திங்கள், அக்டோபர் 14, 2013

ஆசிரியர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப் போவது யார்? ‘அபுசி-தொபசி’ (6)(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல் 
ஒரு வழியாக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுவிட்டது. சிரியாவில் போர் நிகழாமல் தடுக்கக் காரணமாயிருந்த ரஷிய அதிபர் புடினுக்கோ, அல்லது தாலிபான்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிர்பிழைத்து இப்போது பெண்கல்விக்காகக் குரல் கொடுத்துவரும் பாகிஸ்தானியப் பெண் மலாலாவுக்கோ வழங்கப்படலாம்  என்று பலமாக வதந்திகள் உலவியநிலையில், நெதர்லாந்தில் இருந்து இயங்கிவரும் ரசாயன ஆயுதத் தடுப்பு நிறுவனமான OPCW (Organisation for the Prohibition of Chemical Weapons) க்கு வழங்கப்பட்டுள்ளது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றிருப்பவர்  82 வயதான கனடிய சிறுகதை எழுத்தாளர், அலிஸ் மன்றோ என்ற பெண்மணி. (மூதாட்டி?) இவருக்கு நோபல் பரிசு கிடைத்தாகவேண்டும் என்று தனது ஒவ்வொரு எழுத்திலும் விடாமல் சொல்லிக்கொண்டேயிருந்த இன்னொரு கனடிய (தமிழ்) எழுத்தாளரான அ.முத்துலிங்கம் இனி நிம்மதிப் பெருமூச்சு விடலாம். சிறுகதை என்ற வடிவத்தை நோபல் குழு ஓர் இலக்கிய வடிவமாக அங்கீகரித்ததன் அடையாளம் இது என்று பெருமிதத்துடன் முத்துலிங்கம் எழுதிய கட்டுரையை ('அம்மா நீ வென்றுவிட்டாய்') சரியான நேரத்தில் வாங்கிப் பிரசுரித்திருக்கிறது, தமிழ் ஹிந்து. (முத்துலிங்கத்தின் நேர்காணல்கள் அடங்கிய “தமிழ்மொழிக்கு ஒரு நாடில்லை” என்ற புத்தகத்தைப்  படிக்க எடுத்திருக்கிறேன். பிறிதொரு அபுசிதொபசியில் இதுபற்றி எழுதுவேன்.)

புத்தகம்
‘நம்ம சென்னை’ மாத இதழைப் படிப்பவர்களுக்கு அதன் ஆசிரியர்  அரவிந்தனின் அறிமுகம் தேவையில்லை. சிறந்த எழுத்தாளர். அவரது மொழிபெயர்ப்பில் வெளியான “ராணியுடன் ஒரு தேநீர் விருந்து--வெல்ஷ் மொழிச் சிறுகதைகள்” என்ற ராயல் அளவு 150 பக்கமுள்ள, ரூ.90 விலையுள்ள  நூல் அண்மையில் வாங்கினேன். (காலச்சுவடு வெளியீடு. முதல் பதிப்பு நவம்பர் 2011).

2009 இல் வேல்ஸ் லிட்டரேச்சர் எக்ஸ்சேஞ்ச் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட இலக்கியப் பயிலரங்கில் கலந்துகொண்ட அரவிந்தன், அதன் உத்வேகத்தினாலும், பதிப்பாளருக்கு பிரிட்டிஷ் அரசு வழங்கிய உதவித்தொகையினாலும் இந்த நூலைக் கொண்டுவந்திருக்கிறார்.

தங்களை ஆதிக்கம் செலுத்தும் ஆங்கில மொழியை எதிர்த்துக்கொண்டு முன்னுக்கு வரப் போராடும் பத்து லட்சத்திற்கும் குறைவானவர்களே பேசும் மொழி, வெல்ஷ் மொழி  ஆகும். வேல்ஸ் மாகாணத்தில் எங்கும் ஆங்கில அறிவிப்புப் பலகைகளைக் காணவில்லையாம். எல்லாமே வெல்ஷ் மொழியில் தானாம்!

பன்னிரண்டு எழுத்தாளர்களின் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நூலின் தலைப்பிலான கதையை எழுதியிருப்பவர், மிஹான்கல் மார்கன் (Mihangel Morgan). தன்னை ஒரு ராணியாகக் கருதிக்கொண்ட மனப்பிறழ்வு கொண்ட ஒரு பழம்பணக்காரியின் கதை. “அன்புள்ள சாம், அடுத்த வாரம் வியாழக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு இயான்டோவிற்குத் தேநீர் அருந்த வர முடியுமா?” என்று அழைக்கிறார். சாம் போகிறார். இயான்டோ என்பது அரண்மனையல்ல, ஒரு சாதாரணக் குடிசை என்று தெரிகிறது. சுற்றிலும் வீடுகள் இடிந்துபோய்க் கிடக்கின்றன. கடலை ஒட்டிய பகுதி. இவர் மட்டும் அந்தக் குடிசையில் ஏன் தனிமையில் இருக்கிறார் என்பது சாமுக்குப் புதிராக இருக்கிறது.

மூதாட்டி, தன்னை ஒரு ராணியாகக் கருதிக்கொண்டே பேசுகிறார். கதையின் இறுதிப்பகுதி உணர்ச்சிகரமானது. தன்னை விட்டு ஓடிப்போன தன் மகளை அவள் நினைவுகூர்கிறார். “அவள் திரும்பி வருவாள் என்று நான் இன்னமும் எதிர்பார்க்கிறேன். அதனால் தான் இங்குள்ள வீடுகளையெல்லாம் அவர்கள் இடித்துவிட்டாலும் இங்கிருந்து வெளியேறாமல் இருக்கிறேன்” என்கிறார்.

மீண்டும் ஒருநாள் அந்த ராணி தன்னை தேநீருக்கு அழைப்பர் என்றும்  அப்போது இன்னும் சில புதுக்கதைகள் கிடைக்கலாம் என்றும் சாம் நம்புகிறார்...

1950இல் வெளியான ‘ஸன்செட் புலிவார்டு’ (SUNSET BOULEVARD) என்ற ஹாலிவுட் திரைப்படத்தை நினைவூட்டுகிறது இந்தக்கதை. மூன்று ஆஸ்கார்களை வென்ற படம். மிகச்சிறந்த நூறு அமெரிக்கப் படங்களுக்கான பட்டியலில் கட்டாயம் இடம்பெற்றாகவேண்டும் என்று விமர்சகர்களால் குறிக்கப்படுவது.
கலிபோர்னியாவில் பீவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு சாலையின் பெயர்  ஸன்செட் புலிவார்டு. பேசாத திரைப்படங்களில் கதாநாயகியாக இருந்த ஒரு நடிகை, பேசும்படங்கள் வந்துவிட்ட நிலையில் திரைத்துறையால் புறக்கணிக்கப்பட்டு, அதனால் மனப்பிறழ்வுக்கு ஆளாகி, தனது சமையல்காரக் கணவனுடன், ஸன்செட் புலிவார்டில் அரண்மனை மாதிரியான ஒரு பழைய மாளிகையில் வாழ்கிறார். தன்னை இன்னும் இளமையும் உற்சாகமும் கொண்ட, வரவேற்புக்குரிய, முதன்மைக் கதாநாயகியாகவே கருதிக்கொண்டு ஷூட்டிங் நடக்கும் இடங்களில் தடபுடல் செய்வதும், எல்லாருடைய ஏளனத்திற்கும் இலக்காகவதும்தான் படத்தின் மையக் கருத்து. கதாநாயகியாக அற்புதமாக நடித்திருக்கிறார், க்ளோரியா ஸ்வான்சன் என்ற நடிகை. டைரக்டர் செசில் பி டி’மில் (Cecil B. DeMille) அதே பெயரில் நடிகராகவும் வருகிறார். மனித உணர்வுகளை அருமையாகச் சித்திரிக்கும் இப்படத்தை  இதுவரை பார்த்திருக்கவில்லை என்றால் இப்போது பார்த்து விடுங்கள். (யூடியூபில் இல்லாததா!)

"ராணியுடன் ஒரு தேநீர் விருந்து--வெல்ஷ் மொழிச் சிறுகதைகள்”,  பிறமொழிக் கதைநூல்களில் இன்னொரு கௌரவமான நூல். அழகான மொழிபெயர்ப்பு.

சினிமா
அனுஷ்கா என்ற நடிகைக்கு முப்பத்தொன்று வயதாகிவிட்டது, ஆகவே அவர் வீட்டில் அவருக்குத் திருமணத்திற்கு ஆள் பார்க்கிறார்கள் என்ற செய்தி எல்லா ஊடகங்களிலும் வந்துகொண்டிருக்கிறது. சில பதிவர்களும் இதுபற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். (இன்னொரு சம வயதினரான த்ரிஷாவுக்கும் இதே நிலை: அவருக்கும் ஆள் தேடிக்கொண்டிருக்கிறார்களாம். இவருக்கும் சில பதிவர்களின் கவனிப்பு உண்டு.)

பொதுவாகவே ‘கா’ என்று முடியும் நடிகைகள் நல்ல நடிப்புத்திறன் கொண்டவர்களாயிருப்பது ஆராய்ச்சிக்குரியது.

தேவி’கா’வை மறக்க முடியுமா? ‘ஆனந்தஜோதி’யில் ‘நினைக்கத் தெரிந்த மனமே’ பாடல் காட்சியிலும், ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’  படத்தில் ‘சொன்னது நீ தானா’ பாடல் காட்சியிலும் தேவிகாவின் நடிப்பை யாரவது மிஞ்சமுடியுமா? வானம்பாடியில் 'கங்கைக்கரைத் தோட்ட'த்திலும் 'தூக்கணாங்குருவிக்கூட்'டிலும்  அவர் அசைவுகள் மறக்கமுடியுமா?

இன்னொருவர் சினே’கா’. ஆட்டோகிராபிலும் அச்சமுண்டு அச்சமுண்டிலும் இன்னும் பல படங்களிலும் இந்தப் புன்னகை இளவரசியின்  நடிப்பைப் புகழாதவர்கள் யார்?

இந்த வரிசையில் மூன்றாவது ‘கா’ நடிகையாக வளர்ந்துகொண்டிருந்தவர் அனுஷ்’கா’. தெலுங்கில் இவரது நடிப்பு வெளிப்பட்ட அளவுக்குத் தமிழில் இன்னும் வெளிப்படாத நிலையில் இவர் திருமணம் செய்துகொண்டு திரைத்துறைக்கு முழுக்குப்போடப் பார்ப்பது  ரசிக இளைஞர்களை (என்னை அல்ல!) அதிகம் வருந்தவைக்கும் என்பது உறுதி.

தொலைக்காட்சி
திருநெல்வேலி கீழ வல்லநாடு பகுதில் இயங்கிவரும் இன்பண்ட்ஜீசஸ் பொறியியல் கல்லூரியின் முதல்வர் சுரேஷ், அதே கல்லூரியின் மூன்று மாணவர்களால் கல்லூரி வளாகத்திலேயே அரிவாளால் வெட்டப்பட்டு உயிரிழந்தார் என்னும் கொடும்செய்தி தொலைக்காட்சிகளில் முதலிடம் பிடித்ததில் வியப்பில்லை. தென்றலுக்கும் தமிழுக்கும் பெயர்போன திருநெல்வேலி இப்போதெல்லாம் அரிவாளுக்கும் அடியாட்களுக்கும் பெயர் பெற்றுவிட்ட கோலத்தை என்சொல்வது!


பிச்சைக்கண்ணு, டேனிஸ், பிரபாகரன் என்ற அந்த மூன்று மாணவர்களும் உடனே கைது செய்யப்பட்டிருப்பது, இக்கொலையில் அரசியல் சம்பந்தம் இல்லை என்பதைக் காட்டுகிறது. இதுவரை வந்த செய்திகளின் அடிப்படையில் பார்க்கும்போது, கல்லூரியிலிருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டது தான் கொலைக்கான ஆத்திரத்தை உண்டுபண்ணி யிருக்கலாம் என்று தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் கலைக் கல்லூரிகள் அநேகமாக இல்லாமல்போய்விட்ட நிலையில்,  35 மதிப்பெண் எடுத்தாலே பொறியியல் கல்லூரியில் சேரலாம் என்ற அபத்தமும், அரசுடைமை வங்கிகளை மிரட்டிக் கல்விக்கடன் பெற்றுவிடும் அரசியல் சூழலும், ஆங்கிலமே தெரியாமல் பிளஸ்-டூ வரை வந்துவிட்டு, பொறியியல் கல்லூரியின் ஆங்கிலவழி போதனைக்குத் தம்மைத் தயார்படுத்திக்கொள்ள ஏலாத மாணவர்களின் தன்னிரக்கமும் – ஆக, பலவிதமான அபாயங்களுக்கிடையே ஆசிரியர்கள் தங்கள் தொழிலை நடத்திச் செல்லவேண்டியவர்களாகிறார்கள்.   

முன்பு சென்னையில் ஓர் பள்ளி ஆசிரியை வகுப்பறையிலேயே மாணவனால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இப்போது ஒரு கல்லூரி முதல்வர் கொல்லப்பட்டிருக்கிறார். இனி யார் யாரோ? ஆசிரியர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப் போவது யார்? அதைவிட முக்கியம், உயிர்ப்பயத்தால் வகுப்பறையில் மென்போக்கைக் கடைபிடித்தாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும்  ஆசிரியர்களாலும், எது செய்தாலும் தப்பிவிடலாம் என்ற சூழலில் வளரும் முரட்டு மாணவர்களாலும், பள்ளியிலோ கல்லூரியிலோ சேர்த்துவிட்டதுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டதாகக் கைகழுவிவிடும் பொறுப்பற்ற பெற்றோர்களாலும் திட்டமிட்டு அழிபட்டுக்கொண்டிருக்கும் கல்விக்குப் பாதுகாப்பு வழங்கப்போவது யார்?

பத்திரிகை
அறுபத்தாறு வருடங்களாக விடாமல் வந்துகொண்டிருக்கிறது, மாதப் பத்திரிகை ‘மஞ்சரி’. இந்த மாதம்-அக்டோபர் 2013-இதழில் மேலட்டையில் ஜும்ப்பா லாஹிரி சிரித்துக்கொண்டிருக்கிறார்.  (வேறெந்தத் தமிழ் பத்திரிகையின் மேலட்டையில் ஒரு எழுத்தாளரின் படம் வரும்?) இன்னும் இரண்டு நாளில் புக்கர் பரிசு பெறும் வாய்ப்புள்ள இவர் தான் அடுத்த சல்மான் ருஷ்டி என்று பத்திரிகைகள் கருதுகின்றன. 

தி.ஜ.ர.வும் த.நா.சேனாபதியும் இருந்தபோது ‘மாதத்தின் சிறந்த மலர்க்கதம்பம்’ என்ற முத்திரை வரிகளைக் கொண்டிருந்த மஞ்சரி, இப்போது ‘பழமையின் இனிமையும் புதுமையின் வளமையும் இணைந்த தனித்துவம் மஞ்சரி மகத்துவம்’ என்ற விளக்கவரிகளுடன் வருகிறது. வரிகள் மாறினால்  என்ன, மஞ்சரி, மஞ்சரி தான்!

மிகவும் தரமான, பிற இதழ்களில் சுலபமாகக் காணமுடியாத அல்லது கண்டு மறந்துவிட்ட, செய்திகளைக் கவனமாகப் பதிப்பிக்கிறார்கள். மாதத்திற்கு இரண்டு மொழிபெயர்ப்பு சிறுகதைகளாவது வருகின்றன. இளைஞர்களைக் கவரும் விதத்தில் இதழின் வடிவமைப்பும் உள்ளடக்கமும் கண்ணைக் கவருகின்றன. ஆசிரியர்: குருமனோகரவேல். (புனைபெயராக இருக்குமோ?) பதினேழும் இருபதும் கொடுத்து ஆஞ்சநேயர் படமும் ராசிபலனும் பார்த்துவிட்டுத் தூக்கி எறியப்போகும்  ஆன்மிகப் பத்திரிகைகள் வாங்கும் அதே கடையிலிருந்து  பத்தே ரூபாய்க்கு மஞ்சரி வாங்கினால் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு நாம் அறிவுச்சுடர் ஏற்றியவர்கள ஆவோம். ஆண்டு சந்தா ரூபாய் நூற்றி இருபது மட்டுமே. முகவரி: மஞ்சரி, எண் 1, சமஸ்கிருத கல்லூரித் தெரு, மயிலாப்பூர், சென்னை -600004.தொலைபேசி 24983099, 24983799.

கலைமகள் குழுமத்தில் இருந்து மூன்று இதழ்கள் வந்துகொண்டிருந்தன. அவற்றில் கலைமகளும் மஞ்சரியும் தான் தொடர்ந்து வருகின்றன. ‘கண்ணன்’ என்ற சிறுவர் இதழ் பல ஆண்டுகள் முன்பே நின்று போனது, என் வாழ்நாளின் துடைக்கமுடியாத துக்கம். தமிழ்ப் பள்ளிகளில் ஆங்கில மீடியம் வந்ததின் விளைவன்றி வேறென்ன? ‘ஆர்வி’யின் ஆசிரியத்துவத்தில் ‘ரேவதி’ போன்ற பெரும் எழுத்தாளர்கள் எழுதிய இதழ் அது. பள்ளிப் பருவத்தில் நான் எழுதி வெளியான துணுக்கிற்கு ஒரு தீபாவளி நேரத்தில் மூன்று ரூபாய் மணியார்டர் பள்ளி முகவரிக்கே வந்ததும், அந்தாண்டு முழுவதும் நான் ஹீரோவாக இருந்ததும்...ஹூம்...! (அந்த மூன்று ரூபாய்க்கு வாங்கிய பட்டாசை இரண்டு நாள் தொடர்ந்து வெடித்தேன். இப்போது அதே அளவுக்கு வாங்க வேண்டுமானால் குறைந்தது ஆயிரம் ரூபாய் வேண்டும். உலகம் எங்கே போகிறது சார் ?)

சிரிப்பு
பம்மல் சம்பந்த முதலியார், தமிழின் ஈடிணையற்ற நாடகாசிரியர் என்பது தெரிந்ததே. ஆனால் அவரது நாடகங்களை நாம் இன்று பார்க்கும் வாய்ப்பு கிட்டுவதில்லையே!

சென்ற வாரம் சென்னையின் ஒழுங்கற்ற போக்குவரத்தும் வேர்வைத் துளிகளைத் தொடர்ந்து உதிர்க்கும் காலைவெயிலும்  விடாமல் துரத்திய ஒருநாளில் சைதாப்பேட்டை ‘அகநாழிகை’ புத்தகக் கடையில் பொன்.வாசுதேவனைச் சந்திக்கப் போனபோது அவர் வரச் சிறிது நாழிகை ஆகும் என்றார்கள்.  (‘கடை’ என்று சொல்வது தவறு. அருமையான தமிழ் நூலகம் என்று தான் சொல்லவேண்டும்.) தினசரிகளைப் புரட்டினால் வடசென்னையிலிருந்து திருப்பதி இறைவனுக்குக் குடைகள் கொண்டுசெல்லும் செய்தி கண்ணில் பட்டது. சரி, புத்தகங்களைப் பார்க்கலாமே என்று முயன்றபோது திடீரென்று கண்ணில் பட்டது, சந்தியா பதிப்பகம் (044-24896979) வெளியிட்ட பம்மல் சம்பந்தம் எழுதிய “தீட்சிதர் கதைகள்” என்ற இருபத்தெட்டு நகைச்சுவை கதைகள் அடங்கிய நூல். ௭௨(72) பக்கம் விலை ரூபாய் ௫௫ (55). 1936 இல் வெளியான நூலின்   2012  ஆம் வருட முதல் (மறு) பதிப்பு. கட்டாயம் வாசகர்கள் படிக்கவேண்டிய heritage  நூல் இது. பம்மல் சம்பந்தனார் இவ்வளவு சிறந்த எழுத்தாளர் என்பதை இவ்வளவு நாள் அறியாமல் போனோமே என்று வருத்தம் ஏற்பட்டது.

பீர்பால், தெனாலிராமன், மரியாதைராமன் மாதிரி இதில் வரும் தீட்சிதரும் ஒரு விசேஷமான கேரக்டர். மாதிரிக்கு ஒரு கதை:

ஒருமுறை ஒரு டிராம் கண்டக்டர் நமது தீட்சிதரிடம் ஒரு செல்லாத இரண்டணாவைக் கொடுத்துவிட்டான். இதைப் பாராது வாங்கிக்கொண்ட அவர், பிறகு பரிசோதித்துப் பார்த்தபொழுது தான் மோசம் செய்யப்பட்டதை அறிந்தவராய் “ஆகட்டும், இதற்குப்பதில் செய்ய எனக்குத் தெரியும்” என்று சொல்லிக்கொண்டு, பாரிஸ்கார்னரில் மற்றொரு டிராம் வண்டியில் ஏறினார். ஏறும்பொழுது டிக்கட் விற்கிறவன் எந்தப் பக்கமிருந்து டிக்கட்டுகள் கொடுத்துக்கொண்டு வருகிறான் என்பதை கவனித்து அதற்கு எதிர்ப்புறமாக ஏறினார். டிக்கட் விற்கிறவன் மற்றவர்களுக்கெல்லாம் டிக்கட் கொடுத்துக்கொண்டு இவரிடம் வருவதற்குள் பச்சையப்பன் கலாசாலைக்கு டிராம் வந்துவிட்டது.(குறிப்பு: அப்போது பச்சையப்பன் கல்லூரி பாரிஸ்கார்னரில் தான் இருந்தது.)  பிறகு டிராம் கண்டக்டர் இவரை டிக்கட்டுக்குப் பணம் கேட்க, தன்னுடைய பையிலிருந்து சரியான ஒரு இரண்டணாவை எடுத்துக்கொடுத்து “ராயபுரம் ஒரு டிக்கட்” என்று கேட்டார். கண்டக்டர் “ஓய்! எந்த ஊரய்யா, ராயபுரமா போகிறது இந்த வண்டி? கீழே இறங்குங்கு அய்யா!” என்றான். உடனே நமது தீட்சிதரும் ஒன்றும் தெரியாதவர்போல் இறங்கிவிட்டார்.

கொஞ்சம் பொறுத்து மயிலாப்பூருக்குப் போகும் மற்றொரு டிராம் வண்டியில் முன்பு குறிப்பிட்டபடியே கவனித்து ஏறிக்கொண்டார். இவ்வண்டி மெமோரியல் ஹாலருகில் வரும்பொழுது கண்டக்டர் டிக்கட்டுக் கேட்கவே முன்பு போல ஒரு சரியான இரண்டணாவைக்கொடுத்து “ஒரு டிக்கட் வண்ணாரப்பேட்டை” என்று கத்தினார். கொஞ்சமாவது சுளிக்காமலும், சிரிக்காமலும் கேட்டார். வண்டியிலிருந்தவர்களெல்லாரும் நகைத்தனர். “ஏய்! நாட்டுப்புறம்! கீழே இறங்கு, படிக்கத் தெரியாது? போர்டில் என்ன போட்டிருக்கிறது பார்க்கவில்லையா?” என்று கண்டக்டர் அதட்டி, அவருடைய இரண்டணாவை அவர் கையில் கொடுத்துக் கீழே இறக்கி விட்டான். இதற்குள்ளாக டிராம் வண்டி சென்டிரல் ஸ்டேஷன் வந்து சேர்ந்தது.

இம்மாதிரியாகவே வேறு வேறு வண்டிகளிலேறி அவ்வண்டிகள் போகாத இடங்களின் பெயர்களைக்கூறி, துட்டையும் மிகுத்திக்கொண்டு மயிலாப்பூர் போய்ச் சேர்ந்தார்! பிறகு மறுநாள் சென்னையில் திருப்பதிக்குடை வைபவத்தைக் காண வந்து அந்த திருப்பதி வேங்கடேஸ்வரப் பெருமாள் உண்டியில் அந்த செல்லாத இரண்டணாவைச் சமர்ப்பித்து விட்டார். “இந்தப் பெருமாள் தானே அந்த நாமம் போட்ட கண்டக்டர் எனக்கு நாமம் போடச் செய்தார்! ஆகவே அந்த செல்லாத காசை அவருக்கே கொடுத்துவிட்டேன்” என்று தன் மனதைத் திருப்தி செய்துகொண்டார்.    
 
© Y.Chellappa
Email: chellappay@yahoo.com. Phone: 044-67453273.
 
குறிப்பு: எனது இன்னொரு வலைப்பூவான இமயத்தலைவன் படித்தீர்களா?
 

16 கருத்துகள்:

 1. தங்களின் கதை விமர்சனமும் "கா" எழுத்தில் வரும் கனவு கன்னிகளின் திருமணம் பற்றிய செய்தியும் அதனால் "சில பல" நபர்களின் வருத்தமும் உங்களையும் பாதித்துள்ளதோ ?

  பதிலளிநீக்கு
 2. ஒரு கல்லூரியின் முதல்வர் மாணவர்களால் வெட்டிக் கொலை. இதைவிட பதைபதைக்கச் செய்யக் கூடிய செய்தி இருக்க இயலுமா ஐயா.
  கல்விக் கூடங்கள் திசைமாறிவிட்டன. தேர்ச்சி சதவீதம் மட்டுமே, பள்ளியின் தரத்தினை நிர்ணயம் செய்யும், அளவீடாக மாறிய , நொடியில் இருந்தே, ஒழுக்க சதவீதம் குறையத் தொடங்கிவிட்டது ஐயா.

  பதிலளிநீக்கு
 3. கவியாழியாரே, உங்கள் முதல் கருத்துரைக்கு நன்றி. இனிமேல் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 'கனவுக் கன்னி' என்றெல்லாம் எழுதுகிறீர்களே, அம்மா ஊரில் இல்லையா?

  பதிலளிநீக்கு
 4. கரந்தை ஜெயக்குமார் அவர்களே, உங்கள் பதில் சரியானதே. மதிப்பெண்கள் மட்டுமே பள்ளியின் தரக்குறியீடாக மாறிவிட்டது தான் அனைத்துச் சீரழிவிற்கும் மூல காரணம் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. கொடும்செய்தி - நாடு சீரழிந்து கொண்டிருப்பதற்கு ஒரு எடுத்துக் காட்டு... மற்ற பல்சுவை தகவல்களுக்கு நன்றி ஐயா...

  கா.. கா.. இன்று தான் தெரியும்...! சரி தானோ...?

  பதிலளிநீக்கு
 6. பல லட்சம் செலவு செய்து மகனை ஏரோ நாட்டிகல் எஞ்சினீயர் ஆக்க நினைக்கும் பெற்றோர்கள் ...கொலைகார பாவிகளாய் பிள்ளைகள் ...
  கல்வி கொள்கையில் அடிப்படை மாற்றம் தேவை என்பதை உணர முடிகிறது !
  த.ம 3

  பதிலளிநீக்கு
 7. பகவான்ஜி அவர்களே! கல்விக் 'கொள்கை'யில் அல்ல, கல்விக் 'கொள்ளை'யில் அல்லவா மாற்றம் தேவைப்படுகிறது! தங்கள் வருகைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 8. அன்புள்ள ஐயா

  ஹரணி வணக்கமுடன்.

  அ.முத்துலிங்கம் எழுதும் ஒவ்வொரு சொல்லுக்கும் நான் ரசிகன். அத்தனை ஆழமாகவும் சுவையாகவும் எழுதக்கூடியவர். தரமானவரின் நம்பிக்கை நோபெல் பரிசுவரை அடையாளப்பட்டிருக்கிறது என்பதுதான்.

  சிலகாலம் விட்டிருந்தேன் (கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வாங்கியவன்) தற்போது இரண்டு மாதங்களாக மஞ்சரி வாங்குகிறேன். சந்தா கட்டிவிடுவேன்.

  கல்லுர்ரி முதல்வர் கொலை செய்யப்பட்டிருப்பது உண்மையில் கண்டிக்கத்தக்கதும் வருந்தத் தக்கதும்தான் என்றாலும் அதைமீறிய சில கசப்பான உணமைகள் இன்றைய கல்விச்சூழலிலும் ஆசிரியர் மாணவர் நிலைப்பாடுகளிலும் உலவுகின்றன என்பதுதான் உண்மை.

  இன்றைக்கு பணியமர்த்தப்படும் ஆசிரியர் பெருமக்களில் 75 விழுக்காட்டிற்கு மேல் தரமற்றவர்களை ஆசிரியர்களாக நியமிப்பதுதான் பெருங்குறையாக உள்ளது. அவர்கள் தாங்கள் படித்ததையும் மறந்தவர்கள். வேலைக்கு வந்தபிறகு படிக்க மறுப்பவர்கள். தங்களைச் சுற்றி கல்வியில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை அறிய மறுப்பவர்கள்.

  ஆசிரியர் தொழிலை உப தொழிலாகவும் மற்ற மற்ற வியாபாரங்களை முதன்மைத் தொழிலாகவும் கொண்டு பள்ளிக்குப் பாடம் நடத்த வருவதைப் பொழுதுபோக்காகக் கொண்டவர்களால்தான் இன்றைக்கு நல்ல மாணவர்களை உருவாக்கமுடியாத இயலாமை ஏற்பட்டிருக்கிறது.

  தரமான நல்ல பண்புள்ள மாணவர்களை உருவாக்க ஆசிரியர்களும் அப்படியே தேர்வு செய்யப்படவேண்டும் ஆனால் அப்படி நடப்பதில்லை என்பதைத்தான் மேற்குறிப்பிட்ட கசப்பான வேதனையான சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

  பதிலளிநீக்கு
 9. தங்கள் அனுபவபூர்வமான உண்மைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நன் வங்கி அதிகாரியாக இருந்த காலத்தில் பல ஆசிரியர்களின் முக்கிய வேலை, வங்கிகளிலிருந்து பசுமாடு வாங்க லோன் வாங்கித்தருவது தான். ஓர் லோனுக்கு ஐநூற்றிலிருந்து ஆயிரம் வரை இவர்கள் முதலீடு இல்லாமல் லாபம் சம்பாதிப்பதைப் பார்த்திருக்கிறேன்.வங்கி வேலை இல்லாதபோது பள்ளிக்கும் இவர்கள் செல்வதுண்டு. ஆனால் இவர்கள் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் தான். கல்லூரிகளிலும் இதே நிலைமை என்றால் மாணவர்கள் கதி என்னாவது?

  பதிலளிநீக்கு
 10. ஒரு சில காரணங்களால் நான் மஞ்சரி இதழை நீண்ட நாட்களாகப்
  படிப்பதில்லை. இப்போது தாங்கள் தந்திருக்கும் தகவல் என்னைப் படிக்கத் தூண்டும் ஆவலைத் தருகின்றது.
  அதுபோல் " 'கண்ணன்' பத்திரிகை நின்றுபோனது என் வாழ்நாளில் துடைக்கமுடியாத சோகம்" என்று சொல்லியுள்ளீர்கள். கண்ணன் பத்திரிகை பற்றியும் 'அணில்' பத்திரிகை பற்றியும் எனது அன்பு
  நண்பர் எழுத்தாளர் 'வடுகவிருட்சியூர் ஆர்.அமுதா' அடிக்கடி என்னிடம் கூறுவதுண்டு.
  எனக்கு எது மறக்கமுடியாத துயரம் என்றால் சிவகாசியிலிருந்து வெளிவந்த, முதலில் 'முல்லை தங்கராசன்', அடுத்து ஆர்.வாசுதேவன் ஆகியோர் ஆசிரியர்களை இருந்த பாலர் வண்ண மாத மலர் என்கிற குறிப்புடன் வந்து கொண்டிருந்த
  'ரதனபாலா' நின்று போனதுதான். அதில்தான் எனது முதல் கவிதை
  1982-ல் வெளியானது. ('பாப்பாவின் பண்புகள்' என்பது தலைப்பு.)
  ஓவியர் செல்லப்பனின் வண்ண ஓவியங்களுடன் பிரசுரமானது. நினைவலைகளை தூண்டிவிட்டுவிட்டீர்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
 11. ஆம், ரத்னபாலாவும் பல வருடங்கள் வண்ணமயமான இதழாக வெளிவந்தது தெரியும். இத்தகைய சிறுவர்களின் பத்திரிகைகள் தமிழில் தொடர்ந்து வராமல் போனதற்கு பள்ளிக்கல்வியில் ஆங்கிலமோகம் அதிகரித்தது தான் காரணம். நமது குழந்தைகள் இவ்வகையில் துரதிர்ஷ்டம் செய்தவர்களே.

  பதிலளிநீக்கு
 12. தமிழில் மிகவும் தரமான ஓர் பத்திரிகையாக வந்துகொண்டிருக்கும் 'மஞ்சரி' பற்றி படிக்க மகிழ்வாக இருந்தது!

  பதிலளிநீக்கு
 13. தங்கள் கருத்துரைக்கு நன்றி. வாசகர்கள் ஆதரவு இருந்தால் இன்னும் எவ்வளவோ நல்ல பத்திரிகைகள் அழியாமல் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 14. //'ரத்னபாலா' நின்று போனதுதான். அதில்தான் எனது முதல் கவிதை
  1982-ல் வெளியானது. ('பாப்பாவின் பண்புகள்' என்பது தலைப்பு.)
  ஓவியர் செல்லப்பனின் வண்ண ஓவியங்களுடன் பிரசுரமானது.//

  இந்தப் பதிவின் இணைப்பு கீழே:

  !பாப்பாவின் பண்புகள் (கவிதை)

  பதிலளிநீக்கு
 15. அம்பிகா, மாளவிகா, ஜோதிகா, கனகா, கனிகா, ராதிகா, கோபிகா போன்றோரும் நடிப்பில் சிறந்தவர்கள் என்று CERTIFY பண்ணிவிட்டீர்களே... பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்னமாதிரிதான்.

  அபுசி-தொபசி எல்லாமே நல்லா இருக்கு. அதிலும் புத்தக விமரிசனங்கள் ரொம்ப உபயோகமாயிருக்கு.

  பதிலளிநீக்கு