வெள்ளி, அக்டோபர் 19, 2018

செக்கச் சிவந்த வனம் (அல்லது) வெள்ளி நிலாக் கப்பல்


பதிவு 07/2018

செக்கச் சிவந்த வனம் (அல்லது) வெள்ளி நிலாக் கப்பல்

ஒரு சுற்றுப் பயணத்தின்போது ஒரு காட்டுப்பகுதியை ஒட்டியிருந்த பூங்காவினுள் நாங்கள் நுழைந்தோம். நாங்கள் என்பது மூன்று பேரைக் குறிக்கும்: நான், எனது நண்பர் இளைய தாமு, மற்றும் இன்னும் சரியாக அறிமுகமாகாத ஒரு பெரியவர். என்னைவிடவும்  பத்து வயது கூடுதலானவர்.

‘இளைய தாமு’ என்ற பெயருக்கு விளக்கம்:  இவர் இளைஞர். சமையற்கலையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். செஃப் தாமு மாதிரியே உடல்வாகு கொண்டவர். அவரைப் போலவே புகழ்பெறவேண்டும், தொலைக்காட்சியில் தோன்றி, புதுப்புது சமையல் முறைகளைத் தெரிவித்து, சற்றே பருமனான, நடுத்தர வயதுக் குடும்பத்தலைவியர்  மத்தியில் பிரபலமாகவேண்டும் என்ற அடங்காத ஆசை கொண்டவர். ஆகவே தன் பெயரை கெஜட்டில் அறிவித்து இளைய தாமு என்று மாற்றிக்கொண்டவர்.

அந்தப் பெரியவரைப் பற்றியும் இரண்டு வார்த்தைகள்:  நாங்கள் நுழையவிருந்த பூங்காவின் வாயிலில் நுழைவுச்சீட்டு  பரிசோதகராக இருந்தவர் அவர். காக்கி பேண்ட்டும் நீல அரைக்கை  சட்டையும் அணிந்திருந்தார். வீட்டு நாய்களுக்குக் கட்டுவோமே அதுபோன்ற நீளமான பட்டி ஒன்று அவர் கழுத்தில் இருந்தது. அதில் ஆங்கில எழுத்துக்கள் நிறைய இருந்தன. படிக்கமுடியவில்லை. 

ஒருவேளை அந்தப் பூங்கா நிர்வாகத்தின் பெயராகவோ, அல்லது அவரை அங்கு நியமித்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் பெயராகவோ இருக்கலாம். அல்லது மறந்துபோய் ஐ.டி.த்துறையில் பணியாற்றும் தன் மகனின் அடையாளப்பட்டையை மாட்டிக்கொண்டு வந்தாரோ தெரியாது. எங்கள் இருவரின் நுழைவுச்சீட்டையும் பரிசோதித்தவர், ‘மன்னிக்கவேண்டும். எனக்கு இன்னும் சற்றுநேரத்தில் வேலைநேரம் முடிந்துவிடும். நானும் உங்களுடன் வரலாமா?’ என்று பணிவுடன் கேட்டார். அப்போது அவருக்குப் பின்னால் இருந்த ஒரு பெண்மணி, ‘இவரை அழைத்துப் போவது நல்லது. விஷயம் தெரிந்தவர்’ என்று சிபாரிசுசெய்யவே நாங்களும் சரியென்றோம். எங்கள் பின்னாலேயே வந்தார்.

மாலை மணி ஐந்தரை. நன்றாக இருட்டிவிட்டது. பூங்காவிற்குள் எங்களைத்தவிர யாரும் இல்லை. வந்தவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டிருந்தனர். பூங்காவின் நடுவிலிருந்த  உயரமான கம்பத்தில் ஐந்து விளக்குகள் இன்னும் ஏற்றப்படவில்லை. இ.தாமு பெரியவரை நோக்கி, ‘அந்த விளக்குக்கு சுவிட்ச் எங்கிருக்கிறது? சொன்னால் நான் போடுகிறேன்’ என்றான்.

பெரியவர் சிரித்தார். ‘இளைஞரே, அது மின்விளக்கல்ல. இயற்கை எரிவாயுவினால் இயங்குவது. கோபர் கேஸ் இணைப்புக்குழாயில் நேற்று காலை ஏற்பட்ட கசிவினால் அதன் இயக்கம் தடைபட்டுள்ளது. நாளை காலைவரை பொறியாளருக்காகக் காத்திருப்பதைத்தவிர வேறு வழியில்லை. அதை விட்டால் பூங்காவில் வேறு விளக்குகள் இல்லை’ என்றார்.

‘அப்படியானால் சீக்கிரம் வெளியேறிவிடலாம் வாருங்கள். நாம் தங்குமிடத்திற்குப் போகலாம். விரும்பினால் நீங்களும் எங்கள் கேம்ப்பில் தங்கலாம்’ என்றேன் நான். ‘இரவு ஏழுமணிவரை பூங்காவில் இருந்துவிட்டுப் பிறகு காட்டினுள் நுழைவதாக இருந்தோம். பரவாயில்லை, அந்த நேரத்தை கேம்ப்பில் செலவிடலாம். இல்லையா தாமு?’

தாமுவுக்கு விருப்பமில்லை என்பது அவன் தலையசைப்பின் தோரணையிலிருந்து தெரிந்தது. ‘நாம் சொல்லியிருந்த நேரத்தைவிட முன்னதாகவே காட்டிற்குப் போவதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. எனவே வாருங்கள், பயணத்தைத் தொடங்கலாம்’ என்று நடக்க ஆரம்பித்தான்.

பெரியவர் தன் சட்டைப் பையிலிருந்து மூன்று வேர்க்கடலை உருண்டைகளை எடுத்தார். வெல்லப்பாகில் செழுமையான வேர்க்கடலைப் பருப்புகள் திடமாக ஒட்டியிருந்தன. ஆளுக்கொன்று. ‘கடித்துத் தின்றுவிடாதீர்கள். வாயிலிட்டு அசைபோட்டுக்கொண்டிருந்தால் அது முற்றிலும் கரைவதற்குள் நீங்கள் போகவேண்டிய இடத்தை அடைந்துவிடலாம்’ என்றார்.        

இனிப்பு வேர்க்கடலை உருண்டை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. வாயில் ஒருபக்கமாக அடக்கிக்கொண்டே பேசினேன். ‘தாமு, செய்யவேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் சரியாகச் செய்துவிட்டாய் அல்லவா?’

‘கவலை வேண்டாம் ஐயா! நமக்கு  மிகவும் வேண்டிய நண்பர்மூலம்தான் ஏற்பாடுகள் செய்திருக்கிறேன். எல்லாம் நல்லபடியாக நடக்கும்’ என்றான் தாமு.

நாங்கள் மறைபொருளாகப் பேசுவதாகப் பெரியவருக்கு ஐயம் ஏற்பட்டிருக்கவேண்டும்.  ஒருவேளை நாங்கள் போவது வெள்ளிநிலாக் கப்பலைப் பார்ப்பதற்குத்தான் என்பதைத் தெரிந்துகொண்டிருப்பாரோ?

ஆண்டுதோறும் பதினைந்து நாட்கள் இறந்துபோன நமது முன்னோர்கள் பூமிக்கு அருகில்வந்து காத்திருப்பார்களாம். தத்தம் வாரிசுகள் அன்போடு அவர்களுக்கு எள்ளும் தண்ணீரும் வார்க்கிறார்களா என்று வழிமேல் விழிவைத்துப் பார்த்திருப்பார்களாம். இதைத் ‘தர்ப்பணம்’ அல்லது ‘திதி கொடுத்தல்’ என்பார்கள். சிலருடைய வாரிசுகள் தினந்தோறும் திதி கொடுப்பார்கள். சிலர் பதினைந்துநாளில் இரண்டுமுறையாவது கொடுப்பார்கள்.  சிலரோ கடைசி நாளான ‘மாளய அமாவாசை’ அன்று மட்டுமாவது கொடுப்பார்கள். இவ்வாறு ஒருமுறையாவது திதி கொடுக்கப்பெற்ற முன்னோர்கள் தம் தாகம் தணிந்து, திருப்தியோடு தம் வாரிசுகளை வாழ்த்திவிட்டு மீண்டும் வானுலகம் சென்றுவிடுவார்கள்.

ஒரு சில முன்னோர்களுக்கு வாரிசுகள் இருந்தும் திதி கொடாமல் போனால் அவர்களுக்குத் தாகம் ஏற்பட்டுத் தவிப்பார்களாம். நியதிப்படி திதி கொடுக்காத வாரிசுகளை அவர்கள் சபிக்கவேண்டுமாம். ஆனால் இறந்தபிறகும் தம் வாரிசுகள்மீது கொண்ட அன்பு குறையாத அம்முன்னோர்கள், தங்கள் சாபத்தால் வாரிசுகளுக்குத் துன்பம் வரக்கூடாது என்னும் நல்லெண்ணத்தில், அவர்களுக்குக்  கடைசி வாய்ப்பு வழங்கும்முகமாக இந்த வெள்ளிநிலாக் கப்பலில் அடுத்த அமாவாசை யன்று வந்து கூடுவார்களாம். ஆனால் இந்தக் கப்பல் இருக்குமிடம் அந்தந்த  வாரிசுகளுக்கு மட்டும் சூசகமாகத் தெரியப்படுத்தப்படுமாம்.  அநேகமாக   ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள்மூலம்தான் இது நடக்குமாம்.

இளையதாமு, தனது கல்வியில் மேலும் முன்னேறவும், வெளிநாட்டுக் கப்பல் ஒன்றில் தனக்கு செஃப் வேலை கிடைப்பதற்காகவும், ஃபிரெஞ்சு நாட்டு அழகி ஒருத்தி தனக்கு மனைவியாக வரவேண்டும் என்பதற்காகவும் விழுப்புரம் அருகில்  வி-யில் ஆரம்பித்து டி-யில் முடியும் ஊரிலிருந்த ஓர்  ஆவியுலக ஆய்வாளரின் மகனைச் சந்தித்தபோது அவர்கொடுத்த ஆலோசனைதான் மேலே சொன்னது. (‘அப்பாவுக்கு வயதாகிவிட்டது. இனிமேல் நான்தான் அவருடைய அறிவுக்கும் ஞானத்திற்கும் வாரிசு. அதற்குரிய மந்திரச் சடங்குகள் எல்லாம் காசியில் சென்று செய்துவிட்டோம். அப்பாவின் சக்திகள் முழுமையாக எனக்குள் இறங்கிவிட்டன. ஆகவே நீங்கள் இனிமேல் என்னையே குருவாக ஏற்றுக்கொள்ளத் தடையில்லை.’)

இம்மாதிரி அமானுஷ்ய விஷயங்களில் எனக்கு ஆர்வம் இருப்பதை அறிந்தவுடன் என்னை வற்புறுத்தி அழைத்தான் தாமு. வெள்ளிநிலாக் கப்பல் இந்தமுறை முதுமலைக் காட்டில் இருப்பதாகவும், அங்குசென்று நிறைவேற்ற வேண்டிய பூசைகளுக்கான ஏற்பாடுகளை அந்த ஆவியுலக ஆராய்ச்சியாளரின் குடும்பமே செய்துவிட்டதாகவும் கூறினான். ‘நாம் வெறுங்கையோடு போனால் போதும்’ என்றான். முதலில் குறிப்பிட்ட பூங்காவில் நாம் நுழைந்தால் உடனே அந்த முன்னோர்களுக்குத் தகவல் சேர்ந்துவிடுமாம். குறிப்பிட்ட நேரத்தில் அந்தக் காட்டிற்குள் நடந்துசென்றால் நமக்கு வழிகாட்டுவதற்கு யாராவது வருவார்களாம். எல்லாம் முன்னோர்களின் விதிப்படி நடப்பதாம்.

‘பார்த்துக்கொண்டே இருங்கள்: அடுத்த வருடம் உலகின் மிகவும் சொகுசான கப்பலில் செஃப் ஆகத்தான் போகிறேன். பாரிஸ் துறைமுகத்தில் என்னுடைய காதலியைச் சந்திக்கத்தான் போகிறேன். என் முன்னோர்கள் என்னைக் கைவிடமாட்டார்கள்’ என்று குதூகலித்தான் இளைய தாமு.

இந்தப் பெரியவர் வேறு நம்மோடு சேர்ந்துகொண்டுவிட்டாரே, இவரை அந்தக் கப்பல்வரை அழைத்துப் போவது சரியா, தாமுவின் முன்னோர்கள் அனுமதிப்பார்களா என்ற ஐயம் திடீரென்று எனக்குள் எழுந்தது.      

காட்டினுள் நுழைந்துவிட்டோம். அமாவாசை இரவு என்பதால் கடும் இருட்டு.    
இருவர் கையிலும் ஸ்மார்ட்போன்கள் இருந்தும் சார்ஜ் தீர்ந்துவிட்டதால் அணைந்துபோய்விட்டன. பெரியவரிடம் அலைபேசி எதுவும் இல்லை. தட்டுதடுமாறி ஓர் ஒற்றையடிப்பாதை இருப்பதைக்  கண்டுபிடித்தோம். அதற்குப் பெரியவரின் அனுபவமே உதவியது.

‘இந்தக் காட்டில் நான் ஆறு வருடங்களாக இருக்கிறேன் ஐயா! எனக்குத் தெரியாத இடமே இல்லை. அதுமட்டுமல்ல, இப்போது நீங்கள் எங்கே போகவேண்டும் என்றும் எனக்குத் தெரியும். ஆனால் நீங்களாகவே விரும்பிக் கேட்டால் மட்டுமே அந்த இடத்திற்கு வழி காட்ட முடியும். இது எங்கள் குருவின் உத்தரவு. நானாக யாரையும் எங்கும் அழைத்துப்போக அனுமதியில்லை.’

நான் இளைய தாமுவின் கையைப் பிடித்துக்கொண்டேன். அவனே சொல்லட்டும் என்று காத்திருந்தேன். சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு அவன், ‘பெரியவரே, நாங்கள் வெள்ளி நிலாக் கப்பல் பார்க்க வந்திருக்கிறோம். என் முன்னோர்களுக்குத் திதி கொடுக்க விட்டுப் போயிற்று. அதனால்தான்...’ என்றான்.

பெரியவர் பேச்சில் சற்றே மகிழ்ச்சி தென்பட்டதாக உணர்ந்தேன். ‘நல்லது! முன்னோர்களுக்குத் திதி கொடுப்பவர்களின் குடும்பம் என்றுமே தாழ்ந்துபோகாது என்று குருநாதர் சொல்லுவார். வாருங்கள், அந்த இடம் எனக்குத் தெரியும். ஆனால் தற்செயலாக மழை வந்துவிடுமானால் அந்தக் கப்பல் மறைந்துவிடும். ஆகவே விரைவாகப் போகலாம் வாருங்கள். நான் முன்னால் போகிறேன்’ என்று அவர் வேகமாக நடந்தார். நாங்களும் நடந்தோம். என்றாலும் அவர் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இடையிடையே மழைத்தூறல் எங்கள்மேல் விழுவதை உணர்ந்தோம். எனவே வேகத்தைக் கூட்டினோம். ஆனால் கும்மிருட்டில் எங்களால் ஓரளவுக்குமேல்  வேகம்கொள்ள முடியவில்லை.

ஆனால் மழை அதற்குமேல் வராது என்பதற்கு அடையாளமாகப் பெரும் காற்று வீசத் தொடங்கியது. மிகவும் எதிர்க்காற்றாக இருந்தது. நானும் தாமுவும் இறுகக் கட்டிக்கொண்டோம். அப்படியும் எதிர்த்து நிற்க முடியவில்லை. காற்றின் வேகம் அதிகரித்துக்கொண்டே வந்தது.

‘பெரியவரே’ என்று கத்தினோம். பதில் இல்லை. வெகுதூரம் முன்னால் சென்று விட்டாரோ?  ‘பெரியவரே, பெரியவரே’ என்று இன்னும் உரத்த குரலில் கத்தியபடி மெல்ல நடந்தோம். அப்போது சற்றே வெளிச்சம் தெரிந்தது. காற்று முற்றிலுமாக அடங்கிவிட்டது.

தூரத்தில் கப்பல் மாதிரியானதொரு வீடு கண்ணில்  தெரிந்தது. இரண்டு மாடிகள் கொண்ட வீடு. ஒரு நடுத்தரக் குடும்பம் அரசுடைமை வங்கியில் கடன் வாங்கிக் கட்டிய வீடு மாதிரி எளிமையாக இருந்தது.  ஆனால் பல அறைகள் இருந்தன. ஒவ்வொன்றிலும் வெளிச்சம். ஒவ்வொன்றிலும் ஆள் நடமாட்டம். பெண்களும் இருந்தார்கள்.

பெரியவர் என்ன ஆனாரோ என்ற கவலையோடு நாங்கள் இருவரும் வீட்டின் வாயிலை அடைந்தோம். மரத்தால் கட்டிய வீடு. கதவைத் தட்டினோம்.

எங்களுக்கு வியப்பூட்டும் விதமாக அந்தப் பெரியவர்தான் வந்து கதவைத் திறந்தார்! ‘வாருங்கள், தாமு! வெள்ளி நிலாக் கப்பல் இன்னும் சற்று நேரம்தான் இங்கிருக்கும் என்று தகவல் வந்தது. ஆகவேதான் வேகமாக உங்களுக்கு முன்னால் வந்துவிட்டேன். சரி, உங்கள் முன்னோர்களின் பெயர்களை இந்தத் தாளில் எழுதிக்கொடுங்கள்’ என்று ஒரு வெள்ளைத்தாளை நீட்டினார்.  ‘வெறும் விரலால் எழுதினாலே போதும், தாளில் எழுத்துக்கள் தெரியும்.’

அது தாளல்ல, ஆப்பிளின் ஏதோ ஒரு புதுமாதிரியான மொபைல் ஸ்க்ரீன் என்று புரிந்துகொண்டேன். தாமு தன்னுடைய மூன்று தலைமுறைப் பெரியவர்களின் பெயர்களை எழுதிக்கொடுத்தான்.

பெரியவர் அவனை மட்டும் உள்ளே அழைத்துப்போனார். அவர்கள் மரப்படிகளில் இரண்டாம் மாடிக்குச் செல்லும் காலடியோசை தெளிவாகக் கேட்டது. நான் வரக்கூடாதாம். ஏனெனில் என்னுடைய முன்னோர்கள் யாரும் அங்கு வரவில்லையாம். அதனால் எனக்கு உள்ளேவர அனுமதி இல்லையாம். வாசலிலேயே நின்றேன்.

சில மணி நேரத்திற்குப் பின் இளையதாமு இறங்கிவந்தான். ‘முன்னோர்களைப் பார்த்தாயா?’ என்றேன்.

‘சொல்கிறேன். சீக்கிரம் திரும்பிவிடச் சொன்னார்கள். அதிகநேரம் இங்கே இருக்கக்கூடாதாம். வா’ என்று என்னை வேகப்படுத்தினான் தாமு. பூங்காவை வந்தடைந்தபோது விடிந்துவிட்டது.

‘எல்லாரையும் பார்த்தேன்’ என்றான் தாமு. ‘இறந்துபோன என் அம்மா, என் அம்மாவின் தாய்-தந்தையர், என் அப்பாவின் அப்பா - என்று எல்லாரும் அங்கே இருந்தனர். எள்ளும் தண்ணீரும் கொடுத்தேன். திருப்தியோடு அவர்கள் மறைந்துவிட்டார்கள். என்னை நன்றாக ஆசீர்வதித்தார்கள். ஆனால். ஒரே ஒரு குறை...’

என்ன என்பதுபோல் அவனை ஏறிட்டு நோக்கினேன். ‘என்னுடைய பாட்டி – அதாவது அப்பாவின் அம்மா- அவர்கள் மட்டும் வரவில்லை. ஏன் என்று தெரியவில்லை’ என்றான் தாமு.

அப்போது பெரியவர் எங்களை நோக்கி வந்தார். ‘நான் மட்டும் இல்லையென்றால் நீங்கள் சிரமப்பட்டிருப்பீர்கள் இல்லையா?’ என்றார். எங்களுக்கு முன்பே அவர் திரும்பியிருக்கவேண்டும். அந்தக் காட்டை நன்றாக அறிந்தவர் அல்லவா?

தாமு சொன்னதை அவரிடம் சொன்னேன். ‘தாமு, உங்கள் பாட்டி இறந்துபோய் எத்தனை வருடம் ஆகிறது?’ என்றார்.

‘மூன்று வருடம்.’

‘அடடா’ என்ற அவரது குரலில் வருத்தம் காணப்பட்டது. ‘அதனால்தான் எனக்குத் தெரியாமல் போய்விட்டது. நான் இறந்துபோய் ஆறு வருடம் ஆகிவிட்டதே!’ 

அந்தப் பெரியவரை அழைத்துப் போகச்சொல்லி சிபாரிசு செய்த பெண்மணியும் அப்போது அங்கே வந்துசேர்ந்தார். 'நான் இறந்துபோய் பதினைந்து வருடம் ஆயிற்று' என்றார்.

(குறிப்பு: இது ஒரு ‘பின்-நவீனத்துவ’ச் சிறுகதை.)
(c) இராய செல்லப்பா, சென்னை  

12 கருத்துகள்:

  1. சரிதான். முன்னாலேயே யூகித்தேன். ஆனால் மறுபடியும் வந்து அவர்களே சொல்வார்கள் என்று நினைக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி முன்னமேயே யூகித்துவிடுவதன்மூலம் சஸ்பென்ஸ் எழுத்தாளர்களுக்குத் தாங்கள் அநீதி இழைப்பது தங்களுக்குப் புரியவில்லையா நண்பரே?

      நீக்கு
  2. ஆங்கிலக் கதையை adopt செய்து செய்த சிறுகதை போல் தெரிகிறது.

    இருந்தாலும் ரசிக்கும்படித்தான் இருந்தது.

    நீங்கள் நினைத்தபோது ப்ராய்லர் கோழியாகவும், பல சமயம் யானையாகவும் ஆகிவிடுகிறீர்கள். (சில சமயம் அடிக்கடி இடுகை வெளியிடுவதும் பல சமயம் இடையில் காணாமல் போவதை வைத்தும் சொன்னேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆங்கிலக் கதையை adopt செய்யவோ, adapt செய்யவோ நான் என்ன மணிரத்னமா? நான் ஒரு சாமானியன் நண்பரே! யானையைப் பற்றி நான் அறிவேன். ப்ராய்லர் கோழிகள் பற்றி எனக்கு அனுபவம் இல்லையே! ஒருவேளை அவைகளும் blog எழுதுமோ?

      நீக்கு
  3. வாவ் அட்டகாசம். அருமையான கதை செல்லப்பா சார் ! வியப்பூட்டியது.

    பதிலளிநீக்கு
  4. கதையின் போக்கையும், முடிவையும் யூகிக்க முடிந்தாலும் ஸ்வாரஸ்யம் என்பதை மறுக்க முடியாது.

    பதிலளிநீக்கு
  5. இறுதிப்பகுதி நெகிழவைத்தது. இனம்புரியா அன்பின் ஏக்கத்தை வெளிப்படுத்தியது.

    பதிலளிநீக்கு
  6. Very great post. I shared information in many social sites. It is best reviews. I am working in Vehicle towing company. It is best training provide. It is informative post. Thanks for posting.

    பதிலளிநீக்கு
  7. வெள்ளிநிலாக் கப்பலா ... இது என்னடா புதுசா இருக்குன்னு முழுசா படிச்சா ... ஐயகோ கடைசில எனக்கு வேப்பில விபூதியெல்லாம் அடிக்க வச்சுட்டீங்களே ... கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    பதிலளிநீக்கு