பதிவு
எண் 18/ 2017
காலம் வரும் ....
-இராய
செல்லப்பா
திருமணமான அடுத்த ஆண்டே
முதல் குழந்தை பிறந்தது. அழகான பெண்குழந்தை. ‘மகாலட்சுமி பிறந்திருக்கிறாள்’ என்று
மகிழ்ந்தார், மாமனார்.
![]() |
கண்ணனும் துளசியும் -துலாபாரம் |
“முதல் குழந்தை பெண் குழந்தையாக இருப்பதுதான் குடும்பத்துக்கு நல்லது. சிறிது சிறிதாக நகை நட்டுக்கள் சேரும். உரிய நேரத்தில் திருமணம் செய்விக்க முடியும், பேரன் பேத்தி எடுக்க முடியும். ஆண் குழந்தையை விடப் பெண் குழந்தைக்குப் பொறுப்புணர்ச்சியும், அறிவு முதிர்ச்சியும் சீக்கிரமே ஏற்படும். அதனால், அடுத்த குழந்தை பிறக்கும்போது இவளே பாதுகாவலாக இருப்பாள். வளர வளரத் தாய்க்கும் உதவியாக இருப்பாள்” என்று விளக்கினார்.
தான் நினைத்தபடியெல்லாம் உடை உடுத்தவும், அலங்காரம் செய்யவும், பின்னி முடிக்கவும், தான் கற்காத கவின் கலைகளை யெல்லாம் கற்பிக்கவும் பெண்குழந்தைதான் சரி என்று பெற்றவளும் மகிழ்ந்தாள். எப்படியோ அனைவருக்கும் திருப்திதான்.
சில விஷயங்களில் நாம் திட்டமிட முடிவதில்லை, திட்டமிட்டாலும் எண்ணியது நடப்பதில்லை அல்லவா? இரண்டாவதும் பெண்ணாகவே பிறந்தது. “அவளும் இவளும் நல்ல தோழிகளாக இருப்பார்கள்” என்று பூரிப்போடு சொன்னார் மாமனார். “அடுத்தது ஆண் குழந்தையாகத்தான் இருக்கும் பாருங்களேன்” என்று அவர் சொன்னதை அவரே ரசித்தாரா என்று தெரியாது. நாட்கள் கடந்தன.
இயல்பாகவே தன்னம்பிக்கை உடையவன் நான். ஆனால் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தபிறகு, மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை பிறக்கும் என்று நம்புவதற்கும், ஏன், எதிர்பார்ப்பதற்கும் தன்னம்பிக்கை மட்டுமே போதுமானதாக இருக்காது என்று தோன்றியதால், இறைவனின் துணையை நாட முடிவு செய்தோம். திருப்பதி சென்று வந்தோம். சன்னதியில் வேங்கடவனை வணங்கிவிட்டு வெளியில் வந்தவுடன் குதூகலத்துடன் இருந்தாள் துணைவி. உத்தரவு கிடைத்துவிட்டதாம்!
பல நாட்களாகத் திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவனை வழிபடவேண்டும் என்று எண்ணம் இருந்தது. அதையும் நிறைவேற்றிக் கொண்டோம். ஏற்கெனவே நேர்ந்துகொண்ட வேண்டுதல்களுடன், ஆண்குழந்தை வேண்டும் என்பதும் சேர்ந்துகொண்டது.
அதற்குமுன், சென்னை மயிலாப்பூர் லஸ்முனை நவசக்தி விநாயகரை வணங்கினோம். அண்ணனுக்குப் பிறகுதானே தம்பி? நவசக்தி விநாயகரைத் தொழாமல் எந்த முக்கியமான காரியத்தையும் தொடங்கமாட்டாள் என் மனைவி.
அங்கிருந்து கொஞ்சம் தொலைவில், ‘கலைமகள்’ அலுவலகத்துக்கு அருகில் இருந்த முண்டகக்கண்ணி அம்மனும் அவளுக்கு ஆகிவந்த தெய்வம். அங்கும் தொழுதோம்.
கருவுற்றாள்.
நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக எங்கள் பயமும் வளர்ந்தது. மூன்றாவதும் பெண் குழந்தையாக இருந்துவிட்டால்? அப்படி நேர்ந்துவிட்ட நண்பர் ஒருவரின் மூன்று பெண்களும் கண்ணில் நிழலாடினர். குறைந்த வருமானத்தில் பெரிதும் சிரமப்பட்டார் அவர். நாங்கள் இருவரும் சம்பளக்காரர்கள் என்பதால், குழந்தை வளர்ப்பிற்கான பொருளாதாரச் சுமை இல்லைதான். ஆனால் ஆண்குழந்தையைப் பெற்றவர்கள் எல்லாரும் நம்மை இளக்காரமாகப் பார்ப்பார்களோ என்ற உலகியல் அச்சம் அடிக்கடி ஏற்பட்டுக்கொண்டே இருந்தது.
மகப்பேறு விடுப்பில் கடலூரிலுள்ள தாய்வீட்டிற்குச் சென்றாள் மனைவி. சென்னையில் நான்.
அந்த நாளும் வந்தது.....
பகல்நேரம். ஒருமணி இருக்கலாம். வங்கியில் அதுதானே கூட்டமும் பரபரப்பும் மிகுந்த நேரம்! அப்போது ‘டிரங்க் கால்’ வந்தது.
மருத்துவமனையில் இருந்து மாமனார் பேசினார். ‘இருவரும் நலம்’ என்றார். குரலில் மகிழ்ச்சி தெரிந்தது.
ஓ, குழந்தை பிறந்துவிட்டதா? எனக்கு திக்திக் என்றது. என்ன குழந்தை என்றல்லவா முதலில் சொல்லியிருக்க வேண்டும்? இருவரும் நலம் என்கிறாரே என்று கோபம் வந்தது.
“.....மணிக்கு வலி எடுத்தது. உடனே வண்டியை வரச்சொல்லி ஆஸ்பத்திரிக்குப் போனோம். அதற்குள் டாக்டர் சாப்பிடுவதற்கு வீட்டுக்குப் போய்விட்டாராம். உடனே வரச்சொன்னோம். வந்தவுடனேயே பிரசவம் ஆகிவிட்டது. சுகப்பிரசவம்...இருவரும் நலம்..” என்றார்.
எனக்கோ பொறுமை எல்லை கடந்துவிட்டது. இரத்த அழுத்தம் அதிகமாவதுபோல் இருந்தது. “ஆணா, பெண்ணா” என்றேன் சற்றே உயர்ந்த குரலில். மறுபடியும் பெண்தான் என்று சொல்லிவிடுவாரோ என்று அச்சம் ஒருபக்கம் உறுத்திக்கொண்டே இருந்தது. வங்கியில் இருந்த அனைவரும் என்னை ஆர்வத்தோடு பார்த்தார்கள்.
கடகடவென்று சிரித்தார் மாமனார். “ஆண் குழந்தைதானே வேண்டும் என்று எதிர்பார்த்தீர்கள்? அதே தான்! ஆண் குழந்தைதான். நட்சத்திரமும் நல்ல நட்சத்திரம்தான்” என்றார். “முருகன் பேராகவே வைத்துவிடலாம்” என்றார். கார்த்திக் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தாள் மனைவி.
****
நாளொருமேனியும்
பொழுதொரு வண்ணமுமாக (தமிழில் வேறு சொற்களே
இல்லையா?) வளர்ந்தான் கார்த்திக். மூன்றாண்டுகள் சென்னை, மூன்றாண்டுகள்
வெளிமாநிலம் என்று ‘பொருள்வயின் பிரிவு’ எனக்கு நிகழ்ந்துகொண்டிருந்தது. அதாவது
‘டிரான்ஸ்ஃபர்’. மனைவி ஆசிரியையாக இருந்ததால் கோடை விடுமுறைநாட்கள் நிறைய உண்டு
என்று ஆவலாக இருந்தேன். குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியூர் செல்லலாம்,
பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொடுத்த கோவில்களுக்குப் போய் நன்றி தெரிவிக்கலாம் என்று எண்ணினேன். ஆனால் கோடை விடுமுறை முழுவதும்
அவளுக்குத் தேர்வுப் பணியும், அதன் பிறகு விடைத்தாள் திருத்தும் பணியும்
வந்துவிட்டதால் நினைத்தது நடக்கவில்லை.
இதே போல் ஒன்றல்ல, அடுத்தடுத்து பல ஆண்டுகள் நடந்தது. அதன்பிறகு, மூத்த குழந்தைகள் உயர் வகுப்புகளுக்குப் போய்விட்டதால், கோடை விடுமுறையில் அடுத்த வருடப் பாடங்களை அவர்களுக்குத் தொடங்கிவிட்டார்கள். எனவே விடுமுறை எடுக்க வழியில்லை. மற்ற நேரங்களில் எனக்கு விடுமுறை கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது.
இடையில் எனக்கு மூன்று இடமாற்றங்கள். எல்லாமே ஏப்ரல்- மே மாதங்களில்தான் வரும். கோடையாவது விடுமுறையாவது.
குருவாயூருக்கு மட்டுமாவது போய்வந்துவிடலாம் என்று நச்சரித்தாள் மனைவி. இவனுக்காக வேண்டிக்கொண்டிருக்கிறேன் என்றாள். எப்போது என்ன வேண்டிக்கொண்டாள் என்று சொல்லவில்லை. கார்த்திக் உயரமாக வளர்ந்துகொண்டிருந்தான்.
ஒருவழியாக ஏதோ ஒரு செப்டம்பர் மாதம் குருவாயூருக்குக் கிளம்பிவிட்டோம். நீண்ட ரயில் பயணம். ‘மாலையும் இரவும் சந்திக்கும் பொழுதில்’ கோவிலை அடைந்தோம். என் மனைவி முகத்தில் எல்லையில்லாத மகிழ்ச்சி. குருவாயூரப்பனைச் சந்தித்து நன்றி சொல்லப்போகிற மகிழ்ச்சி. குழந்தைகள் மூவருக்கும் அது புது அனுபவம். குதூகலத்துடன் இருந்தார்கள்.
அப்போது திடீரென்று சொன்னாள், மனைவி. “குழந்தைக்குத் துலாபாரம் நேர்ந்துகொண்டிருக்கிறேன். அதை நிறைவேற்றிவிடலாம் அல்லவா?” என்றாள். குழந்தை என்றது என் மகனை. அப்போது கார்த்திக் வயது பதின்மூன்று இருக்கும்.
எதிரே பார்த்தேன். கோவில் அலுவலகத்தின் அருகில் பெரியதொரு தராசு தொங்கிக்கொண்டிருந்தது. துலாபாரம் என்றால் ஆசாமியைத் தராசில் உட்கார வைத்து, எடைக்கு எடை ஏதேனும் பொருளை வைத்து, அப்பொருளை கோவிலுக்கு வழங்கிவிடவேண்டும் என்ற விவரம் எனக்குத் தெரியாது. விசாரித்தேன். துலாபாரத்திற்குச் சிலநூறுகள் கட்டச் சொன்னார்கள். சரி, இவ்வளவுதானே என்று எண்ணிக்கொண்டேன்.
ரசீது கொடுத்த கோவில் பணியாளர் கேட்டார்: “ஏலக்காய் போடலாமா?” என்று. எதற்குக் கேட்கிறார் என்று புரியாமல் விழித்தேன். ஏலக்காய், பாயசத்திற்கல்லவா போடுவார்கள்?
நல்ல வேளை, என் மனைவி முன்வந்து, “ஏலக்காய் வேண்டாம். அதிகம் செலவாகும். வேறு என்ன இருக்கிறது?” என்றாள். அப்போதுதான் எனக்குப் புரிந்தது, எடைக்கு எடை ஏலக்காய் போடலாமா என்று அவர் கேட்டிருக்கிறார் என்று. போட்டிருந்தால் சுமார் பத்தாயிரம் ரூபாய் ஆகியிருக்கும்.
“வேற ஏதாவது என்றால்..முந்திரி இருக்கிறது, திராட்சை இருக்கிறது, ஆப்பிள் போடலாம். துவரம்பருப்பு போடலாம்..” என்று சொல்லிக்கொண்டே போனார் பணியாளர். விலை உயர்ந்த பொருள்களாகவே அவர் வாயில் வந்தன.
எதிரில் வாழைப்பழம் மலைபோல் குவிந்துகிடந்தது. “ஏன், வாழைப்பழம் போட்டால் என்ன?” என்றாள் மனைவி.
ஏமாற்றம் அடைந்தவர்
போல், “சரிங்க” என்று தன் மேலதிகாரியைப் பார்த்தார். ”அவங்க கேட்கிறதைப்
போடுங்க” என்றார் அவர்.
பிறகு கார்த்திக்கைத் தராசின் ஒரு தட்டின் மேல் ஏறி உட்காரச் சொன்னார்கள். அவ்வளவு சிறிய பலகையின்மீது உடம்பைக் குறுக்கிக்கொண்டு உட்காருவது சுகமான அனுபவமாயில்லை. கார்த்திக் நெளிந்தான். இன்னொரு தட்டில் வாழைப்பழங்களை ஏற்றினார்கள். ஏற்றிக்கொண்டே இருந்தார்கள். முதலில் அவனை எடைபோட்டுவிட்டு, அதன்பிறகு பொருளை அடுக்கலாமே என்றால், அப்படிச் செய்வது தெய்வக்குற்றமாம். அவனுடைய எடை எவ்வளவு என்று தெரியக்கூடாதாம்.
கோவிலுக்கு வந்திருந்த பெண்களும் வாண்டுகளும் ஏதோ விநோதத்தைப் பார்ப்பதுபோல் சுற்றி நிற்கவும், கார்த்திக் முகத்தில் சற்றே கூச்சம் படர்வதைக் கண்டேன்.
ஒருவழியாக எடைக்கு எடை வாழைப்பழங்கள் வைத்து, துலாபாரப் பிரார்த்தனை நிறைவேற்றியாகிவிட்டது. பழங்களுக்காக சுமார் ஆயிரம் ரூபாய் ரசீது கொடுத்தார்கள். பணியாளருக்கு டிப்ஸ் ஐம்பது ரூபாய். சிறப்பு அனுமதியுடன் சுவாமி தரிசனம். “கேட்டதும் கொடுப்பவனே, கிருஷ்ணா, கிருஷ்ணா” என்று போற்றினேன்.
“எப்படிடா இருந்தது?” என்று சகோதரிகள் இருவரும் கேட்டனர்.
“சூப்பராக இருந்தது. தராசில் உட்காரவே முடியவில்லை. முட்டி வலிக்கிறது. அதனால், சின்னக் குழந்தையாக இருந்தபோதே செய்திருக்கவேண்டும்” என்றான் கார்த்திக். ஆனாலும் முகத்தில் பெருமிதம் இருந்தது.
அவனை அணைத்துக்கொண்டாள் தாய். “அதனால் என்னடா, நாளைக்கு உனக்கு ஒரு பையன் பிறந்தால், தாமதம் இல்லாமல் உடனே துலாபாரம் செய்துவிடலாம். சரியா?” என்றாள். எல்லாரும் சிரித்தார்கள்.
எந்த ஒரு செயலுக்கும் அதற்குரிய காலம் என்று ஒன்று இருக்கும் போலும். அப்போதுதான் அது நடக்கிறது. விதி என்று சிலர் கூறுவது இதுதானோ?
*****
© Y Chellappa
Email: chellappay@gmail.com