புதன், ஆகஸ்ட் 14, 2019

இரவு விருந்துக்கு வரப்போவது யார் தெரியுமா?


இரவு விருந்துக்கு வரப்போவது யார் தெரியுமா?

1967 இல் அமெரிக்காவில் ஒரு காதல் (சினிமா)

Guess Who Is Coming to Dinner என்ற ஹாலிவுட் திரைப்படம் நகைச்சுவை கலந்த சீரியஸ் படமாகும். டைரக்டர் ஸ்டேன்லி க்ராமர். கதாசிரியர் வில்லியம் ரோஸ்.

இன்றைக்கு 52 வருடங்களுக்கு முன்பு வெளியான படம் என்றாலும் அதில் அடங்கி இருக்கும் கருத்து இன்றளவும் அமெரிக்காவில் உயிரோடு இருக்கிறது என்பதுதான் ஆச்சரியம்.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயகக்  கட்சி சார்பில் வெள்ளையரல்லாத மூன்று பெண்மணிகள் போட்டி போட முன்  வந்திருப்பதும், அவர்களில் இருவர் இந்திய வம்சாவளிப் பெண்கள் என்பதும், இந்த மூன்று பேரையும் வர விடாமல் தடுப்பதற்காக, அதே கட்சியில் முன்பு ஒபாமாவிடம் உதவி ஜனாதிபதியாக இருந்த ஜோ பிடன் என்ற வெள்ளையரை முன்னுக்குக் கொண்டுவர வெள்ளை இன உணர்வு கொண்டவர்கள் திரைமறைவில் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதாகக் கூறப்படும் சூழ்நிலையில் இத்திரைப்படம் நிச்சயம் நீங்கள் பார்க்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

படத்தின் மிக முக்கியமான அம்சம் அதனுடைய ஒவ்வொரு காட்சியும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு இருப்பதுதான். பாத்திரங்களுக்கு ஏற்ற பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்திருப்பதும், வசனங்கள் அற்புதமாக எழுதப்பட்டு இருப்பதும், சுவாரஸ்யம்  குறையாமல் படத்தின் இறுதிவரை சஸ்பென்ஸ் கொண்டு போகப்பட்டிருப்பதும் தான் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப்  படம் மக்கள் கவனத்தில் இருப்பதற்குக் காரணம்.

இந்தப் படம் முழுவதுமாகவும் துண்டு துண்டாகவும் யூட்யூபில் கிடைக்கிறது. அமேசான், நெட்ஃப்ளிக்ஸிலும் உண்டு.
நாயகன் - நாயகி படம்-நன்றி: இணையம்
நடிகர்கள் கதாநாயகன் ஸிட்னி பாய்ட்டியர் (Sydney Poitier), கதாநாயகி கேதரின் ஹவ்ட்டன் (Katharine Houghton), கதாநாயகியின் தந்தை ஸ்பென்ஸர் ஸ்டிரேஸி (Spencer Tracy), கதாநாயகியின் தாய் கேதரின் ஹெபர்ன் (Katharine Hepburn, கதாநாயகனின் தந்தை ராய் கிளென் (Roy Glenn), கதாநாயகியின் தாய் பியா ரிச்சர்ட்ஸ் (Beah Richards).

சிறந்த அசல்  திரைக்கதைக்காக ஆஸ்கார் விருது பெற்ற படம் இது. கதாநாயகி யின் தாயாக நடித்த கேதரின் ஹெபர்னுக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதும் கிடைத்தது. கதாநாயகியின் தந்தையாக வரும்  ஸ்பென்ஸர் ஸ்டிரேஸி யும் சிறந்த நடிகருக்கான ஆஸ்காரை இரண்டுமுறை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கதாநாயகியின் தாயும் தந்தையும் -நிஜத்திலும் ஜோடி. படம்-நன்றி: இணையம் 

சிட்னி பாய்ட்டியர் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது பெற்ற முதல் கறுப்பின ஹாலிவுட் நடிகர் ஆவார். (1964இல் “Lilies of the field” படத்திற்காகக்   கிடைத்தது.) “In the heat of the night”, “To Sir, with love”, “A raisin in the sun”  முதலிய படங்களில் நடித்தவர்.  ஃபிளாரிடாவில்  மையாமியில் இப்போது வசிக்கும் அவருக்கு வயது 92.

சாவித்திரி - ஜெமினி கணேசன் மாதிரி, விஜயகுமாரி - எஸ்.எஸ்.ஆர். மாதிரி, புஷ்பலதா - ஏவிஎம் ராஜன் மாதிரி இந்தப் படத்தில் கதாநாயகியின் பெற்றோராக வரும் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியானவர்கள் - கேதரின் ஹெபர்ன் (Katharine Hepburn), ஸ்பென்ஸர் ஸ்டிரேஸி (Spencer Tracy). ஆனால் திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்கு இரண்டு நாள் முன்பே ஸ்பென்ஸர் ஸ்டிரேஸி  காலமாகிவிட்டார் (ஜூன் 10, 1967).  ஆனால் அந்த இறுதிச் சடங்கிற்கும் ஹெபர்ன் போகவில்லை. “அவருடைய குடும்பத்தினர் என்ன நினைப்பர்களோ என்றுதான் போகவில்லை” என்று விளக்கினார் ஹெபர்ன். ஹாலிவுட் -ஆஸ்கார்  சரித்திரத்திலேயே இவருக்குத்தான் 12 முறை ஆஸ்காருக்குப் பரிந்துரைகள் செய்யப்பட்டனவாம். அதில் நான்குமுறை விருது கிடைத்திருக்கிறது. 

கதாநாயகியாக நடித்திருக்கும் பெண் கேத்தரினா ஹவ்ட்டனுடைய சொந்த அத்தை தான் அவருக்கு அம்மாவாக நடிக்கும் இந்த கேதரின் ஹெபர்ன் . இந்த படத்திற்காகவே தேர்வு  செய்யப்பட்ட இளம் நடிகை என்பதால் முதல் படமான இதன் போஸ்டர்களில் கேத்தரின் ஹவ்ட்டன் பெயர் எங்கும் இடம்பெறவில்லை. அதன்பிறகு, ஹவ்ட்டன், விட்டு விட்டு சில படங்களில் நடித்தார்.  கடைசியாக 2010இல் நம் பாண்டிச்சேரிக்காரரான மனோஜ் நைட் சியாமளன் தயாரித்த The Last Airbender என்ற படத்தில் பாட்டியாக நடித்தார். ஆனால் பிராட்வேயில் நடைபெறும் நாடகங்களில் 60க்கும் மேற்பட்ட தயாரிப்புகளில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுயமாக நாடகங்கள் எழுதியதுடன் பிற மொழிகளிலிருந்து நாடகங்களை நடிப்பதற்கு ஏற்றவாறு மொழிபெயர்த்திருக்கிறார்.

முதற் காதலில் விழுந்து விட்ட இளம்பெண்ணின் மனோபாவத்தை அற்புதமாக வெளிப்படுத்தும் ஹவ்ட்டனின் துடிப்பும் துள்ளலும் மறக்க முடியாதவை.

கதையைப் பார்க்கலாமா?

கலிபோர்னியாவில் ஸான் ஹோஸேயில் பத்திரிகை அதிபராக இருக்கும் வெள்ளை நிறத்தவர்களான பெற்றோர்களின் ஒரே மகள் ஜொயானா. வயது 23. அதே கலிபோர்னியாவின் ஸான் பிரான்சிஸ்கோவில் வசிக்கும் கறுப்பு இனத்தவரான ஓய்வு பெற்ற தபால்காரின் மகன் ஜான். (ஜான் பிரெண்ட்டிஸ்) வயது 38. மருத்துவ டாக்டர் பட்டம் பெற்று ஆப்பிரிக்காவில் சில ஆண்டுகள் பணிபுரிந்தவர். மருத்துவ ஆராய்ச்சியில் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் பல நாடுகளுக்கும் சென்று வருபவர். திருமணமானவர். ஆனால் மனைவியும் குழந்தையும் ஒரு விபத்தில் மரணம் அடைந்து விட, கடந்த 8 ஆண்டுகளாக அன்புக்காக ஏங்கித் தனிமையில் வாழ்பவர்.

இந்த இருவரும் ஜெர்மனியில் சந்தித்துக் காதல் கொள்கிறார்கள். காதல் ஏற்பட்டதே தவிர இன்னும் அவர்களுக்குள் உடல் நெருக்கம் ஏற்படவில்லை. ஆனால் பெற்றோரிடம் நேரில் தெரிவித்துவிட்டு வந்து திருமணம்  செய்துகொள்வதாக ஏற்பாடு செய்துவிட்டார்கள்.

தன் காதலனைத்  தன் வீட்டாருக்கு அறிமுகப்படுத்துவதற்காக வரவழைக்கிறாள் ஜொயானா. உண்மையில்  அது ஜானின் ஏற்பாடு. வெள்ளை இனத்துப் பெண்ணைத் தனக்கு மணம்  புரிவிக்க அவளுடைய பெற்றோர்களுக்கு சம்மதம் இருக்கிறதா என்பதை நேரில் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஜெர்மனியில் இருந்து நியூயார்க் போகும் வழியில்  ஜொயானா  வீட்டுக்கு வருகிறான் ஜான்.

படத்தின் ஆரம்பத்தில் தாயாருக்குப் போன் செய்கிறாள் ஜொயானா. "அம்மா இன்று நம் வீட்டிற்கு இரவு விருந்துக்கு வரப்போகும் விருந்தினர் யார் தெரியுமா?" என்கிறாள். அதுதான் படத்தின் தலைப்பு.

“இருபதே  நிமிடங்களில் அவர்மீது  காதல் கொண்டுவிட்டேன், ஆச்சரியமாக இல்லை?” என்று வெகுளியாக ஜோயானா கேட்கும்போது அவள் கண்களில் பளிச்சிடும் மின்னலைப் பார்க்கவேண்டுமே! ஆனால் அதைப்  பொறுமையாகக் கேட்ட தாய், “காதலில் விழுவதற்கு அவ்வளவு நேரம் தேவையா?” என்று சிரித்துக்கொண்டே அவளை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறார்.

நேரில் ஜானை அம்மாவிடம் அறிமுகப்படுத்தும் வரையில் அவன் கறுப்பு இனத்தைச் சேர்ந்தவன் என்பதைச் சொல்லாமல் ஆச்சரியப்படுத்துகிறாள். ஜானை நேரில் பார்த்ததும்  மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தாயாக வரும் ஹெபர்ன் தவிக்கும் தவிப்பு இருக்கிறதே அதைப் படம் பார்த்தால் தான் புரிந்து கொள்ள முடியும். மகள் வருவதைக் கேட்டு அலுவலகத்தில் இருந்து வரும் தந்தை ஸ்பென்ஸர் ஸ்டிரேஸியும் அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். ஒரு கறுப்பரைக் காதலிப்பதாக முன்கூட்டியே சொல்லாமல் அவரை நேரில் அழைத்துவந்து அறிமுகப்படுத்தும் மகளை அவளுடைய  வெகுளித்தனத்திற்காக மனதிற்குள் கோபம் பொங்கி வந்தாலும் அந்தக் காதலில் அவள்  எந்தப்  பாசாங்கும் இல்லாமல் முழுமனதோடு விழுந்திருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டு மேற்கொண்டு என்ன செய்வது என்று மனதிற்குள்ளேயே தவிக்கும் ஸ்டிரேஸியின் நடிப்பும் அற்புதமானது.

அதற்குள் ஜான் தன் காதலைப் பற்றித் தன் பெற்றோர்களுக்கு போன் செய்கிறான். எட்டு வருடங்களாக மனைவியை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் மகன் இப்பொழுதாவது ஒருத்தியைத் தேடிக் கொண்டானே  என்று அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால் அந்தப் பெண் ஒரு வெள்ளை இனத்தவள் என்பதை ஜான் தெரிவிக்கவில்லை.

கோல்ப் விளையாடி விட்டு வந்துவிடுவதாக வெளியில் கிளம்பிய ஸ்டிரேஸி,  மனதை மாற்றிக்கொண்டு மாடிக்குச் சென்று விடுகிறார். அங்கு ஜானைச் சந்திக்கிறார்.
எதிர்கால மாமனாரை சந்திக்கும் நாயகன். படம்- நன்றி: இணையம்

“உங்களிடம் தனியாகப் பேசவேண்டும் “ என்கிறான். ஜொயானாவுக்குத்  தெரியாமல் அவருக்கு ஒரு வாக்குறுதி கொடுக்கிறான். "பெற்றோர்கள் சம்மதம் இல்லாவிட்டால் நான் இந்த திருமணத்திற்கு உடன்படப் போவதில்லை" என்கிறான். ஆனால் “இதை அவளிடம் சொல்ல வேண்டாம்” என்கிறான்.

இரவு விருந்துக்கு அனைவரும் தயாராகும்பொழுது ஜானுக்கு போன் வருகிறது. மகனைப் பல வருடங்களாக நேரில் பார்க்கவில்லை என்பதால், இப்போது அவன் இருக்கும் நகரம், வெறும் 40 நிமிட விமானப் பயண தூரத்தில் தான் இருப்பதால் தாங்கள் இருவரும் உடனே கிளம்பி வருவதாகத் தெரிவிக்கிறார்கள். இதைச் சற்றும் எதிர்பார்க்காத ஜான்  திகைத்துப் போகிறான். ஆனால் ஜொயானாவும் அவள் தாயும் அவர்கள் வரவை ஆவலோடு  எதிர்பார்ப்பதாகச் சொல்கிறார்கள். இப்போது தந்தையைப் பார்த்து "அப்பா இன்று இரவு விருந்துக்கு வரப்போவது யார் என்று தெரியுமா?" என்கிறாள் ஜொயானா. அவருக்கும் அதிர்ச்சியாகவே இருக்கிறது. இதுவும் ஜோயானா-ஜான் செய்த தந்திரமாக இருக்குமோ என்று யோசிக்கிறார்.

அவர்கள் வீட்டில் சமையல் கட்டில் பணிப்பெண்ணாக இருக்கும் கருப்பினத்தவள் ஜானிடம் வந்து அவன் செய்யப்போகும் காரியம் தகாத காரியம் என்று எச்சரிக்கிறாள். அதே சமயம் ஜொயானாவின்  தந்தையுடன் வழக்கமாக கோல்ப் விளையாடும் சற்றே சுதந்திரமான சிந்தனை உடைய ஒரு பெரியவர், அன்று மட்டும் ஜொயானாவின் தந்தை  விளையாட வராத காரணத்தைத் தெரிந்துகொள்வதற்காக அங்கு வருகிறார். ஜொயானாவைச் சின்னக் குழந்தையில் இருந்து தெரிந்தவர் அவர். வேற்றினத்தவன் மீது அவளுடைய காதலைத் தெரிந்து கொண்டதும் அவளுக்குத் தன் ஆதரவைத் தெரிவிக்கிறார். இரவு விருந்துக்கு அவரும் அழைக்கப்படுகிறார்.

இரவில் அவர்கள் ஒவ்வொருவரும் கனத்த மனத்தோடு சந்திக்கிறார்கள். ஜானின் தந்தை "33000 மைல்கள் நடந்து உன்னை வளர்த்தேன். இப்படி விவரம் தெரியாமல் நடந்து கொள்கிறாயே" என்று சத்தம் போடுகிறார். “நீ தபால்காரனாக இருந்து நடந்தாய் என்றால் அது நீயாகத் தேடிக்கொண்ட தொழில். அதற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்? நானாக வந்தா பிறந்தேன்? நீதானே என்னைப் பெற்றெடுத்தாய்?” என்று சீறுகிறான் மகன். 

"என் மகள் எந்த முடிவு எடுத்தாலும் அவளுடைய தந்தையே எதிர்த்தாலும், என் மகளுக்கு நான் ஆதரவாக இருப்பேன்" என்கிறாள் ஜொயானாவின் தாய்.
நாயகனின் பெற்றோர் நாயகியுடன். படம் -நன்றி: இணையம் 

"நீங்கள் இருக்கலாம், ஆனால் எங்களைச் சேர்ந்தவர்கள் இந்த முடிவை ஏற்க மாட்டார்கள். ஆகவே எனக்கு சம்மதமில்லை" இன்று ஜானின் தாய் மிகவும் மென்மையாக ஆனால் அழுத்தமாகப் பேசுகிறார்.

அற்புதமான விஷயங்கள். தர்க்க ரீதியான வாதங்கள். ஜொயானாவின் தந்தையாக வரும் ஸ்டிரேஸி பல்வேறு முக பாவங்களுடன் வசனங்களைச்  சற்றும் செயற்கை இல்லாமல் தன் முடிவு என்ன என்பதைக் கடைசி வரை சொல்லாமலே, ஆனால் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டே போகிறார். சரி, இவர்களின் காதல் வெற்றி பெறப் போவதில்லை என்றுதான் நமக்கு எண்ணத் தோன்றுகிறது.

அப்போதுதான் அந்த அதிர்ச்சியூட்டும் உண்மையை அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார் ஜொயானாவின் தந்தை. அப்போது அமெரிக்காவில் 17 மாநிலங்களில் கறுப்பு இனத்தவரும் வெள்ளை இனத்தவரும் திருமண உறவு கொள்வது சட்டப்படி தடுக்கப்பட்டிருந்தது மட்டுமல்ல குற்றமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. "எனவே நீங்கள் திருமணம் செய்து கொண்டு ஜெயிலுக்குப் போகப் போகிறீர்களா?" என்கிறார்.

இந்த படம் வெளியாவதற்கு ஆறு மாதங்கள் முன்பு அந்தப் பதினேழு மாநிலங்களிலும் அந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. (as per ruling by Supreme Court in LOVING vs VIRGINIA, 1967). அதாவது இரு இனத்தவரும் திருமண உறவு கொள்வதில் தவறில்லை என்று ஆகியது. ஆனால் இந்த விஷயத்தையே கிளைமேக்ஸாக டைரக்டர் அமைத்திருந்ததால்  அவசரம் அவசரமாக அந்த வசனத்தை மாற்ற வேண்டி வந்ததாம். அதை  எப்படி மாற்றினார்கள் தெரியுமா?

"நீங்கள் திருமணம் செய்து கொண்டு இந்த 16 மாநிலங்களில் இருந்தால் ஜெயிலுக்கு போக வேண்டி வரும். சமீபத்தில் சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது என்றாலும் மக்கள் மனதில் மாறுதல் ஏற்படுவதற்கு இன்னும் எத்தனை வருடம் ஆகுமோ? அந்த ஆபத்தை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா?" என்று வசனம் மாற்றப்பட்டு விட்டது.

அப்போதும் அவர் ஜொயானாவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா அல்லது மறுக்கிறாரா என்று நமக்குத் புரிவதில்லை.

பணிப்பெண் சாப்பாட்டு மேஜையில் தட்டுகளில் விருந்தைப் பரிமாறி முடித்துவிட்டாள். சாப்பிட வரலாம் என்று சைகை செய்கிறாள். அந்த நிமிடம் தான் அந்த இரகசியத்தைப் போட்டு உடைக்கிறார் ஸ்டிரேஸி. "பெண்ணைப் பெற்றவர்கள் சம்மதிக்கவில்லை என்றால் நான் இவளைத் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று ஜான் என்னிடம் சொன்னார்"

இந்த அதிர்ச்சியான தகவலை ஜொயானாவால்  நம்ப முடியவில்லை. ஜானை ஆவேசமாக உற்றுப் பார்க்கிறாள். அவன் தலையைக்  குனிந்து கொள்கிறான்.

ஸ்டிரேஸி மேலும் பேசுகிறார்: "ஒரு ஆண் ஒரு பெண்ணைக் காதலித்தால் அவன் கவலைப்பட வேண்டியது பெண்ணைப் பெற்றவர்களின் சம்மதத்தைப் பற்றி அல்ல. அவள் மீது அவன் வைத்த அன்பு உண்மையானது என்றால் அவளைத் திருமணம் செய்து கொண்டே தீருவேன் என்று உறுதியாக இருக்க வேண்டும். நான் அப்படித்தான் இருந்திருப்பேன்.  அந்த உறுதி ஜானிடம் இருக்கிறதா?" என்கிறார்.

அப்போதுதான் நமக்குப் புரிகிறது.

உடனே பணிப்பெண்ணைப் பார்த்து,  "நல்லது,  சாப்பிட வரலாமா?" என்கிறார் ஸ்டிரேஸி. அனைவர் முகத்திலும் அதிர்ச்சியான சந்தோஷம்.  இன வேற்றுமையைக் கடந்த காதலின் வெற்றி அந்த விருந்தில் பரிமளிக்கிறது.

ஒரு நொடி கூடப்  பார்ப்பவர்களின் பொழுதை வீணாக்காத வகையில் (ஸ்ரீதரின் 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படம் மாதிரி) விறுவிறுப்பாகவும்  உணர்ச்சி ததும்பும் விதத்திலும் அமைந்த படம் இது. அந்நாளில் இது ஒரு புரட்சிப்படமாகக் கருதப்பட்டது. காரணம், கறுப்பின ஆணும் வெள்ளையினப் பெண்ணும் காதலித்தும், காதலில் அவர்கள் வெற்றியடைந்ததாகக் காட்டப்பட்ட முதல் ஹாலிவுட் படம் இது தானாம்!

சிட்னி பாய்ட்டியரின் வாழ்க்கைத் கதையை அவரது சொற்களிலேயே படிக்க விரும்பினால் உங்களுக்கான புத்தகம் இது:  The Measure of a Man : A Spiritual Autobiography (2000) -HarperCollins.

-       இராய செல்லப்பா


22 கருத்துகள்:

  1. ஓ.... இப்படி ஒருபடம் இருப்பது பற்றி மட்டும் அல்ல, அப்படி ஒரு சட்டம் இருந்தது என்பதையும் தெரிந்துகொண்டேன். அமேசானிலிருக்கிறதா என்று பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமெசான் ப்ரைமில் கிடைக்கிறது. தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  2. அட! இப்படம் பற்றி இப்போதுதான் அறிகிறேன். குறித்துக் கொண்டுவிட்டேன். யுட்யூபில் பார்க்க முடியும் என்றால் பார்த்தும் விட வேண்டும்.

    //இந்தப் படம் வெளிவந்த சில ஆண்டுகளில் ஸ்டிரேஸி காலமாகிவிட்டார். ஆனால் அந்த இறுதிச் சடங்கிற்கும் ஹெபர்ன் போகவில்லை. “அவருடைய குடும்பத்தினர் என்ன நினைப்பர்களோ என்றுதான் போகவில்லை” என்று விளக்கினார் ஹெபர்ன். ஹாலிவுட் //

    இப்படி அந்த நாட்டிலும் கூட நினைப்பார்களா? ஆச்சரியம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன இது, புதிதாகப் பேசுகிறீர்கள்? நடிகையுடன் வாழ்கிறான் கணவன் என்றால் தாலி கட்டிய மனைவி சும்மா இருந்துவிடுவாளா? (என்னதான் அந்த நாட்டில் தாலி இல்லையென்றாலும் கூட!) அதனால்தான் ரசாபாசம் வேண்டாம் என்று ஹெபர்ன் போகவில்லை.

      நீக்கு
  3. மனோஜ் நைட் சியாமளனின் பெற்றோர் சென்னையில் இருக்கிறார்கள் என்பது தெரியும். அதுவும் அடையாரில் என்று அறிந்த் நினைவு. ஆனால் அவர் பாண்டிச்சேரிக்காரர் என்பது இப்போதுதான் தெரிகிறது சார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அடையாரில் இருந்தவரை இந்தத் தகவலை நீங்கள் சொல்லாமல் போனது ஏனோ?

      நீக்கு
  4. Read this with tonnes of patience sir. A well written page about a good old movie..
    Superb..
    As usual

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பொறுமையைப் பாராட்டுகிறேன் நண்பரே! நான் மார்க்கெட்டிங் படித்தவன். நமது கடையில் யாராவது நுழைந்துவிட்டால் போதும், அவர்களை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் கடையிலேயே இருத்திக்கொள்ள வேண்டும் என்பது மார்க்கெட்டிங்கின் அரிச்சுவடியாகும். அப்போதுதானே ஏதாவது விற்பனை நடக்கும்? (சீரியஸாக எடுத்த்க்கொள்ள வேண்டாம்.) தங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  5. ஆஹா.. என்னமாய் நேரேட் பண்ணியிருக்கிறீர்கள்?.. அந்த Presentation ஜாலம் தான் உங்களின் பலம். இந்த கதை எனக்குத் தெரியாது. அதனால் பதைபதைப்புடனேயே வரிவரியாக வாசித்து வந்தேன். கடைசியில் திருமணம் நடந்ததா இல்லையா என்ற சஸ்பென்ஸ் வேறு. நீங்களும் அந்த முடிச்சை லேசில் அவிழ்க்காமல் கடைசி வரையில்
    அடம் பிடித்து.....

    சாவித்திரி-- ஜெமினி, விஜயகுமாரி--எஸ்.எஸ்.ஆர் லிஸ்டில் எங்கேயாவது மாற்றி எழுதி (ஆனை முன்னுக்குப் போட்டு) கோட்டை விட்டு விடுவீர்களோ என்று செக் வேறு பண்ணிக் கொண்டேன். ஏனென்றால் இதற்கு ஒப்புமைபடுத்த பின்னாடியே ஸ்டிரேஸி - ஹெபர்ன் ஜோடி வருகிறது. நீங்களாவது கோட்டை விடுவதாவது??..

    நிஜ வாழ்ககையிலும் என்ன சோகம் பாருங்கள். சில ஆண்டுகளில் ஸ்டிரேஸி காலமாக, அந்த இறுதிச் சடங்கிற்கும் ஹெபர்ன் போகவில்லை என்பதும் “அவருடைய குடும்பத்தினர் என்ன நினைப்பர்களோ என்றுதான் போகவில்லை” என்ற அவரது விளக்கமும்... ச்சே! என்ன அநியாயம் சார்! திரைப்படம் ஒரு பக்கம் என்றால் இந்த நிஜ உறுத்தல் இன்னொரு பக்கமுமாய்..

    கடைசியாக எனக்கு ஒரே ஒரு சந்தேகம். 'Guess Who Is Coming to Dinner' திரைப்படமும் தமிழில் உல்ட்டா பண்ணி எடுக்கப்பட்டிருக்கிறதோ?..

    நம் ஆட்கள் தான் சுவடு தெரியாமல் ஒற்றி எடுப்பதில் வல்லுனர்கள் ஆயிற்றே! ... யாராவது சொன்னால் தான் தெரியும்.. பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் இரண்டாவது, மூன்றாவது பாராக்களில் இருந்த சரித்திரப் பிழையை இப்போது சரிசெய்துவிட்டேன். (நேரம் இருந்தால் படித்துப் பாராட்டலாம்.) இந்தப் படம் தமிழில் வராமலா இருந்திருக்கும்? ஆனால் எனக்கு சினிமாவைப் பொறுத்தவரையில் ஞானம் போதாது. யாராவது உதவி செய்கிறார்களா என்று காத்திருப்போம்.

      நீக்கு
  6. ஒரு நொடி கூட வாசிப்பவர்களின் மனதை மாற்றாத வகையில்...

    விமர்சனம்...! சூப்பர்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வசிஷ்டர் வாயால் பிரும்ம ரிஷியா! என்னே என் பிறவிப்பயன்! த்ங்கள் வரவுக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  7. புரிந்த மொழிப்படங்களே அலர்ஜி சினிமாரசிகர்கள் ரசிக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைவரே, எப்போதும் சீரியஸான விஷயமாகவே யோசிக்கலாமா? சிறிது நேரம் சினிமாவும் பார்க்கவேண்டும் அல்லவா? விரைவில் உங்களிடமிருந்தும் ஒரு (கன்னட) சினிமா விமர்சனத்தை எதிர்பார்க்கலாமா?

      நீக்கு
  8. எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று இது . இருபது வயதில் சென்னையில் கெல்லீஸ் தியேட்டரில் பார்த்தேன் . இப்போது அது வணிக அதிகமாகிவிட்டது. ஹாலிவுட் நடிகர்களில் சிட்னி பாய்ட்டர் ஒரு மிகச் சிறந்த நடிகர் .

    பதிலளிநீக்கு
  9. இந்த திரைப்படக்கதையை தாங்கள் விவரித்திருந்த விதம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. சிட்னி ஷெல்டன் நாவல் படிப்பது போல இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையிலேயே அழகான விறுவிறுப்பான படம். உங்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  10. நல்லதொரு படம் பற்றிய விமர்சனம். சிறப்பாக வந்திருக்கிறது. படம் பார்க்க முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. youtube ல் துண்டு துண்டாக இருக்கும் படத்தை இங்கு ஒன்றாக கோர்த்து தந்துவிட்டீர்கள் ... அருமை ... கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    பதிலளிநீக்கு