வெள்ளி, ஜனவரி 06, 2017

வந்தது தெரியும் போவது எங்கே?

பதிவு எண் 02/2017

“வந்தது தெரியும், போவது எங்கே?
வாசல் நமக்கே தெரியாது” – கண்ணதாசன்

மரணம் பற்றி நினைப்பதும் எழுதுவதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

நியுஜெர்சியில் வெளியாகும் தினசரி பத்திரிக்கை ‘ரெக்கார்டு’. இதில் மரணச் செய்திகளும், மரணம் அடைந்தவரைப் பற்றி, அவர்களது உறவினர்கள் தரும் நினைவஞ்சலி விளம்பரங்களும் முழுதாக இரண்டு முதல் நான்கு பக்கங்கள் வருகின்றன. (பிற மாநிலங்களிலும் தினசரிகளில் இந்த வழக்கம் இருக்கிறது.) இறந்தவரின் புகைப்படத்துடன் அவரது பிறந்த தேதி, பிறந்த இடம், கல்வி கற்றது, பணியாற்றிய விவரங்கள், தற்போதுள்ள உறவினர்களின் விவரங்கள், திருமணம், விவாகரத்து, குழந்தைகள் பற்றிய தகவல்கள் ஆகியவை மிக விரிவாக எழுதப்பட்டிருக்கும். (ஹிந்து பத்திரிகையில் இந்த அளவுக்கு வெளியிட்டால் குறைந்தது ஒரு லட்ச ரூபாய் விளம்பரக் கட்டணமாக வாங்கிவிடுவார்கள். அங்கே வார்த்தைகளைக் கணக்கிட்டு வரிவிளம்பரம் கொடுப்பதுதானே வழக்கம்! இறந்துபோனவருக்குத் திதி தான் கொடுக்கிறோமே,  பத்திரிகை விளம்பரம் ஒரு கேடா என்று யாரோ பேசுவது கேட்கிறது.)  

ஆனால் நியுஜெர்சியில் மரணம் அடைவதென்பது அவ்வளவு சிக்கனமான விஷயம் அல்ல என்று தெரிகிறது.

இங்கே மரணங்கள் ஏதேனும் ஒரு மருத்துவமனையில் தான் நிகழ்ந்தாகவேண்டும், அல்லது சான்றளிக்கப்படவேண்டும். அத்துடன், இறந்த உடலை வீட்டிற்குக் கொண்டுவர அனுமதி கிடையாது. அரசாங்கத்தால் உரிமம் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு FUNERAL HOUSE -இல் தான் சடலங்கள் கிடத்தப்படவேண்டும்.  எவ்வளவு நாள் வேண்டுமோ அவ்வளவு நாள் தரமான  குளிரூட்டப்பட்ட சூழ்நிலையில்  அவை பாதுகாக்கப்படும்.

பிணங்களைப் புதைப்பதோ அல்லது எரிப்பதோ உரிமம பெற்ற FUNERAL DIRECTOR முன்னிலையில் தான் நடைபெறவேண்டும்.

சூரியன் மறைவதற்குள் பிணத்தை இடுகாட்டிற்கு அனுப்பிவிடும் பழக்கம் நம்முடையது. (கருமம் செய்யவேண்டிய  வாரிசுதாரர் வருவதற்குத் தாமதமானால் மட்டுமே இது  தாமதப்படும்.) நியுஜெர்சியில் அப்படியில்லை. பிணத்தை எரிப்பதானால்,  இறந்து இருபத்திநாலு மணி நேரம் ஆன பிறகே அதற்கு அனுமதி உண்டு. புதைப்பதானால் அதற்குரிய சம்பிரதாயமான சடங்குகளை முடிப்பதற்கு சில நாட்கள் ஆகும் என்பதால் அது பற்றி தனியாக விதிகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

எரிக்கப்பட்டவரின் சாம்பலைக் கடலில் கரைக்கவோ, தூவவோ  அனுமதி உண்டு. ஆனால் மூன்று கடல்மைல்களுக்கு அப்பால் தான் செய்யவேண்டும். அது பற்றி முப்பது நாட்களுக்குள் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகாரிக்கு முறையாகத் தகவல் அளிக்கவேண்டும். கடல் அல்லாத நிலப்பரப்பின் மீதும் சாம்பல் தூவப்படலாம். ஆனால்  தனது நிலத்தில் அது விழக்கூடாது என்று ஆட்சேபிக்க மற்றவர்களுக்கு உரிமை உண்டு.

இறந்தவர்கள் விட்டுச்செல்லும் சொத்துமதிப்பின் மேல் ‘மரணவரி’ (எஸ்டேட் டாக்ஸ்) கட்டியாகவேண்டும்.  இந்தியாவிலும் இந்த வரி இருந்தது. பிணத்தை எடுப்பதற்குள் அந்த வரியைச் செலுத்தியாகவேண்டும் என்று அதிகாரிகள் கட்டாயப்படுத்திய கதைகள் ஏராளம். இதை நிரந்தரமாக ஒழித்த பெருமை நமது ப. சிதம்பரம் அவர்களைச் சாரும். (தான்  பதவியேற்றவுடன் இந்த மரண வரியை ரத்து செய்வதாக டொனால்டு ட்ரம்ப்   கூறியிருக்கிறார்.)

ஜாதி, மத வித்தியாசமின்றி யார் வேண்டுமானாலும் FUNERAL DIRECTOR ஆகமுடியும்.

தனக்கு என்னவிதமாக இறுதிச் சடங்குகள் நடைபெறவேண்டும் என்று முன்னதாகவே இவர்களிடம் பலர் பதிவுசெய்துகொண்டு அதற்காகப்  பெருந்தொகையையும் வைப்புநிதியாகச செலுத்துகிறார்கள்.  அப்படிப்  பதிவு  செய்தவர் இறந்துபோகும் நிலையில், சம்பந்தப்பட்ட  FUNERAL DIRECTOR முன்னின்று ஆகவேண்டிய காரியங்களைக் கவனித்துக்கொள்கிறார். உறவினர்களுக்குத் தகவல் தெரிவிப்பது, பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்பது, பிணத்தைப் பாதுகாப்பாக  வைப்பது, காப்பீட்டு  நிறுவனங்களுக்குத் தகவல் கொடுத்து அவர்களிடமிருந்து பணம் பெறுவதற்கு ஆவன செய்வது, இறந்தவரின் சமய  முறைப்படி பத்தாம் நாள் அல்லது வேறொரு நாளில் அஞ்சலிக்கூட்டம் நடத்துவது, அதற்கான அழைப்புகளை அனுப்புவது, அவர்களுக்கு உணவு முதலிய வசதிகளைச் செய்வது  ....என்று எல்லாவற்றையும் இந்த  FUNERAL DIRECTOR குறையின்றி நடத்திவைப்பார். (கொஞ்சம் செலவாகும், அவ்வளவே!)

தான் இறந்தபிறகு தனக்குரிய இறுதிச்சடங்குகளை இன்னமுறைப்படி இன்னார்தான் செய்யவேண்டும் என்று உயிலில்  ஒருவரின் பெயர் குறிப்பிட்டிருந்தால்,  அந்தச் சடங்குகளைப் பொறுத்தவரை அந்த நபருக்கு மட்டுமே முழு உரிமை உண்டாம். சட்டபூர்வ வாரிசுகள் அதை மதித்தாகவேண்டுமாம்.

இதையெல்லாம் பார்க்கும்போது, ‘நம்மூரு போலாகுமா?’ என்று தோன்றுகிறதல்லவா? உண்மைதான்; தப்பித்தவறி அமெரிக்காவில் மரணம் அடைந்துவிட்டால் சடலத்தைப் பதப்படுத்தி அடுத்த விமானத்தில் ஊருக்கு அனுப்பிவிடுவதுதான் சிக்கனமான விஷயம்.

 (சென்னையில் டிசம்பர் 5/6 இல்  நடந்த ஒரே ஒரு மரணத்தைப் பற்றி தினமும் சமூக வலைத்தளங்களில் நடக்கும் கலாட்டாவின் பிரதிபலிப்பு?)

-இராய செல்லப்பா, நியூஜெர்சி

8 கருத்துகள்:

 1. மரணத்துக்குப் பின்னான வாழ்வு பற்றியே அலசிப் படித்திருக்கிறேன். இந்தத் தகவல்கள் எனக்குப் புதுசு.

  பதிலளிநீக்கு
 2. எங்கள் ப்ளாக் கேட்டு வாங்கிப் போடும் கதை பகுதிக்கு உங்களிடமிருந்து நான் ஒரு கதை எதிர்பார்க்கலாமா? எங்கள் ப்ளாக்கில் படித்திருப்பீர்கள். செவ்வாய் தோறும் வெளிவருவது. சம்மதம் எனில் என் மெயில் ஐடி : sri.esi89@gmail.com

  பதிலளிநீக்கு
 3. விரிவான விபரங்கள் புதியவையே எமக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 4. சார் இதைப் பற்றி அங்குள்ள உறவினர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இத்தனை விளக்கமாக அல்ல...மரண நிகழ்வு கூட காஸ்ட்லி என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் சார் அங்கிருந்து இங்கு கொண்டு வருவது இன்னும் ப்ரொசீஜுரலாச்சே!!! இல்லையா...இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் சிறு சிறு வேறுபாடுகள் உண்டு போல..அங்கு..

  கீதா

  பதிலளிநீக்கு
 5. அறிந்திராத விவரங்களை உங்கள் பதிவு மூலமாக அறிந்தோம்.

  பதிலளிநீக்கு
 6. எந்த ஊர் என்றாலும் சொந்த ஊரைப் போல வருமா . இறப்புக்கும் கூடத்தான் .

  பதிலளிநீக்கு