(பதிவு 103) மீண்டும் பூத்தது கொன்றை மரம்-2
முதல் பதிவைப் படிக்க:
(பதிவு 102) மீண்டும் பூத்தது கொன்றை மரம்-1
அடுத்த ஒரு மாதத்திற்குள் ராஜனின் கற்பனைக் கப்பல் விரைந்து பயணம்
செய்யத்தொடங்கியது. மணிக்கணக்காக என்னிடம் கதை சொல்ல ஆரம்பித்தான். எனக்கோ
பிரமிப்புக்கு மேல் பிரமிப்பு. இவ்வளவு கற்பனைகளை அவன் எப்படித்தான் இத்தனைநாள் தனக்குள் சுமந்துகொண்டிருந்தானோ! நிச்சயம் இவன் கல்கியை விட, நாஞ்சில்
பி.டி.சாமியைவிடப் பெரிய எழுத்தாளன் ஆகப்போகிறான் என்பதில் எனக்குச் சந்தேகம்
எழவில்லை.
ஆனால், அவனிடமிருந்த ஒரே கெட்ட குணம், தன் கற்பனையை ஒரு தரமாவது
காகிதத்தில் எழுத முனையாததுதான். முழுதாக ஒரே ஒரு பக்கம் கூட அவன் எழுதி நான்
பார்த்ததில்லை. அதற்கு அவன் சொன்ன காரணம், தன் கையெழுத்து அழகாக இல்லை என்பதாகும்.
‘நீ ஏன் எனக்காக எழுதித்தரக் கூடாது?’ என்றான்.
எப்படியாவது அவனிடமுள்ள கதைகளை வெளியில் கொண்டுவந்துவிட வேண்டுமென்ற
ஆவலால் நான் “சரி” என்றேன். “ஆனால் முதல் நூறு பக்கம் நீ எழுதி முடித்தால்தான், அதன் பிறகு நீ சொல்லச்சொல்ல நான் எழுதித்தருவேன்”
என்றேன். ஒப்புக்கொண்டான்.
இந்த ஒப்பந்தத்தைக் கொண்டாட அன்று மாலை பேருந்து நிலையம் அருகிலுள்ள
தேநீர்க்கடையில் இருவரும் சந்திப்பதென்று முடிவாகியது.
****
ஆளுக்கு ஒரு சமூசாவும் ஒரு தேநீரும் ஆர்டர் செய்தான் ராஜன். எவ்வளவு
மெதுவாக முடியுமோ அவ்வளவு மெதுவாக உள்ளே
தள்ளினோம். அப்படியும் இரவு மணி ஏழரைதான் ஆகியிருந்தது. எட்டுமணி வரை வீட்டிற்கு
வெளியில் உலாவ எங்களுக்கு அனுமதி இருந்தது.
திடீரென்று ராஜன் எழுந்தான். “அதோ பார்!’ என்றான். ஒரு
மாட்டுவண்டியில் மூங்கில் கூடைகளில் கொன்றைப்பூக்கள் வந்து இறங்கின. அருகிலிருந்த
பூக்கடைக்காரர் அவற்றை வாங்கிக் கொண்டார். கூடைக்கு மூன்று ரூபாய் வீதம் எண்ணிக்
கொடுத்தார். “நாளைக்கு சீக்கிரமா வந்துடுப்பா!” என்றார். “சரிங்க” என்று
வண்டிக்காரர் நகர்ந்தார்.
“எனக்கு ஒரு ஐடியா!” என்றான் ராஜன். மெதுவாகப் பூக்கடைக்காரரிடம்
சென்றான். “என்ன பசங்களா?” என்று கேட்டவரிடம், “ஏங்க, இந்த வண்டிக்காரர் கிட்ட
தான் தினமும் கொன்றைப்பூ வாங்குவீங்களா?” என்றான்.
“ஏன்? நீங்க கொண்டுவந்து தரப்போறீங்களா?” கிண்டலாகக் கேட்டார் அவர்.
“அதில்லீங்க, எங்க ஸ்கூல்ல ரெண்டு மரம் இருக்குது. தெனமும் நாங்க
கொண்டுவந்தா வாங்கிப்பீங்களான்னு கேட்டேன்” என்று பணிவாகச் சொன்னான்.
அவருக்கு ஆச்சரியமாக இருந்திருக்கவேண்டும். “என்னடா பசங்களா, படிக்கிற
காலத்தில மரம் ஏறப் போறீங்களா? அதெல்லாம் வேணாம். ஒழுங்காப் படிங்க. சரி,
கெளம்புங்க. வீண்பேச்சு வேண்டாம்” என்றார் கண்டிப்புடன்.
ராஜன் நகரவில்லை. “இல்லீங்க. நாங்க சனி ஞாயிறில மட்டும் பூ
பறிச்சுட்டு வர்றோம். நீங்க வாங்கிக்கிட்டீங்கன்னா எங்களுக்கு உபயோகமா இருக்கும்.
அந்தப் பணத்தில அப்பா அம்மா கிட்ட கேட்காம நோட்டுப் புத்தகம் நாங்களே
வாங்கிக்கலாம் இல்லீங்களா? அதனால தான்..” என்றான் மேலும் பணிவுடன்.
கடைக்காரருக்கு மிகுந்த சந்தோஷம். “நல்ல பொறுப்பான பசங்களா
இருக்கீங்களே! சரி. கொண்டாங்க. ஆனா, நாளைக்குக் கொண்டு வரீங்கன்னா, இன்னிக்கு
எனக்குச் சொல்லிடணும். சரியா? கூடைக்கு ரெண்டு ரூபாதான் தருவேன். சரியா? பூ நல்லதா
இருக்கணும். இல்லேன்னா எடுக்கமாட்டேன். சரியா?” என்று தன் வியாபார விதிகளை
விளக்கினார். “ரொம்ப நன்றிங்க” என்று என்னை வேகமாக இழுத்துக்கொண்டு பஜாருக்கு
ஓடினான் ராஜன்.
கடைத்தெருவை ‘பஜார்’ என்று சொன்னால்தான் எல்லாருக்கும் புரியும்.
மொத்த நீளமே ஒரு பர்லாங்குதான் இருக்கும். இரண்டு முனைகளிலும் சிறிய உணவகங்கள்
இருந்தன. ஒரு வரிசையில் மளிகைக்கடைகளும் தேங்காய் மண்டியும் இருந்தன. ‘ராகி’
என்றழைக்கப்பட்ட கேழ்வரகை அளந்து வாங்கும் இரண்டு கடைகள் இருந்தன. ஒரு வாழை மண்டி
இருந்தது. எதிர்வரிசையில் இடைவெளிவிட்டு மூன்று தேநீர்க்கடைகள், நான்கு காய்கறிக்
கடைகள் இருந்தன. காலை நேரங்களில் மட்டும், சிறிய மண்குடுவைகளில் பொறையூற்றப்பட்ட
கெட்டித்தயிர் விற்கும் தயிர்க்காரிகள் பத்துப்பேர் அருகருகே அமர்ந்து
விவாதித்துக் கொண்டிருப்பார்கள். மாலையில் அவர்களே மாங்காய், களாக்காய்
போன்றவற்றைக் கூறுகட்டி விற்றுக்கொண்டிருப்பார்கள். சற்று உள்ளடங்கியதாக ஒரு
அச்சகம் இருந்தது. அதன் வாசலில் காலை, மாலை செய்தித்தாள்களின் ‘பேனர்’கள்
ஒட்டப்பட்டிருந்தன. அந்த அச்சகத்திற்குத்தான் என்னை இழுத்துக்கொண்டு போனான் ராஜன்.
அச்சக உரிமையாளர், “வாங்க எழுத்தாளரே!” என்று சிரிப்போடு வரவேற்றதைப்
பார்த்தால் அங்கு அவன் அடிக்கடி போகின்றவனாகத் தெரிந்தது. “இவன் என் நண்பன்.
இவனும் எழுத்தாளன் தான்” என்று என்னை அறிமுகப்படுத்தினான். எனக்கு மெய்
சிலிர்த்தது.
“இப்ப நான் ஏன் வந்தேன் தெரியுமா? நான் ஒரு பெரிய கதை எழுதப் போறேன்.
மொத்தம் மூவாயிரம் பக்கம். அதைப் புத்தகமா வெளியிடனும்னா எவ்வளவு செலவாகும்னு
தெரிஞ்சிக்கணும்” என்றான் ராஜன்.
தன் வாழ்நாளிலேயே அப்படியொரு அதிர்ச்சியான விஷயத்தை அவர்
சந்தித்திருக்கவில்லை என்பதை அவர் முகம் காட்டியது. “என்னது மூவாயிரம் பக்கமா?”
என்று நாற்காலியில் அமர்ந்துவிட்டார். எங்களைக் கூர்ந்து பார்த்தார்.
ராஜன் சொன்னான்: “ஆமாங்க, ஆனால் ஒவ்வொரு பாகமும் நூறு பக்கம்தான்
வரும். அதனால, அந்த மாதிரி நூறு பக்கப் புத்தகம் ஒண்ணு அடிக்கணும்னா எவ்ளோ செலவாகும்னு சொல்வீங்களா?”
“அப்படி வாங்க..” என்றவர், ஒரு சிறிய தாளில் ஏதோ கணக்குப் போட்டார்.
முன்னூறு காப்பி போட்டுத் தரேன். நூறு பக்கம் ஒரு புஸ்தகம் போடணும்னா நாப்பது ரூவா
ஆகும் தம்பி. ரேப்பர் நல்லதா போடணுமில்லியா? அதுக்கு ஒரு பத்து ரூவா
சேர்த்துக்குங்க. அம்பது ரூபா கொடுத்தா இந்த சைஸ்ல போட்டுடலாம். எப்ப வர்றீங்க?” என்று ஒரு
கதைப்புத்தகத்தைக் காட்டினார். “நள்ளிரவு மோகினியும் நடுப்பகல் பேயும்” என்ற
ஸ்ரீமகள் கம்பெனி வெளியீடு. (ரூபாய்க்கு எட்டு கிலோ அரிசி கிடைத்த காலம்
அது!)
ராஜன் அந்தப் புத்தகத்தை வாங்கிப் பார்த்தான். நூற்று இருபது
பக்கங்கள் இருக்கலாம். விலை இரண்டணா என்று போட்டிருந்தது. அவன் முகத்தில்
பளீரென்று மின்னல் அடித்தது. “ரொம்ப சந்தோஷங்க” என்று விடைபெற்றுக்கொண்டான்.
எனக்கு விஷயம் விளங்கிவிட்டது. விடுமுறை நாட்களில் எங்கள் பள்ளியில்
இருக்கும் கொன்றை மரங்களில் ஏறி, ஆளுக்கொரு கூடையாகப் பூப்பறிப்பது, அதை
விற்றுவரும் பணத்தைச் சேர்த்து வைத்து, புத்தகம்
நாங்களே அச்சிட்டு வெளியிடவேண்டியது. இதுதான் அவனுடைய திட்டம். வியாபாரியின்
மகன் அல்லவா?
மணி எட்டரை ஆகிவிட்டது. நான் கிளம்பியாகவேண்டும். தாத்தா தேடுவார்.
“இது நடக்கிற காரியமாடா? எனக்கு மரம் ஏறவே தெரியாதே!” என்றேன் தயக்கத்துடன். “நீ
கவலைப்படாதே! நான் ஏறிப் பறித்துப்போடுவதை நீ வாங்கிக் கூடையில் அடுக்கினால்
போதும். மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றான். நான் கிளம்பினேன்.
கொஞ்சதூரம் போனவன், ஓடிவந்தான். “உன்னுடைய கதையையும் ரெடி பண்ணிவை.
என்னோட பதினைந்து பாகங்களும் வெளியானவுடன், அடுத்து உன்னுடைய புத்தகம் தான்
வரும்!“ என்றான். “நீ காத்திருப்பாயல்லவா? கோபமில்லையே?”
இல்லையென்று தலையாட்டிவிட்டு வீட்டிற்கு விரைந்தேன்.
****
அன்றும் மறுநாளும் பள்ளிவிடுமுறை. எங்கள் கொன்றைப்பூ வியாபாரம்
இன்றுதான் தொடங்கப்போகிறது. ராஜன், கூடைகளோடு சைக்கிளில் பள்ளிக்கு வந்துவிடுவான்.
நான் நடந்துபோய் அவனோடு சேர்ந்துகொள்ளவேண்டும்.
கத்தி, கயிறு, கோணிப்பை போன்றவைகளை முதல்நாளே கேம்ஸ்ரூமில் வைத்தாயிற்று.
“அஞ்சுமணிக்கே எழுந்து எங்கடா போறே?” என்று கர்ஜித்தார் தாத்தா. (அப்பாவின்
அப்பா.) அவருக்கு உதவியாக இருப்பதற்குத்தானே இராணிப்பேட்டையிலிருந்து நான்
வந்திருக்கிறேன்.
“பள்ளிக்கூடம் தான் போறேன் தாத்தா! இன்று ஏ.சி.சி. பேரேட் இருக்கு.
சீக்கிரம் போகணும்” என்று கிளம்பினேன். (இது பிறகு என்.சி.சி. என்று ஆயிற்று.
‘இளம் மாணவர் படை’ என்று கொள்ளலாம்.)
தாத்தாவையா ஏமாற்ற முடியும்? “காக்கி யூனிபாரம் போடாமல் போகிறாயே?”
என்று சந்தேகத்துடன் பார்த்தார். “அதை நேற்றே கொண்டுபோய் வைத்துவிட்டேன் தாத்தா”
என்றேன் தைரியமாக.
“சரி, சீக்கிரம் வந்துவிடு. உனக்குப் பசி தாளாது” என்றார்.
தேன்கனிக்கோட்டையை ‘லிட்டில் இங்கிலாந்து’ என்று சொல்வார்கள். வருடம் முழுதும் ஜிலுஜிலுவென்று இருக்கும். பெரிதுபெரிதாக ‘டேராப்பூக்கள்’ சூரியகாந்திப் பூக்களைவிடப் பெரிதாகப் பூத்திருக்கும். காலை எட்டுமணிவரை பனி போர்த்தியிருக்கும். நடந்துபோனால் கண்களில் நீர் வழியும். நீரைத் துடைத்துக்கொண்டே நடந்தேன்.
ராஜன் மரம் ஏறினான். நான் கீழே நின்றுகொண்டேன். அடர்சிகப்புப் பூக்கள்
இலைகளே தெரியாதபடி பூத்துக் குலுங்கின.
ராஜன் திறமையாகப் பூக்களைப் பறித்தான். சிறுசிறு கொத்துக்களாகப்
பறித்தான். மெல்ல என்னை நோக்கிக் கீழே நழுவவிட்டான். அவை மண்ணைத் தொடுமுன்பு
தாவிப் பிடித்து கூடையில் போட்டேன். நடுநடுவே மரத்திலிருந்து பெரிய கட்டெறும்புகள்
என்மீது விழுந்தன. தட்டிவிட்டேன். சில,
என் சட்டைக்குள் புகுந்துவிட்டன. வேறு வழியின்றி சட்டையைக் கழற்றி உதறினேன். அரணைகளும் ஓணான்களும் மரத்தில் ஏறி இறங்கிக்கொண்டிருந்தது அச்சமூட்டுவதாக இருந்தது.
சுமார் ஒருமணி நேரத்திற்குப் பிறகு இரண்டு மரங்களில் இருந்தும் ஐந்து
கூடையளவுக்குப் பூக்கள் கிடைத்தன. கைகளால் கூடைகளைத் தூக்கிக்கொண்டு போக இயலாது என்பதால் பூக்களைக் கோணிப்பையில் அடைத்து, சைக்கிளின் பின்பக்கத்தில் கட்டினோம். காலிக்
கூடைகளை வகுப்பறையில் ஓரமாக ஒளித்துவைக்க இடம் தேடியபோது, சென்ற பல ஆண்டுகளின் ‘காம்போசிஷன்’ நோட்டுப் புத்தகங்கள்
வைத்திருந்த அலமாரியின் பின்புறம் தஞ்சம் கொடுத்தது. மேலாக இருந்த ஒரு நோட்டைப்
புரட்டினேன். மாணவனின் கையெழுத்து மிக மோசம். சிகப்பு மசியில் ‘நீ
உருப்படமாட்டாய்’ என்று ஆசிரியர் எழுதியிருந்தார்.
***
பூக்கடைக்காருக்கு மிகுந்த சந்தோசம். நாளையும் மறுநாளும் உள்ளூர்
ஆலயத்தில் சிறப்புத் திருவிழா. மாலைகள் ஏராளமாக விற்கும். மாலை கட்டுவதற்கு,
கொன்றைப் பூ அவசியம் வேண்டும். அதுவும் அடர்சிகப்புக் கொன்றைப்பூதான் வேண்டும்
என்று சிலர் அடம்பிடிப்பார்கள். “எவ்வளவு கூடை இருக்கும்?” என்றார். “ஐந்து கூடை
என்று அளந்துதான் கோணியில் போட்டோம்”
என்றான் ராஜன்.
வியாபாரி யாயிற்றே! கோணியைத் தூக்கிப் பார்த்தார். “இல்லையே, மூணு
கூடைதான் இருக்கும்னு தோணுதே” என்றார். பிறகு, எங்களுக்கு இரக்கம் காட்டுவதுபோல்
, “சரி, நாலு கூடைன்னு எடுத்துக்கறேன். நாலு
ரெண்டு எட்டு ரூபா. சரியா?” என்று கோணியைத் தன் பொறுப்பில்
எடுத்துக் கொண்டார். “சாயந்திரம் வந்து பணம் வாங்கிக்குங்க. கோணியையும்
கொண்டுபோங்க” என்றார்.
அதற்கு ராஜன், மிகவும் பவ்வியமாக, “பணம் இப்ப வேண்டாங்க! ஒங்க கிட்டயே
இருக்கட்டும். ஐம்பது ரூபா ஆனவுடன் கொடுங்க. பள்ளிக் கூடத்துக்கு பீஸ் கட்டணும்”
என்றான்.
“அப்படியா தம்பி! பொறுப்புள்ள பிள்ளையா இருக்கீங்களே! நல்லது.
கூடைக்கு ரெண்டு ரூபான்னா சொன்னேன்? உங்களுக்காக ரெண்டே கால்னு போட்டுக்கறேன்.
சந்தோஷமா?” என்றார்.
ஒரு
பெரிய கும்பிடு போட்டுவிட்டு இருவரும் கை குலுக்கிக் கொண்டோம். எவ்வளவு பெரிய
சாதனை! ஒரு மாபெரும் எழுத்தாளன், பூக்களையே ஏணியாகக் கொண்டு எழுத்துலகில்
உயரங்களைத் தொடப்போகும் தருணம் விரைவில் வரப்போகிறது என்ற நம்பிக்கை எங்கள்
மனத்தில் உறுதியானது.
(தொடரும்.
அடுத்த பதிவில் முடிந்துவிடும்.)
இறுதிப் பதிவைப் படிக்க: (பதிவு 104) மீண்டும் பூத்தது கொன்றை மரம்-3 (இறுதி)
***
©
Y.Chellappa
Email: chellappay@yahoo.com
என்னவொரு திட்டமிட்ட செயல்...! பொறுப்புள்ள பிள்ளைகள்...!
பதிலளிநீக்குஅதானே!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குகவிஞர்
ஐயா.
புத்திமான் பலவான்... மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
த.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் வரவுக்கு நன்றி நண்பரே!
நீக்குசார்! ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க சார்! முடிவுக்காகக் காத்திருக்கின்றோம்! அந்தப் பையன் எழுத்தாளன் ஆனாரா? இல்லை கனவுகள் அப்படியே உறைந்துவிட்டதா என்று அறிய. அவரின் முயற்சி மிக ஆச்சரியாமாகவும், எப்படிப்பட்ட சிந்தனை என்று, எழுத்தில் அத்தனை ஆர்வம் இருந்ததால் தானே அப்படியெல்லாம் சிந்தித்திருக்கின்றார் என்றெல்லாம் தோன்றியது....
பதிலளிநீக்குசார் //தேன்கனிக்கோட்டையை ‘லிட்டில் இங்கிலாந்து’ என்று சொல்வார்கள். வருடம் முழுதும் ஜிலுஜிலுவென்று இருக்கும். பெரிதுபெரிதாக ‘டேராப்பூக்கள்’ சூரியகாந்திப் பூக்களைவிடப் பெரிதாகப் பூத்திருக்கும். காலை எட்டுமணிவரை பனி போர்த்தியிருக்கும். நடந்துபோனால் கண்களில் நீர் வழியும்.// இது எதற்காக அந்து குறிப்பிட்டு உள்ளீர்கள்? இதற்கும் கதைக்கும் சம்பந்தம் ஏதாவது இருக்கின்றதோ?
காலையில் நடந்தால் கண்ணில் நீர்வழியும் - பனியின் தாக்கத்தால்! (ஒருவரி சேர்த்திருக்கிறேன். இப்போது போய்ப் படித்துப்பாருங்கள், தெரியும்!)
நீக்குகல்கியையும் பி டி சாமியையும் சேர்த்து சொல்கிறீர்களே ஸார்...!
பதிலளிநீக்குநிறைய தொடர்வதற்கான வாய்ப்புகள் இருக்கும்போது அடுத்த பதிவிலேயே முடிந்துவிடும் என்கிறீர்களே....தொடர்கிறேன்.
ஐயய்யோ! கன்னத்தில் போட்டுக்கொள்ளட்டுமா? சொல்லப்போனால் கல்கியைவிட எண்ணிக்கையில் அதிகமான புத்தகங்களை எழுதியவர் நாஞ்சில் பி.டி.சாமி தான்! (2) இவ்வளவு நீளமாக ஏன் எழுதுகிறீர்கள் என்று அடிக்கடி மிரட்டல்கள் வருவது எனக்குத்தானே தெரியும் நண்பரே! (3) தங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிகள்!
நீக்குஒவ்வொரு இடமும் நிகழ்வும் விவரித்திருக்கும் பாணி அருமை. சென்ற பதிவின் பின்னூட்டத்தில் மொத்தம் எத்தனை பதிவுகள் வரும் என்று வினவி இருந்தேன். இப்போது அடுத்தபதிவிலேயே முடிந்துவிடும் என்பதை பார்க்கும்போது இன்னும் நீட்டக் கூடாதா என்றிருக்கிறது. நினைவலைகளில் பூத்த கதைபோலிருக்கிறது. அந்தக் கொன்றைமரம் நினைவுகளை மீட்கிறதோ.?தொடர்கிறேன்
பதிலளிநீக்குஉங்கள் கேள்விகளுக்கு, 2 7 ஜூலை அன்ருய் வரவிருக்கும் இறுதிப் பகுதியில் விடை கிடைத்துவிடும். தங்கள் தொடர்ந்த வரவுக்கு நன்றி!
நீக்குஅதற்குள் முடிக்கப் போகிறீர்களா?
பதிலளிநீக்குகாத்திருக்கிறேன் ஐயா
அடுத்த பதிவிற்காக
தம 6
அடுத்த பதிவு ரெடியாக உள்ளது. 2 7 - 7 - 2 0 1 4 அன்று காலை எழரைமணிக்கு வெளியாகும். அதைப்பற்றி உங்கள் பின்னூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நீக்குஅருமை சார்...ஆவலாய் தொடர்கிறேன்...
பதிலளிநீக்குதங்கள் வரவுக்கு நன்றி நண்பரே!
நீக்கு2~ஆம் பகுதியையும் படித்தேன்.
பதிலளிநீக்குவர்ணனைகளோடு எழுதியுள்ளதைப் பார்க்கும்போது,
பல பதிவுகள் வரும் என்று எதிர் பார்த்தேன்!!!
நல்ல விறுவிறுப்பைக் காணமுடிகிறது. அடுத்த பதிவில் முடியவுள்ளது என்பதை நினைக்கும்போது அடடா என எண்ணத்தோன்றுகிறது.
பதிலளிநீக்குஅய்யா
பதிலளிநீக்குவணக்கம்.
இது போன்ற கதைகள் தான் என் வாசிப்பின் ஆதாரம்.
பரபரப்போடு இதற்கு முன் என்ன இதற்கடுத்து என்ன என அறியும் ஆர்வத்தைத் தூண்டுகின்றது தங்களின் எழுத்து.
இது போன்றொரு மன உணர்வினை அடைந்து நெடுநாளாயிற்று.
உங்கள் பழைய இடுகைகளைப் படிக்க வேண்டும்.
மீண்டும் கருத்திடுவேன்.
நன்றி!