திங்கள், அக்டோபர் 21, 2013

வழக்கறிஞர்களின் மூன்றாவது தொழில் ( ‘அபுசி-தொபசி’-7)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் ஒருமுறை மட்டும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல் 
கேள்வி: கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் பத்திரிகைகளை வாங்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று கருணாநிதி கூறியிருக்கிறாரே? (என்.காளிதாஸ்,சிதம்பரம்)

பதில்: நியாயம் தானே? பத்திரிகைகள் நியாயத்தையும் தர்மத்தையும் எடுத்து எழுதும்போது, அது கட்சித் தொண்டர்களைச் சிந்திக்கவைத்துவிடும். போஸ்டர் ஒட்டி, கோஷம் போடுவதுடன் நில்லாமல் விழிப்படைந்து கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். இதையெல்லாம் எப்படி அனுமதிக்கமுடியும்? அதனால்தான், தி.மு.க. ஆதரவு பத்திரிகைகள் தவிர வேறு எதையும் படிக்கவேண்டாம் என்கிறார் கருணாநிதி! (நன்றி: கல்கி-27-10-2013 – தராசு பதில்கள்-பக்கம் 35)

புத்தகம்
இப்போதெல்லாம் சில வழக்கறிஞர்கள், நீதிமன்றத்திற்குப் போவதை முதலாவது தொழிலாகவும், நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினருடன் கைகலப்பதை இரண்டாவது தொழிலாகவும் வைத்துக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இன்னும்  சில வழக்கறிஞர்களோ நீதிமன்றத்திற்குப் போவதுடன்  மூன்றாவதாகவும் ஒரு தொழிலைப் பின்பற்றுகிறார்கள். அது தான், புத்தகம் எழுதுவது அல்லது பதிப்பிப்பது அல்லது இரண்டுமே.

பொன். வாசுதேவன் முதலும் மூன்றாவதும் செய்பவர். சென்னை சைதாப்பேட்டையில், அண்ணாசாலையில்,  ‘வாசன் கண் மருத்துவமனை’ அருகில், முதல்மாடியில்,  அண்மையில் இவர் தொடங்கியிருக்கும் ‘அகநாழிகை’ புத்தக நிலையம் குறுகிய காலத்தில் புகழ்பெற்றுவிட்ட ஒரு நிறுவனம்.

உயிர்மைப் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் அவரது முதல் கவிதைத்தொகுதி, ‘ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை’. முதல் தொகுதி என்ற எண்ணமே எழாதவாறு முதிர்ச்சிமிக்க கவிதைகளைத் தொகுத்தளித்திருக்கிறார், பொன். வாசுதேவன். ‘பலூன்’கவிதைகளும், ‘பிரியக்’கவிதைகளும் ‘மழைக்’கவிதைகளும் அதிகமிருந்தாலும் பசியையும் பக்குவத்தையும் வெளியிடும் கவிதைகளும் நிறைய உண்டு. மானிட உறவுகளின் நுட்பமான இழைகளைக் கொண்டு செதுக்கிய கவிதைகளும் உண்டு. என்னையும் உங்களையும் கவரும் சில கவிதைகள் இதோ:

என்ன செய்யப் போகிறீர்கள்
நிரம்பிய கோப்பையானாலும்
வழியவில்லையேவென
வருத்தம் தொக்கி நிற்கிறது.

கலயங்களில் குவித்தும்
சேர்க்காத செல்வம் குறித்த
பிரியம் விரிந்தழைக்கிறது.

சலிக்காமல் தழுவியும்
மறுபடி மறுபடி மனமேங்குகிறது
மழலைக் கொஞ்சலுக்காய்

புணர்ச்சி முடிதலின்
கடைசிக் கணங்களில்
மறக்காமல் துளிர்க்கிறது பெருங்காமம்

வற்றாத சுனையொன்றின்
நீர்சொரி காம்புகளைக்
கவ்வியபடி அடிமனதில் எப்போதும்

மிதந்து கொண்டேயிருக்கிறது தாகம்
காலம்தோறும் அப்படித்தான்
இருக்கிறதென்பதை யாரேனும்
உரக்கச் சொல்லிவிடுங்களேன்.
***
தொடர்மழை
சிறு மழை பெரு மழை
அடை மழை இடி மழை
புயல் மழையென

அடிக்கடி பெய்து கொண்டுதானிருக்கிறது
உனக்கு எனக்கு எல்லோருக்குமாக
......
பிரிக்காத பரிசு போல்
இறுக்கிய கைகளுக்குள்
நனையாமல் பத்திரமாய்
என் விரல்களை எடுத்துச்
சென்று கொண்டிருக்கிறேன் நானும்.

என்னிடம் வந்த இந்த நாள்
தாழப் பறந்தும் கையில் சிக்காத
விருப்பப் பறவையாய்
கொஞ்சமும் இரக்கமில்லாது
கடந்து செல்கிறது இந்த நாள்.

இன்னும் ஒரு கவிதையைப் பற்றிச் சொல்லியாகவேண்டும். என்ன சொல்வது என்று தான் தெரியவில்லை. மனைவியின் ‘கசிந்து வழியும் வெளிர்மார்பில்’ தாயின் சுவட்டைக் காணும் பிள்ளைமைக் கவிதையை இதற்கு முன்னால் நீங்கள் படித்திருக்க வாய்ப்பில்லை:

முலைச்சூடு
.........
ஓசையின்றிப் பிரிந்திருந்த
உன் இரவிக்கையின்
தையல் இடைவெளியில்
கசிந்து வழிகிறது உன் வெளிர் மார்பு

கண் மூடி வாய் புதைந்து
தாழ்மையோடு யாசிக்கிறேன்
உன் முலைகளின் வாசலில்

வேண்டி வேண்டி அழுதும் ஆனந்தமாயும்
என் வாயுறுஞ்சிய
தாயின் முலைச்சூடுகளை
மீட்டுப் பெற வேண்டி.

அடுத்த பத்தாண்டுகளில் தமிழின் சிறந்த கவிதைநூல்களின் பட்டியல் கணிக்கப்படும்போது அதில் தவறாமல் இடம்பெறப்போகும்  ‘ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை’ யின் 87 கவிதைகளுக்கு விலை  70 ரூபாய் தான். அதாவது ஒரு கவிதை 81 பைசா. வேறு எந்த மொழியில் இவ்வளவு மலிவாகக் கிடைக்கும் கவிதை? உடனே வாங்குங்கள்.

சினிமா
மிஷ்கின்னின் “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” நல்ல படம் என்கிறார்களே, பார்த்தீர்களா?

தொலைக்காட்சி
இந்த வாரம் டிடி-பாரதியில் 87 வயதான மூத்த வங்காளி எழுத்தாளர் மகாஸ்வேதா தேவியின் வாழ்வு பற்றிய ஆவணப்படம் பார்த்தேன். அவரது குடும்பத்தினர் மற்றும் நன்கறிந்த சில கல்வியாளர்கள் மூலம் அவரின் இலக்கியச் சிறப்பம்சங்கள் வெளிக்கொணரப்பட்டன. தனது நூல் பகுதிகள் சிலவற்றையும் அவர் வாசித்துக்காட்டினார். சாகித்ய அகாதெமி விருதும், ஞானபீட விருதும் பெற்றவர். அடித்தட்டு மக்கள், மலைசாதியினர் பற்றி அதிகம் எழுதியவர்.

டாக்காவில் பிரபல வங்காளிக் கவிஞர் மனீஷ் காட்டக்கின் மகளாகப் பிறந்தவர் மகா. சாந்திநிகேதனில் பட்டப்படிப்பும் கல்கத்தா பல்கலையில் மேற்படிப்பும் பயின்றவர். (இவரது மகன் நபருண் பட்டாச்சார்யா இப்போது வங்காளியில் பிரபல நாவலாசிரியர் ஆவார்). மகாவின் சில முக்கிய படைப்புகள்: ஹஜார் சுராஷிர் மா, அரண்யேர் அதிகார், டிட்டு மீர், என்பன. அவர் எழுதிய  ஜான்சி ராணியின் வாழ்க்கைச் சரித்திரம் ஆங்கிலம் உள்படப் பலமொழிகளில் வெளியாகியுள்ளது. அவருடைய கதைகள் திரைப்படங்களாகவும் ஆக்கப்பட்டுள்ளன: சங்கர்ஷ், ருடாலி, ஹஜார் சுராஷிர் மா, மாத்தி மாய், கங்கோர்.

 பலவருடங்களுக்கு முன் நான் தில்லியில் இருந்தபோது அடிக்கடி சந்திக்கமுடிந்த தமிழ் நாவலாசிரியையும் பின்னாளில் சென்னை வந்து தமிழ்-இந்தியா டுடேயின் இதழாசிரியராகப் பணியாற்றியவருமான வாஸந்தி அவர்கள், ஒருமுறை மகாஸ்வேதா தேவி பற்றிய தனது ஆற்றாமையைப் பின்வருமாறு கூறினார்: “அந்தம்மா எழுதினால் வங்காளத்தில் முதல் பதிப்பே பத்தாயிரம் போடுகிறார்களாம். தமிழில் யார் எழுதினாலும், இரண்டாயிரம் பிரதிகள் விற்க மூன்றாண்டுகள் ஆகிறதாமே!” இருபது வருடங்களுக்குப் பின்னாலும் நிலைமை மாறியதாகத் தெரியவில்லை. விதியே, விதியே, தமிழச் சதியை என்செயக் கருதி இருக்கின்றாயடா?

அன்றே, தினமணி(.)காமில் செய்திகளை மேய்ந்துகொண்டிருந்தபோது, ஜெயகாந்தனைப் பற்றிய குறும்(ஆவணப்)படம் நான்கு பகுதிகளாக அதில் இணைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன். அறுபது-எழுபதுகளில் உங்களைப் போலவே எனக்கும் ஆதர்ச எழுத்தாளராக இருந்தவர் ஆயிற்றே, பார்க்காமல் விடமுடியுமா? சொடுக்கினேன். கவிஞர் ரவி சுப்பிரமணியன் எடுத்த படம். பலமுறை முயன்றும் படம் திறக்கவில்லை. கடைசியாக முயன்றபோது  “for private viewing only” என்று வந்தது. பிரைவேட்டாகப் பார்ப்பதற்கு இதென்ன (அந்தக் கால) சரோஜாதேவி புத்தகமா என்று கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. எதற்கும் நீங்களும் முயன்று பார்த்துவிட்டுப் பின்னூட்டுங்களேன்!

 பத்திரிகை
உமாமகேஸ்வரி என்ற ஆசிரியை ஒரு மாணவனால் வகுப்பறையிலேயே கொல்லப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது. சுரேஷ் என்ற பொறியியல் கல்லூரி முதல்வர் மாணவர்களால் அவரது வளாகத்திலேயே கொல்லப்பட்டு சில நாட்களே ஆகின்றன. இந்நிலையில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே நல்லுறவை வளர்க்க அரிதான இரண்டு முயற்சிகளைக் கைக்கொண்டு வருகிறது, விகடன் குழுமத்து சிறுவர் இதழான ‘சுட்டி விகடன்’.

(044-66802905) என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் போதும், தினந்தோறும் ஒரு பள்ளி ஆசிரியர் நம்மோடு பேசுவார். நான் ௨௦-௧௦-௨௦௧௩ (20-10-2013) ஞாயிறு காலை மேற்படி எண்ணைத் தொடர்பு கொண்டேன்...... பென்னாகரம் – கூத்தப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியை எஸ். மைதிலி சங்கரன் பேசினார். தங்கள் ஊரில் மட்டுமே தெரியப்பட்டிருந்த சிற்றூர் ஆசிரியர்களைத் தேசீய நீரோட்டத்தில் கலக்கவைக்கும் விகடனின் பணி போற்றுதலுக்குரியது.

இரண்டாவது, நல்ல ஆசிரியர்களை இனம் காட்டுவது. இந்த இதழில் ‘கனவு ஆசிரியர்’ என்ற பெயரில் எம். ராதாகிருஷ்ணன் எழுதிய கட்டுரை, சிதம்பரம் அருகே கவரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கும் திரு பழனிவேல் அவர்களைப் பற்றியதாகும். இவரை ‘தூய்மைக்குத் தலைமை தாங்கும் ஆசிரியர்’ என்று சுட்டி-விகடன் பாராட்டுகிறது.

வகுப்பறையைத் தூய்மையாக வைத்துக்கொள்வதை வலியுறுத்தும் வகையில் சுழற்கோப்பை ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறார் பழனிவேல். அதன்படி ஒவ்வொரு மாதமும் தூய்மையான வகுப்பறை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அவ்வகுப்பு மாணவர்களுடன் புகைப்படம் எடுத்து அதை அறிவிப்புப் பலகையில் ஓட்டுகிறார். பள்ளியில் தையல் மெஷின் ஒன்று உண்டு. மாணவர்களின் சட்டையில் தையல் பிரிந்திருந்தாலோ, பொத்தான் இல்லாமல் இருந்தாலோ, உடனடியாக இத்தையல் மெஷின் இயக்கப்பட்டு குறை தீர்க்கப்படும். மாணவிகளுக்கு நாப்கின்கள் வழங்கவும் ஆசிரியைகள் மூலம் ஏற்பாடு செய்துள்ளார். மாணவர்களின் சைக்கிள்கள் பஞ்ச்சர் ஆனாலும் கவலை இல்லை. அதற்கும் காற்றடிக்கும் பம்ப், பங்ச்சர் ஓட்டும் பேஸ்ட் எல்லாம் இப்பள்ளியில் உண்டு.

இன்னும் எத்தனையோ பழனிவேல்கள் தமிழகத்தில் இருக்கக்கூடும். எதிர்வரும் நாளில் அவர்களும் சுட்டிவிகடன் மூலமோ வேறுவழிகளிலோ  வெளிப்படலாம். அவர்கள் எல்லோருக்கும் எனது முன்கூட்டிய வணக்கங்கள்!
சிரிப்பு

தில்லியில் நான் பணியாற்றிய காலத்தில் என்னைத் தனது அன்புக்கும் நட்புக்கும் உரிமையாக்கிகொண்டவர், தில்லி எழுத்தாளர், திரு. ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள். நவம்பர்-டிசம்பர் குளிர்நாட்களில் தமிழ்ச்சங்கப் பணிகள் முடிந்துவருகையில் தம் இல்லத்தில் சூடான சப்பாத்திகளுக்கும் எனக்கும் ஒரு பாசப்பிணைப்பை ஏற்படுத்திவைத்தவர். அவரது துணைவியாரின் பெயர் தான் ஆனந்தம். (அதைக் கணவரின் எழுத்துப்பெயராக்கிக்கொள்ள நிபந்தனையற்ற உரிமை வழங்கிவிட்டாராம்.)

 ‘தீபம்’ நா.பார்த்தசாரதியின் அன்புக்குப் பாத்திரமானவர் திரு ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள். சிறந்த இலக்கிய எழுத்தாளராகவும், நாடக ஆசிரியராகவும், இவ்விரண்டுக்கும் ஈடாகும் அளவுக்கு நாடக நடிகராகவும், இந்தி-ஆங்கிலம்-தமிழ் என்னும் மும்மொழிகளுக்கும் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மொழிபெயர்க்கும் ஆற்றலுடையவராகவும், விளங்குபவர். தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளியிலிருந்து கணவன் மனைவி இருவரும் ஓய்வு பெற்றுவிட்டநிலையில், தமிழ்நாட்டின் வெயில் குறைவான ஓய்வுநகரொன்றில் அமைதியை அனுபவித்துவருபவர்.

அவருடைய‘ஓசையிடும் மௌனங்கள்’ என்ற குறுநாவல் தொகுதியைப் புத்தகமாக வெளியிட நான் காரணமாக இருந்தேன் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டு. அதில் வெளியான ‘ஒரு கழுதையின் கதை’ யின் சிறு நகைச்சுவை பகுதி இதோ:

விஞ்ஞான ஆசிரியர் ஆரோக்கியசாமி. அவருடைய மாணவன், துணிவெளுக்கும் சின்னய்யன். அவரைப் பல வருடங்கள் கழித்துப் பார்க்கும்போது இருவருக்கும் நடக்கும் உரையாடல் இது:

"ஆனா சார், டவுன் ஐஸ்கோல்லே பத்துக்கிளாஸ் படிக்கிறவரைக்கும் எண்ணைத் தூக்கிப் போட்டுகிட்டே வந்தப்போ, ஏலே, நீ களுதை மேய்க்கத்தாண்டா லாயக்குன்னு நீங்க வாய்க்கு வாய் சொல்லிக்கிட்டே இருந்தது இப்போ நெசமாவே பளிச்சுப் போயிருச்சு பாத்தீங்களா?” என்று சின்னய்யன் சிரித்ததும் ஒரு கணம் ஆட்டங்கண்டுவிட்ட ஆரோக்கியசாமி சட்டென்று சமாளித்துக்கொண்டு, “ஏலே, பள்ளிக்கூடத்திலே படிச்சுக்கிட்டிருந்தப்போ நீ வெறும் உருப்படாக் கழுதைடா. உன்னைத்திருத்தி மனுஷனா மாத்தினதே நான்தாண்டா” என்று கம்பீரமாய் மழுப்பிவிட்டு, அதற்கு மேலும் அங்கே நின்று அவனுடன் விவாத்தித்துக்கொண்டிருப்பது விவேகமாகாது என்கிற உள்ளுணர்வினால் உந்தப்பட்டு லேசாய் இருமிக்கொண்டே அங்கிருந்து அகல யத்தனித்தார்.

 ஆனால் அவன் விடுகிறதாயில்லை. ‘இருங்க சார், எத்தினி நாள் கழிச்சுப் பார்த்திருக்கோம். உருப்படாக் களுதையா  இருந்த என்னை உருப்படியான மனிசனா மாத்தினது ஒரு பிரமாதமான வித்தை தான். அதே மாதிரி இந்த என்னோட அசல் களுதையையும் உங்க விஞ்ஞான விந்தையினாலே மனிசனா மாத்திக்காட்டுங்க, எனக்கு ரொம்ப உபயோகமாயிருக்கும். உங்களுக்கும் எனக்கு உதவி செஞ்ச புண்ணியங் கிடைக்கும்” என்று சர்வ சாதாரணமாய்ச் சொன்னான். அவருக்குத் தூக்கிவாரிப்போட்டது.

 இவன் விளையாடுகிறானா இல்லை, நம் தொழிலுக்குச் சவால் விடுகிறானா? என்று உடனடியாய் ஒருமுடிவுக்கு வரமுடியாமல் அவர் உளைந்தார்.....அடுத்த நாள் காலை அவன் வந்து சொல்கிறான்: “அதான் சார், இந்தக் கழுதை மட்டும் மனிசனா மாறிடுச்சுன்னா, என் கஷ்டமெல்லாம் வடிஞ்சுரும் சார். இதுவே வீட்டுக்கு வீடு போயி துணிமணிகளை வாங்கியாரும். இஸ்திரி இழுத்து மடிச்சுவெக்கும். பட்டுவாடாப் பண்ணிக் கணக்கு வளக்கையும் கவனிச்சுக்கும்...” தன் கழுதையை அவர் வீட்டுத் தூணில் கட்டிவிட்டுப் புறப்படுகிறான்.

 (விஞ்ஞான ஆசிரியரால் கழுதையை மனிதனாக ஆக்க முடிந்ததா இல்லையா என்பதை மேற்படி நூலைப் படித்து அறிவீர்களாக.)

 © Y.Chellappa
Email: chellappay@yahoo.com. Phone: 044-67453273.

14 கருத்துகள்:

 1. கவிதை புத்தகம் வாங்க வேண்டும்... நன்றி ஐயா... மற்ற அனைத்தும் தகவல்களும் அருமை... நன்றி...

  பதிலளிநீக்கு
 2. மிக்க நன்றி கவியாழி அவர்களே! தங்களின் உடனடி மதிப்பீடு உற்சாகமளிக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. மகாசுவேத தேவி அவர்களெழுதிய "ஹஜாரோம் சௌராசிக்கா மா" என்ற நாவல் கல்கத்தா கிருஷ்ண மூர்த்தியவர்களால் தமிழில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியானது !" கைதி எண் 1084 ந் தாயார்" என்ற அந்த திரைப்படத்தில் "ஜெயா பச்சன் " தாயாராக நடித்திருப்பார் ! மக்களுக்காக உழைத்த நகசலைட் இளைஞன் "1084 " நமபர் கைதி என்று ஆனதை விவரிக்கும் கதை அது ! தகவலுக்காக ! ---காஸ்யபன்.

  பதிலளிநீக்கு
 4. இதென்ன (அந்தக் கால) சரோஜாதேவி புத்தகமா என்று கொஞ்சம் எரிச்சலாக இருந்தது.

  சிரித்து விட்டேன்

  பதிலளிநீக்கு
 5. மிக்க நன்றி திரு காஷ்யபன் அவர்களே! தங்கள் தகவல்கள் மிகவும் உதவிகரமானவை.

  பதிலளிநீக்கு
 6. ஓ, உங்களுக்கும் 'அந்த' சரோஜாதேவியைத் தெரியுமா, திருப்பூர் ஜோதிஜி அவர்களே?
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. அனைத்துமே அருமை ஐயா. இருப்பினும் கனவு ஆசிரியர் என் உள்ளம் கவர்ந்தார். இவர் போன்ற ஆசிரியர்கள் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் ஊடகங்களின் பார்வைக்குத்தான் இவர்கள் தென்படாமல் இருக்கின்றார்கள். நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 8. உண்மை தான், கரந்தை ஜெயக்குமார் அவர்களே! ஆசிரியர்களில் முழுமனதோடும் அர்ப்பணிப்பு உணர்வோடும் செயல்படுகின்றவர்கள் ஊடக வெளிச்சத்தை எதிர்பார்ப்பதில்லை என்பது தெரிந்த விஷயமே!

  பதிலளிநீக்கு
 9. சுட்டி விகடனின் பணி பாராட்டத்தக்கது.
  திரு.பழனிவேல் அவர்களைப்போல் கடமையாற்றும் பல
  நல்ல நல்லாசிரியர்களை நிச்சயம் சு.வி. அடையாளம் காட்டும் என்று நம்புகிறேன்.

  விஞ்ஞான ஆசிரியரால் மாற்ற முடிந்ததா? ஆர்வமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்படி மாற்ற முடியும்? இரும்பையே தங்கமாக மாற்றமுடியவில்லையே! கழுதையை மனிதனாக மாற்றுவதாவது! விட்டுத்தள்ளுங்க கழுதையை!

   நீக்கு
 10. வணக்கம் அய்யா.
  கலக்கல் கதம்பம் அருமை. கவிதை அத்தனையும் ரசிக்க வைத்தது. நல்லதொரு கவிஞரை அறிமுகப்படுத்துயமைக்கு நன்றி அய்யா...

  பதிலளிநீக்கு