புதன், மே 24, 2017

பட்டுப்பாய் கனவுகள்

பதிவு எண் 41/  2017
பட்டுப்பாய் கனவுகள்
-இராய செல்லப்பா

சீர்காழியிலிருந்து வரவழைப்பாராம் என் மாமனார். ஆனால் அது தயாராவதென்னவோ பத்தமடையில்தானாம். சீர்காழியில் அவர்களுடைய ஏஜென்ட்டு ஒருவர் மொத்தமாக ஆர்டர் பிடித்து அனுப்புவாராம். பத்தமடைக்காரர்கள் அதற்கேற்ப உடனடியாகத் தயார்செய்து ஒவ்வொன்றையும் ஈரம்போக உலரவைத்து பழுப்புநிறத்தாளில் சுற்றி லாரியில் அனுப்புவார்களாம். இவர் அதைப் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு பஸ் மூலம் அனுப்புவாராம். அவரும் ஒரு பாய்தான்; ஆனால் bhai !  

‘பட்டுப்பாய்’ இல்லாமல் கல்யாணம் களைகட்டுமா?

சாதாரணமாகத் தயாராகும் கோரைப்பாய்களை விட இது மிகவும் நைசாக இருக்கும். ஓரங்களில் பட்டுத் துணியை  மடித்துத் தைத்திருப்பார்கள். தைக்கப் பயன்பட்ட நூலும் பட்டுநூலாகவே இருக்கும்.   மணமேடையில் மணமக்களை உட்காரவைக்கும் பாய் என்பதால் சிறப்பான கவனத்தோடு நெய்திருப்பார்கள். மணமகன், மணமகள் பெயர்களும், திருமணத்தேதியும் பெரிய எழுத்தில் நெய்திருப்பார்கள். மணமகன் பெயர் ஒரு வண்ணத்திலும், மணமகள் பெயர் இன்னொரு வண்ணத்திலும், திருமணத்தேதி இன்னொரு வண்ணத்திலும் இருப்பது வழக்கம். வேறு மாதிரியாகவும் இருக்கலாம். கொடுத்த ஆர்டர்படி செய்து கொடுப்பார்கள். எழுத்துக்கள் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள். ஆங்கிலத்தில்தான் எழுதுவார்கள். தமிழ் எழுத்துக்களை நெய்ய அதிக நேரம் ஆகும் என்பதால் விலையும் கூடுதலாகும்.

வசதியான கட்டில் இருந்தாலும்,  முதல் இரவுக்குப் பட்டுப்பாய்தான் ஆகிவந்தது என்று தஞ்சாவூர்க்காரர்கள் நம்புவார்கள். ஆகவே என் மாமனார் மிகுந்த கவனத்தோடு ஆர்டர் கொடுப்பார். பாய் வந்து சேர்ந்தவுடன் அங்குலம் அங்குலமாகத் தடவிப் பார்த்து நெருடல் இல்லாமல் இருக்கிறதா என்று சோதிப்பாராம். (அவருக்குப் பத்துக்கு மேற்பட்ட சகோதரிகள்.)   ஒருமுறை மணமகனின் பெயரிலோ, அல்லது இனிஷியலிலோ  எழுத்துப்பிழை நேர்ந்துவிட்டதாம். அதற்காக டிரங்க்கால் புக் செய்து தயாரிப்பாளரை ஒரு பிடிபிடித்துவிட்டாராம். வாத்தியார் ஆயிற்றே! திருத்தப்பட்ட புதிய பாய் வந்துசேருவதற்குள் நிலைகொள்ளாமல் தவித்துப்போனாராம்.

எனது திருமணத்திற்கு வரவழைக்கப்பட்ட பட்டுப்பாயில் நல்லவேளையாக எந்தப் பிழையும் இல்லை. ‘சுத்தமாக வந்திருக்கிறது’ என்று என்னிடம் பெருமையாகச் சொன்னார் (திருமணத்திற்கு முன்பு). ஒரே தயாரிப்பாளரிடம்தான் இதுவரை பன்னிரண்டு திருமணங்களுக்குப் பாய் வாங்கினாராம். அவரிடம் வாங்கினால் ‘ஆகி’வரும் என்றார். அதற்குப் பொருள் என்னவென்று அப்போது தெரியவில்லை.

அந்தப் பாயை உண்மையிலேயே பட்டுப்புடைவையை விட கவனமாகக் கையாளுவார் என் மனைவி. சுருட்டிவைப்பதில் சற்றே அசிரத்தையாக இருந்தாலும் தொலைந்தேன். தனக்கே உரிய உவமைகளைச் சொல்லி வெருட்டுவார். ஆனால் என் முதல் மகள் பிறந்தவுடன் அவள் இந்தப்பாயைப் படுத்திய பாடு சொல்லிமாளாது. ஆனால் மகளைக் கோபிக்கும் வழக்கம் மனைவிகளுக்கு இல்லையே! மேலே போட்ட ரப்பர் ஷீட்டையும் மீறி ஈரமாகிவிடும் அந்தப் பாய். அதை நாசூக்காகக் கழுவி, நிழலில் உலர்த்தி எடுத்துவைக்கும் நளினம் அடடா..!

மூன்று குழந்தைகளை அந்தப் பட்டுப்பாய் பார்த்துவிட்டது. (இதுதான் ‘ஆகி’ வருதலோ?) ஆனால் அது அலுத்துக்கொண்டதே இல்லை. அதில் எப்போது படுத்தாலும் எனக்கு உடனே உறக்கம் வந்துவிடும். ஆரம்பத்தில் நல்ல நல்ல கனவுகளும் வருவதுண்டு. (பிற்பாடு நின்றுவிட்டது!)

எங்கள் சுக துக்கங்களில் தவறாமல் பங்கெடுத்துக்கொண்ட உற்ற துணை அது.

வேலைநிமித்தமாக நான் வெவ்வேறு ஊர்களுக்குப் பயணித்தபோதும் சென்னை வீட்டிலேயே அது நிரந்தரமாகத் தங்கிவிட்டது. அவ்வப்பொழுது அதை வெளியில் எடுத்துச் சற்றே வெயிலில் காட்டி மீண்டும் உள்ளேவைப்பது வழக்கமாகியது. 
  
  
இன்று அதற்கு வயதாகிவிட்டது. ஆனால் நைந்துபோகவில்லை. வண்ணம் மாறவில்லை. ஓரத்தில் தைக்கப்பட்ட பட்டுத்துணி மட்டும் நிறம் மாறியுள்ளது. கட்டில்களையே எல்லோரும் பயன்படுத்துவதால் இது சற்றே உயரமான பரணில் ஒதுங்கிவிட்டது. கடைசியாகப் பயன்படுத்திப் பல வருடங்கள் ஆகிவிட்டாலும், அதை எடுத்து வீச அவளுக்கு மனம் வரவில்லை. அதிலுள்ள எங்கள் இருவர் பெயரும் இன்னும் மெருகழியாமல் இருக்கிறதே!   ‘வயதாகிவிட்டால் என்னையும் எடுத்து வீசிவிடுவீர்களா?’ என்பாள். அந்த மாதிரி ரிஸ்க் எடுப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை என்பதற்குக் காரணம் உண்டு.


நினைத்துப்பார்க்கிறேன். மல்லிகைப்பூ, ஊதுவத்தி மணத்தோடு தனக்கே உரிய மணத்தையும் பரப்பி, அந்த (முதல்) இரவுக்கு இனிமை ஊட்டிய  பட்டுப்பாய்க்கு இப்போது நாற்பத்தொரு வருடங்கள் ஆகிவிட்டன!  (மே 24 அன்று.) ‘எப்படித்தான் இவ்வளவு காலம் உங்களோடு குப்பை கொட்டினேனோ?’ என்று ஆச்சரியப்படுகிறாள் விஜி. பட்டுப்பாய் ஆச்சரியப்படுமா என்று தெரியவில்லை. நாங்கள் இருவரும் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் அது இன்னும் பணிசெய்யத் தயாராகவே இருக்கிறது.

சென்னைக்குப் போனவுடன் வெளியில் எடுத்துப் பார்க்கவேண்டும். முடிந்தால் ஒருமுறை பயன்படுத்தியும்!

© Y Chellappa


55 கருத்துகள்:

  1. இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

    எங்கள் திருமணத்திலும் இதேபோல் எங்கள் பெயர் பொறித்த பத்தமடைப்பாய் வழங்கப்பட்டது. என் மனைவி பிறந்த ஊரே பத்தமடைதான்! ஆனால் நாங்கள் எப்போதோ தூக்கிப்போட்டு விட்டோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு சமயத்தில் ஒன்றைத்தானே தூக்கிவைத்துக்கொள்ள இயலும் நண்பரே! (பாய் அல்லது மனைவி). அமெரிக்கா செல்லும் முன்பு டாட்டா பிராட்பேண்டை ரத்து செய்துவிட்டேன். திரும்பிவந்தவுடன் ஏர்டெல் ஃபைபர் இணைப்புக்கு விண்ணப்பித்தேன். அது எட்டு நாட்களுக்குப் பிறகு இன்றுதான் வந்தது. எனவேதான் தங்களுக்குப் பதிலளிக்க இவ்வளவு தாமதமாயிற்று. மன்னிக்கவும்.

      நீக்கு
  2. திருமணதின வாழ்த்துக்கள். பத்தமடைப் பாய், நல்ல நினைவுகள்.. காலம்தான் எத்தனை வேகமாக மாறுகிறது. எனக்கும் நாங்க சம்பந்தப்பட்ட எந்தப் பொருளையும் தூரப்போட மனது வராது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூக்கிப்போடும் செயல்களில் நான் ஈடுபட்டால், என்னையே தூக்கி எறிந்துவிடுவார்கள் என்ற இயற்கையான அச்சம் எனக்குண்டு. அதனால் முயற்சிப்பதில்லை. தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  3. தம்பதியினருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்.

    கலர் போட்டோவைவிட ப்ளாக் அண்ட் ஒயிட் போட்டோவில் சூப்பராக உள்ளீர்கள். இளமை ஊஞ்சலாடும் வயதல்லவா அதனாலும் இருக்கலாம்.

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளை, 'ஊஞ்சலாடும்' என்பதை மேற்கோள்களுக்குள் போடவில்லை நீங்கள்....நன்றி!

      நீக்கு
  4. 41 ஆண்டுகள் வயதான பட்டுப்பாயைப் பற்றி சும்மா புட்டுப் புட்டு வைத்துவிட்டீர்கள்.

    தங்களின் வெளிப்படையான + நகைச்சுவையான எழுத்துகளில் அந்த பழைய பட்டுப் பாய் இன்னும் மின்னத்தான் செய்கிறது.

    இனிய மலரும் நினைவுகள். என்றும் இதே மகிழ்ச்சி நீடிக்கட்டும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் ஆசிகள் ராசி மிகுந்தவை என்று பல வாசகியர் கூறுகிறார்கள். எனவே மிக்க நன்றி!

      நீக்கு
  5. இனிய மணநாள் வாழ்த்துகள்.
    நினைவுகளோடு சம்பந்தப்பட்ட பாயாயிற்றே!
    வாக்கிங் ஸ்டிக் இன்னும் இருக்கா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாக்கிங் ஸ்டிக் உள்ளது. (மீண்டும்) காசியாத்திரை போகும்போது தேவைப்படுமே! ஆனால் எங்கள் வீட்டில் மூன்று கைத்தடிகள் உண்டு. அவற்றில் எது என்னுடையது, எது மூதாதையருடையது என்று தெரியவில்லை.

      நீக்கு
  6. இனிய மணநாளில் எல்லா நன்மைகளும் விளைவதற்கு
    எம்பிரான் அமுதகடேசருடன் அமரும் அம்பிகை அபிராமவல்லியை வேண்டிக் கொள்கிறேன்...

    நலம் என்றென்றும் வாழ்க!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா, ஆத்தாளை - எங்கள் அபிராமவல்லியை அழைத்துவிட்டீர்களே! என்றும் பதினாறு வழங்கும் இறைவியல்லவா அவள்! மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  7. அது சரி!..

    ஆகி வருவது!.. - என்ற அழகு புரிவதற்கு அத்தனை காலம் ஆயிற்றா!?..

    >>> நாங்கள் இருவரும் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும்!?.. <<<

    இது தங்களுக்கே உரித்தான கைவண்ணம்!..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாருக்கும் சொல்லி விடாதீர்கள், சில விஷயங்களில் நான் மரமண்டை! அதனால் எதுவும் எனக்கு எளிதில் 'ஆகி' வருவதில்லை.

      நீக்கு
  8. பத்தமடைப்பாய் என்று கேள்விப்பட்டிருந்தாலும் அதன் குண விசேஷங்களைப் புரிய வைத்ததற்கு நன்றி சார் இனிய மணநாள் வாழ்த்துகள் இப்போது ஆன் ட்ரான்சிட் ஆ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 23 இரவு வந்துவிட்டேன். எனவே உங்கள் பின்னூட்டங்களை இப்போதுதான் படிக்கிறேன். மிக்க நன்றி!

      நீக்கு
  9. பள்ளியில் படிக்கும்போது தென்னை மரம் தன் வரலாறு கூறுதல் என்பன போன்ற கட்டுரைகளை எழுதக்கூறுவர். அது இப்போது நினைவிற்கு வந்தது. முடிந்தால் ஒரு முறை பயன்படுத்தியும்....அருமையான சொல்லாடல்...ரசித்தேன், சற்றே அதிகமாக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பணியில் இருந்து ஓய்வுபெற்றதும் குறும்புத்தனம் வந்துவிடுகிறது பார்த்தீர்களா? தங்கள் வரவுக்கு நன்றி!

      நீக்கு
  10. எங்க ஊரு பட்டுப்பாயின் மகிமையை வாசிக்கும் போது பெருமையா இருக்கு."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாய்களை விடவும் பாவையர்கள் அன்றோ மகிமையில் பெரியவர்கள்! தங்கள் வரவுக்கு நன்றி!

      நீக்கு
  11. திருமண நாளை சுற்றி வளைத்து கொண்டு வந்து சொன்ன விதம் அருமை எமது வாழ்த்துகளும் நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'வைகை அணைகட்டு' என்பதை ஒருமாதிரியாகப் பிரித்துச் சொல்வார்களே! சுற்றிவளைப்பதே சுவைதானே! தங்கள் வரவுக்கு நன்றி!

      நீக்கு
  12. பதிவில் அந்த மரப்பாச்சிப் பொம்மைகளுக்கு என்ன வேலை. மணமக்களின் குறியீடோ

    பதிலளிநீக்கு
  13. இன்னும் பசுமையாய்
    இளமையாய் தங்கள் வீட்டிலும்
    மனதிலும் நிறைந்திருக்கும்
    பட்டுப்பாய்க் குறித்த பதிவு
    அதே மெருகுடன்..

    மனம் தொட்டப்பதிவு

    மனம் கனிந்த இனிய
    மண நாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. இனிய திருமண நாள் நல் வாழ்த்துகள். கல்யாணபட்டுப்பாய்கள் சீர்காழியில் ஆர்டர் கொடுத்து வாங்குவதுதான் எங்கள் ஊரிலும் எல்லோருக்கும் வழக்கமாக இருந்தது. ஸாதாரணமாக எல்லோரும் படுப்பதற்கும் பாய்கள்தான் இருக்கும். பிறந்தவீட்டு ஸாமான்கள், அதுவும் இம்மாதிரி பட்டுப் பாய்கள் பெண்களுக்கு பொக்கிஷம் போலத்தான் தோன்றும். அழகான நினைவுகள். இன்னும் வைத்திருப்பது எவ்வளவு கவனமிருந்திருக்கும்? எப்படித்தான் குப்பை கொட்டினேனோ? இது எல்லாப் பெண்களின் மனதில் தோன்றும் வாக்கியமே! அழகாக எண்ணங்கள் அணிவகுத்துள்ளது. அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் மேலான எண்ணங்களுக்கும் இனிய வாழ்த்துக்கும் நன்றி!

      நீக்கு
  15. எனது உளங்கனிந்த திருமணநாள் வாழ்த்துகள்! இந்த சுவாரஸ்யமான பதிவினில், அந்த பட்டுப் பாயையும் படம் பிடித்து, பதிவிலும் போட்டு இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு அமெரிக்காவில் போட்டது. பாய் இருப்பதோ சென்னையில். அதனால்தான்....!

      நீக்கு
  16. பட்டுப் பாய் - எங்கள் உள்ளங்களை
    தொட்டுவிட்டது - தங்கள்
    திருமண நாளையும் நினைவூட்டியது!
    அன்பும் பற்றும் நிறைந்த
    இல்லறமாம் நல்லறம் நிலைக்க
    நீடூழி வாழ - தங்கள்
    திருமண நாள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  17. சார்....எங்கள் மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துகள்!!

    கீதா: ....பாவம் பட்டுப் பாய் நினைத்திருக்கும்...என்னை வைத்து ஒரு பதிவையே இவர் எழுதுகிறார்...தன்னை போட்டோ எடுத்துப் போட்டுக் கொள்கிறார். இன்றைய பதிவின் கதாநாயகன்/நாயகி (நான் ரெட்டை வேடம் போடுவேன்!!!) ஆகிய என்னைப் புகைப்படம் எடுத்துப் போட்டாரில்லை..திருமண நாளாம்....மரப்பாச்சி பொம்மைகளைப் படம் எடுத்துப் போட்டிருக்கிறார் ஸிம்பாலிக்காக!!??? ஆனால், பொக்கிஷம் "ஆகி" வந்த பாய் என்றெல்லாம் சொல்லிவிட்டு என்னைப் போடவில்லை பாருங்கள்!!..இவரை என்ன செய்யலாம் சொல்லுங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் பாய்க்கும் இடையில் பசிபிக் பெருங்கடல் வந்துவிட்டதே! படம் கைவசம் இல்லையே!

      நீக்கு
  18. சரி பாய் பாதுகாக்கப்படுகிறது.....காசியாத்திரை வாக்கிங்க் ஸ்டிக்? குடை? விசிறி??? இவையெல்லாம் பொக்கிஷம் இல்லையோ...!!!!?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த எல்லாப் பொக்கிஷங்களும் இன்னும்உண்டு. ஆனால் சற்றே உருச் சிதைந்திருக்கலாம். விடுங்கள்- வயதாகிவிட்டது. அவைகளுக்கு!

      நீக்கு
  19. //சென்னைக்குப் போனவுடன் வெளியில் எடுத்துப் பார்க்கவேண்டும். முடிந்தால் ஒருமுறை பயன்படுத்தியும்!//

    சென்னைக்கு செளகர்யமாக வந்து சேர்ந்தீர்களா?
    பட்டுப்பாயை வெளியே எடுத்துப் பார்த்தீர்களா?
    அதை விரித்துப் படுத்து பயன் படுத்தீர்களா?

    என்று அறிய மிகவும் ஆவலுடன்.

    //மூன்று குழந்தைகளை அந்தப் பட்டுப்பாய் பார்த்துவிட்டது. (இதுதான் ‘ஆகி’ வருதலோ?)//

    இப்போதும் ஒருவேளை ’ஆகி’ வருமோ ? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோபு சார், ப்ரம்மசாரி, க்ருஹஸ்தன்,... என்று அடுத்தடுத்த ஸ்டேஜுக்குச் சென்றவரை, மீண்டும் முந்தின ஸ்டேஜுக்கு இழுக்கறீங்களே. ஞாயமா?

      நீக்கு
    2. எத்தனை வயதானாலும், அடுத்த எந்தெந்த ஸ்டேஜுகளுக்கு செல்வதாக சொல்லிக் கொண்டு நாம் ஊரை ஏமாற்றி வந்தாலும், நம் மனம் ஆகிய குரங்கு அவ்வப்போது மேலேயும் கீழேயும் தாவத்தான் தாவுமாக்கும்.

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா .... இதிலெல்லாம் மிகுந்த அனுபவஸ்தனான நான் சொல்லும் இதனை, யாராலும் மனஸார மறுக்கவே முடியாதாக்கும். :)))))))))))))))

      நீக்கு
    3. இல்லைனு சொன்னா பொய் சொல்றமாதிரி ஆயிடும். ஆமாம்னு சொன்னா வம்பு. என்ன பதில் சொல்லட்டும் உங்களுக்கு கோபு சார்.

      மனம் எப்போதும் குரங்குதான். நிலையாக இருக்காது.

      நீக்கு
    4. அடிக்கடி இம்மாதிரி நீங்கள் இரண்டுபேரும் என் பதிவில் வந்து நிறைய பின்னூட்டம் போட்டால் என் தமிழ்மணம் ரேன்க் எகிறிப்போகுமே! செய்வீர்களா, செய்வீர்களா?

      நீக்கு
  20. iniya mananaal vaazththukaL Chellappa sir. ungka ebooks veliyanathukkum vaazththukkaL. :)

    பதிலளிநீக்கு
  21. தாமதமாக வாழ்த்தினாலும் மனம் நிறைந்து வாழ்த்துக்கிறேன்! இனிய மண நாள் வாழ்த்துக்கள்!

    மண நாட்களின் வசந்த கால நினைவலைகளை அவ்வப்போது மீட்டுக்கொடுக்கும் அந்த பட்டுப்பாயை விடவும் வேறு பொக்கிஷம் தேவையில்லை!

    பதிலளிநீக்கு
  22. அருமையான மலரும் நினைவுகள். அன்றும் இன்றும் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  23. அடடா! பார்க்கத் தவறி விட்டேனே. இனி மறக்க மாட்டேன். ஏன்னா என் பெண்ணின் பிறந்த நாள் மே 24.

    இருந்தாலும் இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்.

    பாய் புராணம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் தங்கள் பெண்ணிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

      நீக்கு