சனி, நவம்பர் 07, 2015

தீர்ந்தது கணக்கு (சிறுகதை)

தீர்ந்தது கணக்கு
    
     இராய செல்லப்பா

அப்பனே முருகா, தகப்பன் சாமியே!” என்று தலைக்குமேல் கைகளைக் கூப்பிக் கோபுரத்தைத் தொழுதபடியே கோவிலுக்குள் நுழைந்தார், அர்ச்சகர் சங்கரன்.  

“வாங்க சாமி” என்று வரவேற்ற காளி, மெல்லிய குரலில், “சாமிக்கு ஒரு விண்ணப்பம். இன்றைக்கு மதுரையிலிருந்து யாத்திரிகர்கள் வருகிறார்களாம். வந்துசேரும்போது இருட்டிவிடும். நாமோ எட்டரை மணிக்குத் திரை போட்டுவிடுகிறோம். இவ்வளவுதூரம் வந்தும் தரிசனம் கிடைக்காமல் ஏமாந்துபோவார்கள். அதனால்...” என்று இழுத்தார்.

“அதனால்?”

“இன்றுமட்டும் இரவு ஒன்பதுமணிக்குத் திரை போட்டால் என்ன என்று யோசிக்கிறேன்”.

சங்கரனுக்கு ஆச்சரியம். காளி இப்படியெல்லாம் பேசியதே இல்லை. பதில் சொல்லாமல் உள்ளே நடந்தார்.     

ஒரு குக்கிராமத்தில் இருந்த சிறிய கோவில் அது.  வள்ளி தெய்வானை உடனுறை முருகப் பெருமான் மூலவர் சன்னதியில் கொலுவீற்றிருந்தார். சிவன், பார்வதிக்குத் தனித்தனிச் சன்னதிகள். நவக்கிரக சந்நிதியும் இருந்தது. அண்மையில்தான் முதல்முறையாகக் கும்பாபிஷேகம் நடந்திருந்தது. கோவிலின் ஒவ்வோர் அணுவும் புதுமெருகோடு காட்சியளித்தது.
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் ஆலயம் (கதையில் வரும் கோவில் இதுவல்ல!)

எல்லாம் காளியின் முயற்சி. பலவருடங்களாகக் கேட்பாரற்றுக் கிடந்த கோவிலைத் தனியொருவனாக நின்று புதுப்பித்தவர் அவர்தான். கும்பாபிஷேகம் முடிந்தாலொழியத் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்ததார். இப்போது நாற்பதுக்குமேல் வயதாகிவிட்ட நிலையில் இனி இக் கோவில்தான் அவருடைய இருப்பிடம். ஒரு சந்நியாசிக்குள்ள மனநிலையை அவர் அடைந்து விட்டிருந்தார்.

இத்தனைக்கும் அவர் யார், எந்த ஊர் என்பது யாருக்கும் தெரியாது. அனாதையாக அந்த ஊருக்கு வந்தவர் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. அவர் பிறந்த வருடம் இராணுவத்தில் சேர்ந்த அவருடைய தந்தை சீனப்போரில் மரணமடைந்துவிட்டாராம். சிலவருடங்களில் தாயும் இறந்துவிட்டாராம். ஊரிலேயே சற்று அதிக நிலம் வைத்திருந்த ஒருவரின் வீட்டில் அனாதையாகச் சேர்ந்தவர், மாடு கன்றுகளைப் பார்த்துக்கொள்வதுமுதல், ஏர் உழுதல், மாட்டுவண்டி ஓட்டுதல் என்று எல்லா வேலைகளுக்கும் பழக்கமானார். சுமார் இருபது வருடம்முன்பு இந்த ஊருக்கு வந்தவர், இஸ்திரிக் கடை வைத்துப் பிழைப்பு நடத்திவந்ததாகச் சொல்வார்கள். அதன்பிறகு எப்படியோ இந்தச் சிறிய கோவில் அவரை ஆட்கொண்டுவிட்டது.      

திடீரென்று ஒருநாள் தன்னுடைய கடையை விற்றுவிட்டு, வந்த பணத்தில் நோட்டீஸ் அடித்துக்கொண்டு கோவிலுக்கு நிதி வசூலிக்கக் கிளம்பிவிட்டார். ஆரம்பத்தில் அவரைக் கண்டுகொள்ளாத மக்கள், அவருடைய தீவிரமான பக்தியையும், சுயநலமில்லாத சேவையையும் கண்டு மரியாதை செய்யத் தொடங்கினார்கள். சிறிதுசிறிதாகப் பணம் சேர்ந்தது. களையெடுத்துத் தரையைச் சீரமைத்தார். சுற்றுச் சுவர் கட்டினார். மூலவருக்குச் சிறியதாகக் கட்டிடம் எழுப்பினார். ‘முருகா, உனக்கு இன்னும் என்னவெல்லாமோ செய்யவேண்டும் என்று நினைக்கிறேன், கண் திறந்து பாரப்பா’ என்று வாய்விட்டுக் கதறுவார். பைத்தியம் பிடித்துவிட்டதோ என்றுகூட மக்கள் நினைக்கத் தொடங்கினார்கள். தன்னைப் போலவே தனியாளாய் நின்றுவிட்ட சங்கரனை இன்னொரு கிராமத்திலிருந்து தேடிபிடித்துவந்து அர்ச்சகராக்கினார். தினசரி காலைவேளையில் நிச்சயமாக ஒரு பூஜையாவது நடக்கும் என்ற நிலையை ஏற்படுத்தினார். மக்கள் வரத்தொடங்கினர். மாலையிலும் பூஜைகள் நடக்கலாயின.

கந்தப்பெருமான் ஒருநாள் கண்திறந்தான். அந்த ஊர் வழியாகக் காரில் சென்றுகொண்டிருந்த மூத்த சோதிடர் ஒருவர் தற்செயலாக அந்தக் கோவிலைக் கண்டார். இறங்கிவந்து தரிசனம் செய்தார். காளியையும்  சங்கரனையும் பார்த்தார். சுயநலமில்லாத இருவரின் உழைப்பில் இரு மனைவியர் சூழத் திருமுருகன் நின்ற தோற்றம் அவரது உள்ளுணர்வைத் தூண்டியிருக்கவேண்டும். அடுத்த வாரமே தனது வாரப் பத்திரிகையில் அக்கோவிலைப் பற்றி எழுதினார். ஆத்திகர்கள் மனது வைத்தால் ஆலயத்தை உயர்த்தமுடியாதா என்றார். பன்னிரண்டு செவ்வாய்க்கிழமைகள் தீபம் ஏற்றினால் செவ்வாய் தோஷத்தினால்  தடைபட்ட திருமணம் கைகூடும் என்றார். அவ்வளவுதான். பக்தகோடிகள் திரண்டுவரலாயினர்.

ஒரே வருடத்தில் கோவில் புதுப்பிக்கப்பட்டுக் கும்பாபிஷேகமும் நடந்தேறியது. வயது காரணமாகத் தன்னால் நேரில்  வரமுடியாததால், தன் பத்திரிகைமூலம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார், சோதிடர். சங்கரனுக்குக் கம்பீரமான சரிகைவேட்டி, அங்கவஸ்திரமும் வெள்ளியால் சுற்றிய ருத்திராட்சமணி மாலையும் வாங்கினார் காளி. தனக்கும் சில எளிய உடைகளை வாங்கிக்கொண்டார். கோவில் பிராகாரத்திற்குச் சற்று வெளியே சிறிய அறையொன்றைக் கட்டி அங்கேயே தங்கலானார்.  
கோவிலுக்கு வருமானம் அதிகரிப்பதைக் கேள்விப்பட்ட அரசியல்வாதிகள் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி அதை அறநிலையத்துறையின்கீழ்க் கொண்டுவந்துவிட்டனர். தனியாக ஓர் அதிகாரி நியமிக்கப்பட்டார். அவரும் காளியையும் சங்கரனையும் உரிய மதிப்புடன் நடத்தமுன்வந்ததால் கோவில் நிர்வாகத்தில் பெரிதாக மாற்றமில்லை. பூ, பழம், தேங்காய்  விற்கும் கடை ஒன்றை நடத்த நண்பரின் மகனுக்கு ஏற்பாடுசெய்து கொடுத்த காளி,  அர்ச்சனை டிக்கட், பிரசாதம் விற்கும் பொறுப்பை யாரும் ஏற்க முன்வராததால் தானே முன்வந்து செய்யலானார்.
***
மார்கழி மாதம். சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் நடைபயணமாகவோ, வாகனங்களிலோ சாரிசாரியாக வந்துகொண்டே இருந்தனர். அவர்களின் வசதிக்காகவே விடியற்காலை மூன்றரை மணிக்குத் திறக்கப்பட்டது கோவில். இரவு எட்டரை மணிக்குக் கடைசி அர்ச்சனை. வழக்கம்போல மாலை ஐந்துமணிக்கே வந்துவிட்டார் சங்கரன்.

சன்னதியைச் சுத்தம்செய்தார். பளபளவென்று மின்னும் பித்தளைக் குடத்தில், கோவில் கிணற்றிலிருந்து தானே சேந்திய நீரை நிரப்பினார். பூசைக்கான மாலைகளை எடுத்துச் சரிபார்த்துப் பலகையில் வைத்தார். விபூதி, குங்குமத்தையும், சந்தனக்கல்லில் தானே அரைத்த சந்தனத்தையும் கிண்ணங்களில் நிரப்பினார்.  தீபாராதனைத் தட்டில் படிந்த கரியைக் கழுவினார். தூங்காவிளக்கின் திரியைத் தட்டித் திருகி,  எண்ணெய் நிரப்பினார். சன்னதிக்கு வெளியில் வந்து குனிந்து சிதறிக்கிடந்த பூக்களைப் பொறுக்கியெடுத்தார்.  பக்தர்கள் தீபம் ஏற்றி அணைந்துபோயிருந்த அகல்விளக்குகளை சுத்தம்செய்வதற்காக அப்புறப்படுத்தினார். பிறகு மீண்டும் ஒருமுறை கிணற்றுநீரில் தலைகுளித்தார். முருகனுக்கு இரவுநேரப் பிரசாதம் தயாரிப்பதில் முனைந்தார். எல்லாம் குறித்த நேரத்தில் நடந்தாகவேண்டும்.  அப்படியொரு ஒழுங்குமுறை.

காளிக்கும் அதேபோலத்தான். ஒழுங்கு தவறக் கூடாது. கோவிலுக்குள் யாரும் ஊர்வம்பு பேசக்கூடாது. அர்ச்சனை டிக்கட் இல்லாமல் யாருக்கும் அர்ச்சனை நடத்தக்கூடாது. தீபாராதனைத் தட்டில் வரும் காசுகளை உடனடியாக உண்டியலில் சேர்த்துவிடவேண்டும். அன்றாடம் கணக்கெழுதி, இரவில் சன்னதிக் கதவை மூடும்போது உள்ளே வைத்துவிடவேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் இரவு எட்டரை மணிக்குமேல் அர்ச்சனை கிடையாது. மிக முக்கியமானவர்களாக இருந்தாலும் சலுகை காட்டக்கூடாது. அதற்கேற்பச் சங்கரனும் நடந்துகொண்டார். தனக்கு நிர்ணயிக்கப்பட்ட மாதச் சம்பளமே அதிகமாகப் பட்டது அவருக்கு. சிரித்த முகத்துடன், பக்தர்களிடம் பவ்வியமாக நடந்துகொண்டதால் அவருக்கு நல்லபேர் இருந்தது.
***
சபரிமலை யாத்திரிகர்கள் நீண்ட பயணமாக வருபவர்கள். அவர்களால் கோவில் மூடும்முன்பு வரமுடியாமல் போகலாம். எல்லாம் மார்கழிமாதம் வரைதானே, அவர்களுக்காக மேற்கொண்டு அரைமணிநேரம் சன்னதியைத் திறந்துவைக்கலாமா  என்று அறநிலைய அதிகாரி கேட்டார். அப்படி அவர் கேட்கவேண்டியதே இல்லை. அதிகாரமாகச் சொல்லும் உரிமையை அரசாங்கம் அவருக்குக் கொடுத்திருந்தது. இருந்தாலும் காளிமீது அவருக்கு அப்படிப்பட்ட மரியாதை. காளி மறுத்துவிட்டார். மார்கழி முடிந்தபிறகும் மக்கள் அதையே எதிர்பார்ப்பார்கள், வேண்டாம் என்றார்.
அதே காளிதான் இன்று இப்படிச் சொல்கிறார்! சங்கரனுக்கு எந்த விஷயத்திலும் தனியான கருத்து இருந்ததில்லை. காளி சொல்வதை அவர் மறுத்துப் பேசியதில்லை. ஆகட்டும் பார்க்கலாம் என்று இருந்துவிட்டார்.
***
சொன்னபடியே இரவு எட்டேமுக்கால் மணிக்கு இரண்டு பஸ்களில் வந்து இறங்கினார்கள். ஆணும் பெண்ணுமாக நூறு பேருக்குமேல் இருக்கும். “வாங்க வாங்க” என்று வரவேற்றார் காளி. யாத்திரையின் தலைவராக வந்த முதியவரைப் பார்த்து, “பழைய கோவில்தான். கும்பாபிஷேகம் இப்போதுதான் நடந்திருக்கிறது. ரொம்ப விசேஷமான கோவில்” என்று அறிமுகப்படுத்தினார். “அர்ச்சனை டிக்கட் ஆளுக்கு ஐம்பது ரூபாய் வாங்கவேண்டும்”.

தங்களுக்காகக் கோவிலைத் திறந்து வைத்திருந்ததில் முதியவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஐம்பது ரூபாய்க் கட்டு ஒன்றைக் காளியிடம் கொடுத்தார். ஐயாயிரம் இருந்தது. “எல்லாருக்குமாகச் சேர்த்து ஒரு தேங்காய் உடைத்தால் போதும். சுவாமி தரிசனம்தான் எங்களுக்கு முக்கியம்” என்றார்.

“எப்படியோ இந்த முருகனின் தரிசனம் கிடைத்துவிட்டது. அந்த சோதிடர் சொன்னால் அது சத்தியமான வார்த்தை என்கிறார்கள். ஒங்க வீட்டுல சீக்கிரம் கல்யாணம் வரப்போகிறது, பாரேன்” என்று ஒரு பெண்மணி இன்னொரு பெண்மணியிடம் உற்சாகமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.

இவ்வளவு கூட்டத்தை ஒருசேரப் பார்த்துவிட்ட மகிழ்ச்சி சங்கரனுக்கு. இனிமேல் கோவிலுக்கு நல்ல காலம்தான். தரையோடு தரையாக மழையிலும் வெயிலிலும் அவதிப்பட்ட வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு இனி நல்லகாலம்தான்.

“சுவாமி பேருக்கே அர்ச்சனை செய்துவிடுங்கள்” என்று எல்லாரும் சொன்னாலும், கூட்டத்தில் திருமண வயது வந்திருந்த ஆறு பெண்களின் நட்சத்திரங்களைக் கேட்டு அவர்களை முன்னிறுத்தி அர்ச்சனை செய்ததில் எல்லாருக்குமே அளவற்ற மகிழ்ச்சி.  தீபாராதனைத் தட்டில் பத்துரூபாய் நோட்டுக்களாகக் குவிந்தன.

எல்லாருக்கும் பிரசாதம் கொடுத்தார் காளி. “முருகனை மறந்துவிடாதீர்கள். கல்யாணம் ஆனவுடன் தம்பதியாக வந்து அபிஷேகம் செய்துவிட்டுப் போவது நல்லது” என்று நினைவூட்டினார்.

கூட்டம் கலைந்ததும், சங்கரனை அழைத்து, “நான் சொல்வதைத் தப்பாக நினைத்துவிடவேண்டாம். உங்கள் தட்டில் விழுந்ததில் பாதியை உண்டியலில் போட்டுவிடுங்கள். பாதி எனக்கு வேண்டும்” என்றார்.
சங்கரனுக்குத் தன் காதுகளையே நம்பமுடியவில்லை. “என்ன” என்பதுபோல் மீண்டும் காளியைப் பார்த்தார்.

“ஆமாம் சாமி, விஷயம் நமக்குள் இருக்கட்டும்” என்றார். சுமார் ஐநூறு ரூபாய் இருக்கலாம். கைமாறியது.

வழக்கமான மற்ற பணிகளை முடித்துவிட்டுக் கோவில் சன்னதியைப் பூட்டி, காளியிடம் சாவியை ஒப்படைக்கப் போனபோது இருட்டில் ஒரு பெண்குரல் கேட்டது. “ஒங்க உதவியை நான் மறக்க மாட்டேன் ஐயா”  என்றது. சங்கரன் பின்வாங்கி நின்றுகொண்டார். “கவலைப்படாதே” என்றது காளியின் குரல். இளம்பெண்ணாக இருக்கவேண்டும். விரைந்துசென்று விட்டாள். முகம் தெரியவில்லை.

சாவியை ஒப்படைத்துவிட்டு சங்கரன் வெளியேறினார். கோவிலும் முருகனும் மட்டுமே நிறைந்திருந்த மனத்தில் இப்போது முகம் தெரியாத பெண் நுழைந்துவிட்டாள். யாராயிருக்கும்? காளி துறவி மாதிரியல்லவா வாழ்கிறான்! கோவில் பணத்தை எடுத்துக் கொடுக்கும் அளவுக்கு என்ன மாதிரியான தொடர்பாக இருக்கும்? முதல்முறையாக நிம்மதியின்றி இரவைக் கழித்தார் சங்கரன்.

அடிக்கடி இதேபோல் நடக்க ஆரம்பித்தது. இரவில் திரைபோடும் நேரம் அநேகமாக ஒன்பதுமணி என்றே மாறிவிட்டது. எட்டரைமணிக்குமேல் அர்ச்சனைக்காக வாங்கப்படும் காசும், தீபாராதனைத் தட்டில் பாதித்தொகையும் காளியிடம் தஞ்சமடைந்தன. அவை அந்தப் பெண்ணுக்குப் போய்ச் சேர்ந்திருக்கவேண்டும் என்பது சங்கரனின் அனுமானம்.

ஒருமாதம் ஆகியிருக்கும். தானாகவே காளி அந்தப் பெண்ணைப் பற்றிச் சொல்வார் என்று சங்கரன் எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை.
***
அன்று இரவு எட்டுமணி இருக்கும். “சாமி” என்று அழைத்தார் காளி. “இனிமேல் வழக்கம்போல எட்டரை மணிக்கே திரை போட்டுவிடலாம் சாமி” என்றார்.

சங்கரனுக்கு ஆச்சரியம். “ஆனாலும் கூட்டமாக வருபவர்கள் கொஞ்சம் முன்னே பின்னே வந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாமே. கோவிலுக்கு வருமானம் தானே!” என்றார். உங்களுக்கும் தான் என்ற அர்த்தம் அதில் தொக்கி நின்றது. அந்தப் பெண் யாரென்று இன்னமும் சொல்லவில்லையே என்ற கோபமும் மெலிதாகத் தெரிந்தது.

“அதெல்லாம் வேண்டாங்க. நடந்தது நடந்துவிட்டது. இனிமேல் ஒழுங்குமுறை தவறவேண்டாம்” என்றார் காளி கண்டிப்பாக. சங்கரன் மேற்கொண்டு பேசவில்லை.

சோதனை மாதிரி அறநிலையத் துறை மேலிடத்திலிருந்து போன் வந்தது. முக்கிய அதிகாரியின் குடும்பத்தினர் வருகிறார்களாம். எப்படியும் ஒன்பது மணிக்குள் வந்துவிடுவார்கள். இல்லை கொஞ்சம் தாமதமானாலும் ஆகலாம். தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று உத்தரவு.

“அதெல்லாம் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். எட்டரை மணிக்குள் வந்தால் தரிசனம். இல்லையென்றால் இல்லைதான்” என்றார் காளி. “சாமி, நீங்க இதுல தலையிடாதீங்க. நான் பார்த்துக்கிறேன்.”

சங்கரனுக்கு உண்மையிலேயே கோபம் வந்துவிட்டது. “காளி ஐயா” என்று குரலை உயர்த்தினார். “நீங்க செய்யறது நியாயமா? இத்தனை நாளா தாமதமாக வந்தவங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு ஒரு பெண்ணுக்குக் கொடுத்தீங்க, இப்ப மட்டும் என்ன வந்துவிட்டதாம்? ஏதோ ரகசியம் ஒங்ககிட்ட இருக்குதுன்னு நெனைக்கிறேன். எனக்குத் தெரிஞ்சாகணும்” என்றார். அதற்குள் அவருக்கு வியர்த்துவிட்டது.

அவரை நெருங்கிக் கையைப் பிடித்துக்கொண்டார் காளி. அவருக்கும் உடம்பெலாம் வியர்த்துவிட்டிருந்தது. லேசான நடுக்கமும் தெரிந்தது. கண்களிலும் நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. “மன்னிக்க வேண்டும் சாமி. அந்தக் கணக்கு நேத்தோட தீர்ந்துட்டது. ஒங்க கிட்ட சொல்லியிருக்கணும். ஆனா முன்னாடியே  சொல்லியிருந்தா முடியாதுன்னு சொல்லிடுவீங்களோன்னுதான் சொல்லல” என்று குழைவாகச் சொன்னார். “விஷயம் வேற யாருக்கும் தெரியவேண்டாம்” என்று சங்கரனின் கைகளை மீண்டும் இறுகப் பற்றிக்கொண்டார்.

சங்கரன் என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றார். 

“இந்தக் கோவிலைக் கட்டுறதுக்கு நான் என்ன பாடுபட்டேன்னு ஒங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். எவ்வளவு செலவு! எவ்வளவு வசூல்! யாருக்கும் ஒரு பைசா பாக்கி இல்லாம கணக்கு தீர்த்துட்டேன். ஆனா இந்த முருகனால ஒருத்தருக்குக் கொடுக்கவேண்டிய பாக்கி மட்டும் ரொம்பநாளா விட்டுப்போய்டுச்சின்னு தெரிஞ்சப்ப எம்மனசு எவ்ளோ பாடுபட்டது தெரியுமா?”

'இல்லை, சொல்லுங்க' என்று ஆதுரத்துடன் கேட்டார் சங்கரன்.

“எனக்கும் தெரியாது.  நாம கோபுரம் கட்டிக்கொண்டிருந்தப்ப ஒருநாள் ராத்திரி ஒரு வயசுப்பொண்ணு வந்து முருகன் கிட்ட அழுதுட்டு இருந்தா. இருந்த நெலத்த வித்து எங்கப்பா ஒன்ன வாங்கிக் கொண்டாந்தாரே முருகா, இப்ப எனக்குக் காலேஜு பீசு கட்ட யாருமில்லையேன்னு அந்தப் பொண்ணு அழுதா. இது நீ எனக்குத் தரவேண்டிய பாக்கி இல்லையா, முருகா, ஒன் பாக்கிய நீ தரமாட்டியான்னு விக்கி விக்கி அழுதா. கூப்பிட்டு விசாரிச்சேன். ஊர்ல மத்தப் பெரியவங்களையும் கேட்டேன். அவ சொன்னது உண்மைன்னு தெரிஞ்சுது. முருகன் மேல அவ்வளவு பக்தியாம் அவளப் பெத்தவங்களுக்கு. இருந்த ஒரே நெலத்த வித்து இந்த விக்கிரகங்கள வாங்கிக்கொடுத்தாங்களாம். கொஞ்ச நாள்லயே முருகன் அவங்களத் தங்கிட்ட அழைச்சிட்டாராம்....” என்று நிறுத்தினார் காளி. சங்கரன் ஆர்வமுடன் கேட்டார்.

“அப்பா அம்மா யாருமில்லாத அனாதையான பொண்ணு. பாட்டி தயவுல இதுவர படிச்சாளாம். இனிமே படிப்புக்கு என்ன செய்யறதுன்னு தெரியாம இருந்தா. அப்பத்தான் அந்த யோசனை எனக்கு வந்தது. இந்தக் கோவில கட்டினதுல  இதுவர யாருக்கும் நான் பாக்கி  வைக்கல.  ஆனா, கோவிலுக்கே நடுநாயகமான விக்கிரகங்களை வாங்கின பாக்கி இன்னும் அப்படியே இருக்கு, அது இந்தப்  பொண்ணுக்குச் சேரவேண்டிய பாக்கின்னு முருகனே  சொன்னமாதிரி இருந்தது. அது மட்டுமில்ல, தகப்பனுக்கே படிப்பு சொன்னவனில்லையா முருகன், அதனால, படிப்புச் செலவுக்குத்தானே, பாவமோ புண்ணியமோ என் பொறுப்புலயே இருக்கட்டும்னு இப்படி செஞ்சுட்டேன். ஒரு பைசா கூட நான் எடுத்துக்கல சாமி. எல்லாம் அவ காலேஜுக்கே போய்ட்டது. இன்னிக்கு வந்து ரசீதும் காட்டிட்டுப் போனா. இத முன்னயே ஒங்ககிட்ட சொல்லியிருக்கணும். என் தப்பு. மன்னிச்சிடுங்க”  என்று தழுதழுத்தார் காளி. 

சங்கரனுக்கு அவரையறியாமலேயே கண்கள் நனைந்தன. “காளி ஐயா, ஒங்க மேல ஏதேதோ நெனச்சுட்டேன். என்னோட தப்ப நீங்க தான் மன்னிக்கணும்” என்று அவருடைய கால்களைத் தொட்டார். 

மணி எட்டரை அடித்தது. சன்னதிக்குத் திரைபோட்டார் சங்கரன். “வடிவேல் முருகனுக்கு அரோகரா” என்று கண்களை மூடிக்கொண்டார். காளியும்தான். 
***
 இராய செல்லப்பா

Email: chellappay@yahoo.com;   

அனைவருக்கும் இராய செல்லப்பாவின் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

22 கருத்துகள்:

  1. கணக்கைத் தீர்த்தது காளி அல்ல.
    குமரனே முருகனே என்று தோன்றியது.

    நல்ல முடிவு.

    வாழ்த்துக்கள்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthathacomments.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடுநிசியில் இட்ட பதிவு இது. அடுத்த சில நிமிடங்களில் தங்கள் மதிப்பீடு வந்தது. இப்படி, நேரத்தில் உறங்காமல் விழித்திருப்பது உடல்நலனுக்கு ஏற்றதல்லவே ஐயா? நன்றிகள்.

      நீக்கு
  2. //சங்கரனுக்கு அவரையறியாமலேயே கண்கள் நனைந்தன.//

    எனக்கும்தான்.

    அருமையான கதை. மனமார்ந்த பாராட்டுகள். இதுதான் நான் வாசிக்கும் உங்களுடைய முதல் கதை. உங்களுடைய எல்லாக் கதைகளையும் தேடிப்பிடிச்சு வாசித்து விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான கதை ஐயா
    இவர் போலே எல்லோரும் இருந்துவிட்டால்..
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுக்கோட்டையில் தங்கள் வெளியீட்டுச் சாதனைக்குப் பிறகு தங்களின் கருத்துரையை இங்குக் காண்பதில் பெருமை அடைகிறேன் நண்பரே!

      நீக்கு
  4. காளி மனதில் நிறைந்து நின்றுவிட்டார் அய்யா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்னால் சரியாகத்தானே இருக்கும் கீதா அவர்களே! பதிவர் மாநாட்டின் கணக்குகளைத் தீர்த்தவர் நீங்கள் அல்லவா? நன்றி!

      நீக்கு
  5. எல்லாம் வல்ல கடவுளுக்கே.. நல்ல காலம் கிடைக்கவில்லை.. இந்த நல்ல காலத்தையும் நேரத்தையும் மனிதர்கள் தான் கடவுளுக்கே கொடுக்க வேண்டியதிருக்கு என்பதையும் இந்தக் கதையின் மூலம் நான் தெரிந்து கொண்டேன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் நண்பரே அத்வைதம் என்பது! மனிதனும் இறைவனும் வேறல்ல என்ற தத்துவம். உங்கள் வரவுக்கு நன்றி!

      நீக்கு
  6. கதை அருமை ஐயா...

    தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடுமையான உழைப்பாளியான தங்களின் வரவு தெம்பூட்டுகிறது நண்பரே!

      நீக்கு
  7. அற்புதமான கதை
    சிக்கலும் விடுவித்த விதமும்
    சொல்லிச் சென்ற பாங்கும்
    அதி அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. //பன்னிரண்டு செவ்வாய்க் கிழமைகள் தீபம் ஏற்றினால் செவ்வாய் தோஷத்தினால் தடைபட்ட திருமணம் கைகூடும் என்றார். அவ்வளவுதான். பக்த கோடிகள் திரண்டு வரலாயினர்//

    இதுதான் இன்றைய சமூகநிலை அழகாக சொன்னீர்கள்

    கதை மனதை தொட்டது நண்பரே... காளி மனதில் நின்று விட்டார்
    தமிழ் மணம் 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலன் இருந்தால் மட்டுமே ஒரு காரியத்தில் ஈடுபடுவது மனிதனின் வழக்கமாகிவிட்டது நண்பரே! என்ன செய்வது, எல்லாம் கலிகாலம்! (என்று பெரியவர்கள் கூறுவர்!) தங்கள் வரவுக்கு நன்றி!

      நீக்கு
  9. காளி கெட்டவரோ என நினைக்க வைத்தூ, கதையைக் கொண்டு சென்றீர்கள்.

    அவர் செய்த செயல்முறை, வழிமுறை தவறுதான். எனினும், அதன்
    உட்காரணம் நல்லதற்குத்தான். அதனால், காளியின் செயலை விமரிசிக்க
    இயலவில்லை.

    மற்றபடி, கதை அருமை!

    பதிலளிநீக்கு
  10. மிக அருமையாக இருந்தது! சிறப்பான முடிவு! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  11. கணக்கு தீர்ந்தது....
    மனதில் நிறைந்தது..
    பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
  12. காளியின் கணக்கல்ல அது. முருகனின் கணக்குதான் அது.. தீர்ந்தது. நல்ல கதை சார்.

    எங்கள் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  13. வெகுநாள் கழித்து, சிறுகதை மூலம் மறுபடியும் தொடக்கம். நல்ல முடிவு. தொடர்ந்து தங்களது பதிவுகளைக் காண ஆவலோடு காத்திருக்கிறேன். மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. நல்ல கதை ஐயா! நன்றாக இருந்தது. இதைப் படிக்க வாய்ப்புக் கொடுத்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு