் படி அருமையாக பதிவை எழுதியள்ளிர்கள் வாழ்த்துக்கள் ஐயா...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  15. வணக்கம்
    ஐயா

    ரசிக்கும் படி அருமையாக பதிவை எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள் ஐயா...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு