பதிவு 04/2017
பணமா சாபமா?
காகிதப் பணத்தைச் செலாவணியில் இருந்து அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதா?
சிறிய தேவைகளுக்குப் பயன்படும் பொருட்டு, சில குறைந்த மதிப்புள்ள நோட்டுக்களை
மட்டும் இருத்திக்கொண்டால் போதும், அவற்றையும் நாணயங்களாக வெளியிடுவதே நல்லது என்ற நிலைமைக்கு நமது பொருளாதாரம் தயாராகி
விட்டதா?
“ஆம்” என்றுதான் சொல்லவேண்டும், என்கிறார் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகப்
பேராசிரியர், கென்னத் ரகாஃப், சில மாதங்களுக்கு முன் வெளியான தனது CURSE OF CASH என்ற புத்தகத்தில்.
இந்தியாவில் உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழக்கம்
செய்யப்படுவதற்குச் சில மாதங்கள் முன்புதான் இந்தப் புத்தகம் வெளியாகியது
என்பதால், தில்லியின் செயலுக்கு இப்புத்தகத்தில் கூறப்பட்ட கருத்துக்கள் உந்துதலாக
இருந்திருக்கலாம் என்றால் மிகையில்லை.
அதற்கு இன்னொரு காரணமும் உண்டு: கென்னத் ரகாஃப், இதற்கு முன்பாக ஐ.எம்.எப்.
(இன்டர்நேஷனல் மானிட்டரி பண்ட்) - இன் தலைமை பொருளாதார அறிஞராக (சீஃப்
எக்கனாமிஸ்ட்) இருந்தவர். உயர்மதிப்புள்ள பணத்தாள்களைச் செலாவணியில்
இருந்து அகற்றவேண்டும் என்பதை நீண்ட நாட்களாகவே எடுத்துச் சொல்லிவந்தவர்.
பொருளாதார மாணவர்கள் மட்டுமின்றி அனைவருமே விவாதிக்கவேண்டிய புத்தகம் இது
என்பது என் கருத்து.
பணத்தாள் மதிப்பிழக்கத்தால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய ஆரம்பகாலச் சிரமங்களைப்
பார்க்கிலும், நாட்டிற்கு ஏற்படக்கூடிய நன்மைகள் ஏராளம் என்கிறார்.
கண்ணுக்குத்
தெரியாத வழிகளில், பெயர் தெரியாத மனிதர்களால் மிகப் பெரிய தொகைகள், நாட்டிற்கு
உள்ளேயும் நாடுகளுக்கு இடையேயும் பரிவர்த்தனை ஆகிக்கொண்டுதான் இருக்கின்றன.
எத்தகைய முன்னேற்பாட்டினாலும் இப்பரிவர்த்தனைகளைத் தடுக்க முடியவில்லை. இவற்றால் சம்பந்தப்பட்ட
நாடுகளின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் நெருக்கடிகள் ஏராளம். இப்பரிவர்த்தனைகள்
பெரும்பாலும் உயர்மதிப்பு பணத்தாள்கள் மூலமே நடைபெறுகின்றன. இதற்கென்றே
சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு வெளியே சதிக்குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
போலியான பணத்தாள்களை அசல்போலவே அச்சிடும் உயர் தொழில்நுட்பம் இவர்களிடம் உண்டு. ஆகவே,
பணத்தாள் மதிப்பிழக்கத்தை அமல்படுத்துவதன்
மூலம் இச்சதிக் குழுக்களின் இரத்த ஓட்டத்தை நிச்சயம் கட்டுப்படுத்தமுடியும்.
எதிர்பார்க்கும் வெற்றியில் பாதி கிடைத்தாலும் அதனால் நாட்டின் பொருளாதாரம்
பெறக்கூடிய நீண்டகாலப் பயன்கள் அதிகம் என்கிறார் ஆசிரியர்.
உயர்மதிப்புள்ள பணத்தாள்கள், பொதுமக்களிடம்
தொடர்ந்து செலாவணியில் இருப்பதில்லை. வெளிவந்த உடனேயே, பெருமளவில் கறுப்புச்
சந்தைக்குச் சென்றுவிடுகிறது.
அதில் ஒரு பகுதி, தங்கம், வைரம், பிளாட்டினம் போன்ற
உலோகங்களிலும், இன்னொரு பகுதி நிலங்கள், கட்டிடங்கள் போன்ற அசையாச்
சொத்துக்களிலும் வேறொரு பகுதி, வரி செலுத்தாமல் புழங்கும் சந்தைப் பொருட்களிலும்
(அல்லது, போதை மருந்துகளிலும் தீவிரவாதிகளுக்கான ஆயுதங்களிலும்) முதலீடு
செய்யப்படுகிறது.
எஞ்சியுள்ள பணம்,
ரொக்கமாகவே கட்டில்களுக்கு அடியிலும், குளியலறைச் சுவர்களிலும்
பதுக்கப்பட்டு அதன் ஒரு பகுதி கரையான்களுக்கு உணவாகவும் பயன்படுகிறது.
எனவே,
உயர்மதிப்புள்ள பணத்தாள்களால் அரசுக்குக் கிடைக்கவேண்டிய வரியானது மிகப்பெரும்
அளவில் ஏய்க்கப்படுவது தெளிவு. அப்படி இழந்த வரியில் பத்து அல்லது பதினைந்து
சதவிகிதம் திரும்பிவருமானாலும் போதும், பணத்தாள் மதிப்பிழப்பு நடவடிக்கையை அது
நியாயப்படுத்தியதாகும்.
ஐரோப்பாவில் 5௦௦ யூரோ மதிப்புள்ள நோட்டுக்களை வெளியிட ஆரம்பித்தவுடன்,
அமெரிக்காவில் பெரிய கேள்வி எழுந்தது. அதுவரையில் 1௦௦ டாலர் நோட்டு தான்
அமெரிக்காவில் இருந்த உயர்மதிப்பு நோட்டாகும். உடனே 5௦௦ டாலர் நோட்டு வெளியிடாவிட்டால்,
அமெரிக்காவிலுள்ள பணக்காரர்கள் தங்கள் பணத்தை 5௦௦ யூரோக்களாக மாற்றிக்கொள்ளும்
அபாயம் நேரும் என்று எச்சரிக்கப்பட்டது. ஏனோ
அந்த எச்சரிக்கை ஏற்கப்படவில்லை.
ஆனால், அரசாங்கங்கள் எதற்காக இன்னமும் உயர்மதிப்பு நோட்டுக்களை
வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்றால், நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில்
விடுவதான தொழிலில் அரசுகளுக்கு நிகர லாபம்
கிடைப்பதே என்று ஆசிரியர் கூறுகிறார். இந்த
லாபத்தை (SEIGNIORAGE) மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) யின் விகிதமாகக் கூறுவார்கள். 2006-2015 காலகட்டத்தில் அமெரிக்காவில் இந்த லாபம், 0.44% of GDP, ஆஸ்திரேலியாவில் ௦.25%, சிங்கப்பூரில் 0.62%,
ரஷியாவில் 1.37% (உலகிலேயே அதிகம்). ஸ்வீடனில் இது நெகடிவ் ஆக இருந்தது. -0.06%.
(இந்தியாவில் நோட்டுக்களை அச்சடிக்க ஆகும் செலவு பற்றி ரிசர்வ் வங்கி வழங்கிய
விவரம் இது:
ரூ.20 – (ரூ.1.216), ரூ.50 – (ரூ.0.864),
ரூ.100 – (ரூ.1.544) ரூ.1000 – (ரூ.3.732)
ஆதாரம்: Security Printing and Minting Corporation of India Limited, New Delhi vide: CHO(HR /RTI / 10-8/2016/ Vol.III
/4655 dated 06.10.2016.
ஆனால், ரூபாய் நோட்டு அச்சடிப்பால் வரும் லாபம்
என்ற இனம் ரிசர்வ் வங்கியால் தனியாகக் கணிக்கப்படுகிறதா என்று தெரியவில்லை.)
அமெரிக்காவில் இதே அச்சடிப்பு செலவு எவ்வளவு
தெரியுமா? 1 டாலர் நோட்டுக்கு 0.049 டாலரும், 100 டாலர் நோட்டுக்கு 0.123 டாலரும் தான். 1௦௦ டாலர் தான் அங்குள்ள
மிகப்பரிய நோட்டு. (அதே சமயம் பொதுமக்களிடமிருந்து 1௦௦ டாலர் நோட்டைக் கடைக்காரர்கள்
வாங்கத் தயங்குகிறார்கள்: கள்ள நோட்டுக்கள் அதிகமாகப் புழக்கத்தில் உள்ளதால்!)
ஆசிரியர் என்ன கூறுகிறார் என்றால், நோட்டுக்களை
அச்சடிப்பதால் வரும் நிகர வருமானம் குறைந்துகொண்டே வருகிறது; அதே சமயம், உயர்மதிப்புள்ள
பணத்தாள்கள் பதுக்கப்படுவதால் அரசுக்கு வரவேண்டிய வரி மிக அதிக அளவில்
ஏமாற்றப்படுகிறது; அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கப்படுகின்றன. தீவிரவாதிகளும் சமூக
விரோதிகளும் செழிக்கிறார்கள். ஏழைகள் மென்மேலும் ஏழைகளாகவே நீடிக்கவேண்டி
இருக்கிறது. அவர்களுக்குரிய சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கான
வருவாய் கிடைக்காமல் அரசு தடுமாறுகிறது.
எனவே, குறைந்த மதிப்புள்ள பணத்தாள்களை மட்டும்
விட்டுவிட்டு அதிக மதிப்புள்ளவற்றை ஒழித்தாகவேண்டும். ஆனால் அதைச் செய்வதற்கு
முன், அரசாங்கம் செய்யவேண்டிய கடமைகள் உண்டு என்கிறார். அவையாவன:
- பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்காக டெபிட் கார்டுகளும், கிரெடிட் கார்டுகளும் குறைந்த செலவில் வழங்க ஆவன செய்யவேண்டும்.
- ரொக்கமில்லாப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கு மானியவிலையில் ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படவேண்டும்.
- மின்னணுப் பரிமாற்றத்திற்கென்று வங்கிகளுக்குச் செலுத்தவேண்டிய கட்டணங்களை வெகுவாகக் குறைக்க வேண்டும்.
- சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும் வங்கிக் கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்படவேண்டும். (financial inclusion.)
- அரசாங்கம், மக்களுக்குத் தருகின்ற அனைத்து மானியங்களும், ஓய்வூதியம், சம்பளங்களும் பிறவும் வங்கிக்கணக்கு மூலமே வழங்கப்படவேண்டும்.
ஆக, நமது நாட்டில் அமல்படுத்தியுள்ள உயர்மதிப்புள்ள
பணத்தாள்கள் மதிப்பிழப்பு நடவடிக்கை, உலகளவில் பொருளாதார நிபுணர்களால்
ஆலோசிக்கப்பட்ட வழிமுறைகளின்படியே நடந்தேறியுள்ளதை உணர முடிகிறது.
**********************
பொதுமக்களை அதிகம் பாதிக்காமல் உயர்மதிப்புள்ள
பணத்தாள்களை ஒழிக்கும் வழிமுறைகளைப் பற்றி ஆலோசிப்பதற்காக நடந்த கூட்டம் ஒன்றில் (2௦௦9)
ஒரு ஆராய்ச்சி மாணவர் சொன்ன கருத்து இது: உதாரணமாக, 1௦௦ டாலர் நோட்டை ஒழிக்கவேண்டும்
என்பது நோக்கமாக இருந்தால்:
- அதுவரை வெளியிடப்பட்ட அந்த நோட்டுக்களின் தொடர்வரிசை எண்களை அடிப்படையாக வைத்து மாதாந்திர லாட்டரி நடத்தப்படவேண்டும். வெற்றிபெறும் எண்ணை வைத்திருப்பவருக்கு பத்தாயிரம் டாலர் பரிசு வழங்கலாம். தெளிவாகச் சொல்வதென்றால், ‘A’ என்ற எழுத்தை முதலாவதாகக் கொண்ட எண்களின் மீது ஜனவரிமாதம் லாட்டரி நடத்துவது. ஒருவருக்கு மட்டும் பத்தாயிரம் பரிசு; ‘A’ வரிசையின் மற்ற எண்களைக் கொண்ட நோட்டுக்கள் அனைத்தும் உடனடியாக மதிப்பிழந்துவிடும். (வங்கிகளில் சென்று அடுத்த ஒரு மாதத்திற்குள் மாற்றிக்கொள்ளலாம்.)
- பிப்ரவரி மாதம், ‘B’ எழுத்தை முதலாவதாகக் கொண்ட எண்களின் மீது லாட்டரி நடத்துவது; ஒரு நோட்டுக்கு மட்டும் பத்தாயிரம் டாலர்; மற்ற நோட்டுகளுக்கு நாமம். (ஆனால் வங்கிகளில் சென்று அடுத்த ஒரு மாதத்திற்குள் மாற்றிக்கொள்ளலாம்.)
- இப்படியே, ஒரு வருடத்திற்குள் அனைத்து நோட்டுக்களும் ஒழிக்கப்படும்.
·
மேற்படி ஒரு வருடத்திற்குள் வங்கிகளுக்குள் வந்துசேராத
நோட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்படும். அதாவது, ஒரு வருடத்திற்குப்பின் வந்தால்,
ஒவ்வொரு நூறு டாலருக்கும் ஐந்து டாலர் அபராதம் (என்பது போல்) வைக்கலாம்.
மேற்படி ஆலோசனையை வெளியிட்டவுடன் அந்த மாணவரின்
ஆசிரியருக்குக் கிடைத்த “பாராட்டு”க்கள் கொஞ்ச நஞ்சமா? அவரைப் பதவியிலிருந்து
தூக்குங்கள் என்று ஹார்வர்டு பல்கலைக்கு அழுத்தம் தரப்பட்டதாம்...
*******
கென்னத் ரகாஃப் -இன் CURSE OF CASH நூலில் மேலும் பல அரிய தகவல்கள் அடங்கியுள்ளன. MBA,
MA -Economics, Public Finance, MCom பயிலும் மாணவர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய
நூல் இது.
உதாரணமாக, ஆண்டுக்கு இரண்டுமுறை, ரிசர்வ்
வங்கியானது தனது வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கிறது. இதற்கான அடிப்படைக் கோட்பாடு
என்னவென்று தெரியுமா?
i = x + (0.5)(pi-2) + (0.5) y (original Taylor’s formulation)
இதில் ‘i’ என்பது ரிசர்வ வங்கி அறிவிக்கப்போகும்
வட்டிவிகிதம்.
‘x’ என்பது, நடப்பிலுள்ள வட்டிவிகிதம்.
‘pi’ என்பது (அடுத்த அரையாண்டில்) எதிர்பார்க்கப்படும்
பணவீக்க விகிதம்.
‘y’ என்பது, நாட்டின் மொத்த உற்பத்தியில், ‘முழு
வேலை’ (total employment) இன்மையால் குறைந்துபோன உற்பத்தி யளவு.
ஜேனட் எல்லன் |
தற்போது IMF தலைவியாக இருக்கும் ஜேனட் எல்லன் (Janet
Yellen) இதில் சிறிய மாற்றம் செய்கிறார்:
i = x + (0.5)(pi-2) + y (Yellen’s preferred formulation)
(இதெல்லாம் நமக்கு அதிகப்படி என்று
தோன்றுகிறதல்லவா? நிறுத்தி விடுகிறேன்.)
- இராய செல்லப்பா , நியூ ஜெர்சி.
Curse of Cash - Kenneth S. Rogoff (Princeton Press, 2016) $ 29.95
நோக்கம் நல்லதாக இருக்கலாம் ஐயா
பதிலளிநீக்கு90 சதவீத பணப் புழக்கம் உள்ள நாட்டில், எவ்வித முன்னேற்பாடும் இன்றி இப்படிச் செய்யலாமா,
பெரும்பான்மையோர் வரிசையில் நிற்க
மிகச் சிறுபான்மையோர் மட்டும்
கட்டுக் கட்டாய் புது நோட்டுக்களைப் பெறுகிறார்களே எப்படி
தாங்கள் கூறுவது சரியே. நல்ல நோக்கங்களும் உரிய முன்னேற்பாடு இல்லாமல் செய்யப்படும்போது மக்களுக்குக் கணக்கில்லாத சிரமங்களை உண்டாக்குவது கண்கூடு. மாதச் சம்பளதாரர்களும், நகர்ப்புறத்தவரும் ஓரளவு சமாளித்துக்கொண்டார்கள் என்றாலும், கிராமப்புறத்தவர்களும் அன்றாட வருமானம் உடையவர்களும், சிறு வியாபாரிகளும் மிகவும் பாதிக்கப்பட்டது வருந்தத்தக்க விஷயமே.
நீக்குஉலகிலேயே இத்தகைய பெரிய அளவில் இப்படியொரு நிகழ்வு நடந்தது இதுதான் முதல்முறை என்பதால் உலகமே இந்தியாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
நல்ல அறிமுகம்.
பதிலளிநீக்குஆராய்ச்சி மாணவர் சொன்ன கருத்திற்கு இப்படியா...? பாவம் அவரின் ஆசிரியர்...
பதிலளிநீக்குநீங்கள் குறிப்பிட்ட அந்த 5 கடமைகளும் அரசு உடனே செய்து செயல்படுத்தவும் வேண்டும்... ஆனால் "இங்கு" முழுவதுமாக நடக்குமா என்பது தான் சந்தேகம்...
zero balance 'ஜன்தன்' கணக்குகளை கோடிக்கணக்கில் ஆரம்பிக்குமாறு வங்கிகள் வற்புறுத்தப்பட்டபோதே அரசாங்கம் எதோ ஒரு நீண்டகால நோக்கத்தின் காரணமாகவே அப்படிச் செய்கிறது என்ற சந்தேகம் எனக்கு உண்டு. இப்போது உண்மையாகிவிட்டது. அப்படி ஆரமிக்கப்பட்ட கணக்குகளால் தான் பல்லாயிரம் கோடி ரூபாய் கருப்புப்பணம் இப்போது வங்கிகளுக்குள் வந்திருக்கிறது.....அதே சமயம், அரசின் எல்லா முயற்சிகளும் சரியான பலனைத் தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
நீக்குGood currency analysis
பதிலளிநீக்குநல்ல நூல் சார்! நம் அரசு கொண்டுவந்ததில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், நான் என்ன நினைத்து, இதைக் கொண்டு வரும் முன் என்னென்ன ஆயத்தங்கள் நம் அரசு எடுத்திருக்க வேண்டுமெ என்று சொல்லி வந்தேனோ அவை அனைத்தும் ஆசிரியர் சொல்லியிருக்கிறார். அந்த 5 பாயிண்டுகள். கட்டுரை கூட எழுதி முடிக்காமல் ஏனோ வெளியிடத் தயங்கி வைத்திருக்கிறேன். நம்மூரில் அந்த 5 பாயிண்டுகளையும் அரசு ஆணை பிறப்பிக்கும் முன் சிந்தித்துப் பார்க்காததால் வந்த பிரச்சனைகள்தான் இப்போது எல்லோரும் அனுபவிப்பது. மற்றபடி திட்டம் நல்லதே. நம்மூரைப் போன்ற தினக்கூலி அல்லது அந்த வருமானம் கூட இல்லாத மக்கள் கொண்ட நம் நாட்டினை மனதில் கொண்டு இந்த 5 பாயின்ட்களையும் நம் பொருளாதார வல்லுநர்கள்??? எப்படிச் சிந்திக்காமல் மோடியிடம் அதைப் பற்றி விவாதிக்காமல் எடுத்தார்களா ?? இவை எல்லாம் என் மனதில் எழுந்த கேள்விகள் நான் இதனை மிகவும் பாராட்டினாலும் இந்தக் கேள்விகள் எழாமல் இல்லை....
பதிலளிநீக்குநல்ல பதிவு நல்ல அறிமுகம்...
கீதா
'சாமி' போனால் 'சின்ன' சாமி, 'அம்மா' போனால் 'சின்ன'ம்மா என்று நம்முடைய நடைமுறை இருக்கும்போது, ராம் மோகன ராவ் கள் போன்ற அதிகாரிகள் எப்படி ஐயா (அம்மா?) பிரதமரிடம் உண்மை நிலையைக் கொண்டுபோய்ச் சேர்ப்பார்கள்? ....எப்படியோ, அனுபவிக்கவேண்டியத்தை அனுபவித்தாயிற்று, பட்ஜெட் வரை பொறுத்திருப்போம். நல்லது நடக்கவும் வாய்ப்புள்ளதே!
நீக்குநல்ல நடைமுறைக்குத் தேவையான அலசல். நன்றி, செல்லப்பா யக்யசாமி.
பதிலளிநீக்குதற்போதைய சூழலுக்குத் தேவையானதை தங்கள் நடையில் பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்கு