திங்கள், மார்ச் 17, 2014

எம்.ஜி.ஆருக்குச் சம்பளம் ரூ.200, நம்பியாருக்கு ரூ. 600! ( ‘அபுசி-தொபசி’-35)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல்  
தமிழருவி மணியன் நடத்தும் ‘ரௌத்திரம்’ மாத இதழ் இப்போதுதான் பார்க்கிறேன். அவருடைய தமிழ் எழுத்தைப் பல்வேறு நூல்கள் வாயிலாகவும் பத்திரிகைகள் வாயிலாகவும் படித்திருக்கிறேன். என்றாலும் ஒரு பத்திரிகை ஆசிரியராக அவரது மேதைமையை ‘ரௌத்திர’த்தில் தான் பார்க்கிறேன். தமிழை வெறுப்பவர்கள் மட்டுமே தமிழருவி மணியனின் எழுத்தை வெறுக்கமுடியும்.

இந்த இதழில் வை.கோ.வுடன் ஒரு நீண்ட பேட்டி வெளியாகியுள்ளது. அதிலிருந்து சுவையான ஒரு பகுதி: (வை.கோ. பேசுகிறார்)

“நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. கலைஞரின் பாதுகாப்பு அரணாகவே நான் இருந்திருக்கிறேன். டெல்லி நிலநடுக்கத்தின்போது, அவரைக் கையில் ஏந்தி வெளியே ஓடிவந்தேன். அவர் மீது உளி வீசிய சம்பவத்தில், குற்றவாளியை ஓடிப் பிடித்து, அடித்து உதைத்தேன். அவரின் நிழலாய் அலைந்தவன். தொலைக்காட்சிப் பெட்டி உடைப்பு, விமான மறியல் போன்ற போராட்டங்களை முன்னெடுத்துச் சென்று சிறைப்பட்டபோது ஒரு திமுக பிரமுகர், என்னால்தான் இப்படி சிறைக்கு வர நேர்ந்தது என்று என்னைத் திட்டினார். ஒருநாள் சிறை வாழ்வைக் கூட ஏற்க முடியாத அவர் பின்னர் திமுகவில் மந்திரியாகக் கூட வலம் வந்தவர். இப்படி அவர் ஏசிப் பேசுகிறார் என்று கலைஞரிடம் கூறியபோது, ‘அதற்கெல்லாம் கவலைப்படவேண்டாம். எனக்குப் பின்னர் யார் இருக்கிறார் கட்சியை நடத்த. சிலவற்றை கண்டு கொள்ளாமல் விட்டுவிட வேண்டும்’ என்று ஆறுதல் படுத்தியவர்தான் கலைஞர்.  பின்னர் அவர் மனநிலையில் மாற்றம் வருகிறது. ஸ்டாலினுக்குப் போட்டியாக நான் வந்து வந்துவிடுவேனோ என்று நினைத்திருக்கலாம். 1987-88ல் ஸ்டாலினுக்கு கூட்ட ஏற்பாடுகளைச் செய்தவனே நான்தான். ஸ்டாலின் வருவதற்கு நான் ஒன்றும் தடையாக இருக்க நினைத்ததில்லை. ஒரு கட்டத்தில் கூட்டங்களில் பேசக் கூட கட்சியில் எனக்கு மறைமுகத் தடை விதிக்கப்பட்டது.

1992ல் உட்கட்சித் தேர்தலில் நான் முன்னிறுத்திய ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தங்கவேலு வெற்றி பெறுகிறார். கலைஞர் நிறுத்திய வேட்பாளர் தோல்வியுறுகிறார். தங்கவேலு வெற்றியை மகிழ்ச்சியோடு கொண்டாடியவர்களைப் பார்த்து, நீங்களெல்லாம் அதிமுகவுக்கு செல்லலாம் என்று சாடினார்.

‘வைகோவுக்கு ஆதரவாக கலைஞரைக் கொல்ல புலிகள் சதி’ என்று மத்திய உளவுத்துறை ஊர்ஜிதமாகாத ஓர் அறிக்கையைத் “தயாரித்து” அனுப்ப, அதை, திமுகவில் குழப்பம் ஏற்படட்டும் என்று ஜெயலலிதா கலைஞருக்கு அனுப்புகிறார். இந்தச் செய்தியைப் பத்திரிகைகளுக்கு அறிவித்துவிட்டு, பாதுகாப்பை ஏற்றுக் கொள்கிறார்.

எனக்கு உலகமே சூனியமானது போன்ற ஓர் உணர்வு; ‘கும்பகர்ணனைப் போல் இந்தத் தம்பி இருப்பான்’ என்று அறிக்கை கொடுத்துவிட்டு, வேண்டாம் இந்த வீண் பழி அரசியல் என்று விலகியிருக்க நினைத்தவன் வீட்டு முன் திமுக தொண்டர்கள் அணி திரண்டனர். நொச்சிக்குப்பம் தண்டபாணி உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்து தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்க வேண்டும் என்று சுடுகாட்டில் உரையாற்றவேண்டிய நிலைக்குத் தள்ளிவிட்டது....”

தவறாமல் இளைஞர்கள் படிக்கவேண்டிய தமிழ் இதழ், ரௌத்திரம்.

புத்தகம்
மேற்கு மாம்பலத்தில் ராம்ஸ் மாருதி குடியிருப்பில் இருக்கும் எனது நண்பர் ஒருவரைப் பார்க்கும்போது சரசுராம் என்ற இளம் எழுத்தாளரைச் சந்திக்க நேர்ந்தது.   தற்போது திரைத்துறையில் பிசியாக இருப்பவர். ‘இன்னொரு மழைக்கு முன்பு..’ என்ற கவிதை மாதிரி தலைப்புள்ள, சிறுகதை தொகுப்பு வந்திருப்பதாகச் சொன்னார். தற்செயலாக அந்த நூலை டிஸ்கவரியில் பார்த்தேன். வாங்கிவிட்டேன். (மித்ரா வெளியீடு, சென்னை. தொலைபேசி: 044-23723182, 24735314. ரூ.75.பக்கம் 136)


தேர்ந்த எழுத்தாளர். பதினேழு கதைகள் கொண்ட இத்தொகுப்பில், பதினேழுமே சிறந்த கதைகளாக இருப்பது ஆச்சரியம்தான். பத்திரிகைகளில் வெளிவருவதற்காக எழுதப்பட்டவையாதலால் ஒவ்வொன்றும் அளவில் சிறியவை. ஆனால் அளவில் சிறிய கடுகும் ரசத்திற்குத் தாளித்தால் வாசனை தூக்கியடிப்பதுபோல், கதை படித்து முடித்தபின் அதன் தாக்கம் எளிதில் விலக மறுக்கிறது.

கதைகளின் ஆரம்பங்கள் நேர்த்தியாகவும் வாசகனை ஈர்த்துப் பிடிப்பதாகவும் அமைந்துள்ளதைக் குறிப்பிட்டாக வேண்டும். உதாரணத்திற்கு “அர்த்தத்தைத் தேடி...” என்ற கதையின் ஆரம்பம் இது (பக்.21):

விளக்கை அணைக்காமல் மனைவியின் முகத்தருகில் நெருங்கியது தப்பென ரவிக்குத் தோன்றியது. அவள்தான் முதலில் தாடியில் நரையைக் கண்டு பிடித்தாள். நிஜமாஎன ரவி கன்னத்தை அதிர்ச்சியோடு தடவிப் பார்த்தான். உடனடியாகக் கட்டிலைவிட்டு எழுந்துகொண்டான்.

“கவலைப்படாதீங்க...அப்புறம் மொத்தமும் நரைச்சிரும். முகத்துக்கும் சேர்த்து இனி ‘டை’ அடிக்கலாம்..”

“கிண்டலா...இது பித்த நரை.”

“பித்தம் தலைக்குத்தான் ஏறும். முகத்திலயுமா பரவும்?”

“வயசு ஆயிடுச்சுங்கறையா?”

“பின்ன ஆகலையா? பனிரெண்டு வயசுல ஒரு பையன். ஞாபகமிருக்கா..”

ரவி அவளைத் தலையணையால் செல்லமாக அடித்தான். அதில் அவள் நரியைக் கண்டுபிடித்த கோபமும் இருந்தது. லட்சுமி திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

வாழ்த்துக்கள் சரசுராம்! உங்கள் திரைப்படம் எப்போ வரும்?

சினிமா
எம்.ஜி.ஆர். சினிமாவில் நடிக்கவந்தபோது அவருக்கு யாரும் சிகப்புக் கம்பளம் விரிக்கவில்லை. பல படங்களில் எடுபிடியான வேடங்களே கிடைத்தன. மேற்கொண்டு வாய்ப்பு தேடித்தான் அவர் நடனம், இசை, சண்டை பயிற்சி போன்றவற்றைக் கற்றுக்கொண்டார். அப்படியும் வாய்ப்புக்கள் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டவில்லை.

எம்.ஜி.ஆர். சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகள் கழித்துதான் வந்தார், எம்.என். நம்பியார்.  சக்தி நாடக சபாவில் இவர் நடித்த ‘கவியின் கனவு’ நாடகத்தில் நம்பியாருக்கு வில்லன் வேடம். ராஜகுருவாக இவர் நடித்ததை பார்த்து ஜூபிடர் பிக்சர்ஸார் தங்களது படங்களில் நடிப்பதற்கு இவரை மாதம் அறுநூறு ரூபாய் சம்பளத்தில் அமர்த்திக்கொண்டார்கள். இதே ஜூபிடரில் அப்போது நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., பி.எஸ்.வீரப்பா, டி.வி.நாராயணசாமி போன்றோருக்கு மாதச் சம்பளம் இருநூறு ரூபாய்தான்!
திறமைக்கு அந்தக் காலத்தில் அவ்வளவு மரியாதை!
     (ஆதாரம்: ‘கலைமகள்’ மார்ச் 2014 இதழில் எஸ்.சுந்தரதாஸ் எழுதிய கட்டுரை.)


கலைஞரைப் பிரச்சாரத்திற்குப் போகவேண்டாமென்று சொல்லிவிட்டாராம் இளையவர். பொழுதுபோக வேண்டுமல்லவா? அவருக்காகவோ என்னவோ,  ‘நாம் இருவர்’ படம் இன்று (16.3.2014) திரையிட்டார்கள். குமாரி கமலா நடித்து ஏ.வி.எம். தயாரித்த மகத்தான வெற்றிப்படம். இதைப் படிக்கும் உங்களில் பலர் அப்போது பிறந்திருக்க மாட்டீர்கள். தேசபக்திக்கும் நடனத்திற்கும் பாரதியார் பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம்.

ஒரு காட்சி திரைப்படமாவது எப்படி என்று காட்டுவதுபோல் அதில் ஒரு நகைச்சுவை காட்சி. அசோகவனத்தில் சீதை அமர்ந்திருக்கிறாள். அசோக மரத்தின்மீது அனுமார் அமர்ந்திருக்கிறார். பத்து தலை இராவணன் வந்து நின்று சீதையை மிரட்டுகிறான். இதுதான் காட்சி. நகைச்சுவை நடிகரோ அதிகம் புகழ்பெறாதவர். சீதையாக நடிப்பவரோ புகழ்பெற்ற தெலுங்கு நடிகை. கையில் வாட்ச் கட்டிக்கொண்டிருக்கிறார். அதிகமான வளையல்கள் அணிந்திருக்கிறார். நடிக்கும்போது கூட அவற்றை எடுக்க மறுக்கிறார். இயக்குனரும் தயாரிப்பாளரும் புதியவர்கள். ‘பிச்சைக்காரியாக நடித்தாலும் நான் இவற்றைக் கழற்றமாட்டேன்’ என்கிறார். அசோகவனத்தில் சீதை எப்படி ஏழ்மையாக இருக்கவேண்டுமென்று சொன்னபோது, நகைச்சுவை நடிகரையும் இயக்குனரையும் திட்டிவிட்டு நான் நடிக்கமாட்டேன் என்று எழுந்துபோய்விடுகிறார்!

வலைப்பூ எழுதும்  நண்பர்களில் பலர், சினிமாவில் உதவி இயக்குனர்களாக இருக்கிறார்கள். சிலருக்கு இயக்குனர் பதவியும் கிடைத்துக்கொண்டு வருகிறது. பாவம், இந்த ஜூனியர்கள், பழம் தின்று கோட்டை போட்ட சீனியர் கலைஞரகளிடம் என்ன மாதிரி திட்டு வாங்குகிறார்களோ? ஆனால் அதை வெளியில் சொல்லமாட்டார்கள். மனதிற்குள்ளேயே விழுங்கிவிடுவார்கள்.

தொலைக்காட்சி

இன்று மெகா டிவியில், மகளிர் தினத்தை முன்னிட்டு,  சாதனை புரிந்த மகளிருக்கான மெகாவிருதுகள் வழங்கப்பட்ட நிகழ்வைக் காட்டினார்கள். அனுபவமுள்ள சின்னத்திரை கலைஞர் லதாராவ் தொகுத்தளித்தார். பாரம்பரிய உடையான சேலை அணிந்து, ஆரம்பம் முதல் இறுதிவரை கண்ணைவிட்டு விலகாத இளஞ்சிரிப்புடன், உதடுகளைச் சுழித்தும் சுருக்கியும் அற்புதமான தமிழில், சுத்தமான உச்சரிப்பில்,  இந்தக் கன்னடப்பெண் தொகுத்தளித்தது, ‘சூப்பர் சிங்கர்’ தொகுப்பாளினிகளுக்கு    வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும் என்பது உறுதி.

விருது பெற்ற ஒவ்வொரு சாதனையாளரைப் பற்றியும் ஐந்து நிமிடத்திற்குக் குறையாத ஆவணப்படம் சேர்த்திருந்தது மனதுக்கு நிறைவளித்த விஷயம்.  ‘கந்த சஷ்டி கவசம்’ பாடிய சகோதரிகளில் இன்றும் நம்மோடிருக்கும் மூத்த சகோதரியான சூலமங்கலம் ராஜலட்சுமிக்கு விருது வழங்கியதாகும். இப்படிப்பட்ட அங்கீகாரம் தனக்குக் கிடைத்ததை நெகிழ்ந்து வரவேற்று நன்றி சொன்னார் அந்த முதுபெரும் பாடகி. மிகச்சிறந்த நடிகையான லட்சுமிக்கும் விருது வழங்கப்பட்டது.  அதை அவர் வாங்கிக்கொண்டு, உடனே,  வழங்கிய திருமதி தங்கபாலுவிடமே கொடுத்துவிட்டார். “மற்றவர்கள் எல்லாரும் ஏதோ ஒரு வகையில் சாதனை செய்தவர்கள். அதனால் விருதுக்குத் தகுதியானவர்கள். நான் என்ன சாதனை செய்தேன்? இன்றுவரை நடித்து, பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். இது என் தொழில். இதற்காக ஏன் விருது கொடுக்கவேண்டும்?” என்பது அவர் கொள்கை. வாழ்க லட்சுமி!

பின்னணிக் குரல் கொடுக்கும் நடிகை நித்யா, குழந்தை நடிகையாக இருந்து ‘கோழி ஒரு கூட்டிலே’, ‘முத்தான முத்தல்லவோ’ போன்ற பாடல்களால்  பிரபலமாகி, இன்று திறமையான தயாரிப்பாளராக இருக்கும் குட்டி பத்மினி, எங்கள் வட ஆற்காடு மாவட்டக்காரரான பிரபல பாடகி வாணி ஜெயராம்   போன்றவர்களுடன் மேலும் பலர் விருது பெற்றனர்.  94 வயதிலும் யோகா பயில்விக்கும் ஆசிரியை ஒருவருக்கும் விருது வழங்கிக் கௌரவப்படுத்தியது, மெகா டிவியின் நேர்மையையும் மனிதாபிமானத்தையும் காட்டுவதாக இருந்தது.  

பத்திரிகை

தமிழில் கேள்வி-பதில் என்ற பகுதிக்கு இலக்கியத்தரம் வழங்கியவர், கல்கண்டு தமிழ்வாணன். அவருக்குப் பிறகு, கேள்வி-பதில் என்றாலே, சோவின் துக்ளக்தான் நினைவுக்கு வரும்.

ஆதாரபூர்வமான பதில்களை அளிக்கும்போதும், சிறிது நையாண்டி தடவாமல் அவரால் பரிமாற முடியாது. அது மட்டுமன்றி, தன்னையே நையாண்டி செய்துகொள்வதும் சோவின் பழக்கம். 19.3.2014 இதழிலிருந்து ஒரு சுவையான பதில்:


கேள்வி: (த. நாகராஜன், சிவகாசி): முக்காலமும் உணர்ந்த திரிகால ஞானியே! பாவம் என்றால் என்ன? புண்ணியம் என்றால் என்ன?

சோ வின் பதில்: காலை, மதியம், மாலை என்ற மூன்று சாப்பாட்டு வேளைகளையும் தெரிந்து வைத்திருப்பதால் என்னை திரிகால ஞானியாகக் கருதுகிறீர்கள் போலிருக்கிறது; இருக்கட்டும். பாவம் என்றால் -  மாட்டிக்கொள்வது; புண்ணியம் என்றால் – தப்பித்துக் கொள்வது.

சிரிப்பு
தலைவருக்கு ஜெனெரல் நாலட்ஜ் கம்மியா....எதை வச்சு அப்படிச் சொல்ற?”
“லோக் ‘பால்’ மசோதா கொண்டு வரும்போது, தண்ணி கலக்காம பார்த்துக்கணும்கிறாரே!”
-    குமார்.   (நன்றி: தினமலர்- வாரமலர்- 16.3.2014 பக்.11)
குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’ அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.நன்றி.
 © Y Chellappa

வியாழன், மார்ச் 13, 2014

அறுபத்து மூவர் திருவிழாவும் அமிர்தம்சூர்யாவின் கவிதையும் ( ‘அபுசி-தொபசி’-34)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல்  

என்ன ஆயிற்று இந்தியாவுக்கு? மாலனின் கேள்வி

கார்ப்பொரேஷன் வங்கியில் என்னுடன் இருபது வருடங்களுக்கு மேலாக அதிகாரியாக உடன்பணியாற்றிய தோழர், கே. சீனிவாசன். கிளை மேலாளராகப் பணியாற்றியபோதும் மக்கள் தொடர்புப் பணிகளிலேயே அவர் முனைந்து செயல்பட்டதால் அவருடைய தனித்திறமையைப் பயன்படுத்திக்கொள்ளும்வண்ணம் அவரை மக்கள் தொடர்புத் துறையிலேயே அதிகாரியாகப் பணியமர்த்தினார்கள். புதுடில்லியில் அவரும் நானும் ஒன்றாக மூன்றாண்டுகள் பணிபுரிந்தோம். அந்தக் குறுகிய காலத்தில் சவுத் பிளாக்கிலும் நார்த் பிளாக்கிலும் அவருக்குத் தெரியாத அதிகாரிகள் இல்லை என்றே சொல்லிவிடலாம். அடையாள அட்டை இல்லாமல்கூட அவரால் உள்ளே சென்று வரமுடியும். அந்த அளவுக்கு உயர் பதவியில் இருந்தவர்களிடம் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.
 
மாலன், ஆம்ஆத்மி டேவிட், டி.கே.ரங்கராஜன், எச்.ராஜா, திருமா,
 கோபண்ணா, நெறியாளர் பானு
பின்னாளில் மதிப்பிற்குரிய அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவரானபோது, சீனிவாசன் அவருடைய முழு நம்பிக்கைக்குப் பாத்திரமானர். திடீரென்று ஒருநாள்  தன் வங்கிப்பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு   PRIME POINT FOUNDATION என்ற மக்கள்தொடர்பு சார்ந்த ஆலோசனை வழங்கும் நிறுவனத்தைத் தொடங்கினார். கல்லூரிகள், நிறுவனங்கள் என்று பல இடங்களிலும்  தன்  திறமை சார்ந்த துறையில் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். PReSENSE  என்ற பெயரில் ஒரு ஆங்கில மின்னிதழையும்,  NEWGENதமிழன்” என்ற பெயரில் ஒரு தமிழ் மின்னிதழையும் மாதந்தோறும் தலைமை தாங்கி நடத்திவருகிறார். ஆனால் இதழில் எழுதுபவர்கள் எல்லாரும் இளைஞர்களே. பின்னிருந்து வழிகாட்டுதல் மட்டுமே சீனிவாசனின் பணி. கண்ணில் பார்க்க முடியாத, கும்பகோணம் டிகிரி காப்பியின் மணம் போல - இவ்விரு இதழ்களிலும் சீனிவாசனின் உழைப்பு தன்னை நுட்பமாகத் தெரிவித்தபடி இருக்கும்.

தன் இமாலய முயற்சியாக ஆண்டுதோறும் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு SANSAD RATNA என்ற விருதை வழங்கிச் சிறப்பிக்கும் வழக்கத்தையும்  ஆரம்பித்தார் சீனிவாசன். அது இன்றுவரை தொடர்கிறது.

அவருடைய பிரைம் பாயிண்ட்டு பௌண்டேஷன், சென்னை ஐ.ஐ.ட்டி.யுடன் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி சனிக்கிழமை ஒரு தேசீயக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. ‘அரசியல், ஜனநாயகம், ஆள்கை’  (Politics, Democracy and Governance) என்பது தலைப்பு. நடைபெறவிருக்கும் 2014 மக்களவைத் தேர்தலில் பங்கு பெறும்  பல்வேறு அணிகளின் நிலைப்பாடுகள் என்ன என்பதைக் கண்டறியும் நோக்கில் கருத்தரங்கின் ஒரு அம்சமாக அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் இணைந்த விவாதம் நடைபெற்றது. ஒரு பார்வையாளனாக நான் பங்குபெற்றேன்.

முன்வரிசையில் -இடது கோடியில் நான்,
 நீலச்சட்டையும்  ஆழ்ந்த ரசிப்புமாக கே.சீனிவாசன்

இந்த விவாதத்தில் அதிமுக ஆதரவில் அண்மையில் மாநிலங்களவை உறுப்பினரான மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன், திமுக அணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன், பாஜகவின் எச்.ராஜா, காங்கிரஸின் ஏ.கோபண்ணா, ஆம் ஆத்மி கட்சியின் டேவிட் பருண் குமார், ‘புதிய தலைமுறைஆசிரியர் மாலன் ஆகியோர் பங்கேற்றார்கள். சமூக ஆர்வலர் பானு கோம்ஸ் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.

அப்போது அரசியல்வாதிகள், எடுத்ததற்கெல்லாம் ஊடகங்களையே குறை சொல்லிக்கொண்டிருப்பதைத் தன் தார்மீகக் கோபத்தின் மூலம் எதிர்த்து உரத்த குரலில் கேள்வி கேட்டார், பிரபல பத்திரிகையாளரும், தொலைக்காட்சியாளருமான மாலன் அவர்கள். அவர் கேட்ட கேள்விகளுக்கு அங்கு யாராலும் பதில் கூற முடியவில்லை. உங்களுக்குப் பதில் தெரிகிறதா?

“வெளியுறவுக் கொள்கையைப்  பொறுத்தவரை நம்முடைய கொள்கை ஒன்று, செயல்வேறாக இருக்கிறது. நாம் இனிமேல் இந்தியாவுக்குக் கிழக்கே இருக்கும் நாடுகளில் கவனம் செலுத்தவேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கொள்கை முடிவு எடுத்திருந்தோம். அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆசியானில் நம்மால் இன்னமும் முழுத்தகுதி உடைய உறுப்பினராக மாற முடியவில்லை. மிகப்பெரிய ஜனநாயக நாடு, மக்கள் தொகை மிகுந்த இரண்டாவது பெரிய நாடு, வாங்கும் சக்தி கொண்ட மக்களைக் கொண்ட மூன்றாவது பெரிய நாடு, உலகில் மூன்றாவது பெரும் படை கொண்ட நாடு என்றெல்லாம் நமக்குப் பெருமை இருந்தும் உலக நாடுகள் நம்மை எப்படிப் பார்க்கின்றன?

“நம்மால் ஒரு தேவயானி பிரச்சினையின்போது கூட அமெரிக்காவை சமாதானப்படுத்த முடியவில்லை. இலங்கையிடம் எப்படி நடந்து கொள்கிறோம். நாம் முன்பு பொருளாதார ரீதியிலும் மற்ற விஷயங்களிலும் பலவீனமாக இருந்தபோது கூட நாம் இவ்வளவு மோசமாக இருந்ததில்லை. ரஷ்யா, அமெரிக்கா பெரிய ஆதிக்கம் செலுத்தியபோது கூட நேருவால் அணிசேரா அணியை உருவாக்க முடிந்தது. அணுகுண்டு வெடித்தபோது அமெரிக்கா விதித்த தடைகளை இந்திரா காந்தியால் சுலபமாக அலட்சியப்படுத்த முடிந்தது. அம்மாதிரி துணிச்சல் இப்போது இந்தியாவுக்கு ஏன் இல்லை? நமக்குப் பக்கத்தில் இருக்கும் ஈரானில் இருந்துகூட பைப் மூலமாக பெட்ரோல் எடுத்து வரமுடியவில்லை....”
 
அமைப்பாளர்களுடன் பிரமுகர்கள்
நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கு இடம் பெறுகின்றன. முழு விவரங்களை –ஆங்கிலத்தில் படிக்க: http://www.sansadratna.in/2014/02/political-leaders-and-media-experts.html  என்ற சுட்டியைத் தொடவும். தமிழில் படிக்க: http://www.puthiyathalaimurai.com/this-week/2947 என்ற சுட்டியைத் தொடவும்.

புத்தகம்

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர்-கற்பகாம்பாள் திருக்கோயிலில் நான்கு மாடவீதிகளையும் அணைத்தபடி அறுபத்துமூவர் திருவிழா நடந்துகொண்டிருக்கும் இத்தருணத்தில்  அமிர்தம் சூர்யாவின்வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம்’ தொகுப்பிலிருந்து ஒரு கவிதை கண்ணில் பட்டது. (நான்கு நாட்கள் முன்புதான்  டிஸ்கவரியில் இந்நூலை வாங்கினேன்.) இக்கவிதையைப் படித்த பிறகு  மயிலாப்பூர்வாசிகளும் அறுபத்துமூவர் விழாவை ஏற்கெனவே  பார்த்துள்ள நண்பர்களும் இதைத் தற்செயல் நிகழ்வு (coincidence) என்று சொல்லலாமா என்று விவாதிக்கலாம்.

அன்று நீ நகரமான தினம்
 
கிழக்கு மாடவீதியில்
அதிகாலையில் உறக்கத்திற்கு
தவமிருக்கும் காமம்தாங்கியின்
அந்தரங்க வலி அறையினுள் முடங்க
மோகவலையை வாசலில்
வீசிவிட்டு காத்திருப்பாள்
இரவு போஜனத்திற்கு
கண்ணி வைத்து கிழப்பரத்தை.

மேற்கு மாடவீதியில்
புட்டத்தைத் தட்டும்
கடைக்காரனின் அவமதிப்பை
உதறிவிட்டு
ஒற்றை ரூபாய் பிச்சையை
வாங்கிச் செல்லும் அரவாணிக்கு எதிரே
பக்தி வழிய பல்லக்கில்
தூக்கி வருவர்
அர்த்த நாரீஸ்வரரை.

தெற்கு மாடவீதியில்
கஜனின் மனோபலத்தை உறிஞ்சி
50 காசுக்கு ஆசியளிக்கும்படி
இரும்புச் சங்கிலியில் பதுக்கி வைத்த
பாகனின் மன(த்)திடம்
“யானைக்குக் காமம் வந்தால்..?”
கேட்டபடியே
உப்புநீர் மினுக்கும் கருப்பன்
இழுத்துப் போவான்
சுமை வண்டியையும் பசியையும்.

வடக்கு மாடவீதியில்
கேள்விகளெல்லாம் தொலைந்து போனால்
வாழ்க்கைக்கு பைத்தியம் பிடித்துவிடும்
விடை தேடுகையில் மரணம் கொத்தாதென்று
கேள்விகளை அடைகாத்திருப்பவனிடம்...

“எல்லார்க்கும் புரியும்படி ஒரு கதையெழுதி
போடப்படாதா? கட்டில் மீது
தூங்கும் பூனையை விரட்ட” –
என்பாள்
அடுப்பின்வெளி பார்த்தபடி.

வீதிகள் கூடும் மையத்தில்...
திசைவீதிகள் ஆரங்களாய் மாற
சிவ கோபுரத்தை அச்சாணியாய் செருகி
நகர சக்கரத்தை சுழற்றிவிடும்
கரங்களில் தெரியும்
பசியின் உக்கிரம்.

அதன் ருசியை உணர்ந்த
முதல் தருணம் நினைவிருக்கிறதா
அன்றுதான்
நீ நகரமான தினம்.

சினிமா & தொலைக்காட்சி : (மன்னிக்கவும், பார்க்க நேரமில்லை!)

பத்திரிகை

தேர்தல் வந்தாலும் வந்தது, ஒவ்வொரு பத்திரிகையும் போட்டி போட்டுக்கொண்டு செய்திகளைத் தருகின்றது. சில பத்திரிகைகள் செய்தியைத் தாமே உருவாக்குகின்றன. ‘சதக், சதக்’ என்று கத்தியால் குத்தினான் என்று நேரில் பார்த்த மாதிரி தினத்தந்தியில் வருமே அதுபோல்.


தினமலர் எப்போதுமே முன்னோடிதான், எட்டு பக்க இணைப்பு ஒன்றைத்  தேர்தலுக்காகவே தினமும் தருகிறது. புதுப்புது கேலிச்சித்திரங்கள் வெளியாகின்றன. இன்றைய (12-3-2014 புதன்கிழமை) இணைப்பில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செய்தி வந்துள்ளது.

அதாவது, தி.மு.க. சார்பில் வரும் 2014 பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக இடம் பெற்றுள்ளவர்கள் யார்யாரால் சிபாரிசு செய்யப்பட்டவர்கள் என்ற ரகசியத் தகவல் அதில் இடம்பெற்றுள்ளது. தினமலர் படிக்காதவர்களின் நன்மையை முன்னிட்டு அந்த விவரத்தை இங்கு தரவேண்டியவனாகிறேன்:

மொத்தமுள்ள 35 வேட்பாளர்களில், மு.க.ஸ்டாலினின் நேரடி சிபாரிசு பெற்றவர்கள்: 10 பேர். ஸ்டாலின் மனைவி  சிபாரிசு மூலம் வந்தவர்கள்: 7 பேர். ஸ்டாலின்  மைந்தர் உதயநிதியின் சிபாரிசைப் பெற்றவர்கள்: 7 பேர். ஸ்டாலின் மருமகன் சபரீஷனின் சிபாரிசால் வந்தவர்கள்: 9 பேர். (மகனை விட மருமகனுக்கு அதிகக்  கௌரவம் அளிப்பதுதானே தமிழ்ப்பண்பு.) ஆகமொத்தம் 33.

தென் சென்னையில் போட்டியிடும் டி.கே.எஸ்.இளங்கோவன், நடுசென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன் ஆகிய மீதமுள்ள இரண்டு பேர் விஷயத்தில்தான் சிக்கல் வருகிறது. இவர்கள் யாருடைய சிபாரிசால் வந்தவர்கள் என்று தெரியவில்லையாம். இவர்களில் ஒருவர், கலைஞர் மூலம் வந்திருக்கலாமாம். அந்த ‘இன்னொரு வாழைப்பழம்’ யாரால் எப்படி வந்தது? தெரியவில்லை..

ஆனால், தி.மு.க. ஒரு கட்டுக்கோப்பான கட்சி. (இல்லையென்றால் சொந்த மகனையே இடைநீக்கம் செய்வாரா கலைஞர்?) யாரை வேட்பாளராக அறிவித்தாலும் கீழ்மட்டத் தொண்டர்கள் கவலைப்படாமல் வெறும் வயிற்றில் ஒரு தேநீர் குடித்துவிட்டுக் கட்சிவேலை பார்க்கக் கிளம்பிவிடுவார்கள். அதுதான் அக்கட்சியின் பலம். ஆனால் ஒரே ஒரு கவலை: கலைஞரே சொல்லியும் குஷ்புவுக்குக் கொடுக்கவில்லையாமே, பாவம், அப்படி என்னதான்  தவறு செய்துவிட்டார் அந்தப் பெண்மணி?  ஜெயப்ரதாவும் விஜயசாந்தியும் ரோஜாவும் வெற்றிபெறும் தருணத்தில்  குஷ்பு மட்டும் ஜெயிக்க மாட்டாரா என்ன?
   
சிரிப்பு

(நன்றி: தினமலர்- தேர்தல் இணைப்பு- 12.3.2014)
குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’ அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.நன்றி.
 © Y Chellappa

திங்கள், மார்ச் 10, 2014

சினிமா நடிகைகள் பற்றி எதுவும் இல்லாத ஒரு பதிவு ( ‘அபுசி-தொபசி’-33)

(“அபுசி-தொபசி” என்ற இப்பகுதி வாரம் இருமுறையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் இந்திய நேரம் காலை ஆறுமணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளாகவோ அல்லது அதற்கும் முன்பாகவோ வெளியாகும்.)

அரசியல்  

அரசியல் கட்சிகளின் சாதிப் பார்வை
 (அகநாழிகை இதழ் 7-இல் ஸ்டாலின் ராஜாங்கம் வழங்கிய பேட்டியிலிருந்து)

“தி.க., தி.மு.க. போன்ற கட்சிகள் பா.ம.க. மீது கோபம் கொண்டிருப்பது கருத்தியல் சார்ந்து அல்ல. பா.ம.க.வும் திராவிடக் கட்சிகளும் வேறுபட்டிருப்பது போலத் தெரிவது வெறும் தோற்றமே. பா.ம.க. தலைமையிலான சாதி வாக்குகள் தமக்குச் சாதகமாக அமையுமானால் திராவிடக் கட்சிகள் அதை மறுக்கப் போவதில்லை. பா.ம.க. திராவிடக் கட்சிகளைத் தாக்குகிறது என்னும் கோபம் கொண்டுள்ள அவர்கள் அதன் தலித் விரோதப் போக்கு மீது திட்ட வட்டமான கோபம் பாராட்டுபவர்களாக இல்லை.

"தமிழகத்தின் எல்லாப் பிரச்சினைகள் மீதும் முந்தியும் வலிந்தும் வந்து கருத்து சொல்லும் கருணாநிதி, மரக்காணம் வன்முறைக்குப் பின்னரான இராமதாஸ் கைது, பா.ம.க.வினரின் வன்முறைகள் தமிழகத்தின் பெரும்பகுதி முடக்கப்பட்ட நிலையிலும் அதைப் பற்றிக் கருத்துச் சொல்லாமல் மௌனம் காத்தார். எல்லாம் நடந்துவிட்ட பிறகு, பொறுத்திருந்து, நிலைமையின் சாதக பாதகம் கருதி அதில் கருத்துக் கூறுவது திராவிடக் கட்சிகளின் வழக்கமான நடைமுறை. இதே போலத்தான் மரக்காணம் வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்த எல்லாக் கட்சிகளும் திருமா சென்று பார்த்த பின்னால்தான் அறிக்கை விட்டன என்பதையும் மறக்க முடியாது.

தருமபுரி வன்முறையின்போது கூட எல்லாம் நடந்து இருபது நாட்கள் கழித்து உள்ளூர் தி.மு.க. பிரமுகர்களை வைத்து ஒரு குழுவை அனுப்பினார் கருணாநிதி. அதேபோல இராமதாஸ் கைது பற்றித் தமிழகத்தின் எந்தத் தலைவர்களும் பேசாதிருந்த சூழ்நிலையில் அவரை விடுதலை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முதலில் கருணாநிதிதான் எழுப்பினார். இதில் அவர் கூறியது போல, மனிதாபிமானம் என்பதெல்லாம் ஒரு சாக்குதான். இதில் அவர்களின் கணக்கு சாதி வாக்குகள் மட்டுமே. அதாவது, வன்னியர்களின் கோபம் ஜெயலலிதா மீது திரும்புகிறது என்ற நிலையில் யாருக்கும் பாதிப்பில்லாதவகையில் கருணாநிதி ஓர் அறிக்கை வெளியிடுகிறார். தேர்தல் சார்ந்து செயல்படுகின்ற கட்சிகளாக இருந்தாலும் சாதி பற்றிய பார்வை குறித்து ஆக்கபூர்வமான விமர்சனங்கள் இருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் இந்தப் போக்கு இல்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்”.

(ஸ்டாலின் ராசாங்கம் எனது வடஆர்க்காடு மாவட்டத்தில் பிறந்தவர். தமிழ்ச் சமூக வரலாற்று ஆய்வாளர் மற்றும் களச் செயற்பாட்டாளர். தலித்துகள் பற்றிய தீர்க்கமான பார்வையை வெளிப்படுத்தும் இவரது நூல்களாவன: ‘சனநாயகமற்ற சனநாயகம்’, ‘தீண்டப்படாத நூல்கள்’, ‘ஆரிய உதடும் உனது- திராவிட உதடும் உனது’, ‘சாதீயம்: கைகூடாத நீதி’ போன்றவை. மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில்  விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.)

புத்தகம்

சனிக்கிழமை (8-3-2014) அன்று டிஸ்கவரி புத்தகக் கடையில் வேல் கண்ணனின் ‘இசைக்காத இசைக்குறிப்பு’ என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டம் நடந்தது. கதிர்பாரதி, அமிர்தம் சூர்யா, அய்யப்ப மாதவன், நிஜந்தன், ஜெ.டி.ஆர்., பொன்.வாசுதேவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.  


வேல் கண்ணன், கண்ணாடி அணிந்த உயரமான இளைஞர். இந்த நூலில் உள்ளது போன்ற எளிமையான கவிதை வழங்கலைத் தொடர்ந்து  கடைபிடித்தால் இன்னும் உயரமாவார் எனபது உறுதி. 64 பக்கம், அறுபது ரூபாய். தெளிவான அச்சு. திருவண்ணாமலை வம்சி புக்ஸ் வெளியீடு. அரங்கிலேயே படித்து முடித்துவிட்டேன். அமிர்தம் சூர்யா வழக்கம்போல அற்புதமான, ஆழமான இலக்கிய உரை நிகழ்த்தினார். கதிர்பாரதி எழுதிவந்து படித்தார். சற்று நிதானமாகப் படித்திருக்கவேண்டும் என்று தோன்றியது. பிறகு வந்த கவிதைக்காரன் இளங்கோ சற்றே நீளமான உரை நிகழ்த்திவிட்டார். நேரம் கடைபிடித்தல் பேச்சாளர்களுக்கு முக்கியம். நான் இறுதிவரை இருக்கமுடியாமல் போய்விட்டது.

வேல் கண்ணனின் எழுத்து, அனாவசியமான படிமங்கள், சிதைக்கப்பட்ட வாக்கிய அமைப்புகள், மூளையைக் குழப்பிக் கவிதையையே வெறுப்படையச் செய்யும் உட்கருத்துக்கள் இல்லாமல் கிராமத்து பம்புசெட்டில் குளிக்கும்போது வந்து விழும் சரிவேகத் தண்ணீர் மாதிரி அமைதியானது. சில எடுத்துக்காட்டுகள்:

மௌன புரிதல் (பக்.12)
உனக்கும் எனக்கும் பொதுவானவை
மௌனம்.
இருப்பினும்
நீ
மௌனித்த வேளைகள்
என்னைக் கலவரப்படுத்துகிறது.
நான்
மௌனித்த வேளைகள்
உன்னை சந்தேகிக்கவைக்கிறது.

ரகசிய அழைப்பு(பக்.22)
 பிறிதொரு ரகசிய அழைப்பு வரும்வரை
உன் ஞாபகப் பிசுபிசுப்பில் கடந்துபோகும்
எனக்கான இரவுகள்.

நினைவோட்டம் (பக்.37)
 கரையோரத்து மணலை
இருகைகளால் அள்ளி
மூடினேன்.
மூடிய கைகளுக்குள்
குறுகுறுத்து
ஓடிக்கொண்டிருக்கிறது
நதி.

999 ஆணுறைகள்(பக்.45)
வீதியோரம் நின்றிருந்த தசரதன்
தன்னிடம் வகை ரீதியாக 1000 பெண்கள்
இருப்பதாகக் கூறினான்.
இடவசதி தானே அமைத்துக் கொடுப்பதாகவும்
பணத்துடன் ஆணுறையும் சொந்தமாக
கொண்டுவரச் சொன்னான்.
999 ஆணுறைகள் மற்றும் இந்தக் கேள்வியுடனும்
சென்றுகொண்டு இருக்கின்றேன்.

ஆயிரத்துக்கு ஒன்று குறைகிறதே  என்ற கேள்விக்கு வேல்கண்ணன் தன் அடுத்த கவிதைநூலில் விடையளிக்ககூடும். வாங்கிப் படிக்கலாம். முன்னுக்கு வரவேண்டிய கவிஞர்.

சினிமா & தொலைக்காட்சி : (மன்னிக்கவும், பார்க்க நேரமில்லை!)

பத்திரிகை
அறுபதுகளில், மேடைகளில் மணிக்கணக்காக அரசியல் பேசும் திறமையுள்ளவர்களை நல்ல மேய்ப்பர்களாகக் கருதி அவர்கள் பின்னே ஓடும் ஆடுகளாய் ( என் போன்ற) மக்கள் இருந்தார்கள். மாலை ஆறுமணிக்குப் பொதுக்கூட்டம் என்றால் ஐந்துமணிக்கே ஆஜராகிவிடுவேன். ஆனால் பேச்சாளர் எப்போது வருவார் என்று தெரியாது. முதலில் திரைப்படப் பாடல்களை அசுர ஒலியில் வெளிப்படுத்தி அசரவைப்பார்கள். பிறகு குட்டித் தலைவர்கள் கிரேக்க ரோமானியக் கதைகளைக் காமரசம் ததும்ப வருணிப்பார்கள். அதில் ஒருமணிநேரம் போகும். அப்போதும் பேச்சாளர் வந்துவிடமாட்டார். பிறகு யாராவது மேடையில் ஏறி இலக்கியம் பற்றிப் பேசுவார்கள். பெரும்பாலும் ‘செம்புலப்பெயல் நீர்போல’ அல்லது ‘முளிதயிர் பிசை இய காந்தள் மெல்விரல்’  என்ற இரண்டு பாடல்களைத்தான் விவரிப்பார்கள். வேறு பாடல்களை அவர்கள் படிக்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை போலும். பின்னர் இன்னும் யாராவது பேச்சாளர்- பெரும்பாலும் ஒரு கல்லூரி மாணவர்- மேடைக்கு வருவார். ’ஆனால்’ என்ற தலைப்பில் இரண்டுமணிநேரம் பேசினார் எங்கள் தலைவர் என்று அவர் பேசியதை மீண்டும் ஒப்பித்துக் கைதட்டல் பெறுவார். அதில் இன்னொரு மணிநேரம் போகும். மேலும் இரண்டு மூன்று இரண்டாம் கட்டத்தலைவர்கள் பேசி இரண்டுமணி நேரத்தைக் கழிப்பர். அப்போதும் பேச்சாளர் வந்துவிட மாட்டார். கடைசியாக இன்னொருவர் வந்து மைக்கைப் பிடுங்கி அறிவிப்பார்--- “தலைவர் வருகிறார், வருகிறார், வந்துகொண்டே இருக்கிறார்...இதோ அரக்கோணத்தைத் தாண்டிவிட்டார்...இதோ காஞ்சிபுரம் தாண்டிவிட்டார்...இதோ வாலாஜாவை நெருங்கிக் கொண்டிருக்கிறார்..... இன்னும் கால்மணி நேரத்தில் வந்துவிடுவார்..” என்று, அவர் வரும்வரையில் மைக்கை யாருக்கும் கொடுக்காமல் தானே பிடித்திருப்பார். உண்மையில் அந்தப் பேச்சாளர்/தலைவர் மேடைக்கு வந்துசேரும்போது இரவு பதினோருமணி ஆகிவிடும். விஷயம் என்னவென்றால், இரவு ஏழுமணிக்குத்தான் சென்னையிலிருந்தே அவர் கிளம்பியிருப்பார்!

பார்க்கும்போதெல்லாம் ‘இதோ வந்துவிடும், இன்னும் ஒரு வாரத்தில் வந்துவிடும்’ என்றே சொல்லிக்கொண்டிருப்பார் பொன்.வாசுதேவன். திடீரென்று ஒருநாள் மேல் அட்டையை வெளியிட்டு அசத்துவார். சரி, வாங்கலாம் என்று போனால், இப்போதுதான் அச்சுக்குப் போயிருக்கிறது என்பார். ஒருவழியாக இந்த வாரம் கொண்டுவந்துவிட்டார். ‘அகநாழிகை’ இலக்கிய இதழைத்தான் சொல்கிறேன்!


புதுடில்லியிலிருந்து சாகித்ய அக்காதெமி ‘இந்தியன் லிடரேச்சர்’ என்ற காலாண்டிதழை நடத்திவந்தது. புத்தக வடிவிலேயே வரும். 100 – 200 பக்கங்கள் இருக்கும். படித்தபிறகு அப்படியே பாதுகாக்கத்தோன்றும். விளம்பரங்கள் இருக்காது. அதேபோன்ற வடிவத்தில், அதேபோன்ற உயர்ந்த உள்ளடக்கத்துடன் வாசு கொண்டுவந்திருக்கிறார். அரசியல், கலை, இலக்கியம், சமூகவியல், கவிதை, ஆளுமைகளின் பேட்டிகள் எனப் பல்வகைப்பட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 160 பக்கம். உயர்ந்த தாளில் அழகான அச்சு. எனவே விலை ரூபாய் நூற்றி இருபது. (இந்த விலைக்குச் சென்னையில் நல்ல உணவகங்களில் ஒருவேளை சாப்பாடு கூடக் கிடைக்காது!)

இந்த இதழில் என்னைக் கவர்ந்தவை, ஸ்டாலின் ராஜாங்கத்தின் பேட்டியும் (இங்கு ‘அரசியல்’ பகுதியில் படித்தீர்களே!), பெரியாரின் பெண்ணியச் சிந்தனைக் குழப்பத்தைத் தோலுரித்துக் காட்டும் தி. பரமேஸ்வரியின் கட்டுரையும்,  கடல்சார்ந்த எழுத்தாளர் ஜோ.டி. குரூஸ் பேட்டியும் ஆகும். 

ஆழிசூழ் உலகு’ ‘கொற்கை’ என்ற இரண்டு நாவல்கள் மூலம் புகழ்பெற்றவர் குரூஸ். மீனவச் சமுதாயத்திற்குள்ளிருந்தே மீனவர்கள் வாழ்வியலைப் பற்றி எழுதிய முதல் எழுத்தாளர் இவர். பேச்சுவழக்கில் உள்ள வார்த்தைகளைக் கையாண்டு இவர் எழுதிய வரிகள் சிலரால் ஆட்சேபிக்கப்பட்டு இவர்மீது வன்முறை பிரயோகிக்கப்படும் அளவுக்குப் போனதாம். இப்பேட்டியிலிருந்து ஒரு பகுதி:

கேள்வி:   ‘ஆழிசூழ் உலகு’ ‘கொற்கை’ என்ற இரண்டு நூல்களிலும்  காலமும், மரணமும் புத்தகம் முழுவதும் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது...

ஜோ.டி. குரூஸ் பதில்: மரணம் வரை காமம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. மரணம் வரும்வரை காமம் விளையாடிக்கொண்டுதான் இருக்கிறது. வயதாகி விட்டது நான் அதை விட்டுவிட்டேன் என்று யாராவது கூறினால், அவன் பொய்தான் கூறுகிறான் எனலாம். காமம் என்பது விட்டுப்போகக்கூடிய ஒரு உணர்ச்சி அல்ல. காலம் இருக்கும்வரை அது தொடர்ந்துகொண்டே இருக்கும். காமத்தினுடைய செய்கைகள் முடியாமல் போகலாம். ஆனால் வக்கிரமான சிந்தனைகள் வரக்கூடாது என்பதில்லை. மரணம்தான் காமத்திலிருந்து விடுவிக்கக்கூடியது என்பது என்னுடைய எண்ணம்.

(அரவிந்தரின் ‘சாவித்திரி’ காவியத்தில், யமன், சாவித்திரியிடம் பேசும்போது இதே கருத்தைக் கூறுவது என் நினைவுக்கு வந்தது. நேரமிருக்கும்போது குரூஸ் அதைப் படிக்கலாம்.)

கேள்வி: (உங்களுக்கு முன்) வேறு யாரேனும் இவ்வகையான (மீனவர் சமூகவியல் குறித்து) படைப்பாக்கங்களைத் தந்திருக்கிறார்களா?

ஜோ.டி. குரூஸ் பதில்: கண்டிப்பாக. வலம்புரி ஜான் அவர்கள் உவரியிலிருந்து வந்தவர். எங்கள் வீட்டிலிருந்து இரண்டு அல்லது மூன்று வீடுகளுக்கு அப்பால் வசித்தவர். நீர்க்காகங்கள், ஒரு ஊரின் கதை என்று மீனவர்களைப் பற்றித்தான் எழுதினார். ஆனால் 30, 40 பக்கம் எழுதவேண்டுமென்று இருந்திருக்கும்போல. நாவலாகப் படைக்கவில்லையாயினும் நெய்தல் சார்ந்து அவருடைய பங்களிப்பு இருந்தது. இருப்பினும் அவை பரவலாக வெளியுலகிற்கு அறிமுகம் ஆகவில்லை. ஆனால், முன்னோடி என்றால் வலம்புரி ஜான்தான்.


(வலம்புரி ஜான், திராவிடக் கட்சிகளின் அரசியல் ஆட்டத்தில் தன்னை இழந்துபோனவர். அவரின் ‘சீனம் சிவப்பானது ஏன்’ போன்ற நூல்களை மாணவர்கள் கட்டாயம் படிக்கவேண்டும். அடுக்குமொழியில்  பேசிக்கொண்டிருந்த ஆரம்பகால திராவிட எழுத்துக்கும், பிறகுவந்த வெகுஜனப் பத்திரிகை எழுத்துக்கும் இடைப்பட்ட சுயசிந்தனையுள்ள எழுத்து வலம்புரிஜானுடையது. ‘தாய்’ பத்திரிகையில் அவர் பணிபுரிந்தபோதும், ஜெயலிதா அம்மையாருக்குப் பாராளுமன்றத்தில் ஆசானாக அவரை எம்.ஜி.ஆர். நியமித்தபோதும், அவரை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு, நான் சார்ந்திருந்த வங்கியின் அலுவலால் வாய்த்தது. அலுவல் விஷயங்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றமுடியாமல் எங்களைச் சிக்கலில் மாட்டிவிட்ட வலி இன்னும் இருக்கிறது. ஆனால் அவரின் எழுத்துத் திறமையை யாரும் குறைத்து மதிப்பிடவேண்டியதில்லை. ஏராளமான புத்தகங்கள் எழுதியிருக்கிறார். பின்னாளில் நக்கீரனில் ஜெ. யுடனான தனது  அனுபவங்களைக் தொடராக  அவர் எழுதியதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். பெயர் மறந்துவிட்டது. நக்கீரனில் புத்தகமாகக் கிடைக்கிறது. திராவிட அரசியல்-வரலாற்று-இலக்கியத்தில் அது ஓர் அழிக்கமுடியாத நூல்.)

சிரிப்பு
அந்தக் காலத்தில் மண்ணில் விளையாடும் குழந்தைகளுக்குச் சிரங்கு என்ற நோய் வரும். கை, கால்கள் புண்ணாகும். அரிப்பு ஏற்படும். சொரிந்துகொண்டே இருக்கவேண்டும். பெற்றோர்கள் அக்குழந்தைகளைத் தூக்கிவைத்துக்கொள்வதால் அவர்களுக்கும் சிரங்கு வரும். எனவே, குழந்தைக்குச் சொரிந்துவிட்டுத் தானும் சொரிந்துகொள்ள நேரிடும். தொற்றுநோய் என்பதால் ஒரு வீட்டில் ஒருவருக்கு வந்தால் எல்லாருக்கும் வந்துதான் போகும். தாத்தா பாட்டி முதல் கைகுழந்தை வரை இவர்கள் சொரிந்துகொள்ளும் அழகு(!) பார்க்கவேண்டுமே!

கவிஞர்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் பாடுவார்கள். தமக்கு வரும் நோய்களையா பாடமாட்டார்கள்? ஒரு கவிஞர் இப்படித்தான் தனக்கு வந்த சிரங்கு நோய் பற்றிப் பாடுகிறார். முருகனை வேண்டுகிறார். என்னவென்று? சொரிந்துகொள்ள இன்னும் இரண்டு கைகள் தரக்கூடாதா என்று!

“செந்தில் குமரா! திருமால் மருகா! என்
சிந்தை குடிகொண்ட தேசிகா! – நொந்த இம்
மெய்யிற் சிரங்கை விடியுமட்டும் சொரியக்
கையிரண்டும் போதாது காண்!”

இந்தக் கவிஞரின் பெயர் தேசிக விநாயகம் பிள்ளை. குழந்தைகளுக்காக ‘மலரும் மாலையும்’ என்ற கவிதைநூலைப் படைத்தவர்.  மாமியார்களின் கொடுமைகளைப் பற்றி மருமக்கள் கூறுவதாக அமைந்த ‘மருமக்கள் வழி மான்மியம்’ என்ற நூலும் தந்தவர். இந்த நூல் கொடுத்த உத்வேகத்தில்தான் பாரதிதாசன் ‘குடும்ப விளக்கு’ உருவாக்கினார் என்பர்.



(தினமணி- ஞாயிறு- இதழில் நடுப்பக்கம் வரும் ‘தமிழ்மணி’யில் ‘தமிழ்ச்செல்வங்கள்’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதும் புலவர் இரா.இளங்குமரன் அவர்களால்  9-3-2014  இதழில் எடுத்துக்காட்டப்பட்ட பாடல். அவருக்கு நன்றி!)

குறிப்பு: இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழுள்ள ‘தமிழ்மணம்’ பட்டையில் இடதுபுறமுள்ள ‘மேல்நோக்கிய கட்டைவிரல்’ அடையாளத்தின்மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.நன்றி.
 © Y Chellappa