வெள்ளி, ஆகஸ்ட் 09, 2019

காத்திருப்பான் கமலக்கண்ணன் -உண்மை + கதை


காத்திருப்பான்  கமலக்கண்ணன்  -உண்மை + கதை

கமலக்கண்ணன் கதை கொஞ்சம் பரிதாபகரமாக இருக்கும் என்பதால் தான் இவ்வளவு நாள் எழுதாமல் தவிர்த்தேன். இனிமேல் அது முடியாது போலிருக்கிறது. ஏனென்றால் நிலைமை மாறிவிட்டது. 

அண்மையில் நியூ ஜெர்சியில் அக்ஷர்தாம் கோவிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கையில் கோவிலைப் போலவே  பெரிதாக இருந்த கேன்டீன் அருகில் நின்று கொண்டு குல்ஃபி சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்  கமலக்கண்ணன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. எனக்கும் ஒரு குல்பி வேண்டுமா என்று கண்களால் கேட்டபடியே சட்டை மீது குல்ஃபி வழிய  என்னை நோக்கி வியப்புடன் வேகமாக அவர் வந்தபோதுதான் நம்பினேன்.
நியூ ஜெர்சி -அக்ஷர்தாம் ஸ்வாமி நாராயண பெருமாள் கோவில் நுழைவு வாயில் 
"சுவாமி நாராயணப் பெருமாளை விடவும் உங்களைப் பார்த்ததுதான் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று மனப்பூர்வமாகச் சொன்னார் கமலக்கண்ணன். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவர். அதனாலேயே வாழ்க்கையில் பல முக்கிய வாய்ப்புகளை இழந்தவர். அதைப் போகப்போகச் சொல்கிறேன்.

நான் நியூ ஜெர்ஸி வருவதற்கு ஒரு மாதம் முன்பே அவர் வந்து விட்டதாகவும், சிக்காகோவில்  சில வாரங்களுக்கு முன்புதான்  நடைபெற்று முடிந்த  பன்னாட்டுத் தமிழ்ச்சங்க மாநாட்டில் ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியையான அவரது மாமியார் கட்டுரை படிப்பதைக்  கேட்பதற்காகவே வந்ததாகவும்  இல்லையென்றால் மனைவி கோபித்துக் கொள்ளக் கூடும் என்றும் கூறினார். மாமியாரும்  இன்னும் ஐம்பதுபேரும் தமிழக அரசின் செலவில் வந்ததாகவும் தான் மட்டும் சொந்த செலவில் வந்ததாகவும் கூறினார்.

கேன்டீனில் குல்ஃபி விற்கும் இடத்தில் சிறுவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கோடை காலம் அல்லவா, பள்ளிகளுக்கு விடுமுறை. "இருங்கள் உங்களுக்கு ஒரு குல்ஃபி வாங்கி வந்து விடுகிறேன்" என்று அந்த  வரிசையை நோக்கி முன்னேறத் தொடங்கினார். "இப்போது வேண்டாம், நேரம் ஆகிவிடும், எனது முகவரியைப் பெற்றுக் கொள்ளுங்கள். அடுத்த சனிக்கிழமை மாலை ஆலிவ் கார்டனில் சந்திக்கலாம்" என்று முகவரி அட்டையைக் கொடுத்தேன். ஆலிவ் கார்டன் என்பது இந்த மாநிலத்தில் ஏராளமாகக் கிளைபரப்பி இருந்த இத்தாலிய உணவு விடுதி ஆகும். நாங்கள் அடிக்கடி போவதுண்டு. உணவுகளில் இலை, தழைகள் நிரம்பியிருக்கும். இயற்கையோடு இயைந்த வாழ்வு!
நியூ ஜெர்சி -அக்ஷர்தாம் ஸ்வாமி நாராயண பெருமாள் கோவில் பிராகாரம் 

"சரி" என்று மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டு கமலக்கண்ணன் கை கழுவச் சென்றார். குல்பி முடிந்திருந்தது. அதன் குச்சியைக் குப்பைக் கூடையில் வீசி விட்டு, சட்டையில் படிந்திருந்த வழிசலைத்  துடைத்துக்கொண்டார். “பார்த்து ஏழெட்டு வருடம் ஆகிவிட்டதே, நிறையப் பேசவேண்டும்” என்று சொல்லிக்கொண்டே  இராமாயணக் காட்சிகளைச்  சிற்பங்களாக வடித்து இருந்த தூணை நோக்கிச் சென்று விட்டார். என் மனமோ அவரோடு பழகிய பல ஆண்டுகளை நோக்கி முடிவில்லாமல் சென்று கொண்டிருந்தது.
****

கமலக்கண்ணன் நான் பணியாற்றிய ஊரில் தான் கிட்டத்தட்ட அதே சமயம் இன்னொரு வங்கியில் பணியில் சேர்ந்தார்.  சேர்ந்த  புதிதில் (எல்லாரையும்  போலவே) கொஞ்சம் ஆங்கில அறிவு மட்டு என்பதைத் தவிர வேறு குறைகள் இல்லை. ஆனால் அவர் சேர்ந்த வங்கிக்கு அதுவே  அதிகபட்சம்  என்பதையும்,  அதனால் மொழிவளர்ச்சிக்கு முக்கியத்துவம்  தேவையில்லை என்றும் புரிந்துகொண்டார். எந்த வேலையையும் எளிதாகக் கற்றுக்கொண்டுவிடும் கற்பூர புத்தி. உடன் பணியாற்றும் எல்லோரிடமும் கலகலப்பாகப் பழகுவார். குமாஸ்தாவாக இருந்து அதிகாரியாகிப் பிறகு மேனேஜர் ஆனவர். யாருக்கும் தீங்கு நினைக்காத நல்ல மனம் படைத்தவர். இப்படி அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆந்திராவில் ஒரு சிறுநகரத்தில் இருந்த தன் வங்கிக்  கிளையில் அவர் மேனேஜராக இருந்தபோது உள்ளூர் ஜமீன்தார் ஒருவரின் வீட்டுத்  திருமணத்திற்குப் போயிருந்தார்.

"ஆந்திராவில் மூன்று பேர் மீது  ஜமீன்தார்களுக்கு அதிக மரியாதை" என்று என் ஆந்திர நண்பர் ஒருவர் கூறுவதுண்டு. ஒருவர் என். டி. ராமராவ், இரண்டாமவர் நடிகை ஜெயமாலினி, மூன்றாமவர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொள்ளாத வங்கி மேனேஜர்கள்  என்றார் அவர்.  என். டி. ராமராவ் தொடர்ந்து கிருஷ்ணராக வேடம் போட்டு  ஆந்திர மக்களிடையே தனக்கென்று ஒரு தெய்வீக பிம்பத்தை உண்டாக்கி இருந்தவர். ஜெயமாலினியின் (நடன)த் திறமை உங்களுக்கே தெரியும். ஜமீன்தார் வீட்டுத் திருமணங்களில் முதல் நாள் இரவு நண்பர்களுக்கு மட்டும் ஏற்பாடு செய்யப்படும் ‘மது‘ நிறைந்த களியாட்டத்தில் ஜெயமாலினி அழைக்கப்படவில்லை என்றால் தம் ஜமீன் பரம்பரைக்கே தீராத அவமானம் என்று கருதினார்கள். ஆனால் இந்த மூன்றாவது வகையினர் எப்படி ஆந்திராவில் முக்கியத்துவம் பெற்றார்கள் என்பது மட்டும் எனக்குப் புரியவில்லை.

ஆந்திராவில் ஜமீன்தார்கள் அதிகம். எவ்வளவுதான் பினாமி ஒழிப்புச் சட்டங்கள் இருந்தாலும், அரசாங்க அதிகாரிகளின் ஆதரவுடன் அவற்றைப் புறந்தள்ளி, மிகப் பெரிய நிலப்பரப்புகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு எம்.எல். ஏ.வாகவும், எம்.பி.யாகவும், ஏன், அமைச்சராகவும் கூட அந்த ஜமீன்தார்கள் இருந்தார்கள். மாநிலத்தில் இருந்த பல்வேறு தொழில்களும் சினிமா அரங்குகளும் பெரும்பாலும் இவர்கள் கையில் இருந்தன. ஆகவே கணக்கில் வராத பணம் கணக்கில்லாமல் புழங்கியது. அதை எங்கே கொண்டு போய் வைப்பது? உள்ளூர்க்காரர்கள் ஆன தங்கள் மொழி பேசும் சகோதர வங்கி மேனேஜர்களை அவர்கள் நம்புவதில்லை. காரணம் பாம்பறியும் பாம்பின்கால் என்ற பழமொழி தான்.  ஆகவே வெளியூரிலிருந்து வந்து மூன்றாண்டுகளில் மாற்றலாகிப் போய்விடும் பிறமொழி பேசும் வங்கி மேனேஜர்களுக்கு இந்தப்  பணக்காரர்கள் மரியாதை கொடுத்து வேண்டிய வசதிகளைச் செய்து கொடுப்பார்கள் என்று அந்த நண்பர் விளக்கம் சொன்னார்.

திடீர் திடீரென்று மூட்டைகளிலும் சூட்கேஸ்களிலும் இரவு நேரங்களில் அந்த மேனேஜர் வீடுகளில் பணம் வந்து இறங்குமாம். எந்தப் பெயரில் அந்தப் பணத்தை வங்கியில் போட வேண்டும் என்பதை வங்கி மேனேஜரே முடிவு செய்து கொள்ளலாமாம். ஜமீன்தார் போன் செய்யும் போது கேட்கும் பணத்தை எதிர்க் கேள்வி கேட்காமல் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அவ்வளவே. எந்த இடத்திலும் ஜமீன்தாரின் கையெழுத்து இருக்காது.  ஆதார் கார்டு இல்லாத நேரம். பான் கார்டும் பழக்கத்தில் வராத காலம். ஆகவே வங்கி மேனேஜர்களால் இம்மாதிரிக் கோரிக்கைகளுக்குச்  செவிசாய்க்க முடிந்தது.

ஒருவேளை மேனேஜர்களே ஊழல் செய்து  பணத்தைத் தாங்களே எடுத்துக் கொண்டு விட்டால் என்ன ஆகும் என்று கேட்கவேண்டாம். காரணம் ஜமீன்தார் விஷயத்தில் கை வைத்தால் தங்களுடைய இரண்டு கைகளும் இரண்டு கால்களும் ஒரு தலையும் நீங்கலாக வேறெந்த உறுப்புக்கும் சேதாரமில்லை என்று வங்கிப்பணியில் இருந்த அனைவருக்கும் தெரியும். எது எப்படி இருந்தாலும் இந்த ஒரு காரணத்தால் மட்டுமே ஆந்திராவில் இருந்த எல்லா வங்கிகளிலும் எராளமான மேனேஜர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த டெபாசிட் இலக்குகளை சுலபமாக அடைந்து பெயரும் மேற்பதவியும் பெற முடிந்தது என்பதைப்  பின்னால் நான் தெரிந்துகொண்டேன்.

இந்தச் சூழ்நிலையில் தான் கமலக்கண்ணன் ஜமீன்தாரர் வீட்டுத் திருமணத்திற்குப் போனார். ஜமீன்தார் பெயர் ஆந்திர வழக்கப்படி நாலைந்து இனிஷியலைக் கொண்டதாக இருந்தது. (கே.வி., ஆர்.வி., எம்.கே., பி.கே., ரெட்டி என்று வைத்துக்கொண்டால் போயிற்று). திருமணத்தில் என்ன நடந்தது, கமலக்கண்ணனை  எப்படி கவனித்தார்கள், என்னென்ன விருந்து பரிமாறினார்கள் என்பதெல்லாம் இப்போதே சொல்லிவிடுவேன் என்று எதிர்பார்க்க வேண்டாம்.   அதற்கு முன்னால்   அடுத்த வருடம் அவர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்குப் போகவேண்டி யிருக்கிறது.
***
அந்த வருடம் கமலக்கண்ணன் தன் உயர் பதவிக்கான புரமோஷன் இன்டர்வியூவில் கலந்து கொள்வதற்காக வங்கியின் தலைமையகத்துக்குப் போனார். அப்போது அவர் இருந்தது மூன்றாவது கிரேடு. அதிலிருந்து நான்காவது கிரேடுக்குப் போக வேண்டும். போனால் அவருக்குக் கார் கொடுப்பார்கள். கிராமத்திலிருந்து பெரிய நகரத்திற்கு மாற்றல் கிடைக்கும். அது பெரிய கௌரவமாகக் கருதப்பட்டது.

இங்கு இன்னொரு விஷயத்தைக் கூறியாக வேண்டும். இந்த மூன்றாவது கிரேடுக்கு  வருவதற்கே அவருக்கு மூன்று முயற்சிகள் தேவைப்பட்டன. முதல் முயற்சியின்போது இன்டர்வியூவில் "பீகாரில் மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த ஊர் எது?" என்று கேட்கப்பட்டது. அதற்கும் வங்கித் துறைக்கும் என்ன சம்பந்தம் என்று கமலக்கண்ணனுக்குத் தெரியவில்லை. இருந்தாலும் காந்தியடிகளின் அடிப்படை சித்தாந்தம் அவருக்குத் தெரிந்திருந்ததால், "பீகாரில் எந்த ஊரில் ஏழைகள் அதிகம் 
வாழ்கிறார்களோ அந்த ஊர்தான் காந்தியடிகளுக்குப் பிடிக்கும்" என்று சமயோசிதமாகக் கூறினார். பொதுவாக இம்மாதிரி இன்டர்வியூக்களில் யாருக்கு புரமோஷன் தர வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்துவிடுவார்கள். அவர்களுக்கு மட்டும் எளிதான கேள்விகள் கேட்கப்படும். உதாரணமாக "நீங்கள் குழந்தையாக இருந்தபோது  உங்களுக்குத் தாலாட்டு பாடியவர் யார்?" என்று கேட்பார்கள். “அம்மா” என்று பதில் சொல்வீர்கள்.  "பரவாயில்லையே, உங்களுக்கு நல்ல நினைவாற்றல் இருக்கிறது" என்று தலைவர் கூறவும், “ஆமாம், ஆமாம்” என்று மற்ற உறுப்பினர்கள் ஆமோதிக்கவும், அவருக்கு புரமோஷன் கிடைத்து விடும். அவ்வாறு முதல் இரண்டு முறையும் கமலக்கண்ணனுக்குப் புரமோஷன்  கிடைக்காமல் வெயிட்டிங் லிஸ்டில் நம்பர் 1 என்று வைத்துவிட்டார்கள். அதுவே அவருக்கு வங்கி கொடுத்த மிகப் பெரிய கௌரவமாகக் கருதப்பட்டது. ஆனால் அந்த வருடம்  முழுவதும் மெரிட் லிஸ்ட்டில் இருந்த எவரும் மரணம் அடையவில்லை; வேலையை விட்டுப் போகவும் இல்லை என்பதால் அவர் காத்திருப்போர் பட்டியலிலேயே இருக்க வேண்டியதாயிற்று. அதுவே அவருக்குக் "காத்திருப்பான் கமலக் கண்ணன்" என்ற பட்டப் பெயரை வாங்கிக்  கொடுத்தது. 

மூன்றாவது முறை அவர் புரமோஷன் இன்டர்வியூவிற்குப் போனபோது  "இந்தியாவில் சாதிக் கலவரம் அதிகமுள்ள ஊர் எது?" என்று கேட்கப்பட்டது. விடை தெரியாவிட்டாலும் உடனே  சமயோசிதமாக "அனேகமாகத்  திருநெல்வேலி மாவட்டம் ஆக இருக்கலாம்" என்று சொல்லி வைத்தார். உடனே தலைவருக்குக் கோபம் வந்தது. "சமீபத்தில் நடந்த விஷயம் கூட உங்களுக்குச் சரியாகத் தெரியாதா?" என்று சீறினார். அருகில் இருந்த பொதுமேலாளர் ஒருவர் அவரை அமைதிப்படுத்தினார். கேள்வியை திசைமாற்றி "அப்படி ஒரு ஊருக்கு  உங்களை புரமோஷன் கொடுத்தால்  போவீர்களா?" என்றார். நம்ம ஆசாமி "உடனே போவேன் சார். ஐ லவ் சேலஞ்சஸ்" என்று பதில் கூறியிருக்கிறார்.

விஷயம் என்னவென்றால், தலைமையகத்துக்கு மிக அருகில் இருந்த ஒரு ஊரில், வங்கியின் கிளை இருந்தது. அந்த மேனேஜருக்கும் அங்கு வேலை செய்துகொண்டிருந்த துப்புரவுத் தொழிலாளினி   ஒருவருக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் வேறு மாநிலத் தலைநகருக்குப் போய் இரகசியமாகத் திருமணம் செய்துகொண்டுவிட்டதாக உள்ளூர்ப் பத்திரிகையில் செய்தி வந்தது. இருவரும் வெவ்வேறு மதம் என்பதால், அது மதக் கலவரமாக ஆகிவிடும்போல் இருந்தது. உடனடியாக அந்த மேனேஜரை அங்கிருந்து வெளியூருக்கு மாற்றிவிட்டார்கள் ஆனால் கலவரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதற்குள், மத்தியக்கிழக்கு நாடொன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளினியின் கணவனுக்கு விஷயம் தெரிந்து, அடுத்த விமானம் ஏறி, ஆயுதங்களுடன் வங்கியின் தலைமை அலுவலகத்திற்கே வந்தபோதுதான் மதக் கலவரமாக ஆரம்பித்தது சமூகக் கலவரமாக மாறிவிடும் தீவிரத்தில் இருப்பது புரிந்தது. உடனே வங்கியில் இருந்த எல்லா ஊழியர்களையும் இடம் மாற்றிவிட்டார்கள். அந்த ஊருக்கு இப்போது ஒரு சரியான மேனேஜர் வேண்டும். யாரும் போகத் தயார் இல்லை. ஆகவேதான் இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டது. நம்ம ஆசாமி போகத் தயார் என்று கூறிய உடனே தலைவர் மறுவார்த்தை பேசாமல், "சரி உங்களுக்கு புரமோஷன் கொடுத்தாகிவிட்டது. ஆர்டர் வந்த அடுத்தநாளே போய்ச் சேர்ந்து கொள்ளுங்கள்" என்று கைகுலுக்கி வழியனுப்பினார். அப்படித்தான் மூன்றாவது முயற்சியில் புரமோஷன் கிடைத்து இப்போதைய ஊரில் இருக்கிறார் கமலக்கண்ணன். தன் மென்மையான அணுகுமுறையால் ஊர் மக்களின் நன்மதிப்பை மீண்டும் வங்கிக்குக் கொண்டு வந்தார். எனவே இந்த முறை அவருக்குப்  புரமோஷன் நிச்சயம் என்று பொதுமேலாளர்களே தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள். அது கமலக்கண்ணனுக்கும் தெரியும். ஆகவே உற்சாகமாக இருந்தார்.

அந்த வருடம், முன்னரே சொன்னபடி ஜமீன்தார்களின் உதவியோடு தன்னுடைய டெபாசிட் இலக்குகளை வெற்றிகரமாகக் கடந்து இருந்தார். அது மட்டுமல்ல மண்டல மேலாளர் கேட்டுக்கொண்டபடி, மேலும் இரண்டு கிளைகளுக்கும் தன் ஊரில் இருந்து பெரிய டெபாசிட் தொகையைப் பெற்றுக் கொடுத்திருந்தார். அதனால் மண்டலத்தாருக்கும் அதே வருடம்  ஜி.எம். ஆகப் புரொமோஷன் கிடைக்கும் என்ற உறுதி ஏற்பட்டிருந்தது. ஆகவே கமலக்கண்ணனின் புரமோஷனை  யாராலும் தடுக்கமுடியாது என்று எல்லாருமே நம்பினார்கள்.
 **** 

இனி இன்டர்வியூ அறைக்குள் போவோம். "வாருங்கள், வெற்றியாளரே" என்று தலைவர் இன்முகத்தோடு வரவேற்றார். பொதுவாக, ஒருவரைத்  தேர்ந்தெடுக்கப் போவதில்லை என்றால் அவர் நுழையும்போது தலைவர் அவர் முகத்தை ஏறெடுத்தும் பாராமல் மேஜையில் இருக்கும் காகிதங்களைப்  பார்த்தபடியோ அல்லது காப்பி அருந்தியபடியோ தான் இருப்பார். அல்லது கடுகடுப்பாக உறுமுவதும் உண்டு. எனவே கமலக்கண்ணனுக்கு நம்பிக்கை பிறந்தது. "உங்களுக்கு முன்னால் இருந்த இரண்டு மேனேஜர்களும் செய்ததை விட அதிகமாக நீங்கள் சாதனை செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்” என்கிறார் தலைவர். “உங்கள் வெற்றியின் இரகசியம் என்ன?" என்று புன்சிரிப்போடு கேட்டார்.

இப்படிக் கேட்டால் என்ன பதில் கூற வேண்டும் என்று கமலக்கண்ணனுக்கு உள்ளுணர்விலேயே தெரியும். "மன்னிக்க வேண்டும்  ஐயா! இந்தப் பாராட்டுக்கு நான் ஓரளவுதான்  தகுதி உடையவன்…” என்று  தவறுக்கு வருந்துபவன் போல முகபாவத்தை வைத்துக்கொண்டு கூறி, நிறுத்தவேண்டும். உடனே அனைவரும் ஆர்வமாகப் பார்ப்பார்கள். “என்னுடைய  மண்டல மேலாளர் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்ததால் தான் இது சாத்தியமானது” என்று கூற வேண்டும். சிலசமயம் மண்டல மேலாளருக்கும் வங்கியின் தலைவருக்கும் பனிப்போர் தொடங்கி இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வங்கித் தலைவருக்கு மிகவும் வேண்டிய பொதுமேலாளர் ஒருவர் பெயரைக் கூறிவிட வேண்டும். "அவர் கொடுத்த சில குறிப்புகளால்தான் என்னால் சாதிக்க முடிந்தது" என்று பணிவோடு கூறவேண்டும். 

இந்த இரண்டாவது விதியைப் பின்பற்றி நம் கமலக்கண்ணன் கூறினார்: "ஐயா, இந்த வெற்றியில் பெரும்பகுதி என் பொது மேலாளர் திரு….... அவர்களையே  சாரும். அவருடைய வழிகாட்டுதல் மட்டும் இல்லையென்றால் மிகவும் சிரமப்பட்டிருப்பேன்" என்றார். தலைவரின் முகபாவம் இன்னும் அதிக விவரத்தை எதிர்பார்த்ததுபோல் இருந்ததால், அந்தப் பொதுமேலாளர் எப்படி இரண்டுமுறை ஜமீன்தாரின் வீட்டு விசேஷங்களுக்கு வந்துபோனார் என்பதையும், எவ்வாறு இன்னும் சில நண்பர்களையும் தனக்கு  அறிமுகப்படுத்தினார் என்பதையும் விளக்கமாகக் கூறினார்.

உண்மையில் அந்தப் பொதுமேலாளருக்கும் இவருடைய கிளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால்,  தலைவரின் மகளுக்குச் சென்ற வருடம் நடைபெற்ற திருமணத்தில் எல்லாச் செலவுகளையும் தானே ஏற்றுக்கொண்டு வெற்றிகரமாக நடத்திக்கொடுத்ததாக அந்தப்  பொதுமேலாளருக்கு ஒரு 'இது' உண்டு. ஆகவேதான் அவருடைய பெயரைச் சொல்லி வைத்தார் கமலக்கண்ணன்.

தலைவர் முகத்தில் புன்னகை மின்னியது. மற்ற உறுப்பினர்களிடம் "பார்த்தீர்களா, தனக்குத் தொடர்பில்லாத கிளையாக இருந்தாலும் கூட எவ்வளவு ஆர்வமாக உதவி செய்திருக்கிறார் அந்தப் பொதுமேலாளர்" என்று பாராட்ட, உடனே அவர்கள் எல்லாம் ‘ஆமாம், ஆமாம்’ என்று தலையசைக்க, "நல்லது, கமலக் கண்ணன், நீங்கள் போகலாம்" என்றார் தலைவர் உற்சாகமாக.

ஆனால் இரண்டு நாள் கழித்து புரமோஷன் லிஸ்ட் வெளியானபோது அதில் கமலகண்ணன் பெயர் இல்லை! வெயிட்டிங் லிஸ்ட் நம்பர் 1 இல் அவர் பெயர் வைக்கப்பட்டு இருந்தது. வழக்கம்போலக்  'காத்திருப்பான் கமலக்கண்ணன்' ஆனார்.

கமலக்கண்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. இன்டர்வியூவில் கேட்கப்பட்டது ஒரே ஒரு கேள்விதான். அதற்கு இவர் சொன்னதும் சரியான பதில்தான். உண்மையான பதில்தான். அன்று ஜமீன்தார் வீட்டுத் திருமணத்திற்கு சென்றபோது, அந்தப் பொதுமேலாளரும் வந்திருந்தார். அவர் வருவதுபற்றி இவருக்குத் தெரியாது. பெரிய இடத்து விஷயம் அல்லவா! ஜமீன்தாரிடம் கமலக்கண்ணனைச்  சிறப்பாக அறிமுகப்படுத்தி ஏதோ பேசினார். அதன் பிறகுதான் ஒரு மிகப் பெரிய தொகை டெபாசிட்டாக கிடைத்தது. அப்படியிருந்தும் தனக்கு புரொமோஷன் கிடைக்காமல் போனதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும் என்று புரியவில்லை. யாரிடம் கேட்பது?

நேராக மண்டல மேலாளரிடம் போனார். தனக்கு ஆறுதலாகப் பேசுவார் என்று எதிர்பார்த்தால் வழக்கத்திற்கு மாறாக அவர் கோபமாக இருந்தார். "கமலக்கண்ணன், இனிமேல் இந்த வங்கியில் உங்களுக்கு புரமோஷனே கிடைக்காது. நீங்கள் எந்தப் பொதுமேலாளர் பெயரை இன்டர்வியூவில் கூறினீர்களோ, அவர் இருக்கும் வரை கிடைக்காது" என்று எழுந்து நின்று ஆத்திரமாகக் கூறினார்.

கமலக்கண்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்தப்  பொதுமேலாளரைப் பற்றித் தான் தவறாக ஏதும் கூறவில்லையே, தனக்கும் அவருக்கும் வேறு எந்த விரோதமும் இல்லையே! பிறகு என்னதான் நடந்தது?
***** 

தனக்குத் தெரிந்த இரகசியத்தை மண்டல மேலாளர் இவரிடம் கூறி விடுவாரா? 

கல்கத்தாவில் ஜமீன்தாரின் மருமகன் தொடங்கவிருக்கும் ஒரு தொழிலில் தன் மருமகனைப் பங்குதாரராகச்  சேர்ப்பதற்கு வங்கியின் தலைவர் முயற்சி செய்துகொண்டிருக்கும்போது, இந்தப்  பொதுமேலாளர் அதை எப்படியோ மோப்பம் பிடித்து, தன்னுடைய மகனை அந்த நிறுவனத்தில் பங்குதாரர் ஆக்கிவிட்டார் என்பதும் அதற்காகத்தான் வங்கித் தலைவருக்குத்  தெரியாமலேயே இரண்டுமுறை ஜமீன்தாரின் கிராமத்திற்கு  வந்திருக்கிறார் என்பதும் வெளியில் சொல்லக்கூடிய விஷயங்களா? ஆகவே, அவரைப் பழிவாங்கும் விதமாக நடவடிக்கை எடுப்பதற்கு இரகசியமாக ஆதாரம் தேடிக்கொண்டிருந்தார் தலைவர். அப்போதுதான் கமலக்கண்ணன் கொடுத்த விவரங்கள் அவருக்கு வசதியாகப் போய்விட்டன. அனுமதி பெறாமல் தலைமையகத்தை விட்டு ஆப்சென்ட் ஆனதற்கும், வாடிக்கையாளரின் செலவில் விமானப்பயணம் மேற்கொண்டதற்கும் விளக்கம்கேட்டு, விசாரணை நடத்தி, அவரைப் பதவியிறக்கம் செய்துவிட்டார்கள். எல்லாம் இரண்டே நாளில் நடந்து முடிந்துவிட்ட விஷயம்  கமலக்கண்ணனின் காதுகளுக்கு இன்னும் வந்துசேரவில்லை.

எப்படியோ, மீண்டும் "காத்திருப்பான் கமலக்கண்ணன்" என்று ஆகிவிட்டதில் நம்மவருக்கு ஏற்பட்ட துக்கம் ஆறுவதற்கு வெகு நாட்களாயிற்று. அதன் பிறகு அவர் பிரமோஷனுக்கே  போவதில்லை என்று முடிவுசெய்து அதே கிரேடில் ஓய்வு பெற்றார். அந்தப் பொதுமேலாளரும் ஒரே மாதத்தில் விருப்ப ஓய்வு பெற்றுகொண்டு வடமாநிலம் போய்விட்டார்.

****
ஆலிவ் கார்டனில் உணவு அருந்தியபடி கமலக்கண்ணனிடம் கேட்டேன்: “எப்படி  அமெரிக்கா வந்தீர்கள்?" என்று. மனிதர் உற்சாகமாகப் பேசத் தொடங்கிவிட்டார்.

"என் மகளுக்குத் திருமணமாகி விட்டது. மருமகன் நியூயார்க்கில் வேலை பார்க்கிறார். ஒரு குழந்தை இருக்கிறது. அதைப் பார்த்துக் கொள்வதற்காக ஆறுமாதம் வந்திருக்கிறேன்" என்றார். மருமகனைப் பற்றி மேலும் விசாரித்தேன். அவர் சொல்லக் சொல்ல எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

எந்தப் பொதுமேலாளரால் இவருக்குப் புரமோஷன் கிடைக்காமல் போனதோ, அவருடைய இரண்டாவது மகன் தான் இவருக்கு மருமகனாம்! காதல் திருமணமாம்!

"சரிதான், காத்திருந்தது வீண்போகவில்லை" என்று சிரித்தேன் நான்.
******

(நல்லவேளை, என்னுடைய வங்கியில் இந்த மாதிரியெல்லாம் நடப்பதில்லை!)

© இராய செல்லப்பா


18 கருத்துகள்:

  1. வங்கி விஷயங்கள், ஆந்திர ஜமீந்தார் கதைகள் என அனைத்தும் ஸ்வாரஸ்யம்.

    என்னுடைய ஆரம்ப கால தில்லி வாழ்க்கையில் சந்தித்த வங்கி நண்பர்கள் நினைவுக்கு வருகிறார்கள். பல ஸ்வாரஸ்ய கேரக்டர்கள் கண்டிருக்கிறேன் அப்போது!

    பதிலளிநீக்கு
  2. சார் வங்கி இன்டெர்வ்யூ கேள்விகள் நீங்கள் சொன்ன விதம் சிரிக்க வைத்துவிட்டது. ஸ்வாரஸ்யமான நிகழ்வுகள். ஆனால் வங்கி பற்றிய உயர்வான எண்ணங்களைக் கொஞ்சம் புரட்டியும் போட்டது. எல்லா வங்கிகளும் அப்படியா என்று தெரியவில்லை என்றாலும்.

    கமலக்கண்ணனே எதிர்பார்த்திருக்க மாட்டார் வாழ்க்கை எழுதும் இந்த ட்விஸ்டை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்ற எல்லா பதவிகளையும் போல வங்கிப் பதவிகளும் பல்வேறு அரசியல்களுக்கு உட்பட்டதே என்பதுதான் நான் சொல்லவந்தது. கட்சி அரசியலில் எப்படி சிலர் மட்டும் மேலே வர முடிகிறதோ அதுபோலவேதான். உயர் அதிகாரியின் கவனத்தைப் பெற முடிந்தால் மட்டுமே முனுக்கு வரமுடியும். உழைப்பு, நேர்மை என்பதெல்லாம் வெறும் மண்ணாங்கட்டிதான்.

      நீக்கு
  3. படங்கள் அழகாக இருக்கின்றன சார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ஆந்திர வங்கி மேலாளர்கள் உண்மையாக இருக்குமோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகப்பல வங்கிகளில் புரமோஷன் பெரும்பாலும் ஒரே ஒரு உயர் அதிகாரியின் தன்னிச்சையான முடிவாகவே இருக்கிறது. அவரைச் சார்ந்து ஒழுகாதவர்கள் பாடு திண்டாட்டமே. அடுத்த நிலையில் இருக்கும் அதிகாரிகள் பெரும்பாலும் ஆமாம் சாமிகளாகவே இருப்பது வழக்கம். எனது வங்கிப் பணியின் ஆரம்ப நாட்களில் ஆந்திரத்தில் இருந்ததால் அங்கிருந்த பொதுவான இயல்புகளை எழுத்தில் வடிப்பதைத் தவிர்க்க முடியாமல் பொகிறது.

      நீக்கு
  5. இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கவே இல்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையில் சில உண்மைகள் உண்டு. அதில் இந்தத் திருப்பமும் உண்மையே.

      நீக்கு
  6. சில அனுபவங்களெ கதையாகலாம் நன்றாக சொல்லப்பட்ட கதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ற்பனைக் கதைகளை விட அனுபவக் கதைகளே மக்களால் விரும்பப்படுவதாக பத்திரிகையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

      நீக்கு
  7. சற்றே நீளம்தான். ஆனாலும் விறுவிறுப்பு குறையாமல்... மிக அருமை.

    பதிலளிநீக்கு
  8. சுவாரஸ்யம்! முடித்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  9. கடைசித் திருப்பம் இறைவன் திருவிளையாடல்! தமிழ் சினிமா க்ளைமேக்ஸ் என்றும் சொல்லலாம்!

    பதிலளிநீக்கு
  10. உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் லேசான முறுவலுக்கு தயாரான நிலை. அப்புறம் அடுத்த பாராவிலேயே அது முறுவலான நிலை. அதற்கு அடுத்த பாராவிலோ ஹி..ஹி.. அதற்கு அடுத்த பாராவில் ஹி..ஹி.. ஹி.. அதற்கு அடுத்து என்னுள் பூகம்பமாய் புறப்பட்ட வெடிச்சிரிப்பு.. ஹா..ஹா...ஹா...

    யதார்த்தக் கலவையில் முக்கி எடுத்து, நாஸுக்காக தெரிந்தவரக்ளுக்கே தெரியும் விஷயப் பொடிகளைத் துவி, கலக்கி இப்படி கலகலப்படுத்துவீர்கள் என்று எனக்குத் தெரியாதிருந்தது. தூள் பரத்தியிருக்கிறீர்கள்.. கங்கிராட்ஸ்! ...

    தேவன் வந்து விட்டார்!..

    பதிலளிநீக்கு
  11. //ஆம், ஐயா. நீளத்தைக் குறைக்கவேண்டும். இனிமேல்!..//

    நீளத்தை குறைப்பதாவது?.. அப்புறம் படிப்படிப்பாய் முன்னேறி அந்த ஹா..ஹா.. ஹா.. இறுதி நிலையை நாங்கள் எய்துவது எப்படி, ஐயா?.. வேறு ஏதாவது புது மார்க்கம் கைவசம் வைத்திருக்கிறீர்களா, என்ன?..

    பதிலளிநீக்கு
  12. சுந்தர பாகவதர் (புனிதன்) குமுதத்தில் அருமையாக மிகவும் சுவாரசியமாக எழுதுவார். அதுபோல மிகவும் ரசித்தேன்.மெல்லிய நகைச்சுவை, நயமான எழுத்து நடை.அருமையான கரு.சம்பவங்கள் உண்மையாகவே நடந்திருக்க வாய்ப்பு இருப்பதைப் போலத் தோற்றம். நிறைய இதுபோல் எழுதவும்.மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  13. படங்கள் அத்தனையும் குல்பி ஐஸ் ஐ விட சுவையாக இருக்கிறது ... கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    பதிலளிநீக்கு