திங்கள், டிசம்பர் 09, 2024

அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி - 2024- முடிவுகள் அறிவிப்பு  

இனிய நண்பர்களே! இரண்டு மாதங்கள் முன்பு என் தாயார் அமரர் ஸ்வர்ணாம்பாள் நினைவாகச்  சிறுகதைப் போட்டி அறிவித்திருந்தேன். (முடிவுத் தேதி 30-11-2024).

வாட்ஸ்ஆப், முகநூல், மின்னஞ்சல் மூலமாக மட்டுமே விளம்பரப்படுத்தப்பட்ட இந்தச்  சிறுகதைப்  போட்டி உலகளாவிய கவனத்தைப் பெற்று, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களே அல்லாது, அமெரிக்கா ஆஸ்திரேலியா இலங்கை கனடா அபுதாபி போன்ற நாடுகளில் இருந்தும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இளம் எழுத்தாளர்கள் மட்டுமின்றி, பெரிய பத்திரிக்கைகளில் எழுதி அங்கீகரிக்கப்பட்ட மூத்த எழுத்தாளர்களும் இந்தப் போட்டிக்கு மனம் உவந்து எழுதி எங்களைக் கௌரவித்திருப்பது நெகிழ்ச்சி அளிக்கிறது.

போட்டி நடைபெறும் தகவலைப் பல்வேறு இலக்கியக் குழுக்களும் தங்களுடைய உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் முழுமனதோடு பகிர்ந்து கொண்டிருந்தால் மட்டுமே இத்தகைய வெற்றி சாத்தியமாகும். அவர்களுக்கு எங்கள் நன்றி உரித்தாகுக. இந்தப்  போட்டிக்கு மொத்தம் 355 கதைகள் வந்து சேர்ந்ததை பெருமகிழ்ச்சியோடு அறிவிக்கின்றேன்.

அதேசமயம் போட்டியின் அமைப்பாளர் என்ற வகையில் எனக்கு மிகப் பெரியதொரு வருத்தம் ஏற்பட்டது.  அது என்னவென்றால், இந்த 355 கதைகளில் வெறும் 10 கதைகள் மட்டுமே பரிசுக்கு உரியனவாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; வேறு வார்த்தைகளில் சொல்வதானால் 300 க்கும் மேற்பட்ட கதைகள் தேர்ந்தெடுக்கப்படாமல் விடுபட வேண்டும். பரிசு பெறப்போகும் 10 பேரின் நன்மதிப்பை நாங்கள் பெறும் அதேசமயத்தில், மிகுந்த எதிர்பார்ப்புடன் எழுதி ஆவலோடு முடிவுக்குக் காத்திருக்கும் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஏமாற்றம் அளிக்க வேண்டிய துரதிஷ்டமான நிலை எங்களுக்கு ஏற்பட்டது.  

இந்த வருத்தத்தை ஓரளவு சரிக்கட்டுவதற்காக அறக்கட்டளையின் உறுப்பினர்களும் நடுவர்களும் தமக்குள் ஆலோசித்து, மேலும் 25 பேருக்கு “பாராட்டுக்குரிய கதைகள்”  என்ற அங்கீகாரத்தை வழங்கிடலாம் என்று  முடிவு செய்தார்கள் என்பதைத்  தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 25 பேருக்கும் சன்மானமாக, தலா ரூபாய் 1001 வழங்கப்படும் என்பதையும் நீங்கள் மகிழ்ச்சியோடு வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஏற்கெனவே அறிவித்தபடி இந்தக் கதைகள் அனைத்தும் தொகுப்பாக வெளியாகும். ரூ.5000 பரிசு பெறும் பத்துக் கதைகள் ஒரு நூலாகவும், மற்ற 25 கதைகளும் இன்னொரு நூலாகவும் வெளியிடலாம் என்று தற்காலிகமாக யோசிக்கிறோம். சென்னையில் எதிர்வரும் புத்தகக் கண்காட்சி காரணமாக நூல்களின் தயாரிப்பு சற்று தாமதமாகலாம் என்று தெரிகிறது. விரைவில் உரிய அறிவிப்பு வெளியாகும்.

மிகச் சிறந்த விழா நிகழ்வு ஒன்றில் பரிசுகள் வழங்கப்படும்.

பரிசு பெறாத நண்பர்கள்  எங்களைப் புரிந்துகொண்டு ஆதரிக்க வேண்டுகிறோம்.

இனி முதல் பட்டியலாக, ரூ.5000 பெறும் பத்துக் கதைகளின் விவரங்களைக் கீழே காணலாம்:

(கதைகள் எங்களுக்கு வந்துசேர்ந்த தேதியின் அடிப்படையிலான வரிசை இது. மற்றப்படி, எல்லாக் கதைகளுமே ஒரே தரத்தை உடையவை ஆகும்.)

எண்

கதையின் தலைப்பு

ஆசிரியர்/ஊர் /மின் அஞ்சல்

1

இன்றே இப்படம் கடைசி

அறிவுச்செல்வன், மணப்பாறை arivuchelvan62@gmail.com 

2

சந்தித்த வேளை

முத்துசெல்வன், முசிறி muthsan20@gmail.com

3

மகாராணி அவனை ஆளலாம்

ஜீவி (ஜீ. வெங்கடராமன்), சென்னை jeeveeji@gmail.com

4

தங்கரதம்

ஹரணி (டாக்டர் அன்பழகன்), தஞ்சாவூர்  uthraperumal@gmail.com

5

சந்திரா

என். சிவநேசன், ஆரியப்பாளையம், சேலம் (மா).   nsivanesan1988@gmail.com

6

பின்னணி நட்சத்திரம்

பத்மினி பட்டாபிராமன், சென்னை patturamini@gmail.com

7

முதல் மருத்துவர்

டாக்டர் ஜே பாஸ்கரன், சென்னை bhaskaran_jayaraman@yahoo.com

8

ஊடாடும் பெருநிழல்

யதார்த்தா பென்னேஸ்வரன், கிருஷ்ணகிரி  kpenneswaran@gmail.com

9

வேண்டுதல்

மீ. மணிகண்டன், டெக்சாஸ், அமெரிக்கா  nam.manikandan@gmail.com

10

முடிவு

கிரிஜா ராகவன், சென்னை girijaraghavanls@gmail.com

கீழுள்ள பட்டியலில் ரூ. 1001 பரிசு பெறும் 25  “பாராட்டுக்குரிய" சிறுகதைகளின் விவரங்கள் தரப்பட்டுள்ளன..

எண்

கதையின் தலைப்பு

ஆசிரியர்/ஊர் /மின் அஞ்சல்

1

சிங்கிள் பேரண்ட்

சாரதா ஸ்ரீநிவாசன், சென்னை sandhiv007@yahoo.com

2

விடுதலையின் தூரம்

சு ரகுநாத், மதுரை paaduvaasi@gmail.com

3

மஞ்சக் கலருல ஒருபுடவ 

கமலா முரளி, சென்னை kamalamurali63@gmail.com

4

காட்சிப் பிழை

கல்பனா சந்யாசி, சென்னை     kalpana.sanyasi@gmail.com

5

நீதிக்குத் தண்டனை

என். நித்யா, திருப்பூர்  nithyanagaraj2020@gmail.com

6

நாடகம்

அகிலன் கண்ணன், சென்னை akilankannanpersonal@gmail.com

7

நீங்காது பூமாது

லதா சுப்ரமணியம், சென்னை subramaniamlatha@gmail.com

8

மாலி

எஸ். ராமசுப்ரமணியன், சென்னை essorres@gmail.com

9

வளையோசை

ரேவதி பாலு, சென்னை  revathy2401@yahoo.com

10

அறம் செய்ய விரும்பு

சாந்தி சந்திரசேகரன், திருவாரூர் santhichandrashekaran@gmail.com 


11

சலூன்

ச சுரேஷ், கலிபோர்னியா shompens@gmail.com

12

வழித்துணை

இந்திரா நீலன் சுரேஷ், சென்னை sureshkrenganathan@gmail.com

13

சுரண்டல்கள்

நா.பா. மீரா, சென்னை  parthasarathy.meera@gmail.com

14

காலம் என்ற நீட்சியுடன்

கே. எஸ். சுதாகர், ஆஸ்திரேலியா kssutha@hotmail.com

15

தையலின் தடம்

முகிலன் அப்பர், சென்னை paaventharrasigan@gmail.com

16

கரையேற்றம்

வசந்தா கோவிந்தராஜன், சென்னை vasanthagovindarajan4@gmail.com

17

கீரோபதேசம்

உஷாதீபன், சென்னை ushadeepan@gmail.com

18

கிருஷ்ணன் என்னும் சாரதி

எச் என் ஹரிஹரன், சென்னை hariharan.hnh@gmail.com

19

சகரியதா

எஸ் எல் நாணு, சென்னை slnaanu@gmail.com

20

மார்ட்டின் வாத்தியார்

பி. ஸ்ரீராம் சென்னைsri.esi89@gmail.com


21

குள்ளம்

அழகியசிங்கர், சென்னை azhagiyasingar.virutcham@gmail.com

22

மூன்றாம் தளம், 301 ஆம் வீடு

எம் சங்கர், சென்னை emyes_04@yahoo.co.in

23

ரேணுப்பாட்டியும் பாக்குவெட்டியும்

புலியூர் அனந்து, சென்னை  puliyoor_ananth@yahoo.com

24

இரப்பன்

பரிவை சே குமார், அபுதாபி  kumar006@gmail.com

25

ஒரு பிரியமான கதை

ஸ்ரீமதி ரவி, சென்னை srisriravichandran@gmail.com

அன்புடன்,

இராய செல்லப்பா, சென்னை.  

 

வியாழன், அக்டோபர் 03, 2024

அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி -2024

அன்பு நண்பர்களே, 

சில மாதங்கள் முன்பு, என் தாயார்  ஸ்வர்ணாம்பாள் யக்யஸ்வாமி அவர்கள் நினைவாக இலக்கிய விருதுகள் ஏற்பாடு செய்யவிருப்பதாகச் சென்னையில் ஒரு நிகழ்வில்  அறிவித்திருந்தேன்.  ஆனால்  உடனே நான் அமெரிக்கா செல்லவேண்டி நேர்ந்ததால்  மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. இப்போது அத்திட்டம் உருவம் பெற்று விட்டது. 

படிபடியாகப் பல்வேறு இலக்கிய வடிவங்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.  முதல் முயற்சியாக, 2024 ஆம் ஆண்டிற்கான  தமிழ்ச்  சிறுகதைப் போட்டி நடத்த வேண்டும் என்று முடிவாகியுள்ளது. 

இந்த ஆண்டிற்கான மொத்தப் பரிசுத்தொகை ரூ.50,000 (ஐம்பதாயிரம்) ஆகும்.  இது, ஒரு சிறுகதைக்கு ரூ.5000 வீதம் 10 கதைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். 

என் அன்புத் தாயார் 14-9-1993 அன்று  சென்னையில் ஒருவாரம் உடல்நலம் குன்றியபின்  இயற்கை மரணம் எய்தினார். அவருடைய ஆசியுடன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். 

********************************************************************* 

**********************************************************************


அதிகப்படியான விவரங்கள் பின்வருமாறு:

1. ஒருவர் அதிகபட்சமாக இரண்டு சிறுகதைகள் அனுப்பலாம். மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பவேண்டும். கடைசித் தேதி: 30-11-2024.  

2. கூடுமானவரையில் ஒற்றுப்பிழைகளின்றி இருக்குமாறு சரிபார்த்து அனுப்பவும்.  

3. கருத்தில் புதுமை இருப்பது அனைவருக்கும் பிடிக்கும்தானே!  யார் மனதையும் புண்படுத்தாதவண்ணம் இருப்பதும் அவசியம் அல்லவா? 

4. வட்டார வழக்குச் சொற்களும், ஆங்கிலச் சொற்களும் அதிகம் கலவாத மொழிநடையையே உலகளாவிய தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

5. உலகின் எந்தப் பகுதியிலிருப்பவர்களும் கலந்துகொள்ளலாம். தமிழ்நாட்டிலிருந்து இடம் பெயர்ந்தவர்களும், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப்  புலம்பெயர்ந்தவர்களும் கலந்துகொள்ளுமாறு  அன்போடு வேண்டுகிறோம். அந்தந்தப் பகுதிகளின் சமுதாயப் பின்னணியைக் களமாகக் கொண்ட எழுத்துக்கள்  தமிழ்நாட்டில் பெரிதும் விரும்பப்படுகின்றன. 

6. வயதோ, பாலினமோ  தடையில்லை.  கல்லூரி மாணவர்கள் அதிகம் கலந்து கொள்ள வேண்டுகிறோம். மூத்த எழுத்தாளர்களும், ஏற்கெனவே பிற பரிசுகளை வென்றவர்களும் கலந்துகொண்டு எம்மைக் கௌரவப்படுத்துமாறு எதிர்பார்க்கிறோம். 

7. சிறந்த நடுவர்களைக் கொண்டு கதைத்தேர்வு நடைபெறும்.  

8. பரிசுக்குத் தேர்வுபெற்றவர்களுடன் நேரடியாகவோ, ஜூம் வழியாகவோ, மூத்த எழுத்தாளர்களைக் கொண்டு பேட்டி  நடத்தப்பட்டு, அதன் கட்டுரையாக்கமும்  அவர்களின் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறும். 

9. சிறுகதைத் தொகுப்பின் பத்துப் பிரதிகள் பரிசு பெற்றவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்படும். 

9. சிறந்த முறையில் பரிசு வழங்கும் விழா சென்னையில் நடைபெறும். சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற மூத்த எழுத்தாளர்களைக் கொண்டு பரிசுகள் வழங்கப்படும்.    

10. ஏதேனும் ஐயம் இருப்பின், award.swarnatrust@gmail.com  என்ற மின்னஞ்சலுக்கு எழுதவும். 

வலைப்பதிவு நண்பர்கள், இந்த அறிவிப்பைத் தங்கள் தளங்களில் பகிர்ந்துகொண்டு தங்கள் வாசகர்களிடம் கொண்டுசெல்ல வேண்டுகிறோம். 

(இது முழுக்க முழுக்க எனது சொந்த வருமானத்திலிருந்து நடத்தப்படுவதாகும். யாரிடமிருந்தும் நன்கொடை பெறுவதில்லை.) 

-  இராய செல்லப்பா நியூஜெர்சி

ஞாயிறு, பிப்ரவரி 04, 2024

வண்ணம் கொண்ட வெண்ணிலவு- 5 (கடைசிப் பகுதி)

வண்ணம் கொண்ட வெண்ணிலவு- 5

 (குறுநாவலின் கடைசிப் பகுதி)

 -இராய செல்லப்பா 


இதன் முந்தைய பகுதி   -"  வண்ணம் கொண்ட வெண்ணிலவு - 4  " படிக்க இங்கே சொடுக்கவும்


(12)

பதினோரு மணிக்குப்  பொன் ஃபைனான்ஸின் கிளைமேலாளர்கள் வந்தபோது  தன் சூத்திரத்தை அவர்களுடன் பகிர்ந்துகொண்டாள் பொன்னி.

 தன்னோடு வங்கியிலிருந்து விருப்ப ய்வுபெற்று  சென்னையில் வசிக்கும் சுமார் இருநூறு பேரை முறையாகச் சந்திக்கவேண்டும்.  ஓய்வுப்பலனாக ஒவ்வொருவரும் குறைந்தது முப்பதிலிருந்து ஐம்பது லட்சம் வரை பெற்றவர்கள். ஆக மொத்தம்  60 கோடி முதல் 100 கோடி வரை அவர்களிடம் இருக்கும்.  பெரும்பாலும் அவை, மற்ற வங்கிகளில் குறைந்த வட்டிக்கு பிக்சட் டெபாசிட்டுகளாக இருக்கலாம். அதில் நாலில்  ஒருபங்கை பொன் ஃபைனான்சுக்குத் திருப்பினாலே  15 முதல் 25  கோடி சேர்ந்துவிடும். இதுதான் பொன்னியின் திட்டம். 

அடுத்த முப்பது நாட்களுக்குள் ஒவ்வொரு கிளைமேலாளரும் இவர்களிடமிருந்து மட்டும் குறைந்தது ஐந்து கோடியாவது டெபாசிட் திரட்டவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்தாள். இவர்களின் டெபாசிட்டுக்கு அரை சதவீதம் கூடுதல்  வட்டியும்,  ஒருவேலை அவர்களுக்கு நகைக்கடன் தேவைப்படுமானால் வட்டியில்  அரை சதவீதம் தள்ளுபடியும் கொடுப்பதாக, அதிகம் விளம்பரப்படுத்தாமல் தெரிவிக்கச் சொன்னாள். கிளைமேலாளர்களின் செயல்பாட்டுக்கு ஏற்ப புதிய போனஸ் திட்டத்தையும் அறிவித்தாள்.

இதற்கு நல்ல பலன் கிடைத்தது. ஒரே மாதத்தில் நாற்பது கோடி ரூபாய்போல புதிய முதலீடு கிடைத்துவிட்டது! திட்டமிட்டபடி ‘ஐயா’ வின் பணம் இப்போது அவருக்குக் கொடுக்கப்படப் போகிறது. ஆனால் அதற்குள்?

 (12)

 மலர்வண்ணன் தன் ஆபீசுக்கு வருவாரென்று வாசு கனவிலும் நினைத்ததில்லை.

 “ரொம்ப அவசரம். ‘ஐயா’ வோட பணத்தைத் திரும்பக்  கொடுத்துவிட்டீர்களா?”  என்றார் மலர்.

 “இன்னும் இல்லை, என்ன விஷயம்?” என்றான் வாசு திகைப்புடன்.

“கொடுத்துவிடாதீர்கள். அவர் எதிர்க்கட்சி வேட்பாளராக நிற்கப்போகிறார். அதனால் அவருக்கு உதவிசெய்தால் நீங்கள் ஆளும்கட்சிக்கு எதிரியாகி விடுவீர்கள்.”

வாசு சிரித்தான். “இது என்ன தனிப்பட்ட கொடுக்கல் வாங்கலா மலர்வண்ணன்? அவருடைய டெபாசிட்டை அவர் திருப்பிக் கேட்கிறார். நாங்கள் ஒரு நிதி நிறுவனம். கொடுக்காமல் இருக்க முடியுமா?”

“எனக்குத் தெரியாது மிஸ்டர் வாசு! உங்களை விடப்  பெரிய ஃபைனான்ஸ் கம்பெனிகள் எல்லாம் கொடுக்க மறுத்துவிட்டார்களே, அது எப்படி?”

பொன்னி தனது அலைபேசியில் வந்த குறுஞ்செய்தியை அவரிடம் காட்டினாள். “அவர் பணம் அவருடைய வங்கிக்கு ட்ரான்ஸ்பர் ஆகிவிட்டது. இனிமேல் நாங்கள் எதுவும் செய்ய இயலாது. மன்னிக்கவும்” என்று கூறிவிட்டுத்   தன் இருக்கைக்குச் சென்றுவிட்டாள்.

"காபி குடிக்கிறீர்களா மலர்வண்ணன்? இங்கு உங்கள் தோட்டத்து டீ கிடைப்பதில்லை” என்று சிரித்தான் வாசு. கறுப்புப்பணத்தைக் கையாளும் பினாமிக்கு எவ்வளவு துரோக புத்தி!

ஆவேசத்துடன் எழுந்த மலர்வண்ணன், “உங்கள் கம்பெனியை உண்டு இல்லை என்று ஆக்குகிறேனா இல்லையா பாருங்கள்” என்று சபதம் செய்துவிட்டு வெளியேறினார்.

வாசுவும் பொன்னியும் உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்தார்கள். தங்கள் கம்பெனியில் எந்த விதமான குளறுபடிகளும் கிடையாது. நகைக் கடன்களிலும் எந்தக் குறைபாடும் கிடையாது என்று தணிக்கை அறிக்கையும் உள்ளது. டெபாசிட்டர்களுக்கு உரிய தேதியில் பணத்தைத் திருப்பித் தராமல் இருந்தது கிடையாது. லாப நஷ்டக் கணக்கிலும் ஒரு ரூபாய் கூட பொய்க்கணக்கு எழுதியது கிடையாது.

 “ஆனாலும் நாம் இப்போது பயப்படத்தான் வேண்டும்” என்றாள் பொன்னி. “நாம் இருவரும் சாதாரணக் குடும்பங்களில் இருந்து கிளம்பி வந்து, இந்தக் கம்பெனியை உருவாக்கி நல்ல பெயரோடு வளர்த்திருக்கிறோம். இவர்கள் நினைத்தால் இன்றைய சமூக ஊடகங்கள் வழியாக நமக்கு எத்தனையோ வழிகளில் கெட்ட  பெயரை உண்டாக்க முடியும். அதனால் …”

“அதனால் இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். அதற்கு என்னுடைய பழைய வங்கியின் சேர்மனை உடனே சந்திக்கவேண்டும்.  அவரிடம்  பேச வேண்டிய விஷயத்தைப் பற்றி ஒரு ரிப்போர்ட் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். அதற்குள் நீங்கள் அவரிடம் அப்பாயிண்மெண்ட்  ஏற்பாடு செய்துவிடுங்கள்” என்றாள் பொன்னி. 

பிறகு தன் மயிலாப்பூர் கிளை மேலாளர் தமிழ்ச்செல்வியை அழைத்து “உடனே கிளம்பு. அந்த எடிட்டரிடம் பேசு. நம்மைப்பற்றித் தவறான தகவல் வராமல் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்” என்று அவளிடம் ஒரு முக்கியமான பணியை ஒப்படைத்தாள். 

(13)

 பிரபல பொருளாதார நாளேட்டின் விருது பொன் ஃபைனான்சுக்குக் கிடைத்தபோது முதலில் வந்த வாழ்த்துச்செய்தியே பொன்னியின் பழைய வங்கியின் சேர்மனிடம் இருந்துதான். “இன்னும் சில வாரங்களில் உங்களைச்  சந்திக்க விரும்புகிறேன்” என்றும் சொன்னார். அந்தச் சந்திப்புதான் இன்று  நிகழப்போகிறது.

“வாங்க வாங்க மிஸ் பொன்னி! மிஸ்டர் வாசு!” என்று எழுந்து நின்று வரவேற்றார் பிரதீப்குமார். சேர்மன்.  “எங்கள் வங்கியின் முன்னாள் ஊழியர் இவ்வளவு வெற்றிகரமான நிறுவனத்தைத் தொடங்கி நடத்துவது எங்களுக்கு மிகுந்த பெருமை யளிக்கிறது” என்று பாராட்டினார்.

 “ஒரு காலத்தில் நகைக்கடன் கொடுக்கும் வங்கிகள் என்றாலே ரிசர்வ் பேங்க்கில் மரியாதை கொடுக்க மாட்டார்கள். இப்போது அதையே  வீட்டுக்கடன், வாகனக்கடன் மாதிரி ஒரு முக்கியமான கடன் துறையாக அங்கீகரித்துவிட்டார்கள். அதற்கான காரணங்களில் உங்கள் அணுகுமுறையும் ஒன்று” என்றார் அவர்.

 பொன்னியும் வாசுவும் ஒரு புன்சிரிப்பின் மூலம் அவரின் பாராட்டை ஏற்றுக்கொண்டார்கள். பிறகு பொன்னி தன் கையிலிருந்த ஃபைலை சேர்மனிடம் கொடுத்தாள். அரசியல்வாதியின் பினாமி ஒருவர் தங்களைப் பற்றி அவதூறு கிளப்ப முற்படுவதை அதில் சுட்டிக்காட்டி இருந்தாள்.

 சேர்மன் அதை படித்துவிட்டு கலகலவென்று சிரித்தார்.  “நாங்கள் மகாராஷ்டிராவில் பார்க்காத அரசியல் தலையீடா!  நமக்குள்ள கடமைகளை நேர்மையாக நிறைவேற்றினால் எந்த அவதூறுக்கும் அஞ்சவேண்டியதில்லை. எதற்கும் உங்களுக்கு விருது கொடுத்த பத்திரிகையின் காதில் இந்த விஷயத்தைச் சொல்லிவைப்பது நல்லது” என்றார்.

“எங்கள் சார்பாக தமிழ்ச்செல்வி அந்த எடிட்டரிடம் இப்போது அதைத்தான்  பேசிக்கொண்டிருப்பாள்” என்றாள் பொன்னி.

 “சரி, இப்போது இந்தக் கடிதத்தைப் படியுங்கள். இது சுவாரஸ்யமானது” என்று அவளிடம்  ஒரு கடிதத்தை நீட்டினார் சேர்மன். அதைப் படித்த பொன்னியும் வாசுவும் ஆச்சரியத்தினால் வாயடைத்துப் போனார்கள்.

 “பொன்னி ஃபைனான்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளைக் கண்டு உற்சாகமடைகிறோம். நாங்களே நகைக்கடன் வழங்கும் துணை நிறுவனம் ஒன்றைத் தொடங்குவதற்காக இருந்தோம். ஆனால் அதற்குப் பதிலாக, உங்கள் நிறுவனத்தில் முதல் தவணையாக 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய விரும்புகிறோம். இது உங்களுக்கு ஏற்புடையதென்றால் எங்கள்  எக்சிகியூடிவ் டைரக்டரைத் தொடர்புகொள்ளுங்கள்” என்றது அக்கடிதம்.

 பொன்னி உற்சாக மிகுதியால் எழுந்து நின்றாள். “உங்கள் ஆஃபரை  ‘இன்-ப்ரின்சிபிள்’ ஆக இப்போதே ஒப்புக்கொள்கிறோம். அதிகாரபூர்வ பதிலை  நாளை அனுப்புகிறோம்” என்றாள் வாசுவைப் பார்த்துக்கொண்டே.

 (14)

 மறுநாள் இந்தியாவின் எல்லாப் பொருளாதார நாளேடுகளிலும்  பொன்னி-வாசுவின் புகைப்படங்கள் முதல் பக்கத்தில் வெளிவந்தன. “இந்தியாவின் பிரபல தனியார் வங்கி, பொன்னி ஃபைனான்சில் 500 கோடி முதலீடு” என்ற தலைப்பில் மேற்படி வங்கியின் முன்னாள் ஊழியரான பொன்னி, எவ்வாறு விருப்ப ஒய்வு பெற்றபின் ஒரு தங்கநகைக் கடன் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்துகிறார் என்று மூன்று பத்திகளில் செய்தி வெளியிட்டன. 

 இவர்களுக்கு விருது கொடுத்த நாளேடு மட்டும், ‘அரசியல் தலையீடு இல்லாதவரை இம்மாதிரி புதிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் நன்றாக வளரமுடியும்’ என்று பொடிவைத்து எழுதியது.

அடுத்த சில வாரங்களில் அந்த வங்கி வேகமாகச் செயல்பட்டது. தாங்கள் செய்யப்போகும் 500 கோடி முதலீட்டுக்கு இரண்டு நிபந்தனைகளை விதித்தது.

முதல் நிபந்தனை, வாசுவிடமிருந்து பொன்னி, அந்த நிறுவனத்தின் சேர்மன் & மேனேஜிங் டைரக்டராகப் பொறுப்பேற்கவேண்டும். இரண்டாவது நிபந்தனை, வாசு, ராஜினாமா செய்துவிட்டு, மும்பையில் அந்த வங்கியின் தலைமை அலுவலகத்தில் சேர்ந்து, வட இந்தியாவை இலக்காக வைத்து, தங்கநகைக் கடன் நிறுவனம் ஒன்றைப் புதிதாகத் தொடங்கி அதன் சேர்மனாக இருக்கவேண்டும்.

 இரண்டாவது நிபந்தனை சாந்திக்கு மிகவும் பிடித்துவிட்டது. சரண்யாவையும் பாலுவையும் அழைத்துக்கொண்டு மும்பைக்குச் செல்வதென்று அவள் மனதளவில் தயாராகிவிட்டாள். 

“நல்ல பள்ளிக்கூடமாகப் பாருங்கள். வீடும் பக்கத்திலேயே இருந்தால் நல்லது” என்று நாணத்தோடு புன்னகைத்தாள் சாந்தி.

“வேறு வழி?” என்று அவளுடைய வலதுகரத்தைப் பற்றினான் வாசு.

“என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்றாள் பொன்னி, கண்களில் ஆனந்தக்கண்ணீர் மின்ன.

அப்போது அவளுடைய அலைபேசி ஒலித்தது. ‘ஐயா’வின் குரல்!

“வணக்கம் சார்! நானே உங்களைப் பார்க்கவேண்டும் என்று இருந்தேன். உங்கள் பணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டோம். எப்போது வேண்டுமானாலும் வந்து பெற்றுக்கொள்ளலாம்” என்று மலர்ச்சியோடு சொன்னாள் பொன்னி. “அல்லது மலர்வண்ணனை அனுப்பிவைக்கிறீர்களா?”

“அந்த துரோகியின் பெயரைச் சொல்லாதீர்கள்! நானே வருகிறேன்” என்று போனை வைத்தார் ‘ஐயா.’

வாசுவைப்பார்த்து நிம்மதியாகச் சிரித்தாள் பொன்னி.

 **** முற்றும் ****