திங்கள், ஜூன் 17, 2013

நியூயார்க் நகரில் வீதியில் உறங்கும் 50,000 பேர்

(நியூயார்க் மேயர் மைக்கேல் ப்ளூம்பர்க் (Michael Bloomberg)கின் பதவிக்காலம் முடியப்போகிறது. வரப்போகும் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நகரெங்கும் ஓட்டுவேட்டைக்கு முனைந்து கொண்டிருக்கிறார்கள். இப்பின்னணியில் இன்றைய ஜூன் 17 – நியூயார்க் டைம்ஸ் தலையங்கத்திலிருந்து சில முக்கிய அம்சங்கள்.)

நியூயார்க் சென்ட்ரல் பார்க் எதிரில் சர்ச் வாசலில் உறங்கும் வீடில்லாதவர்
நேற்று இரவு நியூயார்க் நகரில் வீடில்லாமல் வீதிகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள். இதில் 21 ஆயிரம் பேர் சிறுவர்கள். 2002ல் ப்ளூம்பர்க் பதவி ஏற்றுக்கொண்ட போது இருந்ததைவிட இது மிக அதிகமான எண்ணிக்கை யாகும்.

மோசமான நிதி நிலைமை நிலவிய ரொனால்டு ரீகன் பதவிக்காலமான 80-களைவிடவும், ஏன், இதற்கு முன்னிருந்த மேயர் ருடால்ஃப் ஜூலியானி (Rudolf Giuliani) யின் பதவிக்காலத்தில் இருந்ததை விடவும் இது அதிகம்.
நியூயார்க் சென்ட்ரல் பார்க்கில் உட்கார ஆள் தேடும் பெஞ்ச் 
‘வீடில்லாதோர் கூட்டமைப்பு’ தரும் தகவல்படி, வீடில்லாதோரின் எண்ணிக்கை ப்ளூம்பர்க் பதவிக்காலத்தில் 12 சதம் உயர்ந்துள்ளது. உலகிலேயே வசதியான நகரம் நியூயார்க் என்ற பெயருக்கு இது கௌரவம் சேர்ப்பதாக இல்லை. வீடில்லாதோருக்குக் குடில்கள் வழங்குவதில் அப்போது முனைப்பாக நின்ற  ப்ளூம்பர்க், இப்போது இப்படிச் சொல்கிறார்: “வாருங்கள் நியூயார்க்கிற்கு! உங்களுடைய சொந்த விமானத்தில் வாருங்கள். சொந்த சொகுசு காரில் வாருங்கள். உங்களுக்காக வீடில்லாதோர் குடியிருப்பில் ஒரு குடில் தயாராக உள்ளது” என்கிறார். அந்த அளவுக்கு தீர்க்கமுடியாத பிரச்சினை இது என்ற வெறுப்பு வந்துவிட்டது அவருக்கு.
நியூயார்க்கில் வீடில்லை என்று பதிவு செய்துகொண்டால் அவர்களுக்கு அரசு குடில் அமைத்து தர வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. இதை பயன்படுத்திக்கொண்டு வெளியூர்க்காரர்கள் வந்து குவிந்துவிடுகிறார்கள், உள்ளூர்க்காரர்கள் தவிக்கவேண்டிவருகிறது என்று ப்ளூம்பர்க் வேதனைப்படுகிறார். இந்த சட்டத்தை வன்மையாகக் குறைகூறுகிறார்.

வீடில்லாதவர்களுக்கு இந்நகரம் ஏதாவது ஒரு குடிலில் இடம் தருகிறது தான். ஆனால் ஒரே குடிலுக்குள் ஏராளமானவர்களைத் திணித்து விடுவதோடு சரி. அதன் பிறகு  அவர்களுக்கு நிரந்தர வசிப்பிடம்  வழங்குவது பற்றிக் கவலைப்படுவதில்லை.
சிலருக்குத் தாங்களாகவே ஏதாவதொரு குடியிருப்பில் இருக்கும்படியும் அந்த வாடகை பணத்திற்கு உதவித்தொகை வழங்குவதாகவும் ப்ளூம்பர்க் அரசு சிலவருடங்கள் முன்பு கூறியது. ஆனால் அதையும் இப்போது செயல்படுத்துவதில்லை.

உண்மையான காரணம் அதல்ல, வீடிழந்தவர்களுக்கு வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக்கொடுக்கும் கடமையிலிருந்து அரசுகள் பின்வாங்கியதே என்கிறது நியூயார்க் டைம்ஸ்.

இதற்கு முன்னாலிருந்த மேயர்கள் மத்திய அரசின் உதவியைப்பெற்று இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டார்கள். ப்ளூம்பர்க் இதை செய்யத் தவறிவிட்டார். (இவர் ரிபப்ளிக்கன் கட்சியில் இருந்தவர். அதாவது ஒபாமா கட்சிக்கு எதிரானவர். இப்போது சுயேச்சை).

வீடில்லாத ஒரு குடும்பத்திற்குக் குடில் வழங்கிட  ஆண்டொன்றுக்கு 36,799 டாலர் மக்கள் வரிப்பணத்திலிருந்து செலவாகிறதாம்.

12 வருடங்களாக பதவியிலிருக்கும் ப்ளூம்பர்க்கின் பதவிக்காலம் இன்னும் ஆறு மாதங்களில் முடிகிறது. அதனால் இந்தப் பிரச்சினை அடுத்த மேயரின் தலையில் தான் விழப்போகிறது. (தான் மீண்டும் போட்டியில் இல்லை அன்று அறிவித்துவிட்டார் ப்ளூம்பர்க்).

வீடில்லாமை என்பது தனியொரு பிரச்சினை யன்று. தளர்ந்துவரும் பொருளாதாரம், தொடர்ந்து வரும் வேலையின்மை, மன நல மேம்பாட்டுக்கும் போதை மருந்து பயன்பாட்டைத் தடுப்பதற்கும் போதுமான வசதிகள் பெருகாமை, குறைந்த வாடகையில் வீடுகள் கிடைக்காமை, தனி நபரின் வருவாய்க்கு சம்பந்தமில்லாமல் உயர்ந்துகொண்டேபோகும் வீட்டு வாடகைகள் என்று பலமுனை தாக்குதலால் பாதிக்கப்படும் விஷயம் இது. உண்மையில், ப்ளூம்பர்க் கொண்டுவந்த ‘ஹோம்பேஸ் புரொக்ராம்’ வீடில்லாத 11,000 பேருக்கு நல்ல வீட்டு வசதிகளை உருவாக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இது போதுமானதா என்பதே கேள்வி.
சரி, வரப்போகும் மேயர் தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
-“புதிதாகக் கட்டடம் கட்டுவோர், அதில் ஒரு பகுதியை வீடில்லாதவர்களுக்கு முன்னுரிமையாக ஒதுக்கச் செய்வோம்”
-“குடில்களில் இருப்பவர்களைத் தாங்களாகவே வேறிடங்களுக்குச் செல்லுமாறு கூறுவோம். அவர்கள் செலுத்த நேரும் வாடகையின் பெரும்பகுதியை உதவித்தொகையாக வழங்குவோம். இதனால் 237 மில்லியன் டாலர் மிச்சப்படும். அதைக் கொண்டு புதிய குடில்கள் அமைக்கலாம்” (ஜான் லோ).

-“அனுமதி பெறாத கட்டிடங்களை முறைப்படுத்தி அவற்றை வீடில்லாதோருக்கு வாடகைக்கு ஒதுக்கி, வாடகைக்கான உதவித்தொகை வழங்கலாம். எட்டு வருடங்களில் மொத்தம் ஒரு லட்சம் குடியிருப்புகளை இவ்வாறு கொண்டுவர முடியும்”. (பில்-டி-பிளாஸியோ)

-“நடுத்தர வர்க்கத்தினருக்காக 40,000 புதிய குடியிருப்புகளை உருவாக்குவோம்”. (கிறிஸ்ட்டின் க்வின்)
“வறுமை ஒழிப்பு திட்டம்”, “சிகப்பு நாடாவை ஒழித்தல்” என்பதும் சில வேட்பாளர்களின் கூடுதலான திட்டங்கள்.

வீடில்லாதோருக்கு கைத்தொழில் பயிற்சி தருவதில் தனது “டோ ஃபண்டு” (Doe Fund) மூலம் பல வருடங்களாக இயங்கிவரும் ஜார்ஜ் மெக்டானல், இத்தகைய தொழில் பயிற்சியின் மூலமே அவர்களை வருமானமுள்ளவர்களாக ஆக்க முடியும், அது ஒன்று தான் வீடில்லாமையைத் தீர்க்கும் வழி என்கிறார். இதற்காகவே தான் மேயருக்குப் போட்டியிடப்போவதாகவும் கூறுகிறார்.

இப்படி முடிக்கிறது, டைம்ஸ்:
“நியூயார்க் நகரம் சுத்தமும் வெளிச்சமுமாக மிளிர்கிறது. வானளாவிய கட்டடங்கள் எங்கும் தென்படுகின்றன. பாதுகாப்பான பாதையில் ஓட்டுவதற்காக வாடகை சைக்கிள்களைக்  கூட  நகரசபை ஏற்பாடு செய்துள்ளது. புதுப்புது வசதிகள் வந்துள்ளன. ஆனால்  சவுத் பிராங்க்ஸிலும், ஈஸ்ட்-30 வது தெருவிலும், மற்றும் ஏழைகள் பிரதானமாக வசிக்கும் இன்னும் பல பகுதிகளிலும் என்ன நடக்கிறது என்பது உலகிற்குத் தெரியுமா? Out of Sight, Out of Mind  என்று அவர்கள் தள்ளாடித் தவிப்பதை யார் கவனிக்கப் போகிறார்கள்?"

(பின் குறிப்பு: நம்ம ஊர் மாதிரியே இருக்கிறது என்கிறீர்களா?)

3 கருத்துகள்:

  1. வியப்புதான் மேலிடுகிறது அய்யா. அங்கும் தெருவாசிகளா..

    பதிலளிநீக்கு
  2. ஐயா, நம்ப முடியவில்லை. எனினும் நம்பத்தான் வேண்டியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. வீடில்லாத அமெரிக்கர்கள் பற்றி தகவல்களால் ஆச்சரியமும் கவலையும் ஏற்படுகிறது. நல்ல கட்டுரை

    பதிலளிநீக்கு