பதிவு 3/2015
திருக்குறள் நாயக்கர்
அவரை நாயக்கர் என்றோ நாய்க்கர் என்றோதான்
அழைப்பார்கள். வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். காக்கி சட்டையும் காக்கி அரைக்கால்
நிஜாரும் மிலிட்டரி பூட்சுகளும் மூன்று அங்குல அகலத்திற்குப் பளபளக்கும் தோல் பெல்ட்டும்,
பாதி வளைந்ததான கவ்பாய் தொப்பியுமாக அவர் ‘சர் சர் சர் ‘ என்று பலத்த ஓசையுடன்
வீதியில் நடந்து செல்லும்போது சிறுவர்களாகிய நாங்கள் வியப்புடனும் அச்சத்துடனும்
பார்ப்பது வழக்கம்.
வழியில் வேறு யாராவது பெரிய மனிதர்களைப்
பார்த்துவிட்டால் சடக்கென்று நின்று மிலிட்டரி பாணியில் சல்யூட் வைக்கும் அழகு
இருக்கிறதே, அப்பப்பா.... சாலையில் வாகனங்கள் தாறுமாறாக நின்றிருந்தாலோ அல்லது
அவரது வழியை மறிப்பதுபோல் மாடுகளோ எருமைகளோ நின்றிருந்தாலோ தன்னிடமிருந்த நீண்ட
பெரிய விசிலால் ஊதுவார். அவ்வளவுதான் எல்லாத் தடைகளும் விலகிப்போகும்.
மாலை நேரங்களில் அலுவலகம் முடிந்து அவர் திரும்பும்போதும்
அவர் நடையில் சற்றும் தொய்வு இருக்காது.
முகம் சற்று களைப்படைந்திருக்கும் என்றாலும் பள்ளிச் சிறுவர்களாகிய எங்களைக்
கண்டால் ‘குட் ஈவினிங் சில்ரன்’ என்று கம்பீரமாகக் கூறுவார். பிறகு ‘லெஃப்ட் ரைட்
லெஃப்ட் ரைட்’ என்று நடந்துபோவார். நாங்களும் அவருக்குத் தெரியாமல் அவர்
பின்னாலேயே ‘லெஃப்ட்
ரைட்’ போட்டுக்கொண்டு சிறிது தூரம் போவதுண்டு.
அவர் ஏதேனும் போலீஸ் அதிகாரியாகவோ மிலிட்டரி
ஆபீசராகவோ இருக்கலாம் என்று நாங்கள் அனுமானித்திருந்தோம். அதெல்லாமில்லை, அவர்
எங்கள் ஊரின் முக்கியத் தொழிற்சாலையாகிய ஈஐடி பாரி கம்பெனியில் தலைமை வாச்மேன்
என்பது தெரியப் பல வருடங்கள் ஆயின.
ஆகஸ்ட்டு 15 இலும் ஜனவரி 26இலும் பாரி
கம்பெனியின் திறந்தவெளி அரங்கில் இலவசாகத் திரைப்படங்கள் காட்டுவார்கள். வெறும்
வாய்மொழியாகவே அத்தகவல் பரவும். இரவு ஏழுமணிக்குப் படம் ஆரம்பமாகும் என்றாலும்
மாலை ஆறுமணிக்கே ஆயிரக் கணக்கில் கூட்டம் சேர்ந்துவிடும். இரைச்சல் என்றால்
அவ்வளவு இரைச்சல். அப்போதுதான் நாயக்கரின் சாமர்த்தியம் வெளிப்படும். ஒரு நீண்ட
தடியைக் கையில் எடுத்துகொண்டு ‘ஆல் ஆப் யூ ஸிட் டவ்ன்’ என்று ஆயிரம் மைக்
ஓசையைவிடப் பெரிதாகக் கூவுவார். அவர் எங்கே நிற்கிறார் என்பதே தெரியாது. இருட்டு. ஒரே
நொடியில் கூட்டம் முழுதும் அமைதியாகிவிடும். மறந்தும் ஒரு வார்த்தை தமிழில்
பேசமாட்டார்.
புரொஜக்டர் இயக்குபவர் வந்ததும் கூட்டம்
முழுதும் மகிழ்ச்சியில் கைதட்டும். படம் ஆரம்பமாகும். அநேகமாக ‘வீரபாண்டிய
கட்டபொம்மன்’ அல்லது ‘சிவகங்கைச் சீமை’ அல்லது ‘கப்பலோட்டிய தமிழன்’ தான் மீண்டும்
மீண்டும் போடுவார்கள்.
திரைப்படம் முடிந்ததும் அடங்கியிருந்த கூட்டம்
ஆக்ரோஷமாக வெளியேறத் தொடங்கும். பெண்களும் குழந்தைகளும் ஒருவரையொருவர்
முண்டியடித்துக்கொண்டு முன்னேறத் துடிப்பார்கள். அப்போது மீண்டும் நாய்க்கருக்கு
வேலை வந்துவிடும். தன் நீண்ட கைகளை இருபுறமும் நீட்டி அதற்குள் பத்துப் பத்தாக
ஆட்களை அடக்கி ஒரு பந்துபோல் முன்னே தள்ளுவார். இப்போது தமிழில்தான் பேசுவார். ‘யாரும்
முந்தக் கூடாது. அவசரப் படாமல் போங்கள்’ என்பார்.
சிறுவர்களாகிய நாங்கள் சற்றுப் பின்தங்கிவிடுவோம்.
கூட்டம் கலைந்த பிறகு போகலாமே என்று நிற்போம். நாயக்கர் எங்களிடம் வருவார்.
சிலரிடம் பெயர் கேட்பார். திருக்குறள் படித்திருக்கிறாயா என்பார். இல்லை என்போம்.
திருக்குறளில் எல்லாவற்றைப் பற்றியும் சொல்லியிருக்கிறது, கட்டாயம் படிக்கவேண்டும்
என்பார். கூட்டமாக இருக்கும் போது ஒருவரை ஒருவர் மோதிக்கொண்டு போவது பற்றியும் திருக்குறளில்
சொல்லியிருக்கிறது தெரியுமா என்பார். விழிப்போம்.
உன்னை மற்றவர்கள் தள்ளினாலும் நீ அவர்களைத்
தள்ளக் கூடாது என்று வள்ளுவர் சொல்கிறார் என்பார். ‘தள்ளினும் தள்ளாமை நீர்த்து’
என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார், அதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் என்பார். அன்றுமுதல்
அவரைத் ‘திருக்குறள் நாயக்கர்’ என்றே அழைக்கலானோம். திருக்குறளை அவர் கரைத்துக்
குடித்திருக்கிறார் என்று பேசிக்கொள்வோம்.
சில ஆண்டுகள் கழித்து லிப்கோ வெளியிட்ட
திருக்குறள் உரையைப் படித்தபோது ‘தள்ளினும் தள்ளாமை நீர்த்து’ என்பதற்கு
வேறு பொருள் இருப்பது தெரிந்தது. என்றாலும் திருக்குறள் நாயக்கர் என்ற பெயரை
மாற்றவேண்டாம் என்று விட்டுவிட்டோம்.
பல ஆண்டுகள் கழித்து நான் கல்லூரிப் படிப்பை
முடித்து வேலைதேடும் பணியில் தினம்தோறும் தபால் அலுவலகம் சென்றபோது மிகவும் வயதான
தோற்றத்தில் அவரைப் பார்த்தேன். அறிமுகம் செய்துகொண்டேன். ‘மிகுந்த சந்தோஷம்’
என்றார். ‘உங்களால்தான் திருக்குறள் படிக்கவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது’
என்றேன். என் கைகளைப் பிடித்துக்கொண்டு உணர்ச்சிவசப்பட்டவராக ‘எனக்கு ஒரு உதவி
செய்வாயா? ஒரு திருக்குறள் புத்தகம் வாங்கித்தருகிறாயா? தேவாரம் திருவாசகம்
எல்லாம் நீளமாக இருக்கிறது. படிப்பதற்குள் தூக்கம் வந்துவிடுகிறது. திருக்குறள்
ரெண்டே வரிதானே! செய்வாயா?’ என்றார். ‘சாவதற்குள் திருக்குறள் புத்தகத்தை
ஒருமுறையாவது படித்துவிடவேண்டும்‘ என்றார். பகீரென்றது எனக்கு. அப்படியானால்
இதுவரை இவர் திருக்குறளைத் தீண்டியதே இல்லையா? ‘தள்ளினும் தள்ளாமை நீர்த்து’ நினைவுக்கு
வந்தது.
அடுத்தவாரம் வேலை கிடைத்து வெளியூர்
சென்றுவிட்டேன். பஸ் நிலையத்தில் திருக்குறள் கிடைத்தது. அவரது முகவரிக்கு அனுப்பிவைத்தேன்.
பலநாட்களுக்குப் பிறகு அது எனக்கே திரும்பி வந்துவிட்டது,
LEFT என்று தபால்காரர் குறிப்புடன். பின்னால் ஊர் திரும்பியபோது விசாரித்ததில் இந்த உலகை
விட்டே அவர் LEFT என்று தெரிந்தது. துக்கம் விசாரிக்கவும் அவருக்கு உறவினர்கள்
யாரும் இருக்கவில்லை.
பல வருடங்கள் அந்த லிப்கோ திருக்குறள் என்னிடமே
இருந்தது.....
(c) Y.Chellappa
email: chellappay@yahoo.com
"திருக்குறள் நாய(க்)கர்" பெயர் காரணம் சுவையான சம்பவம்!
பதிலளிநீக்குதிருக்குறளை நீங்கள் படிப்பதற்குக் காரணமானவரைப் பற்றிய நல்ல நினைவுகூறல்!
பதிலளிநீக்குபடிக்காமல் சென்று விட்டாரே... ம்...
பதிலளிநீக்குதிருக்குறள் நாயக்கர் நாயகனாய் நிற்கின்றார். மனம் நெகிழ்ந்துவிட்டது சார்! நல்ல ஒருமனிதரைப் பற்றிய நல்ல ஒரு பதிவு!
பதிலளிநீக்குதைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
பதிலளிநீக்குகைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr