வண்ணம் கொண்ட வெண்ணிலவு- 5
இதன் முந்தைய பகுதி -" வண்ணம் கொண்ட வெண்ணிலவு - 4 " படிக்க இங்கே சொடுக்கவும்.
(12)
பதினோரு மணிக்குப் பொன் ஃபைனான்ஸின் கிளைமேலாளர்கள் வந்தபோது தன் சூத்திரத்தை அவர்களுடன் பகிர்ந்துகொண்டாள் பொன்னி.
அடுத்த முப்பது நாட்களுக்குள் ஒவ்வொரு கிளைமேலாளரும் இவர்களிடமிருந்து மட்டும் குறைந்தது ஐந்து கோடியாவது டெபாசிட் திரட்டவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்தாள். இவர்களின் டெபாசிட்டுக்கு அரை சதவீதம் கூடுதல் வட்டியும், ஒருவேலை அவர்களுக்கு நகைக்கடன் தேவைப்படுமானால் வட்டியில் அரை சதவீதம் தள்ளுபடியும் கொடுப்பதாக, அதிகம் விளம்பரப்படுத்தாமல் தெரிவிக்கச் சொன்னாள். கிளைமேலாளர்களின் செயல்பாட்டுக்கு ஏற்ப புதிய போனஸ் திட்டத்தையும் அறிவித்தாள்.
இதற்கு நல்ல பலன் கிடைத்தது. ஒரே மாதத்தில் நாற்பது கோடி ரூபாய்போல புதிய முதலீடு கிடைத்துவிட்டது! திட்டமிட்டபடி ‘ஐயா’ வின் பணம் இப்போது அவருக்குக் கொடுக்கப்படப் போகிறது. ஆனால் அதற்குள்?
“கொடுத்துவிடாதீர்கள். அவர் எதிர்க்கட்சி வேட்பாளராக நிற்கப்போகிறார். அதனால் அவருக்கு உதவிசெய்தால் நீங்கள் ஆளும்கட்சிக்கு எதிரியாகி விடுவீர்கள்.”
வாசு சிரித்தான். “இது என்ன தனிப்பட்ட கொடுக்கல் வாங்கலா மலர்வண்ணன்? அவருடைய டெபாசிட்டை அவர் திருப்பிக் கேட்கிறார். நாங்கள் ஒரு நிதி நிறுவனம். கொடுக்காமல் இருக்க முடியுமா?”
“எனக்குத் தெரியாது மிஸ்டர் வாசு! உங்களை விடப் பெரிய ஃபைனான்ஸ் கம்பெனிகள் எல்லாம் கொடுக்க மறுத்துவிட்டார்களே, அது எப்படி?”
பொன்னி தனது அலைபேசியில் வந்த குறுஞ்செய்தியை அவரிடம் காட்டினாள். “அவர் பணம் அவருடைய வங்கிக்கு ட்ரான்ஸ்பர் ஆகிவிட்டது. இனிமேல் நாங்கள் எதுவும் செய்ய இயலாது. மன்னிக்கவும்” என்று கூறிவிட்டுத் தன் இருக்கைக்குச் சென்றுவிட்டாள்.
"காபி குடிக்கிறீர்களா மலர்வண்ணன்? இங்கு உங்கள் தோட்டத்து டீ கிடைப்பதில்லை” என்று சிரித்தான் வாசு. கறுப்புப்பணத்தைக் கையாளும் பினாமிக்கு எவ்வளவு துரோக புத்தி!
ஆவேசத்துடன் எழுந்த மலர்வண்ணன், “உங்கள் கம்பெனியை உண்டு இல்லை என்று ஆக்குகிறேனா இல்லையா பாருங்கள்” என்று சபதம் செய்துவிட்டு வெளியேறினார்.
வாசுவும் பொன்னியும் உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்தார்கள். தங்கள் கம்பெனியில் எந்த விதமான குளறுபடிகளும் கிடையாது. நகைக் கடன்களிலும் எந்தக் குறைபாடும் கிடையாது என்று தணிக்கை அறிக்கையும் உள்ளது. டெபாசிட்டர்களுக்கு உரிய தேதியில் பணத்தைத் திருப்பித் தராமல் இருந்தது கிடையாது. லாப நஷ்டக் கணக்கிலும் ஒரு ரூபாய் கூட பொய்க்கணக்கு எழுதியது கிடையாது.
“அதனால் இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். அதற்கு என்னுடைய பழைய வங்கியின் சேர்மனை உடனே சந்திக்கவேண்டும். அவரிடம் பேச வேண்டிய விஷயத்தைப் பற்றி ஒரு ரிப்போர்ட் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். அதற்குள் நீங்கள் அவரிடம் அப்பாயிண்மெண்ட் ஏற்பாடு செய்துவிடுங்கள்” என்றாள் பொன்னி.
பிறகு தன் மயிலாப்பூர் கிளை மேலாளர் தமிழ்ச்செல்வியை அழைத்து “உடனே கிளம்பு. அந்த எடிட்டரிடம் பேசு. நம்மைப்பற்றித் தவறான தகவல் வராமல் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்” என்று அவளிடம் ஒரு முக்கியமான பணியை ஒப்படைத்தாள்.
(13)
“வாங்க வாங்க மிஸ் பொன்னி! மிஸ்டர் வாசு!” என்று எழுந்து நின்று வரவேற்றார் பிரதீப்குமார். சேர்மன். “எங்கள் வங்கியின் முன்னாள் ஊழியர் இவ்வளவு வெற்றிகரமான நிறுவனத்தைத் தொடங்கி நடத்துவது எங்களுக்கு மிகுந்த பெருமை யளிக்கிறது” என்று பாராட்டினார்.
“எங்கள் சார்பாக தமிழ்ச்செல்வி அந்த எடிட்டரிடம் இப்போது அதைத்தான் பேசிக்கொண்டிருப்பாள்” என்றாள் பொன்னி.
அடுத்த சில வாரங்களில் அந்த வங்கி வேகமாகச் செயல்பட்டது. தாங்கள் செய்யப்போகும் 500 கோடி முதலீட்டுக்கு இரண்டு நிபந்தனைகளை விதித்தது.
முதல் நிபந்தனை, வாசுவிடமிருந்து பொன்னி, அந்த நிறுவனத்தின் சேர்மன் & மேனேஜிங் டைரக்டராகப் பொறுப்பேற்கவேண்டும். இரண்டாவது நிபந்தனை, வாசு, ராஜினாமா செய்துவிட்டு, மும்பையில் அந்த வங்கியின் தலைமை அலுவலகத்தில் சேர்ந்து, வட இந்தியாவை இலக்காக வைத்து, தங்கநகைக் கடன் நிறுவனம் ஒன்றைப் புதிதாகத் தொடங்கி அதன் சேர்மனாக இருக்கவேண்டும்.
“நல்ல பள்ளிக்கூடமாகப் பாருங்கள். வீடும் பக்கத்திலேயே இருந்தால் நல்லது” என்று நாணத்தோடு புன்னகைத்தாள் சாந்தி.
“வேறு வழி?” என்று அவளுடைய வலதுகரத்தைப் பற்றினான் வாசு.
“என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்றாள் பொன்னி, கண்களில் ஆனந்தக்கண்ணீர் மின்ன.
அப்போது அவளுடைய அலைபேசி ஒலித்தது. ‘ஐயா’வின் குரல்!
“வணக்கம் சார்! நானே உங்களைப் பார்க்கவேண்டும் என்று இருந்தேன். உங்கள் பணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டோம். எப்போது வேண்டுமானாலும் வந்து பெற்றுக்கொள்ளலாம்” என்று மலர்ச்சியோடு சொன்னாள் பொன்னி. “அல்லது மலர்வண்ணனை அனுப்பிவைக்கிறீர்களா?”
“அந்த துரோகியின் பெயரைச் சொல்லாதீர்கள்! நானே
வருகிறேன்” என்று போனை வைத்தார் ‘ஐயா.’
வாசுவைப்பார்த்து நிம்மதியாகச் சிரித்தாள் பொன்னி.
**** முற்றும் ****
நல்லதொரு முடிவு. அரசியல் தலைவர்கள், பினாமிகள் தொல்லை இப்படி நிறைய இடங்களில் இருக்கத்தான் செய்கிறது. அவற்றை வெற்றிகரமாக கடந்த விதம் நன்று. குறுந்தொடர் நன்றாக முடிந்தது - வெங்கட் நாகராஜ்.
பதிலளிநீக்குதேர்ந்த எழுத்தாளரான தங்களின் பாராட்டு நெஞ்சை நிறைக்கிறது நண்பரே! மிக்க நன்றி!
நீக்குபாசிட்டிவாக நிறைவுற்றது. எல்லாம் சுபம். பொன்னியின் மனதில் என்னமோ புதைந்து விட்டது போல ஒரு உணர்வு.
பதிலளிநீக்குஆமாம், பெண்களின் மனதில் புதைந்துள்ளதை முழுமையாக வெளிக்கொணரும் கலை எனக்குப் புரிவதில்லை நண்பரே !
நீக்குதிருப்பங்களை வைத்த விதம் வித்தியாசம். கடைசியில் last lap ஓடும் ஓட்டக்காரரைப்போல் விறு விறுவென்று கதையைக் கொண்டு சென்று முடித்து விட்டீர்கள்.
பதிலளிநீக்குஆனாலும் கதை ஒரு உரையாடல் போன்று அமைந்ததே அல்லாமல் ஒரு உபமானம் உருவகம் போன்ற இலக்கியத்தனம் இல்லாததால் பொலிவு குறைகிறது.
தங்கள் விமர்சனத்தை மதிக்கிறேன். புத்தகமாக ஆக்கும் போது பொலிவுறச் செய்து விடுகிறேன்!
நீக்குநல்லதொரு முடிவு. அரசியல்வாதிகள், பினாமிகள் பல இடங்களில் இப்படி பிரச்சனைகளை உண்டுசெய்ப்பவர்களாகவே இருக்கிறார்கள்.
நீக்குவாசு சாந்தி - எதிர்பார்த்த முடிவு. பொன்னியின் மனம் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்திருக்குமோ!
பதிலளிநீக்குஅரசியல் தலையீடுகள் இருக்கும் எதுவுமே நேர்மையாக சிக்கல் இல்லாமல் இருப்பது கடினமே. எப்படியோ இவர்கள் தப்பித்தார்கள் அதாவது ஆசிரியர் தப்ப வைத்துவிட்டார்!!!!! இப்பகுதி ஓடிவிட்டது! முந்தைய பகுதிகளில் கூட...கொஞ்சம் விஸ்தரிக்கலாமோ!?
கீதா
நிச்சயமாக! புத்தகமாக வெளியாகும்போது கொஞ்சம் ஊதிப் பெருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு!
நீக்கு