வடை சுட்டால் போலீஸ் வருமா அமெரிக்காவில்? (இன்று கிழமை வெள்ளி-2)
(அட்லாண்டிக் கடலோரம்)அமெரிக்காவில் 11ஆவது நாள்
எங்கள் முதல் அமெரிக்க பயணத்தின் போது நடந்த நிகழ்ச்சி இது…
நியூஜெர்ஸியில் நதிவிளிம்பு (ரிவர் எட்ஜ்) என்ற பகுதியில் என் மகளின் வீடு இருந்தது. ஹேக்கன்ஸாக் நதியின் ஒரு முனையில், புதிய பாலம் (நியூ பிரிட்ஜ் லேண்டிங்) அருகில் அமைந்திருந்த வரிசை வரிசையான அடுக்கு வீடுகளில் ஒன்றின் தரைத் தளத்தில் அவள் குடியிருந்தாள்.
அமெரிக்கச் சுதந்திரப் போரின்போது, பிரிட்டிஷ் படைகளிடமிருந்து தப்புவதற்காக ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையிலான அமெரிக்கப் படையினர் இந்த பாலத்தின் கரையில் தான் பின் வாங்கினார்களாம். (1776 நவம்பர் 20). அதைக் குறிக்கும் ஒரு நினைவுப் பலகை பாலத்தின் அருகில் உள்ளது.
மிகவும் அமைதியான இடம். நதிக்கரை என்பதால் நதியில் நீந்திக் கொண்டிருக்கும் வாத்துக்கள் கூட்டம் கூட்டமாகக் கரையேறி இந்தக் குடியிருப்பு பகுதிக்கு வந்துவிடும். அதைத் தவிர்க்கும் பொருட்டு, வாத்துக்களுக்கு யாரும் உணவளிக்கக் கூடாது என்று பெரிய எழுத்தில் எழுதப்பட்ட பலகை ஒன்று கார் நிறுத்தப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் வாத்துக்களுக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்பதால் இந்தப் பலகையின் அருகிலேயே அவை சுதந்திரமாக நடமாடும்.
அடிக்கடி அழகான வரிசையில் வந்து, 'க்வேக்', 'க்வேக்' என்ற ஓசையோடு நதியின் ஒரு கரையில் இருந்து பாலத்தின் மீது ஏறி, மறு கரையில் சென்று, அதே நீரில் கலந்து கொள்ளும். தரைத்தளம் என்பதால் வாயில் கதவைத் திறந்து வெளியில் வந்து நாங்கள் அக்காட்சியை இரசிப்பதுண்டு.
ஒரு நாள் என் மகள் அலுவலகத்திற்குச் சென்று விட்ட பிறகு காலை சுமார் 9 மணி இருக்கும், நதியோரம் பெருத்த கூச்சல் எழுந்தது. வாகனங்கள் செல்லும் முக்கிய சாலையிலிருந்து எல்லா விளக்குகளையும் எரிய விட்டபடி இரண்டு மூன்று போலீஸ் கார்களும், சில மினி டிரக்குகளும் எங்கள் நதிமுனை குடியிருப்பை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தன. பின்னாலேயே ஆறேழு காவலர்கள் தங்கள் கனத்த பூட்ஸின் 'தடக் தடக்' ஓசையோடு பாலத்தை நோக்கி ஓடினார்கள். பாலத்தின் எதிர்ப்புறத்தில் இருந்து அதேபோல் இன்னொரு போலீஸ் அணி எங்கள் பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்தது. வாசல் கதவை இறுகச் சாத்திக்கொண்டு ஜன்னல் வழியாக என்ன நடக்கிறதென்று எட்டிப் பார்த்தோம்.
போலீசாரால் தேடப்பட்டு வந்த ஒரு திருடன் அவர்களால் பிடிக்கப்படும் கடைசி நேரத்தில் இந்த வழியாகத் தப்பித்து விட்டானாம். அவனைத் தேடிக் கொண்டுதான் எல்லா பக்கங்களிலும் போலீஸ் வேட்டை நடக்கிறது என்று தெரிந்தது.
சில வீடுகளின் முன்பு போலீசார் நின்று கொண்டு ஜன்னல் வழியே உள்ளே இருந்தவர்களிடம் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் வீட்டிற்கும் வந்து விசாரிப்பார்களோ என்ற காரணமில்லாத அச்சம் எழுந்தது.
சிறிது நேரத்தில் 'டப்' என்ற சத்தம் கேட்டது. அதாவது சைலன்ஸர் பொருத்திய துப்பாக்கியின் வெடிச் சத்தம்! வெடித்தது திருடனின் துப்பாக்கியா, போலீஸ்காரர் துப்பாக்கியா என்று தெரியவில்லை.
(மறுநாள் செய்தித்தாளில் பார்த்தபோதுதான் அது போலீஸ்காரின் வெடி என்று தெரிந்தது. எப்படியோ திருடனின் உயிருக்கு பாதகம் இல்லாமல் அவனைப் பிடித்துவிட்டார்கள்.)
இதற்குள் பல குடியிருப்புகளில் இருந்தது மக்கள் வெளியே வந்து தங்கள் கவலையைப் பகிர்ந்து கொண்டார்கள். திருடர்கள் அம்மாதிரி நதிமுனை வழியே ஓடி வந்து தப்புவது முன்பெல்லாம் அதிகம் என்றும் தற்போது குறைந்து விட்டதாகவும் பேசிக்கொண்டார்கள். அதைக் கேட்டதும் எங்களுக்குச் சற்று நிம்மதி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் எல்லோரும் வீடு திரும்பித் தத்தம் கதவுகளைச் சாத்திக் கொண்டார்கள்.
அன்று வடை செய்யவேண்டும் என்று என் மனைவி (தன் மனதில் திட்டமிட்டு) அதற்கான மாவை அரைத்து வைத்திருந்தாள். மாலையில் வீடு திரும்பும் பெண்ணுக்கு வியப்பூட்ட வேண்டும் என்பது அவளுடைய திட்டமாக இருக்கவேண்டும்.
அடுப்பை மூட்டி, அகன்ற வாணலியில் எண்ணெய் விட்டு, அது நன்கு கொதித்த பிறகு, வடைகளைத் தட்டி அதில் போட்டு கரண்டியை ஏந்தியபடி கலக்கிக் கொண்டிருந்தாள். முதல் இரண்டு வடைகளை எடுத்து ஒரு தட்டில் வைத்து, கணவன் என்ற முறையில் என்னுடைய கடமையை நிறைவேற்றச் சொன்னாள். அதாவது ருசி பார்க்கச் சொன்னாள்!
சூடு குறையாத வடையை நான் உஷ் உஷ் என்று வாயினால் ஊதிக் கொண்டிருந்தபோது, அண்ட சராசரங்களையும் பிளக்கும் வகையில் ஒரு பெரிய ஓசை வீட்டின் நடுக்கூடத்தில் இருந்து எழுந்தது. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. என் மனைவி வடை அடுப்பை அதோடு நிறுத்திக் கொண்டாள். அவசரம் அவசரமாகத் தன் பெண்ணுக்கு போன் செய்தாள். (கையில் பாதியும், வாயில் பாதியுமாக ஒரு சூடான வடை இருந்ததால் அந்தப் பணியை நான் செய்ய முடியாமல் போனதை அறிக.)
தான் ஏதும் தவறு செய்து விட்டதாக மகள் சொல்லி விடுவாளோ என்ற அச்சம் வேறு அவள் மனதில் கிலியை எழுப்பியது.
நல்லவேளை, மகள் உடனடியாக போனை எடுத்தாள். விஷயத்தைப் புரிந்து கொண்டு தாயிடம் எந்த கோபமும் இல்லாமல் பேசினாள். அது "ஸ்மோக் அலாரம்" என்றும், வடை செய்யும் பொழுது எண்ணெய்ப் புகை எழுந்ததால் அலாரம் 'ட்ரிகர்' ஆகி அந்தச் சத்தம் உண்டாகி இருக்கும் என்றும் விளக்கினாள். அதை 'ஆஃப்' செய்வதற்கான வழியையும் சொன்னாள்.
எல்லா ஜன்னல்களையும் கதவுகளையும் உடனடியாகத் திறந்து, சற்று நேரம் கழித்து மூடச் சொன்னாள்.
அதன்படி நான் வாசல் கதவைத் திறப்பதற்கும் வாசலில் ஒரு போலீஸ் அதிகாரி நிற்பதற்கும் சரியாக இருந்தது.
அலாரம் ஓசையைக் கேட்ட அடுத்த வீட்டுக்காரர்கள் யாராவது 911க்கு போன் செய்திருப்பார்களோ? ஒருவேளை, போலீசில் அனுமதி பெறாமல் வடை செய்வது இந்த ஊரில் குற்றமாகக் கருதப்படுமோ என்ற கவலை என் மனைவியின் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டது. ஆனால் எதுவும் பேசவில்லை.
போலீஸ் அதிகாரி மிகுந்த மரியாதையோடு, வீட்டில் யார் யார் இருக்கிறோம் என்று கேட்டார். சொன்னோம். மகளைப் பார்க்க, இந்தியாவிலிருந்து பெற்றோர்கள் வந்திருக்கிறோம் என்று தெரிவித்தோம்.
அன்று காலை ஒரு திருடன் அந்த வழியாக ஓடி வந்ததைச் சொல்லி, குடியிருப்பாளர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று வீடு வீடாகச் சென்று எச்சரிப்பதுதான் தன்னுடைய நோக்கம் என்று தெரிவித்து அவர் விடைபெற்றார்.
வடைக்கும் போலீசுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று தெரிந்தவுடன் நிம்மதியோடு என் மனைவி தன் வடை சுடுதலை மீண்டும் தொடங்கினாள்.
அன்று சுட்ட வடைகள் வழக்கத்தை விடவும்சுவையாக இருந்ததாகத்
தோன்றியது.
(இந்தக் கடைசி வரிக்கு நான் பிரபல எழுத்தாளர் அமரர் மணியனுக்கு நன்றி சொல்ல வேண்டும். "சொல்லத்தான் நினைக்கிறேன்" என்று திரைப்படமாக வந்த அவருடைய குறுநாவல் "இலவு காத்த கிளி யோ?"வின் கடைசி வரி இது: 'அன்று வேப்பம்பூப் பச்சடி, மற்ற எல்லாரையும் விட மங்களத்துக்கு அதிகம் இனித்தது.')
-இராய செல்லப்பா நியூஜெர்சி யில் இருந்து.
*************************************************************************************








