செவ்வாய், அக்டோபர் 16, 2018

உசிலம்பட்டி ரவுடியும், மீனாட்சிபுரம் எஸ்.பி.யும்


பதிவு 06/2018
உசிலம்பட்டி ரவுடியும் மீனாட்சிபுரம் எஸ்.பி.யும்

ஒருநாள் புதன்கிழமை. உசிலம்பட்டியில் வாரச்சந்தை. பயங்கரமான கூட்டம். பேருந்து நிலையத்திற்குப் பின்பக்கம்தான் சந்தை திடல். போலீஸ் கான்ஸ்டேபிள் இருளப்பன் (PC474)  பேருந்து நிலையைப் பணியில் இருந்தார். நல்லவர். மத்தியானம் சுமார் ஒருமணி. ஈ.கே.குருசாமி என்ற ரவுடி. மிகவும் கொடியவன். உசிலம்பட்டியில் பணியாற்றிய ஒரு சிறந்த சப்-இன்ஸ்பெக்டரை நடுவீதியில் வைத்து செருப்பால் அடித்துவிட்டு ஓடிவிட்டானாம். எனவே அவன் பெயரில் அந்தக் காவல் நிலையத்தில் ‘ரவுடி ஷீட்’ திறக்கப்பட்டிருந்தது. ஆனால் அவன் சில மாதங்களில் அருகிலுள்ள ‘ஏழுமலை’ என்ற ஊருக்கு இடம் மாறிவிட்டான்.

அவனுக்கு இரண்டு மனைவிகளாம். அக்காளையும் தங்கையையும் கட்டாயக் கல்யாணம் செய்துகொண்டான். இருவரும்  ஆசிரியைகள். அதே ஊரில் வெவேறு பள்ளிகளில் பணிபுரிந்தார்கள். ஒவ்வொரு மாதமும் முதல்தேதியன்று அந்தந்தப் பள்ளிக்குச் சென்று சம்பளப் பணத்தைப் பலவந்தமாகப் பிடுங்கிக்கொண்டு சென்று கண்டபடி குடிப்பது, ரவுடித்தனம் செய்வது அவன் தொழில். எட்டாம் வகுப்புவரை படித்தவன். முன்னாள் இராணுவத்தினனும் ஆவான். அரசியலிலும் கொஞ்சம் செல்வாக்கு உடையவன்.


அன்றும் வழக்கம்போல் மனைவிகளிடம்  பணம் பறிக்கச் சென்றுள்ளான். மனைவிமார்கள் கெட்டிக்காரத்தனமாகத் தங்கள் தந்தையை அன்று வரவழைத்து அவரிடம் சம்பளத்தைக் கொடுத்து அனுப்பி விட்டார்கள். விஷயம் தெரிந்த குருசாமி, மாமனாரைத் தேடி அடுத்த பஸ்ஸைப் பிடித்து உசிலம்பட்டி வந்துள்ளான். அவர் உசிலம்பட்டியில் போலீஸ் இன்ஃபார்மராக இருந்தவர்.  ஆட்டந்துறை என்று பெயர். உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் அவரைச் சந்தித்தான் குருசாமி.

மனைவிகளின் சம்பளத்தைத் தன்னிடம் தரும்படி கேட்டான். அவர் மறுக்கவே, தனது குடைக்கம்பியால்  அவரை அடித்து ரத்தகாயம் ஏற்படுத்திப் பணத்தைப் பிடுங்க முயற்சித்தான். அப்போது பேருந்து நிலையப் பணியில் இருந்த காவலர் இருளப்பன் பக்குவமாய்ப் பேசி இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்தார்.

‘பஸ் ஸ்டாண்டில் என்னடா கலாட்டா?’  என்று சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி ரவுடி குருசாமியின் கன்னத்தில் ஓங்கி அறை விட்டார். அவனது கூலிங் கிளாஸ் கீழே விழுந்துவிட்டது. அவ்வளவுதான், குருசாமி அவரைப் பார்த்து முறைத்துவிட்டு, ‘ஸார், நான் ஒருமாதிரிப் பட்டவன். என்னைப் பற்றி விசாரித்துப் பாருங்கள்.  என்ன துணிவிருந்தால் என்மீது கை வைப்பீர்கள்?’ என்றான்.

உடனே அருகில் இருந்த காவலர் இருளப்பன், சப்-இன்ஸ்பெக்டரைத் தனியே அழைத்து, ‘எஜமான், இவனை அடிக்காதீர்கள். இவன்தான் அந்த எஜமானை (அதாவது சப்-இன்ஸ்பெக்டரை) செருப்பால் அடித்தவன். கேஸ் போடுங்கள். அடிக்கவேண்டாம். நானே பக்குவமாகப் பேசித்தான் அழைத்துவந்தேன்’ என்றார்.

(ஒரு நிமிடம் யோசித்த சப்-இன்ஸ்பெக்டர்) தனது உதவி சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து ‘இந்த வழக்கை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு பறந்துவிட்டார். அப்பாவி பொதுமக்களென்றால் புரட்டி எடுத்துவிடும் வழக்கமுள்ள அந்த  உதவி சப்-இன்ஸ்பெக்டரின் பெயர் ஃபிக்ரிடோ. ஆங்கிலோ-இந்தியர். கடும் கோபக்காரர். அவரோ, ‘ரைட்டர்! எஃப்.ஐ.ஆர். போட்டு இதை என்னவென்று பாருங்கள்’ என்று சொல்லிவிட்டு அவரும் சென்றுவிட்டார்.    

பயிற்சி எஸ்.ஐ. ஆக அங்கே இருந்தவர் திருக்குறள் பெருமாள். அவர் என்ன செய்தார் தெரியுமா? அவருடைய வார்த்தைகளிலேயே கேளுங்கள்:

நான் அங்கே இருந்தவன், இருளப்பனைப் பார்த்து, ‘என்னடா! எல்லாரும் ஓடுகிறார்கள். ரத்த காயத்துடன் ஆட்டந்துறை நிற்கிறார்.  சப்-இன்ஸ்பெக்டர் எல்லாரும் ஓடிவிட்டார்கள்’ என்றேன். அவர் விஷயத்தைச் சொல்லவே, லத்திக் கம்பை எடுத்து குருசாமியைக் கண்டபடி அடி(த்து) நொறுக்கினேன்.  ‘உனக்கென்னடா மீசை’ என்று அவனுடைய மீசையைப் பிடுங்கினேன். நான்கு மிதிமிதித்துத் தூக்கி லாக்கப்பினுள் எறிந்தேன்.  

பிறகு ஆட்டந்துறையிடம் புகார் பெற்று, தலைமை காவலர்கள் உதவியுடன்,  IPC Sec 324 இல் F.I.R. பதிவு செய்தேன்.  ஆட்டந்துறையை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பினேன்.

மறுநாள் குருசாமியைக் கைவிலங்கிட்டு சங்கிலியில் கட்டித் தெருத்தெருவாக இழுத்தேன். உசிலம்பட்டி நகரமே, ‘நமது எஜமானுக்கு (அதாவது எஸ்.ஐ.க்கு) இவ்வளவு கோபம் வருமா என்று வியப்பில் ஆழ்ந்தது.

அவனைச் சங்கிலியில் கட்டி வீதிவீதியாக இழுத்தபடி திருமங்கலத்திற்கு நீதிமன்றக் காவலுக்குப் பேருந்தில் கூட்டிச்சென்றேன். அப்போது அவன் அருகில் அமர்ந்து, ‘குருசாமி! உனக்கும் எனக்கும் முன் பகை கிடையாது. எனது குடும்பத்தினர் அனைவரும் ராணுவத்தில்தான் உள்ளார்கள். உனக்குத் திறமையும், பலமும் இருந்தால் அதை மனைவிகளிடமும், மாமனாரிடமுமா காட்டுவது?  வள்ளுவர்,  ஈன்றாள் பசி காண்பானாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை –என்கிறார்.  நீ ஃபார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்தவன் என்று எண்ணுகிறேன். தேவர் ஒரு சிறந்த ஆன்மிகவாதி. நீ ஒரு சப்-இன்ஸ்பெக்டரைத்  துன்புறுத்தி இருக்கிறாய். நானாக இருந்தால் உன்னை எப்போதோ சுட்டுக் கொன்றிருப்பேன்’ என்று பல அறிவுரைகள் கூறி அவனை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவிட்டேன்.

செய்தி ஆய்வாளருக்கும், துணை கண்காணிப்பாளருக்கும் (டி.எஸ்.பி.) தெரிந்து, உடனே ஆய்வாளர் நிலையம் வந்து என்னை அழைத்து விசாரித்தார். ‘பெருமாள் சின்னப் பையன். FIR எல்லாம் சரியா என்று பார்த்து அவனுக்குத் தேவையான அறிவுரைகள் கொடுங்கள்’ என்று டி.எஸ்.பி. ஆய்வாளரிடம் கூறினார். ஆய்வாளர், ‘நீ எப்படி அப்பா இப்படி அடித்தாய்?’ என்று (ஆச்சரியத்துடன்) கேட்டார். நான் சிரித்துக்கொண்டே, ‘ஸார்! கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களை கட்டதனோடு நேர் –என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட கொடியவனைத் தண்டிக்காவிட்டால் காவல்துறையில் இருப்பதற்கே அர்த்தம் இல்லாமல் போகும் ஸார்!’ என்றேன்.

‘Very good. You have done a good thing. But be careful. Because he is a very bad element. He has got some political background also’ என்றார். நானும் ‘தேங்க்யூ ஸார்! அவ்வாறே செய்கிறேன்’ என்றேன்.

பிறகு, விசாரணை முடிந்து குற்றப் பத்திரிக்கை யார் தாக்கல் செய்வது என்ற பிரச்சினை எழுந்தது. எஸ்.ஐ. சிறிது(ம்) விருப்பம் இல்லாமல் இருந்தார். பிறகு ஆய்வாளர், டி.எஸ்.பி., அரசு வழக்கறிஞர் எல்லாரும் கலந்து (பேசி), ‘பெருமாளும் எஸ்.ஐ. தானே! எனவே பெருமாளே குற்றப் பத்திரிக்கை போடட்டும்’ என்றார்கள். நான் தயார் என்று நானே குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தேன்.
***
இந்த வழக்கில் ரவுடி குருசாமிக்குத் தக்க தண்டனை கிடைத்தது. அவனது கொட்டம் அடங்கிவிட்டது. அவனால் பாதிக்கப்பட்டிருந்த ‘அந்த’ எஸ்.ஐ. (உடனே) பெருமாளுக்கு போன் செய்து, ‘என் மானம் மரியாதை மட்டுமல்லாமல் நமது காவல் துறையின் மானம் மரியாதையையும் காப்பற்றிவிட்டீர்கள்’ என்று பாராட்டினார்.
***
யார் இந்தத் திருக்குறள் பெருமாள்? அவருடைய பெயருக்குமுன்  ஏன் ‘திருக்குறள்’ என்ற அடைமொழி ஒட்டிக்கொண்டது?  வாழ்நாள் முழுதும் அவர் திருக்குறளோடு சொந்தம் கொண்டாடினாரா? போலீஸ் துறையில் அவர் முன்னேற முடிந்ததா? இப்போது எங்கே இருக்கிறார்?

கடைசிக் கேள்விக்குப் பதில்: எங்கள் குடியிருப்பில் அண்மையில் அவர் குடியேறியிருக்கிறார்.  வயது எழுபத்தெட்டு.

மற்ற கேள்விகளுக்கான பதிலை ஒரு புத்தகமாகவே எழுதிவிட்டார் பெருமாள். ‘காவல் பணியில் ....கடமையும், களிப்பும், கசப்பும்’ என்ற பெயரில் தனது முப்பத்தாறு ஆண்டு காவல்துறை அனுபவங்களை அழகான தமிழில் கிட்டத்தட்ட ஒரு வரலாற்று ஆவணமாகவே  வடித்துவிட்டார்.  



இராசபாளையம் அருகிலுள்ள மீனாட்சிபுரத்தில் அழகுக் கோனார் – மீனாட்சியம்மாள் தம்பதியருக்கு ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்தவர் பெருமாள். இளமையிலேயே  பேச்சுத்திறமையில் சிறந்து விளங்கிய இவரைப் பெருந்தலைவர் காமராஜர் அரசியலுக்கு வரும்படி அழைத்தும், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த தன்னால் அரசியலில் முன்னேற இயலாது என்று அவரிடமே தெரிவித்து, பின்னர் காவல்துறையில் பயிற்சி எஸ்.ஐ. ஆக நுழைந்தார். தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் பல்வேறு பொறுப்புக்களில் பணியாற்றினார். கடைசியாக புதுக்கோட்டையில் Addl. S.P  ஆக உயர்ந்து ஓய்வுபெற்றார்.

துபாயில் தன் மகன் வீட்டில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தபோது பேத்தி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். புத்தகம் முழுவதும் நேர்மை ததும்புகிறது. தான் செய்த விதிமீறல்களையும் விடாமல் பதிவுசெய்திருக்கிறார். உயர் அதிகாரிகளின் தவறுகளையும் இங்கிதமின்மையையும் எடுத்துக்காட்டி காவல்துறையில் சேரும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறார். இந்த நூலிலிருந்து சில சுவையான பகுதிகளைக் கீழே தருகிறேன்:
***
எனது 36  ஆண்டு கால காவல்பணியில் எத்தனையோ குற்றவாளிகளைக் கடுமையாக அடித்திருப்பேன். மனித உரிமைகளை மீறிச் செயல்பட்டிருப்பேன். ஆனால் வள்ளுவர் காட்டிய ‘பிறன்மனை நோக்கா பேராண்மை’யை மிகவும் கண்டிப்பாகக் கடைப்பிடித்து வருகிறேன். (சினிமாக் கவிஞர்கள் கவனிக்க!) அதுபோன்று கள்ளுண்ணாமையையும் கண்டிப்பாகக் கடைப்பிடித்து வருகிறேன். அந்த வகையில் நான் அண்ணல்  காந்தியடிகளுக்குச் சமம் என்று கூட எண்ணுவேன். அவர்கள் குன்றின் மேலிட்ட விளக்கு. நான் குடமிட்ட விளக்கு. காந்தியடிகள் காவல் துறையில் பணியாற்றவில்லை. எனவே குற்றவாளிகளை அடிக்கும் வாய்ப்பை அவர்கள் பெறவில்லை. நான் காவல்துறையில் பணியாற்றியதால் வேறு வழியில்லை. அடித்திருக்கிறேன். (பக்கம்  204)
***  
ஒரு நண்பர் ‘நீங்கள் பொய் வழக்கே போட்டதில்லையா?’ என்று கேட்டார். போட்டிருக்கிறேன். நான் எஸ்.ஐ. ஆகப் பணியாற்றியபோது  காட்டில் மாடு மேய்க்கச் சென்ற இளம்பெண்ணை அடையாளம் தெரிந்த ஒருவன் பலவந்தமாகக் கற்பழித்துவிட்டான். அந்தப் பெண் இதை வெளியில் சொல்ல நாணி, புகார் கொடுக்க மறுத்தாள். செய்தி தெரிந்தவுடன் அந்தக் கொடியவனைப் பிடித்துவந்து நன்றாக அடித்து அவன்மீது கஞ்சா, சாராயம் வழக்குகள் போட்டேன். இது பொய் வழக்குத்தானே! (பக்கம் 205)
***
வேலூர் காவல்துறை பயிற்சிக் கல்லூரி, கோட்டைக்குள் இருந்தது. பிரம்மாண்டமான கோட்டைதான். ஆனால்  பயிற்சி எஸ்.ஐ.க்களான நாங்கள்தான் எடுபிடிகள். ஏவலர்களும் கோட்டை காவலர்களும் நாங்கள்தான். அன்றாடம்  சுத்தம் செய்யப்படவேண்டிய உலர்ந்த கழிப்பறைகள். மாடுகள் குளிக்கும் குளிப்பறைகள் போன்ற குளிப்பறைகள். மனிதனையே தூக்கிச் செல்லும் அளவுக்குச் சக்தி வாய்ந்த கொசுக்கள் நிறைந்த அறைகள். ஏனென்றால்  அது கோட்டை. அதைச் சுற்றிலும் ஆழமான பாதாளச் சாக்கடைத் தண்ணீர் வந்து பாயும் அகழிகள். அந்த அகழிகளில் பல கொசுப் பண்ணைகள். அங்கு வளரும் கொசுக்களுக்குப் பயிற்சியில் இருக்கும் காவலர்களும்  எஸ்.ஐ.க்களும்தான் ரத்ததானம் செய்யவேண்டும். (பக்கம் 6)
***
என்னிடம் எத்தனையோ நல்ல பழக்கங்கள் உண்டு, திருக்குறள் படித்ததால். அதில் முக்கியமானது நான் பணியாற்றிய காவல் நிலையங்களில் எல்லாம் காவல் துறைக்குப் பொருத்தமான திருக்குறள்களை எழுதிப் போட்டிருப்பேன்.எனவே போடி நகரக் காவல் நிலையத்திலும் எனது ஆசனத்திற்கு மேலே, பல குறள்களை எழுதிப் போட்டிருந்தேன். ‘பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்’ என்ற குறளை(யும்) எழுதிப் போட்டிருந்தேன். (பக்கம் 43)
***
நான் உத்தமபாளையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அங்கிருந்த ஹாஜி கருத்த ராவுத்தர் கவுதியா கல்லூரி மாணவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டிடத்தில் இருந்த இந்திப் பலகையை உடைத்தார்கள். அச்சமயம் உத்தமபாளையம் சர்க்கிளுக்கு உட்பட்ட கூடலூரில் ஒரு தலைமை காவலர், இரண்டு காவலர்கள்  (ஆக மூன்றுபேரை) எரித்துக் கொன்றுவிட்டார்கள். எனவே மாணவர்களை மிகவும் ஜாக்கிரதையாக நடத்தும்படி எனக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு. மாணவர்கள் சைக்கிளில் விளக்கு இல்லாமலும் இரண்டு பேர்கள், மூன்று பேர்களாகவும் சவாரி செய்து அட்டகாசம் செய்வார்கள். அவர்களை எப்படி மடக்குவது என்று சிந்தித்தேன். அதற்கும் திருக்குறளைப் பயன்படுத்தினேன்.

(அப்படி அட்டகாசம் செய்யும்) மாணவர்களை நிறுத்தி, ‘ஏனப்பா இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று கேட்பேன். அவர்கள், ‘ஸார்! இனிமேல் இப்படிச் செய்யமாட்டோம்’ என்பார்கள். நான், ‘சரி. நாம் எல்லாம் பச்சைத் தமிழர்கள். இந்தியை எதிர்க்கிறோம். நீங்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறப்பாகச் செயல்படுகிறீர்கள். மகிழ்ச்சி. தமிழ் மறை, உலகப் பொதுமறை திருக்குறள். அந்தத் திருக்குறளில் ஒரு பத்து குறள்கள் – எந்த அதிகாரத்தில் இருந்தாலும் பரவாயில்லை – சொல்லுங்கள் பார்க்கலாம்’ என்பேன். அவர்களால் சொல்ல முடியாது. ‘ஏனப்பா, தமிழனாகப் பிறந்து தமிழனாகவே வளர்ந்து, இந்தி என்னும் செந்தீயை எதிர்த்து வாழும் நீங்கள் பத்து குறள்களைப் படிக்காதது தவறல்லவா? எனவே திருக்குறளைப் படிக்காததற்கு உங்கள்மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்கிறேன். அபராதம் ரு.10  அல்லது 5 கட்டிவிடுங்கள்’ என்பேன். கெஞ்சிக் கூத்தாடிவிட்டு நீதிமன்றத்தில் வந்து அபராதம் கட்டுவார்கள்.

அதிலிருந்து என்னைப் பார்த்தாலே, ‘டே! அந்தத் திருக்குறள் நிற்கிறான். திருக்குறள் சொல்லச் சொல்வான். சொல்லாவிட்டால் ஃபைன் கட்டவேண்டும்’ என்று சொல்லி ஓடிவிடுவார்கள். ஆக மாணவர்கள் எனக்கு இட்ட பெயர்தான் ‘திருக்குறள்’ பெருமாள். (பக்கம் 65)
***
திருக்குறள் வாழ்வியல் நூல். அது படித்தால் மட்டும் போதாது.அதைப் பின்பற்றி நடந்தால் காவல் துறையில் உள்ளவர்கள் வெற்றிகரமான காவல்துறை அதிகாரிகளாக இருக்கமுடியும்  என்பது எனது ஆழமான கருத்தாகும். எனவேதான் நான் காவல் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியில் இருந்தபோது ஏனைய சட்ட நூல்களுடன் திருக்குறளையும் ஒரு பாடமாக வைக்கவேண்டும் என்று வலியுறுத்தினேன். (பக்கம் 88)
***
‘தொண்டுசெய்வீர் தமிழுக்கு – துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’ –என்றார் பாரதிதாசன். தமது காவல் துறையில் திருக்குறளைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தது மட்டுமன்றி, தனது முப்பத்தாறு ஆண்டு காவல்துறை அனுபவங்களை அழகிய தமிழில் ஆவணப்படுத்தியும் இருக்கிறார் திருக்குறள் பெருமாள்.

காவல்துறையில் உள்ள ஒவ்வொருவரும் இந்த நூலைப் படிக்கவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

‘காவல் பணியில்...கடமையும், களிப்பும், கசப்பும்’:
வெளியீடு: ‘காவ்யா’, 81, கே.கே.ரோடு, வெங்கட்டாபுரம், அம்பத்தூர், சென்னை-600053.  தொலைபேசி: 044-42105680   விலை ரூ.200/-
***

10 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான புத்தகம் என்று தெரிகிறது. கண்ணில் பட்டால் வாங்கிவிடுவேன். அந்த ரௌடி சம்பவம் போல ஏதோ ஒரு திரைப்படக் காட்சி உண்டு.

    பதிலளிநீக்கு
  2. பிறந்த வருடம் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். 1962 என்றால் 2020 ஆம் வருடம்தான் ஓய்வுபெறவேண்டும். அதாவது இன்னும் ஓய்வே பெறவில்லை. ஆனால் வயது எழுபத்தெட்டு.​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி. 1962 நவம்பர் 7 என்பது அவர் வேலூரில் பணியில் சேர்ந்த தேதி. திருத்திவிட்டேன். சரியா?

      நீக்கு
  3. படிக்கப் படிக்க வியப்பாக இருக்கிறது ஐயா
    போற்றுதலுக்கு உரிய மனிதர்
    போற்றுவோம் வாழ்த்துவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா! நம்மிடையே சாதாரணமானவர்களாக வாழும் சிலர் எவ்வளவு சிறந்த பண்புகளோடு வாழ்கிறார்கள் என்று அறியும்போது எனது அகந்தை மட்டுப்படுவதை நான் உணர்கிறேன்.

      நீக்கு
  4. படிக்கவேண்டிய நூலைப் பற்றிய அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  5. ஒவ்வொரு காவலரும் தங்கள் அனுபவங்களை எழுதினால் சுவாரசியமாகத்தான் இருக்கும். வாய்ப்பு கிட்டும்போது வாங்கிப் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக! ஆனால் எஸ்.பி. அந்தஸ்துக்குக் கீழானவர்களால் தங்கள் பதவிக்காலத்தில் நடந்த வழக்குகளைப் பற்றி எழுதுவதற்கு அரசின் விதிமுறைகள் அனுமதிக்குமா என்று தெரியவில்லை. முடிந்தவர்கள் தினத்தந்தி, ராணி போன்ற இதழ்களில் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் sensitive ஆன விஷயங்களைப் பற்றி எழுதினால் அது பிரச்சினையில் கொண்டுபோய் விடலாம் என்ற தயக்கம் அவர்களுக்கு இருப்பதைக் காண முடிகிறது.

      நீக்கு
  6. நேர்மையான அதிகாரி .... எது எப்படியோ மாணவர்கள் கடுப்பில் வைத்த பெயர் அவர் பெயரில் எடுப்பாக நிலைத்து விட்டது. கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    பதிலளிநீக்கு