செவ்வாய், மார்ச் 21, 2017

இளையராஜாவின் மாபெரும் தவறு

பதிவு எண்  21/2017
 இளையராஜாவின் மாபெரும் தவறு
-இராய செல்லப்பா

இளையராஜா தரப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், இனிமேல் அவருடைய பாடல்களைப் பாடப்போவதில்லை என எஸ்.பி.பி அறிவிப்பு

கடந்த இரண்டு நாட்களாகச் செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தி இதுதான். இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து தமிழ்த் திரையுலகுக்கு ஏராளமான இனிய பாடல்களை வழங்கியுள்ளனர்.
Picture courtesy: the Net
எஸ்.பி.பி. திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து SPB-5 என்ற பெயரில் இசை  நிகழ்ச்சி நடத்தி வருகிறார். தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்:

அமெரிக்காவிலிருந்து அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். சியாட்டெல், லாஸ் ஏஞ்சலஸ் மாகாணங்களில் கடந்த வாரம் மிகச் சிறப்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். தாங்கள் காட்டிய அன்புக்கு நன்றி.

இரண்டு நாட்களுக்கு முன்னதாக இளையராஜாவின் சார்பில் வழக்கறிஞர் ஒருவர் எனக்கு சட்ட நோட்டீஸ்களை அனுப்பியிருந்தார்.

என்னுடன் பாடகி சித்ரா, சரண், விழா ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கச்சேரி நடைபெறும் இடங்களின் நிர்வாகத்துக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தன.

அதில், இளையராஜாவிடம் முன் அனுமதி பெறாமல் அவருடைய பாடல்களை இசைத்தால், மேடைகளில் பாடினால், அது காப்புரிமை மீறலாகும். அவ்வாறான உரிமை மீறலுக்குப் பெருந்தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டியிருக்கும். சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எஸ்பிபி 50 என்ற இந்த நிகழ்ச்சி எனது மகனால் தயாரிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் டொரண்டோவில் இந்நிகழ்ச்சியை துவக்கினோம். பின்னர் ரஷ்யா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபய் ஆகிய நாடுகளிலும் இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் இந்த நிகழ்ச்சியை நடத்தினோம். அப்போதெல்லாம் இளையராஜாவிடமிருந்து எனக்கு எவ்வித எதிர்ப்பும் வரவில்லை. ஆனால், இப்போது அமெரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதும் மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு என்பது எனக்குப் புரியவில்லை.

ஏற்கெனவே கூறியதுபோல், எனக்கு இச்சட்டம் குறித்து தெரியாது. இருந்தாலும் சட்டத்தை மதிக்க வேண்டியது எனது கடமை. இனி மேடைகளில் இளையராஜாவின் பாடல்களைப் பாடப்போவதில்லை. அதே வேளையில், ஏற்கெனவே ஒப்புக் கொண்டதுபோல் நிகழ்ச்சியையும் நடத்தியாக வேண்டும். இறைவன் அருளால் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களையும் நான் அதிகளவில் பாடியிருக்கிறேன். நீங்கள் அனைவரும் எனது நிகழ்ச்சிக்கு ஆதரவு அளிப்பீர்கள் என நம்புகிறேன்.

உங்கள் பேரன்புக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

இத்தருணத்தில், எனது வேண்டுகோள் எல்லாம் இப்பிரச்சினை தொடர்பாக எவ்வித கடுமையான வாதங்களையும் கருத்துகளையும் முன்வைக்க வேண்டாம் என்பது மட்டுமே. இது கடவுளின் கட்டளை என்றால் அதை நான் பணிவுடன் கடைபிடிப்பேன்.

பல்வேறு வெற்றி பாடல்களைக் கொடுத்த இளையராஜா- எஸ்.பி.பி. கூட்டணியில் தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் பிரிவினையால் இசை ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

****
இது பற்றிக் கவிஞர் தாமரை கூறுவதைப் பார்ப்போமா?

திருத்தப்பட்ட காப்பிரைட் சட்டத்தின்படி இப்போதுள்ள சட்ட நிலைமையைக் கவிஞர் தாமரை ஒரு முகநூல் பின்னூட்டத்தில் இப்படிச் சுட்டிக் காட்டியுள்ளார்: ‘ஒரு பாடலின் வருமானத்தில் தயாரிப்பாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் ஆகிய மூவருக்கு மட்டுமே காப்பிரைட் சட்டத்தின்படி பங்கு உண்டு: ஆளுக்கு மூன்றில் ஒரு பங்கு’.
அதாவது, இந்த மூவரைத் தவிர மற்றவர்களுக்கு உரிமை கிடையாது.
குறிப்பாக, திரைப் பாடகருக்கு, தான்  பாடிய திரைப்படலின் மீது காப்பிரைட் கிடையாது. ஏனெனில் அந்தப்பாடலைப் பாடுவதற்கு அவர் ஏற்கெனவே சம்பளம் வாங்கியாகிவிட்டது. பாடும்போது தன் குரலைப்  பயன்படுத்திப் பாடியதற்குத்தான் சம்பளம் கொடுக்கப்பட்டது. அத்துடன் அவரது உரிமை முடிந்துவிட்டது. (His rights became extinguished.) ‘எனக்கே உரிய தனிப் பாணியில் பாடினேன், ஆகவேதான் பாடல் சிறப்பாக வந்தது, நான் பாடவில்லை என்றால், இளையாராஜாவே தன் சொந்தக்குரலில் அப்பாடலைப் பாடியிருந்தால், அப்பாடல் பிரபலம் அடைந்திருக்குமா? எனவே, ஒரு பாடலைப் பிரபலப்படுத்துபவன் பாடகன் தான். அவனுக்கு காப்பிரைட்டில் பங்கு உண்டு’ என்று வாதாடுவதற்குச் சட்டத்தில் இடமில்லை.  இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இதுவே நிலை. ஆகவேதான் எஸ்.பி.பி. தன் ரசிகர்களைப் பொறுமை காக்குமாறு கூறியிருக்கிறார். இளையராஜாவின் மீது கடுமையான வார்த்தைகளைப் பிரயோகிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். 

தான் இசையமைத்த பாடல்களைத் தன்னுடைய அனுமதியின்றிப் பாடுவதற்கு, சம்பந்தப்பட்ட பாடகர்களுக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை என்று இளையராஜா சொன்னால், அவரை ஏதோ மாபெரும் தவறு செய்துவிட்டவர் மாதிரி  முகநூலிலும் வாட்சப்பிலும் நமது வழக்கமான அரைகுறை ஆசாமிகள் வாங்குவாங்குவென்று வாங்குவதில் எந்த அர்த்தமும் கிடையாது. சட்டம் என்ன சொல்கிறதோ அதைத்தான் இளையராஜா சொல்லியிருக்கிறார். அவரை எதிர்த்து எந்தப் பாடகர் எந்தக் கோர்ட்டுக்குச் சென்றாலும்- குமாரசாமியே நீதிபதியாக இருந்தாலும்- அது செல்லாது என்பது தெளிவு.

கும்பலோடு கோவிந்தாவாக, இன்னொரு சினிமாக் கவிஞரான மதன் கார்க்கி (வைரமுத்துவின் மகன்), இதுதான் சாக்கு என்று இளையராஜா மீது இன்னொரு குற்றச்சாட்டை வைக்கிறார்.  பாடலின் காப்பிரைட்டுக்கு அந்த மூவர்தானே சொந்தம், அப்படியானால் பாடலாசிரியருக்கு உரிய காப்பிரைட் பங்குப் பணத்தை இளையராஜா கொடுத்திருக்கிறாரா என்கிறார். அதாவது, வைரமுத்துவுக்கு வரவேண்டிய பங்குத்தொகை இன்னும் இளையராஜாவிடமே இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம். இது சரி என்றால், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மீது சுற்றம் சாட்டும் இளையராஜா, தன்மீதுள்ள குற்றத்தை உடனே களைய முற்படவேண்டும். 

வைரமுத்துவுக்கும், முத்துலிங்கத்துக்கும் தராவிட்டாலும் பரவாயில்லை, அமரராகிவிட்ட வாலிக்கும், நா.முத்துக்குமாருக்கும் மட்டுமாவது பாக்கியைத் தீர்த்துவிடவேண்டும். அதுதான் சட்டப்படி சரியான நடவடிக்கை. ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்கின்.. என்கிறார் வள்ளுவர். அவரும் பாவம், ராயல்டி வாங்காமலே போய்விட்டவர்தானே!
****
சூலமங்கலம் சகோதரிகளின் வழக்கு(1999)

கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் ஆகிய இரண்டு பக்திப் பாடல்களையும்  முதன்முதலில் இசையமைத்துப் பாடி மக்களிடையே பரப்பியவர்கள் சூலமங்கலம் சகோதரிகள் என்று அழைக்கப்படும் ராஜலட்சுமி, ஜெயலட்சுமி. ஆவர். இப்பாடல்கள் முதலில் இசைத்தட்டுக்களாகவும்,  பிறகு கேசட்டுகளாகவும், பிறகு சி.டி.க்களாகவும் HMV என்றழைக்கப்படும் ‘கிராமபோன் கம்பெனி ஆஃப் இந்தியா’வினால் வெளியிடப்பட்டு, 1975 முதல் இன்றுவரை, உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்து வந்துள்ளன. இன்றும், காலையில் திருப்பதி வேங்கடவனின் சுப்ரபாதமும், சூலமங்கலத்தின் கந்த சஷ்டி கவசமும் ஒலிக்காத பயண வண்டிகள் கிடையாது. அன்றாடம்  குறிப்பிட்ட நேரத்தில் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் சூலமங்கலம் ஒலிக்காத நாளே இல்லை எனலாம்.

நல்ல பொருள் ஒன்று வந்தால், உடனே போலிகளும் வருவதுதானே இயற்கை! சூலமங்கலம் சகோதரிகளின் படத்தை மேலுறையில் போட்டு, அவர்கள் பாடியதை  அப்படியே பிரதி எடுத்து,  போலியான சி.டி.க்களைச் சில நிறுவனங்கள் தயாரித்துக் கடைகளில் விற்பனை செய்யலாயினர்.

வேறு சில நிறுவனங்களோ, சூலமங்கலம் பாடிய அதே ராகம் மற்றும் பின்னணி இசையில், வேறு பாடகிகளைப் பாடவைத்து, மேலுறை மட்டும் HMVயில் உள்ள மாதிரியே சூலமங்கலத்தின் படத்தைப் போட்டு விற்பனை செய்தனர். உள்ள பாடியிருப்பது வேறுநபர்கள் என்ற தகவல் மேலுறையில் வெளியிடப்படவில்லை.

இசைத்தட்டுக்களைப் பொறுத்தவரையில் மிகவும் விலை குறைந்த காசெட்டுகளும், சி.டி.க்களும்தான் அதிகம் விற்பனையாகும். உதாரணமாக, HMV-இன் சி.டி. 22 ரூபாய்க்கு விற்றபோது, போலி சிடிக்கள் பத்து ரூபாய்க்கே கிடைத்தன. இதனால் பெருத்த இழப்புக்கு ஆளான சூலமங்கலமும், HMVயும் அந்தப் போலி  நிறுவனங்களைக் கையும் களவுமாகப் பிடித்து வழக்குத்  தொடர்ந்தனர். (ராஜலட்சுமி முன்பே காலமாகிவிட்டதால், அவர் சார்பாகவும் தன் சார்பாகவும்)  ஜெயலட்சுமி இசையமைப்பாளர் என்ற முறையிலும்,  HMV நிறுவனம் தயாரிப்பாளர் என்ற முறையிலும் இந்த வழக்கைத் தொடர்ந்தார்கள்.

இந்த வழக்கில் இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் ஆகிய மூவருக்குமான காப்பிரைட் சட்டம் பற்றிய ஆழமான விவாதம் நடைபெற்றது.

போலிகளை வெளியிட்ட நிறுவனங்கள் பின்வரும் வாதத்தை முன்வைத்தன:

1. சி.டி.யின் ஒரு பக்கம் கந்த சஷ்டி கவசமும் மறுபக்கம் கந்த குரு கவசமும் பாடப்பட்டுள்ளன. இவற்றில், கந்த சஷ்டி கவசம் இயற்றியவர் தேவராய சுவாமிகள். பல ஆண்டுகளாக மக்களின் செவிவழியே பாடப்பட்டுவரும் பக்திப்பாடல் இது. அவர் துறவி. மறைந்தும் விட்டார். எனவே இப்பாடல், சூலமங்கலத்தின் காப்பிரைட் ஆக முடியாது.

2. மறுபக்கத்தில் இடம் பெற்றுள்ள கந்த குரு கவசம், புதுக்கோட்டை சாந்தானந்த சுவாமிகள் இயற்றியது. அவர் ஒரு துறவி. பாடலோ பக்திப்பாடல். உலகையே துறந்துவிட்ட ஒருவருக்கு அவரே எழுதிய பாடலின் மீது மட்டும் எப்படி உரிமை இருக்கமுடியும்? எனவே இப்பாடல் அனைவருக்கும் உரிமை உள்ளதாகவே கருதவேண்டும். இந்தப் பாடலுக்கும் சூலமங்கலம் காப்பிரைட் கோர முடியாது.

3. மேற்படி இரண்டு பாடல்களுக்கும் தானே மெட்டமைத்துப் பாடியிருப்பதால் அவற்றின் காப்பிரைட் தனக்கு வரும் என்று அவர் கோரமுடியாது. ஏனெனில், அவர் பயன்படுத்தியிருப்பது, கர்நாடக இசையின் ராகம், தாளம் போன்றவை.  பல்லாயிரம் ஆண்டுகளாக இலவசமாக இருந்து வருபவை.

சூலமங்கலம் சார்பில் கொடுக்கப்பட்ட வாதம் இது:

1. கந்த சஷ்டி கவசம் என்ற பாடல் மீதல்ல, பாடலுக்கு அமைத்த இசையின்மீதுதான் உரிமை கோருகிறோம்.

2. கந்த குரு கவசம் என்ற பாடலின் மீது எங்களுக்கு உரிமை உண்டு. ஏனெனில், சாந்தானந்த சுவாமிகள் எங்களை அழைத்து, அப்பாடலைப் பிரபலப்படுத்துமாறு கேட்டுக்கொண்டு, அப்பாடலின் உரிமையை எங்களுக்கு ஒப்பந்தம் மூலம் அளித்துள்ளார். அதன் பேரில் இசையமைத்துப் பாடியுள்ளோம். எனவே, பாடல், இசை இரண்டுக்கும் எங்களுக்கு முழு உரிமையுள்ளது.

3. நாங்கள் தமிழ்ச் சமூகத்தில் பிரபலமான பாடகிகள். அதன் காரணமாகவே, நாங்கள் இசையமைத்துக் கொடுத்த மேற்படி இரண்டு பாடல்களையும் HMV நிறுவனம் வெளியிட ஒப்புக்கொண்டது. இதற்கான எழுத்துமூலமான ஒப்பந்தம் உள்ளது. எனவே, மேற்படி இரண்டு பாடல்களையும் ஒரே இசைத்தட்டாகவோ, கேசட்டாகவோ வேறு வடிவிலோ வெளிடும் உரிமையை  HMVக்கு மட்டுமே வழங்கியிருக்கிறோம்.

இந்த வழக்கை மிகுந்த ஆர்வமுடன் விசாரித்தார் நீதிபதி கற்பகவிநாயகம் அவர்கள். (தம்பி முருகனின் பாடல் வழக்கை அண்ணன் (கற்பக) விநாயகம் விசாரிப்பது எவ்வளவு பொருத்தம் பாருங்கள்!) 

போலி நிறுவனங்கள் வெளிட்ட சிடிக்களையும், சூலமங்கலத்தின் மூல சிடியையும் தனித்தனியே கவனமுடன் கேட்டுக்கொண்ட நீதிபதி, சூலமங்கலம் -HMV சிடி யின் நகல்தான் இப்போலி நிறுவனங்கள் வெளியிட்டிருப்பது என்று முடிவு செய்தார். மேற்கொண்டு அவர்கள் இம்மாதிரி போலித் தயாரிப்புகளை வெளியிடத் தடை உத்தரவு பிறப்பித்தார். கந்த சஷ்டி கவசம்-கந்தகுரு கவசம் இசைத்தட்டின் காப்பிரைட் HMV-சூலமங்கலம் இவர்களுக்கு  மட்டுமே உண்டு என்றும் தீர்ப்பளித்தார்.

இத்தீர்ப்பின்போது காப்பிரைட் சட்டத்தின் பல பிரிவுகளை அவர் விளக்கமாக ஆராய்ந்தார்.

இந்திய காப்பிரைட் சட்டம் 1957 பிரிவு 2 (p) யில் இசை அமைப்பு -Musical Work என்றால் என்ன என்று வரையறுக்கப்பட்டுள்ளது: அது இசையின் எந்த வடிவமாகவும் இருக்கலாம், இசைக்குறிப்புக்களும் (notations) அதில் அடங்கும். ஆனால் இசைக்கான எழுத்துவரிகளோ (lyrics), எப்படி இசைக்கவேண்டும் என்பதற்கான வழிமுறைகளோ அதற்குள் அடங்காது.
பிரிவு 2(d) இல் ஆக்கியோன்/இயற்றியவன் -Author என்பதற்கான வரையறை தரப்பட்டு உள்ளது.
(i) இலக்கியம், நாடகம் எனில், அதை எழுதியவனே, ஆக்கியோன் ஆகிறான்.
(ii) இசை அமைப்பு (Musical work) எனில், இசைத்தொகுப்பாளனே (Composer) அதன் ஆக்கியோன் ஆகிறான்.
இசைத்தொகுப்பாளன் -Composer -என்பதன் வரையறையை, பிரிவு 2(ffa) தருகிறது: இசையைத் தொகுப்பவன்  யாரோ அவனே இசைத்தொகுப்பாளன். (அதாவது மெட்டமைத்து, பாடக்கூடிய விதத்தில் உருவாக்கம் செய்பவன்.) அந்த இசையை அவனேயோ அல்லது வேறு யாரோ பதிவு (record) செய்திருக்கலாம் அல்லது இசைக்குறிப்புக்கள் (notations) எழுதியிருக்கலாம்.

எந்தெந்த ஆக்கங்களுக்கு காப்பிரைட் சட்டம் அமலாகும் என்பதைப் பிரிவு 13(i) கூறுகிறது. முதல்முறையாக ஆக்கப்பட்ட இலக்கியம், நாடகம், இசை, மற்றும் கலை சம்பந்தமான ‘ஆக்கங்கள்’ -works- அனைத்திற்கும்- இந்தியா முழுமைக்கும்- இந்தச் சட்டம் பொருந்தும் என்கிறது.

எல்லாம் சரி, காப்பிரைட் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம், என்ன வரையறை? அதைப் பிரிவு 14 கூறுகிறது.

14 (a) இலக்கியம், நாடகம், இசை, மற்றும் கலை சம்பந்தமான ‘ஆக்கங்களை’ -works-பொறுத்தவரை, காப்பிரைட் என்றால் மேற்படி ஆக்கங்களில் முழுதாகவோ, அல்லது ஏதேனும் ஒரு பகுதிக்கோ,  கீழ்க்கண்ட செயல்களை (தானே) செய்யவும் அல்லது செய்யுமாறு (மற்றவர்களுக்கு) உத்தரவிடவுமான விசேஷ உரிமையாகும் (exclusive right):
(i) அந்த ஆக்கத்தைப் பிரதி எடுப்பது (reproduction); மின்மயமான (electronic) அல்லது வேறொரு ஊடகத்தில் சேமித்துவைப்பது.(storing).
(iv) அந்த ஆக்கத்தையோ, அல்லது அதன் பகுதியையோ, திரைப்படமாக்குதல் அல்லது ஒலிப்பதிவு (sound record) செய்தல்.

14 (e) ஒலிப்பதிவு செய்வதானால்:
 (i) original ஒலிப்பதிவுடன் வேறெந்த (பின்னணி முதலிய) ஒலிப்பதிவுகளைக் கலத்தல்.
 (iii) அப்படிச் செய்த ஒலிப்பதிவை மக்களுக்கு வெளியிடல்.

காப்பிரைட்டின் உரிமையாளர் யார் என்பதை இன்னும் வரையறுக்கவில்லையே! அதைப் பிரிவு 17 செய்கிறது. முன்னர் பிரிவு 2(d) இல் ‘author’ -ஆக்கியோன்- என்பதை வரையறுத்தோம் அல்லவா, அந்த ஆக்கியோனைத்தான் காப்பிரைட்டின் முதல் உரிமையாளன் -First Owner of Copyright - என்று பிரிவு 17 சொல்கிறது.

(முதல் உரிமையாளனிடமிருந்து முறையாக ஒப்பந்தம்செய்து கொண்டு இன்னொருவன் அந்த உரிமையைப் பெறலாம். அப்போது அவன் இரண்டாவது உரிமையாளன் என்று அழைக்கப்படுவான்.)

இனி வருவதை முக்கியமாகக் கவனியுங்கள்.

ஒரு நிறுவனத்தில் நீங்கள் சம்பளம் வாங்கும் பணியாளராக இருக்கிறீர்கள். அப்போது அந்த நிறுவனம் சொன்னதற்கேற்ப, நீங்கள் எந்த work - even creative work - செய்தாலும், அதன் மீது உங்களுக்கு காப்பிரைட் கிடையாது. அந்த நிறுவனத்திற்கு மட்டுமே உண்டு. உங்கள் நிறுவனத்திற்காக ஓர் ஆவணப்படம் எடுக்கலாம், அல்லது, கையேடுகள் அல்லது செய்தி -இதழ்கள் கொண்டுவரலாம், அல்லது நிறுவன ஆண்டுவிழாவில் புதிய நாடகம் ஒன்றை அவர்களுக்காக நடத்திக் கொடுக்கலாம். அவை எதிலும் உங்களுக்கு காப்பிரைட் கிடையாது.

பத்திரிகைகளில்- உதாரணமாக குமுதத்தில்,  உங்கள் கதை  வெளியாகிறது என்றால், அவர்கள் வெளியிட்டபின்,  அதையே இன்னொரு பத்திரிகைக்கு வெளியிடக் கொடுப்பதற்கான  காப்பிரைட் உங்களுக்கு கிடையாது. குமுதத்திற்கு மட்டுமே உண்டு. ஆனால், மேற்படி கதைக்கு சன்மானம் ஏதும் பெறவில்லை என்றால்  உங்களுக்கே காப்பிரைட் சொந்தம். (பிறகு எப்போதாவது புத்தகமாக வெளியிடும்போது, வடிவ மாற்றம் பெறுவதால் அவர்களிடம் அனுமதி பெற வேண்டியதில்லை.)

ஜூனியர் சிங்கர் போட்டிக்காக ஒரு புதிய பாட்டை  அவர்கள் மேடையில் நீங்கள் அரங்கேற்றினால், அதற்குப் பரிசு கிடைக்கவில்லை என்றாலும் அவர்களுக்கே விடியோ-காப்பிரைட் சொந்தம். அவர்களின் அனுமதி பெறாமல் நீங்கள் அதை யூடியூபில் வெளியிடமுடியாது. ஆனால் அதை ஒரு திரைப்படத்தில் பயன்படுத்த நீங்கள் விற்கலாம். அந்த உரிமை உங்களுக்குத்தான் உண்டு.

உங்களுடைய காப்பிரைட் உரிமையை மற்றவர்களுக்கு மாற்றிக்கொடுப்பது பற்றி பிரிவு 18 கூறுகிறது.

காப்பிரைட் உரிமை உள்ள ஒருவர், தனது உரிமையை முழுதுமாகவோ, அல்லது ஒரு பகுதியையோ, ஒருவருக்கோ அல்லது பலருக்கோ, நிபந்தனை இன்றியோ அல்லது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டோ, காப்பிரைட் காலம் முழுதிற்குமோ அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமோ, மாற்றிக்கொடுக்கலாம். (assignment of right).

இனி, காப்பிரைட் என்பது எவ்வளவு வருடங்களுக்குச் செல்லுபடியாகும் என்று பார்க்கலாம்.

பிரிவு 22 : இலக்கியம், நாடகம், இசை, மற்றும் கலை சம்பந்தமான ‘ஆக்கங்களைப் பொறுத்தவரை, அவை, ஆக்கியோன் உயிருடன் இருக்கும்போதே வெளியிடப்பட்டிருந்தால், அவர் இறந்து அறுபது வருடங்கள் வரை அதற்கான காப்பிரைட் உரிமையானது, அவரிடமே இருக்கும். (அதன் பிறகு பொதுவுடைமையாகிவிடும்.)  

பிரிவு 27: ஒலிப்பதிவுகளை (sound recording)  பொறுத்தவரையில், 
அவையும் வெளியிடப்பட்டு அறுபது ஆண்டுகள் வரை இருக்கும்.

(ஒரு சந்தேகம் எழலாம்: நாவலாசிரியர் இறந்தபிறகு ஒரு நாவல் வெளிவந்தால் அதற்கு எவ்வளவு காலம் காப்பிரைட் இருக்கும்? இதற்குப் பதிலளிப்பது  சுலபமே: ஆக்கியவர் இறந்துவிட்டால், அவரது வாரிசுகள் அல்லவா காப்பிரைட் உடையவர்கள்? ஆகவே, அவர்கள் இறந்த பின் 6 ஆண்டுகள் வரை காப்பிரைட் இருக்கும்.)

(ஒரு புதிர்: பொன்னியின் செல்வனை இப்போது பலர் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் காப்பிரைட் எவ்வளவு காலம்?  

பூஜ்ஜியம். ஏனெனில், அது நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல். யாருக்கும் 
காப்பிரைட் கிடையாது. அரசுக்கு மட்டுமே உண்டு. அனுமதி பெற்று யார் வேண்டுமானாலும் வெளியிட்டுக்கொண்டே இருக்கலாம்.)
****
மேற்படி பிரிவுகளை விவரமாக ஆராய்ந்த பின்னர் நீதிபதி சொல்கிறார்:

1. இசைத் தொகுப்பாளன் - கம்போசர் - தான் ஒரு பாடலின் காப்பிரைட் உரிமையாளன் என்று தெளிவாகிறது. சூலமங்கலம் சகோதரிகள் தான் காப்பிரைட் உடையவர்கள். எனவே அப்பாடலை சிடி யாக வெளியிடும்படி HMV க்கு உத்தரவிட அவரகளுக்கு காப்பிரைட் சட்டம் அனுமதிக்கிறது. எனவே, சூலமங்கலமும் HMVயும் தான் கந்தசஷ்டி-கந்தகுரு கவசம் இசைத்தொகுப்புக்கு காப்பிரைட் உடையவர்கள். மற்றவர்கள் அல்லர்.

2. கந்த சஷ்டி கவசம் மீது யாருக்கும் தனிஉரிமை கிடையாது. அது பல்லாண்டுகளாகப் பாடப்பட்டு வரும் பக்தி இலக்கியம். ஆனால், கந்த குரு கவசம், அதை ஆக்கியவரால், அப்பாடலை இசையமைத்துப் பாடிப் பிரபலப்படுத்துமாறு,  சட்டப்படி சூலமங்கலத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. (assigned.) அவர் துறவி என்பதால், இலக்கியப் படைப்பாளிக்குள்ள காப்பிரைட்டை அவருக்கு இல்லை என்று சொல்ல சட்டத்தில் வழியில்லை.

3. பிரதிவாதிகளின் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள சிடிக்களை நான் கேட்டேன். அவற்றின் மேலுறைகளையும் பார்த்தேன். அவை சூலமங்கலம்-HMV-யின் படைப்பை நகல் எடுத்தவாறு போலியாக உருவாக்கப்பட்டுள்ளன என்ற முடிவுக்கு வருகிறேன். பிரதிவாதிகளின் வாதங்களும் தவறானவையாகவும் பொய்யானவையாகவும் இருக்கின்றன.  
எனவே, கந்தசஷ்டி கவசம் மற்றும் கந்தகுரு கவசம் ஆகிய இரண்டு இசைப் படைப்புகளுக்கும் காப்பிரைட் சூலமங்கலம் சகோதரிகளுக்கே உரியது என்று தீர்ப்பளிக்கிறேன்.

சூலமங்கலம் ராஜலட்சுமி vs மெட்டா மியூசிக்கல்ஸ், சென்னை
(AIR 2000 Mad 454 – Bench: M. Karpagavinayagam – Date of Judgement: 16 June, 2000)
****
எனவே, வேறு யாரும் அவற்றைப் பயன்படுத்துவதானால் சூலமங்கலத்தின் அனுமதியோடுதான் பயன்படுத்தமுடியும் என்று தெளிவாகிறது. 

அதேபோல், இளையராஜாவின் இசையமைப்புகளை வேறு யாரும் பயன்படுத்துவதானால், இளையராஜாவின் அனுமதியைப் பெற்றே பயன்படுத்தவேண்டும் என்பது தெளிவாகிறது.  எஸ். பி. பி. அவரது இனிய நண்பராக இருக்கலாம், ஆனால் சட்டத்தின்படி தான் அவரும் நடந்தாகவேண்டும்.  மேற்படி  நிகழ்ச்சிகளின் மூலம்  எஸ்.பி.பி. பல்லாயிரம் டாலர்கள் சம்பாதிக்க இருப்பதால் அதன் ஒரு பகுதி இளைராஜாவுக்குச் சேர்ந்தாகவேண்டும். (அதுவே, இலவச நிகழ்ச்சி என்றால் இளையராஜா வக்கீல் நோட்டீசுக்காகப் பணம் செலவு செய்திருக்க மாட்டார்.)
****
அப்படியானால், பாத்ரூமில் கூட இளையராஜாவின் இசையைப் பாடக்கூடாதா என் மனைவி- என்றால் பாடலாம். ஆனால் அப்படிப் பாடுவதன் மூலம் அவருக்குப் பணவசூல் நடப்பதாகத் தெரிந்தால் இளைராஜாவிடம் அனுமதி பெற்றுவிடுவதே புத்திசாலித்தனம்.
****
எப்போதும் அண்ணனை எதிர்த்துக் கருத்துக்களை வெளியிடும் கங்கை அமரன், இப்போதும் அதையே செய்திருக்கிறார். தியாகராசரின் கர்நாடகப் பாடல்களைப் பாடுகிறோமே, அவருக்கு ராயல்டி கொடுத்தோமா என்பது போன்ற சிறுபிள்ளைத்தனமான கேள்விகளை எழுப்புகிறார். சட்டப்படி இளையாராஜா மீது எந்தக் குற்றமும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால் இளைராஜா செய்துள்ள மாபெரும் தவறு ஒன்றுண்டு. ஒன்றே ஒன்று. வயதான பிறகும் தன் சொந்தக்குரலில் சில பாடல்களைப் பாடிவிடுகிறாரே அதுதான்! (‘ஜனனி..ஜனனி’ மாதிரியான பாடல்களைச் சொல்லவில்லை.)
****
© Y Chellappa

Email: chellappay@gmail.com 

குறிப்பு : இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள 'தமிழ்மணம்' பட்டையில் இடதுபுறமுள்ள 'மேல்நோக்கிய' கட்டைவிரல் அடையாளத்தின் மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.

ஞாயிறு, மார்ச் 19, 2017

கடமை புரிவார் இன்புறுவார்

பதிவு எண் 20/2017
கடமை புரிவார் இன்புறுவார்
-இராய செல்லப்பா

ஐந்து நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய, நகரின் மிகப்பெரிய ஓட்டலில் வங்கி மேலாளர்களின் மாநாடு நடந்துகொண்டிருந்தது.

வங்கியின் தலைவரும் நிர்வாக இயக்குனரும் ஒருவரே. (எம்.டி.). அவர்தான் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறார். அடுத்த நிலையில் இருந்தவர், வங்கியின் செயல்முறை இயக்குனர். (ஈ.டி.). அவரும் வந்திருந்தார். ஐந்தாறு பொது மேலாளர்கள் (ஜி.எம்.), சில துணைப்பொது மேலாளர்கள் (டி.ஜி.எம்) என்று பலரும் முன்வரிசையில் இருந்தார்கள்.

அவர்களுக்குப் பின்னால் சுமார் ஐம்பது கிளை-மேலாளர்கள் அமர்ந்திருந்தார்கள். பெருநகர மேலாளர்கள் ஒரு  தொகுப்பாகவும், மாவட்டத் தலைநகர் மேலாளர்கள் இன்னொரு தொகுப்பாகவும், இறுதி வரிசைகளில் கிராமப்புற மேலாளர்களும் என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல கிராமங்களில் வருடத்தில் பாதி நாட்கள் மின்சாரம் இருக்காது. கணினிகள் இயங்காது. அவர்களிலும்  பலர் ‘கோட்’, ‘சூட்’ அணிந்து வந்திருந்தார்கள். (சில கோட்டுகள் வாங்கிப் பதினைந்து ஆண்டுகள் ஆகியிருக்கலாம்.) பதவி உயர்வுக்கு இதெல்லாம் அவசியமானவை என்று மேலதிகாரிகள் நினைக்கக் கூடுமென்று அவர்கள் கருதினார்கள்.

வாங்கும் பணத்திற்கேற்ப உச்சகட்ட குளிர்சாதன வசதிகள் செய்திருந்தது ஓட்டல் நிர்வாகம். அரங்கம் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது. ஆனால் ஓட்டல் அதிகாரிகளிடம் சென்று குளிரைக் குறைக்கும்படி சொல்வதற்கு யாரும் துணியவில்லை. ஏனெனில் தலைவருக்கு இந்தக் குளிர் தேவையாக இருந்தால்? வீணாகக் கெட்ட பெயர் வாங்குவானேன் என்று குளிரைச் சகித்துக் கொண்டிருந்தார்கள்.

புதுமைகளைப் புகுத்தவேண்டும் என்ற ஆர்வமுடையவர்  மண்டல மேலாளர். எனவே மேலாளர்கள் மட்டுமே பங்கேற்கும் அம்மாநாட்டில், குமாஸ்தா (‘கிளார்க்’) மற்றும் கடைநிலை ஊழியர் (‘பியூன்’) வர்க்கத்தைச் சேர்ந்த இருவருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவர்களுக்குத் தலைவர் கையால் சான்றிதழும், வங்கியின் இலச்சினை பொறித்த, மரச்சட்டத்தில் வெள்ளித்தகடு ஒட்டிய கேடயம் ஒன்றும் வழங்கப்பட இருந்தது. தமது செயல்பாட்டினால் வங்கியின் புகழ் பரவக் காரணமாயிருந்தவர்கள் அவர்கள். குடும்பத்தினரோடு கலந்துகொள்ளலாம் என்று கூறியிருந்ததால், முத்துராமன் (குமாஸ்தா)   தன் மனைவியுடன் வந்திருந்தார். கோவிந்தன் (பியூன்), மனைவியுடன் மூன்று வயதுக் குழந்தையையும் (மாலதி) அழைத்து வந்திருந்தார்.

பொதுவாகவே வங்கிகளில் அதிகாரி வர்க்கத்திற்குப் பொறுப்புக்கள் அதிகம். அங்கீகரிப்பும் அவர்களுக்கே கிடைக்கும். அதனால் குமாஸ்தாக்களும், மற்ற ஊழியர்களும்  தமது கடமைகளை முழுமையாகச் செய்வதில்லை என்ற கருத்து மக்கள் மத்தியில் உண்டு. சில வங்கிகளைப் பொறுத்தவரை அது உண்மையும் கூட. அதை மாற்றி,  எங்கள் வங்கியில் அந்தஸ்து வேறுபாடில்லாமல் எல்லா ஊழியர்களும் சமமான பங்களிப்பைத் தருபவர்கள் என்று வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பார் தலைவர். அதற்காகவே இவ்விருவருக்கும் கெளரவம் அளிக்க முடிவு செய்தார் மண்டல மேலாளர்.  அதனால் தலைவரிடம் தனக்கு மேலும் நெருக்கம் உண்டாகும் என்றும் எதிர்பார்த்திருந்தார்.
****
நிகழ்ச்சி தொடங்கும் முன்பு தலைவருக்கு இந்த இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டனர். குழந்தை மாலதியின் கன்னத்தில் செல்லமாகத் தட்டிக் கொடுத்தார் தலைவர். நீளமான சாக்லேட் ஒன்றும் கொடுத்தார்.
****
வரவேற்புரையுடன் மாநாடு தொடங்கியது. தலைவர் பேச எழுந்தார். மேலாளர்களை வரவேற்பதற்குமுன்  முத்துராமனையும் கோவிந்தனையும் வரவேற்க விரும்புவதாகக் கூறினார். அதிகாரிகள் மட்டுமே ஒரு வங்கியை நடத்திவிட முடியாது, மற்ற இரு வர்க்கத்தினரும் மிக இன்றியமையாதவர்கள் என்றார். வாடிக்கையாளர்களை முதலில் சந்திப்பது குமாஸ்தாக்கள் தாம். அவர்கள்தாம் வங்கியின் முகம் என்று பாராட்டியதும் அனைவரும் கை தட்டினார்கள். அதைப் பார்த்து குழந்தை மாலதியும்  கைதட்டினாள். அவர்களுக்குச் சான்றிதழையும் கேடயத்தையும் உடனே வழங்கி, மாநாடு தொடங்கும் முன்பு அவர்களை அனுப்பிவிட விரும்பினார்.

முதலில் முத்துராமன் அழைக்கப்பட்டார். அவருக்குக் கேடயத்தை வழங்கிய தலைவர், அவருடைய மனைவியையும் மேடைக்கு வரச் சொன்னார். அந்த அம்மையாருக்கு  ஏகத் திருப்தி.  சான்றிதழை அம்மையார் பெற்றுக்கொண்டார். தலைவருடன் மூவரும் புகைப்படம் எடுத்துகொண்டனர். அம்மையார் எந்த ஊர், என்ன படித்திருக்கிறார், உடல் நலத்தை எப்படிப் பேணுகிறார், வருடாந்தர மருத்துவ பரிசோதனை செய்துகொள்கிறாரா என்று பல கேள்விகளைக் கேட்டு அவர் மனதில் தன்னைப்பற்றி ஒரு மரியாதையான இடத்தை உண்டாக்கிக்கொண்டார் தலைவர் என்றுதான் சொல்லவேண்டும்.

அடுத்து அழைக்கப்பட்டார் கோவிந்தன். அவர் மனைவியும் குழந்தையும் மேடைக்கு வந்தனர். தலைவர் கேடயத்தை வழங்குவதற்கும், குழந்தை அம்மா, பாத்ரூம் போகணும்மா என்று அம்மாவின் சேலைத்தலைப்பை பிடித்து இழுக்கவும் சரியாக இருந்தது. முன்பின் பார்த்தறியாத நட்சத்திர ஓட்டலில் பாத்ரூம் எந்தப் பக்கம் இருக்கும் என்று அந்தப் பெண்மணிக்குத் தெரிய நியாய மில்லையே! சுற்றுமுற்றும் பார்த்து எதோ ஒரு பக்கமாக நகர முயன்றபோதுதான் அந்த விபரிதம் நடந்தது. 

தாங்க முடியாத ஏசி குளிரினால் நடுங்கிக்கொண்டிருந்த குழந்தை மாலதி, பாத்ரூமுக்குப் போவதற்குள் நின்ற இடத்திலேயே சிறுநீர் கழித்துவிட்டாள்! அதாவது மேடைக்குச் சற்று முன்பாகவே.

தலைவர், செயல்முறை இயக்குனர் இருவரும் மண்டல  மேலாளரைப் பார்த்த பார்வை இருக்கிறதே, அப்பப்பா நெருப்புதான் போங்கள்!

ஓட்டல் பணியாளர்கள் அவசரம் அவசரமாக வந்து குழந்தையைக் கையோடு இழுத்துக்கொண்டு போனார்கள். இடத்தைச் சுத்தம் செய்தார்கள். சான்றிதழும் கேடயமும் அவசர அவசரமாக கோவிந்தனுக்கு அளிக்கப்பட்டன. அவர் ‘சாரி சார், சாரி சார்’  என்று சொல்லிக்கொண்டே மேடையில் இருந்து இறங்கினார். புகைப்படமாவது மண்ணாங்கட்டியாவது!

நிலைமையின் இறுக்கத்தைக் குறைப்பதற்காக ஐந்து நிமிட இடைவேளை விடப்பட்டது. மண்டல மேலாளருக்கு செம டோஸ் தரப்போகிறார் தலைவர் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் அமைதியாக இருந்தார். நிகழச்சி நிரல்படி மாநாடு நடக்க ஆரம்பித்தது.

உணவு இடைவேளை வந்ததும் தலைவரிடம் சென்று வருத்தம் தெரிவிக்க முயன்றார் மண்டல மேலாளர். ஆனால் தலைவர் இவர் பக்கம் திரும்பாமல் செயல்முறை இயக்குனருடன் ஏதோ தீவிரமாக விவாதிப்பதுபோல் இருந்துவிட்டார். தன் பக்கம் திரும்பமாட்டாரா என்று காத்திருந்ததில் உணவையே மறந்துபோனார் ம.மே.

சரி, தேநீர் இடைவெளியில் பேசலாம் என்று பொறுத்திருந்தார் ம.மே. ஆனால் விவாதங்கள் சூடுபிடித்தபடி இருந்ததால் அவரவர் இருக்கையிலேயே தேநீரை அருந்தலாம் என்று தலைவர் பணித்துவிட்டார். அந்த வாய்ப்பும் போயிற்று. இருப்புக் கொள்ளாமல் தவித்தார் ம.மே.

அதற்கிடையில்  வங்கியின் முக்கிய வாடிக்கையாளர் ஒருவர் வரவேற்பில் காத்திருப்பதாகத் தகவல் வரவும் ம.மே. அரங்கத்தில் இருந்து வெளியேறினார். சில நிமிடங்களுக்குப் பிறகு திரும்பியபோது தலைவரைக் காணோம்!

ஒரு முக்கிய வேலையாக உள்ளூர் ஐஏஎஸ் அதிகாரியைச் சந்திக்கவேண்டிக் கிளம்பிவிட்டாராம். அவர் போன சிறிது நேரத்திற்கெல்லாம் செயல்முறை இயக்குனரும் தமக்கு ஓர் அப்பாயிண்மென்ட் இருப்பதாகச் சொல்லி வெளியேறிவிட்டார். மூத்த பொதுமேலாளர் தான் பாக்கியிருந்த நிகழ்வுகளை நடத்தலானார்.

ஒருவழியாக மாநாடு முடிந்தபோது மணி ஏழு. சரியாக உணவருந்தாததால் ம.மே. க்கு பசிமயக்கம் வந்தது. ஒரு வழியாகத் தன் காரை வந்தடைந்தார். வீட்டில் சென்று கட்டிலில் சாய்ந்தபிறகுதான் சற்றே அமைதியடைந்தது உடலும் மனமும்.

இருந்தாலும், தனது அதீத உற்சாகத்தின் காரணமாக, அதிகாரிகள் மட்டுமே பங்கெடுக்கவேண்டிய மாநாட்டில், ஒரு குமாஸ்தாவையும், பியூனையும் அழைத்து வந்து,  அதன் மூலம் தலைவர் முன்னிலையில்   ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டதற்கு தலைமை அலுவலகத்தில் என்ன சொல்வார்களோ என்ற அச்சம் இருந்துகொண்டே இருந்தது. தலைவரின் மௌனம் அவருக்குத் திகைப்பூட்டுவதாக இருந்தது.

சில வாரங்களுக்குப் பிறகு, வங்கியின் சார்பாக வெளியிடப்படும் செய்திமடலில் மண்டல மேலாளரின் தன்னெழுச்சியான செயலைப் பாராட்டி ஒரு கட்டுரை வந்திருந்தது. எழுதியவர்: மூத்த பொதுமேலாளர். அதிகாரிகள், குமாஸ்தாக்கள், பியூன்கள் என்ற மூன்று வர்க்கத்தையும் ஒன்றிணைத்துக் கொண்டுபோகும் ம.மே.-வின் சிந்தனை, மற்ற மண்டலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்வதாக பாராட்டப்பட்டிருந்தது.

சிலநாள் கழித்து, அதே கட்டுரையை மேற்கோள் காட்டி, தலைவரின் செயலகத்தில் இருந்து நீல நிறத்தில் தலைவர் கைப்பட ஒரு பாராட்டுக் கடிதமும் வந்தது. அதன் பிறகுதான் அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார் ம.மே.

இன்னொரு கடிதமும் வந்திருந்தது. மூத்த பொதுமேலாளரின் செயலகத்தில் இருந்து, அவரின் கையொப்பத்துடன்.  

ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருந்த, அவருக்குத் தெரியாததொரு மொழி பேசும் மாநிலத்தில், மிகச் சிறிய மண்டலத்திற்குத் தலைவராக அவரை மாற்றி இருப்பதற்கான உத்தரவு அது!
****
© Y Chellappa

வெள்ளி, மார்ச் 17, 2017

கனவுகள் பலிக்கும் நேரம்

பதிவு எண் 19/ 2017
கனவுகள் பலிக்கும் நேரம் 

-இராய செல்லப்பா

புலர்ந்தும் புலராத விடியற்காலை நேரம். பத்தடி தூரத்திற்குமேல் தெளிவாகத் தெரியவில்லை. வயல்காட்டின் நீண்ட வரப்புகளின் மீது நடந்துகொண்டிருக்கிறேன். இரண்டு பக்கமும் நிலம் உழுது பண்படுத்தப்பட்டு, நீரும் சேறுமாய் இருந்தது. ஒரு பாத்தியில் நெல் நாற்றுக்கள் பசுமையாய்க் கிடந்தன. இன்றோ நாளையோ நடவு செய்யக்கூடும்.

யாருடைய வயல் என்று தெரியவில்லை. ஏன் அங்குப் போனேன் என்றும் தெரியவில்லை. ஆனால் விரைவாக நடந்து கொண்டிருக்கிறேன். யாரையோ துரத்திப் பிடிக்கப் போவதுபோல் இருக்கிறது. அடிக்கடி ‘நில், நில்’ என்று சொல்லிக்கொண்டே போகிறேன். ஒரு கட்டத்தில் வேகமாக ஓடுகிறேன்.
சற்றே வெளிச்சம் வருகிறது.

எனக்கு முன்னே கடல்போல் ஒரு நீர்ப் பரப்பு. ஆனால் கடல் அல்ல; கரை காண முடியாத குளமாக இருக்கலாம். நீரின் வெண்பரப்பு மட்டுமே தெரிந்தது. இன்னும் பத்து நிமிடம் ஓடினால் குளத்தை அடைந்துவிடலாம் என்று தோன்றியது. வேகத்தைக் கூட்டினேன்.

அப்போதுதான் தெரிந்தது, எனக்கு முன்னே ஒரு பெண் உருவம் ஓடிக்கொண்டிருப்பதை. மெலிந்த உடல். எளிமையான சேலை. இழந்துவிட்ட எதையோ தேடிக்கொண்டு போவதுபோல், ஒரே முனைப்பாக, பின்னால் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டிருந்தது அவ்வுருவம். குளத்தை நெருங்கிவிட்டது. ஆனால் என் வேகத்திற்கு அதனால் ஈடு கொடுக்க முடியவில்லை. நானும் குளத்தை நெருங்கிவிட்டேன்.

திடுக்கிட்டு அந்த உருவம் என்னைப் பார்ப்பதற்காகத் திரும்புகிறது. சென்னையில் இருக்கும் என் தாய்!

அடுத்த நொடி என்ன நடந்தது என்று தெரியாது. பால் பாக்கெட்டைக் கொடுப்பதற்காக வாசற்கதவை ஒரு சிறுவன் தட்டியபோது கனவு கலைந்துவிட்டது.

முன்பின் தெரியாத ஊரில், குளத்தில் விழுவதுபோல் என் தாய் போகும் கனவுக்கு என்ன பொருள் என்று தெரியவில்லை. பொதுவாகவே கனவுகளை அதிகம் பொருட்படுத்தமாட்டேன் நான். எனவே இக்கனவையும் மறந்துபோனேன்.

அடுத்த வாரம் சென்னை வந்தேன். தற்செயலாகச்   சரியில்லாமல் போனது அம்மாவின் உடல்நலம். அருகிலிருந்த மருத்துவமனைக்கு  அழைத்துப் போனேன். வயதாகிவிட்டதுதான் காரணம், சில நாட்கள் இங்கே அனுமதித்தால் சரிசெய்துவிடலாம் என்றார்கள். ஒருவாரம் அங்கே இருந்தார். உடல்நிலை மோசமாகிக் கொண்டே இருந்தது. நான் பிழைக்க மாட்டேன் என்று தோன்றுகிறது என்று என் கைகளைப் பிடித்துக்கொண்டார். மூன்று இரவுகள் அவருடனேயே இருந்தேன். குழந்தையாக எனக்கு அவர் செய்த பணிவிடைகளை அவருக்கு நான் செய்தேன். நான்காவது நாள் அவர் இயற்கை எய்திவிட்டார்.
****
வீட்டில் ஏதோ விசேஷம். அநேகமாக மறைந்துபோன முன்னோர் ஒருவருக்குத் திதி கொடுக்கும் நாள் (‘சிரார்த்தம்’) என்று நினைக்கிறேன்.

நான் சிறுவனாக  இருந்தபோது வசித்த அதே இராணிப்பேட்டை, வக்கீல் தெரு, வீடு. அதே கிணறு. அருகில் பெரிய சிமெண்ட் தொட்டி. நான் இடுப்பில் ஒரு வெள்ளைத்துண்டு கட்டியிருக்கிறேன். இராட்டினம் சுழல்கிறது. வேகவேகமாகக் கிணற்றிலிருந்து வாளிவாளியாகத் தண்ணீர் சேந்துகிறேன். தொட்டியை நிறைக்கிறேன். பிறகு மேலும் ஒரு வாளி தண்ணீரைச் சேந்திக் குளிக்கிறேன். 

அப்போது என் தாத்தா வருகிறார். அப்பாவின் அப்பா. நீ போடா, போய்ப் பாடத்தைப் படி. நானே சேந்திக் குளிக்கிறேன் என்று  தண்ணீர் இறைத்துக் குளிக்கிறார். மூன்று நான்கு வாளித் தண்ணீர் செலவாகிறது. குளித்துவிட்டு அவர் சென்றதும்,  என் தகப்பனார் வருகிறார்.   நான் அருகில் இருந்தும் அவர் என்னைப் பார்க்கவில்லை. தன்  பாட்டுக்குப் பேசாமல் குளித்துவிட்டுப் போகிறார்.

இவ்வளவுதான் கனவு. ஒரு நாள் காலை ஐந்தேமுக்கால்  மணிக்கு நேர்ந்த கனவு. என் தாத்தா இறந்து இருபது வருடங்கள் ஆகியிருந்தன. தகப்பனார் சென்னையில் இருந்தார். நோய்நொடி ஏதுமின்றி நலமாக  இருந்தார்.

வழக்கம் போலவே கனவை மறந்துவிட்டேன். ஒரு வாரம் கழிந்திருக்கும். காலை எட்டுமணிக்குக் கலவை சங்கரமடத்தில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. என் தகப்பனார் பெயரைச்சொல்லி, இன்று காலை ஆறு மணிக்கு அவர் இறந்துவிட்டார் என்றார்கள்.  சிலநாட்கள் முன்புதான் ஏதோ வேலையாக வந்து தங்கினாராம். இரவு நெடுநேரம் சில வேத மந்திரங்களைப் பற்றி விளக்கமாகப் பேசிக்கொண்டு இருந்தாராம். காலையில் காப்பி சாப்பிட்டுவிட்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்தவர் எழுந்திருக்கவில்லையாம்.

மங்களூரில் இருந்து மாலை விமானத்தில் கிளம்பினேன். காஞ்சி மகாபெரியவரின் குருநாதரின் பிருந்தாவனம் அமைந்திருந்த புனிதமான இடம், கலவை சங்கரமடம். தற்செயலாகத் தங்கப்போன இடத்தில், என் தகப்பனாரின் ஆவி பிரிந்தது விட்டகுறை தொட்டகுறையோ என்று தோன்றியது. 75 வயது வாழ்கையில் முதல் அறுபது ஆண்டுகளை வறுமையிலேயே கழித்தவர் அவர். எனினும் ஒருநாளாவது வேதத்தை மறந்தவரில்லை. அதற்கு வெகுமதியாக இந்த மரணம் என்று தோன்றியது. அதே ஊரில் இறுதிச்சடங்குகளைச் செய்துவிட்டு வந்தேன்.
****
கனவுகளில், தண்ணீரையும் நமது முன்னோர்களையோ அல்லது உறவினர்களையோ அருகருகே பார்க்க நேர்ந்தால்,  வீட்டில் ஒரு மரணம் நிகழக்கூடும் என்பது மேலும் பல நேரங்களில் நான் அறிந்துகொண்டதாகும். (அப்படித்தான் நடக்கவேண்டும் என்று அறிவியல் விதி ஏதும் இல்லை.)
****
கனவுகளில் பாம்புகளைக் கண்டிருக்கிறேன். வெண்ணிறமான அல்லது தங்கநிறமான பாம்புகள் என்னைச் சுற்றிலும் (அல்லது எனக்கு முன்னால்) ஓடுவதுபோல் கனவு வரும். -துரத்துவதுபோல் அல்ல- அடுத்த சில நாட்களில் ஏதாவதொரு பரிசோ, பாராட்டோ, வெகுமதியோ வந்துசேரும். எனக்கில்லாவிடினும் என் குடும்பத்தினருக்கு.

பாம்புகள்  என்னைத் துரத்துவதுபோல் கனவு வந்தால் துன்பமோ, நோயோ, பொருள் இழப்போ வருவதை நிச்சயமாக அனுபவித்திருக்கிறேன். அதே சமயம் பாம்பு என்னைக் கடிப்பதுபோல் கனவு வந்தால் அடுத்த சில வாரங்களில் எதிர்பாராவிதமாக  என்னுடைய இன்னல்கள், நீண்டநாள் நோய்கள் விலகுவதைக் கண்டேன். குறைந்தபட்சம், பணியிடத்தில் எனக்குத் தொல்லை கொடுத்துவந்தவர்கள் எதிர்பாரா விதமாக வேறிடத்திற்கு மாற்றம் பெற்றுச் செல்வதன்மூலம் எனக்கு மன அமைதி கிட்டியதை உணர்ந்திருக்கிறேன். அலுவலகத்தில், தீராத சில பிரச்சினைகள்  எனது முயற்சியின்றியே தீர்ந்ததையும் அறிந்திருக்கிறேன்.

இப்போதும், தனது  வருடாந்திரத் திதிக்குச் சிலநாள் முன்பாக என் தந்தை என் கனவில் தோன்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
***
கனவுகளைப் பற்றி அறிவதில் இளம்வயதில் இருந்தே எனக்கு ஆர்வம் உண்டு. சிக்மண்ட் பிராய்டு முதல் இன்றுவரும் பல சைக்காலஜி ஜர்னல்கள் வரை அவ்வப்பொழுது படிப்பதுண்டு. ஆனால், கனவுகள் தோன்றுவதற்கான காரணத்தையோ, கனவுகளின் பலன்களையோ அறிவுபூர்வமாக, நான் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில்,  இன்னும் யாராலும் அறிவிக்க முடியவில்லை. அவரவர் அனுபவத்தில் இருந்து எழும் empirical law -வாகவே கனவுகளின் படிப்பு தொடர்ந்துகொண்டிருக்கிறது.

© Y Chellappa

புதன், மார்ச் 15, 2017

காலம் வரும் ....


பதிவு எண்  18/ 2017
காலம் வரும்  .... 
-இராய செல்லப்பா

திருமணமான அடுத்த ஆண்டே முதல் குழந்தை பிறந்தது. அழகான பெண்குழந்தை. ‘மகாலட்சுமி பிறந்திருக்கிறாள்’ என்று மகிழ்ந்தார், மாமனார்.
கண்ணனும் துளசியும் -துலாபாரம்

முதல் குழந்தை பெண் குழந்தையாக இருப்பதுதான் குடும்பத்துக்கு நல்லது. சிறிது சிறிதாக நகை நட்டுக்கள் சேரும்.  உரிய நேரத்தில் திருமணம் செய்விக்க முடியும், பேரன் பேத்தி எடுக்க முடியும். ஆண் குழந்தையை விடப் பெண் குழந்தைக்குப் பொறுப்புணர்ச்சியும், அறிவு முதிர்ச்சியும் சீக்கிரமே ஏற்படும். அதனால், அடுத்த குழந்தை பிறக்கும்போது  இவளே  பாதுகாவலாக இருப்பாள். வளர வளரத் தாய்க்கும் உதவியாக இருப்பாள் என்று விளக்கினார்.

தான்  நினைத்தபடியெல்லாம் உடை உடுத்தவும், அலங்காரம் செய்யவும், பின்னி முடிக்கவும்,  தான் கற்காத கவின் கலைகளை யெல்லாம் கற்பிக்கவும் பெண்குழந்தைதான் சரி என்று பெற்றவளும் மகிழ்ந்தாள். எப்படியோ அனைவருக்கும் திருப்திதான்.

சில விஷயங்களில் நாம் திட்டமிட முடிவதில்லை, திட்டமிட்டாலும் எண்ணியது நடப்பதில்லை அல்லவா? இரண்டாவதும் பெண்ணாகவே பிறந்தது. அவளும் இவளும் நல்ல தோழிகளாக இருப்பார்கள் என்று பூரிப்போடு சொன்னார் மாமனார். அடுத்தது ஆண் குழந்தையாகத்தான் இருக்கும் பாருங்களேன் என்று அவர் சொன்னதை அவரே ரசித்தாரா என்று தெரியாது. நாட்கள் கடந்தன.

இயல்பாகவே தன்னம்பிக்கை உடையவன் நான். ஆனால் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தபிறகு, மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை பிறக்கும் என்று நம்புவதற்கும், ஏன், எதிர்பார்ப்பதற்கும்  தன்னம்பிக்கை மட்டுமே போதுமானதாக இருக்காது என்று தோன்றியதால்,  இறைவனின் துணையை நாட முடிவு செய்தோம். திருப்பதி சென்று வந்தோம். சன்னதியில் வேங்கடவனை வணங்கிவிட்டு வெளியில் வந்தவுடன் குதூகலத்துடன் இருந்தாள் துணைவி. உத்தரவு கிடைத்துவிட்டதாம்!

பல நாட்களாகத் திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவனை வழிபடவேண்டும் என்று எண்ணம் இருந்தது. அதையும் நிறைவேற்றிக் கொண்டோம். ஏற்கெனவே நேர்ந்துகொண்ட வேண்டுதல்களுடன், ஆண்குழந்தை வேண்டும் என்பதும் சேர்ந்துகொண்டது.

அதற்குமுன், சென்னை மயிலாப்பூர் லஸ்முனை நவசக்தி விநாயகரை வணங்கினோம். அண்ணனுக்குப் பிறகுதானே தம்பி? நவசக்தி விநாயகரைத் தொழாமல் எந்த முக்கியமான காரியத்தையும் தொடங்கமாட்டாள் என் மனைவி.

அங்கிருந்து கொஞ்சம் தொலைவில், ‘கலைமகள்’ அலுவலகத்துக்கு  அருகில் இருந்த முண்டகக்கண்ணி அம்மனும் அவளுக்கு ஆகிவந்த தெய்வம். அங்கும் தொழுதோம்.

கருவுற்றாள்.

நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக எங்கள் பயமும் வளர்ந்தது. மூன்றாவதும் பெண் குழந்தையாக இருந்துவிட்டால்? அப்படி நேர்ந்துவிட்ட நண்பர் ஒருவரின் மூன்று பெண்களும் கண்ணில் நிழலாடினர். குறைந்த வருமானத்தில் பெரிதும் சிரமப்பட்டார் அவர். நாங்கள் இருவரும் சம்பளக்காரர்கள் என்பதால், குழந்தை வளர்ப்பிற்கான பொருளாதாரச் சுமை இல்லைதான். ஆனால் ஆண்குழந்தையைப் பெற்றவர்கள் எல்லாரும் நம்மை இளக்காரமாகப் பார்ப்பார்களோ என்ற உலகியல் அச்சம் அடிக்கடி ஏற்பட்டுக்கொண்டே இருந்தது.

மகப்பேறு விடுப்பில் கடலூரிலுள்ள தாய்வீட்டிற்குச் சென்றாள் மனைவி. சென்னையில் நான்.  

அந்த நாளும் வந்தது.....

பகல்நேரம். ஒருமணி இருக்கலாம். வங்கியில் அதுதானே  கூட்டமும் பரபரப்பும் மிகுந்த நேரம்! அப்போது ‘டிரங்க் கால்’ வந்தது. 
மருத்துவமனையில் இருந்து மாமனார் பேசினார். ‘இருவரும் நலம்’ என்றார். குரலில் மகிழ்ச்சி தெரிந்தது.

ஓ, குழந்தை பிறந்துவிட்டதா? எனக்கு திக்திக் என்றது. என்ன குழந்தை என்றல்லவா முதலில் சொல்லியிருக்க வேண்டும்? இருவரும் நலம் என்கிறாரே என்று கோபம் வந்தது.

.....மணிக்கு வலி எடுத்தது. உடனே வண்டியை வரச்சொல்லி ஆஸ்பத்திரிக்குப் போனோம். அதற்குள் டாக்டர் சாப்பிடுவதற்கு வீட்டுக்குப் போய்விட்டாராம். உடனே வரச்சொன்னோம். வந்தவுடனேயே பிரசவம் ஆகிவிட்டது. சுகப்பிரசவம்...இருவரும் நலம்.. என்றார்.

எனக்கோ பொறுமை எல்லை கடந்துவிட்டது. இரத்த அழுத்தம் அதிகமாவதுபோல் இருந்தது. ஆணா, பெண்ணா என்றேன் சற்றே உயர்ந்த குரலில். மறுபடியும் பெண்தான் என்று சொல்லிவிடுவாரோ என்று அச்சம் ஒருபக்கம் உறுத்திக்கொண்டே இருந்தது. வங்கியில் இருந்த அனைவரும் என்னை ஆர்வத்தோடு பார்த்தார்கள்.

கடகடவென்று சிரித்தார் மாமனார். ஆண் குழந்தைதானே வேண்டும் என்று எதிர்பார்த்தீர்கள்? அதே தான்! ஆண் குழந்தைதான். நட்சத்திரமும் நல்ல நட்சத்திரம்தான் என்றார். முருகன் பேராகவே வைத்துவிடலாம் என்றார். கார்த்திக் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தாள் மனைவி.
****
நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக  (தமிழில் வேறு சொற்களே இல்லையா?) வளர்ந்தான் கார்த்திக். மூன்றாண்டுகள் சென்னை, மூன்றாண்டுகள் வெளிமாநிலம் என்று ‘பொருள்வயின் பிரிவு’ எனக்கு நிகழ்ந்துகொண்டிருந்தது. அதாவது ‘டிரான்ஸ்ஃபர்’. மனைவி ஆசிரியையாக இருந்ததால் கோடை விடுமுறைநாட்கள் நிறைய உண்டு என்று ஆவலாக இருந்தேன். குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியூர் செல்லலாம், பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொடுத்த கோவில்களுக்குப் போய் நன்றி தெரிவிக்கலாம்  என்று எண்ணினேன். ஆனால் கோடை விடுமுறை முழுவதும் அவளுக்குத் தேர்வுப் பணியும், அதன் பிறகு விடைத்தாள் திருத்தும் பணியும் வந்துவிட்டதால் நினைத்தது நடக்கவில்லை.

இதே போல் ஒன்றல்ல, அடுத்தடுத்து பல ஆண்டுகள் நடந்தது. அதன்பிறகு, மூத்த குழந்தைகள் உயர் வகுப்புகளுக்குப் போய்விட்டதால், கோடை விடுமுறையில் அடுத்த வருடப் பாடங்களை அவர்களுக்குத் தொடங்கிவிட்டார்கள். எனவே விடுமுறை எடுக்க வழியில்லை. மற்ற நேரங்களில் எனக்கு விடுமுறை கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது.

இடையில் எனக்கு மூன்று இடமாற்றங்கள். எல்லாமே ஏப்ரல்- மே மாதங்களில்தான் வரும். கோடையாவது விடுமுறையாவது.

குருவாயூருக்கு மட்டுமாவது போய்வந்துவிடலாம் என்று நச்சரித்தாள் மனைவி. இவனுக்காக வேண்டிக்கொண்டிருக்கிறேன் என்றாள். எப்போது என்ன வேண்டிக்கொண்டாள் என்று சொல்லவில்லை. கார்த்திக் உயரமாக வளர்ந்துகொண்டிருந்தான்.

ஒருவழியாக ஏதோ ஒரு செப்டம்பர் மாதம் குருவாயூருக்குக் கிளம்பிவிட்டோம்.  நீண்ட ரயில் பயணம். ‘மாலையும் இரவும் சந்திக்கும் பொழுதில்’ கோவிலை அடைந்தோம். என் மனைவி முகத்தில் எல்லையில்லாத மகிழ்ச்சி. குருவாயூரப்பனைச் சந்தித்து நன்றி சொல்லப்போகிற மகிழ்ச்சி. குழந்தைகள் மூவருக்கும் அது புது அனுபவம். குதூகலத்துடன் இருந்தார்கள்.

அப்போது திடீரென்று சொன்னாள், மனைவி. குழந்தைக்குத் துலாபாரம் நேர்ந்துகொண்டிருக்கிறேன். அதை நிறைவேற்றிவிடலாம் அல்லவா? என்றாள். குழந்தை என்றது என் மகனை. அப்போது கார்த்திக் வயது பதின்மூன்று இருக்கும்.

எதிரே பார்த்தேன். கோவில் அலுவலகத்தின் அருகில் பெரியதொரு தராசு தொங்கிக்கொண்டிருந்தது. துலாபாரம் என்றால் ஆசாமியைத் தராசில் உட்கார வைத்து, எடைக்கு எடை ஏதேனும் பொருளை வைத்து, அப்பொருளை கோவிலுக்கு வழங்கிவிடவேண்டும் என்ற விவரம்  எனக்குத் தெரியாது. விசாரித்தேன். துலாபாரத்திற்குச் சிலநூறுகள் கட்டச் சொன்னார்கள். சரி, இவ்வளவுதானே என்று எண்ணிக்கொண்டேன்.

ரசீது கொடுத்த கோவில் பணியாளர் கேட்டார்: ஏலக்காய் போடலாமா? என்று. எதற்குக் கேட்கிறார் என்று புரியாமல் விழித்தேன். ஏலக்காய், பாயசத்திற்கல்லவா போடுவார்கள்?

நல்ல வேளை, என் மனைவி முன்வந்து, ஏலக்காய் வேண்டாம். அதிகம் செலவாகும். வேறு என்ன இருக்கிறது? என்றாள். அப்போதுதான் எனக்குப் புரிந்தது, எடைக்கு எடை ஏலக்காய் போடலாமா என்று அவர் கேட்டிருக்கிறார் என்று. போட்டிருந்தால் சுமார் பத்தாயிரம் ரூபாய் ஆகியிருக்கும்.

வேற ஏதாவது என்றால்..முந்திரி இருக்கிறது, திராட்சை இருக்கிறது, ஆப்பிள் போடலாம். துவரம்பருப்பு போடலாம்.. என்று சொல்லிக்கொண்டே போனார் பணியாளர். விலை உயர்ந்த பொருள்களாகவே அவர் வாயில் வந்தன. 

எதிரில் வாழைப்பழம் மலைபோல் குவிந்துகிடந்தது. ஏன், வாழைப்பழம் போட்டால் என்ன? என்றாள் மனைவி.

ஏமாற்றம் அடைந்தவர் போல், சரிங்க என்று தன் மேலதிகாரியைப் பார்த்தார். அவங்க கேட்கிறதைப் போடுங்க என்றார் அவர்.

பிறகு கார்த்திக்கைத் தராசின் ஒரு தட்டின் மேல் ஏறி உட்காரச் சொன்னார்கள். அவ்வளவு சிறிய பலகையின்மீது உடம்பைக் குறுக்கிக்கொண்டு உட்காருவது சுகமான அனுபவமாயில்லை. கார்த்திக் நெளிந்தான். இன்னொரு தட்டில் வாழைப்பழங்களை ஏற்றினார்கள். ஏற்றிக்கொண்டே இருந்தார்கள். முதலில் அவனை எடைபோட்டுவிட்டு, அதன்பிறகு பொருளை அடுக்கலாமே என்றால், அப்படிச் செய்வது தெய்வக்குற்றமாம். அவனுடைய எடை எவ்வளவு என்று தெரியக்கூடாதாம். 

கோவிலுக்கு வந்திருந்த பெண்களும் வாண்டுகளும் ஏதோ விநோதத்தைப் பார்ப்பதுபோல் சுற்றி நிற்கவும், கார்த்திக்  முகத்தில் சற்றே கூச்சம் படர்வதைக் கண்டேன்.

ஒருவழியாக எடைக்கு எடை வாழைப்பழங்கள் வைத்து, துலாபாரப் பிரார்த்தனை நிறைவேற்றியாகிவிட்டது. பழங்களுக்காக சுமார் ஆயிரம் ரூபாய் ரசீது கொடுத்தார்கள். பணியாளருக்கு டிப்ஸ் ஐம்பது ரூபாய். சிறப்பு அனுமதியுடன் சுவாமி தரிசனம். கேட்டதும் கொடுப்பவனே, கிருஷ்ணா, கிருஷ்ணா என்று போற்றினேன்.

எப்படிடா இருந்தது? என்று சகோதரிகள் இருவரும் கேட்டனர்.

சூப்பராக இருந்தது. தராசில் உட்காரவே முடியவில்லை. முட்டி வலிக்கிறது. அதனால், சின்னக் குழந்தையாக இருந்தபோதே செய்திருக்கவேண்டும் என்றான் கார்த்திக். ஆனாலும் முகத்தில் பெருமிதம் இருந்தது.

அவனை அணைத்துக்கொண்டாள் தாய். அதனால் என்னடா, நாளைக்கு உனக்கு ஒரு பையன் பிறந்தால், தாமதம் இல்லாமல்  உடனே துலாபாரம் செய்துவிடலாம். சரியா? என்றாள். எல்லாரும் சிரித்தார்கள்.

எந்த ஒரு செயலுக்கும் அதற்குரிய காலம் என்று ஒன்று இருக்கும் போலும். அப்போதுதான் அது நடக்கிறது. விதி என்று  சிலர் கூறுவது இதுதானோ?
*****
© Y Chellappa