(1) அமெரிக்க ஜனாதிபதி
ஆவாரா இந்தி நடிகரின் மாமியார்?
2020 நவம்பரில் நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதித்
தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு இப்பொழுதே ஆரம்பித்துவிட்டது.
அமெரிக்காவில் இருப்பது இரண்டு முக்கிய கட்சிகள் தான்
குடியரசுக் (ரிபப்ளிகன்) கட்சியும், ஜனநாயகக் (டெமாக்ரடிக்) கட்சியும் தான்.
இரண்டு முறை ஜனநாயகக் கட்சியின் பாரக் ஒபாமா ஜனாதிபதியாக
இருந்த பிறகு, அவருக்கு நேர்மாறான குணாதிசயம்
கொண்டவராகக் கருதப்பட்ட வர்த்தகர் டொனால்டு டிரம்ப் 2016இல் ஜனாதிபதி ஆனார். அவரது நான்காண்டுப் பதவிக்காலம் 2020 நவம்பர் உடன் முடிகிறது.
அமெரிக்காவில் தேர்தல் முறை விசித்திரமானது. கட்சிகளின்
நடைமுறை அதைவிட விசித்திரமானது.
இங்கு எந்தக் கட்சியின் தலைவரும் தன் மகனையோ மகளையோ
மருமகனையோ மருமகளையோ தனக்கு வாரிசாகப் பதவிக்குக் கொண்டு வந்துவிட முடியாது. அது மட்டுமல்ல
பதவிக்குரிய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கூடக் கட்சித் தலைவருக்குக் கிடையாது.
அதாவது ஜனாதிபதி பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிட
முன் வரலாம். இரண்டு திறமைகள் தான் இருக்க வேண்டும். ஒன்று தன்னுடைய கட்சியில், தான்
இருக்கும் ஊரின் கிளையிலிருந்து முதலில் ஜனாதிபதிக்கான வேட்பாளராக விதிக்கப்பட்ட குறைந்தபட்ச
வாக்குகள் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அப்படி எத்தனை பேர் வேண்டுமானாலும்
தேர்ந்தெடுக்கப்படலாம். பிறகு அடுத்த கட்டமாக (உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால்) மாவட்ட
அளவில் இவர்களில் யாராவது தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பிறகு தங்கள் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட
வேண்டும். இவ்வாறு 50 மாநிலங்களில் இருந்தும் (உதாரணத்திற்கு) குறைந்தபட்சம் 50 வேட்பாளர்கள்
வரக்கூடும். அதன்பிறகு அவர்களிலிருந்து யாராவது சில பேர் தேசீய அளவில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
(அதற்கென்று ஒவ்வொரு கட்சியிலும் பெரிய வழிமுறை உண்டு.)
ஜனாதிபதி பதவிக்கு வரும் வேட்பாளர் "ஜோடியாக"
போட்டியிட வேண்டும். அதாவது, தனக்கு யார் உதவி ஜனாதிபதியாக வரவேண்டும் என்று ஒருவரை
அவரே தேர்ந்தெடுத்துக் கொண்டு இறுதி முடிவு கிடைக்கும் வரை ஜோடி பிரியாமல் நிற்க வேண்டும்.
கடைசியில் நாடு முழுவதும் சேர்த்து இறுதியான உள்கட்சித்
தேர்தலில் இரண்டு அல்லது மூன்று ஜோடிகள் முக்கியமானவையாக வந்து நிற்கும்.
அப்போதுதான் கட்சித் தலைமை தலையிடும். அந்த இரண்டு,
மூன்று ஜோடிகளில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ள - முக்கியமாகப் பணபலம் உள்ள
- ஒரு ஜோடி எதுவென்பதைக் கட்சியின் உயர்மட்ட தலைவர்களும் தேசீய மாநாட்டின் உறுப்பினர்களும் முடிவு செய்வார்கள். சில சமயம் இரண்டு ஜோடிகளில் ஒரு ஜோடியில் இருந்து ஒருவரை
ஜனாதிபதிக்கும், இன்னொரு ஜோடியில் இருந்து ஒருவரை துணை ஜனாதிபதிக்கும் நிற்குமாறு
கட்சி அவர்களை சமாதானப்படுத்த க்கூடும். 2008 தேர்தலின்போது, ஒபாமா ஜோடிக்கும் ஹில்லரி
கிளிண்ட்டன் ஜோடிக்கும் கடும் போட்டி வந்தபோது, கட்சித் தலைமை தலையிட்டு ஒபாமாவை ஜனாதிபதியாகவும்,
ஹில்லரியை துணை ஜனாதிபதியாகவும் நிற்பதற்கு முயற்சி செய்தார்கள். ஆனால் ஹில்லரி ஒப்புக்கொள்ளவில்லை.
பிற்பாடு ஒபாமா வெற்றி பெற்று ஜனாதிபதி ஆன பிறகு, அவரை சமாதானப்படுத்தும் விதமாக ஒபாமாவின்
கீழ் உள்துறை அமைச்சராக சக்தி வாய்ந்த பதவி
வழங்கப்பட்டது.
ஆனால் ஒன்று, வேட்பாளர்களுக்குக் கட்சியில் இருந்து
பணம் கிடைக்காது. அதேபோல் வேட்பாளராக நிற்பதற்கும் கட்சித் தலைவருக்கு வேட்பாளர் கப்பம் கட்ட வேண்டியதில்லை. எந்த வேட்பாளரையும் போட்டியில்
இருந்து விலகுமாறு செய்வதற்கு ஆட்டோ அனுப்புவதோ, அரிவாள் அனுப்புவதோ இங்கு வழக்கத்தில்
இல்லை. தனி நபருக்கு சமுதாயத்தில் உள்ள அந்தஸ்து, மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு,
தேர்தல் நிதியைத் தானே திரட்டிக் கொள்வதற்கான திறமை, இதற்கு முன்பு பாராளுமன்ற உறுப்பினராக
அல்லது மாநில கவர்னராக இருந்த அனுபவம், எந்தப் பிரச்சினையிலும் சிக்காதவர் ஆக இருத்தல்,
நாட்டை உலுக்கும் முக்கியமான கேள்விகளுக்குத்
தனக்கே உரிய விதத்தில் தீர்வுகளைத் தெரிவித்து இருத்தல் - என்பது போன்ற தகுதிகள்
தான் இறுதி வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும்.
அமெரிக்காவில் பிறந்தவர் மட்டும்தான் அமெரிக்க ஜனாதிபதியாகப்
போட்டியிட முடியும். பெரும்பாலும் கிறிஸ்தவராக இருந்தால்தான் தேர்ந்தெடுக்கப்படும்
வாய்ப்பு உண்டு. வெள்ளையர்கள், வெள்ளையர் அல்லாதவர்கள் என்ற இன வேற்றுமை முக்கியப் பங்கு வகிக்கும். பொதுவாக ரிபப்ளிகன் கட்சி வெள்ளையர்களின்
கட்சி என்றும் டெமாக்ரடிக் கட்சி மற்ற நிறத்தவர்களால் ஆதரிக்கப்படும் கட்சி என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு
வந்து தங்கிவிடுபவர்களைப் பற்றி ரிபப்ளிகன் கட்சி, நீண்ட நாட்களாகவே மக்களிடையே ஒரு
கருத்தாக்கத்தை உண்டாக்கி வைத்திருக்கிறது. அதாவது அமெரிக்கர்களுக்கான வாய்ப்புகளை
வெளிநாட்டினர் தட்டிப் பறித்துக் கொள்கிறார்கள் என்று. ஆகவே ஒவ்வொரு தேர்தலிலும்
"அமெரிக்கர்களுக்கே வேலை" என்ற முழக்கம் முன்கூட்டியே கிளம்பிவிடும்.
இந்த இரண்டு கட்சிகளுக்கும் இன்னொரு முக்கிய குணாதிசயமும்
உண்டு. ரிபப்ளிகன் கட்சி பணக்காரர்களின் கட்சி என்றும், டெமாக்ரடிக் கட்சி நடுத்தர
மற்றும் ஏழை மக்களின் கட்சி என்றும் பொதுவாகக் கருதப்படுகிறது. எனவே இதையொட்டியும்
இரண்டு கட்சிகளும் தங்களுடைய தேர்தல் முழக்கங்களைத் தயாரித்துக் கொள்கின்றன.
இன்னொன்றும் அமெரிக்காவைப் பொறுத்தவரை முக்கியமான உண்மையாக
இருக்கிறது. இதுவரை பெண்கள் யாரும் ஜனாதிபதியானதில்லை. குடியரசுக் கட்சியைப் பொறுத்தவரை
இதுவரையில் பெண் வேட்பாளர்கள் யாருமே ஜனாதிபதிக்குப் போட்டியிட முன்வந்ததில்லை. ஜனநாயகக்
கட்சியில் தான் ஹில்லரி கிளிண்ட்டன் முன்வந்தார்.
2016 இல் டிரம்ப்பை எதிர்த்து நின்று தோற்றவர்
அவர் தான்.
இன்னொரு முக்கியமான விஷயம், “மக்கள் வாக்கு”களால்
(Popular Vote) மட்டுமே அமெரிக்காவில் யாரும்
ஜனாதிபதி ஆகிவிட முடியாது. உதாரணமாக 2016 தேர்தலில் டிரம்ப்பை விட 28 லட்சம் வாக்குகள்
கூடுதலாக பெற்றும் தோற்றுப் போனார் ஹில்லரி. காரணம் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும்
வேறொரு கணக்கீட்டின் அடிப்படையில் வேட்பாளர்கள் பெறவேண்டிய "தேர்ந்தெடுக்கும்
வாக்கு" (Electoral Vote) அவருக்கு
227 தான் கிடைத்தது. டிரம்ப்புக்கு 304 கிடைத்துவிட்டதால் டிரம்ப் ஜனாதிபதியானார்.
2008 இல் ஒபாமா முதல் முறை ஜனாதிபதியான போது தன்னை
எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி யைச் சேர்ந்த ஜான் மெக்கெயினை விட 95 லட்சம்
“மக்கள் வாக்கு”களைக் கூடுதலாகப் பெற்றிருந்தார். அத்துடன் “தேர்ந்தெடுக்கும் வாக்கு”கள் அவருக்கு 365 கிடைத்தன.
மெக்கெயினுக்கு 173 தான் கிடைத்ததால் ஒபாமா ஜனாதிபதியாக முடிந்தது.
2012இல் ஒபாமா இரண்டாவது முறை ஜனாதிபதி ஆனபோது தன்னை
எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் மிட் ரோம்னியை விட 50 லட்சம் “மக்கள்
வாக்கு”களைக் கூடுதலாகப் பெற்றிருந்தார். அத்துடன் “தேர்ந்தெடுக்கும் வாக்கு”கள்
332 கிடைத்தன. எதிர் வேட்பாளருக்கோ 206 தான் கிடைத்தது. எனவே ஒபாமா மீண்டும் ஜனாதிபதியானார்.
துரதிஷ்டவசமாக, “மக்கள் வாக்கு”களை அதிகமாகப் பெற்றும்,
“தேர்ந்தெடுக்கும் வாக்கு”களைக் குறைவாகப் பெற்றதால் ஜனாதிபதி பதவிக்கு வர முடியாமல்
போனவர்களில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களே அதிகம் இருக்கிறார்கள் என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.
1876, 1888, 2000 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில்
இது போன்ற நிலைமை ஏற்பட்டது.
2000இல் குடியரசுக் கட்சியின்
ஜார்ஜ் புஷ்-ஐ விட, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் அல் கோர்
5,43,895 மக்கள் வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார். ஆனால் இவரை விடத் “தேர்ந்தெடுக்கும் வாக்கு”கள் ஐந்தே ஐந்து கூடுதலாக
புஷ் -க்குக் கிடைத்துவிட்டதால் அவரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
நாடு முழுமைக்குமான “தேர்ந்தெடுக்கும் வாக்கு”களின்
எண்ணிக்கை 538 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (மக்கள் தொகை கணக்கீட்டின் படி இது மாறுதலுக்கு
உட்படும்.)
அமெரிக்காவில் 50 மாநிலங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திற்கும்
இரண்டு செனட்டர்கள் உண்டு. (நம் ராஜ்யசபா உறுப்பினர்கள் மாதிரி). ஆகவே மொத்தம் 50
x 2 = 100 செனட்டர்கள். இவர்களுக்கு தலா ஒரு தேர்ந்தெடுக்கும் வாக்கு உண்டு. தவிர,
எல்லா மாநிலங்களையும் சேர்த்து மொத்தம் 435 பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் உண்டு.
(நமது லோக்சபா எம்.பி. க்கள் மாதிரி.) இவர்களுக்கும்
தலா ஒரு தேர்ந்தெடுக்கும் வாக்கு உண்டு. ஆக 535 ஆயிற்று அல்லவா? இனி ஜனாதிபதி அமரும் இடமான வாஷிங்டன் டி.சி. எனப்படும் கொலம்பியா மாவட்டம்
சிறப்பான அந்தஸ்துடைய ஒன்றாகும். அதற்கு மட்டும் தனியாக 3 தேர்ந்தெடுக்கும் வாக்குகள்
உண்டு. ஆக 535 + 3 = 538. இதில் 50 சதத்துக்கும்
அதிகமாக, அதாவது குறைந்த பட்சம்
270 வாக்குகளையாவது யார் பெறுகிறாரோ அவரே ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவர் ஆவார்.
இன்னொரு விஷயத்தையும் இங்கு கவனிக்க வேண்டும். நம்
நாட்டில் ஒரு கட்சியின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு, அந்தக் கட்சியில் உள்ள
எல்லா உறுப்பினர்களும் வாக்களித்தே தீரவேண்டும்
என்பது சட்டம். இதை சட்டபூர்வமாக அமல்படுத்துவதற்கு "கொறடா" என்று ஒருவர்
எல்லாக் கட்சியிலும் உண்டு. எனவே எதிர்த்து வாக்களிப்பவர்களை அவர்களின் பதவியில் இருந்து
நீக்க கொறடாவால் சிபாரிசு செய்ய முடியும். கட்சியில் இருந்தும் அவர்கள் நீக்கப்படுவார்கள்.
இதெல்லாம் இந்தியாவில் உள்ள அரசியல் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவில்
இது நடக்காது. கட்சி கொண்டுவரும் தீர்மானத்திற்கு ஆதரவாகத்தான் வாக்களிக்க வேண்டும்
என்று அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை அல்லது செனட்டர்களை அக்கட்சி வற்புறுத்துவதற்கு
அதிகாரம் இல்லை. எனவே எந்தக் கட்சி உறுப்பினரும் எந்தக் கட்சியின் சார்பில் நிற்கும்
ஜனாதிபதி வேட்பாளருக்கும் வாக்களிக்க முடியும். (ஆனால் இதற்கும் சில கட்டுப்பாடுகள்
உண்டு. அதை விவரித்தால் கட்டுரையின் நீளம் அதிகம் ஆகும்.)
ஆக, ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதியாகப் போட்டியிடுபவர்களுக்கு இயற்கையாகவே இரண்டு விஷயங்களில் பின்னடைவு ஏற்பட்டு
விடுகிறது. ஒன்று, தேர்தல் நிதி கிடைப்பது கடினம். அதிக வருமான வரி செலுத்தும் தனிநபர்
அல்லது நிறுவனங்களில் சுமார் 75 ஆயிரம் பேரின் வசம் நாட்டின் பொருளாதாரம் சிக்கியிருக்கிறது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் பாரம்பரியமாகவே குடியரசுக் கட்சிக்கு நிதி உதவி செய்யபவர்கள்.
எனவே ஜனநாயகக் கட்சி, நடுத்தர மற்றும் ஏழை மக்களிடமிருந்து தான் நிதி
உதவி பெற்றாக வேண்டும். இரண்டாவது, ஜனநாயகக்
கட்சியானது வெளிநாட்டிலிருந்து வந்து அமெரிக்காவில் பணியாற்றும் (முக்கியமாக ஸ்பானிஷ்) மக்களுக்கு ஆதரவாக இருப்பதால் உள்நாட்டில்
இருக்கும் பழமைவாதிகளான வெள்ளையர்கள் அந்தக் கட்சியை ஆதரிக்க விரும்புவதில்லை என்றுகூறப்படுகிறது.
மேலும் உரிய ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் வந்து பல ஆண்டுகளாகக் குடியிருக்கும் மக்களின் குழந்தைகளுக்குக் குடியுரிமை
வழங்க வேண்டும் என்று ஜனநாயகக் கட்சி போராடுவதையும் இவர்கள் விரும்புவதில்லை.
இந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஜனாதிபதி வேட்பாளராகத்
தானே மீண்டும் நிற்கப் போவதாக குடியரசுக் கட்சியிலிருந்து
இப்போதைய ஜனாதிபதி டிரம்ப் அறிவித்திருக்கிறார். இவருக்கு சவால் விடக்கூடிய வேறு செல்வாக்குள்ள
வேட்பாளர்கள் யாரும் அவருடைய கட்சியில் இருந்து இன்னும் முன்வரவில்லை.
ஆனால் ஜனநாயகக் கட்சியில் இருந்து செல்வாக்குள்ள பலர்
போட்டியிட முன்வந்திருக்கிறார்கள். அவர்களில் ஒபாமாவிடம் துணை ஜனாதிபதியாக இருந்த ஜோ
பிடன் ஒருவர். இன்னொருவர் சென்ற முறை உள்கட்சித் தேர்தலில் ஹில்லரிக்குக் கடும் போட்டியை உண்டாக்கிய பெர்னி
சாண்டர்ஸ். மற்றவர்களில் முக்கியமானவர்கள் இரண்டு பெண்கள்.
அவர்களில் ஒருவர், ஒரு இந்தி நடிகரின் மாமியார் என்பது
குறிப்பிடத்தக்கது.
சரி அந்த நடிகரைப் பற்றி முதலில் பார்த்து விடலாமா?
அவர் இந்தியாவில் பிறந்தவர். திரைப்படத்திலும் பின்னர்
தொலைக்காட்சித் தொடரிலும் நடித்த அவருக்குப் பெரும்புகழ் தந்தவை அவருடைய தயாரிப்பும்
இயக்கமும் தான். Sea Quest 2032 (1993),
Dead Connection (1994), Hari Om (2004), Journey Across India (2007), Najva
Ashorai (2008), Samsara (2011) ஆகியவை இவரை அமெரிக்க
மக்களுக்கு நன்கு அறிமுகப்படுத்தின. Bare Foot to Herat என்ற ஈரானியப் படத்தின் தயாரிப்பிலும் இவருக்குப் பங்கு இருந்ததாகத்
தெரிகிறது.
ஆனால் ஒரு விஷயம் குறிப்பிட்டாக வேண்டும். இவருடைய
பொது வாழ்வில் இவர் மாமியார் எந்தப் பங்கும் வகிக்கவில்லை. அதேபோல் மாமியாரின்
அரசியல் விஷயங்களிலும் இவர் பங்கெடுத்துக் கொண்டதில்லை. தான் உண்டு, தன் மனைவி அமீலியா
உண்டு, தன் மூன்று குழந்தைகள் உண்டு என்று இருப்பவர்.
கட்டுரை நீண்டு விட்டதால், சுஷீல் தியாகியுடன் இப்போது நிறுத்துகிறேன். அவரது மாமியாரைப் பற்றி அடுத்த
பதிவில் பார்த்துவிடலாம். எனென்றால் எலிசபெத் வாரன் அம்மையாரைப் பற்றி நிறைய எழுதவேண்டி இருக்கிறது.
© இராய செல்லப்பா
இடுகையை எல்லாரும் படிக்கணும்கறதுக்காக இப்படிப்பட்ட தலைப்பா?
பதிலளிநீக்குவெகு நாட்களுக்குப் பின் தலை காட்டியதற்கு நன்றி
எழுதுவதே எல்லாரும் படிக்கவேண்டும் என்பதற்காகத் தான் இல்லையா? முக்கியமாக, இன்று CNN தொலைக்காட்சியில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் நிற்க விரும்பும் பத்து முக்கிய வேட்பாளர்கள கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே இது முக்கிய நிகழ்வு என்பதால் அதைப் பற்றி எழுத முன்வந்தேன். தங்கள் ஆதரவு என்றும் உண்டல்லவா?
நீக்குஉங்களுக்கில்லாத ஆதரவா செல்லப்பா சார்....
நீக்குஆனா பாருங்க...நீங்க உள்ளூர் விஷயத்தையெல்லாம் விட்டுவிட்டு, உலக விஷயத்தில் இறங்கிட்டீங்களே என்றுதான் மனசுல தோணுது. எந்தத் தளத்திலும் உங்களைக் காண முடியவில்லையே.
நானும் தலைப்பில் மயங்கினேன்...
பதிலளிநீக்குகொஞ்ச நாளாக மொழிப்பெயர்ப்பு வேளைகளில் இருந்துவிட்டேன். அதுதான் காரணம்.
பதிலளிநீக்குவேலை என்பது வேளை என்று வந்துவிட்டது....
நீக்குஎங்கோ ஆரம்பித்து எங்கோ செல்வது போலுள்ளது. எங்களை உங்கள் எழுத்துக்களால் கட்டிப்போட திட்டமா?
பதிலளிநீக்குஅன்புக்கு நான் அடிமை அன்றோ! மிக்க நன்றி ஐயா!
நீக்குநீங்கள் கில்லாடிக்கும் கில்லாடி என்று சொல்லவும் வேண்டுமோ...?
பதிலளிநீக்குதொடருங்க ஐயா...
நிச்சயமாகத் தொடருவேன். கடந்த வருடம் முழுவதும் புத்தக வேலைகள் இருந்ததால் வலைப்பதிவில் சிக்காமல் போய்விட்டேன். அதனால் நமது மதிப்புமிக்க வலைப்பதிவர்களின் நட்பை மெல்ல மெல்ல இழந்துவிட்டேன் என்று தோன்றுகிறது. அந்தத் தவறைச் சரி செய்தாகவேண்டும். தங்கள் வரவுக்கு நன்றி.
நீக்குநான்காண்டுகளுக்கு ஒருமுறை அங்கு வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு அல்லது வெளிநாட்டினருக்கு வயிற்றில் கொஞ்சம் புளியைக் கரைக்கும்... என்னென்ன புதிய விதிமுறைகள் வரப்போகிறதோ என்று.... என் உருவக்காரப்பையன் ஒருவனுக்கு அனுமதி நீட்டிப்பு கிடைக்கவில்லை. மூன்று வாய்ப்புகளும் முடிந்து விட்டன.
பதிலளிநீக்குஎன் உருவக்காரப்பையன்
நீக்கு*உறவுக்கார பையன்
ஆம், நித்யகண்டம் பூர்ண ஆயுசு என்ற காலம் போய் நித்ய கண்டம் அற்ப ஆயுசு என்ற நிலைமை வந்துள்ளது. நம் சந்ததியினருக்கு இது ஒரு சவாலே.
நீக்குஅங்கிருக்கும் இந்தியர்களுக்கு அதாவது சிட்டிசன்ஷிப் வாங்காத இந்தியர்களுக்கு அடுத்த கண்டம் வந்தாகிவிட்டது போல...அங்கிருக்கும் உறவுகளில் பலரும் பச்சை அட்டை மட்டுமே வைத்திருக்கிறார்கள் ஒரு சிலர் குடியுரிமை பெற்றுவிட்டார்கள் முன்பே.
பதிலளிநீக்குகீதா
அமெரிக்கா வரும் பிற நாட்டவர்கள் எப்படியாவ்து குடியுரிமை பெற்றுவிடவேண்டும் என்ற இலட்சியத்துடனேயே வருகிறார்கள். ஆனால் இந்தியர்கள் மட்டுமே க்ரீன் கார்டு போதும் என்று இருந்துவிடுகிறார்கள். கொஞ்ச நாள் இருந்துவிட்டுப் போய்விடலாம் என்ற தற்காலிக எண்ணத்துடனேயே வாழ்கிறார்கள். இதுதான் பிரச்சினை என்று தோன்றுகிறது.
நீக்குஒவ்வொரு நாலு வருடத்திலும் வரும் பிரச்சனைகள் அடுத்து 2020-ல்... பார்க்கலாம் யார் ஜெயிக்கிறார்கள் என.
பதிலளிநீக்குஉங்கள் மூலம் அமெரிக்கத் தேர்தல் முறை பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ள முடிந்தது.
சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு. மகிழ்ச்சி.
தங்கள் வரவுக்கு நன்றி வெங்கட். இனித் தொடர்ந்து எழுதுவேன்.
நீக்குசற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு.
பதிலளிநீக்குglad i am here.
subbu thatha.