வளைக்கரங்களும்
வாத்தியாரும் - முதல் பகுதி
(வாத்தியார் கதைகள்-2)
மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியில் இருந்து வெளிவந்த
முதல் பி.எஸ்சி. (கணிதம்) வகுப்பைச் சேர்ந்தவன் நான். (1967-70). எதிர்பார்த்தபடியே
நல்ல மதிப்பெண்: டி பிளஸ் (D Plus) கிடைத்தது. அதாவது 85 முதல் 99 க்குள் ஏதோ ஒரு மதிப்பெண்
என்று அர்த்தம். தேர்ச்சி பெற்றவுடன் அப்போதைய
உலக வழக்கப்படி வேலூரில் இருந்த எம்பிளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சில் வேலை வேண்டும் என்று
பதிவுசெய்துகொண்டேன். வரிசையில் நின்றதில் இரண்டு தேநீர், ஒரு ஆனியன் சமோசா, ஒரு தினமணி
மற்றும் நான்குமணி நேரம் ஆகியவை செலவழிந்தது இன்னும் நினைவிருக்கிறது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தலைமை அதிகாரி அப்போது விடுப்பில்
இருந்ததால், இராணிப்பேட்டை உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியரும், மாவட்டக்கல்வி அலுவலருமான,
பச்சை இங்க்கில் கையெழுத்துப் போடும் அந்தஸ்து பெற்றிருந்த ஒருவர் அப்போது ‘ஆக்டிங்’ கில் இருந்தார். பதினைந்தாவது நாளே எனக்கு 10-ஏ-1 விதிப்படி அவர்மூலம் பணி உத்தரவு
கிடைத்தது. போளூருக்கும் திருவண்ணாமலைக்கும்
இடையில் நெடுஞ்சாலையில் இருந்து ஆறு கிலோமீட்டர் நடந்துசென்றுதான் அடைய வேண்டியிருந்த
‘சொரகொளத்தூர்’ என்ற ஊரில் இருந்த உயர்நிலைப்பள்ளிக்குப்
பட்டதாரி ஆசிரியராக நியமனம். அந்த வேலை, அந்தப் பள்ளி ஆண்டின் பள்ளி இறுதி வேலைநாள்
வரை நீடித்தது. பிறகு ஊஸ்ட் (oust) செய்துவிட்டார்கள். (அதைப் பற்றியும் அவ்வூரில்
எனக்கு ஏற்பட்ட மர்மக் கதைகளை விஞ்சக்கூடிய விசித்திரமான பல அனுபவங்களையும் என் ‘தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்’ நூலில் விரிவாக
எழுதியிருக்கிறேன்.)
![]() |
இதுபோலத்தான் அந்தப் பள்ளியும் இருந்திருக்கலாம்! |
அந்தக் கதைதான்
இனிவருவது.
****
ஆரணியில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது
வளையாத்தூர் என்ற விவசாய கிராமம். நான்
பதவி(?!) ஏற்பதற்குச் சென்ற முதல்நாளில் வளையாத்தூர் கூட்ரோடு என்ற இடத்தில் பஸ்சிலிருந்து
இறங்கி சுமார் பதினைந்து நிமிடம் நடந்த பிறகுதான் பள்ளியை அடைய முடிந்தது. ஊருக்குள்
பஸ் வாராத காலம்.
வழியில் காக்கி அரை நிஜாரும் வெள்ளை மேல்சட்டையும்
அணிந்த சில மாணவ மாணவியர் சைக்கிளிலும், நடந்தும், பள்ளியை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள்.
ஒருவருக்காவது என்னைப் பார்த்தால் தங்கள் பள்ளிக்கு வரப்போகும் ஆசிரியர் என்ற கற்பனை கூடத் தோன்றவில்லை என்பதை எண்ணியபோது என்
எதிர்காலமே இருண்டுபோய்விடும் போல் தோன்றியது. நானாகப் போய் அவர்களிடம் அறிமுகம்
செய்துகொண்டால் ‘சீப்பாக’ இருக்குமென்பதால்
மௌனமாகவே நடந்தேன்.
பள்ளிக்கு மிக அருகில் வந்ததும், அந்த மாணவச் செல்வங்களில்
பலர், உடனே பள்ளிக்குள் நுழையாமல், தங்கள்
புத்தகப் பைகளை மற்ற நண்பர்களிடம் கொடுத்துவிட்டு, பள்ளியின் பின்புறமாக ஓடுவதைக் கண்டேன். சுமைகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் மட்டும் பள்ளிக்குள் நுழைந்தார்கள்.
****
மணி அடிப்பதற்கு இன்னும் பத்து நிமிடம் இருந்தது. தலைமை
ஆசிரியர் எனக்கு முன்பே வந்திருந்தார். அப்போதுதான் அறிமுகமாகியிருந்த மோட்டார் வைத்த
சைக்கிள் அவரிடம் இருந்ததால், ஆரணியில் இருந்தே அதில் வந்துவிடுவாராம். பள்ளிக் கட்டிடம்
பழையதாக இருந்ததால் புதிய இடத்தில் விரிவுபடுத்திக் கட்டுவதற்கு ஊர் மக்களைக் கொண்ட பில்டிங்
கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டதாம். ஊரில் இருந்த இரண்டு பெரிய மனிதர்களில் ஒருவர் ஆரம்பத்தில் விவரம் புரியாதவராக இருந்ததால்,
கூட்டத்திற்கு வராமல் அலட்சியமாக இருந்துவிட்டதால், இரண்டாவது பெரிய மனிதரைக் கமிட்டியின்
தலைவராகப் போட்டுவிட்டார்களாம். அப்படி வராமல் இருந்தவர், ‘காளி, என்று பேசினாள், இன்று பேச?’ என்ற வகையறாவைச் சேர்ந்தவராம். விஷயம்
தெரிந்து மேலிடத்தில் அவருக்குக் குட்டு விழுந்ததாம்.
உடனே அவர் பொங்கியெழுந்து போட்டியாக ஒரு பில்டிங் கமிட்டியை உண்டாக்கி விட்டாராம்.
“ஒவ்வொரு நாளும் இந்த இரண்டுபேரும் வந்து உட்கார்ந்துகொண்டு என் தலையைத் தின்கிறார்கள்”
என்றார் தலைமை ஆசிரியர். ஆனால் அவர் தலையின் முன்புறம் இருந்த வழுக்கைக்கு வேறு காரணங்களும் இருக்கலாம்..
“ஆகவே இந்த இரண்டுபேரின் பக்கமும் சாயாமல் முள்ளின்மீது
நடப்பதுபோல் நீங்கள் நடக்கவேண்டும்” என்றார். “எதற்காகச் சொல்கிறேன் என்றால், நான்
பள்ளிக்கு வராத நாட்களில் எனக்கு அடுத்தபடியாக இருக்கப்போவது பட்டதாரி ஆசிரியரான நீங்கள்தான்.
மற்றவர்கள் எல்லாருமே செகண்டரி கிரேடுதான். ஆகவே தான் உங்களை வசப்படுத்தப் பார்ப்பார்கள்.
இல்லையென்றால் மிரட்டவும் செய்வார்கள். அதற்கெல்லாம் பயந்துவிடக்கூடாது” என்றார். முதல்நாளே
எவ்வளவு அற்புதமான அறிமுகம் பாருங்கள்!
"இந்த வருடத்தின் முதலாவது பில்டிங் கமிட்டி கூட்டம்
செப்டம்பர் முதல் வாரத்தில் ஏற்பாடு செய்திருக்கிறது. அன்று மாவட்ட கல்வி அதிகாரியையும் வரச்சொல்லி அழைத்திருக்கிறேன். அதுவரை நான் சொன்னது
ஞாபகம் இருக்கட்டும். சரி நீங்கள் வகுப்புக்கு போகலாம்" என்று என்னைக் கிளப்பினார்
தலைமையாசிரியர்.
அசெம்பிளியில் என்னை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும்
அறிமுகப்படுத்தினார். பிறகு மூத்த ஆசிரியர் ஒருவரைக் கூப்பிட்டு எனக்கு
உரிய வகுப்புகளைப் பட்டியல் இட்டு தரச்சொன்னார்.
ஒன்பதாம் வகுப்பிற்கு ஆங்கிலம் எடுப்பதுதான் என்னுடைய முதல் வகுப்பு. சென்ற ஆண்டு எடுத்த அதே
புத்தகம், அதே சிலபஸ் என்பதால் தயக்கமில்லாமல் பாடம் படித்தேன். 30 மாணவர்கள். பார்ப்பதற்கு
நல்ல மாதிரியாகத் தான் தெரிந்தார்கள். ஆனால் பாடத்தை கவனிக்காமல் யானையைப் பார்த்த
எல்கேஜி மாணவன் மாதிரி என்னைப் பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தது தெரிந்தது.
திடீரென்று ஐந்து மாணவர்கள் வகுப்பிற்குள் நுழைந்தார்கள். ஆசிரியரின் அனுமதி
கேட்கவேண்டும் என்று கூட அவர்களுக்குத் தெரியவில்லை. ஒவ்வொருவர் கையிலும் அப்போதுதான்
வயலில் இருந்து பிடுங்கிய முற்றிய வேர்க்கடலைச்
செடிகள் இருந்தன. நீரில் கழுவி ஈரம்
சொட்டச் சொட்டக் கொண்டு வந்திருந்தார்கள். அதிலிருந்து கடலைக்காய்களைப் பிடுங்கி வகுப்பிலிருந்த
எல்லா மாணவர்களுக்கும் சமமாகப் பங்கிட்டார்கள். சிலவற்றை என் மேஜையிலும் வைத்துவிட்டு
என்னிடம் நன்றியுணர்ச்சியை எதிர்பார்ப்பது போல் நின்றார்கள். ஆம், இவர்கள்தான் காலையில்
பள்ளிக்குள் நுழையாமல் பின்புறம் ஓடியவர்கள்!
முதல்நாளே அவர்களைக் கண்டிக்க வேண்டாம் என்று கண்களால்
சற்றே கோபமாகப் பார்த்தேன். அவர்கள் இருக்கையில் அமர்ந்தார்கள். வகுப்பில் திடீரென்று
அமைதி நிலவியது. "நாளை முதல் இந்த வேர்க்கடலை பிசினஸ் எல்லாம் வேண்டாம். வகுப்பிற்கு
யாரும் லேட்டாக வரக்கூடாது" என்று உறுதியாகச் சொன்னேன். அதற்குள் இரண்டாம் வகுப்பிற்கான
மணி அடித்தது. வெளியே வந்தேன்.
***
பள்ளி விட்டதும் உள்ளூர் ஆசிரியர் ஒருவரோடு கிளம்பினேன்.
தங்குவதற்கு வீடு பார்க்க வேண்டுமே! நல்லவேளையாகச் சென்றவருடம் என்னைப்போலவே தற்காலிகப்
பணியில் சேர்ந்திருந்த ஆசிரியர் ஒருவர் விட்டு விட்டு போன வீடு இன்னும் காலியாகவே இருந்தது.
மாதம் இருபது ரூபாய் என்றார்கள். சரி என்று அதை எடுத்துக்கொண்டேன்.
அதை வீடு என்று சொல்வதை விட ஒரு வீட்டின் போர்ஷன் என்றுதான்
சொல்ல வேண்டும். ஜன்னல் உடன் இரண்டு அறைகள் இருந்தன. ஒரு மரக் கட்டிலும் மர பீரோவும்
இருந்தன. தலைக்கு மேல் பழைய மின்விசிறி ஒன்று சுற்றிக் கொண்டிருந்தது. ஒரு டியூப் லைட்,
ஒரு நாற்பது வாட்ஸ் பல்பு. வெளிப்புறம் இருந்த கிணற்றில் தண்ணீர் சேந்திக் குளிக்க
வேண்டும். குடிக்கவும் அதுவே. துணி துவைப்பதற்குக் கருங்கல் ஒன்று பதித்திருந்தார்கள்.
கையோடு கெரசின் ஸ்டவ் மற்றும் சமையல் பாத்திரங்கள்
கொண்டு வந்து இருந்தேன். எனவே இரவு சமைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆரம்பித்தேன். அப்பொழுது
கதவருகே வளையல் குலுங்கும் சத்தம் கேட்டது. ஒரு அழகான இளம்பெண் எவர்சில்வர் தட்டில்
சாதம், கறி, கூட்டு, கிண்ணத்தில் குழம்பு, கிண்ணத்தில் தயிர் வைத்து மேலே ஒரு பேப்பரைப்
போர்த்தி எடுத்து வந்து முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு எதுவும் பேசாமல் தட்டை
மட்டும் நீட்டினாள். இரவு மணி ஏழரை இருக்கும்.
தட்டை வாங்குவதா இல்லையா என்று எனக்குள் ஒரு போராட்டம்.
அந்தப் பெண் யார் என்று எனக்குத் தெரியாது. சாப்பாடு தருவது பற்றி முன்கூட்டியே தகவலும்
இல்லை. வெளிச்சம் குறைவான இரவு. குழம்பினேன்.
தட்டை வைத்துக் கொண்டிருந்த பெண் மிக மிக மெல்லிய குரலில்
'உஷ்' என்றாள். இப்பொழுது சற்றே என் பக்கம்
திரும்பினாள். "சாருக்கு ரொம்ப தான் பயம் போலிருக்கிறது" என்றாள்.
"யார் நீங்கள்? நான் கேட்காமலே சாப்பாடு கொடுக்கிறீர்கள்?
ஏதும் ஓட்டல் நடத்துகிறீர்களா? இதற்கு எவ்வளவு ரூபாய் கொடுக்கவேண்டும்?" என்று
தயங்கியபடி கேட்டேன்.
களுக் என்று சிரித்தாள் அவள். “ஆமாம், இந்த ஊரிலேயே பெரிய ஓட்டல் எங்களுடையதுதான்.
ஆனால் வாத்தியார்களுக்கு மட்டும்தான் சாப்பாடு கொடுப்போம்” என்று சிரித்தாள். “எவ்வளவு
வாத்தியார்கள் சாப்பிட வருவார்கள் தெரியுமா?”
தெரியாது என்று தலையசைத்தேன்.
மறுபடியும் சிரித்தாள். “ஒரே ஒரு வாத்தியார் தான் போன
வருடம் சாப்பிட்டார். இந்த வருடம் நீங்கள் மட்டும்தான் சாப்பிடுவீர்கள் என்று நினைக்கிறேன்!
தலைமை ஆசிரியர் அப்படித்தான் சொன்னார்!”
இப்போது சிரிக்கவேண்டிய முறை என்னுடையதாயிற்று. “என்னது,
ஒரே ஒரு ஆசாமிக்காக ஓட்டல் நடத்துவீர்களா? கட்டுப்படியுமாகுமா?” என்றேன். அதற்குள்
அவள் “சூடு ஆறிவிடும், சீக்கிரம் சாப்பிடுங்கள். அம்மா கோபித்துக்கொள்வார்கள். ரொம்ப
நேரம் ஆகிவிட்டது” என்று தட்டை, கட்டில்மீது வைத்துவிட்டு ஓடினாள். எட்டிப்பார்த்தேன். அடப்பாவி, இரண்டு பில்டிங் கமிட்டிகளில்
இரண்டாவதான கரைவேட்டிக்காரர் வீட்டுக்குள் அவள் நுழைவது தெரிந்தது.
இதைத்தான் ‘வசப்படுத்துவார்கள், எச்சரிக்கையாக இருக்கவேண்டும்’
என்று சொன்னாரா தலைமை ஆசிரியர்?
பசி பிடுங்கித்தின்றது. ஆபத்துக்குப் பாவமில்லை, நாளை
மற்ற விஷயங்களை பார்த்துக்கொள்ளலாம் என்று சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தேன். சும்மா சொல்லக்கூடாது, அற்புதமான சமையல்!
****
மறுநாள் தலைமை ஆசிரியர் வரவில்லை. அலுவலக வேலையாக வேலூர்
சென்றுவிட்டார். நல்லவேளை பில்டிங் கமிட்டி ஆட்கள் யாரும் வரவில்லை. ஒன்பதாம் வகுப்பு
மாணவர்களும் வேர்க்கடலை பக்கம் போகவில்லை.
பகல் உணவு நேரம் வந்தபோது சாப்பிட என் அறைக்குக் கிளம்பினேன். காலையிலேயே இரண்டு வேளைக்குத் தேவையான
உப்புமா செய்துவைத்தேன். தொட்டுக்கொள்ள எலுமிச்சை ஊறுகாய் இருந்தது.
அதற்குள் “சார், உங்களுக்கு சாப்பாடு!” என்று ஆபீஸ்
பியூன் பஞ்சாட்சரம் மூடிய தட்டோடு வந்தார். என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை என்று
நினைத்துக்கொண்டே, “யார் வீட்டில் செய்தது?” என்றேன். ஒருவேளை இது இன்னொரு பில்டிங் கமிட்டி ஆசாமியிடமிருந்து வந்திருக்குமோ என்று அஞ்சினேன்.
“இல்லீங்க சார், தலைமை ஆசிரியர் தான் வாங்கித்தரச்
சொன்னார். நான்தான் போய் மாரிமுத்து ஓட்டலில் வாங்கிவந்தேன். சுத்த சைவம் சார்!” என்றான்.
அப்பாடா என்று சாப்பிட்டு முடித்தேன். “நான்கு ரூபாய் சார். இப்போதே கொடுக்கவேண்டும்
என்று இல்லை. கணக்கு நோட்டில் எழுதிவிட்டால் சம்பளம் வந்தவுடன் கொடுத்தால் போதும்”
என்றார் பஞ்சாட்சரம். “இல்லை, தினமும் கொடுத்துவிடலாம்” என்று அவரிடம் ஐந்து ரூபாய்
நோட்டைக் கொடுத்தேன்.
****
இரவு நெருங்கியது. சரி, காலையில் செய்த உப்புமாவை வைத்து
சமாளித்துக் கொண்டு விடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு சபலம்.
ஒருவேளை அந்த வளைக்கரம் இன்றும் வருமோ? கதவை லேசாகத் திறந்தே வைத்திருந்தேன்.
கொஞ்சநேரத்தில் காற்று அற்புதமாக வந்தது. பஞ்சாயத்து
ரேடியோவில் தென்னையில் ஊடுபயிராக வெற்றிலை பயிரிடுவது பற்றி அழகான தமிழில் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்.
குடிபோதையில் இருவர் நடந்துகொண்டே தூய தமிழில்
ஒருவர் மற்றவரின் குணாதிசயத்தை விலாவாரியாக வர்ணித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால்
அந்த வளைக்கரம் மட்டும் வரவேயில்லை.
இரவு சுமார் ஒன்பது மணி இருக்கும். கிராமத்தில் எட்டு
மணிக்குமேல் உயிர் ஏது? பாதி உறக்கத்தில் இருந்தேன்.
யாரோ கதவைத் தட்டினார்கள்.
எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ அது நடந்துவிட்டது.
அந்த முதலாம் பில்டிங் கமிட்டித் தலைவர்தான் நின்றுகொண்டிருந்தார். கூடவே அவரது ஆட்கள்
சிலர்.
“வணக்கம் சார்! இராத்திரியில் எழுப்பறதுக்கு மன்னிக்கணும்”
என்றார் தலைவர். “காலையில் திருவண்ணாமலை போய்ட்டேனுங்க.
அதான் உங்களை பள்ளிக்கூடத்துல பாக்க முடியல. எல்லா விஷயமும் தலைமை ஆசிரியர் சொல்லியிருப்பார்னு
நெனைக்கிறேன்” என்றார். அவரை உட்காரச் சொல்ல நாற்காலி இல்லை என்பதால், “வாங்க, நடந்துகிட்டே
பேசுவோம்” என்று எழுந்தேன்.
“சார், நீங்க ரொம்ப சின்ன பையன். இந்த ஊர் ஒரு மாதிரி.
கொஞ்சம் எக்குத்தப்பா ஆய்ட்டாலும் காலி பண்ணிடுவாங்க.
ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணுங்க” என்றார் அவர். அதன் பிறகு என்னைத் தனியாக அழைத்துக்கொண்டுபோய்,
“சார், அந்த இன்னொரு பில்டிங் கமிட்டி இருக்கானே
அவன் ஆளும்கட்சி. அதனால் ஆடறான். ஆனா இந்த ஊர்ல என் வார்த்தைக்கு ரெண்டாம் வார்த்தை
கிடையாதுங்க. அதனால அவன் சாப்பாடு குடுக்கறான்னுட்டு அவன் பக்கம் சாஞ்சிடாதீங்க” என்றார்.
“அய்யய்யோ, நான் யார் கிட்டயும் சாப்பாடு கேக்கலீங்களே”
என்றேன் பரிதாபமாக.
“நீங்க கேக்கமாட்டீங்க. ஆனா அவன் அந்தப் பொண்ணுகிட்ட
குடுத்து அனுப்புவானே! அந்தப் பொண்ணு ஒரு மாதிரிங்க. பாத்து நடந்துக்கணும். அதனால்தான்
இன்னைலேருந்து உங்களுக்கு நம்ம ஊட்டுலேருந்து சாப்பாடு சொல்லியிருக்கேன். இன்னிக்கு
கூட பஞ்சாட்சரம் கொண்டுவந்து கொடுத்திருப்பானே!” என்றார்.
நான் பதில் சொல்வதற்குள் அவருடன் இருந்த ஆசாமி ஒருவர்
“ஆமாங்க, அவர் கொண்டுபோய்க் கொடுத்தார். சார் விரும்பி சாப்பிட்டார். நான் பார்த்தேன்”
என்றான்.
அடப்பாவிகளே! மாரிமுத்து ஓட்டலில் சாப்பாடு வாங்கிவந்ததாக
அல்லவா ஐந்துரூபாய் வாங்கிக்கொண்டார் பஞ்சாட்சரம்! இந்த ஊரில் எல்லாருமே எமகாதகர்கள்
போலிருக்கிறது!
என்ன பேசுவது என்று தெரியவில்லை. மௌனமாக இருந்தேன்.
தலைவர் பேசினார்: “சார், இனிமே, நீங்க என்னிக்கு இந்த
ஊரில் தங்கி இருக்கீங்களோ அன்னிக்கு காலையில பஞ்சாட்சரம் கிட்ட சொல்லிடுங்க. ரெண்டுவேளை சாப்பாடு
நம்ம ஊட்டுலேருந்து வந்துசேரும். நம்ம ஊருக்கு எவ்வளவோ கஷ்டப்பட்டு பாடம் சொல்லித்தரணும்னு
வர்றீங்க. இது கூட நாங்க செய்யலேன்னா எப்படீங்க?” என்றார். உடனே அவருடன் இருந்தவர்கள்
“ஆமாம், ஆமாம்” என்று ஒத்து ஓதினார்கள்.
“சரி, ராத்திரி ரொம்ப நேரம் ஆயிட்டது, வரட்டுங்களா?”
என்று அவரே விடை பெற்றார். போகும்போது என்னை மறுபடியும் அழைத்து, “அந்தப் பொண்ணு கிட்ட
கொஞ்சம் தள்ளியே இருங்க” என்று எச்சரிக்கத் தவறவில்லை.
அன்று இரவு
எனது கனவில் என்ன வந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? தட்டு தட்டாக சாப்பாடுதான்!
மாயாபஜார் மாதிரி!
(அடுத்த இதழில் முடியும்)
![]() |
டைம்ஸ் ஸ்கொயர் - நியூயார்க் - இரண்டு நாள் முன்பு |
© இராய செல்லப்பா
சுவாரஸ்யம். தொடர்கிறேன்.
பதிலளிநீக்குபயத்திலும் கிளுகிளுப்புக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. இரண்டாவது இரவு வளைக்கரங்கள் சாப்பாடு வரலை. அப்புறம் எப்போ வந்தது? (நான் சொன்னது சாப்பாட்டை. வளைக்கரங்களை அல்ல)
பதிலளிநீக்குஸ்வாரஸ்யம்... வளைக்கரங்கள் தந்த உணவு!
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
அடுத்தபதிவை ஆவலுடன் எதிர்பார்த்தபடி...பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்களுடன்...
பதிலளிநீக்குஅடுத்தபதிவை ஆவலுடன் எதிர்பார்த்தபடி...பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்களுடன்...
பதிலளிநீக்குதொடர்கிறேன் ஐயா...
பதிலளிநீக்குசென்னைக்கு நல்வரவு. அது என்ன, பத்து ரங்கநாதன் தெரு கூட்டம் இருக்கும்
பதிலளிநீக்குடைம்ஸ் ஸ்கொயர் இவ்வளவு லோன்லியாகத் தெரிகிறது?
தொடர்கிறேன்.
வளைக்கரங்கள் அருமை
பதிலளிநீக்குதொடருகிறேன்.
தொடர்ந்து ஆவலோடு வந்துகொண்டிருக்கும்போது...அடுத்த இதழில் முடியும் என்று போட்டுவிட்டீர்கள். (அடுத்த இதழிலா? அடுத்த பதிவிலா?) காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குகிட்டத்தட்ட என் வேலை அனுபவம் போல் உள்ளது. நானும் கடலூர் அரசு கலைக்கல்லூரியில் புதிதாக தொடங்கப்பட்டஇளங்கலை கணிதம் (1965-1968) படித்து உங்களை போலவே டி பிளஸ் வாங்கி இருந்தேன். அடுத்து மேல் படிப்பு முதுகலை படிப்பு கும்பகோணத்தில் படித்தேன். 1970இல் படிப்பு முடியவே வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன்.
பதிலளிநீக்குபைசா செலவில்லாமல் எனக்கு பாண்டிச்சேரி விழுப்புரம் பாதையில் உள்ள வள்ளலார் அரசு உயர் நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக நியமனம் கிடைத்தது. இதனிடையில் நான் ISRO வில் ஒரு நேர்முக தேர்வும் பங்கு கொண்டேன். எனக்கு அந்த வேலை நிச்சயம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தது.
உங்கள் அனுபவம் போலவே அடுத்தடுத்த உள்ள இரண்டு ஊர்களின் (அரியூர்,தென்னல்) பெருந்தனக் காரர்களின் பாதிப்பு பள்ளியில் இருந்தது. அது பற்றி எல்லாம் எழுதினால் பெரிய கதை ஆகிவிடும்/.
சுருக்க சொன்னால் எனக்கு நவம்பர் மாதத்தில் ISRO வேலை கிடைத்து அதில் சேர்ந்து திருவனந்தபுரத்தில் 1970 முதல் கிட்டத்தட்ட அரை நவம்பர் நூற்றாண்டு காலம் வசித்து வருகிறேன்.
உங்கள் பதிவு என்னுடை அழியாக் கோலங்களை நினைவு படுத்தியது. முக்கியமாக தலைமை ஆசிரியர், அவரது சுவேகா. ஜாதிப்பிரிவு போன்றவை. நன்றி
Jayakumar
மிகவும் சுவாரசியமாகப்போகிறது அனுபவப்பதிவு! என்னுடைய அனுபவமும் இதே மாதிரி முதல் ஆசிரியை வேலை ஒரு கிராமத்தில் மூலம் தான் வந்தது. கிராமம் என்னும்போதே அனுபவங்கள் பலதரப்பட்டதாகவே இருக்கும்! கிராமத்தில் பள்ளி அனுபவம், நல்ல சாப்பாடின்மை, கிடைத்த பழைய வீடு, அக்கப்போர்கள் என்று அழியாத கோலங்களாய் என் இளமை நினைவுகளை உங்கள் பதிவு மீண்டும் உயிர்த்தெழச் செய்து விட்டது! தொடருங்கள்!
பதிலளிநீக்குஒரு ஹிந்தி படம் என்று நினைக்கிறேன் பள்ளிக்கு முதலில் வருமாசிரியர் பள்ளிக்கு வழி கேட்க மாணவர்கள் சிலர் அவர் வாத்தியார் என்பது தெரியாமல் நேர் எதிரே ஒரு வழியைகாட்டி அனுப்பிவிடுவார்கள்எங்கெல்லாமோ சுற்றிபள்ளி வந்த ஆசிரியர் அந்தமாணவகளைப் பார்த்து சிரித்து சென்று விடுவார் ரியல் லைஃப் அனுபவங்கள்தான் கதைகளின் வேர்
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா வளைக்கரம் செம ஸ்வாரஸியம் சார். இதை அனுபவமா எழுதாம நாவலாகவே எழுதியிருக்கலாம் போல! அத்தனை விஷயங்கள் இருக்கு சார்.
பதிலளிநீக்குவளைக்கரம் உங்களை ரொம்பவே ஏமாத்திவிட்டாள் போல!! சாப்பாட்டைத்தான் சொன்னேன் சார் நீங்க வேற ஏதாவதுனு நினைச்சா அதுக்கு நான் இல்லைப்பா...ஹா ஹா ஹா
கீதா
சார் சென்னை வந்தாச்சா கண் இப்போது எப்படி உள்ளது.
பதிலளிநீக்குகீதா
‘தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்’ முழுவதுமாக சுவைக்க ஆசை .... விரைவிலேயே நிறைவேறும் என்று ஆவல் கொள்கிறேன் ... நன்றி ! கிளிக் ஜட்ஜ்மென்ட் .
பதிலளிநீக்கு