பதிவு 07
/ 2015
ஜோ-டி-குரூஸுக்கு வந்த சோதனைதிரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்றனர் தமிழ் சான்றோர்கள். மாபெரும் கடற்படை கொண்டு கடாரம் வென்றனாராம், சோழ மன்னர்கள். ரோமாபுரியிலிருந்து குதிரைகளைக் கொண்டுவந்து, பாண்டிய முத்தைக் கொள்முதல் செய்தனராம் அராபிய வணிகர்கள். சங்க இலக்கியம் முதல் இன்றுவரை கடலையும் கடற்கரையையும் காதலின் வளர்ப்பிடங்களாகக் கூறாத கவிஞர்கள் குறைவு.
ஆனால், கடலோடிகளான மீனவர்களின் உண்மையான சரித்திரத்தை எவ்வளவு பேர் இலக்கியத்தில் வடித்திருக்கிறார்கள்?


அவரே அளித்த ஒரு பேட்டியிலிருந்து:
கொற்கை நாவல் எதைப்பற்றி பேசுகிறது?
'ஆழிசூழ் உலகு' நாவலில் அடித்தள
மீனவ மக்களின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தை சொல்லியிருந்தேன். பரதவர்கள், மீன் பிடிக்கிறவர்கள் மட்டுமல்ல கடல்வழி வாணிபத்தின் முன்னோடிகள் என்பதை
கொற்கை நாவலில் சொல்லியிருக்கிறேன். ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டில்கொற்கை செழித்து விளங்கிய
துறைமுகம். பாண்டிய நாடு வளமுடைத்து என்ற வாக்கு உருவானதே கொற்கை துறைமுகத்தை
வைத்துதான். கொற்கையில் கிடைத்த நன்முத்துக்கள் பாண்டிய நாட்டை வளமுள்ளதாக
ஆக்கியிருந்தது. கொற்கையில் கிடைத்த முத்துக்கள் அந்நூற்றாண்டுகளிலேயே பல
நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியிருக்கிறது. இதனால் கடல்வழி வாணிபம் சிறந்திருக்கிறது.
சில்க் ரூட், பெப்பர் ரூட் என்று சொல்வதைப்போல கொற்கைக்கு பெர்ல் ரூட்
இருந்திருக்கிறது. முத்துக்களுக்காக கிரேக்கர்கள், அரேபியர்கள்,
போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், வெள்ளையர்கள் கொற்கையைத் தேடி வந்திருக்கிறார்கள். ஆனால் இது எதுவுமே
வரலாற்றில் சரியாக பதிவாகவில்லை.
ஏராளமான கடல் வளமுடைய மிகப்பெரிய துறைமுகமான
கொற்கை பரதவர்களால் ஆனது, ஆளப்பட்டது. வெள்ளையர்களின்
வருகைக்குப் பிறகு அந்த சந்ததிகளுக்கு என்ன ஆனது என்பது குறித்து வரலாறு இல்லை.
வணிகமும் கலாச்சாரமும் சிறந்து விளங்கிய கொற்கையை பார்த்து ரசித்து வெள்ளையன்
உள்ளே வந்திருக்கிறான். இதுபற்றிய குறிப்புகள் நம்மிடம் இல்லை. வெள்ளையர்கள்
பார்த்து, ரசித்து உள்ளே வருகிறான். இப்படி வளம்பெற்ற கொற்கை
கடந்துவந்த நூறு ஆண்டுகளின் கதையைத்தான் கொற்கை நாவலில் சொல்லியிருக்கிறேன்.
கடந்த
நூறு ஆண்டுகளில் நிகழ்ந்த சமூக, பொருளாதார கலாச்சார
மாற்றங்களை பேசுகிறது நாவல். போர்த்துக்கீசியர்கள், வெள்ளையர்கள்
வெளியேறி சுதேசி அரசாங்கம் வந்த பிறகு கொற்கையில் வாழ்ந்த பரதவர்கள் சமூகம் எப்படி
மாறியது என்பதையும் பரதவர்களின் பல்வேறு பிரிவுகளுக்குக்கிடையேயான சமூக சிக்கல்கள்,
அதை அவர்கள் கையாண்ட விதம் இதெல்லாம் தான் நாவலாக்கியிருக்கிறேன்.
இதை வரலாற்று ஆவணம் என்று சொல்லமுடியாது. நாவலுக்குள் சொல்லப்பட்டிருக்கும்
விஷயங்களால் இது வரலாற்று ஆவணமாகலாம்.
மீண்டும் மீனவ சமூகத்தின்
பின்னணியில் நாவல் எழுதக் காரணம்?
சங்கப் பாடல்களில்கூட
அம்மூவனார் போன்றவர்கள் நெய்தல் கரையைப் பற்றி பாடினார்களே தவிர, நெய்தல் நில மக்களின் சுக துக்கங்களை பாடவில்லை. நெய்தல் நிலத்தைச்
சேர்ந்தவன் என்ற வகையில் இதுகுறித்து எனக்கு நிறையவே ஆதங்கம் உண்டு. நெய்தலின்
மீதும் நெய்தல் மக்களின் மீதும் உள்ள பாசத்தின் வெளிப்பாடுதான் என் எழுத்து
முயற்சி. வருமானத்துக்காக ஒரு வேலையில் இருக்கிறேன், ஆத்ம
திருப்திக்காக எழுதுகிறேன்.
என் சமூகத்தில் உள்ள
அவலங்களை கோளாறுகளை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாக படுகிறது. 'ஆழி சூழ்
உலகு' நாவல் வெளிவந்த பிறகு, ஊரில் நிறைய எதிர்ப்பு வந்தது,
வந்துக்கொண்டிருக்கிறது. நிலைக்கண்ணாடி போல ஒரு சமூகத்தில் உள்ள குறைகளை
சுட்டிக்காட்டினால் வெறுப்பையும் விரோதத்தையும் சம்பாதிக்க வேண்டியிருக்கும்.
மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் சமூக குறைகளை சுட்டிக்காட்டுகிறேன். ஆடி
போல சமூகத்தைக் காட்ட வேண்டும். அதனால் மேற்படியான எதிர்ப்புகள் பற்றி
கவலைப்படுவதில்லை!
*****
நான் வங்கி அதிகாரியாகப் பணியில் இருந்தபோது கடலூருக்கு அருகாமையில் இருந்த, மீனவக் கிராமங்களைப் பின்னணியாகக் கொண்ட ஒரு சிற்றூரில் மேலாளராக இருந்திருக்கிறேன். கடலூர், பரங்கிப்பேட்டை முதல் நாகப்பட்டினம் வரையிலும், பின்னர் காசிமேடு ராயபுரம் போன்ற சென்னையின் மீனவப் பகுதிகளிலும் விரிவாகப் பழகியிருக்கிறேன். அப்போது நான் கண்ட உண்மை ஒன்றுண்டு. அதுதான், மீனவ நண்பர்கள் தங்கள் உடல் உழைப்பை எந்த அளவுக்கு நம்புகிறார்களோ அதே அளவுக்கு சில வாழ்வியல் கோட்பாடுகளையும் நம்புகிறார்கள் என்பது. இந்துவாக இருந்தாலும், மீனவர்களுக்கு தெய்வம் அன்னை வேளாங்கண்ணி தான். அரசியலைப் பொறுத்தவரை அவர்களுக்கு எம்ஜிஆர் தான் ஒரே தலைவர். வேறு கட்சிகளுக்கு அவர்களிடம் இடமில்லை. கடந்த முப்பது ஆண்டுகளில் இந்த விஷயங்களில் அவர்களிடம் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
*****

*****
'மாதொருபாகன்' நாவலை எழுதியதற்காகப் பெருமாள் முருகன் மீது எதிர்ப்புப் போராட்டம் வலுக்கக் காரணமாக இருந்தவர்கள், நாமக்கல் - ராசிபுரம் பகுதியில் ஆண்டுக்கு மூன்று லட்சம் வரை பணம் வசூலிக்கும் தனியார் உயர்நிலைப் பள்ளிகள் என்பதை மக்கள் அறிவர். இந்தக் கல்வி வியாபாரிகளுக்கு எதிராகப் பெருமாள் முருகன் தொடுத்த போரே, அவர்மீது முழுவீச்சுடன் திருப்பிச் செலுத்தப்பட்டது. திருச்செங்கோட்டிலிருந்து சென்னைக்கு ஊர்கடத்தப்பட்டார் பெருமாள்முருகன்.
இப்போது ஜோ டி குரூஸ் மீது அதே மாதிரியான காரணங்களை சொல்லிப் போர் தொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையான காரணம், தற்போது ஆர்.கே. நகரில் நடக்கவிருக்கும் இடைதேர்தல்தான். என்று எனக்குத் தோன்றுகிறது.
அதிமுகவின் தீவிரமான ஆதரவாளர்களான மீனவர்கள் நிரம்பிய பகுதி, ஆர்.கே. நகர். சாக்கடை நீரும் குழாய் நீரும் ஒன்றுகலந்து பரிணமிக்கும் சுகாதாரம் நிரம்பிய தொகுதி. ஐந்துமுறை ஒரே கட்சி வெற்றி பெற்றிருந்தபோதும் மக்கள் நலத்திட்டங்கள் போதுமான அளவில் செயல்படுத்தப்படவில்லை என்று பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. இப்போது முதல்வரே அங்கு வேட்பாளராக போட்டியிடுவது, அத்தொகுதி மக்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. எப்படியும் அவரை பெருத்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்பதற்க்காக ஆளும்கட்சியின் வலிமைமிக்க ஆசாமிகள் அத்தொகுதியில் முகாமிட்டுள்ளனர். ஜெயலலிதா அம்மையாரை எதிர்த்துப் போட்டியிட எந்தக் கட்சிக்குமே இன்று தைரியம் இல்லாதுபோய்விட்ட நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான திமுக எப்படியாவது ஓட்டுக்களைப் பிரிக்கவேண்டும் என்று பாடுபடுவது கண்கூடு. தனது பரம எதிரிகளான மீனவர்களை எப்படியாவது கணிசமான அளவில்
தன்பக்கம் இழுத்துவிட வேண்டும், இப்போதில்லாவிடினும் அது 2016 பொதுத்தேர்தலுக்கும் மிகவும் உதவும் - என்று கணக்குப் போட்டுக் காய் நகர்த்துகிறது அக்கட்சி. அதன் வெளிப்பாடுகளுள் ஒன்றுதான் ஜோ டி குரூஸ் மீது தொடங்கப்பட்டுள்ள எதிர்ப்பு. ( நரேந்திர மோடியின் செயலாற்றலைப் பாராட்டி ஜோ டி குரூஸ் பேசியதை நினைவில் கொள்க. )
****
டைம்ஸ் ஆப் இந்தியா ஒரு முக்கியக் கேள்வியை எழுப்புகிறது. ஜோ டி குரூஸுக்கு ஆதரவாக ஏன் யாரும் இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை என்று. அவரால் ஆதரிக்கப்பட்ட மோடியின் கட்சியினர் கூட ஏன் பேசவில்லை என்கிறது.
பெருமாள் முருகன் விஷயத்திலும் அவரை ஆதரித்தவர்கள் பொதுவுடமைக் கட்சியினரும் அதே சார்புள்ள கலை இலக்கியப் பெருமன்றத் தோழர்களும்தான். அவரது பதிப்பாளரான காலச்சுவடு சம்பந்தப்பட்ட சில எழுத்தாளர்கள் மட்டும் சிறிதுகாலத் தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு, தாங்கள் காலச்சுவடால் ஒதுக்கப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தினால் பிற்பாடு ஆதரவு கோஷம் எழுப்ப ஆரம்பித்தனர். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் வழக்கம்போல் அமைதி காத்தனர். 'எப்படியும் வழக்கு நீதிமன்றம்வரை போய்விட்டது. தீர்ப்பு வரட்டும், பார்க்கலாம்' என்ற மனோபாவத்தின் வெளிப்பாடு.
ஜோ டி குரூஸ் விஷயத்தில் இந்த அளவுக்குக் கூட ஆதரவாளர்கள் திரளமாட்டார்கள் என்றுதான் கருதுகிறேன். பெருமாள் முருகனை விட பொருளாதார ரீதியிலும் சமுதாய அந்தஸ்திலும் மிக்கவர் குரூஸ். எனவே தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ளட்டும் என்று விட்டுவிடப் போகிறார்கள் என்றே தோன்றுகிறது. மேலும், இது அரசியல் ரீதியாக ஆளும்கட்சிக்கு எதிரான சக்திகள் ஆடும் விளையாட்டு என்பதும் அனைவருக்கும் புரிந்துவிட்டது.
****
எப்படியோ, ஊருக்கு இளைத்தவன் தமிழ் எழுத்தாளன் தான் என்பது மீண்டும்
மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. நூலகங்களுக்கு நிதி வழங்காமல் ஏமாற்றுகிறது, அரசு. புத்தங்களை வாங்காமலும், வாங்கிய நூல்களுக்கு உரிய கால அட்டவணைப்படி பணம் தராமலும் ஏமாற்றுகிறது நூலகத்துறை. எழுத்தாளனைப் பகடைக்காயாக்கி ஏமாற்றுகின்றனர் பதிப்பாளர்கள். புத்தக வெளியீட்டு விழாக்களுக்கு வருகை தந்தாலும் கை நீட்டிக் காசுகொடுத்துப் புத்தகம் வாங்காமல் (எழுத்தாளன் செலவில்) காப்பி அருந்தி, வாய்நிறைய வாழ்த்து (மட்டும்) சொல்லி ஏமாற்றுகின்றனர் வாசகர்கள். இதெல்லாம் போதாது என்று அவ்வப்பொழுது எதிர்ப்புக்குரல் கொடுத்து எழுத்தாளனை ஆட்டம் காண வைக்கின்றனர், இன மற்றும் அரசியல் சதியாளர்கள்.
இதே நிலைமை நீடித்தால், தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து இனிமேல் 'சங்ககாலத்தில் ஊறுகாய்', 'மலேசியாவில் பிரியாணி வகைகள்', 'கோதுமையோ மைதாவோ இல்லாமல் சப்பாத்தி செய்வது எப்படி?' போன்ற நூல்களைத்தான் எதிர்பார்க்க முடியும்.
விதியே விதியே, தமிழச் சாதியை
என்செயக் கருதி இருக்கின்றாயடா?
***
(C) Y Chellappa
email: chellappay@yahoo.com