வெள்ளி, செப்டம்பர் 16, 2022

சாண்டில்யனும் ராஜபுதனத்து வாளும் -

சாண்டில்யனும் ராஜபுதனத்து வாளும்

-          - இராய செல்லப்பா

1910 நவம்பர் 6 ஆம் தேதி பிறந்தவர் எழுத்தாளர் சாண்டில்யன். 1987இல் மறைந்தவர். மகாகவி பாரதியாரைப் போலவே இவரது நினவு நாளும்  செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி தான்! 

சாண்டில்யனோடு எனக்கிருந்த நட்புறவு பற்றிய கட்டுரை இது. 


இப்போது சிட்டி யூனியன் வங்கி என்கிறார்கள் (CUB). நான் பணியில் சேர்ந்த 1974 மே மாதம் 19 ஆம் தேதி அதற்குக் கும்பகோணம் சிட்டி  யூனியன் வங்கி என்று பெயர் (KCUB).

சென்னை தி.நகரில், சிவா விஷ்ணு கோயிலின் எதிர்ப்புறமுள்ள  மகாலட்சுமி தெருவில், 5 ஆம் எண் முகவரியில் இயங்கிவந்த அவ்வங்கியின் தி.நகர் கிளையில் புரொபேஷனரி ஆபீசராக நான் சேர்ந்தேன் (1974 மே மாதம்). சுமார் ஒன்றரை ஆண்டுகள் அங்கே இருந்தேன். (பின்னர் கடலூரில் புதிய கிளை திறக்க அனுப்பிவிட்டார்கள்).

காலை எட்டு மணிக்கே தொடங்கிவிடும் வங்கி அது.

காலையில் வரும் முதல் வாடிக்கையாளர்களில் பலர் அன்று பெரும்புள்ளிகள். இன்றும் அவர்களின் மூன்றாம் தலைமுறையினர் பெரும்புள்ளிகளாகவே உள்ளனர். நினைவுக்கு வரும் ஒரு சில பெயர்கள்: மகாராஜபுரம் சந்தானம், கிருஷ்ணகான சபா யக்ஞராமன், கீதா ஹோட்டல் (மற்றும் பின்னாளில் ஹோட்டல் காஞ்சி) உரிமையாளர்களான ஜெயராமய்யர்- கணேசன் சகோதரர்கள், நகை வணிகர்களான நாதெள்ள குடும்பத்தினர். இவர்களுடன் மிகப்பெரும் புகழுடன் விளங்கிய சரித்திர நாவலாசிரியர் சாண்டில்யனையும் சேர்த்துக்கொள்ளலாம்.

“கண்ணன் ஒரு கைக்குழந்தை” என்று பத்ரகாளியில் பாடிய இளம் நடிகை ராணி சந்திராவை என்னால் மறக்கமுடியாது. தன் தாயாருடன் அடிக்கடி வந்து ஏதேனும் ஒரு கேரளத்து கிராம வங்கியின் மீது வரையப்பட்ட காசோலையை – பெரும்பாலும் ரூ.25,000 என்றே இருக்கும் – செலான் எழுதி கலெக்ஷனுக்குப் போடுவார். அவரை அறிமுகப்படுத்தியவர் சாண்டில்யன் என்றுதான் ஞாபகம். பாவம், அந்த இளம்பெண் ஒரு விமான விபத்தில் அகால மரணம் அடைந்துவிட்டார்.  

காதல் கவிதைகளில் பைரனும் கண்ணதாசனும் போல, அக்காலத்தில் சரித்திரக் கதைகளில் வீரமும் சிருங்காரமும் கலந்து கொடிகட்டிப் பறந்தவர் சாண்டில்யன். அவரை, தலை நரைத்த முதியவராக- பாஷ்யம் அய்யங்காராக- வங்கியில் பார்த்தபொழுது என்னால் நம்பவே முடியவில்லை. அதற்காக அவரை ஒரு நா.பா. போல நீண்ட கூந்தலராகவோ, கோவி. மணிசேகரனைப் போல நீண்ட மீசையராகவோ நான் கற்பனை செய்திருக்கவில்லை. ஆறடி உயரம் அல்லது பார்த்த உடனே பெண்களைக் கவரும் எழில்முகம் அல்லது குறைந்த பட்சமாகத் தலையைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் இருக்கும் என்றுதான் நினைத்திருந்தேன். தான் வந்த வேலையை முடித்து, அவர் போனபிறகு, என்னைப் போலவே வியப்பு மாறாமல் நின்றுகொண்டிருந்த வாடிக்கையாளரான ஓர் அய்யங்கார் மாமி, “என்னடா கண்ணா! கலிகாலம்! இந்தத் தொண்டு கிழமா இவ்வளவு கிளுகிளுப்பாக எழுதுகிறது?” என்று வாயெல்லாம் பல்லானார்.

குமுதத்தில் அவர் தொடர்ந்து சரித்திர நாவல்கள் எழுதிவந்தார். குமுதத்தின் உயர்ந்த சர்க்குலேஷனுக்கே அவருடைய யவனராணி, கடல்புறா, ஜலதீபம் போன்ற அற்புதமான தொடர்கள்தான் காரணம் என்றால் மிகையாகாது. 

என்னைப் பொறுத்தவரையில், வாராவாரம் குமுதம் வந்தவுடன், அவருடைய தொடரின் கடைசிப் பக்கத்தை முதலில் படித்துவிடுவேன். அதுதான் அந்த அத்தியாயத்திலேயே முக்கியமானதும், இளைஞர்களைக் கவரும் கிளுகிளுப்பான உரையாடல்கள் நிறைந்ததாகவும் இருக்கும். அடுத்து என்ன வருமோ என்று சிந்திக்கத் தொடங்கும்போது தொடரும் போட்டுவிடுவார்.  

அவ்வளவு தலைசிறந்த, இலட்சக்கணக்கான வாசகர்களின் கனவு எழுத்தாளராகத் திகழ்ந்த ஒருவர், என் மேசைக்கெதிரே அமர்ந்து பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது பெரும் பாக்கியமே.

அன்றும் சரி, இன்றும் சரி, அந்த வங்கியில் வாடிக்கையாளர் என்றால் மகாராஜாவைப் போலத்தான் நடத்துவார்கள். அதிலும் மகாராஜாக்களைப் படைக்கிறவரே வாடிக்கையாளரானால் சொல்லவும் வேண்டுமா?


சாண்டில்யன் அவர்கள் தானாக எழுந்துபோகும் வரையில் அவரைச் சுற்றி நான்கு பேராவது நின்றுகொண்டிருப்போம். அவரை முன்னிட்டு கிளை மேலாளர் எங்களுக்கும் கீரை வடை ஆர்டர் செய்வதுண்டு. சில நாடகள் சாண்டில்யனே தன் செலவில் காப்பி (மட்டும்!) ஆர்டர் செய்வதும் உண்டு.

குறிப்பிட்டதொரு வார இதழ்மீது பற்றி அவருக்கு எப்போதுமே  அதிருப்தி இருந்தது. அதிலும், தான் உடல் நலமின்றிப் படுத்திருந்தபோது, ஓர் உதவி ஆசிரியர் இவருடைய பெயரிலேயே அந்த வாரத்தின் அத்தியாயத்தை எழுதிவிட்ட அநீதியை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வெவ்வேறு பெயர்களில் அந்த ஆசாமி தானே எழுதிப் பத்திரிகையை நிரப்பிவிடுகிறார், அதனால் மற்ற எழுத்தாளர்களின் வயிற்றில் அடிக்கிறார் என்று கோபப்படுவார் சாண்டில்யன்.

ஆனால் நான் இங்கே சொல்ல விரும்புவது அவருடைய நகைச்சுவை மிகுந்த ஆளுமையைப் பற்றித்தான்.

அந்த வருடம் பொங்கல் விடுமுறைக்குப் பிறகு வங்கி திறந்தபோது, காலை எட்டு மணிக்குக் கதவைத் திறப்பதற்கு நான் வளாகத்தினுள் நுழைந்தால், சுமார் முப்பது நாற்பது நகரசபை துப்புரவு ஊழியர்கள் தங்கள் துடைப்பம், முறம் போன்ற கருவிகளோடு என்னை எதிர்கொண்டார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்களை நகரச் சொல்லிவிட்டுக் கதவைத் திறந்தேன். மற்ற ஊழியர்கள் இனிமேல்தான் வருவார்கள். அதற்குள் இந்த ஆசாமிகள் அனைவரும் திபுதிபுவென்று உள்ளே நுழைந்துவிட்டனர்.

“தயவு செய்து வெளியே போயிருங்கள். வங்கி திறக்க இன்னும் பதினைந்து நிமிடம் இருக்கிறது” என்றேன் சற்றே உரத்த குரலில்.

“அதுதான் திறந்து விட்டீர்களே!” என்றாள் ஒரு பெண்மணி, விகற்பமில்லாமல். யாரும் இம்மி கூட நகரவில்லை.

சக ஊழியர்கள் வருகிறார்களா என்று வாசலைப் பார்த்தேன். இல்லை.

அதற்குள் அவர்களில் வயதான ஓர் ஊழியர் என்னிடம் வந்து ஒரு காசோலையை நீட்டினார். ஒரே ஒரு ரூபாய்க்கான காசோலை! சாண்டில்யன் கொடுத்தது!

உடனே மற்ற எல்லாரும் முட்டி மோதிக்கொண்டு ஆளுக்கொரு காசோலையை நீட்டினார்கள். எல்லாமே ஒரு ரூபாய் காசோலைதான்! எல்லாமே சாண்டில்யன் கொடுத்ததுதான்!

எனக்கு ஒருவாறு விஷயம் புரிந்தது. துப்புரவுத் தொழிலாளர்களுக்குப் பொங்கல் இனாம் கொடுத்திருக்கிறார் சரித்திர நாவலாசிரியர்! அந்த ஒற்றை ரூபாயைப் பணமாகவே கொடுத்திருக்கக் கூடாதா?

எல்லாக் காசோலைகளையும் பெற்றுக்கொண்டு அவர்களை வெளியில் உட்காரச் சொன்னேன். அதற்குள் காசாளரும் வந்துவிட்டார். பிற நான்கு குமாஸ்தாக்களும் வந்துவிட்டனர். அதை விட ஆச்சரியம்,  ராஜ கம்பீரமாக சாண்டில்யனே நேரில் வந்ததுதான்!

“என்னப்பா, எல்லாரும் பாங்கில் பணம் வாங்கிக்கொண்டீர்களா?” என்று அசாத்தியப் பிரேமையுடன் அவர் கேட்டதும், “அரை மணி நேரமா காத்திருக்கோம் சாமி!” என்று போட்டுக்கொடுத்தார்கள் அவர்கள்.

காசாளருக்கு மிகவும் கோபம். ஒரு ரூபாய், ஒரு ரூபாய், ஒரு ரூபாய் என்று முப்பது தடவை மூன்று இடங்களில் பற்று வைக்கவேண்டுமே!

சாண்டில்யன் என்னைப் பார்த்து அர்த்த புஷ்டியோடு சிரித்தார். “கல்யாணத்திற்குப் புது ஒரு ரூபாய் கட்டு வேண்டுமென்று அன்று ஒருவர் கேட்டபோது சுலபத்தில் கொடுத்தீர்களா?” என்றார்.

ஆனால் மற்றபடி அவரோடு பழகியதில் அவர் குழந்தை உள்ளம் கொண்டவராகவே விளங்கினார் என்று என்னால் சொல்ல முடியும்.

***

ஒருமுறை தி.நகரில் லேவாதேவித் தொழில் நடத்தி வந்த ராஜஸ்தானத்து செல்வந்தரான மார்வாடி ஒருவர், சில மாதங்களுக்குத் தன் சொந்த ஊருக்குச் செல்ல விரும்பினார். ஆனால் தன்னிடமிருந்த  நூற்றுக்கும் மேற்பட்ட தங்க பிஸ்கட்டுகளை எந்த வங்கியில் பாதுகாப்பாக வைப்பதென்று அவருக்குக் குழப்பமாயிருந்தது. அவர் கணக்கு வைத்திருந்த வங்கியில் அப்போது லாக்கர் வசதி இல்லை. முன்பின் தெரியாத வேறு வங்கிக்குச் செல்ல அவருக்குத் தயக்கமாக இருந்தது. விஷயம் (அப்போது அமலில் இருந்த) தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை அமலாக்கும் அதிகாரிகளுக்குத் தெரிந்துவிட்டால்? கணக்குக் காட்டாத பணமல்லவா அது!

ஆகவே தனது நண்பரான சாண்டில்யனிடம் ஆலோசனை கேட்டார். கிடைத்தது. என்ன ஆலோசனை?

“இங்க பாருய்யா, உனக்கு எந்த பாங்க்கிலும் லாக்கர் கிடைக்காது. நான் சொல்கிறபடி செய்கிறாயா?”

செய்கிறேன் என்றார் மார்வாடி.

“பாங்கில் நகைகளை அடகு வைக்கலாம். தங்க பிஸ்கட்டுகளை வைக்க முடியாது. ஆகவே உன்னிடம் இருக்கும் பிஸ்கட்டுகளைக் கொண்டு எதாவது பெரிய நகை ஒன்றைச செய்துகொள். அதைக்கொண்டுபோய் பாங்கில் அடகு வைக்கலாம். நீ திரும்பி வந்ததும் மீட்டுக்கொள்ளலாம். சரியா?” என்றார் சாண்டில்யன்.

அவ்வளவு தங்கத்தை வைத்து என்ன மாதிரி நகையைச் செய்வதென்று மார்வாடிக்குப் புரியவில்லை. அதற்கும் சாண்டில்யனே ஆலோசனை சொன்னார்.

“இங்க பாருய்யா, என்னோட சரித்திர நாவலில் வருவது போல ஒரு கத்தியைச் செய்துகொள்ளேன்! உங்கள் ராஜபுதன ராஜாக்களின் கத்திகளை நீ பார்த்ததில்லையா? அதுபோல நான்கு அடியோ, ஐந்து அடியோ, ஏன் ஆறடி தான் இருக்கட்டுமே! மேலே கீழே ஒன்றிரண்டு வைரங்களையும் வைத்துவிடேன்! பிறகு என்னிடம் வா. என்னுடைய பாங்க்கில் உனக்குக் கடன் ஏற்பாடு செய்து தருகிறேன்!” என்றார்.

அதையே வேதவாக்காகக் கொண்ட நமது செல்வந்தர், நாளும் கோளும் நிறைந்ததொரு நன்னாளில் சாண்டில்யன் முன்னால் வர, தன்னுடைய மகன்கள் இருவரும் ஒரு நீண்ட கனமான பெட்டியுடன் பின்னால் வர, மந்தகாசப் புன்னகையோடு எங்கள் வங்கிக்குள் நுழைந்தார்.

எங்கள் தி.நகர் கிளையில் அப்போது நகைக்கடன் வழங்கும் வசதி தொடங்கப்படவில்லை. அதனால் என்ன, சேர்மனிடம் அனுமதி கேட்டால் போயிற்று. அனுமதி கிடைத்தது. ஆனால் வட்டி விகிதம் 15 சதத்திற்குக் குறையாது என்று கூறப்பட்டது. மார்வாடி நண்பருக்கு இதெல்லாம் ஒரு வட்டியா! அவர் வாங்குவது மூன்று வட்டி அல்லவா? சரியென்று ஒப்புக்கொண்டார்.

கடன் தொகை பத்து லட்சமோ பதினைந்து லட்சமோ, நினைவில்லை. வங்கியில் அனைவருக்கும் மகிழ்ச்சி. நல்ல செக்யூரிட்டிக்கு பெரிய கடன் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்ததே என்று.

அதன் பிறகுதான் வந்தது சிக்கல். வழக்கமான நகைகளாய் இருந்தால் சிறிய துணிப்பைகளில் வைத்துக் கட்டி சீல் வைத்து அவற்றை கனமான இரும்புப் பெட்டியில் வைப்போம். ஆனால் இதுவோ ஐந்தடிக்கும் மேலான நீளம் கொண்ட, வளைந்த, தங்கக் கத்தியாயிற்றே! இதை எதனுள் பாதுகாப்பாக வைப்பது?

பலத்த ஆலோசனைக்குப் பிறகு, டபுள் லாக் வசதியுள்ள புதிய கோத்ரெஜ் பீரோ ஒன்று வாங்கி, அதனுள்ளிருக்கும் தட்டுகளை எடுத்துவிட்டு, கத்தியை அதனுடைய பெட்டியுடனேயே நிற்கவைத்துப் பூட்டிவிடுவது என்று முடிவானது. மேற்படி சடங்குகள் முடிந்து, லக்ஷக் கணக்கான ரொக்கத்தையும் தன்னுடைய சூட்கேசில் எடுத்துக்கொண்டு மார்வாடியும் மகன்களும் கிளம்பியபோது நம் சாண்டில்யன் அவர்கள் பூத்த வெற்றிப் புன்னகை இருக்கிறதே, அடடா, அடடா!

ஆனால் அந்தப் புன்னகையின் இன்னொரு அர்த்தம் இரண்டு நாட்கள் ஆனபிறகுதான் தெரிந்தது. அன்று, மார்வாடி தான் கொண்டுபோன அதே பணத்தைத் திருப்பிக் கொண்டுவந்தார். கடன் கணக்கில் வெறும் ஐயாயிரம் மட்டும் பாக்கியாக இருக்கட்டும், மீதியைத் திருப்பிக் கட்டிவிடுகிறேன் என்றார்,  பைனான்சியர்களுக்கே உரிய விருப்பு வெறுப்பற்ற குரலில். அது சாண்டில்யன் கொடுத்த ஆலோசனையாகத்தான் இருக்கும் என்று எங்களுக்குத் தெரிந்துவிட்டது. நண்பர்களுக்காக என்ன வேண்டுமானாலும் உதவி செய்பவர் அல்லவா அவர்!

கிளை மேலாளருக்கு துக்கம் பீறிட்டது. பதினைந்து லக்ஷம் கடனுக்கு 15 சதம் வட்டி வரும், பேலன்ஸ் ஷீட்டில் நல்ல லாபம் காட்டலாம் என்று இருந்தவருக்கு, அது வெறும் ஐயாயிரமாகச் சுருங்கிப்போனால் எப்படி இருக்கும்! ஆனால் கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்தினால் அபராதம் விதிக்கும் சட்டம் அன்று இல்லாததால் மார்வாடியாரின் எண்ணத்தை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. கோத்ரெஜ் பீரோ விலைக்குக் கூட அந்த வட்டி காணாது.

சிறிது நேரத்தில் நமது சரித்திர நாவலாசிரியர் தற்செயலாக வருவதுபோல் உள்ளே வந்தார். மார்வாடியின் நன்றிப் புன்னகையை மறுக்காமல் ஏற்றுக் கொண்டார். இப்போது எங்களைப் பார்த்து அதே வெற்றிப் புன்னகையைப் புரிந்தார். நாங்கள் அசடு வழிந்தோம்!

இப்போதும் தி.நகர் பக்கம் போனால் சாண்டில்யனும் அந்த ராஜபுதனத்து வாளும் நினைவில் வராமல் இருப்பதில்லை.

('குவிகம்' 100 ஆவது இதழில் வெளியான கட்டுரை).

**** 

சாண்டில்யன் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு 2010இல் தினமணி வாரமலரில் அமுதசுரபி ஆசிரியர் விக்கிரமன் எழுதிய கட்டுரையிலிருந்து சில தகவல்கள்:

தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்துள்ள திருஇந்தளூர் அவரது சொந்த ஊர். 1910- நவம்பர் 6- ஆம் தேதி, டி.ஆர்.சடகோபன் ஐயங்காருக்கும், பூங்கோதைவல்லி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். பிறந்த ஊர் திருக்கோவிலூர். இயற்பெயர் எஸ்.பாஷ்யம்.

'அமுதசுரபி' விக்கிரமன்

இன்டர்மீடியட் படித்தவர். அப்போதே அவருக்குத் தேசிய இயக்கத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. அதனால்  சென்னை வந்த அவருக்கு, அறிஞர் வெ.சாமிநாத சர்மா, கல்கி போன்றோர் நண்பர்களாயினர். இருவருடனும் பழகியதால் சிறுகதை எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. அந்நாளில், 'திராவிடன்' இதழாசிரியர் தோழர் சுப்பிரமணியம் நண்பரானார். அவருடைய 'திராவிடன்' இதழில் 'சாந்தசீலன்' என்ற சிறுகதையை எழுதினார். அந்தக் கதையைப் படித்த கல்கி, தான் ஆசிரியராக இருந்த 'ஆனந்தவிகடனில்' எழுத வற்புறுத்தினார். சாமிநாத சர்மா ஆசிரியராக இருந்த 'நவசக்தி'யிலும் சாண்டில்யனின் கட்டுரைகள் வெளிவந்தன.

சாண்டில்யன் எழுதிய 'பலாத்காரம்' என்ற முதல் நாவலுக்கு அந்நாளைய காங்கிரஸ் தலைவர் தீரர் சத்தியமூர்த்தி சிறப்பாக முன்னுரை எழுதியிருக்கிறார். பிற்காலத்தில், 'புரட்சிப்பெண்' என்ற தலைப்பில் அந்த நாவல் வெளிவந்தது.

சாண்டில்யனுக்குத் தன்னம்பிக்கை அதிகம். ''ஒரு படத்துக்கு மக்கள் மத்தியில் ஐந்து ஆண்டுகள் மட்டுமே மவுசு இருக்கும். ஆனால், நான் எழுதும் புத்தகங்களுக்கு 500 ஆண்டுகள் மவுசு இருக்கும். அதனால்தான் நான் எழுத்துத் துறையைத் தேர்ந்தெடுத்தேன்'' என்று, சாண்டில்யனே ஒருமுறை கூறியிருக்கிறார்.

சாண்டில்யனின் எழுத்துத் திறமையை அறிந்த சுதேசமித்திரன் ஆசிரியர் ஸி.ஆர்.சீனிவாசன், அவரை நிருபர் பணியில் அமர்த்தினார். சாண்டில்யன், உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகள் பற்றிய செய்திகளை எழுதும் நிருபராகப் பணியாற்றினார். நிருபர்களுக்கு வழக்கு மன்றத்திலிருந்த 'மரியாதை'யை சுவைபட விவரித்து 'ஆங்கில ஏடுகளின் நிருபர்களுக்கு மட்டும் நீதிமன்றத்தில் வசதியாகவும் மற்ற தமிழ்ப் பத்திரிகை நிருபர்கள் நின்றுகொண்டுதான் எழுதவேண்டிய நிலை' உள்ளதைச் சுட்டிக்காட்டிப் பேசியும் எழுதியும் வந்தார்.

செய்தி வழக்கறிஞர்களிடையே பரவியது. சாண்டில்யனுக்கு உட்கார நாற்காலி வசதி செய்யப்பட்டது. நீதிமன்ற வழக்குகளை நல்ல தமிழில் சுதேசமித்திரனில் எழுதியதால், சாண்டில்யன் திறமை எங்கும் பேசப்பட்டது.

1937-இல் மகாத்மா காந்தியைச் சந்தித்துப் பேட்டிகண்டு எழுதினார்.  சாண்டில்யனின் மதிப்புணர்ந்த நிர்வாகம், அவரை உதவி ஆசிரியராகப் பதவி உயர்வு அளித்தது. பின்னர் சில கருத்துத் வேறுபாடு காரணமாக, மீண்டும் நிருபர் பதவியே தரப்பட்டது. இதனால் கோபமடைந்த சாண்டில்யன், அந்தப் பதவியிலிருந்து விலகி 'ஹிந்துஸ்தான்' வார இதழில் சேர்ந்தார்.

சாண்டில்யனுக்கு, சினிமா, நாடகம் பார்ப்பதில் மிகுந்த ஈடுபாடு உண்டு. 'ஹிந்துஸ்தானி'ல் பணியாற்றியபோதுதான் திரைப்படத்துறையின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது. திரைப்படக் கலையில் முன்னணியில் நிற்க வேண்டுமென்று இயற்கையாகவே அவரிடம் இருந்த லட்சியம் அப்போது நிறைவேறியது. சினிமாவைத் தாக்கி எழுதுபவர்களுக்கு அவர், தன் பேனாவின் வலிமையால் பதில் சொல்லியிருக்கிறார். சினிமா பற்றி ராஜாஜி கூறிய கருத்துகளை எதிர்த்து, 'சினிமா பார்ப்பது கெடுதலா?' என்ற கட்டுரையை 1952-இல் எழுதினார்.

"எனக்கு சினிமாவைப் பற்றி ஏதாவது தெரிகிறது என்றால், அதற்குக் காரணமானவர்கள் பி.நாகிரெட்டி, வி.நாகையா, கே.ராம்நாத் ஆகியோர்தான். பதினான்கு ஆண்டுகள் சினிமா உலகில் இருந்தேன். அப்போதெல்லாம் கதையை எழுதக் குறைந்தது ஆறுமாதங்களாகும். கதையை எழுதினால் மட்டுமே போதாது. 'ஷூட்டிங் ஸ்கிரிப்ட்'  தயாரிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

வி.நாகையாவின் 'தியாகையா' வெற்றிக்கு சாண்டில்யன் பெரிதும் காரணமானவர். அந்தப் படம் வெளிவந்த பிறகு, புகழின் உச்சியில் இருக்கும்போதே திரைப்படத் துறையிலிருந்து விலகிவிட்டார்.

இளம் வயதிலிருந்தே அவரின் லட்சியம் எழுத்தாளராக வேண்டுமென்பது. பிரபலமாக விற்பனையாகும் பத்திரிகைக்கு ஆசிரியராக வேண்டுமென்பது. முதல் எண்ணம் வெற்றிகரமாக நிறைவேறியது. இரண்டாவது எண்ணம் சொந்தமாகப் பத்திரிகை நடத்தி, வெற்றி பெறவில்லை.

சில காரணங்களால் மீண்டும் சுதேசமித்திரனில் சேர்ந்தார். 'ஞாயிறு மலர்' என்ற சிறப்புப் பகுதியின் பொறுப்பாளரானார். சுதேசமித்திரன் வாரப் பத்திரிகையிலும் எழுதினார். ' அமுதசுரபி'யில் சரித்திர நிகழ்ச்சிகளை நிலைக்களனாகக் கொண்ட சிறுகதைகளை அவ்வப்போது எழுதினார்.

'சரித்திர நாவல் எழுதும் தாங்கள், வரலாற்றுப் புதினங்கள் எழுதவேண்டும்' என்று 'அமுதசுரபி' நிறுவனத்தார் கேட்டுக்கொண்டதால், 'ஜீவபூமி' என்ற சரித்திரத் தொடரை எழுதினார். ' ஜீவபூமி' தொடர், பின்னர் பிரபல அமெச்சூர் நாடக மன்றத்தாரால் நாடகமாக அரங்கேற்றப்பட்டது.

'ஜீவபூமி' தொடருக்குப் பிறகு, 'மலைவாசல்' என்ற தொடரை எழுதினார். 'மலைவாசல்' புதினத்துக்குக் கிடைத்த வாசகர்களின் வரவேற்பால், பல வரலாற்றுப் புதினங்களை எழுத அவருக்கு உற்சாகம் ஏற்பட்டது. 

கன்னிமாடத்தில் தொடங்கி, கடல்புறா (மூன்று பாகங்கள்), யவனராணி முதலிய பிரம்மாண்டமான நாவல்களை எழுதினார். மொத்தம் 50 நூல்களை எழுதியுள்ளார். அவற்றில், 42 சரித்திர நாவல்கள். மற்றவை சமூக நாவல்கள் மற்றும் இலக்கியக் கட்டுரைகள். 

இவர் எழுதிய மிகப்பெரிய நாவல் கடல்புறா. மூன்று பாகங்கள்; மொத்தம் 2000 பக்கங்கள். (பொன்னியின் செல்வனை விடப் பெரியது). இந்தியாவிலேயே அதிகம் எழுதி சரித்திரம் படைத்த சாதனையாளர் சாண்டில்யன்தான்.

பத்திரிகையாளர், எழுத்தாளர், திரைப்படக் கதை வசனகர்த்தா, வரலாற்று நாவலாசிரியர்கள் போன்றோரிடையே முன்னணி இடத்தைத் தேடிக்கொண்டவர் எனப் பலமுகத் திறமைகளோடு முன்னேறிக் கொண்டிருந்த சாண்டில்யன், உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கான சங்கம் ஒன்றை நிறுவுவதில் பெரும்பாடுபட்டு, 'தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தை'த் தொடங்கினார். அது 'தென்னிந்தியப் பத்திரிகையாளர் சம்மேளனம்' என்ற பெயரில் பிரபலமடைந்தது.

தனக்கு நியாயம் எனத் தோன்றாததை எதிர்த்து அவர் பேனா சீறிப்பாயும். நாடகமோ, திரைப்படமோ, சமுதாயத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தால் போர்க்கொடி உயர்த்தத் தயங்கமாட்டார்.  நண்பர் என்றும் வேண்டியவர் என்றும் பார்க்க மாட்டார்.

சரித்திரக் கதை சக்கரவர்த்தி சாண்டில்யன், 'சீனத்துச் சிங்காரி' என்ற தொடரை 'குமுதம்' வார இதழில் எழுதத் தொடங்கியபோது, திடீரென நோய்வாய்ப்பட்டார். மரணப்படுக்கையிலும் அந்தக் கதையை எழுதினார். முடிவடையா கோபுரமாய் 'சீனத்துச் சிங்காரி' நின்றுவிட்டது.

சாண்டில்யனுக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனளிக்காமல், 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி இயற்கை எய்தினார்.

***

சனி, செப்டம்பர் 10, 2022

சுப்ரமணிய பாரதியும் சுத்தானந்த பாரதியும்

சுப்ரமணிய பாரதியும் சுத்தானந்த பாரதியும்

சுத்தானந்த பாரதியாரின்

வாழ்க்கை வரலாற்றிலிருந்து ஒரு பகுதி…..


29. கண்டேன் கவிக்குயிலை ! 

பாரதியாரை நான் சிறுவயதில் மதுரையில் பார்த்தேன். அப்போது அவர் வாட்டசாட்டமாகக் களை நிரம்பியிருந்தார், புதுச்சேரியில் பார்த்தபோது மெலிந்திருந்தார். நெற்றி நாமமும், வீர விழிகளும், பாவறா வாயும், தைரிய மீசை தாடியும் பாரதியை விளக்கின. இப்போது எவ்வளவு வேற்றுமை! ஆள் இளைத்திருந்தார். ஆனால் விழியில் அதே கனல் ; வெற்றிலைக்காவியேறிய உதட்டில் அதே முத்துநகையைக் கண்டேன். மீசை "ஜயமுண்டு பயமில்லை" என்று பேசியது. தாடியில்லை. 



முதலில் அக்கிரகாரத்திற்குச் சென்று பாரதியார் வீடெது?" என்று வினவினேன். “அடடா நீர் வைதீகமாயிருக்கிறீர், அவனை ஏன் பார்க்கிறீர்? முழு அனாச்சாரம்" என்றார் ஒருவர். “அது கிராக்குப் பிடித்து கஞ்சாப்போட்டு எங்காவது திரியும்" என்றார் இன்னொருவர். "நாங்கள் யாரும் அவன் வீட்டுக்குப் போவதில்லை. கழுதைக் குட்டியை முத்தம் கொஞ்சும் கவி" என்றார் இன்னொருவர். 

நான் அவர்கள் வாயை அடக்கினேன். "ஐயா தமிழ் நாடு முழுவதும் கொண்டாடும் கவிக்குயிலை காகமும் கூகையும் வெறுத்தால் பரவாயில்லை. அவர் பெருமையை நான் அறிவேன்" என்றேன். 

ஒருவர் மட்டும் கடையம் சத்திரத்திண்ணையிலிருந்து வந்து, “அதோ அந்த ஆற்றங்கரைத் தோப்பில் தாண்டு கால் போடுகிறார்; போம்" என்றார். ஓடினேன். 

'விட்டு விடுதலை பெற்றிடுவாய் இந்தச் சிட்டுக் குருவியைப் போலே" என்ற பாட்டு என்னை வரவேற்றது. பாரதியார் அதைப் பாடி வெகு முறுக்காக ராணுவ நடை போட்டுக் கொண்டிருந்தார். இடையிடையே மீசையை நகாசு செய்து கொண்டே, அஸ்தமன சூரியனைப் பார்த்தார். 

பசுஞ்சோலையில் தங்கமுலாம் பூசியது போல் மஞ்சள் வெய்யில் படர்ந்தது. ஆற்றின் சலசலப்பும் புட்களின் கலகலப்பும் இயற்கையழகில் உள்ளிசையுடன் கொஞ்சி விளையாடின. இந்தக் காட்சியில் கட்டற்ற கருடனைப்போல் என் உள்ளம் வட்டமிட்டு, பாரதியாரின் கவியுருவில் சொக்கிக் கொண்டிருந்தது. அந்தக் கறுப்புக் கோட்டையோ, கிரிகிக் கட்டையோ, குச்சி போன்ற கால்களையோ நான் பார்க்கவில்லை. அவர் உடலான கூண்டில் "ஓம்சக்தி ஓம் சக்தி ஓம்" என்று பாடித்துள்ளும் அமரக் குயிலையே கண்டேன். 


“நமஸ்காரம்" என்னுமுன் படபடவென்று பேசினார்..... பேசினோம். 

அவர்: ஓம் சக்தி ; வரவேண்டும் பாரதி. பாரதசக்தியைப் பார்த்தோம், நன்றாயிருக்கிறது, கம்பீரமாயிருக்கிறது. ஐயர் மெச்சினார் - நாமும் மெச்சுகிறோம். 

நான்: பராசக்தியின் அருளால் அந்தக் காவியம் நிறைவேற வேண்டும், சக்தி அருள்பெற்ற தங்கள் ஆசி எனக்குப் பூரணமாயிருக்க வேண்டும். 

அவர்: நிறைவேறும்; ஓம் சக்தி நிறைவேறும் ; ஆக்ஷேபனையில்லை ... எடுத்த காரியம் யாவினும் வெற்றி, எங்கும் வெற்றி" மகா காவியம் என்றார் ஐயர். அதைப் பூர்த்தி பண்ணும்; தமிழுக்கு அரிய கலைச் செல்வமாகும். அத்யாத்ம நிதியாகும். 

நான்: திருவருளால் காவியம் நிறைவேறும். ஆனால் இந்தக் காலம் யார் அதை மதிக்கப் போகிறார்கள். ஐயர் மதிப்பார், நல்ல ரசிகர். தாங்கள் மதித்தால் அது கவி வாணியே மதித்ததாகும். ஆனால் தமிழகம் அதை அறிய வெகுகாலம் ஆகும். 

அவர்: அறியும், அறியும் தமிழகம் எழுந்து விட்டது தலை நிமிர் தமிழா என்று பாடினீரே...  தலை நிமிர் தமிழா. தலைநிமிர் தமிழா.... தமிழ் நாடு எழுந்து விட்டது. இதோ எழுந்து விட்டது. 

நான்: இப்படி உட்காருவோம். 

அவர்: சரி. அஸ்தமனத்தைப் பார்த்து உட்காருவோம். 

நான்: உதயத்தைப் பார்த்தே அமர்வோம். 

அவர்: சபாஷ் பாண்டியா, நமக்கு அஸ்தமனம் இல்லை ; என்றும் உதயமே. நாம் அமரத்தன்மை பெற்றுவிட்டோம்..... சாகாவரம் பெற்று விட்டோம். 

நான்: ஆம், இந்த உடம்பில் துடிப்பது அமராத்மாதானே. தங்கள் வாக்கு அமரத்தன்மை பெற்றது. இன்று அதை உலகம் சரியாக அறியவில்லை . நாளை அறியும்; 

அவர்: பாண்டியா, பாரதி, நாம் என்ன செய்யப் போகிறோம் தெரியுமா.... அமிர்தம் என்ற புதிய ஸஞ்சிகை நடத்தப் போகிறோம். ஆயிரம் பதினாயிரம் லக்ஷம் என்று சந்தா சேரும். நமது பாட்டு வசனம் எல்லாம் புதிய மோஸ்தரில் அழகாக வெளியிடுவோம். பணம் குவியும். 

நான்: அப்படி வெளிவந்தால் நாட்டுக்கே நல்லது. தங்கள் தைரியம் எனது சோர்வை விரட்டியடித்தது. நம்மை நாம் அறிந்தால் உலகம் நம்மை அறியும். 

அவர்: சபாஷ்! நல்ல ஞானம். சரி, நாடகங்கள் எப்படியிருக் கின்றன? நாடக சிருஷ்டி செய்யும். தமிழை அபிவிருத்தி செய்ய வேண்டும். நான் கவிதை, நீ நாடகம், அவன் கதை, இன்னொருவன் கட்டுரை என்று காரியம் நடத்தினால், இலக்கியம் நிறைவாக வளரும். 

நான்: இயற்கையிலும் அப்படியே, அததன் சக்தியைக் காட்டி அதது உலகை வளர்க்கிறது. சூரியன் ஒளி, மேகம் மழை, கடல் ஆவி, நதி நீர், மண் பயிர் தருவதுபோல், நமது புலமையைத் தந்து தேசந்தழைக்க வாழ வேண்டும். முரசுப் பாட்டை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வந்தால் 

போதும். வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே! 


பாரதியார் விரைப்பாக நின்று “வேதம் என்றும் வாழ்க வென்று கொட்டு முரசே" என்று தொடங்கி முரசுப் பாட்டை, ஆவேசமாகப் பாடினார். பிறகு "இங்கே தேவர் சங்கம் கூடும்" என்ற பாட்டை உரக்கப்பாடியதும் அப்படியே சோர்ந்து உட்கார்ந்து விட்டார். 

நான்: இவ்வளவு பலமாகப் பாடினால், உடம்பு தளரும்; மூச்சு வீணாகுமே. 

அவர்: 'நாம் அமரத்தன்மை பெற்று விட்டோம் ஐயா" என்று நாலுதரம் சொன்னார். 

நிலாக்காலம். சந்திரன் எழுந்தது. நானும் குற்றாலம் நோக்கிச் செல்லக் காலெடுத்தேன். "சாப்பிட்டுப் போகலாமே" என்றார் பாரதியார். தங்கள் வாக்கமுதமே போதும் என்று புறப்படும் போது 

ஒரு கவி எழுந்தது:


வீரங் கனலும் விழிக்கனலும், பிள்ளை போல் 

ஈரந் திகழும் இளநெஞ்சும் - பாரதியின் 

சொல்லும் பொருளும் சுதந்திரப் பேரிகையும் 

வெல்லும் புவியை விரைந்து. 

இத்துடன் நான் விடைபெற்றேன். 

பத்து நாட்களுக்குப் பிறகு நான் திருச்செந்தூர் சென்றேன். அங்கே நாழிக்கிணற்றில் குளித்தேன். அப்போது கடலோரத்தில் பாரதியார் அமர்ந்து சூரியோதயத்தைப் பார்த்தார். நான் அவரைக் கண்டேன். ஓம் சக்தி என்று அன்புடன் என்னை அழைத்துக் கொண்டு முருகன் சந்நிதிக்குச் சென்றார். ஆனால் முருகனைக் கும்பிடவில்லை. நிமிர்ந்து பார்த்துக்கொண்டே ஐந்து நிமிஷம் இருந்து, உடனே கடற்கரைக்கு ஓடினார். நானும் தொடர்ந்தேன். அங்கிருந்து கம்பீரமாக "முருகா, முருகா, முருகா" என்று பாடினார். கோயில் மணி கேட்டது. தீபாராதனை காண நான் சென்றேன். பாரதியாரும் எங்கோ சென்றார். ஒரு சோலையில் கூடி, இரைதேடப் போகும் பறவைகள் போல் நாங்கள் பிரிந்தோம். 

கடைசி முறையாக நான் பாரதியாரை, திலகர் கட்டத்தில் ஒரு கூட்டத்தில் பாரத சமுதாயம் என்ற பாட்டை ஆவேசமாகப் பாடக் கண்டேன். அக்கூட்டத்தில் ஐயரும் இருந்தார். ஆனால் திடீரென்று மழை வந்து கூட்டம் கலைந்தது. 

பாரதியார் திருவல்லிக்கேணி யானை மிதித்து நோய்வாய்ப்பட்டதாகச் செய்தி வந்தது. ஒரு நாள் ஒத்துழையாமையைப் பற்றி ஆசிரியர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். பாரதியார் இறந்த செய்தி வந்தது. கவிக்காணிக்கை செலுத்திக் கண்ணன் பாட்டை ஒருதரம் அன்பருக்குப் பாடிக்காட்டினேன். "பாரதி விளக்கம்" "கவிக்குயில் பாரதியார்" ஆகிய நூல்களைப் பிற்காலம் பாரதியாருக்கு அர்ப்பணித்தேன். 

****

(குறிப்பு: சுத்தானந்த பாரதியாரின் நூல்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டவை. இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும். இந்தக் கட்டுரையின் நீளமான சில பத்திகள் வாசிப்பதற்கு எளிமையாக இருக்கும் பொருட்டு சிறு பத்திகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன).

பாரதியாரின் இறப்புச்செய்தி- 1921 சுதேசமித்திரனில் படிக்க இங்கே சொடுக்கவும்

-இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து

புதன், செப்டம்பர் 07, 2022

நிலமே நீ வாழ்க!

 நிலமே நீ வாழ்க!

(அமெரிக்காவில் 148 வது நாள்)

புதுடில்லிக்கு மாற்றலாகி, கரோல்பாக் ஆரிய ஸமாஜ் ரோட்டில் இருந்த மண்டல அலுவகத்தில் நான் பணியில் சேர்ந்த புதிதில் நடந்த கதை இது. 


நேருபிளேஸ் என்ற வர்த்தக மையம் அப்போதுதான் உருக்கொள்ள ஆரம்பித்திருந்தது. சிறுசிறு கடைகள் எல்லாம் திடீரென்று இடிக்கப்பட்டு அவற்றின் தொகுதியாகப் பெரிய வர்த்தக வளாகங்கள், ஏழெட்டு மாடிகளைக் கொண்டனவாய் எழும்பத் தொடங்கின. நொய்டா (New Okhla Industrial Development Authority) என்ற பேரில் ஓக்லாவில் தொழில் வளாகம் தோன்றியதும் அக்காலமே. மண்ணோடிய குறுகலான சாலைகளுக்குப் பதில், நான்கு வழிச் சாலைகளும் அவற்றின் தொடர்ச்சியாகப் பல்வேறு பாலங்களும் அசுரகதியில் உண்டாக்கப்பட்டன. எதற்கும் லாயக்கில்லாத நிலங்களும் லட்சக்கணக்கில் விலைபேசப்பட்டு, நகரின் முக்கிய வர்த்தகக் குடும்பங்களால்  போட்டிபோட்டுக்கொண்டு வாங்கப்பட்டன. 


அந்தப் பகுதியில் எங்கள் வங்கியின் கிளையொன்று திறக்கப்பட்டு,  திறந்த வேகத்திலேயே பலகோடி ரூபாய் வர்த்தகத்தைப் பெற்றுவிட்டது. (அப்போதெல்லாம் தென்னிந்திய வங்கி என்றால் டில்லியில் மிகவும் நல்ல பெயர்). தானாக வரும் டெபாசிட் (‘வாக்கிங் டெபாசிட்’) கொட்டோ  கொட்டென்று கொட்டியது। லாக்கர்கள் அனைத்தும் இரண்டே நாளில் நிரம்பிவிட்டன. கிளை மேலாளர்களும் வங்கியின் வளர்ச்சிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களாக இருந்ததால், வாடிக்கையாளர் சேவைக்கு இலக்கணமாகத திகழ்ந்தது அந்த வங்கி. எனவே சேவிங்க்ஸ் கௌண்டர் எப்போதும் பிஸியாக இருந்தது.    



ஆனால் தில்லியைப் போன்ற தொழில்வளம் மிக்க நகரத்தில் வங்கிக் கிளையை ஆரம்பித்த நோக்கமே, தொழில்துறையினருக்கு அதிகக் கடன்களை வழங்கவேண்டும் என்பதுதான். அவர்களிடமிருந்து பெறும் வட்டியில் தான் வங்கியின் செல்வ வளமே அடங்கியிருக்கிறது. ஆகவே, மேலாளர்கள்  அருகாமையில் எழுந்திருந்த வணிக வளாகத்தை ஒரு கோவிலாகக் கருதி ஒரு நாளைக்குப் பலமுறை சுற்றிவருவார்கள். அங்கிருந்த ஒவ்வொரு கடையும் ஒரு கரண்ட் அக்கவுண்டு தொடங்கி,  கூடவே ஒரு வர்த்தகக் கடனும் பெறும்வரையில் ஓயமாட்டார்கள். அப்படித்தான் அந்த 70 வயது வர்த்தகரை சந்தித்தார் விவேக், வங்கியின் கிளைமேலாளர். 

அந்த வர்த்தகரின் பெயர் மறந்துவிட்டது. (ஏதோ ஒரு அரோரா அல்லது அகர்வால்). அகர்வால் என்றே வைத்துக்கொள்வோம். அவர் தன் தொழிலில் பழம் தின்று கொட்டைபோட்டு, பின்னர்  அவற்றிலிருந்து மரங்கள் முளைத்து அவையும் பழமாகி நிற்பதைக் கண்டு அனுபவித்தவர். நான்கு தலைமுறைகளாக அவர்கள் அரிசி ஏற்றுமதித் தொழிலில் மட்டுமே   இருந்தார்கள். வேறு எத்தனையோ கவர்ச்சிகரமான தொழில்கள் அடுத்தடுத்த தலைமுறையில் காணப்பட்டாலும், தங்கள் ஆதாரமான அரிசி ஏற்றுமதியை மாற்றிக்கொள்ள  அவர்கள் மறுத்துவிட்டார்கள். ஆனால் அதனால் எந்த நஷ்டமும் இல்லை. ஒவ்வொரு தலைமுறையிலும் திருமகளின் அருள் வேண்டியமட்டும் கிடைத்தது. பஞ்சாபில் ஒரு சிற்றூரில் இருந்தபடியே தொழில் நடத்தியவர்கள், மூன்றாவது தலைமுறையில் டில்லியில் குடியேறினார்கள்.  


அந்த வரிசையில் நமது அகர்வால் (70) கோதுமை வண்ணத்தில் ஆஜானுபாகுவான மேனியும், சுருக்கம் விழாத முகமும் ஓரளவே நரைத்த தலைமுடியுமாக எப்போதும் புன்சிரிப்பைத் தாங்கிய வெற்றிகரமான வர்த்தகராக இருந்தார். அந்தச் சிரிப்புக்குப் பின்னால் விவேகமும் நல்லெண்ணமும் பின்னிப் பிணைந்திருந்தன. யாராலும் அவரை ஏமாற்ற முடியாது. அவரும் யாரையும் ஏமாற்றியதில்லை.       


‘ராஜேஷ் அகர்வால் எக்ஸ்போர்ட்ஸ்’ என்ற பெயரில் முதல் கரண்ட் அக்கவுண்ட்டைத் தொடங்கினார் அவர். ராஜேஷ் அவருடைய கடைசி மகன். தனது நான்கு மகன்கள் பெயரிலும் ஆளுக்கொரு பிஸினஸ் தொடங்கப்போவதாகச் சொன்னவர், முதலில் இளைய மகன் பெயரில் தொடங்கியதற்குக் காரணம் என்ன என்று கேட்டேன்.  நாம் தோட்டம் போடும்போது, சிறு குழந்தையின் கையில் செடியைக் கொடுத்து நடச் சொல்வோமே அதே காரணம்தான்! இளையவர்கள் பெயரில் தொடங்கினால் வேகமாக வளருமாம். 


அடுத்த சில நாட்களில் மற்ற மூன்று பிள்ளைகளின் பெயரிலும் கணக்குகள் தொடங்கப்பட்டன. பெரியவர் அகர்வாலும் தனது கணக்கை ‘ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ்’-லிருந்து எங்கள் வங்கிக்கு மாற்றிக்கொடுத்தார். 


ஆனால் வங்கியில் கடன் பெறுவதைப் பற்றி அவர் வாயே திறக்கவில்லை. நல்ல வர்த்தகர் ஒரு வங்கியில் கடன்பெற்று அவருடைய செக்குகள் வர்த்தகர்களிடையே  புழங்க ஆரம்பித்தால்தான் மற்ற வர்த்தகர்களும் அந்த வங்கிக்கு வரத்  தொடங்குவார்கள். எனவே அவரை எப்படியாவது கடன் வாங்க வைத்துவிட வேண்டுமென்று  கிளை மேலாளர் விவேக் எப்போதும் கடன் விண்ணப்பத்தைக் கையில் ஏந்திக்கொண்டு அவரை வலம் வந்து கொண்டிருந்தார்.  


சில மாதங்கள் ஆயின. ஆனால் கடன் விண்ணப்பம் மட்டும் வருவதாயில்லை. 


பங்குதாரர்களின் சொத்து விவரங்கள், ஆடிட் செய்யப்பட்ட ‘பேலன்ஸ் ஷீட்’,  இலாப நஷ்டக்  கணக்கு, வருமானவரிப் படிவங்கள் போன்ற முக்கியத் தகவல்களைக் கொடுத்தால் எந்த வங்கியும் கடன் கொடுப்பது எளிது. ஆனால் டில்லியைப் பொறுத்தவரை, (அநேகமாக வட இந்தியா முழுவதுமே என்றும் கூறலாம்), வர்த்தகர்கள் இந்த விவரங்களை முதல் எடுப்பில்  கொடுக்க மாட்டார்கள்.  வங்கிக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக, தங்கள் கரண்ட் அக்கவுண்ட்டில் தொடர்ந்து சில மாதங்கள் வரவு-செலவு நடத்துவார்கள். அனுபவப்பட்ட மேலாளர்கள் அதைப் பார்த்தாலே வர்த்தகத்தின் தன்மையைப் புரிந்துகொண்டுவிடுவார்கள். வர்த்தகரின் எதிர்பாராத தேவைகளுக்கு மேலிடத்தின் அனுமதி பெறாமலேயே இந்த வரவு செலவின் அடிப்படையில் ‘தற்காலிக ஓவர்டிராப்ட்’ கொடுப்பதுண்டு. அவ்வாறு கொடுத்த கடனை ஒரு வாரத்திற்குள்ளோ, அல்லது, வர்த்தகத்தின் தன்மையைப் பொறுத்து  ஒரு மாதத்திற்குள்ளோ  மேலாளர் வசூல் செய்துவிடவேண்டும். அந்த விவரம் மேலதிகாரிக்கு முறைப்படித் தெரிவிக்கப்பட வேண்டும். 


இவ்வாறு தற்காலிக ஓவர்டிராப்ட் பெறுவதும் அதைக் குறிப்பிட்ட தவணைக்குள் திரும்பிச் செலுத்துவதும்தான் நல்ல கடன்தாரருக்கான  அறிகுறிகள். இவ்வாறு ஒருசில முறைகள் அனுபவப்பட்டபிறகே கிளைமேலாளர்களுக்கு அந்த வர்த்தகர்மீது பெரிய தொகையை நீண்டகாலக் கடனாகக் கொடுப்பதற்கு தைரியம் பிறக்கும்.  


பெரியவர் அகர்வாலுக்கு எங்கள் வங்கியின்மீது மிகுந்த மரியாதை உண்டு. பஞ்சாபில் ஒரு முக்கிய நகரத்தில் அவருடைய சகோதரர்  எங்கள் வங்கியில் நல்ல தொடர்பு வைத்திருந்தாராம். ஆனால் இந்த நேரு பிளேஸ் வங்கியின் கிளைமேலாளர் விவேக் அதே போன்ற ஒத்துழைப்பைத் தருவாரா என்று அவருக்கு இன்னும் நம்பிக்கை ஏற்படவில்லை போலும். 


அதற்கும் ஒரு சரியான சந்தர்ப்பம் அவருக்குக்  கிடைத்தது. 


அன்றைய க்ளியரிங்கில் பெரியவரின் கணக்கில் அவர் கொடுத்த நான்கைந்து செக்குகள் வந்திருந்தன. மொத்தம் பத்து லட்ச ரூபாய் தேவை. அவர் கணக்கில் இருந்ததோ ஒரு லட்சம்தான்! 


கிளைமேலாளர் விவேக் ‘குதிரைஉணர்வு’ (‘ஹார்ஸ் ஸென்ஸ்’)  கொண்டவர். யாருக்குத் தற்காலிக ஓவர்டிராப்ட் தரலாம், யாருக்குத் தரக்கூடாது என்று அவருக்கு நன்றாகத் தெரியும். எல்லாம் அனுபவ அறிவுதான்.  மங்களூர்க்காரர் என்பதால் காலையில் வெறும் வயிற்றில் அவர் வழக்கமாகக் குடித்த   கொள்ளு ரசமும் ஒரு காரணமாக இருக்கலாம். தன் உதவியாளரை அழைத்து “எல்லா செக்கையும் பாஸ் செய்துவிடுங்கள். தற்காலிக ஓவர்டிராப்ட் ரிப்போர்ட்டை மண்டல அலுவலகத்துக்கு அனுப்பிவிடுங்கள்” என்று உத்தரவிட்டார்.    


பிறகு பெரியவர் அகர்வாலுக்கு போன் செய்தார். “உங்கள் செக்குகள் வந்துள்ளன. பாஸ் செய்துவிட்டேன். ஒரு வாரத்துக்குள் பணம் கட்டிவிடுவார்கள் அல்லவா?” என்று கேட்டார். “இன்னும் நீங்கள் கடன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்பவில்லையே!” என்றும் நினைவுபடுத்தினார்.


அகர்வால் அதிர்ச்சி அடைந்தவர்போல் பேசினார். “இல்லையே, இந்த வாரம் என்னுடைய செக் எதுவும் வராதே!” என்றவர், “கொஞ்சம் பொறுங்கள், என் கணக்கப்பிள்ளையைக் கேட்டுவிட்டு லைனில் வருகிறேன். எதற்கும் செக் நம்பர்களைச் சொல்லுங்கள்” என்று குறித்துக்கொண்டார். 


சற்று நேரம்  கழித்து அகர்வால் பேசியபோது அவரது குரலில் காரம் அதிகமாக இருந்தது.  “இந்த செக்குகளை அடுத்த மாதம்தான் போடச் சொல்லி இருந்தேன். அதற்குள் அந்த ஆள் போட்டிருக்கிறான்! எல்லாவற்றையும் திருப்பி அனுப்புங்கள்” என்று கூறிவிட்டுப் போனை அணைத்துவிட்டார். 


(இந்த விஷயம் கிளைமேலாளரைத் தவிர்த்து வேறு யாருக்கும் தெரியாது).


விவேக்கிற்கு  ஒரு நிமிடம் மூச்சு ஒடுங்கிவிட்டது. ஏனென்றால், செக்குகளைத் திருப்பி அனுப்புவதற்கான நேரம் கடந்துவிட்டது. அத்துடன், பணம் இல்லாமல் செக்குகளைத் திருப்பி அனுப்பினால் அது சந்தையில் வங்கிக்கிளையின் மீதும் அவமதிப்பை உண்டாக்கும். எனவே அகர்வாலை நேரடியாகச் சென்று சந்திக்கக் கிளம்பினார். 


ஆனால் அகர்வால் ஒருவாரம் வரமாட்டார், பஞ்சாப்  சென்றுவிட்டார் என்று தகவல் கிடைத்தது. பஞ்சாபில் அவருடன் பேசுவதற்கு போன் நம்பர் தெரியவில்லை. அவருடைய மகன்களையும் சந்திக்க முடியவில்லை. விவேக்  மிகவும் சோர்ந்துபோய்விட்டார். பத்து லட்ச ரூபாய் அல்லவா ஆபத்தில் இருக்கிறது? 


குதிரைஉணர்வு என்று சொன்னேன் அல்லவா? அது இப்போது அவரை உந்தித் தள்ளியது. அகர்வால் யார் யாருக்குச் செக் கொடுத்திருந்தார் என்று பார்த்தார். வெவ்வேறு பெயர்களில் இருந்தாலும், அவர்கள் அனைவரும் ஒரே நிறுவனத்தின் பங்குதாரர்கள் என்று தெரிந்தது. அவர்களுடைய வங்கியில் சென்று மேற்கொண்டு விவரம் சேகரித்தார்.  


டில்லிக்கு மிக அருகில் ‘பிளாட்’ போட்டு விற்றுக்கொண்டிருந்த  புதிதாக நிலம் விற்கும் ஒரு குழுமம் அது. அதில் நமது அகர்வால் ஐந்து பிளாட் முன்பதிவு செய்திருக்கிறார். அதற்கான தொகையைத்தான் செக் மூலம் கொடுத்திருக்கிறார். உடனே அந்த பில்டரை நேரில் சந்தித்தார் விவேக். 


“எனக்கு இரண்டு பிளாட் வேண்டும். நிலத்தைப் பார்வை யிடலாமா?” என்றதுதான் தாமதம், பில்டர் சௌதரி தானே ஓடிவந்து இவரை அழைத்துச்சென்று காட்டினார். நல்ல இடம், ஒரு சில ஆண்டுகளிலேயே விலை மூன்று மடங்காகிவிடும் என்று விவேக் புரிந்துகொண்டார். பிறகு தன்னை முறைப்படி அறிமுகப்படுத்திக்கொண்டார். 


வங்கியின் பெயரைச் சொன்னதும் சௌதரி உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார். “ராஜேஷ் அகர்வால் உங்கள் வங்கியின் கஸ்டமர் அல்லவா? அவர் என்னிடம் ஐந்து பிளாட் வாங்கியிருக்கிறார்! மேலும் ஐந்து வேண்டுமென்று கேட்டார். பணம் கொண்டுவருவதற்கு பஞ்சாப் போயிருக்கிறார்” என்றார். 


விவேக்கின் குதிரைஉணர்வு இப்போது வெளிக்கிளம்பிப் பிரகாசித்தது. சௌதரியுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார். அதாவது, அவரிடம் பிளாட் வாங்க வருபவர்களை அவர் விவேக்கிடம் அனுப்பவேண்டும். அவர்கள் எல்லாருக்கும்  பிளாட் விலையில் 50 சதம் தொகை கடனாக வழங்கப்படும். 


அடுத்த சில நாட்களில் நாற்பது பிளாட்கள் முன்பதிவு செய்யப்பட்டன. அவ்வளவு பேர்களுக்கும் விவேக் சொன்னபடி கடன் கொடுத்தார். அந்த நாட்களில், காலிமனைக்குக் கடன்கொடுக்கும் திட்டம் வங்கிகளில் கிடையாது. ஆகவே இவர்கள் அனைவரையும் கரண்ட் அக்கவுண்ட் ஆரம்பிக்கச் சொல்லி, ஒவ்வொருவருக்கும்  தற்காலிக ஓவர்டிராப்ட் கொடுத்தார். நிலம் பதிவுசெய்யப்பட்டதும், பத்திரங்கள் வங்கியின் வசம் ஒப்படைக்கப்படும் என்று பில்டரிடம் எழுதிவாங்கிக்கொண்டார். கடனுக்கான வங்கியின் ஆவணங்களையும் ஒவ்வொருவரும் கையெழுத்திட்டு வாங்கிவைத்தார். 


இந்த விஷயத்தை முறைப்படி மண்டல அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தினார். 


சூட்டோடு சூடாக, ராஜேஷ் அகர்வால் வாங்க ஒப்பந்தம் செய்துகொண்ட பிளாட்களுக்கான பத்திரங்கள் மீதும் வங்கிக்கு ‘லீன்’ இருப்பதாகவும், அந்தப் பத்திரங்களையும் வங்கியிடமே ஒப்படிப்பதாகவும் பில்டரிடம் எழுதிவாங்கினார் விவேக். பிறகு தான் அவருக்கு நிம்மதியான உறக்கம் வந்தது. 


அகர்வால் தானாகப் போன் செய்யட்டும் என்று விட்டுப் பிடித்தார் விவேக். 


மேலும் ஒரு வாரம் கழித்து அகர்வால் போன் செய்தார். “விவேக், அந்தச் செக்குகளைத் திருப்பி அனுப்பிவிட்டீர்களா?” என்றார். 


“ஆமாம் அகர்வால் ஜி! நீங்கள் சொன்னபிறகு செய்யாமல் இருப்பேனா?” என்று பதிலளித்துவிட்டு அவரது எதிர்வினைக்காகக் காத்திருந்தார். 


“அப்படியா?” என்றார் அகர்வால் நம்பமுடியாதவராக. 


“ஆமாம், வேறு ஏதாவது பேச வேண்டுமா? கவுண்ட்டரில் கூட்டமாக இருக்கிறது” என்று போனை வைத்துவிட்டார் விவேக். 


அவர் எதிர்பார்த்தபடியே அகர்வால் அடுத்த அரைமணி நேரத்தில் வந்துவிட்டார். 


“மிஸ்டர் விவேக், அந்த செக்குகளை நிஜமாகவே திருப்பி அனுப்பிவிட்டீர்களா?” என்று அதிர்ச்சியோடு கேட்டார். 


அவரை அலட்சியமாகப் பார்த்தபடி, “ஆமாம், அதில் என்ன சந்தேகம்?” என்றார் விவேக். 


“தயவுசெய்து அவற்றை அதே தேதியில் பாஸ் ஆனதாகச் செய்யமுடியுமா? இல்லையென்றால் எனக்கு மிகுந்த நஷ்டம் ஏற்படும்” என்று வேண்டினார் அகர்வால். அவர் குரலில் மிகுந்த பணிவு இருந்தது. 


உள்ளுக்குள் சிரித்துக்கொண்ட விவேக், இருவருக்கும் பாதாம்பால் வாங்கிவரச் சொல்லி பியூனை அனுப்பினார். பிறகு வேண்டுமென்றே அகர்வாலைப் புறக்கணிப்பதுபோல் எழுந்து கவுண்ட்டருக்குப் போய் மற்ற வாடிக்கையாளர்களைக்   கவனிக்கத் தொடங்கினார்.


பாதாம்பால் வந்தது.  ஒரு பாலை அகர்வாலுக்குக் கொடுக்கும்படி கை காட்டிய விவேக், தான் மட்டும் கவுண்ட்டரிலேயே நின்றுகொண்டு பாலருந்தத் தொடங்கினார். அதுவும் மெதுவாக, மிக மெதுவாக. 


கிட்டத்தட்ட அரைமணி நேரம் காத்திருந்த அகர்வால் பொறுமை யிழந்தவராக எழுந்து விவேக்கை நோக்கி நடந்தார். 


“மிஸ்டர் விவேக், நீங்கள் ஏதாவது செய்து அந்த செக்குகளை பாஸ் செய்துகொடுக்க வேண்டும். இதோ பத்து லட்ச ரூபாய் என் கணக்கில் செலுத்துகிறேன்” என்றார். செலுத்தினார். 


இப்போது பந்து தன் வசம் வந்துவிட்ட திருப்தியோடு, விவேக் அவரை எதிர்கொண்டார். 


“அகர்வால் ஜி, நீங்கள் பிஸினஸ்மேன். நாங்கள் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்கள். உங்கள் பெயரையும் உங்கள் தொழிலின் கௌரவத்தையும் நம்பி நாங்கள்  தற்காலிக ஓவர்டிராப்ட் கொடுக்கிறோம். ஆனால், நீங்களோ, பணமே இல்லாமல் செக்கைக் கொடுத்துவிட்டு, எங்களை உங்கள் வீட்டு வேலைக்காரன் மாதிரி, செக்கைத் திருப்பி அனுப்பச்  சொன்னீர்கள். இன்றோ பாஸ் பண்ணவேண்டும் என்கிறீர்கள். இது சரியா என்று நீங்களே கூறுங்கள். அதன் பிறகு என்ன செய்யவேண்டுமோ நான் செய்கிறேன்” என்று போடுபோட்டார் விவேக். 


அகர்வால் நெருங்கிவந்து விவேக்கின் கைகளைப் பிடித்துக்கொண்டார். “விவேக் ஜி, என்னை மன்னித்துவிடுங்கள். என் மூத்த மகன், என்னிடம் கூறாமல் இந்த செக்குகளைக் கொடுத்திருக்கிறான். அதனால் எனக்குத் தெரியாமல் போய்விட்டது. என் கணக்குப் பிள்ளைக்கும் விஷயம்  தெரியவில்லை” என்றவர், “நல்ல இடத்தில் பிளாட் விலைக்கு வருகிறது என்றவுடன், கார்னர் பிளாட்களாகப் பார்த்து புக் செய்திருக்கிறான். அப்போதே செக் கொடுத்தால் ஒரு விலையும், பத்துநாள் கழிந்தால் 25 சதம் உயர்ந்துவிடும் என்றும் பில்டர் சொன்னதால் அப்படிச் செய்திருக்கிறான். மறுநாளே அவன் மலேசியாவுக்கு வேறு வேலையாகச் சென்றுவிட்டான். அதனால் என்னிடம் அவன் விவரம் கூறவில்லை” என்று சொன்னார். 


“இப்போது பில்டர் அதன் விலையை 30 சதமாக உயர்த்திவிட்டார். நல்ல டிமாண்ட் ஏற்பட்டுவிட்டது. ஆகவே எனக்கு தயவு செய்யுங்கள்” என்று கெஞ்சினார் அகர்வால். 


விவேக் சிரித்துக்கொண்டே, பில்டருக்கு போன் செய்து அவரை நேரில் வரவழைத்தார்.


பில்டர் நடந்த விவரங்களைச் சொல்லச் சொல்ல, விவேக் மீது அகர்வாலுக்கிருந்த மரியாதை ஆயிரம் மடங்கு அதிகரித்தது. தன்னுடைய பிளாட்கள், தான் ஒப்பந்தம் செய்திருந்த விலையிலேயே கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டவுடன், அதையும் மீறி, இந்த வங்கியில் வடிக்கையாளர் மீது மேலாளர்கள் காட்டும் கரிசனத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்தது. 


உடனே வேறு வங்கியில் இருந்த தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய கணக்குகளையும் இந்த வங்கிக்கு மாற்றிக்கொடுத்தார். அவருக்குத் தெரிந்த வர்த்தகர்கள் பலரையும் அப்படியே செய்யவைத்தார். அதனால் வங்கியின் மொத்த பிஸினஸ் இரண்டே வருடத்தில் நூறு கோடியாக உயர்ந்தது. அக்காலத்தில் இது ஒரு அபூர்வ சாதனையாகும்.   


எல்லாவற்றிற்கும் அடிப்படையான காரணம், நிலம்! அதாவது காலிமனை!  விவேக் பல ஆண்டுக்காலம் இதை மறக்கவில்லை. வர்த்தகர்களுக்கு எந்தக் கடன் கொடுத்தாலும், காலிமனை அல்லது கட்டி முடிக்கப்பட்ட வீடு ஒன்றாவது  நிச்சயமாக  ஈடு (‘கொலேட்டரல் செக்யூரிட்டி’)  வைக்கப்படவேண்டும் என்பதை உறுதியாகச் சொல்லிவிடுவார். அவர் ஓய்வு பெறும்வரையில் அவர் கொடுத்த கடன்கள் எதுவும் வாராக் கடனாக ஆகவில்லை என்பதில் ஆச்சரியமென்ன? 


  • இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து.