பதிவு எண் 43/2017 (18-10-2017)
தீபாவளி ஸ்பெஷல் : ஒரு புஸ்வாணக் கதை
வழக்கமாகப் பத்து பேராவது வந்துவிடுவார்கள். மாலையில் கூடிப் பேசும்
இடம் அது. நான்கு மர பெஞ்சுகள். இன்று ஏழுமணியானபோதிலும் ஐந்து பேர் தான்
இருந்தார்கள்.
தீபாவளி ஆரம்பித்துவிட்டதே! (சங்குசக்கரம் கொளுத்துபவர் இக்கட்டுரையின் ஆசிரியர்தான்!) |
நூற்று முப்பத்தி எட்டாம் பிளாக்கிலிருந்து சுந்தரம், இருநூற்று
நாற்பதிலிருந்து கண்ணாயிரம், எண்பத்திரெண்டிலிருந்து ஷெனாய், கடைசி
பிளாக்கிலிருந்து ராகவனும் கோவிந்தசாமியும். வழக்கமாக முதலில் வந்துவிடும் ஆறாவது
பிளாக் சந்திரன் சார் இன்னும் வரவில்லை. எல்லாரும் ‘சீனியர் சிடிசன்’கள். அதனால் அந்தப் பெஞ்சிற்கு
சீனியர் சிடிசன் பெஞ்சு என்றே பெயர் வந்துவிட்டது. சுருக்கமாக அதை ‘சீ.ஸி.’ பெஞ்சு
என்பார்கள். பிடிக்காதவர்கள் ‘சீ..ச்சீ’ பெஞ்சு என்றும் கூறுவதுண்டு.
சென்னையின் புறநகர்ப் பகுதியில் மொத்தம் எழுநூறு குடியிருப்புகள் கொண்ட பெரிய
டவுன்ஷிப் அது. பத்து பார்க்குகள். ஒரு சூப்பர் மார்க்கெட். ஏழெட்டு சிறு கடைகள்.
ஒரு ஓட்டல். ஒரு டீக்கடை. ‘அழகுநிலையம்’ என்ற முடிதிருத்தகம். குடியிருப்பவர்கள்
உட்கார்ந்து பேசுவதற்காகச் சுமார் பத்து இடங்களில் பெஞ்சுகள்.
குடியிருப்பின் கவர்ச்சிகரமான அம்சமே அதில் அமைந்திருந்த பள்ளிக்கூடம் தான். குடியிருப்பில் உள்ளவர்களின் குழந்தைகள்
மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பதால் பள்ளியை முன்னிட்டுக் குடி வந்தவர்கள் அதிகம்.
பெரும்பாலோர் அருகிலிருந்த ஐ.டி. கம்பெனிகளில் பணிபுரிபவர்கள். பள்ளி ஆசிரியர்களுக்கு வாடகையின்றி வீடுகள்
தரப்பட்டதால் தரமான ஆசிரியர்கள் ஓடோடி வந்தனர். சில ஆண்டுகளிலேயே அக்குடியிருப்பு
நிரம்பி வழிந்தது. அதன் வெளிப்புற விளிம்புகளில் இருந்த விளைநிலங்கள் வீட்டு
மனைகளாகின. காய்கறிக் கடைகளும் மளிகைக் கடைகளும் நிறைய முளைத்தன. அரசு பஸ்கள்
அடிக்கடி ஓட ஆரம்பித்தன.
பத்து பிளாக்குகள் கூடும் இடங்களில் உட்கார்ந்து பேச பெஞ்சுகள்
போட்டிருந்தார்கள். அதில் அமைந்ததுதான் சீ.ஸி.கிளப்.
“ஷெனாய் சார்! என்ன ஆச்சு சந்திரன் சாருக்கு? ஆறரைக்கே வந்துவிடுவாரே?” என்றார்
சுந்தரம். அதிகம் பேசமாட்டார். பேச ஆரம்பித்தால் குடியிருப்பவர்களில் யார்மீதோ
கோள் சொல்லப்போகிறார் என்று அர்த்தம்.
“தெரியலையே, ஐந்து மணிக்கு என்னுடன் பேசினாரே! வீட்டில் தான்
இருப்பார். வந்துவிடுவார்” என்றார் ஷெனாய்.
திடீரென்று, “விஷயம் தெரியாதா
உங்களுக்கு?” என்றார் கண்ணாயிரம்.
சுந்தரத்திற்குத் தூக்கிவாரிப்போட்டது. தனக்குத் தெரியாத எந்த விஷயம் இவருக்குத்
தெரிந்துவிட்டிருக்கும் என்று சந்தேகம் நிறைந்த கண்ணோடு அவரை நோக்கினார்.
“சந்திரன் சாரோட பொண்ணு....” என்று ஆரம்பித்த கண்ணாயிரம், சடக்கென்று
நிறுத்திவிட்டு, ‘என்னங்க, சௌக்கியமா?’ என்று அவ்வழியே போன ஒரு பெண்மணியை நிறுத்திக்
கேட்டார். ‘நல்ல சௌக்கியம்தான் மாமா! நீங்க எப்படி இருக்கீங்க?’ என்று பதில்
கிடைத்தது. அவர் பெயர் வசந்தா(மாமி). ‘ஏதோ இருக்கேன்’ என்று பட்டும்படாமலும்
சொன்னார் கண்ணாயிரம். மாமி நிற்காமல் பறந்தார்.
பாதியில் நிறுத்திவிட்ட பேச்சைத் தொடர்ந்தாகவேண்டுமே! ‘சந்திரன் சாரோட
பொண்ணுக்கு என்ன ஆயிற்று?’ என்று எல்லாரும் ஆர்வத்துடன் கேட்டார்கள்.
கண்ணாயிரம், வழக்கம் போலவே, சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, பெண்மணிகள்
யாரும் அந்தப் பக்கம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு சொன்னார்: “அந்தப் பெண்
நூற்றுப் பத்தொன்பதில் குடி வந்திருக்கிறாள் தெரியுமா?”
“அப்படியா, தெரியாதே, சந்திரன் சொல்லவே இல்லையே! எத்தனை நாள் ஆச்சு?” கோவிந்தசாமியின் குரலில் சற்று வருத்தம் தொனித்தது. குடியிருப்பில் யார் வந்தாலும்
மெயிண்ட்டனன்ஸ் ஆட்கள் முதலில் தெரிவிப்பது அவரிடம் தான். குடியிருப்பில் முதலில்
குடிவந்தவர்களில் அவரும் ஒருவர். பாதுகாப்புத் துறையில் இருந்து ரிட்டயர் ஆனவர்
என்பதால் ரம், விஸ்கி போன்ற உயர்தர ‘சரக்குகள்’ மிலிட்டரி காண்ட்டீனி’லிருந்து
இலவசமாகவோ குறைந்த விலையிலோ அவருக்கு வரும். மெயிண்ட்டனன்ஸ் ஆட்களுக்கு அதில்
அவ்வப்போது பங்கு தருவார். எப்படி இந்த விஷயத்தைத் தன்னிடம் சொல்லாமல் விட்டார்கள்?
“பதினைந்து நாள் இருக்கும். மூன்று பெண் குழந்தைகள். முதல்
பெண் ஐந்தாவதிலும் இரண்டாம் பெண் மூன்றாவதிலும், கடைசிக் குழந்தை எல்கேஜி-யிலும் சேர்ந்திருக்கிறார்கள்”
என்று பெருமிதமாகத் தகவல் சொன்னார் கண்ணாயிரம். பள்ளிக்கு மிக அருகில் இருந்தது அவருடைய பிளாக்.
மேற்கொண்டு ஏதாவது சொல்வார் என்று மற்றவர்களும், அவர்களாக ஏதாவது கேட்கமாட்டார்களா என்று கண்ணாயிரமும் காத்திருந்த
போது மழை தூறத் தொடங்கியது.
சரி, தொலைந்து போகட்டும் என்று பெரிய மனது பண்ணினார்
கண்ணாயிரம். “முக்கியமான விஷயம்! வீட்டில் அந்தப் பெண்ணும் குழந்தைகளும் மட்டும்
தான் இருக்கிறார்கள். அவள் கணவன் வந்த மாதிரி தெரியவில்லை. பெண் ரொம்ப அழகு” என்று
சொல்லிக்கொண்டிருக்கும்போதே அலைபேசி ஒலித்தது. மனைவியிடமிருந்து உத்தரவு. கடையில்
தோசைமாவு வேண்டுமாம். கிளம்பினார்.
*****
இரவு முழுவதும் இருப்புக் கொள்ளவில்லை வசந்தா (மாமி)க்கு. சந்திரன்
சாரின் மகளைப் பற்றி அவ்வப்பொழுது கேள்விப்படுவதுண்டு. குஜராத்தில் மாப்பிள்ளை
வேலை செய்வதாகவும், இரண்டு குடும்பங்களுக்கும் தகவல் தெரிவிக்காமல் பெண்ணும்
மாப்பிள்ளையும் திருமணம் செய்துகொண்டதாகவும் அதெல்லாம் பத்து, பன்னிரண்டு வருடங்களுக்கு
மேலிருக்கும் என்றும் முனியம்மா சொல்லியிருந்தாள்.
முனியம்மா சொல்லுக்கு அந்தக்
குடியிருப்பில் எதிர்க்கேள்வி கிடையாது. இஸ்திரி போடுவதற்கு அவளை
விட்டால் யாருமில்லையே!
அந்தப் பெண், தன்னுடைய மூன்று குழந்தைகளை அழைத்துக்கொண்டு
திரும்பி வந்திருக்கிறாள் என்றால் என்ன அர்த்தம்? கணவன் அவளை வேண்டாம் என்று சொல்லிவிட்டானா?
அல்லது இவள்தான் அவனை வேண்டாம் என்று வந்துவிட்டாளா? சந்திரன் சாரின் பெண்டாட்டி,
சாமர்த்தியமானவள். முழு சாப்பாட்டுக்குள் யானையையே புதைத்துவிடுவாள். நிச்சயம் ஏதோ நடந்திருக்கிறது. உடனே தெரிந்தாகவேண்டும்.
இல்லையென்றால் எழுபது-சி-யில் இருக்கும் ஜூலியம்மா
எப்படியாவது தெரிந்துகொண்டு எல்லாரிடமும் இரகசியம்
பேசியே பெரிய ஆளாகி விடுவாள். விடக்
கூடாது.
தொண்ணூற்று மூன்றில் இருக்கும் லதாவின் மாமியார் கஜலட்சுமியைக்
கேட்டால் தெரிந்துவிடும். அவசரமாகக் கிளம்பினாள் வசந்தா மாமி.
*****
சீ.ஸி. கிளப்பில் இருந்த ஷெனாய்க்கும் கோவிந்தசாமிக்கும் ஏழாம்
பொருத்தம். இவர் என்ன சொன்னாலும் அவர் குறை கண்டுபிடிப்பார். அவர் என்ன சொன்னாலும் இவரும் அப்படியே. சில சமயம் கைகலப்பிலும்
முடிவதுண்டு.
சந்திரனோடு நட்பானவர்தான் ஷெனாய். ஆகவே சந்திரனின் பெண்ணைப் பற்றிய
விஷயம் அவருக்குத் தெரியாமல் இருக்க வழியில்லை. இருந்தும், கண்ணாயிரம் அதைப்
பற்றிப் பேச ஆரம்பித்தபோது அமுக்கமாக இருந்தாரே ஏன்?
நிச்சயம் ஏதோ கசமுசா
நடந்திருக்கவேண்டும். சந்திரன் தன் நண்பர் என்பதால் வெளியில் சொல்லாமல்
அமைதிகாக்கிறார் ஷெனாய் என்றது கோவிந்தசாமியின்
மைண்டுவாய்ஸ்.
உடனே போய் கஜலட்சுமியைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்போல்
அரித்தது அவருக்கு. அவளுக்குத் தெரியாத அக்கப்போர் எதுவும் இந்தக் குடியிருப்பில்
நடக்கமுடியாது என்று யாரைக் கேட்டாலும் சத்தியம் செய்வார்கள். அத்துடன், போன மாதம்
அவள் தன்னிடம் வாங்கிய இருநூறு ரூபாயைத் திருப்பிக் கேட்கவும் இது சந்தர்ப்பமாக
அமையுமே! கிளம்பினார்.
****
கஜலட்சுமி அம்மாளுக்கு வயது ஐம்பத்து ஐந்திற்குமேல் இருக்கும். ஆனால்
ஓரளவு கவர்ச்சியானவர் என்று சீ.ஸி. கிளப்பில் அவர்மீது பலருக்குப் பிரமிப்பு
இருந்தது உண்மையே.
****
கஜலட்சுமியைப் பார்க்க வசந்தா வந்தபோது இரவு எட்டரைமணி இருக்கும்.
வராண்டாவில் விளக்கு இல்லை. அதனால், வெளிக்கதவை லேசாகச் சாத்திவிட்டு, அடுத்த வீட்டுத்
தோழியைப் பார்ப்பதற்காக கஜலட்சுமி போனதை வசந்தா கவனிக்க முடியவில்லை. கதவு திறந்திருக்கவே, உள்ளே சென்று சோபாவில்
சுதந்திரமாக அமர்ந்துகொண்டாள். ‘மாமி, மாமி’ என்று அழைத்தாள் பதில் இல்லை. சமையல்
அறையில் எட்டிப் பார்த்தாள். இல்லை. பாத்ரூமில் இருக்கலாமோ என்று தூரத்தில் இருந்தபடியே
பார்த்தாள். ஆம், கதவு மூடப்பட்டு உள்ளே விளக்கு எரிந்துகொண்டிருந்தது. சரி,
வரட்டும், எப்படியும் சந்திரனின் பெண்ணுக்கு என்ன ஆயிற்று என்ற இரகசியத்தைத்
தெரிந்துகொள்ளாமல் போவதில்லை என்று மீண்டும் சோபாவில் உட்கார்ந்தாள் வசந்தா.
வெகுநேரமாகியும் பாத்ரூம் கதவு திறக்கவில்லை. சந்தேகப்பட்டவளாய்,
அருகில் சென்று பார்த்தால், கதவு வெளியில்தான் தாளிட்டிருந்தது. விளக்கை அணைக்க
மறந்திருக்கிறாள். அவ்வளவுதான். சரி,
வெளியில் போயிருக்கிறாள், வரட்டும் என்று காத்திருந்தாள் வசந்தா.
****
கஜலட்சுமி வீட்டிற்கு கோவிந்தசாமி அதுவரை போனதில்லை. மூன்றாவது
மாடியில் லிஃப்டுக்குப் பக்கத்து வீடு என்று நினைவு. லிஃப்டில் ஏறி அவள் வீட்டின் வெளிக்கதவைத்
தொட்டதும், திறந்துகொண்டது. தாளிடப்படவில்லையே!
அந்நேரம் பார்த்துத்தானா மின்சாரம் நின்றுபோகவேண்டும்! ஒரே இருட்டு.
கதவு திறக்கும் ஓசையைக் கேட்டு, கஜலட்சுமிதான் வந்திருக்கிறாள் என்று நினைத்து, ‘வாங்க,
பார்த்து வாங்க, இப்பத்தான் கரண்ட்டு போச்சு’ என்றபடியே வாசல்கதவின்பக்கம் வந்தாள்
வசந்தா.
தன்னை அழைப்பது கஜலட்சுமிதான்
என்று எண்ணிக்கொண்ட கோவிந்தசாமி, பதில் ஏதும்பேசாமல், திடீர் இருட்டைச் சமாளிக்க
முயன்று, சுவரைப் பிடித்தபடியே உள்ளே நகர்ந்து சோபா இருக்கும் இடத்தை ஒருவாறு கண்டுபிடித்தார்.
அதற்குள் இருட்டில் டீப்பாய் தட்டுப்படவே,
அதில் கால்தடுக்கி இருவரும்
முட்டிக்கொண்டனர். கால் பிடிமானம் கிடைக்காததால் ஒருவரையொருவர் கீழேவிழாமல்
தாங்கிப் பிடித்துக்கொள்ள வேண்டியதாயிற்று.
அந்த நேரம் பார்த்து மின்சாரம் வரவும், பக்கத்து வீட்டிலிருந்து தோழியுடன்
கஜலட்சுமி வரவும் சரியாக இருந்தது......
****
மறுநாள் மாலை.
சீ.ஸி. கிளப்பில் அன்று ஃபுல் அட்டெண்டன்ஸ்.
‘கண்ணாயிரம் ஏதோ ஒரு இரகசியத்தைப்
பாதியில் நிறுத்திவிட்டுப் போனாராம், இன்று மீதியைச் சொல்லப் போகிறாராம்’ என்ற
வதந்திதான் காரணம்.
எல்லாரும் கண்ணாயிரத்தை ஆர்வத்துடன் பார்த்தார்கள். அவரோ, கம்பீரப்
புன்னகை செய்தாரே ஒழிய, வாயை மட்டும் திறக்கவில்லை.
சுந்தரம்தான் ஆரம்பித்தார். “என்ன வேய், கண்ணாயிரம்! வாயில் பூட்டு
போட்டிருக்கிறதா? சந்திரன் பொண்ணோட மேட்டர் என்ன ஆச்சு?” என்றார் சற்றே மெல்லிய
குரலில். பெண்கள் விஷயம் ஆயிற்றே!
அப்போதுதான் கூட்டத்திற்கு வந்த ஷெனாய், வெற்றிப் பெருமிதத்துடன்
எல்லாரையும் பார்த்தார். சுந்தரத்தின் அருகில்வந்து, “சரியான ஜூஜூபி அய்யா நீர்! நேற்று
எவ்வளவு சுவாரஸ்யமான விஷயம் நடந்திருக்கிறது! நீர் சந்திரன் இந்திரன் என்று என்னவோ
பேசுகிறீர்!” என்றார்.
கிளப் முழுவதும் நிமிர்ந்து உட்கார்ந்தது. அதென்ன சுவாரஸ்யமான விஷயம்
என்று ஷெனாய் முகத்தைப் பார்த்தது.
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, “விஷயம் இன்னும் கன்பர்ம் ஆகவில்லை.
இருந்தாலும் நண்பர்களுக்குள் ஒளிவுமறைவு கூடாதில்லையா, அதனால் சொல்கிறேன்.
உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள். சரியா?” என்றார் ஷெனாய்.
அனைவரும் கண்களாலேயே சத்தியம் செய்த பிறகு ஷெனாய் சொன்னது இதுதான்:
கோவிந்தசாமி, வசந்தாவிடம் போன வருடம் பத்தாயிரம் ரூபாய் கடன்
வாங்கியிருக்கிறார். இதுவரை திருப்பித் தரவில்லை. பலமுறை நேரில் பார்த்தும் கேட்டும்
பயனில்லாததால், கஜலட்சுமியின் உதவியை நாடினாள் வசந்தா.
கஜலட்சுமி திட்டம்போட்டு இருவரையும் தன்
வீட்டிற்கு வரச் சொல்லிவிட்டு, தான் மட்டும் வெளியே போய்விட்டாளாம். கோவிந்தசாமி கொஞ்சமும் பிடிகொடுக்காமல் பேசியதால் ஆத்திரம்
அடைந்த வசந்தா, அங்கிருந்த டீப்பாயை எடுத்து இவர் மீது வீசியிருக்கிறாள். இவர்
அவள்மீது டிவி ரிமோட்டை வேகமாக வீசினாராம். அப்போது அவளும் நிலை தடுமாறிக் கீழே
விழுந்தாளாம். இருவருக்கும் காயம் ஏற்பட்டு, இப்போது ஆஸ்பத்திரியில்
இருக்கிறார்களாம்.
*****
“அடடே, பலத்த காயமோ?” என்றார் சுந்தரம். கண்ணாயிரமோ, தன்வசம் இருந்த
மேடையை ஷெனாய் கைப்பற்றிவிட்டதில் அவமானப்பட்டவராக நகர்ந்துவிட்டார். மற்றவர்களும்
ஒவ்வொருவராக நகர்ந்தார்கள்.
பின்னே? விடிந்தால் தீபாவளி அல்லவா?
*****
அனைவருக்கும் என் மனம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்!
*****
பின்குறிப்பு: சில மாதங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எனது வலைப்பதிவு, இனி
முறையாக வெளிவரும் என்பதை (மகிழ்ச்சியோடு?) வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன்.
பின்குறிப்பு-2: AMAZON.COM அல்லது www.pusthaka.co.in தளங்களில் எனது ஆறு மின்-நூல்களைப் பார்த்தீர்களா? (படித்தீர்களா?)
(c) இராய செல்லப்பா சென்னை
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... தீபாவளிக்கு ஸ்விட் தராமல் அழகான கதையை கொடுத்துவீட்டீர்கள்...
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே! தங்களுக்கும் இல்லத்தவருக்கும் மகளுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
நீக்குசுவாரஸ்யமான ஊர்வம்பு!
பதிலளிநீக்குஇனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.
மிக்க நன்றி நண்பரே! தங்களுக்கும் இல்லத்தவருக்கும் மக்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
நீக்குமாதங்கள் பல கழிந்து டீக்கடை பெஞ்சோடு ஊர்வம்புடன் ஆரம்பித்திருக்கிறீர்கள். கடைசியில் வம்பு, திணைமாறிவிட்டது.
பதிலளிநீக்குஉங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தங்களை மீண்டும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பரே! தீபாவளி வாழ்த்துக்கள்!
நீக்குதங்கள் அனைவருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே! தங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
நீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குமிக்க நன்றி வலை நண்பரே! தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் தீபாவளி இனிதாகட்டும்!
நீக்குநெடுநாள் கழித்து உங்கள் பதிவைக் கண்டதில் மகிழ்ச்சி. புஸ்வானக் கதை விறுவிறுப்பாகவே இருந்தது. இனிய தீபாவளி வாழ்த்துகள்.ள
பதிலளிநீக்குதங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி! தங்கள பதிவுகள சிலவற்றைப் படிக்கத் தவறிவிட்டேன். விரைவில் சரிசெய்துவிடுவேன். மறுபடியும நன்றி!
நீக்குதீபாவளி அதுமா ரீ என்ட்ரி கொடுக்குறீங்களா?!
பதிலளிநீக்குவந்தாரை வாழவைக்கும் மண்ணாச்சே! உங்களை விட்டுடுவோமா?!
வெல்கம்ப்பா
மெர்சல் மாதிரி ஒருவழியாக வந்துவிட்டேன்! இனி தொடருவேன்! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
நீக்குதிப ஒளித் திருநாள்வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குதம=1
மிக்க நன்றி நண்பரே! ஏழாவது ஊதியக்குழுவினால் உங்கள் தீபாவளி மகிழ்ச்சி நிரம்பிய தீபாவளியாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள்!
நீக்குசற்று இடைவெளிக்குப் பின் ஊர் வம்போடு ஊர்க்கோலம் வருகிறதா பதிவு.
பதிலளிநீக்குஆம் தலைவரே! எங்களுக்கெல்லாம் உற்சாகம் தருபவர் நீங்கள்தானே! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
நீக்குYou have come back with a bang! welcome back! adhu sari Chandiran pen mattaerai appadiye vittu viteergale? mandai kudaiyudhu. adutha padhivil solli vidungal:)
பதிலளிநீக்குஅது ஒரு துப்பறியும் கதையாயிற்றே! கொஞ்சம் பொறுங்கள். துப்பு கிடைத்தவுடன் பேசுவோம். நன்றி! தங்கள் இரண்டாவது மின்னூல் வெளியாகிவிட்டதா?
நீக்குதாமதமான தீபாவளி வாழ்த்துகள். எல்லோருக்கும். நல்ல வம்பு கதை. ஆர்வக் கோளாறு. உங்களைக் காணோம் என்று நினைப்பேன். மீண்டும் நல்வரவு. அன்புடன்
பதிலளிநீக்குஊர் வம்பில் பெண்கள் தான் என்று இல்லாமல் ஆண்களும் பேசுகிறார்கள் என்று தெரிகிறது.
பதிலளிநீக்கு