வெள்ளி, ஜனவரி 06, 2017

வந்தது தெரியும் போவது எங்கே?

பதிவு எண் 02/2017

“வந்தது தெரியும், போவது எங்கே?
வாசல் நமக்கே தெரியாது” – கண்ணதாசன்

மரணம் பற்றி நினைப்பதும் எழுதுவதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

நியுஜெர்சியில் வெளியாகும் தினசரி பத்திரிக்கை ‘ரெக்கார்டு’. இதில் மரணச் செய்திகளும், மரணம் அடைந்தவரைப் பற்றி, அவர்களது உறவினர்கள் தரும் நினைவஞ்சலி விளம்பரங்களும் முழுதாக இரண்டு முதல் நான்கு பக்கங்கள் வருகின்றன. (பிற மாநிலங்களிலும் தினசரிகளில் இந்த வழக்கம் இருக்கிறது.) இறந்தவரின் புகைப்படத்துடன் அவரது பிறந்த தேதி, பிறந்த இடம், கல்வி கற்றது, பணியாற்றிய விவரங்கள், தற்போதுள்ள உறவினர்களின் விவரங்கள், திருமணம், விவாகரத்து, குழந்தைகள் பற்றிய தகவல்கள் ஆகியவை மிக விரிவாக எழுதப்பட்டிருக்கும். 



(ஹிந்து பத்திரிகையில் இந்த அளவுக்கு வெளியிட்டால் குறைந்தது ஒரு லட்ச ரூபாய் விளம்பரக் கட்டணமாக வாங்கிவிடுவார்கள். அங்கே வார்த்தைகளைக் கணக்கிட்டு வரிவிளம்பரம் கொடுப்பதுதானே வழக்கம்! இறந்துபோனவருக்குத் திதி தான் கொடுக்கிறோமே,  பத்திரிகை விளம்பரம் ஒரு கேடா என்று யாரோ பேசுவது கேட்கிறது.)  

ஆனால் நியுஜெர்சியில் மரணம் அடைவதென்பது அவ்வளவு சிக்கனமான விஷயம் அல்ல என்று தெரிகிறது.

இங்கே மரணங்கள் ஏதேனும் ஒரு மருத்துவமனையில் தான் நிகழ்ந்தாகவேண்டும், அல்லது சான்றளிக்கப்படவேண்டும். அத்துடன், இறந்த உடலை வீட்டிற்குக் கொண்டுவர அனுமதி கிடையாது. அரசாங்கத்தால் உரிமம் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு FUNERAL HOUSE -இல் தான் சடலங்கள் கிடத்தப்படவேண்டும்.  எவ்வளவு நாள் வேண்டுமோ அவ்வளவு நாள் தரமான  குளிரூட்டப்பட்ட சூழ்நிலையில்  அவை பாதுகாக்கப்படும்.

பிணங்களைப் புதைப்பதோ அல்லது எரிப்பதோ உரிமம பெற்ற FUNERAL DIRECTOR முன்னிலையில் தான் நடைபெறவேண்டும்.

சூரியன் மறைவதற்குள் பிணத்தை இடுகாட்டிற்கு அனுப்பிவிடும் பழக்கம் நம்முடையது. (கருமம் செய்யவேண்டிய  வாரிசுதாரர் வருவதற்குத் தாமதமானால் மட்டுமே இது  தாமதப்படும்.) நியுஜெர்சியில் அப்படியில்லை. பிணத்தை எரிப்பதானால்,  இறந்து இருபத்திநாலு மணி நேரம் ஆன பிறகே அதற்கு அனுமதி உண்டு. புதைப்பதானால் அதற்குரிய சம்பிரதாயமான சடங்குகளை முடிப்பதற்கு சில நாட்கள் ஆகும் என்பதால் அது பற்றி தனியாக விதிகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

எரிக்கப்பட்டவரின் சாம்பலைக் கடலில் கரைக்கவோ, தூவவோ  அனுமதி உண்டு. ஆனால் மூன்று கடல்மைல்களுக்கு அப்பால் தான் செய்யவேண்டும். அது பற்றி முப்பது நாட்களுக்குள் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகாரிக்கு முறையாகத் தகவல் அளிக்கவேண்டும். கடல் அல்லாத நிலப்பரப்பின் மீதும் சாம்பல் தூவப்படலாம். ஆனால்  தனது நிலத்தில் அது விழக்கூடாது என்று ஆட்சேபிக்க மற்றவர்களுக்கு உரிமை உண்டு.

இறந்தவர்கள் விட்டுச்செல்லும் சொத்துமதிப்பின் மேல் ‘மரணவரி’ (எஸ்டேட் டாக்ஸ்) கட்டியாகவேண்டும்.  இந்தியாவிலும் இந்த வரி இருந்தது. பிணத்தை எடுப்பதற்குள் அந்த வரியைச் செலுத்தியாகவேண்டும் என்று அதிகாரிகள் கட்டாயப்படுத்திய கதைகள் ஏராளம். இதை நிரந்தரமாக ஒழித்த பெருமை நமது ப. சிதம்பரம் அவர்களைச் சாரும். (தான்  பதவியேற்றவுடன் இந்த மரண வரியை ரத்து செய்வதாக டொனால்டு ட்ரம்ப்   கூறியிருக்கிறார்.)

ஜாதி, மத வித்தியாசமின்றி யார் வேண்டுமானாலும் FUNERAL DIRECTOR ஆகமுடியும்.

தனக்கு என்னவிதமாக இறுதிச் சடங்குகள் நடைபெறவேண்டும் என்று முன்னதாகவே இவர்களிடம் பலர் பதிவுசெய்துகொண்டு அதற்காகப்  பெருந்தொகையையும் வைப்புநிதியாகச செலுத்துகிறார்கள்.  அப்படிப்  பதிவு  செய்தவர் இறந்துபோகும் நிலையில், சம்பந்தப்பட்ட  FUNERAL DIRECTOR முன்னின்று ஆகவேண்டிய காரியங்களைக் கவனித்துக்கொள்கிறார். உறவினர்களுக்குத் தகவல் தெரிவிப்பது, பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்பது, பிணத்தைப் பாதுகாப்பாக  வைப்பது, காப்பீட்டு  நிறுவனங்களுக்குத் தகவல் கொடுத்து அவர்களிடமிருந்து பணம் பெறுவதற்கு ஆவன செய்வது, இறந்தவரின் சமய  முறைப்படி பத்தாம் நாள் அல்லது வேறொரு நாளில் அஞ்சலிக்கூட்டம் நடத்துவது, அதற்கான அழைப்புகளை அனுப்புவது, அவர்களுக்கு உணவு முதலிய வசதிகளைச் செய்வது  ....என்று எல்லாவற்றையும் இந்த  FUNERAL DIRECTOR குறையின்றி நடத்திவைப்பார். (கொஞ்சம் செலவாகும், அவ்வளவே!)

தான் இறந்தபிறகு தனக்குரிய இறுதிச்சடங்குகளை இன்னமுறைப்படி இன்னார்தான் செய்யவேண்டும் என்று உயிலில்  ஒருவரின் பெயர் குறிப்பிட்டிருந்தால்,  அந்தச் சடங்குகளைப் பொறுத்தவரை அந்த நபருக்கு மட்டுமே முழு உரிமை உண்டாம். சட்டபூர்வ வாரிசுகள் அதை மதித்தாகவேண்டுமாம்.

இதையெல்லாம் பார்க்கும்போது, ‘நம்மூரு போலாகுமா?’ என்று தோன்றுகிறதல்லவா? உண்மைதான்; தப்பித்தவறி அமெரிக்காவில் மரணம் அடைந்துவிட்டால் சடலத்தைப் பதப்படுத்தி அடுத்த விமானத்தில் ஊருக்கு அனுப்பிவிடுவதுதான் சிக்கனமான விஷயம்.

 (சென்னையில் டிசம்பர் 5/6 இல்  நடந்த ஒரே ஒரு மரணத்தைப் பற்றி தினமும் சமூக வலைத்தளங்களில் நடக்கும் கலாட்டாவின் பிரதிபலிப்பு?)

-இராய செல்லப்பா, நியூஜெர்சி

ஞாயிறு, ஜனவரி 01, 2017

மாறுவதேயில்லை சில விஷயங்கள்


பதிவு எண் ௦1/2017


ஆண்டுகள் உருண்டோடினாலும் நமது வாழ்க்கையில் சில விஷயங்கள் மாறுவதேயில்லை. 

பருவப் பெண்ணின் நாணம், விடலைப் பையனின் விஷமம், கருவுற்ற பெண்ணின் முகச்சோர்வு, நல்ல மதிப்பெண் பெற்ற மாணவனின் பெருமிதம், மனதாலோ செயலாலோ நேர்மறையாக  நம்மைப் பாதித்தவர்களின் இழப்பினால் வரும் துயரம் ....போன்ற உணர்வுகள் காலம் காலமாக மாறியதேயில்லை. இனியும் மாறாது.

அதேபோல், அரசியல்வாதிகள் எவ்வளவு நல்லவர்களானாலும் சரி, நேரடியாகவே நமக்கு நல்லது செய்திருந்தாலும் சரி,  அவர்களின் மரணம் ஒரு சில மணித்துளிகளுக்கு  மேல் நம்மைப் பாதிப்பதில்லை. இன்னும் நல்லது செய்யாமல் போனார்களே என்ற அதிருப்தியே மேலோங்கி நிற்கும். சற்றே மர்மமான சூழ்நிலையில் அண்மையில் மறைந்துபோன ஓர்  அரசியல் தலைவரின் மரணமும் அப்படியே; கூடு புதைந்தவுடன் கூடாரம் நகர்ந்து விட்டது.  கிரீடம் இடம் மாறிவிட்டது. மறைந்தவரின் புகழ் மறக்கப்பட்டுவிட்டது. சராசரி மனிதர்கள் தொலைக்காட்சிப் பெட்டி முன்பு சில நாட்கள் தவம் கிடந்தார்களேயன்றி,  அம்மரணம் மனதைத் தொடாமலே போய்விட்டது.

இயற்கையும் ஒரு காரணம்-  வாராது வந்த வார்தாப் புயல்.  சென்னையில் தொடர்ந்து ஏழுநாட்கள் மின்சாரமோ, அலைபேசி கோபுரங்களோ, போக்குவரத்தோ இயங்காமல் முடங்கிப்போன நிலையில், இறந்தவர்களுக்காக எவ்வளவு நாள் துக்கம் காப்பது? காந்திக்கும், நேருவுக்கும், அறிஞர் அண்ணாவுக்கும், எம்ஜியாருக்கும் ஏற்பட்ட  பின்-மரணத்துவ நிலைதான் இது.

சில விஷயங்கள் மாறுவதேயில்லை.... 

வானவில்லின் வண்ணம் தான் சாயம் போகுமோ?” என்றார்,  நா. முத்துக்குமார். அவரது மரணமும் அப்படியே: பாரதிக்கும் பட்டுக்கோட்டைக்கும் பிறகு அகால மரணமடைந்த அற்புதக் கவிஞர் வரிசையில் நா முத்துக்குமாருக்கு (வயது 41) நிச்சயமான இடம் உண்டு. அவருடைய முதல் பாடலான “எனக்குப் பிடித்த பாடல்” என்ற பாடலின் ஆழத்தை அண்மையில்தான் நான் அனுபவிக்கமுடிந்தது. பாலு மகேந்திராவின் ‘ஜூலி கணபதி’ என்ற படத்திற்காக எழுதப்பட்டது. 



ஸ்ரேயா கோஷல் பாடியது.  பாடலைப் படத்தில் சரியான  முறையில் பயன்படுத்தத் தவறியதற்காகவே  பாலு மகேந்திராவை நாடுகடத்தி யிருக்கவேண்டும்.  வைரமுத்துவின் முதல் பாடலான ‘பொன்மாலைப் பொழுது’க்குக் கிடைத்த வரவேற்பு இந்தப் பாடலுக்குக் கிடைக்காமல் போனதற்கு பாலுமகேந்திராவின் மோசமான காட்சியமைப்பே காரணமாக இருக்கவேண்டும்.

விடுங்கள்...2016 ஆம் ஆண்டு முடிந்து விட்டது;   2017 இதோ பிறந்துவிட்டது. அதனால் எல்லாம் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிடப் போவதில்லை.  அதே சாலைகள், அதே பேருந்துகள், அதே மளிகைக்கடைகள், அதே பேப்பர் பையன், பால்பாக்கெட் போடும் அதே பெண்மணி, திடீர் திடீரென்று ஏதோ ஒரு கால்சென்ட்டரில் இருந்து வரும் அதே அழைப்பு,  அதே மேலதிகாரி, தேநீர் கொண்டுவரும் அதே பையன், அடிக்கடி இயங்காமல் போகும் அதே இணையத் தொடர்பு... அதே மனைவி (அல்லது கணவன்)...இவையெல்லாம் மாறவா போகின்றது?

இவையெல்லாம் நமக்குப் பழகிவிட்ட சங்கதிகள். மாறினால் தான் தொல்லை. கருவாட்டுக் கூடையருகில் அமர்ந்து பேருந்தில் பயணிப்பவனுக்கு, மல்லிகைப்பூக்காரி யருகில் அமர்ந்தால் வாந்தி வரும் என்பார்களே,  அது போன்ற நிலைமை. எனவே, வேறு வழியில்லை,

“வந்ததை வரவில் வைப்போம்,
சென்றதை  செலவில் வைப்போம்,
இன்று போல் என்றும் இங்கே
ஒன்றாய்க் கூடுவோம்”

என்ற கண்ணதாசனின் வரிகளோடு  இந்தப் புத்தாண்டை வரவேற்போம்! பிறகு வழக்கம்போல் நடக்கத் தொடங்குவோம்!

(பத்துநாள் முன்புதான் நியுஜெர்சி வந்தேன். ஓராண்டாக வலைத்தளத்தின் பக்கம்  வராமலே இருந்து விட்டேன். இனி அப்படி நேராது.  அடிக்கடி எழுதுவேன். இது தகவலா எச்சரிக்கையா என்று தெரியவில்லை..... என்ன செய்வது, வாழ்க்கையில் சில விஷயங்கள் மாறுவதே யில்லையே! மனதைத் திடப்படுத்திக்கொண்டு படித்துவிடுங்கள்.)
-      
-          - இராய செல்லப்பா (என்னும் செல்லப்பா யக்யஸ்வாமி)


இணைப்பு: 'எனக்குப் பிடித்த பாடல்' 
http://www.youtube.com/watch?v=bG7_FskQ1oM

வெள்ளி, அக்டோபர் 02, 2015

பழையதோர் உலகம் செய்வோம் - அக்டோபர் 11 -புதுக்கோட்டையில்


பழையதோர் உலகம் செய்வோம்

ஆம், நண்பர்களே, மீண்டும் பழையதோர் உலகம் செய்யும் முயற்சியை நாம் தொடங்கவேண்டியுள்ளது.

அது, 'யாதும் ஊரே- யாவரும் கேளிர்' என்று முழங்கிய கணியன் பூங்குன்றனின் உலகம் !

'அறிவு, அற்றம் காக்கும் கருவி' என்று அறிவியலின் அடிப்படையையும், 'செய்க பொருளை' என்று பொருளாதாரத்தின் அடிப்படையையும், 'ஊழையும் உப்பக்கம் காண்பர்' என்று பகுத்தறிவின் அடிப்படையையும் நமக்கு வழங்கிய வள்ளுவனின் உலகம்!

'திறமான புலமை எனில் பிற நாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்'    என்ற இலட்சியத்தை நமக்கு முன்னேற்றக் குறிப்பாக எழுதிவைத்த பாரதியின் உலகம்! 

'தொண்டு செய்வாய் தமிழுக்கு - துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே' என்று போர்ப்பரணி பாடிய பாரதிதாசனின் உலகம்! 

சொல்லிக்கொண்டே போகலாம்.

அப் பழைய உலகமே, இனிப் பொன்னுலகம்.  அப்பொன்னுலகைக் கணினிமயமான இன்றைய உலகில் மீண்டும் நிறுவும் நேரம் (installing time) வந்துவிட்டது. 

இதுவே நடைபெறவிருக்கும் புதுக்கோட்டை பதிவர் சந்திப்பின் அடிநாதம்.

ஏற்கெனவே பயணத்திற்குப் பதிவு செய்துவிட்டவர்களும், திடீர் உத்வேகத்தில் கடைசிநேரத்துப் பேருந்தில் தொற்றிக்கொண்டு வரப்போகும் இலக்கிய -அறிவியல் ஆர்வலர்களும் மீண்டும் ஒருதரம் நினைவுபடுத்திக்கொள்ள இதோ அழைப்பிதழ்: 

  

வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா 2015 
புதுக்கோட்டையில் வரும் 11-10-2015 ஞாயிறு அன்று!
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

பழையதோர் உலகம் செய்ய நம்மோடு கைகோர்த்து நிற்கப்போகும் நல்லிதயங்கள் யார் யார் தெரியுமா? 


வலைப்பதிவர் நண்பர்களை 
வருக வருகவென வரவேற்கிறோம்!

 - இராய செல்லப்பா , சென்னை

புதன், செப்டம்பர் 30, 2015

கணினித் தமிழா? யாருக்காக ஐயா?

கணினித் தமிழா? யாருக்காக ஐயா?

சென்னையின் புறநகர்ப் பகுதியில் வயலும் வரப்பும் சூழ அமைந்துள்ள எங்கள் அடுக்குமாடித் தொகுப்பில் சுமார் ஆயிரத்து ஐநூறு குடியிருப்புகள் உள்ளன. சுமார் எழுநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதுவரை குடிவந்துள்ளன.

அவர்களில் பிறமொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பங்கள்  நூறு இருக்கும். மற்றவைகள் அனைத்தும் தமிழ்க் குடும்பங்களே. அதிலும் தென் மாவட்டங்களிலிருந்து குடியேறியவர்களே அதிகம். அவர்களில் ஆங்கிலம் படிக்கும் ஆவலும் அடித்தளமும் உடையவர்கள் அதிகமில்லை.

பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் நகரத்தைவிட்டு இயற்கையின் அரவணைப்பில் வாழவிரும்பி வந்த குடும்பங்கள் நூறுக்கும் குறைவே. மற்றவர்கள், தத்தம் பிள்ளைகளின் (அல்லது பெண்களின்) கல்லூரிப் படிப்பை முன்னிட்டு வந்தவர்களே. பெரும்பாலும் பொறியியல் அல்லது மருத்துவப் படிப்பே. பொறியியல் மாணவர்கள் என்று எடுத்துக்கொண்டால் நூறுக்கும் குறையாது.

திரு பழனியப்பன் என்பவர் தினமும் காலையில் எங்கள் அறிவுப்பசிக்குத் தீனி போடுபவர். அதாவது செய்தித்தாள்களை விநியோகம் செய்பவர். ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கில தினசரிகள் ஆறுமணிக்குத் தான் வரும். தினமலர், தினத்தந்தி, தினமணி போன்ற தமிழ்த் தினசரிகளோ ஐந்துமணிக்கே வாசலில் வந்து விழும்.

சரி, கணினித் தமிழுக்கும் இந்த முன்னுரைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? பொறுங்கள்.

பழனியப்பனிடம் கேட்டேன், ‘ஐயா, இந்தக் குடியிருப்பில் இருக்கும் தமிழர்கள் மத்தியில் மொத்தம் எத்தனை செய்தித்தாள்கள் விற்பனையாகின்றன, எவை, எவை?’ என்று கேட்டபோது அவர் கொடுத்த பதில் என் சிந்தனையைத் தூண்டியது:

-எல்லாம் சேர்ந்து மொத்தம் நானூறு பிரதிகள் மட்டுமே விற்பனை ஆகிறதாம். அவற்றுள் ஆங்கிலம் முன்னூற்று ஐம்பது. தமிழ் வெறும் ஐம்பது!

-இந்த நானூறு பிரதிகளில், ஏதேனும் இரண்டு ஆங்கிலச் செய்தித்தாள்களை வாங்குவோர் சுமார் நூறுபேர். மற்றவர்கள் தலா ஒன்றுதான் வாங்குகிறார்கள். அதாவது நானூறு பிரதிகள் சென்றடையும் வீடுகள் முன்னூறு மட்டுமே.

வேறு வார்த்தையில் சொல்வதென்றால், செய்தித்தாள் படிக்கும் முனைப்பும், வாங்கும் விருப்பமும் கொண்ட முன்னூறு தமிழ்க் குடும்பங்களில் தமிழ்ச் செய்தித்தாளை வாங்குபவர்கள் வெறும் ஐம்பதுபேரே! இவர்களைத் தவிர, ஞாயிறு மலருக்காகவே  தமிழ் செய்தித்தாள் வாங்குவோர் சுமார் ஐம்பதுபேர் உண்டாம்.  ஆக, சுமார் அறுநூறு தமிழ்க் குடும்பங்கள் உள்ள தொகுப்பில், தமிழ்ப் பத்திரிகைகள் வாங்கும் குடும்பம் வெறும் நூறுதான்!

இதே ஆய்வை முதலில் சென்னை நகரம் முழுவதற்கும், பிறகு  பிறகு தமிழ்நாடு முழுவதற்கும் விரிவுபடுத்துங்கள். கிடைக்கும் முடிவுகள் வேறுவிதமாக இருக்கும் என்று  நம்புவதற்கில்லை.

இந்தக் கட்டுரை, தமிழ்மக்களின் தமிழ் வாசிப்பைப் பற்றியதல்ல. வெறும் நாலு ரூபாய், ஐந்து ரூபாய் கொடுத்து தமிழ்ப் பத்திரிகை வாங்கிப் படிக்கும் பழக்கமே இல்லாத ஒரு சமுதாயத்தில்தான் கணிசமான முதலீடு செய்து கணினியும், மாதந்தோறும் செலவு செய்து இணைய வசதியும் பெற்றுக்கொள்ளச் செய்து,  கணினித்தமிழை வளர்ப்பதுபற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்.

எண்பதுகளில் மேலை நாடுகளிlல் தொடங்கியது, மேசைக்கணினி புரட்சி (the PC revolution). அதற்கு முன்புவரை ‘மெயின்ஃப்ரேம்’ கணினிகள்தாம் புழக்கத்தில் இருந்தன. முதல்    ‘மெயின்ஃப்ரேம்’ கணினி தயாரிக்கப்பட்டபோது, ‘இம்மாதிரி இன்னும் இரண்டு அல்லது மூன்று கணினிகள் தாம் உலகிற்குத் தேவைப்படலாம்’ என்று கூறப்பட்டது. ஐ.பி.எம். (IBM)மும் மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் இணைந்து செயல்பட ஆரம்பித்த பிறகுதான் கணினிகள் தனி மனிதனின் மேசைக்கு வர ஆரம்பித்தன – அதாவது தொண்ணூறுகளில். அதுவரை கணினித் துறையில் பெரும் முதலீடு செய்திராத இந்தியாவும் மேசைக்கணினி புரட்சியில் குதித்து, மிகக் குறைந்த காலத்திலேயே தன்னை மென்பொருள்துறையில் வன்மையான சக்தியாக நிலைப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தது.

இன்று மேசைக்கணினியின் ஆட்சி மங்கிப்போய், மடிக்கணினியின் ஆட்சியும் நலிவடைந்து, மார்க்கணினி (அதாவது மார்போடு அணைத்துக்கொண்டும் பயன்படுத்தவல்ல ஐ-பேட் போன்றவை)  வந்துவிட்டன. எனினும்,  இன்றும்கூட, எத்தனை வீடுகளில் அவற்றுள் எதாவது ஒன்று வாங்கப்பட்டுள்ளது? அரசாங்கத்தின் இலவசத் திட்டங்களின் பயனாக மாணவர்கள் சிலருக்கு மடிக்கணினிகள் கிடைத்திருக்கலாம். ஆனால் பெரும்பாலான பெற்றோர்களுக்கு அவற்றை இயக்கத்தெரியுமா?  
வாருங்கள், கணினித்தமிழை வளர்ப்போம்!

ஆக, நம்முடைய முயற்சியின் இமாலயத்தன்மை நம்மை அசர வைக்கிறது. என்றாலும் முயற்சியை நாம் கைவிடமுடியாதே! கணினித் தமிழ் என்னும் நமது இலக்கை அடைவதற்குக் கீழ்க்கண்ட நான்கு படிகளில் நாம் ஏறியாகவேண்டும் என்பது என் கருத்து.

1.    கணினி இல்லாதவர்களைக் கணினியும் இணையமும் பெற வைத்தல்
2.    கணினியும் இணையமும்  உடையவர்களுக்குக் கணினி இயக்கம் பயிற்றுவித்தல்
3.    கணினி இயக்கம் பயின்றவர்களுக்குக் கணினித் தமிழைப் பயிற்றுவித்தல்
4.    கணினித்தமிழ் பயிற்றுவிக்கும்போதே, தத்தம் தொழில்நுட்பத்துறையில் தமிழைப் பயன்படுத்துவதற்கு ஊக்கவாய்ப்புகள் வழங்குதல்.

முதலாவது படியில், அவரவர் தத்தம் பணவசதியால்தான் ஏறியாகவேண்டும். அனைவருக்கும் இலவசக் கணினி வழங்கிட எந்த அரசாலும் இயலாது. ஆனால் இதுபற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. பள்ளி அல்லது கல்லூரி செல்லும் வயதில் குழந்தைகள் இருக்கும் எந்த வீட்டிலும் இன்று கணினியும் இணையமும் அவசியப் பொருட்களாகிவிட்டன. இந்நிலை மேலும் உறுதிப்படும் என்றே கொள்ளலாம்.

எனவே, நாம் இரண்டாவது படியில் இருந்து தொடங்கலாம். அதாவது, ‘கணினியும் இணையமும்  வீட்டில் இருந்தும், கணினி இயக்கம் தெரிந்திராதவர்களுக்கு கணினியைப் பயிற்றுவிப்பது எப்படி என்று ஆராயவேண்டும். இதற்கு என்னிடம் ஒரு தீர்வு உண்டு.

1.    வகுப்பில் கணினிப் பாடம் பயின்றுவரும் அனைத்து மாணவர்களிடமிருந்தும் ஒருதரச் சேகரிப்பாக (one-time data collection)
அவர்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள், பள்ளி செல்லாத அல்லது இடைவிலகிவிட்ட மூத்த உடன்பிறப்புகள் எவ்வளவுபேர், அவர்களுக்குக்   கணினி அறிவு உண்டா இல்லையா என்ற தகவலை எழுத்துமூலம் பெறலாம்.  அத்துடன், அந்த மாணவர், கணினியில் தமிழைப் பயன்படுத்தும் பயிற்சியைப் பெற்றுள்ளவரா என்பதும் தெரிய வேண்டும்.

2.    முதல் கட்டமாக, அந்த மாணவர், கணினியில் தமிழைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படவேண்டும். இதற்காக எளிமையான தேர்வு நடத்தப்படலாம். அதில் தேர்ச்சி பெறுவதை ஊக்குவிக்க ரூ.500 போல பரிசுத்தொகையாக வழங்கலாம்.

3.    அடுத்த கட்டமாக, கணினி அறிவு பெறாத தம் குடும்பத்தினருக்கு இந்த மாணவர்கள், குறிப்பிட்ட மூன்று அல்லது ஆறுமாதங்களுக்குள்  கணினி இயக்கத்தைக் கற்றுத்தருமாறு அறிவுறுத்தப்படவேண்டும். ஏற்கெனவே பள்ளிகளில் உள்ள பாடத்திட்டத்தையே இதற்கும்  மேற்கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட நாளில், குடும்ப உறுப்பினர்களின் கணினி அறிவை, ஏற்கெனவே முன்னறிவிக்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் சோதித்து சான்றிதழ் வழங்கலாம். (கணினி அறிவு மட்டுமே சோதிக்கப்படவேண்டும், அவர்களின் ஆங்கில அல்லது தமிழ் அறிவு அல்ல.)  எவ்வளவு உறுப்பினர்கள் தேர்ச்சி பெறுகிறார்களோ, அதற்கேற்ப, தலா ரூ.500 போல அவர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கலாம். பயிற்றுவித்த மாணவருக்குச்  சிறப்பானதொரு சான்றிதழ் மற்றும் ரூ.1000 உரிய மரியாதையுடன் வழங்கலாம்.   

4.      நமது அறுதியான இலக்கு, கணினியில் தமிழைப் பயிற்றுவிப்பதே ஆதலால், மேற்சொன்ன ஊக்கத்தொகைகளும் சான்றிதழும், மேற்படி  குடும்ப உறுப்பினர்கள் கணினியில் தமிழைக் பயன்படுத்தக் கற்றுக்கொண்டுவிடடார்களா என்று சோதித்தபிறகே வழங்கப்படவேண்டும்.  ஆக, நாம் மூன்றாவது படியையும் தாண்டிவிடுவோம். இனி நான்காவது படியைக் கடப்பது எப்படி என்று ஆராயலாம்.

கணினித் தமிழ் என்னும்போது, அது இயல்-இசை-நாடகம் என்ற முத்தமிழையும் தாண்டி, நான்காவதான அறிவியல் தமிழ் என்பதையே குறிப்பதாகக் கொள்ளவேண்டும். அறிவியல் என்னும்போது தொழில்நுட்பத்தையும் சேர்த்தே சொல்கிறோம்.

தமிழ்நாட்டில் இன்று ஐநூறுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றிலுள்ள மொத்த இடங்களில் ஐம்பது முதல் அறுபது சதம் இடங்களே நிரம்புவதாகக் கொண்டாலும், சுமார் ஒன்று முதல் ஒன்றேகால் லட்சம் மாணவர்கள் ஆண்டுதோறும் சேருகின்றனர். இவர்களில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் நிச்சயம் எழுபத்தைந்தாயிரம் பேராவது இருப்பர். இவர்கள் அனைவருமே கணினியில் புலமை கொண்டவர்கள். எனவே இவர்களைக் கணினித் தமிழுக்கு நாம் ஆற்றுப்படுத்துவோமேயானால் இவர்கள் வளர வளர தொழில்நுட்பத்துறையில் தமிழின் பயன்பாடு மென்மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் மிகுதி.

இதற்கான முதல் கட்டமாக, இந்த மாணவர்கள், தமது இறுதியாண்டு திட்ட அறிக்கையை (Final Year’s PROJECT REPORT) ஆங்கிலத்தில் மட்டுமின்றித் தமிழிலும் தயாரித்தளிக்குமாறு அறிவுறுத்தப்பட வேண்டும். இதற்கான ஊக்கத்தொகையாக ரூ.1௦,௦௦0 பத்தாயிரம் வழங்கலாம். (மேற்படி திட்ட அறிக்கையைத் தயாரிக்க ஒவ்வொரு மாணவனும் குறைந்தது பத்தாயிரம் ரூபாய் செலவிடுவதை என் மூன்று குழந்தைகளும் பொறியியல் படித்தபோது நான் அறிந்திருக்கிறேன்.) எனவே இந்த ஊக்கத்தொகையானது மாணவர்களைப் பரவசப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

மேற்சொன்னவாறு தமிழில் தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கைகளை தமிழ் இணையக் கல்வி கழகமோ அல்லது அவர்களின் ஒப்புதலுடன் அண்ணா பல்கலைக்கழகமோ சீராய்ந்து, சிறப்பானவற்றை இதற்காகவே உருவாக்கப்படும் புதியதொரு இணையதளத்தில் வெளியிடலாம். அதன்மூலம் அந்த இணையதளம், உலகளாவிய ஆய்வுக்கட்டுரைகளின் சுரங்கமாக உருவாகிடும் கூடும்.

முதலாண்டில் சுமார் பத்தாயிரம் அறிக்கைகள் தமிழில் வருவதாக வைத்துக்கொண்டால், அடுத்தடுத்த ஆண்டுகளில் இது மேலும் அதிகரிக்கும். முதல் பத்தாயிரத்தில் சுமார் நூறு அறிக்கைகள் வெளியீட்டுக்குரியனவாகத் தேர்வு செய்யப்பட்டாலும் அதுவே பெரிய வெற்றியாகும்.

ஒரு அறிக்கையிலிருந்து சுமார் ஐம்பது ஆங்கிலத் தொழில்நுட்ப வார்த்தைகளுக்குப் புதிய தமிழ் வார்த்தைகள் கிடைப்பதாக வைத்துக்கொண்டாலும், சில ஆண்டுகளுக்குள் சுமார் இரண்டாயிரம் அல்லது மூன்றாயிரம் கலைச்சொற்கள் தரப்படுத்தப்பட்டுவிடும். கல்வி போதனைக்கு அதுவே கணிசமான எண்ணிக்கையாகும். என்றாவது ஒருநாள் அந்த நாளும் வந்திடாதோ? தமிழ் நாட்டிலுள்ள பொறியியல்  கல்லூரிகள் அனைத்திலும் தமிழே பயிற்றுமொழி  என்னும் நிலைமை வருமானால், அப்போது உரிய தரப்படுத்தப்பட்ட கலைச்சொற்களுக்காகப் பரிதவிக்கவேண்டாம்.   எனவே, பொறிவைத்துப் பிடிப்போம் பொறியியல் மாணவர்களை!

இதே வழிமுறையில், மருத்துவம், சட்டம், புள்ளியியல் மற்றும் வழக்கமான அறிவியல்துறைகளான இயற்பியல், வேதியியல், கணிதம் போன்றவற்றையும் கணினித்தமிழ் மூலம் வளர்க்கமுடியும்.

இங்கு சொல்லப்பட்ட வழிமுறைகளுக்குக் கூடுதல் செலவு பிடிக்குமே என்று கருதலாம். விலையில்லா மடிக்கணினிகளை வழங்கியதன் அடுத்த கட்டம்தானே இது! இதை எப்படிச் செலவாகக் கருதலாம்? கல்விக்காகவும் தமிழுக்காகவும் செய்யப்படும் முதலீடு அல்லவா இது?

திரு பழனியப்பனிடம் இதுபற்றி விவரித்தேன். எல்லாரும் கணினி கற்றுக்கொண்டு விட்டால், கணினியில் தமிழும் படிக்க ஆரம்பித்துவிட்டால், பத்திரிகைகளை இணையத்திலேயே படித்துவிடுவார்களே, தான் வேறு தொழிலுக்குப் போகவேண்டியது தானா என்று மெய்யான வருத்தத்தோடு கேட்டார். அவர் கவலை அவருக்கு! 

கட்டுரை எழுதியவர்: (c) இராய செல்லப்பா (Y Chellappa)
email: chellappay@yahoo.com

குறிப்பு: இப்படைப்புவகை-(1) கணினியில் தமிழ் வளர்ச்சி - கட்டுரைப் போட்டி
(கணினியில் தமிழ் மற்றும் அறிவியல் போலும் பிறதுறை வளர்ச்சி குறித்த கட்டுரை)வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காக எழுதப்பட்டது.

வியாழன், செப்டம்பர் 17, 2015

புதுக்கோட்டை என்றால் கொம்பா?

பதிவு 08 / 2015

புதுக்கோட்டை என்றால் கொம்பா?

2013 இல் சென்னையில் நடந்த வலைப்பதிவர் மாநாட்டில்தான் முதல்முதலாகச் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வலைப்பதிவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன்.

எந்த வகைபாட்டுக்கும் அடங்காத ‘கும்பல்’ என்றுதான் சொல்லவேண்டும் – ஏனெனில் அதில்  இளைஞர்கள் இருந்தார்கள், முதியவர்கள் இருந்தார்கள், நடுத்தர வயதினர் இருந்தார்கள், ஆண்கள் இருந்தார்கள், பெண்கள் இருந்தார்கள். அழகானவர்கள் இருந்தார்கள், என்னைப் போன்றவர்களும் இருந்தார்கள். ஆனால் எல்லார் மனத்திலும் ஒரே சிந்தனை ஓடிக்கொண்டிருந்ததைக் கண்டேன் – ‘நாம் அனைவரும் ஒரு புது யுகத்தின் படைப்பாளிகள்’ என்ற சிந்தனையே அது.

தொண்ணூறுகளில் நான் HTML, Java Script, Web Designing  கற்றுக்கொண்டபோது, உடனடியாக என்னை மின்-படைப்பாளியாக வெளிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற வெறி இரவும் பகலும் பிடித்து ஆட்டியது. அப்பொழுது எங்கள் வங்கியின் ஊழியர் பயிற்சி மையத்தின் தலைவனாக நான் இருந்ததால், எனது உரைகளை, காணுரை (Presentation)  மூலமும்,  Offline Website உண்டாக்கி அதன் மூலமும் வழங்கத்தொடங்கியபோது எக்கச்சக்கமான வரவேற்பு இருந்தது. வங்கியின் முக்கிய அலுவல்களை அவ்வாறு மின்-பாடங்களாக்கி அமைத்துக் கொடுத்தேன். அடுத்த ஆண்டிலிருந்து பயிற்சி நிலையத்தின் அனைத்து அலுவல்களும் மின்மயமாக்கபாட நான் காரணமாக இருந்தேன். ஆனால் இவை அனைத்தும் ஆங்கில மொழியிலேயே நடைபெறவேண்டி இருந்தது.

தமிழில் நமது எழுத்தை இணையத்தில் வெளிப்படுத்த மாட்டோமா என்ற தணியாத தாகம் இருந்துகொண்டே இருந்தது. அந்த நாட்களில் ‘வோர்ட்பிரஸ்’ வந்திருக்கவில்லை. யாஹூ ஒன்றுதான் தனது சர்வர் மூலம் சிறு அளவுக்கு – சுமார் ஐந்து பக்கங்கள் எழுதலாம் - என்ற இலவசத்தை அறிமுகப் படுத்தியிருந்தது. ஏராளமான பள்ளிச் சிறுவர்கள் தங்களுக்கென இணையப் பக்கங்களை அதில் ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். அந்தப் பக்கங்களைத் தமிழ் வார இதழ்கள் பிரதி எடுத்துப் பதிப்பித்து தமிழுக்குத் தொண்டு செய்துகொண்டிருந்தனர்.

 நானும் அம்மாதிரி ஒரு இணையப் பக்கம் ஏற்படுத்திக்கொண்டேன்.

அப்போதெல்லாம் NETSCAPE என்ற Browser தான் வழக்கத்தில் இருந்தது. மிகவும் வசதியானதும் கூட; ஆனால் அந்த பிரவுசரைக் காசுகொடுத்து வாங்கவேண்டும். கண்டதையெல்லாம் கபளீகரம் செய்யும் மைக்ரோசாப்ட் நிறுவனம், அந்த NETSCAPE பையும் விழுங்கத் திட்டமிட்டு, தனது INTERNET  EXPLORER என்ற பிரவுசரை இலவசமாக வெளியிட்டது. அதாவது, MS Office வாங்கினால் அதிலேயே EXPLORER ஐயும் இலவச இணைப்பாக அளித்தது. கணினி என்று இருந்தால் அதில்    MS Office இருந்தேயாக வேண்டும் என்பதால், NETSCAPE விரைவில் தனது இன்னுயிர் நீத்தது. ஆனால் அதிலும் பயனீட்டாளர்களுக்கு நன்மையே விளைந்தது. எப்படி என்றால், அப்போதுவரை, இணையப் பக்கங்களை எழுதுபவர்கள், NETSCAPE க்காக என்று சில வேறுபாடுகளையும், EXPLORER க்காக என்று இன்னும் சில வேறுபாடுகளையும் தங்கள் கோட்டெழுத்தில் (software code) கொண்டுவந்தாகவேண்டி இருந்தது. காரணம், யாருடைய கணினியில் எந்த பிரவுசர் இயங்கிக்கொண்டிருக்கும் என்று யாரால் அனுமானிக்க முடியும்? ஆகவே இரண்டுக்கும் ஏற்ப எழுதியாகவேண்டும். இது அனாவசியமான சுமையாக இருந்தது. எனவே NETSCAPE இன் மரணம் நன்றியோடு ஏற்கப்பட்டது.

உலகம் முழுதும் INTERNET EXPLORER தான் பெரும்பாலும் புழங்கும் என்ற நிலை வந்த பிறகுதான் இணையத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல் எட்டப்பட்டது. (அதன்பிறகு FIREFOX என்ற பிரவுசர் வந்தது. இப்போது கூகுள் CHROME அதிக அளவு பயன்பாடுள்ள பிரவுசர் ஆகும்.)

சற்றேறக்குறைய அதே நேரத்தில்தான் GOOGLE தனது தேடல் மென்பொருளை வெளிக்கொண்டுவந்தது. அதுமட்டும் வந்திருக்கவில்லை என்றால், இணையம் சாமான்ய மக்களுக்கான பயன்பாட்டு சாதனமாக ஆகியிருக்க முடியாது.

அதே GOOGLE உலக மக்களுக்கு வழங்கிய அருட்கொடைதான், BLOGSPOT என்னும் இலவசக் கரும்பலகை. இந்தக் கரும்பலகைதான் நம்மையெல்லாம் இன்று ஒன்றாக இணைத்துள்ளது. இதில் நான் எழுத ஆரம்பித்த ஆண்டு 2013. ‘அழகி’ என்ற மென்பொருளைப் பயன்படுத்தித் தமிழில் எழுத ஆரம்பித்தேன். தஞ்சை  மாவட்டம் கண்டமங்கலத்தில் பிறந்து சென்னை மடிப்பாக்கத்தில் வசிக்கும்  விஸ்வநாதன்   என்ற  இளைஞரின் படைப்பு இது.  (www.azhagi.com/author.html) இந்த மென்பொருள் மிகவும் எளிமையானது. வசதியானது. ஆனாலும், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏதேனும் சீரமைப்பு நிரலியை (UPDATE) வெளியிட்டால் போதும், ‘அழகி’ யின் ஏதாவது ஓர் அம்சம் சிதைந்துபோய்விடும். அதைச்  சரி செய்வதற்குள் ‘தாவு தீர்ந்துவிடும்’. (இதன் சரியான பொருள் எனக்குத் தெரியாது. சென்னையிலும், தமிழ்த் திரைப்படங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ‘கடினம்’ என்பதாக இருக்கலாம்.) 2013 இல் நியூஜெர்சியில் இருந்தபோது அடிக்கடி விஸ்வநாதனைத் தொடர்புகொண்டு விளக்கம் பெறுவேன். மதிக்கப்படவேண்டிய இளைஞர், ‘அழகி’ விஸ்வநாதன். அவரும் அழகானவர்தான் – படம் பாருங்கள். 

(இப்போது அழகியின் மூலம் சிக்கலின்றி எழுத முடிகிறது என்று நண்பர்கள் கூறுகிறார்கள்.)

கூகுள் நிறுவனம் தனது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து நடத்திவருவதன் வெளிப்பாடாக நமக்குக் கிடைத்த வசதிதான்,   GOOGLE INPUT LANGUAGE : TAMIL  என்று கூகுள்-இல் தேடினால் தமிழில் எழுதுவதற்கான மென்பொருள் உடனடியாகக் கிடைப்பது. (உலக மொழிகள் பலவற்றிற்கும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம்.)  இதன்மூலம் வலைப்பதிவை எழுதுவது இன்னும் எளிதாகிவிட்டது. அநேகமாக நமது வலைப்பதிவர்கள் இந்த வழியில்தான் எழுதுகிறார்கள் என்று தெரிகிறது. எனவே நமது வலைப்பதிவர் மாநாடு நடைபெறும் சமயத்தில் GOOGLE நிறுவனத்தைத் துவக்கி நடத்தும் லாரி பேஜ் , செர்ஜி ப்ரின்  ஆகிய இருவரையும், இப்போது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சென்னையைச் சேர்ந்த ‘சுந்தர் பிச்சை’ என்கிற சுந்தரராஜனையும்  (என் வீட்டிலிருந்து அவர் வீடு அரை கிலோமீட்டர் தூரம்தான்!) நாம் நன்றியோடு நினைக்க வேண்டியவர்களாகிறோம்.
லார்ரி பேஜ்
செர்ஜி ப்ரின்
இந்த சுந்தரராஜனைத் தெரியாதா உங்களுக்கு?
புதுக்கோட்டை என்றதும் எனக்கு வரும் முதல் நினைவு, என் வீட்டிலிருந்த ‘புவனேஸ்வரி அம்மன் துதிப்பாடல்’ என்ற சிறுநூல்தான். அழகான விருத்தப்பாக்கள். பள்ளிப்பருவத்தில் அந்தப் பாடல்களைப் படித்திருக்கிறேன். இப்போது நினைவில் இல்லை. புதுக்கோட்டை சென்றால் அந்த நூலைக் கண்டுபிடிக்கவேண்டும். ‘ஜட்ஜ் ஸ்வாமிகள் அதிஷ்டானம்’, ‘அஷ்டபுஜ துர்க்கை’ என்ற சொற்றொடர்களும் நினைவுக்கு வருகின்றன. ‘ஞானாலயா நூலகம்’ , சித்தன்னவாசல், குடுமியான்மலை, திருமயம்....இன்னும் எவ்வளவோ! புதுக்கோட்டை மாநாட்டுக்குப் போகும்போது நேரில் காண வேண்டும் என்று எண்ணம். உடன்வரும் நண்பர்(கள்) எப்படி ஒத்துழைப்பார்களோ?



சரி, இப்போது தலைப்புக்கு வருவோம். புதுக்கோட்டை என்றால் கொம்பா? ஆம், கொம்புதான் என்று எனக்குத் தோன்றுகிறது. காரணம் ஒன்றல்ல, பல.

முற்போக்கு எழுத்தாளர்கள் பலர் கொடிகட்டிப் பறக்கும் இடம் புதுக்கோட்டை. எந்த இலக்கிய நிகழ்ச்சி நடந்தாலும் அதை எப்படியாவது அடுத்தநாளே தமிழ் ஏடுகளில் படமாகக் காட்டிவிடும் பத்திரிகையாளர்-தொடர்புமுறை இணக்கமாக உலவும் இடம். குடும்பம் குடும்பமாகத் தமிழாசிரியர்கள் நிறைந்த மாவட்டம். இலக்கிய வளர்ச்சிக்கான புரவலர்கள் நிறைந்த இடமும் புதுக்கோட்டையே. பட்டிமன்றம், சொற்பொழிவு, இலக்கிய நூல்களுக்குப் பரிசளித்தல் – இவையெல்லாம் புதுக்கோட்டையின் இரத்தத்தில் ஊறிய விஷயங்கள் என்று தோன்றுகிறது.

அதிலும், ‘வலைப்பூ எழுதுவது எப்படி’ என்று ஒரு பயிலரங்கத்தை முத்துநிலவன் ஏற்பாடு செய்தால், நானும் வருவேன், நானும் வருவேன் என்று ஓடோடிவந்து புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு உடனடியாகத் தங்களுக்கென்று வலைப்பூ நிறுவிக்கொள்ளும் ஆவலும் தாகமும் மிகுந்த இளைஞர்கள், இளைஞிகள்  நிறைந்த நகரம் அது. (ஐம்பது வயதுவரை இளைஞர்கள் என்று என் அகராதி சொல்லும்.)

அதை விடுங்கள்.

2015 அக்டோபர் 11 ஞாயிற்றுக்கிழமையன்று வலைப்பதிவர் மாநாடு என்று முடிவானதோ இல்லையோ, புதுக்கோட்டை மாநாட்டு செயற்குழு உறுப்பினர் ஒவ்வொருவரும் நம்மை உண்டு இல்லை என்று ஆக்கி வருகிறார்கள். மாநாட்டு அறிவிப்பை உங்கள் தளத்தில் வெளியிட்டீர்களா இல்லையா என்று கனிவான கேள்வி முதல்நாள் வரும். இன்னுமா வெளியிடவில்லை என்று இரண்டுநாள் கழித்து கவலையோடு  கேட்கும். அப்படியும் நடக்கவில்லை என்றால், வேறு இரண்டு மூன்று நண்பர்கள் மூலம் ‘விசாரிப்பு’ நிகழும். (நான் இதோ வெளியிட்டுவிட்டேன்!) வேறு எந்த மாநாட்டிற்காவது இத்தகைய ஈடுபாடு இருந்ததா?

சென்னை மாநாட்டிற்கு இல்லாத இன்னொரு தொழில்நுட்ப வசதி, புதுக்கோட்டை மாநாட்டிற்குக் கிடைத்துள்ளது. அதுதான் WHATSUP. வலைப்பதிவர்களுக்கென்று WHATSUP இல் ஒரு குழுவை அமைத்துவிட்டார்கள், போங்கள். நொடிக்கொருவர் ஏதாவது நுட்பமாக எழுதி நம்மை மயக்கி விடுகிறார்கள். ஒரு நாளில் பத்து முறையாவது குறுஞ்செய்திகள்  வந்து விழுகின்றன. போகிற போக்கைப் பார்த்தால், அடுத்த வருடம், வலைப்பதிவர் மாநாட்டுக்குப் பதில், WHATSUP பதிவர் மாநாட்டைத்தான் நடத்தவேண்டும்போல் இருக்கிறது!

ஈடுசொல்ல முடியாத இந்த உற்சாகத்திற்குக் காரணம், நண்பர் முத்துநிலவனும்  அவரது முயற்சிமிக்க குழுவினருமே.அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள். வாருங்கள், திரளாகச் சென்று மாநாட்டை வெற்றியோடு நடத்திக்காட்டுவோம்!  

மேலும் தகவலுக்கு அணுகுவீர்: bloggersmeet2015@gmail.com


-இராய செல்லப்பா, சென்னை