திங்கள், செப்டம்பர் 15, 2014

(பதிவு 106) ஷீரடி சாயிபாபாவை வணங்குவது தவறா? (அபுசி –தொபசி -44)

ஷீரடி சாயிபாபாவை வணங்குவது தவறா? (அபுசி –தொபசி -44) (15-9-2014)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக ஒவ்வொரு திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும். இடையில் திடீரென்று நின்றுபோனாலும், மீண்டும் வந்துவிடும்!)

அரசியல்

இந்திய அரசியலில் அரசியல்வாதிகளுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் உள்ள இரும்புப் பிணைப்பு எளிதில் உடைக்கமுடியாதது. அதிகார வர்க்கத்தின் துணையும் ஆலோசனையும் வழிகாட்டுதலும் இன்றி   எந்த அமைச்சராலும் நெறிதவறி நடந்துவிட முடியாது. ஆனால் அமைச்சரின் நெறி தவறலைக் கண்டுபிடித்துவிட்டாலோ, அவரை மட்டுமே குற்றவாளியாக்கிவிட்டுத் தாங்கள் தப்பித்துவிடுவதே அதிகார வர்க்கத்தின் வழக்கம். (அதிகார வர்க்கம் என்னும்போது ஐ.ஏ.எஸ். முதலிய முதல் வகுப்புப் பதவிகளும் அதற்கு மேலும் உள்ளவர்களையே குறிப்பிடுகிறோம்.)

அந்த வகையில் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் தமக்கு அமைச்சர்களாக இருந்தவர்களைப் பற்றி அவதூறு கிளப்பும் வகையில் மஞ்சள் பத்திரிகைகளின் அளவுக்குக் கீழிறங்கிவந்து வாதம் செய்யும் கால கட்டம் இந்தியாவில் இப்போது ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசின் கணக்குத் தணிக்கையாளராகப் பணி ஒய்வு பெற்றிருக்கும் ஒரு மலையாள அதிகாரி, முன்னாள் அமைச்சர் மாறனைப் பற்றியும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கைப் பற்றியும் அவதூறு கிளப்பிக்கொண்டிருக்கிறார் என்று அவர்மீது வழக்குத் தொடுக்கப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

முன்னாள் நீதிபதிகளும் இந்த அவதூறு பரப்புதலில் தீவிரப் பங்காற்றிக் கொண்டிருக்கிறார்கள். இருபது வருடங்களுக்கு முன்னால்  யாரோ யாருக்கோ சிபாரிசு செய்து பதவி பெற்றுக்கொடுத்ததாக, இப்போது சொல்ல முன்வந்திருக்கும் இவர்கள், தங்கள் பதவிக் காலத்தில் இதைச் சொல்லியிருந்தால் இன்னும் வலுவாக மக்களிடம் போய்ச் சேர்ந்திருக்குமே!         

இந்தியா ஜனநாயக நாடு என்பதால், எவரும் எதையும் செய்யலாம்தான். ஆனால், பதவியிலிருந்து ஓய்வு பெற்றபிறகு தங்களை எதுவும் செய்துவிடமுடியாது என்ற தைரியத்தில் ‘உண்மைகளை’  பேச முன்வருபவர்களின் நோக்கத்தை நாம் நிச்சயமாக ஐயுற வேண்டியிருக்கிறது. எதையோ எதிர்பார்த்து, அது கிடைக்கவில்லை என்ற நிலை உறுதியான பிறகுதான் இப்படிப் பேச ஆரம்பிக்கிறார்கள். இதை எப்படி நேர்மையாகக் கருத முடியும்? தங்கள்மீது நம்பிக்கை வைத்துப் பதவியில் இருத்திக்கொண்டவர்களை முதுகில் குத்தும்விதமாகச் செயல்படும் இவர்களை மரியாதைக்குரியவர்களாக நாம் கருத வேண்டிய அவசியம் உண்டா?

ஐ.ஏ.எஸ். வர்க்கம், தங்களில் ஒருவருக்கொருவரைக் காட்டிக் கொடுப்பதில்லை என்பதை அறிவோம். நீதித்துறையும் அப்படியே. (ஏற்கெனவே மருத்துவர்களும் அப்படியே என்பதை அறிவோம்.) இப்படிச் சமுதாயத்தின் ஒவ்வொரு துறையும் சுயநலம் காப்பதில் ஈடுபட்டால், அரசியல்வாதிகள்தானே பழி சுமக்க வேண்டும்? இப்படியிருந்தால் அரசியலில் நல்லவர்கள் எப்படிப் பதவிக்கு வர ஆசைப்படுவார்கள்? அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் என்றுதானே அது ஆகிவிடும்?

நமக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் சுமார் நூறிலிருந்து இருநூறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருக்கலாம். ஆனால் ஒரேயொரு சகாயம் தானே தார்மீகப் பண்பாட்டின் நெறியாளராக நமக்கு முன் தெரிகிறார்! மற்றவர்கள் என்ன ஆனார்கள்? சகாயம் மாதிரி இல்லாவிடினும், சகாயத்தில் பாதி உயரமாவது இவர்கள் வளர முடியாதா? ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் பலர்  கதை, கட்டுரை, கவிதை எழுதுகிறார்கள். திரைப்படம் எடுக்கிறார்கள். ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெறுகிறார்கள்.  ஆனால் சகாயம் மாதிரியோ, ட்டி.என்.சேஷன் மாதிரியோ தங்கள் கடமைகளில் உறுதியான செயல்பாட்டைக் காட்டி இவர்கள் நமக்கு முன்னால் உயர மறுக்கிறார்களே ஏன்?

தமிழ்நாட்டிலிருந்து துடிப்பும் சிறந்த கல்வித்தகுதியும் உடைய இளைஞர்கள், கடந்த சில ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ்.-தேர்வுகளில் ஆர்வமாகப் பங்குகொண்டு வெற்றியும் பெற்று வருகிறார்கள். சைதை துரைசாமி போன்றவர்களின் அமைப்புகள் இதற்கு முக்கியக் காரணமாக இருந்து வருகின்றன. தேசிய அளவில் டாப்-10 அளவில் வருகின்றனர். அவர்களுக்கு ‘ரோல் மாட’லாக இருப்பதற்கு ஒரேயொரு சகாயம் போதுமா என்று கேட்காமல் இருக்க முடியவில்லையே!

புத்தகம்


தன் சொத்து முழுதையும் மருத்துவ மனைகளுக்கு வழங்குமாறு உயில் எழுதிவைத்துவிட்டு வாரிசின்றி இறந்துபோன மூத்த எழுத்தாளர் ஆர். சூடாமணி யின் ‘இரவுச் சுடர்’ என்ற (சிறு) நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். எளிமையான நடை, எளிமையான சொற்களில் கனமான வருணனைகளை எளிதாகக் கொண்டுவந்துவிடும் நயமான எழுத்து கைவரப்பெற்ற சில மூத்த எழுத்தாளர்களில்  சூடாமணியும் ஒருவர். ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பெண் ணானதாலும், ஆரோக்கியமின்மை காரணமாகவும்  வீட்டை விட்டு வெளியே சென்று சாதாரண மக்களோடு பழகும் வாய்ப்பு அதிகம் இல்லாதவராக இருந்தவர் சூடாமணி. எனவே அவரது பாத்திரங்கள் யதார்த்தங்களிலிருந்து சற்று விலகியே இருக்கிறார்கள் என்று படுகிறது.   

கதாநாயகி யாமினியைக் கட்டாயப்படுத்திக் கல்யாணம் செய்விக்கிறார்கள்  பெற்றோர்கள். அவளுக்குக் குழந்தையும் பிறக்கிறது. அப்போது அவளுக்கு மனச் சிதைவு ஏற்பட்டுவிடுகிறது. இதற்குத் தாம்தான் காரணமோ என்ற குற்ற உணர்வுக்கு ஆளாகிறார், யாமினியின் தந்தை சாரநாதன். குழந்தையைத் தான் செய்த பாவத்தின் குறியீடாகவே பார்க்கிறாள், யாமினி. அதனால் அவள் வெறி அதிகரித்து, தற்கொலை செய்துகொள்ள முயன்று, தடுக்கப்பட்டு விடுகிறாள். உடலில் இருந்து விடுதலை வேண்டுகிறாள் அவள். சாரனாதனும் அவளைப் புரிந்துகொண்டதற்கு அடையாளமாக, யாருக்கும் தெரியாமல், அவள் தற்கொலை செய்ய உதவுகிறார். அவளுக்கும் தனக்கும் இதனால் நிம்மதி ஏற்படுவதாக உணரும்போது, இந்த நிம்மதியே அவருக்கு இன்னொருவகையான குற்ற உணர்வையும் ஏற்படுத்தி அவரை மனச் சலனத்துக்குள்ளாக்குகிறது.

யாமினியின் பெண் கீதாவும் அவளைப்போலவே கன்னியாக இருந்துவிட விரும்புகிறாளோ என்ற ஐயப்பாட்டுடன் கதை தொடங்குகிறது.

கொஞ்சம் ஆழ்ந்து படிக்கவேண்டிய கதை. இரண்டு முறையாவது படித்தால்தான் எழுதியவரின் உள்ளம் ஓரளவாவது வெளிப்படும் வாய்ப்பிருக்கிறது. ‘இது, இன்னும் அதிகம் பேசப்படவேண்டிய  நாவல்’ என்கிறார், முன்னுரை வழங்கியுள்ள இந்திரா பார்த்தசாரதி.

‘இரவுச் சுடர்’ – ஆர். சூடாமணி- காலச் சுவடு வெளியீடு. (2010) விலை ரூ.75.  (C) பாரதி.

சினிமா, தொலைக்காட்சி : அடுத்த இதழில் காண்க.

பத்திரிகை

ஷீரடி சாயிபாபாவை இந்துக்கள் தொழவேண்டாம் என்று குஜராத்தில் உள்ள துவாரகா பீட சங்கராச்சாரியார் கூறியது பற்றி பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அவுட்லூக் வார இதழ் தனது 15-9-2014 இதழில் இதுபற்றிய கவர்ஸ்டோரியை எழுதியுள்ளது.


ஷீரடி சாயிபாபாவின் பிறப்பு பற்றிச் சரியான தகவல் இல்லை. மகராஷ்டிராவில் பர்பானி மாவட்டத்தில் (ப்)பத்ரி என்ற ஊரில் பிறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர் ஒரு முஸ்லீமால் வளர்க்கப்பட்டவர் என்றுமட்டும்  தெரிகிறது. இந்துவாகவே இருந்தாலும் இன்னொரு மதத்தவரால் இளம்பருவத்திலிருந்தே வளர்க்கப்பட்டால் அந்த மதத்துக்குரிய குறியீடுகளும் வாசகங்களும்தானே வெளிப்படும்! ஆகவே, ‘அல்லா மாலிக்’ என்று சாய்பாபா அடிக்கடி கூறுவார். ஆனால் அவர் சொன்ன அல்லா, இஸ்லாமிய  மதத்தவரான அல்லா அல்ல. எல்லா மதத்துக்கும் பொதுவான இறைவனையே அவர் அல்லாவாய் அடையாளம் காட்டினார். 

அவரைப் பற்றிய கதைகளும் அமானுஷ்ய செய்திகளும் அதிகம் பேசப்பட்டுள்ளன.     பூனா அருகிலுள்ள ஷீரடியில் உள்ள சாயிபாபா ஆலயம், திருப்பதி வேங்கடவனுக்கு அடுத்தபடியாக செல்வம் மிகுந்த ஆலயம். நினைத்தவர்களுக்கு நினைத்ததை நிறைவேற்றிக் கொடுக்கிறார் சாயிபாபா என்று பலர் என்னிடம்  கூறியது உண்டு. சினிமாப் படங்களும் சின்னத்திரைத் தொடர்களும் அவரைப் பற்றி ஏராளமாக வந்துள்ளன. 


பெங்களூரில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தபோது எனது உடன்பணிபுரியும் இன்னொரு அதிகாரியான நரசிம்மராவ், வியாழக்கிழமைகளில் மாலையில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும்போது  கோரமங்களாவில் இருந்த சிறிய சாயிபாபா ஆலயத்திற்குச் செல்வதுண்டு. இருவரின் வீடும் கோரமங்களாவில் இருந்ததால் ஒரே காரில் செல்வதுண்டு. அப்படி ஒரு வியாழன் மாலை நானும் அவருடன் சாயிபாபா ஆலயத்திற்குச் சென்றேன். 

அதற்குமுன் அங்கும் சரி, வேறு எந்த ஊரிலும் சரி, சாயிபாபா ஆலயத்திற்கு நான் சென்றதில்லை. அரவிந்த அன்னையின் தத்துவங்களால் ஆட்கொள்ளப்பட்டிருந்த எனக்கு வேறு ஆன்மிக ஞானிகளின் துணையைத் தேடவேண்டிய அவசியம் இருக்கவில்லை. என்றாலும் எவரையும் நான் மறுதலித்ததில்லை. ரமணாசிரமத்திற்குச் சென்றிருக்கிறேன். திருக்கோவிலூர் சென்றிருக்கிறேன். விசிறி சாமியாரைத் தரிசித்திருக்கிறேன். பாலமுருகனடிமையையும், பங்காரு அடிகளாரையும், அண்மையில்  சிவசங்கர் பாபாவையும் கூட,  பார்த்துப் பேசியிருக்கிறேன். (புட்டபர்த்தி சாயிபாபாவை மட்டும் நான் பார்க்க முடிந்ததில்லை.) ஏதோ ஒரு ஆன்மிக சக்தி இல்லாமல் எந்த ஒருவரையும்  பல்லாயிரம் மக்கள் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டிருக்க முடியாது. அந்தச் சக்தியை முன்னிட்டு அவர்களை நான் மரியாதையோடு வணங்குவது வழக்கம். அப்படித்தான் கோரமங்களா சாயிபாபா ஆலயத்திற்கும் சென்றேன்.

பார்த்ததுமே, சாயிபாபாவின் திருஉருவம் என்னிடம் ஏதோ பேசுவதுபோல் உணர்ந்தேன். வலம் வந்தேன். ‘பூரண சரணாகதி’ யோ, ‘பாபாவே கதி’ என்ற உணர்வோ ஏற்படவில்லை என்றாலும், சாயிபாபா என்பது பொய்யில்லை, மிக உயர்ந்த ஆன்மிக வடிவம் என்பது எனக்குத் தெளிவாக உணர்த்தப்பட்டது.

இனிப்பு வழங்கினார்கள். அதை வாயிலிட்டுச் சுவைத்துக்கொண்டே காருக்குத் திரும்பினோம். ‘சாயிபாபாவை வணங்கினீர்கள் அல்லவா, உங்களுக்கு ஏதோ ஒரு நல்லது நடக்கப் போகிறது. பார்த்துக்கொண்டே இருங்கள்’ என்றார் நரசிம்ம ராவ்.

‘அது எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்லுகிறீர்கள்?’ என்றேன்.

‘அது அப்படித்தான். முதல்முறை வரும் பக்தர்களிடம் தன் மகிமையை உணர்த்திக்காட்டுவது பாபாவின் வழக்கம்’ என்றார் அவர்.

‘நல்லது’ என்று புன்சிரிப்புடன் கூறிவிட்டு இறங்கினேன். யார்தான் நல்லது நடந்தால் வேண்டாம் என்று சொல்வார்கள்? என் வீடு வந்துவிட்டது.

அடுத்த வாரம் சென்னை சென்றிருந்தேன். ஒரு துணிக்கடையில் துணி எடுத்துக்கொண்டிருந்தோம் நானும் (என்!) மனைவியும். அப்போது என் அலைபேசி ஒலித்தது. எப்போதும் என்னுடன் அலைபேசியில் பேசியிராத, எங்கள் வங்கியின் மனிதவளத் துறையின் பொதுமேலாளர் மோகன் ராவ் அவர்கள் என்னிடம் பேசினார். ‘உங்களை இரண்டுநாள் பயிற்சிக்காக பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவுக்கு அனுப்ப முடிவு செய்திருக்கிறோம். அநேகமாக இன்னும் ஒரு வாரத்தில் போகவேண்டி இருக்கலாம். குறைந்த அவகாசமே இருப்பதால் முன்கூட்டியே தெரிவிக்கிறேன். உரிய ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுங்கள்” என்று அலைபேச்சை முடித்தார்.

உடனே நரசிம்மராவுக்குத் தகவல் சொன்னேன். அவர் சிரித்தார். ‘நான் தான் சொன்னேனே - சாயிபாபா ஏதாவது ஒரு புதுமையைச் செய்து தன்னை உங்களுக்கு விளக்குவார் என்று!’     

சில மாதங்களுக்குப் பிறகு என்னுடைய துறையின் பொதுமேலாளரிடமிருந்து  தெரிந்துகொண்ட செய்தி இது: அதிகாரிகளுக்கு  வெளிநாட்டுப் பயணங்களை அளிக்கும் முன்பு, உரிய துறையின் பொதுமேலாளருடன் ஆலோசித்தபிறகே வங்கியின் தலைவர் முடிவு செய்வாராம். ஆனால் இந்த விஷயத்தில் எனது பொதுமேலாளருக்கே அறிவிக்கவில்லையாம். தனக்கு வந்த ஒரு கடிதத்தின் மீது, என் பெயரை எழுதி, ‘இவரை அனுப்புங்கள்’ என்று உத்தரவிட்டிருந்தாராம் தலைவர். வேறு யார் விஷயத்திலும் அம்மாதிரி நடந்ததில்லையாம்!

சிரிப்பு / சிந்தனை

“பத்ரிநாத்திற்குப் போகும் வழியில் ஒருநாள் நான் கூடத் தக்காளிப் பச்சடி பண்ணினேன் அம்மா” (என்றாள் கீதா).

...”எத்தனை பேர் பந்தியிலிருந்து உயிரோடு எழுந்தா(ர்கள்)?” என்றான் ராமேசன்.

“நிஜந்தான். எப்படியம்மா இத்தனை மோசமாய்ச் சமைச்சே-அப்படின்னுதான் எல்லாரும் என்னை கேட்டா”.

“இருக்கணுமே!”

“என் அப்பா டியுஷன்னு நான் பதில் சொன்னேன்”.

“கள்ளி!”

 தயிர் ஊற்றுவதற்குமுன் அன்னம் பரிமாறப்பட்டது. தன் வட்டிலில் விழுந்த கவளத்தில் படிந்திருந்த ஒரு ரோம இழையை கீதா முதலிரண்டு விரல்களால் எடுத்துத் தூக்கிப் பிடித்தாள். ‘இதை எந்த விட்டமினுக்காகச் சேக்கறது அம்மா?’ என்றாள் பெருந்தேவியைப் பார்த்து.

“சரிதாண்டி. தூக்கி எறிஞ்சுட்டு இலையைப் பாத்துச் சாப்பிடு” என்ற செல்லக் கண்டிப்பு வந்தது.

“என்ன கீது அது?” என்று கேட்ட ராமேசன் கண்ணைச் சிமிட்டிக்கொண்டே, தொடர்ந்து “கேசவாச்சாரியா, சவுரி ராஜனா?” என்றான்.

“ரெண்டுபேருமில்லை. ரோமாபுரி வீரன்” என்று கீதா பதில் சொன்னாள். ராமேசன் சிரித்தான்.

-(ஆர்.சூடாமணியின் ‘இரவுச் சுடர்’ நாவல்: பக்கம்: 32-33) காலச்சுவடு.

© Y Chellappa  (email: chellappay@yahoo.com) 

வியாழன், செப்டம்பர் 11, 2014

( பதிவு 105) 1921 சுதேசமித்திரனில் வந்த பாரதியாரின் மரணச் செய்தி (அபுசிதொபசி - 43)

அபுசி –தொபசி -43 (11-9-2014)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக ஒவ்வொரு திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும். இடையில் திடீரென்று நின்றுபோனாலும், மீண்டும் வந்துவிடும்!)

அரசியல்

இன்று (செப்டம்பர் 11ஆம் தேதி) மகாகவி பாரதியின் நினைவுநாள். உண்மையில் அவரது மரணம் செப்டம்பர் 11ஆம் தேதி இரவு 1 மணிக்கு நேர்ந்தது. எனவே சரியான நினைவு நாள் செப்டம்பர் 12 தான்.

1921 செப்டம்பர் 12 திங்கட்கிழமை (துன்மதி வருடம், ஆவணி மாதம் 28 ஆம் தேதிய சுதேசமித்திரனில் 6ஆம் பக்கம், ‘நகரச் செய்திகள்’ பத்தியில், கடைசிச் செய்தியாக இது வெளிவந்துள்ளது:

“தென்னாட்டுக் கவிசிரேஷ்டர் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி மரணம்

ஒரு வாரமாக ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி தேகநோய் கொண்டு திருவல்லிக்கேணியில் அசௌக்கியமாயிருந்து, திடீரென்று நேற்று இரவு 1 மணிக்கு இம்மண்ணுலகைவிட்டு விண்ணுலகமடைந்தார். அவர் இறந்த செய்தி தெரிந்தவுடன் ஸ்ரீமான்களான புதுச்சேரி ஸ்ரீநிவாசாச்சாரியார், திருமலாச்சாரியார், ஹரிஹர சர்மா, கிருஷ்ணசாமி சர்மா, சின்னஸ்வாமி, நெல்லையப்பர், நீலகண்டன் முதலான பலர் வந்தனர். செய்ய வேண்டிய காரியங்களுக்கு ஆரம்பஞ்செய்து தகனக் கிரியையும் நடந்தது. ஹரிஹர சர்மா, கிருஷ்ணசாமி சர்மா முதலானவர்கள் பிரேதத்தைத் தாங்கிக் கொண்டு சுடுகாடு சென்று, ஆங்கு, தகனத்திற்குச் சற்று முன்னர் ஸ்ரீமான் சக்கரைச் செட்டியார், கிருஷ்ணசாமி சர்மா, இராமச்சந்திர அய்யர் இவர்கள் தமிழில் பேசிய பிறகு, சுரேந்திர நாத ஆர்யா தெலுங்கில் பேசினார். பாரதியார் இயற்றிய கீதங்கள் பாடின பிறகு தீ மூட்டப்பட்டது. பாரதியார் ஆவி நற்கதியடையும்படி எல்லோராலும் பிரார்த்திக்கப்பட்டது”.
 
 நன்றி: ரா.அ.பத்மநாபனின் சித்திர பாரதி
அதே நாள் ‘சுதேசமித்திரன்’ தனது இரண்டாம் தலையங்கத்தில் எழுதியதிலிருந்து சில வரிகள்:

“மக்கள் வாழ்வு நீர்மேல் குமிழிபோலும்! தமிழ்நாடு போற்றும் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் இவ்வுலக வாழ்வை நேற்றிரவு துறந்து விண்ணவருக்கு விருந்தாகி விட்டார் என்ற செய்தியை அறிவிக்க நமது மனம் பதறுகிறது. சில தினங்களாக  நோயினால் வருந்திக் கொண்டிருந்த அவரை மறுபடியும் ஸ்தூல சரீரத்தில் பார்க்கப் போகிறதில்லை என்று நாம் நினைக்கவில்லை. திங்கட்கிழமையன்று ‘மித்திரன்’ வேலைக்கு வந்து விடுவதாகச் சில தினங்களுக்கு முன் சொல்லி யனுப்பிய அவர் திங்கட்கிழமையன்று சாம்பலாகி விட்டது என்ன கொடுமை!  39 வயதுக்குள் தமது கவித்திறமையாலும் தேசபக்தியாலும் தமிழ் நாட்டை வசப்படுத்தி விட்ட இச் சிறு பிள்ளையின் பிரிவை தமிழ் நாடு எப்படி சகிக்குமோ அறியோம். அன்பே உருவெடுத்தாற்போன்று விளங்கிய அவரைப் பிரிந்து அவரது மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் எப்படிப் பொறுத்திருப்பாரோ கொடிய எமனுக்குத்தான் தெரியும். ............அவருடைய ஞாபகத்தைப் பாராட்டி பகல் இரண்டு மணியுடன் வேலை நிறுத்தப்படுகிறதால் ஏற்பட்ட சமாச்சாரங்கள் இன்று மித்திரனில் பிரசுரமாகமாட்டா.”
 
மகாகவியின் நினைவாக நான் எப்போதோ எழுதிய கவிதையின் ஒரு பகுதி:

வறுமைத் தீயிலும்
வண்ணம் குலையாத
பாரதியாரின் இறப்புச் சான்றிதழ்
நன்றி: சித்திர பாரதி
சொக்கத் தங்கம் பாரதி..!

யாரைப் பிடிக்கவும்
எருமையில் வருபவன்,
இவனைப் பிடிக்க
யானையை அனுப்பினான்!

ஆனால்,
மரணம் வந்ததும்
செத்துப் போய்விட

பாரதி என்ன
வேடிக்கை மனிதனா?

ஆயிரம் யுகங்கள்
சாதிக் கிறதை
ஆண்டுகள் சிலதில்
புரிந்த வன் அவன்!

ஒரு தேவ ரகசியம்
மானிட பூமியில்
விரியலானதே அவன்                                     
வாழ்க்கைச் சுருக்கம்!
   (‘எட்டயபுரத்து மீசைக்காரன்’ ப.42)

புத்தகம்

பாலகுமாரனை அறியாதவர் உண்டோ? இன்பச்சுவை ததும்பும் கதை எழுதுவதில் எவ்வளவு வல்லவரோ அதே வல்லமையை ஆன்மிக எழுத்திலும் கொண்டுவரும் திறம் படைத்தவர் பாலகுமாரன். அவருடைய ‘காலடித் தாமரை’ என்ற நூலை இன்று மீண்டும் படித்தேன். காலடியில் அவதரித்த ஆதி சங்கரரின் வரலாறு. இன்னும் படிக்காதவர்களுக்காக இதோ ஒரு சிறு பகுதி: (ப.80)

துறவறம் பூண விரும்பிய சிறுவன் சங்கரனிடம் தாயார் ஆர்யாம்பாள் சொல்கிறார்:

“எனக்கு நீ ஒரே பிள்ளை. உனக்கு நான் ஒரே உறவு. இதையும் உதறிவிட்டு நீ போனால் நல்லதா, எனக்கு ஒரு வழி சொல்லி விட்டுப் போ. யார் எனக்கு நீத்தார் கடன் செய்வார்கள் என்று ஏற்பாடு செய்துவிட்டுப் போ. இதை யார் செய்ய முடியும் சங்கரா. உன்னைத் தவிர வேறு யார் செய்ய முடியும்?...”


பிள்ளை கண் மூடினான். மனம் குவித்தான். மெல்ல பேசத் துவங்கினான். “உலகத்தில் ஒரு மனிதனுக்கு மிகப் பலமான பந்தம் தாய்தான். பத்து மாதம் தன் கருவுக்குள் ஒருவனைச் சுமந்து அவனை நன்றிக்கடன்பட ஒரு தாய் வைத்திருக்கிறாள். தன் ரத்தத்தை பாலாக்கி அவனுக்கு ஊட்டி அவனை வளர்க்கிறாள். இந்த இரண்டு காரணங்களுக்காகவும் ஒவ்வொரு மனிதனும் தாய்க்கு நன்றிக்கடன் படுகிறான். அவள் எத்தகையவளாக இருந்தாலும் அவளுக்குப் பதிலுக்கு நன்மை செய்ய வேண்டிய அவசியம் உள்ளவனாக இருக்கிறான். எனவே நான் சந்நியாசியாக ஆனாலும், துறவு மேற்கொண்டு எங்கு அலைந்தாலும், என்ன செய்துகொண்டிருந்தாலும், உன் அந்திம வேளையில் கண்மூடி என்னை நீ நினைத்துக் கொண்டிருக்கிறபொழுது நான் இங்கே ஓடி வருவேன். உன் அருகே இருப்பேன். உனக்கு அருகே இருந்து உன்னுடைய பிராணன் போகிறபோது உன் காதிலே நான் நாராயண மந்திரம் சொல்வேன். நெஞ்சில் கை வைத்து, சிரசில் கை வைத்து நான் உன்னை உனக்குள் செலுத்துவேன். பிறவியில்லாமல் உன்னை இந்தப் பூமியிலிருந்து முற்றிலுமாய் அகற்றுவேன்.  உன் பூத உடலுக்கு அந்திமக் கிரியைகள் செய்வேன். நன்கு தகனம் செய்வேன். நீத்தார் கடன்கள் செய்வேன். உனக்கு வானுலகம் போக வழி காட்டுவேன்.

“மரணம் பற்றிய எந்தக் கவலையும் உனக்கு வரவேண்டாம். இந்தக் கணத்திலிருந்து அதைத் தூக்கிப் போட்டுவிடு.- உன் மரணம் எப்பொழுது என்று நான் அறிவுறுத்துவேன். மரணம் பற்றிய பயத்திலிருந்து உன்னை விலக்குவேன். இதை சத்தியமாக உனக்கு சொல்கிறேன்” என்று கைதூக்கி சங்கரன் நிற்க, ஆர்யாம்பாள் புதுப்பொலிவு பெற்றாள். உள்ளுக்குள் திடம் பெற்றாள்.

எல்லோரும் சாகப் பயந்துதான் சாகிறார்கள். ஆர்யாம்பாளுக்கு மரணம் பற்றிய பயம் அப்பொழுதே அகன்று விட்டது.

“சரி போய் வா”. ஆர்யாம்பாள் கை கூப்பினாள்.

“என்ன, போய் வா என்று சொல்கிறாயே” சங்கரன் விழிகள் உயர்த்தினான்.

“ஆமாம், என் மரணத்தின்போது  இங்கு வருகிறேன் என்று சத்தியம் செய்தாய் அல்லவா, எங்கு போனாலும் இங்கு வருவாய் அல்லவா. அதனால் தான் நீ துறவியாகப் போகிறேன் என்று சொன்னாலும், போ என்று சொல்லாமல் போய் வா என்று சொல்கிறேன். மறுபடியும் இந்த கிராமத்திற்கு நீ வந்துதானே ஆக வேண்டும். போய் வா”.

அவள் விடை கொடுத்தாள். சங்கரர் தாயை வலம் வந்து நமஸ்கரித்தார்... (அவரது பயணம் ஆரம்பமாகிறது.)

காலடித் தாமரை – பாலகுமாரன். கிரி டிரேடிங் ஏஜென்சி வெளியீடு. (2002). 224 பக்கம் ரூபாய் 50.

(புத்தகம் வாங்கும்போது சில கைக்குட்டைகளையும் வாங்கிவிடுங்கள். வழியும் கண்ணீரைத் துடைக்காமல் பாலகுமாரனைப் படிக்க முடியுமா!)

சினிமா
சக பதிவரான கேபிள் சங்கரின் இயக்கத்தில் ‘தொட்டால் தொடரும்’ என்ற படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. நீண்ட நாளைக்குப் பிறகு தியேட்டருக்குப் போய் நான் பார்க்கவிருக்கும் படம் அதுவாகத்தான் இருக்கும். இதற்கிடையில் ‘பாஸு, பாஸு‘ பாடல் மிகவும் பிரபலமடைந்துவிட்டதாமே!

இதற்கிடையில் இன்னொரு சக பதிவரான குடந்தை ஆர் வி சரவணன் தனது குறும்படத்தை எடுத்து முடித்திருக்கிறார். அவருடன் கோவை ஆவியும் ‘தில்லைஅகத்து’ துளசிதரனும் நடித்திருக்கும் இப்படத்தின் பிற வேலைகள் முடிய ஒரு மாதம் ஆகலாம் என்கிறார்கள். அதையும் பார்க்கவேண்டும்.

தொலைக்காட்சி
இரண்டு மாதங்களாக ‘டைம்ஸ் நௌ’ டிவி பார்ப்பதை நிறுத்திவிட்டேன். அர்னாப் கோஸ்வாமியின் திமிர்க்கூச்சல்களை இனியும் கேட்க எனக்குப் பொறுமை இல்லை. காது உடைந்துபோகும் அளவுக்குக் கத்த வேண்டிய அவசியம் என்ன என்று புரியவில்லை. மனிதன் எப்போதுதான் திருந்துவாரோ! இவரைக் கிண்டல் செய்யும் விதமாக என்.டி.டிவி-யில் “You need not shout to be heard” என்று போடுகிறார்கள். இத்துடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் ‘புதிய தலைமுறை’க்கும்  ‘தந்தி டிவி’க்கும் கோவில் கட்டிக் கும்பிடலாம்.

பத்திரிகை

‘மஞ்சரி’யில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் எழுதும் கேள்வி-பதில் பகுதி சுவையானது. இந்த மாதம் (செப்டம்பர் 2014) இடம் பெற்றுள்ள ஒரு கேள்வி:

வெட்டிவேலை, வேலைவெட்டி –இச் சொற்றொடர்களின் வேறுபாடுகள் எவை?

பதில்: என்னுடைய நண்பர் கோவை தமிழாசிரியர், ‘தையல்காரர்கள்’ குறித்து ஓர் அழகான கவிதை சொன்னார்:

தையல்காரர்கள்
வேலைவெட்டி இல்லாமல்
வெட்டி வேலை செய்பவர்கள்

இந்தக் கவிதையின் வார்த்தை விளையாட்டு மிக அழகாக அமைந்துள்ளது. பொதுவாக பலசரக்குக் கடைகளில், உணவகங்களில் யாரும் பொருள் வாங்க, சாப்பிட வரவில்லைஎன்றால் அந்தக் கடைகளில் இருப்பவர்கள் வேலையில்லாமல் வெட்டியாக (சும்மா) உட்கார்ந்திருப்பார்கள்.


ஆனால் தையல்காரர்கள் மட்டும் எப்போதும் தைத்துக்கொண்டோ, வெட்டிக்கொண்டோ இயங்கிக்கொண்டே இருப்பார்கள். அதனால்  ‘வேலைவெட்டி’ என்கின்ற சொல், ‘வெட்டிவேலை’ என்று சொல்லப்படுகிறபோது உயிர்பெறுவதைப் பார்க்கிறோம்.

இதுதவிர தமிழ் பேச்சுவழக்கில் இதுபோன்ற பல சொற்கள் உண்டு. வீடுவாசல், நிலம்நீச்சு, கடன்கப்பு போன்ற சொற்களையும் ஆராய்ச்சி செய்யலாம்.

சிரிப்பு / சிந்தனை

தூங்கும்போது பார்ப்பது கனவல்ல, உங்களைத் தூங்கவிடாமல் அடிப்பதே கனவு. – டாக்டர் அப்துல் கலாம்.

© Y Chellappa  (email: chellappay@yahoo.com).

ஞாயிறு, ஜூலை 27, 2014

(பதிவு 104) மீண்டும் பூத்தது கொன்றை மரம்-3 (இறுதி)

(பதிவு 104) மீண்டும் பூத்தது கொன்றை மரம்-3 (இறுதி)

அன்று மாலை பெரிய ஏரிக்கரையின் நான்காவது படிக்கட்டில் அமர்ந்துகொண்டோம். நேற்றை விட இன்று அதிக மென்மையாகவும் இனிமையாகவும் வீசியது காற்று. வறுத்த நிலக்கடலையைக் கொறித்துக்கொண்டே  பேசினோம். ஒரே மாதத்தில் ஐம்பது ரூபாய் சேர்ந்துவிடும் என்று தோன்றியது. அப்படியானால் அதற்கடுத்த மாதத்தில் முதல் புத்தகம் வெளிவந்துவிடும்! கூப்பிடும் தூரத்தில் அல்லவா வெற்றி காத்திருக்கிறது! இப்படிப்பட்ட செயல்திறனுள்ள ஒருவன் எனக்கு நண்பனாகக் கிடைக்க நான் எவ்வளவு கொடுத்துவைத்திருக்க வேண்டும்!

வெள்ளி, ஜூலை 25, 2014

(பதிவு 103) மீண்டும் பூத்தது கொன்றை மரம்-2

(பதிவு 103) மீண்டும் பூத்தது கொன்றை மரம்-2
முதல் பதிவைப் படிக்க: (பதிவு 102) மீண்டும் பூத்தது கொன்றை மரம்-1

அடுத்த ஒரு மாதத்திற்குள் ராஜனின் கற்பனைக் கப்பல் விரைந்து பயணம் செய்யத்தொடங்கியது. மணிக்கணக்காக என்னிடம் கதை சொல்ல ஆரம்பித்தான். எனக்கோ பிரமிப்புக்கு மேல் பிரமிப்பு. இவ்வளவு கற்பனைகளை அவன் எப்படித்தான்  இத்தனைநாள் தனக்குள் சுமந்துகொண்டிருந்தானோ!  நிச்சயம் இவன் கல்கியை விட, நாஞ்சில் பி.டி.சாமியைவிடப் பெரிய எழுத்தாளன் ஆகப்போகிறான் என்பதில் எனக்குச் சந்தேகம் எழவில்லை.

புதன், ஜூலை 23, 2014

(பதிவு 102) மீண்டும் பூத்தது கொன்றை மரம்-1

(பதிவு 102) மீண்டும் பூத்தது கொன்றை மரம்-1

பொன்னார் மேனியனே!  புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே!
மன்னே, மாமணியே!  மழபாடியுள் மாணிக்கமே!
அன்னே நின்னையல்லால்,  இனி, யாரை நினைக்கேனே?

(சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரப் பாடல். ஏழாம் திருமுறையில் 24வது திருப்பதிகமாக அமைந்துள்ளது. சோழநாட்டில், காவிரியின் வடகரையில் உள்ள திருமழபாடி, 54வது பாடல் பெற்ற தலமாகும்.)
***
பொன்னியின் செல்வனுக்குப் போட்டியாக ஒரு நீளமான சரித்திர நாவல் எழுதி, அதைத் தானே புத்தகமாக வெளியிடவேண்டும் என்ற ஆர்வம் தேன்கனிக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ராஜனுக்கு இருந்தது. ஆனால் அவனது  ஆர்வத்தைப் புரிந்துகொள்ளும் மனப்பக்குவமுடைய உயிரினங்கள் யாரும்  அவனுடைய ஆசிரிய வர்க்கத்திலோ, மாணவச் செல்வங்களிலோ, உற்றார் உறவினர்களிலோ  இல்லை.

செவ்வாய், ஜூலை 15, 2014

(பதிவு 101) பெண் ஜோதிடரும் ஆண் ஜோதிடரும் ..( தொடர்ச்சி)


அடுத்த நாள்.

தமிழர்களாகிய நமக்குக் காலையில் எழுந்ததும் இரண்டு விஷயங்கள்தானே நிரந்தரம்? ஒன்று, காப்பி குடித்தல். இன்னொன்று ‘ஹிந்து’ படித்தல்.

நான் ஹைதராபாத், பெங்களூர், டில்லி போன்ற பெருநகரங்களில் இருந்திருக்கிறேன். அங்கெல்லாமும் ‘ஹிந்து’ வரும். ஆனால் படிக்கச் சகிக்காது. முதல் நான்கு பக்கங்கள் பெரும்பாலும் அந்தந்த ஊரிலுள்ள  ஆசிரியர்களால் நிர்வகிக்கப்பட்டதால், உள்ளூர் செய்திகளே அதிகம் வரும். ஆனால், ஒரு சில பத்திகளைத்தவிர, மற்றவை படிக்க சுவாரசியமாக இராது. காரணம், சென்னை ‘ஹிந்து’வின் எழுத்துப்பாணி அங்கே இருக்காது! அதனால், சென்னை வரும்போதெல்லாம், காலையில் ‘ஹிந்து’வை எழுத்துவிடாமல் படித்து ஆசையைத் தீர்த்துக்கொள்வேன்.

ஞாயிறு, ஜூலை 13, 2014

100-வது பதிவு: என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார் அந்தப் பெண்!


எனது நூறாவது பதிவு:

அஸ்தினாபுரத்தில் பாண்டவர் அரண்மனைக்குச் சென்று திரும்பிய துரியோதனன், நீரில்லா இடத்தை  நீரென்று கருதித் தாவுகையில் கால் இடறி விழுந்தான்.  தோழியர் புடைசூழ அங்கிருந்த பாஞ்சாலி நகைக்கிறாள். விழுந்த அவமானத்தை விடவும், தன்னால் விரும்பப்பட்ட பெண்ணொருத்தியின் நகைப்பே துரியோதனனுக்கு ஆத்திரமூட்டுகிறது. ஊர் திரும்பிவந்ததும் தனது அரசவையில் அனைத்துப் பெரியோர்களிடமும் அதைச் சொல்லி ஆறுதல் தேடுகிறான். தந்தை திருதராட்டிரனோ, இதையெல்லாம் பெரிதுபடுத்தாதே என்கிறான்.

“தவறி விழுபவர் தம்மையே – பெற்ற
தாயும் சிரித்தல் மரபன்றோ? ..”

வெள்ளி, ஜூலை 11, 2014

என்னதான் நடக்கிறது அமெரிக்காவில்? (2)

முகநூல் நண்பரின் அடுத்த கேள்விகள்:

கேள்வி (3) அமெரிக்காவில் வீசும்காற்றை உங்களால் பயமில்லாமல் சுவாசிக்க முடிந்ததா?  (6) காற்றின் மணம் எப்படி இருந்து என்று உணர்ந்தீர்கள் ?

இந்தக் கேள்விகளின் உள்ளுறை அர்த்தம் என்னவென்று எனக்கு விளங்கவில்லை. உலகெங்கும் ஆயுதப் போட்டியை உருவாக்கி, அதன்மூலம், நாடுகளிடையே போர்மூளும் சூழலை உண்டாக்கி, போருக்கு ஆயத்தமாகவேண்டிய நிலையில் உள்ள நாடுகளுக்கு ஆயுதங்களை சப்ளை செய்வதன்மூலம் தனது பொருளாதாரத்தை நிலைப்படுத்திக் கொள்வதே அமெரிக்காவின் அரசியல் வரலாறு என்பதை வைத்துக்கொண்டு, அமெரிக்காவில்  வெடிமருந்துகளின் கந்தக வாசம் காற்றை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் என்று நண்பர் கருதுகிறாரோ?  

புதன், ஜூலை 09, 2014

என்னதான் நடக்கிறது அமெரிக்காவில்? (1)

நண்பர்களே, சில மாதங்களாக எனது வலைப்பதிவுகள் குறித்த நேரத்தில் வருவதில்லை என்பதை அறிவீர்கள். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன: ஒன்று, இந்தியப் பொதுத்தேர்தல். ஒரு வலுவான மத்திய அரசு அமைந்தால் தான் நாட்டிற்கு நல்லது என்ற சிந்தனையை என்னோடு எவ்வளவு பேர் சேர்ந்து செயல்படுத்துவார்களோ என்ற கவலை ஒரு பக்கம் (!) திட்டமிட்டிருந்த அமெரிக்கப் பயணம் நல்லவிதம் அமையவேண்டுமே என்ற கவலை  இன்னொரு பக்கம்.   இரண்டுமே இப்போது இனிதாக நிறைவேறி விட்டதால், இனித் தொடர்ந்து எழுதுவேன். வழக்கம் போல ஆதரவு தாருங்கள். (படித்தோ, அல்லது பின்னூட்டம் இட்டோ, அல்லது இரண்டு வகையிலுமேயோ.)

இடையில் சில நாட்கள் முகநூல் (Facebook) பக்கம் சென்றுவந்தேன். முகநூல் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக மட்டுமே. ‘முக’ நூல் என்பதாலோ என்னவோ, பலர், தினமும் தங்கள் முகங்களைப் பல்வேறு கோணங்களில் அழகுபடுத்திக்கொண்டு, அந்தப் படங்களைச் சூரியன் இந்தியாவில் உதிப்பதற்குச் சற்று முன்பாக ஒருமுறையும்,  சூரியன் ஆஸ்திரேலியாவில் உதிப்பதற்குச் சற்று முன்பாக இன்னொரு முறையும் வெளியிட்டுவருவதைப் பார்க்க முடிந்தது. சிலரோ, வெறும் ‘காலை வணக்கம்’ ‘இரவு வணக்கம்’ மற்றும், ‘மதிய வணக்கம்’ மட்டுமே போட்டு, அதற்கும் பல நண்பர்களிடமிருந்து ‘லைக்’ பெறுவதையும் பார்த்தேன். சிலர், திருக்குறள்,   சிலப்பதிகாரம், பாரதியார் பாடல்கள் இவற்றிலிருந்து மேற்கோள் காட்டுவதன்மூலம் மெல்லத் தமிழ் இனிச் சாகாதிருக்க முயற்சி செய்வதையும் கண்டேன். மார்க் ஜக்கர்பர்க் என்னும் இளைஞனின் சிறுமுயற்சி எப்படி இந்த உலகிலுள்ள அனைத்துத் தமிழர்களையும் மிக எளிதாக ஒன்றிணைத்துவருகிறது என்பதை வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் முகநூலின் மிகப்பெரிய ஆபத்து ஒன்றையும் என்னால் உணர முடிந்தது.