பதிவு 08 / 2015
புதுக்கோட்டை என்றால் கொம்பா?
புதுக்கோட்டை என்றால் கொம்பா?
2013 இல் சென்னையில் நடந்த வலைப்பதிவர் மாநாட்டில்தான்
முதல்முதலாகச் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வலைப்பதிவர்களை நேரில் சந்திக்கும்
வாய்ப்பைப் பெற்றேன்.
எந்த வகைபாட்டுக்கும் அடங்காத ‘கும்பல்’
என்றுதான் சொல்லவேண்டும் – ஏனெனில் அதில் இளைஞர்கள் இருந்தார்கள், முதியவர்கள்
இருந்தார்கள், நடுத்தர வயதினர் இருந்தார்கள், ஆண்கள் இருந்தார்கள், பெண்கள்
இருந்தார்கள். அழகானவர்கள் இருந்தார்கள், என்னைப் போன்றவர்களும் இருந்தார்கள்.
ஆனால் எல்லார் மனத்திலும் ஒரே சிந்தனை ஓடிக்கொண்டிருந்ததைக் கண்டேன் – ‘நாம்
அனைவரும் ஒரு புது யுகத்தின் படைப்பாளிகள்’ என்ற சிந்தனையே அது.
தொண்ணூறுகளில் நான் HTML, Java Script, Web Designing கற்றுக்கொண்டபோது,
உடனடியாக என்னை மின்-படைப்பாளியாக வெளிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற வெறி இரவும்
பகலும் பிடித்து ஆட்டியது. அப்பொழுது எங்கள் வங்கியின் ஊழியர் பயிற்சி மையத்தின்
தலைவனாக நான் இருந்ததால், எனது உரைகளை, காணுரை (Presentation)
மூலமும், Offline Website உண்டாக்கி அதன் மூலமும் வழங்கத்தொடங்கியபோது எக்கச்சக்கமான
வரவேற்பு இருந்தது. வங்கியின் முக்கிய அலுவல்களை அவ்வாறு மின்-பாடங்களாக்கி
அமைத்துக் கொடுத்தேன். அடுத்த ஆண்டிலிருந்து பயிற்சி நிலையத்தின் அனைத்து
அலுவல்களும் மின்மயமாக்கபாட நான் காரணமாக இருந்தேன். ஆனால் இவை அனைத்தும் ஆங்கில
மொழியிலேயே நடைபெறவேண்டி இருந்தது.
தமிழில் நமது எழுத்தை இணையத்தில் வெளிப்படுத்த
மாட்டோமா என்ற தணியாத தாகம் இருந்துகொண்டே இருந்தது. அந்த நாட்களில் ‘வோர்ட்பிரஸ்’
வந்திருக்கவில்லை. யாஹூ ஒன்றுதான் தனது சர்வர் மூலம் சிறு அளவுக்கு – சுமார் ஐந்து
பக்கங்கள் எழுதலாம் - என்ற இலவசத்தை அறிமுகப் படுத்தியிருந்தது. ஏராளமான பள்ளிச்
சிறுவர்கள் தங்களுக்கென இணையப் பக்கங்களை அதில் ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். அந்தப்
பக்கங்களைத் தமிழ் வார இதழ்கள் பிரதி எடுத்துப் பதிப்பித்து தமிழுக்குத் தொண்டு
செய்துகொண்டிருந்தனர்.
நானும் அம்மாதிரி
ஒரு இணையப் பக்கம் ஏற்படுத்திக்கொண்டேன்.
அப்போதெல்லாம் NETSCAPE என்ற Browser தான்
வழக்கத்தில் இருந்தது. மிகவும் வசதியானதும் கூட; ஆனால் அந்த பிரவுசரைக்
காசுகொடுத்து வாங்கவேண்டும். கண்டதையெல்லாம் கபளீகரம் செய்யும் மைக்ரோசாப்ட்
நிறுவனம், அந்த NETSCAPE பையும் விழுங்கத் திட்டமிட்டு, தனது INTERNET EXPLORER என்ற பிரவுசரை இலவசமாக வெளியிட்டது. அதாவது, MS
Office வாங்கினால் அதிலேயே EXPLORER ஐயும் இலவச இணைப்பாக அளித்தது. கணினி என்று
இருந்தால் அதில் MS Office இருந்தேயாக
வேண்டும் என்பதால், NETSCAPE விரைவில் தனது இன்னுயிர் நீத்தது. ஆனால் அதிலும்
பயனீட்டாளர்களுக்கு நன்மையே விளைந்தது. எப்படி என்றால், அப்போதுவரை, இணையப்
பக்கங்களை எழுதுபவர்கள், NETSCAPE க்காக என்று சில வேறுபாடுகளையும், EXPLORER
க்காக என்று இன்னும் சில வேறுபாடுகளையும் தங்கள் கோட்டெழுத்தில் (software code)
கொண்டுவந்தாகவேண்டி இருந்தது. காரணம், யாருடைய கணினியில் எந்த பிரவுசர்
இயங்கிக்கொண்டிருக்கும் என்று யாரால் அனுமானிக்க முடியும்? ஆகவே இரண்டுக்கும் ஏற்ப
எழுதியாகவேண்டும். இது அனாவசியமான சுமையாக இருந்தது. எனவே NETSCAPE இன் மரணம்
நன்றியோடு ஏற்கப்பட்டது.
உலகம் முழுதும் INTERNET EXPLORER தான்
பெரும்பாலும் புழங்கும் என்ற நிலை வந்த பிறகுதான் இணையத்தின் வளர்ச்சியில் ஒரு
முக்கிய மைல்கல் எட்டப்பட்டது. (அதன்பிறகு FIREFOX என்ற பிரவுசர் வந்தது. இப்போது
கூகுள் CHROME அதிக அளவு பயன்பாடுள்ள பிரவுசர் ஆகும்.)
சற்றேறக்குறைய அதே நேரத்தில்தான் GOOGLE தனது
தேடல் மென்பொருளை வெளிக்கொண்டுவந்தது. அதுமட்டும் வந்திருக்கவில்லை என்றால்,
இணையம் சாமான்ய மக்களுக்கான பயன்பாட்டு சாதனமாக ஆகியிருக்க முடியாது.
அதே GOOGLE உலக மக்களுக்கு வழங்கிய
அருட்கொடைதான், BLOGSPOT என்னும் இலவசக் கரும்பலகை. இந்தக் கரும்பலகைதான்
நம்மையெல்லாம் இன்று ஒன்றாக இணைத்துள்ளது. இதில் நான் எழுத ஆரம்பித்த ஆண்டு 2013. ‘அழகி’ என்ற
மென்பொருளைப் பயன்படுத்தித் தமிழில் எழுத ஆரம்பித்தேன். தஞ்சை மாவட்டம் கண்டமங்கலத்தில் பிறந்து சென்னை
மடிப்பாக்கத்தில் வசிக்கும் விஸ்வநாதன் என்ற இளைஞரின் படைப்பு இது. (www.azhagi.com/author.html) இந்த மென்பொருள் மிகவும் எளிமையானது. வசதியானது. ஆனாலும்,
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏதேனும் சீரமைப்பு நிரலியை (UPDATE) வெளியிட்டால் போதும்,
‘அழகி’ யின் ஏதாவது ஓர் அம்சம் சிதைந்துபோய்விடும். அதைச் சரி செய்வதற்குள் ‘தாவு தீர்ந்துவிடும்’. (இதன்
சரியான பொருள் எனக்குத் தெரியாது. சென்னையிலும், தமிழ்த் திரைப்படங்களிலும்
பயன்படுத்தப்படுகிறது. ‘கடினம்’ என்பதாக இருக்கலாம்.) 2013 இல் நியூஜெர்சியில் இருந்தபோது அடிக்கடி
விஸ்வநாதனைத் தொடர்புகொண்டு விளக்கம் பெறுவேன். மதிக்கப்படவேண்டிய இளைஞர், ‘அழகி’
விஸ்வநாதன். அவரும் அழகானவர்தான் – படம் பாருங்கள்.
(இப்போது அழகியின் மூலம்
சிக்கலின்றி எழுத முடிகிறது என்று நண்பர்கள் கூறுகிறார்கள்.)
கூகுள் நிறுவனம் தனது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து
நடத்திவருவதன் வெளிப்பாடாக நமக்குக் கிடைத்த வசதிதான், GOOGLE
INPUT LANGUAGE : TAMIL என்று கூகுள்-இல் தேடினால் தமிழில் எழுதுவதற்கான மென்பொருள்
உடனடியாகக் கிடைப்பது. (உலக மொழிகள் பலவற்றிற்கும் இந்த மென்பொருளைப்
பயன்படுத்தலாம்.) இதன்மூலம் வலைப்பதிவை
எழுதுவது இன்னும் எளிதாகிவிட்டது. அநேகமாக நமது வலைப்பதிவர்கள் இந்த வழியில்தான்
எழுதுகிறார்கள் என்று தெரிகிறது. எனவே நமது வலைப்பதிவர் மாநாடு நடைபெறும்
சமயத்தில் GOOGLE நிறுவனத்தைத் துவக்கி நடத்தும் லாரி பேஜ் , செர்ஜி ப்ரின் ஆகிய இருவரையும், இப்போது கூகுள் நிறுவனத்தின்
தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சென்னையைச் சேர்ந்த ‘சுந்தர் பிச்சை’ என்கிற
சுந்தரராஜனையும் (என் வீட்டிலிருந்து அவர்
வீடு அரை கிலோமீட்டர் தூரம்தான்!) நாம் நன்றியோடு நினைக்க வேண்டியவர்களாகிறோம்.
லார்ரி பேஜ் |
செர்ஜி ப்ரின் |
இந்த சுந்தரராஜனைத் தெரியாதா உங்களுக்கு? |
புதுக்கோட்டை என்றதும் எனக்கு வரும் முதல்
நினைவு, என் வீட்டிலிருந்த ‘புவனேஸ்வரி அம்மன் துதிப்பாடல்’ என்ற சிறுநூல்தான்.
அழகான விருத்தப்பாக்கள். பள்ளிப்பருவத்தில் அந்தப் பாடல்களைப் படித்திருக்கிறேன்.
இப்போது நினைவில் இல்லை. புதுக்கோட்டை சென்றால் அந்த நூலைக் கண்டுபிடிக்கவேண்டும். ‘ஜட்ஜ் ஸ்வாமிகள் அதிஷ்டானம்’, ‘அஷ்டபுஜ
துர்க்கை’ என்ற சொற்றொடர்களும் நினைவுக்கு வருகின்றன. ‘ஞானாலயா நூலகம்’ ,
சித்தன்னவாசல், குடுமியான்மலை, திருமயம்....இன்னும் எவ்வளவோ! புதுக்கோட்டை
மாநாட்டுக்குப் போகும்போது நேரில் காண வேண்டும் என்று எண்ணம். உடன்வரும் நண்பர்(கள்) எப்படி ஒத்துழைப்பார்களோ?
சரி, இப்போது தலைப்புக்கு வருவோம். புதுக்கோட்டை
என்றால் கொம்பா? ஆம், கொம்புதான் என்று எனக்குத் தோன்றுகிறது.
காரணம் ஒன்றல்ல, பல.
முற்போக்கு எழுத்தாளர்கள் பலர் கொடிகட்டிப்
பறக்கும் இடம் புதுக்கோட்டை. எந்த இலக்கிய நிகழ்ச்சி நடந்தாலும் அதை
எப்படியாவது அடுத்தநாளே தமிழ் ஏடுகளில் படமாகக் காட்டிவிடும்
பத்திரிகையாளர்-தொடர்புமுறை இணக்கமாக உலவும் இடம். குடும்பம் குடும்பமாகத்
தமிழாசிரியர்கள் நிறைந்த மாவட்டம். இலக்கிய வளர்ச்சிக்கான புரவலர்கள்
நிறைந்த இடமும் புதுக்கோட்டையே. பட்டிமன்றம், சொற்பொழிவு, இலக்கிய நூல்களுக்குப்
பரிசளித்தல் – இவையெல்லாம் புதுக்கோட்டையின் இரத்தத்தில் ஊறிய விஷயங்கள் என்று தோன்றுகிறது.
அதிலும், ‘வலைப்பூ எழுதுவது எப்படி’ என்று ஒரு பயிலரங்கத்தை முத்துநிலவன் ஏற்பாடு செய்தால், நானும் வருவேன், நானும் வருவேன்
என்று ஓடோடிவந்து புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு உடனடியாகத்
தங்களுக்கென்று வலைப்பூ நிறுவிக்கொள்ளும் ஆவலும் தாகமும் மிகுந்த இளைஞர்கள், இளைஞிகள் நிறைந்த நகரம் அது. (ஐம்பது வயதுவரை இளைஞர்கள் என்று என் அகராதி சொல்லும்.)
அதை விடுங்கள்.
2015 அக்டோபர் 11 ஞாயிற்றுக்கிழமையன்று வலைப்பதிவர் மாநாடு என்று
முடிவானதோ இல்லையோ, புதுக்கோட்டை மாநாட்டு செயற்குழு உறுப்பினர் ஒவ்வொருவரும் நம்மை உண்டு
இல்லை என்று ஆக்கி வருகிறார்கள். மாநாட்டு அறிவிப்பை உங்கள் தளத்தில்
வெளியிட்டீர்களா இல்லையா என்று கனிவான கேள்வி முதல்நாள் வரும். இன்னுமா
வெளியிடவில்லை என்று இரண்டுநாள் கழித்து கவலையோடு கேட்கும். அப்படியும்
நடக்கவில்லை என்றால், வேறு இரண்டு மூன்று நண்பர்கள் மூலம் ‘விசாரிப்பு’ நிகழும்.
(நான் இதோ வெளியிட்டுவிட்டேன்!) வேறு எந்த மாநாட்டிற்காவது இத்தகைய ஈடுபாடு
இருந்ததா?
சென்னை மாநாட்டிற்கு இல்லாத இன்னொரு தொழில்நுட்ப
வசதி, புதுக்கோட்டை மாநாட்டிற்குக் கிடைத்துள்ளது. அதுதான் WHATSUP.
வலைப்பதிவர்களுக்கென்று WHATSUP இல் ஒரு குழுவை அமைத்துவிட்டார்கள், போங்கள்.
நொடிக்கொருவர் ஏதாவது நுட்பமாக எழுதி நம்மை மயக்கி விடுகிறார்கள். ஒரு நாளில்
பத்து முறையாவது குறுஞ்செய்திகள் வந்து
விழுகின்றன. போகிற போக்கைப் பார்த்தால், அடுத்த வருடம், வலைப்பதிவர் மாநாட்டுக்குப்
பதில், WHATSUP பதிவர் மாநாட்டைத்தான் நடத்தவேண்டும்போல் இருக்கிறது!
ஈடுசொல்ல முடியாத இந்த உற்சாகத்திற்குக் காரணம்,
நண்பர் முத்துநிலவனும் அவரது முயற்சிமிக்க
குழுவினருமே.அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள். வாருங்கள், திரளாகச் சென்று மாநாட்டை வெற்றியோடு
நடத்திக்காட்டுவோம்!
மேலும் தகவலுக்கு அணுகுவீர்: bloggersmeet2015@gmail.com
-இராய செல்லப்பா, சென்னை
புதுகையில் தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா
பதிலளிநீக்குநன்றி
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
நிகழ்வு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ஐயா என்ன செய்வது தங்களைப்போல பல எழுத்தாளர்களை சந்திக்க ஆசைதான் நிச்சயம் அந்த கனவு நிறைவேறும் அதுவரை காத்திருக்கேன்...த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்று தொடங்கி இன்று வரை தமிழ் இணைய வரலாற்றினை சுருங்கச் சொல்லி விளங்க வைத்தமைக்கு நன்றி. புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் சிறப்பினையும் நன்றாகவே சொன்னீர்கள்.
பதிலளிநீக்குபுதுக்கோட்டை என்றால் கொம்புதான் என்பதை மிக அழகாகவும் நாசுக்காகவும் கூறிவிட்டீர்கள். விழாக்குழுவினரின் இடையறா உழைப்பிற்கும், ஆர்வத்திற்கும் ஈடு இணை எதுவுமில்லை. புதுக்கோட்டையில் சந்திப்போம்.
பதிலளிநீக்குஉங்களிடமிருந்து பதிவு கண்டிப்பாக வரும் என்று சொல்லியிருந்தேன்... இதோ அருமையாக...
பதிலளிநீக்குநன்றி... நன்றி ஐயா...
ஐயா இப்பதிவு இணைக்கப்பட்டு விட்டது... நன்றி...
பதிலளிநீக்குhttp://bloggersmeet2015.blogspot.com/p/2015.html
புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
கொம்பு'தேன்'
பதிலளிநீக்குஅழகான பதிவு சார்! புதுக்கோட்டை பற்றி....
பதிலளிநீக்குஅப்போ நாங்களும் இளைஞர்/இளைஞிதான் உங்கள் அகராதிப்படி...இல்லை என்றாலும் நாங்கள் இளைஞர்களே...
அழகி மிகவும் உபயோகமாகத்தான் இருக்கின்றது. இதில் அடிக்கும் போது அந்த மெய்யெழுத்துப் பிரச்சனை வருவதில்லை. வேர்ட் டாக்குமெண்டில்மட்டும்தான் வருகின்றது....
பதிலளிநீக்குபதிவுலக வரலாறு சுவாரஸ்யம்.
பதிலளிநீக்கு//(ஐம்பது வயதுவரை இளைஞர்கள் என்று என் அகராதி சொல்லும்.)//
ஸ்டாலினைக் கேளுங்கள். 60 தாண்டினாலும் இளைஞர்தான்!