வெள்ளி, ஜூலை 11, 2014

என்னதான் நடக்கிறது அமெரிக்காவில்? (2)

முகநூல் நண்பரின் அடுத்த கேள்விகள்:

கேள்வி (3) அமெரிக்காவில் வீசும்காற்றை உங்களால் பயமில்லாமல் சுவாசிக்க முடிந்ததா?  (6) காற்றின் மணம் எப்படி இருந்து என்று உணர்ந்தீர்கள் ?

இந்தக் கேள்விகளின் உள்ளுறை அர்த்தம் என்னவென்று எனக்கு விளங்கவில்லை. உலகெங்கும் ஆயுதப் போட்டியை உருவாக்கி, அதன்மூலம், நாடுகளிடையே போர்மூளும் சூழலை உண்டாக்கி, போருக்கு ஆயத்தமாகவேண்டிய நிலையில் உள்ள நாடுகளுக்கு ஆயுதங்களை சப்ளை செய்வதன்மூலம் தனது பொருளாதாரத்தை நிலைப்படுத்திக் கொள்வதே அமெரிக்காவின் அரசியல் வரலாறு என்பதை வைத்துக்கொண்டு, அமெரிக்காவில்  வெடிமருந்துகளின் கந்தக வாசம் காற்றை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் என்று நண்பர் கருதுகிறாரோ?  


அதெல்லாம் இல்லை. அமெரிக்கக் காற்றில் இந்தியாவை விட மாசு குறைவுதான். எனவே தைரியமாகச் சுவாசிக்கலாம். (எனக்கு நியூயார்க், நியூஜெர்சி மாநிலங்கள்தாம் அதிகம் பழக்கம்.)

தண்ணீரும் இங்கு சுத்தமாகத்தான் இருக்கிறது. வாளிகளில் எவ்வளவுநேரம் வைத்திருந்தாலும் தண்ணீரின் அழுக்குக் கறை வாளியின் அடிப்பக்கம் தங்குவதில்லை. குழாய்களின் மேல் கறை படிவதுமில்லை. பொதுக் குழாய்களிலிருந்து அப்படியே நீரை வாயில் ஏந்திக் குடிக்கிறார்கள். நீரைக் காய்ச்சிக் குடிப்பது என்பது கிடையாது. பாலையே காய்ச்சுவது கிடையாது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! மேலும் FRIDGE எனப்படும் குளிர்பெட்டியில் வைத்த, சமைத்த சாதம்,  பதினைந்து நாள் ஆனாலும் கெடுவதில்லை. உள்ளே வைத்த காய்கறிகளின் மேல் ஒரு சொட்டு நீர்த்துளியும் காண்பதில்லை.

கேள்வி (4) பக்கத்து வீட்டுக்காரர்களோடு பேசிப்பழக முடிந்ததா?

அது நீங்கள் எங்கே குடியிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. இந்தியர்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியில் நீங்கள் இருந்தால், இந்தியா மாதிரியேதான் இருக்கும்.  வித்தியாசமில்லை. (அதாவது, யாரும் யாரைப் பார்த்தும் மருந்துக்கும் புன்னகைக்க மாட்டார்கள்!)

அமெரிக்கர்கள் அதிகம் வாழும் பகுதியாக இருந்தால், ஒரே கட்டிடத்தில் குடியிருக்கும் உடன்-அடுக்காளர்கள் (co-flat residents)  ஒருவரை ஒருவர் முதலில் பார்த்துக்கொள்ளும்போது ‘ஹாய்’ என்பார்கள். (அதற்குமேல் ஒன்றும் பேசமாட்டார்கள்!) இது பெரும்பாலும் லிஃப்டில் ஏறும்போதோ இறங்கும்போதோ  நிகழும். மற்றபடி, குழந்தைகளின் பிறந்தநாள் அல்லது வேறு விழாக்களுக்கு நீங்கள் அழைத்தாலோ, அல்லது அழைக்கப்பட்டலோ, அப்போது பொதுப்படையான விஷயங்கள் பேசிக்கொள்வார்கள்: (நம்ம ஊர் போலத்தான்.) குளிர் இந்த வருடம் அதிகம் இல்லையா? ஒபாமாவின் இன்ஷூரன்ஸ் சீர்திருத்தம் நிச்சயம் வருமா? ஆஞ்சலினா ஜோலியின்  wardrobe malfunction…..!” “ உங்கள் நிறுவனத்தில் ஆள்குறைப்பு செய்கிறார்களாமே!

சேவைத்துறைகளில் உங்களோடு தொடர்புடையவர்கள், தொழிலுக்குத் தேவையான அளவில் மட்டுமே பேசுவார்கள். உங்கள் சொந்த விவரங்களைக் கேட்க அஞ்சுவார்கள். இதற்குப் பண்பாட்டு வித்தியாசங்களே காரணமாக இருக்கலாம்.

இந்தியப் பெண்கள் சேலை உடுத்திக்கொண்டு சென்றால், அமெரிக்கப் பெண்களில் சிலராவது, ‘வெரி நைஸ்’ என்று சொல்லாமல் இருப்பதில்லை. ‘இந்த ஆடையின் பெயர் என்ன?’ என்று சில சீன, கொரியப் பெண்கள் கேட்டதுண்டு. அதே போன்ற கேள்வியை நமது பெண்கள் அவர்களிடம் கேட்க வழியில்லை. (ஏனென்றால் அவர்கள் பெரும்பாலும் அரை-டிராயர் தான் அணிகிறார்கள்.) நெற்றியில் பொட்டோ, விபூதி, குங்குமம்  போன்ற விஷயங்களோ இருந்தால் நம்மை அல்-கொய்தா என்று கருதிவிடும் அபாயம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

அலுவலகங்களில் பணியாற்றுகையில் நம்மூர் போலத்தான். சரளமாகப் பழகுகிறார்கள். கல்லூரிகளிலும்  அப்படியே.

இரண்டு வருடங்களுக்கு முன்பு  South Asian Writers என்ற அமைப்பின் கூட்டத்திற்குப் போயிருந்தேன். ஈழத்துப் பெண்மணி ஒருவர், தனது  Creative Writing  பட்டப் படிப்பிற்கு எழுதிய நாவலை, சற்றே மெருகூட்டிப் பதிப்பித்திருந்தார். தமிழ்ப் பெண்தான். ஆனால், ஈழப்போரிலிருந்து உயிர் தப்புவதற்காக அவளது பெற்றோர் அவளைப் பத்து வருடங்களுக்கு முன்பே அமெரிக்காவிற்கு அனுப்பிவிட்டிருந்தனர். மறந்தும் தமிழில் பேச முன்வரவில்லை அவர். அவருடைய நாவலைச் சில தினங்களுக்கு முன்பே படித்துவிட்டு வந்திருந்ததால், சில விஷயங்களை விவாதிக்கலாம் என்று நினைத்தேன். நேரமும் இருந்தது. ‘இலங்கையில் எந்த ஊர் நீங்கள்’- என்றேன். அவ்வளவுதான், அவர் முகத்தைத் திருப்பிக்கொண்டே நகர்ந்துவிட்டார். ‘அப்படிக் கேட்டிருக்கக்கூடாது, அதை இங்குள்ளவர்கள் அநாகரீகமாகக் கருதுவார்கள்’ என்றார் ஒரு நண்பர்.  எந்த ஊர், எந்த நாடு என்று கேட்பதுகூட இயலாத நிலைமை!

கல்லூரி மாணவர்கள் நடத்திய நாட்டிய நிகழ்ச்சிக்குப் போயிருந்தோம். உயர்ந்த படிப்பு படித்தவர்களும், உயர்பதவியில் இருப்பவர்களுமான கூட்டம். தங்களை ‘இன்ன நிறுவனத்தில் இந்தப் பதவியில் இருப்பவன்’ என்றோ, ‘இன்ன படிப்பு படித்தவன்’ என்றோ யாரும் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. ஒரு பி.எச்.டி.யாவது முடித்திருந்தால் மட்டுமே அமெரிக்காவில் சொல்லிக்கொள்ளும்படியான விஷயமாம். நம்மூரில் முப்பத்திரண்டு எம்.ஏ. பட்டங்கள் பெற்ற ஒருவர், அந்த முப்பத்திரண்டையும் தன் விசிட்டிங் கார்டில் போட்டிருந்தார்! கல்லூரியில் நான் படிக்கும்போது ஓர் ஆசிரியர், தன் பெயருக்குப் பின்னால் பி.ஏ., எம்.ஏ., என்று இரண்டு பட்டங்களையும் போட்டிருந்தார். பி.ஏ. படிக்காமலா எம்.ஏ. படிப்பார்கள் என்பது எங்களுக்குத் தோன்றியதில்லை.

நியூஜெர்சியில் தினமும் நான் ஜான்சன் நூலகத்திற்குப் போகும் வழியில் ஒரு அடுக்குவீட்டின் வாசலில் இருக்கும் பூந்தோட்டத்தில் சிறு நாற்காலியில் அமர்ந்தபடி பத்திரிக்கை படித்துக்கொண்டிருப்பார் ஒருவர். (அமெரிக்கர். வெள்ளை நிறத்தவர்.) என்னைப் பார்த்துப் புன்னகைப்பதுண்டு. நான் நின்று, ‘ஹவ் ஆர் யூ?’ என்று கேட்டுப் போவதுண்டு. ‘ஐம் குட்’ (I’m good) என்பதைத் தவிர மேற்கொண்டு பேச்சு வராது. இதே மாதிரி சில வாரங்கள் நடந்தபின், ஒருநாள் அவரிடம் மேற்கொண்டு பேசியே தீருவது என்று முடிவெடுத்தேன். என்ன நினைத்தாலும் சரி, இவர் வாயைக் கிளறவேண்டியதுதான் என்று, “எப்போதும் இங்கேயே அமர்ந்து கொண்டிருக்கிறீர்களே! என்னுடன் நூலகத்திற்கு வரலாமா?” என்றேன்.

அவரும், எனது பேச்சுக்குத்தான் காத்திருந்தவர் மாதிரி, “Thank you! But I am not able to walk freely! “  என்றார். சில வருடங்களுக்கு முன்பு காலில் மூட்டு வலி என்று நியூயார்க்கின் மிகச் சிறந்த மருத்துவமனைக்குப் போனாராம். சில மாதங்களும், இன்ஷூரன்ஸ் மூலம் ஒரு மில்லியன் டாலரும் செலவழிந்தபின், வீட்டுக்கு அனுப்பி விட்டார்களாம். ஐம்பதடிக்கு மேல் தொடர்ந்து நடக்க முடியாதாம். சக்கர நாற்காலியில் அமர்ந்தும் அதிகநேரம் இருக்கமுடியாதாம். பிறகு வேலை போய்விட்டது. சொந்த வீடு மட்டும் இருக்கிறது. இப்போது இன்ஷூரன்ஸ் கிடையாது. எனவே மருத்துவம் பார்க்க வழியில்லை. அப்படியே காலத்தைக் கழிக்கவேண்டியதுதான் என்றார். அதற்கடுத்த நாள், நான் வருவதைக் கண்டதுமே எழுந்து உள்ளே போய்விட்டார்! அதன் பிறகு நான் அவரைப் பார்க்கவே முடியவில்லை.

அவருடைய வயது, என்னதைவிடச் சில வருடங்கள் அதிகம். ‘எனக்கு எவ்வளவு வயது இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? ‘ என்றேன். என் உண்மையான வயதை விடப் பத்துவருடங்கள் குறைத்துக் சொன்னார். அவரிடம் எனக்குப் பிடித்த விஷயம் அதுவே.

கேள்வி (5)  உள்ளுர் பயணங்கள் இந்தியாவோடு ஒப்பிடும்போது செலவு குறைவாக இருக்கிறதா ?

இது மிக முக்கியமான கேள்வி.

அமெரிக்காவில், சில ஊர்களில் மட்டுமே பொதுமக்களுக்கு பஸ் வசதி உண்டு. டாக்ஸிகளும் எல்லா ஊர்களிலும் கிடைக்காது. ஆட்டோ ரிக் ஷாக்கள் கிடையாது. ஷேர் ஆட்டோக்கள் அங்கு அனுமதி இல்லை. மெட்ரோ என்னும் ரயில்களும் பெரிய நகரங்களில் மட்டுமே உண்டு. வெளியூர் செல்லும் ரயில்களில் கட்டணம் அதிகம். விமானக் கட்டணத்திற்குச் சமமாக இருக்கும். அபூர்வமாகச் சில இடங்களில் ஸ்கூட்டர், மோட்டார்சைக்கிள் போன்ற வாகனங்களைப் பார்க்கலாம்.

எனவே, ஒவ்வொருவரும் கார் வைத்துக்கொண்டிருப்பார்கள். விமானப் பயணம் செய்வார்கள். இவ்விரண்டுதான் அங்கு சிக்கனம். சொந்தமாகக் கார் இல்லாதவர்கள், டிரைவிங் லைசென்ஸ் இருந்தால், கார்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். அதற்கு முன்பணம் கட்டவேண்டும். கிரெடிட் கார்டு மூலம் தான் கட்டவேண்டும். பணமாகப் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். ஓர் ஊரில் வாடகைக்குக் காரை எடுத்துக்கொண்டு, வேறொரு ஊருக்குப் போய் அங்கேயே விட்டுவிட்டுப் போகும் வசதியும் உண்டு.

சமீப காலமாக, நியூயார்க்கில் இருந்து வாஷிங்டன் போன்ற முக்கிய நகரங்களுக்குச் சீனர்கள் பல ஓம்னி பஸ்களை விடத்தொடங்கி யிருக்கிறார்கள். இதில் கட்டணம் குறைவு. ஆனால் இது போன்ற பஸ்கள் எல்லா ஊர்களிலும் கிடைக்காது.

அமெரிக்காவில் வலதுபுறம் தான் வண்டியோட்டவேண்டும். வண்டியின் வேகத்தை மைல்களில் தான் குறிப்பிடுகிறார்கள். கிலோமீட்டர் கிடையாது. அனுமதிக்கப்பட்ட சாதாரணமான வேகம், மணிக்கு அறுபது மைல் ஆகும். அதாவது ஒரு நிமிடத்திற்கு ஒரு மைல்! நல்ல சாலைகள் இருப்பதால் தொடர்ந்து எட்டுமணி நேரம் வண்டி ஓட்டினாலும் களைப்பு தெரிவதில்லை. சாலைகளில் முப்பது மைலுக்கு ஒருமுறை ஓய்விடம் இருக்கும். அங்கு சுத்தமான கழிப்பறைகளும், குடிநீரும் வைக்கப்பட்டிருக்கும். சுருக்கமாகச் சொன்னால், பயணிகளின் சொர்க்கம், அமெரிக்கா என்றால் மிகையாகாது!

இப்போது இந்திய உணவுகள் அநேகமாக எல்லா நகரங்களிலும் கிடைக்கின்றன. மெக்ஸிகன் உணவுகளில் சைவ உணவுகள் நிறைய உண்டு. அசைவம் உண்பவர்களுக்கு ஆனந்தமான அநுபவம்தான் போங்கள்! மனிதனைத் தவிர மற்ற எல்லாப் பிராணிகளும் கிடைக்குமாம். இனவாரியாக- சீன, வியட்நாமிய, பாகிஸ்தானிய, லத்தின் அமெரிக்க –என்று உணவுக்கடைகள் உண்டு.

நம்ம அண்ணாச்சியின் ‘சரவணபவன்’ பல இடங்களில் இயங்குகிறது. நியூயார்க்கில் லெக்ஸிங்க்டன் அவென்யூ, நியூஜெர்சியில் எடிசன், கனடா-டொராண்டோவில் மிஸிஸாகா   ஆகிய மூன்று உணவகங்களிலும் சாப்பிட்டிருக்கிறேன். சென்னையில் மயிலாப்பூரிலோ, அண்ணா சாலையிலோ உள்ள அவர்களின் உணவகங்களில் என்ன சுவை இருக்குமோ, அதே சுவை. அதே மணம். அதே சுத்தம். பொருட்களும் அதே எடை. (அதே போல் அதிக விலை!)

நியூஜெர்சியில் எடிசன் நகரில் உள்ள சரவணபவனுக்கு அருகிலேயே அனில் அம்பானியின் ‘BIG’  சினிமா அரங்கம் உள்ளது. போனவருடம் அதில் ‘எந்திரன்’ படம் பார்த்துவிட்டு, இரவு உணவருந்தி வந்தோம். திருப்தியாக இருந்தன- மசால்தோசையும் ஐஸ்வர்யா ராயும்.  

அமெரிக்காவின் பூர்வகுடிகள் பற்றி:

செவ்விந்தியர்கள் தான் அமெரிக்காவின் பூர்வகுடிகள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இவர்களுக்கு அமெரிக்காவின் சில இடங்களில் மட்டுமே ‘ரிஸர்வேஷன்ஸ்’ என்ற பெயரில் தனியான வசிப்பிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுவாக இவர்கள் அமெரிக்காவின் மற்ற மக்களோடு அதிகம் பழகுவதாகத் தெரியவில்லை. சுய முனைப்புள்ள குறும்படத் தயாரிப்பாளர்கள் சிலர், அவ்வப்பொழுது இவர்களைப் பற்றிய படங்களை எடுத்து வெளியிடுகிறார்கள். மற்றபடி, இவர்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இவர்களும் மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. என்று தெரிகிறது.

 © Y Chellappa

12 கருத்துகள்:

  1. //இந்தியா மாதிரியேதான் இருக்கும். வித்தியாசமில்லை. (அதாவது, யாரும் யாரைப் பார்த்தும் மருந்துக்கும் புன்னகைக்க மாட்டார்கள்!)//

    :))))))))

    பதிலளிநீக்கு
  2. ஏனோ இந்தப் பாடல் ஞாபகம் வந்தது :

    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறான் ஞானத் தங்கமே... அவன் ஏதும் அறியாதவனடி ஞானத் தங்கமே...

    பதிலளிநீக்கு
  3. ஆய்விற்கான பதில்கள்
    பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  4. அமரிக்க வாழ்க்கை முறையை அறிந்துகொள்ளும் தகவல்கள் அடங்கிய பயனுள்ள கட்டுரை.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    ஐயா.

    பலவகைப்பட்ட வினாக்களுக்கு மிக நேர்த்தியாக விடைகிடைத்துள்ளது பகிர்வுக்கு நன்றி ஐயா
    த.ம 5வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. அமெரிக்க அனுபவத்தை நகைச்சுவை கலந்து சொன்னது சுவாராசியம். கேள்வி பதில் பாணி புதுமை.
    //இந்தியா மாதிரியேதான் இருக்கும். வித்தியாசமில்லை. (அதாவது, யாரும் யாரைப் பார்த்தும் மருந்துக்கும் புன்னகைக்க மாட்டார்கள்!).//
    இந்த இடத்தில் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  7. உலகெங்கும் ஆயுதப் போட்டியை உருவாக்கி, அதன்மூலம், நாடுகளிடையே போர்மூளும் சூழலை உண்டாக்கி, போருக்கு ஆயத்தமாகவேண்டிய நிலையில் உள்ள நாடுகளுக்கு ஆயுதங்களை சப்ளை செய்வதன்மூலம் தனது பொருளாதாரத்தை நிலைப்படுத்திக் கொள்வதே அமெரிக்காவின் அரசியல் வரலாறு ...//

    ஆயுத விற்பனையாளன் அமைதியை விரும்புவதில்லையே.!!

    அமர்க்களமான பகிர்வுகள்..பாராட்டுக்கள்.!.

    பதிலளிநீக்கு
  8. #என் உண்மையான வயதை விடப் பத்துவருடங்கள் குறைத்துக் சொன்னார். அவரிடம் எனக்குப் பிடித்த விஷயம் அதுவே.#
    என்றும் இளமை உங்களிடம் தங்கட்டும் ...அரிய விஷயங்கள் பல, நாங்கள் அறியக் கிடைக்கும் என்பதால் !
    த ம 7

    பதிலளிநீக்கு
  9. யாருக்குத்தான் வயதைக் குறைத்துச் சொன்னா பிடிக்காது?!!!!

    பதிவு பல தகவல்கள் அடங்கிய....தங்கள் வழக்கமான ஹாஸ்யம் இழையோட நல்ல பதிவு சார்! அதுவும் சொன்னீங்க பாருங்க...இங்கு போலத்தான் இந்தியர்கள்...யாரும் யாரைப் பார்த்தும் மருந்துக்குக் கூட புன்னகைக்க மாட்டார்கள்னு ரொம்ப சரிதான் சார்...இங்க மட்டும் என்ன....மாநகரங்களில் அப்படி இருக்கலாம் சார்..ஆனால் இன்னும் சின்ன சின்ன ஊர்களில், கிராமங்களில் கொஞ்சம் நமது பாரம்பரிய மணம் இருக்கின்றது என்று சொல்லலாம் சார்!

    பதிலளிநீக்கு
  10. அமெரிக்க வாழ் மக்களின் இயல்பு நிலையை
    ஓரளவு மிகச் சரியாகப் புரிந்து கொள்ள இந்தப்
    பதிவு மிகவும் உதவுகிறது
    தொடர நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு