பதிவு 05/2018
இதுவும் ஒரு கொலுபொம்மை -2/2
இரண்டு நாட்கள் கழிந்தபின்...
மூன்றாம் மாடி பால்கனியிலிருந்து தரையை நோக்கி யாரையோ
அழைத்துக்கொண்டிருந்தாள் என் மனைவி. காலை பதினொன்றரை மணி.
காய்கறி வண்டிக்காரி, இஸ்திரி போடும் பெண் இருவரும் அவளோடு
உரையாடலில் இருந்தது தெரிந்தது.
‘மாமி, குட் மாணிங்’ என்றாள் இஸ்திரிப் பெண் சிந்தாமணி. காய்கறிப்
பெண் கற்பகம் ‘வணக்கம் அம்மா’ என்றாள்.
தமிழில் பி.ஏ. படித்தவள்.
‘நீங்க ரெண்டுபேரும் எப்பவந்து வெத்தல பாக்கு வாங்கிக்கப்
போறீங்க? நவராத்திரி ஆரம்பிச்சு ரெண்டு நாள் ஆச்சே, ஆளையே காணோமேன்னு பாத்தேன்’
என்றாள் விஜி.
எங்கள் வீட்டு கொலு- 12-10-2018 |
இருவரும் வேகமாகத் தலையை ஆட்டினார்கள். ‘இன்னிக்குத்தான்
வரணும்னு இருந்தேன் மாமி, இப்ப வரலாமா? சாயந்திரம் எனக்கு வேலை இருக்கு’ என்றாள்
சிந்தாமணி. ‘நானும் அதே!’ என்றாள் கற்பகம்.
‘இப்பவே வாங்களேன்’ என்று அவர்களுக்கு அனுமதி
கொடுத்துவிட்டு, பெரிய தாம்பாளத்தட்டில் வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமப் பொட்டலங்களை வரிசையாக அடுக்கி, தலா ஒரு
ஆப்பிளையும் வைத்தாள். பிறகு மயிலாப்பூர் விஜயா ஸ்டோர்ஸில் வாங்கிய ஜெர்மன் வெள்ளியிலான மயில்பொம்மை ஒன்றையும்
ஆளுக்கு ஒன்று என்று எடுத்துவைத்தாள். இவை
எல்லாவற்றையும் போட்டுக்கொள்வதற்கு ஆளுக்கொரு பிளாஸ்டிக் பையையும் தயாராக
வைத்துக்கொண்டாள்.
சிந்தாமணியும் கற்பகமும் வந்தனர். சிந்தாமணி பிறந்ததுமுதல்
அனுப்பக்கொட்டாம்பட்டி என்னும் கிராமத்தைத் தவிர வேறெந்த பெரிய ஊரையும் பார்த்திராதவள்.
திருமணமானபின் கணவனோடு சென்னைக்குக் குடித்தனம் வந்தவள். நவராத்திரி கொலுவை
இப்போதுதான் பார்க்கிறாள். பிரமித்துப் போனாள்.
‘எப்படி மாமி, இவ்ளோ பொம்மைங்கள வாங்கினீங்க? ரொம்ப
செலவாகியிருக்குமே! லட்ச ரூபாய் ஆகியிருக்குமா?’ என்று வெகுளியாகக் கேட்டாள்.
கற்பகம் அவளைத் தலையில் செல்லமாகத் தட்டினாள். ‘போடி,
முட்டாள்! எல்லாம் ஒரு முப்பதாயிரம் ரூபாய்தான் இருக்கும்’ என்றாள். பி.ஏ. படித்தவளாயிற்றே!
சிந்தாமணிக்கு வெட்கமாகப் போயிற்று. ‘அய்யையோ, நான்
வெறுமே ஒரு லட்சம்னு நெனச்சேன். ஆனா முப்பாதாயிரம்
வரையில ஆச்சா? அவ்ளோ ஆகுமா?’ என்றாள் இன்னும் வெகுளியாக. லட்சத்தை விட
முப்பதாயிரம் பெரியதென்று அவளுக்கு மனதில்
பதிந்தது எப்படி என்று தெரியவில்லை.
என் மனைவி சிரித்தாள். கற்பகமும் சேர்ந்து சிரித்தாள். ‘சிந்தாமணி,
ஒனக்கு ஒண்ணு, ரெண்டு, மூணு எதுவரைக்கும் தெரியும்?’ என்றாள். ‘சரி விடு, ஒன்னோட
ரெண்டு கையிலயும் சேர்த்தா எவ்வளோ விரல் இருக்கும்?’ என்று கேள்வியை மாற்றினாள்.
சடக்கென்று பதில் வந்தது சிந்தாமணியிடமிருந்து. ‘ஒம்பது!’
இதுகூடத் தெரியாமல் இவள் எப்படித் தொழில்செய்யவந்தாள் என்று
என்னவளுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ‘எங்கே ஒன் கையைக் காட்டு’ என்று
அவளது இரண்டு கைகளையும் பற்றினாள். ஆமாம்,
மொத்தம் ஒன்பது விரல்கள்தாம் இருந்தன! பிறக்கும்போதே இடதுகையில் சுண்டுவிரல் இல்லையாம்.
‘அடடா’ என்று நொந்துபோனார்கள் இவளும், கற்பகமும். மேற்கொண்டு
சிந்தாமணியை வருத்தப்படுத்த வேண்டாம் என்று விஷயத்தை மாற்றினாள் விஜி.
‘ஏண்டி சிந்தாமணி, கணக்கெல்லாம் போகட்டும். நீ செய்யறது
ஒனக்கே நல்லா இருக்கா?’ என்றதும் சிந்தாமணிக்குப் புரியவில்லை. ‘ஏன் மாமி அப்டி
சொல்றீங்க?’ என்று குழப்பத்தோடு கேட்டாள். ஒருவேளை இஸ்திரிக்குக் கொடுத்த
புடவைகளில் ஏதாவது ஒன்று தவறிவிட்டதா, இல்லை, பட்டுப் புடவை இழை பிரிந்துவிட்டதா,
இல்லை ஐயாவின் வெள்ளைச் சட்டையில் கறையேதும்
படிந்துவிட்டதா? கற்பகமும் வியப்போடுதான் இவளைப் பார்த்தாள்.
‘பின்னே என்னடி, அந்த சவிதா இருக்கிறாளே, அவளைப் பற்றி
உனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்றியா? அவ
வீட்டுக்கு நீதானே இஸ்திரி போடறே?’ என்றவள், கற்பகத்தையும் விடவில்லை. ‘நீ மட்டும்
என்னவாம்? ஒன்கிட்டதானே அவள் காய்கறி வாங்கறா? நீயும் அவளப் பத்தி ஒண்ணும் சொல்ல
மாட்டேங்கறியே’ என்று குற்றம் சாட்டினாள்.
சிந்தாமணிக்கு இப்போதுதான் குழப்பம் தெளிந்தது. ‘போங்க மாமி,
நான் இந்த ஊருக்குப் புதுசு இல்லிங்களா, யாருகிட்ட எதைப் பேசணும்னு இன்னும் புரிபடல மாமி.
அதுக்குள்ளே எனக்கு மாலைமுரசுன்னு பேரு வெச்சிட்டாங்க. அதனால் இப்பல்லாம்
நான் பேசறதே இல்லீங்க’ என்றாள். கற்பகம்
சற்றே நாணத்துடன் ‘எனக்கு தினத்தந்தின்னு பேரு மாமி. ஆனா அந்த
சவிதாம்மாவப் பத்தி எனக்கு ஒண்ணும் புதுசா வெசயம் கெடைக்கல மாமி’ என்றாள்.
ஏதோ சுருக்கென்று தைத்தது என் மனைவிக்கு. ‘புதுசா
இல்லேன்னா, பழைய வெஷயம் எதுவோ இருக்குன்னுதான அர்த்தம்? அது என்னன்னு சொல்லுடி’
என்றாள்.
கற்பகம் முகத்தில் சற்றே பயத்தை வரவழைத்துக்கொண்டு, ‘மாமி,
நான் சொன்னேன்னு சொல்லிடாதீங்க!’ என்றாள். ‘அந்த சவிதாம்மா வீட்டுல ஒரு வாரமா யாரோ
ஒரு ஆம்பிளக் குரல் கேட்குதாம். ஆனா அந்த ஆள் வெளிய வந்து யாரும் பார்க்கலியாம்.’
அப்போது சுவர்க்கடிகாரம் பன்னிரண்டு மணி அடித்தது. ‘மாமி, மெயின்ட்டனன்ஸ்
ஆளுங்க வந்து செக் பண்ணுவாங்க. நாங்க போகணும்’ என்று நினைவுபடுத்தினார்கள். ‘இதோ
வந்துட்டேன்’ என்று இவள் எழுந்தாள்.
தாம்பாளத்தட்டை அவர்களிடம் நீட்டினாள். சுண்டலை
மட்டும் சிறிய பொட்டலமாகக் கட்டிக்கொடுத்தாள். ‘மாமி, நம்ப காலனியில ஒங்கவீட்டு கொலுவை
அடிச்சிக்க ஆளே இல்ல மாமி’ என்று சான்றிதழ் கொடுத்துவிட்டுக் கிளம்பினார்கள்.
****
எழுபத்துமூன்றாவது பிளாக்கில் இருந்து கோமளா கிருஷ்ணன்
வந்தாள். தன் வயதில் இருபதைக் குறைத்துக் காட்டுவதை வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டவள். ஆங்கிலத்தில்
எம்.ஏ. சுயதம்பட்டம் மட்டுமின்றி ஊர்வம்பிலும் கெட்டிக்காரி.
ஆனால் ஆங்கிலத்தில் மட்டுமே வம்புபேசுவாள். அதனால் அவளுக்கு இந்தியன்
எக்ஸ்பிரஸ் என்றும் ஒரு பெயர் உண்டு.
‘ஹவ் ஆர் யூ விஜி?’ என்றவளிடம் வேண்டுமென்றே ‘அது ஒண்ணுதான்
கொறைச்சல்’ என்று வரவேற்றாள் என் மனைவி.
அது போதுமே கோமளாவிற்கு! படபடவென்று கொட்டிவிட்டாள். ‘ஓ
அந்த சவிதா விஷயமா? உங்களிடம்தான் முதலில் சொல்லவேண்டுமென்று இருந்தேன். ஆனால் யமுனா
டீச்சர் எப்படியோ என் வாயிலிருந்து விஷயத்தைக் கறந்து விட்டாள். வெரி ஸாரி.’
கோமளா எப்போதுமே இப்படித்தான். அவசரமாகப் பேசுவாள்.
அவசரமாகக் கிளம்பிவிடுவாள். அதனால் அவளுக்கு
முதலில் தாம்பூலம் கொடுத்தாள் விஜி. பிறகு பேச்சுக் கொடுத்தாள். ‘யமுனா டீச்சரிடம்
நீங்கள் சொன்னதை ஒருவரி மாற்றாமல் என்னிடம் சொல்லவேண்டும், சரியா?’
தாம்பூல சாமான்களைப் பையில் வைத்தபடி சிரித்தாள் கோமளா. ‘அதொண்ணும்
பெரிய விஷயமில்லை விஜி! அவள் வீட்டில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறதாம். அதை வெளியில்
விடுவதே இல்லையாம். ஒரு வாரம்போல இருக்குமாம். ஜாடையை வைத்துப் பார்த்தால் அவளுடைய
குழந்தை மாதிரியே இருக்கிறதாம். ஆனால் அதைப் பற்றிமட்டும் யாரிடமும்
பேசுவதில்லையாம்’ என்று கோமளா சொல்லிமுடித்துவிட்டு, ‘வரட்டுமா, இன்னும் சில
வீடுகளுக்குப் போகவேண்டும். நவராத்திரி அல்லவா?’ என்று நடையைக் கட்டினாள்.
****
நாலைந்து நாளாகவே கொலுப்படியை ‘செட்டப்’ செய்ததிலும்,
பொம்மைகளை ஒன்பது படிகளிலும் அடுக்கிவைத்ததிலும், சோர்ந்து போயிருந்த விஜி என்னை
அழைத்து, யாராவது வந்தால் தன்னை எழுப்புமாறு
கூறிவிட்டு சோபாவில் உட்கார்ந்தபடியே சற்று கண்ணயர்ந்தாள்.
மாலை ஆறுமணிக்குமேல்தான் விருந்தினர்கள் வர ஆரம்பித்தனர். எல்லாமே தாய்க்குலம்தான்.
சபரிமலையில்தான் ஜெயித்துவிட்டோமே, கேவலம் கொலுபார்ப்பதற்காவது ஆண்களை
அழைத்துக்கொண்டு போவோமே என்ற அகன்ற மனம் ஒருவருக்கும் இருந்ததாகத் தெரியவில்லை. வந்தவர்களில்
விஜிக்கு முக்கியமான ஒருத்தி, சுந்தரி
என்ற சமையல்பெண். அவளைச் ‘செவப்பு’ சுந்தரி என்றுதான் குடியிருப்பில்
அழைப்பார்கள். (ஏனென்றால் இன்னொரு சுந்தரி- சற்றே மாநிறம் கொண்டவள்- சமையல்
பணியில் இருந்தாள். அவள் ‘கருப்பு’ சுந்தரியாம்.) அந்தச் செவப்பு சுந்தரி, விஜியிடம் சற்றே மறைவிடத்திற்குப் போய்
இரகசியமாக ஏதோ சொல்லிவிட்டுப் போனாள். அதை
கேட்டதும் விஜிக்கு முகத்தில் இரண்டாயிரம் வாட்ஸ் பல்ப் எரிய ஆரம்பித்ததை நான்
கண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை. அப்படி என்னதான் சொல்லியிருப்பாள்?
*****
சொன்னபடியே சவிதா எங்கள் நவராத்திரி கொலுவைப் பார்க்க
வந்துவிட்டாள். இரவு எட்டுமணி யிருக்கும். இருங்கள், அவளோடு ஒரு ஆணும் இருந்தான்.
வயது என்ன தெரியுமா? இரண்டே இரண்டு!
விஜிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சவிதாவைப் பற்றி எல்லாரும்
வம்புபேசிக் களித்திருந்த சமயம், அவளே ஒரு பையனோடு வந்தது துணிச்சலான செயலாகப்
பட்டது.
‘வாம்மா சவிதா! யாருடி இந்தக் குட்டிப் பையன்?’ என்றாள்
விஜி. ‘எங்கிட்ட வாடா கண்ணா’ என்று அவனை நோக்கி இரண்டு கைகளையும் நீட்டினாள். குழந்தை
வேற்றுமுகம் என்பதால் வரமறுத்து ‘அம்மா’ என்று சவிதாவை இறுகக் கட்டிக்கொண்டது.
விஜிக்குத்
திகைப்பாக இருந்தது. அந்தக் குழந்தைக்கு
இவள் அம்மாவா? எப்போது இவள் கர்ப்பமானாள்?
அடிக்கடி வெளிநாட்டுக்குப் போவாள். ஆனால் ஆறுமாதத்திற்கு ஒருமுறையாவது விடுமுறையில்
இந்தியா வந்துவிடுவாளே! எப்போது பார்த்தாலும் டயட்டில் இருப்பவள்போல்
ஒல்லியாகத்தானே இருந்தாள்! வயிறு வீங்கிப் பார்த்ததில்லையே! இந்தக் குழந்தையை
எப்போது பிரசவித்திருக்கமுடியும்? அப்படியே இருந்தாலும் ஒரு குழந்தையை இரண்டுவருடங்கள்
யாருக்கும் தெரியாமல் எப்படி மறைத்துவைத்திருக்க முடியும்?
‘உட்கார் சவிதா, உன் பிள்ளை உன்னைப்போலவே நல்ல கலராக
இருக்கிறான்! என்ன பெயர் வைத்திருக்கிறாய்?’ என்று குழந்தையின் கன்னத்தில்
தட்டினாள். குழந்தை மீண்டும் எச்சரிக்கை உணர்ச்சியோடு, ‘அம்மா..’ என்று சவிதாவின்
கழுத்தைக் கட்டிக்கொண்டான்.
‘பார்த்திபன் என்று பெயர். மகம் நட்சத்திரம். சிம்ம ராசி’
என்றாள் சவிதா மகிழ்ச்சியோடு. ‘இல்லேடா கண்ணா?’ என்று அவனைக் கொஞ்சினாள். குழந்தை
பதிலுக்கு அவளை ஆசையோடு முத்தமிட்டது.
சுண்டலை பிளாஸ்டிக் கப்புகளில் நிரப்பும் பணியில் தீவிரமாக
இருந்த என்னிடம், உள்ளே வந்த விஜி, மெல்லிய குரலில், ‘என்னங்க இது, ஒண்ணுமே
புரியலே! இவளை அந்தக் குழந்தை அம்மான்னு கூப்பிடுது. ஆனா செவப்பு சுந்தரி வேற
மாதிரியில்லே சொன்னா?’ என்றாள்.
‘வேற மாதிரின்னா?’
‘அந்த அசிங்கத்த ஏன் கேட்கிறீங்க! இந்தப் பையன் சவிதாவுக்குக்
கூடப் பிறந்த தம்பி ஆகணுமாம்! அறுவது வயசு
அம்மாவுக்குப் பொறந்திருக்கான் இந்தப் புள்ளை! வெவஸ்தை கெட்ட ஜென்மங்க’ என்று விஜி
சொன்னதும் எனக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. உண்மையில் சவிதாவின் அம்மாவை
இந்தக் குடியிருப்பில் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. வெளிநாட்டில் இருந்ததாகக் கேள்வி.
மகனா, தம்பியா?
இந்த சஸ்பென்சை உடைக்காதவரையில் விஜி தூங்கப்போவதில்லை
என்று எனக்குத் தெரியும். அதனால் மெதுவாக அவளுக்கு ஆலோசனை சொன்னேன். ‘சவிதாவிடமே
இலைமறை காய்மறையாய்க் கேட்டுவிடலாமே!’
என்னைப் பார்த்து முறைத்தாள் விஜி. ‘ஏன் நேரடியாகவே
கேட்கலாமே!’ என்றாள்.
தாம்பூலமும் சுண்டலும் கைமாறிக்கொண்டிருக்கும்போது மெல்லப்
பேச்சுக் கொடுத்தேன் சவிதாவிடம். ‘இப்போது பிராஜக்ட் எல்லாம் எப்படிப் போகிறது? ஆர்ட்டிஃபீஷியல்
இண்ட்டலிஜென்ஸ் தான் இப்போது டிமாண்டில்
இருப்பதாகச் சொல்கிறார்களே!’ என்றேன்.
அதைப் பற்றி விளக்கம் கொடுத்தாள். கணினித் துறையில்
ஐந்தாண்டுக்குமேல் அனுபவம் உள்ளவர்களுக்கு அதிலேயே இன்னொரு புதியதுறையைக்
கற்றுக்கொள்வதில் அதிக சிரமம் இருக்காது என்றாள். யாருக்கும் வேலை பறிபோகாது என்றாள். போனாலும்
அது ஒருசில மாதங்களுக்குத்தான் என்றாள்.
நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே நூற்றுப்பன்னிரண்டாவது
பிளாக்கிலிருந்து தாயம்மா பாட்டி வந்தார். வயது எண்பதுக்குமேல் இருக்கும். அவருடைய
கண்ணுக்கு அதைப்போல இரண்டுமடங்கு ஆயுள் என்பார்கள். யாரையும் ஊடுருவிப் பார்த்து
ரகசியங்களைக் கண்டுபிடித்துவிடுவதில் கில்லாடி.
சவிதாவையும் குழந்தை பார்த்திபனையும் பார்த்த தாயம்மா, ‘ஏண்டி
பொண்ணு, இந்தப் பையனைப் பார்த்தா ஒன் ஜாடையாவே இருக்கானே, ஒருவேளை ஒன்னோட தம்பியோ?’
என்றாள்.
விஜியும் நானும் சவிதா என்ன சொல்லப்போகிறாளோ என்று தீர்க்கமாக
நோக்கினோம்.
கலகலவென்று சிரித்தாள் சவிதா. ‘அப்படியும்
வைத்துக்கொள்ளலாம் பாட்டி!’ என்றாள்.
இதுதான் சமயம் என்று நான் ‘தயவு செய்து புரியும்படியாகச்
சொல்லுங்கள் சவிதா! இந்தப் பார்த்திபன் உங்கள் மகனாக இருந்தால் தம்பியாக
இருக்கமுடியாது. தம்பியாக இருந்தால் மகனாக இருக்கமுடியாது. ஆனால் இவன் உங்களை
அம்மா என்று அழைக்கிறானே! இது என்ன புதிர்?’
என்றேன்.
‘அது பெரிய கதை அங்க்கிள்! ‘ என்று தொடங்கினாள் சவிதா.
சவிதாவின் அக்கா சாரதா ஆஸ்திரேலியாவில் இருக்கிறாள்.
சவிதாவின் அம்மாவும் அவளுக்குத் துணையாக அங்குதான் வசிக்கிறாள். சாரதாவுக்குப் பல
ஆண்டுகளாகக் குழந்தை இல்லை. எவ்வளவோ
டாக்டர்களிடம் பார்த்தும் பயனில்லை. கடைசியில் சோதனைக்குழாய் முறையில் கருத்தரிக்க
முயற்சிசெய்தால் வெற்றி கிடைக்கும் என்றார்களாம். ஆனால் அதிலும் சிக்கல் வந்ததால்,
வாடகைத்தாய் முறையில் கருத்தரிக்க ஏற்பாடுசெய்யுமாறு ஆலோசனை தரப்பட்டதாம். சவிதாவின் தாயே தன்
மகளின் குழந்தைக்கு வாடகைத்தாயாக இருக்க முன்வந்தாளாம். அப்படிப் பிறந்தவன்தான்
இந்தப் பார்த்திபன்.
‘என் அம்மா வயிற்றில் பிறந்ததால் இவன் எனக்குத் தம்பி
முறைதானே! அதே சமயம் என் அக்காவிற்குப் பிறந்ததால் இவன் என்னை அம்மா என்று
அழைப்பதும் சரிதானே! சித்தி என்று அழைக்க
இவனுக்கு இன்னும் வார்த்தை வரவில்லை’ என்று சிரித்தாள் சவிதா.
இன்று இரவு விஜி நன்றாகத் தூங்குவாள் என்பது உறுதி.
(c) இராய செல்லப்பா, சென்னை
****
சவாரஸ்யமான கதை. எதிர்பாராத முடிவு.வீட்டு வம்பினை அழகாக கூறியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதங்கள் வரவுக்கு நன்றி நண்பரே! விரைவில் தாங்களும் ஒரு வலைப்பதிவு தொடங்கிட எனது வாழ்த்துக்கள்!
நீக்குதாயுமானான், தம்பியுமானான்
பதிலளிநீக்குஅருமை
வயசு தந்த உரிமை பாட்டிக்கு... நேரிடையாகக் கேட்டுவிட்டார்!
பதிலளிநீக்குகதை ஃப்ளோ நல்லாத்தான் இருக்கு. ஆனால் கதைக்கருதான் தலை சுற்ற வைக்குது. நீங்கள் இத்தகைய கதையைக் கேட்டிருக்கலாம் (இப்போதான் நளினி-ராஜீவ் கொலை வழக்கு- பெண் நளினியின் அம்மா தாய் என்று இருவரும் யூகேயில் இருப்பதாகப் படித்தது ஞாபகத்துக்கு வருது).
பதிலளிநீக்குவாராது வந்த குழந்தையை இரண்டு வருடத்திலேயே திருமணமாகாத சித்தியோட இந்தியாவுக்கு அனுப்புவது - சஸ்பென்ஸ் என்ற பெயரில் கதை இங்கேதான் தடம் புரண்டுவிட்டதோ?
இவர்களெல்லாம் டிஜிட்டல் ஏஜ் குழந்தைகள் ஆயிற்றே! இரண்டு வருடம் என்ன இரண்டு மாதத்திலேயே பயணம் செய்யத் தயாராக இருப்பவர்கள்! விடுங்கள், குழந்தையின் அம்மாவுக்கு கேன்சர் என்று எழுதிவிடட்டுமா? ஆனால் உண்மைக்கதைகளில் நமது எண்ணங்களை நுழைப்பது சரியா?
நீக்குஉண்மைக் கதை - அட ராமா......
நீக்குடிஜிட்டல் யுகம் ஒரு மாதிரித்தான் இருக்கு போலிருக்கு. எனக்குத் தெரிந்த ஒரு பெண் இப்போது ஹிந்தி படித்துக்கொண்டிருக்கிறார்... ஆஸ்திரேலியாவோ நியூசிலாந்தோ மேற்படிப்புக்குச் செல்லும்போது உபயோகமா இருக்கும் இந்தியன் கம்யூனிட்டியோட பழக என்று.
நடந்த உண்மையா...?
பதிலளிநீக்குஅதே, அதே!
நீக்குஉணர்வுகளை வெளிப்படுத்திய விதம் அருமை. நெகிழ வைத்துவிட்டீர்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா!
நீக்குஅடாடா. நல்ல அக்கப்போர் கதை. எல்லோரும் வம்பளக்கவும் நல்ல காரியங்களோடு சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றாத குறையாக விஷயத்தை தீர்ப்பதும் நல்ல குடியிருப்பின் யதார்த்தங்கள். புண்ணியமும்,புருஷார்த்தமும். அன்புடன்
பதிலளிநீக்குதங்கள் ஆசிகளுக்கு மிக்க நன்றி! இம்மாதிரி சுவையான வம்புகள் எங்கள் குடியிருப்பில் அடிக்கடி நிகழ்வதுண்டு. அங்கு எப்படி?
நீக்குவயதானவர்கள் வம்பில் சேரமுடியாது. எங்கும் விதவிதமான ஒர்க்கிங் உமன்ஸ் வம்புகள், பெருமைபேச்சுகள் ஸர்வஸகஜம். நல்ல காரியங்களும் நடுவில் செய்கிரார்களே. எல்லாம் மாடர்ன் வம்புகள் என்று வைத்துக் கொள்ளலாம். அன்புடன்
நீக்குநவராத்திரியா வம்படிக்க ஒரு வாய்ப்பா
பதிலளிநீக்குநீங்கள் சொன்னால் தவறாக இருக்குமா? நவராத்திரி பொதுவாகவே பெண்களுக்கு வம்பளக்க ஒரு நல்வாய்ப்புதானே! நம்மைப்போல் நமது மகளிர்கூட்டமும் வம்பளப்பதை நாம் ஆதரிக்கவேண்டும் என்பதே என் கருத்து.
நீக்குஅட! என்ன ஒரு ஸ்வாரஸ்யமான ட்விஸ்ட்! இந்த மாதிரி நிகழ்வுகள் எதிர்காலத்தில் எதிர்பார்க்கலாம் என்றுதான் தோன்றுகிறது.
பதிலளிநீக்குஆம், எதிர்கால எழுத்து இப்படித்தான் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமே ஆணை பிறப்பிக்கவும் கூடும்.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு