ஞாயிறு, ஜூலை 13, 2014

100-வது பதிவு: என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார் அந்தப் பெண்!


எனது நூறாவது பதிவு:

அஸ்தினாபுரத்தில் பாண்டவர் அரண்மனைக்குச் சென்று திரும்பிய துரியோதனன், நீரில்லா இடத்தை  நீரென்று கருதித் தாவுகையில் கால் இடறி விழுந்தான்.  தோழியர் புடைசூழ அங்கிருந்த பாஞ்சாலி நகைக்கிறாள். விழுந்த அவமானத்தை விடவும், தன்னால் விரும்பப்பட்ட பெண்ணொருத்தியின் நகைப்பே துரியோதனனுக்கு ஆத்திரமூட்டுகிறது. ஊர் திரும்பிவந்ததும் தனது அரசவையில் அனைத்துப் பெரியோர்களிடமும் அதைச் சொல்லி ஆறுதல் தேடுகிறான். தந்தை திருதராட்டிரனோ, இதையெல்லாம் பெரிதுபடுத்தாதே என்கிறான்.

“தவறி விழுபவர் தம்மையே – பெற்ற
தாயும் சிரித்தல் மரபன்றோ? ..”


என்று மகனிடம் அமைதிகாக்குமாறு கூறுகிறான். ஆனால் துரியோதனனுக்கு மனம் ஆறவில்லை. தன் மாமன் சகுனியிடம் சொல்லிச் சொல்லி மாய்ந்துபோகிறான்:

மூச்சை யடைத்ததடா ! சபை
தன்னில் விழுந்துநான் –அங்கு
மூர்ச்சை யடைந்தது கண்டனையே!
என்றன் மாமனே!

ஏச்சையும் அங்கவர் கொண்ட
நகைப்பையும் எண்ணுவாய் –அந்த
ஏந்திழையாளும் எனைச்சிரித்தாள்
இதை எண்ணுவாய்..”
  -பாரதியாரின் ‘பாஞ்சாலி சபதம்’ (6,7)

அதன் பிறகு நடந்ததெல்லாம் உங்களுக்குத் தெரியுமே! சகுனியின் திறமையால் சூதில் தோற்றுப்போகிறார்கள் பாண்டவர்கள். தங்களை இழந்தது மட்டுமன்றித் தம் பத்தினியான பாஞ்சாலியையும்  பணயம் வைத்துத் தோற்கிறார்கள். இப்படிப் பாஞ்சாலி தன் வசமானவுடன் துரியோதனன் மகிழ்ந்து மாமனை நெஞ்சோடு சேர்த்துக் கட்டிப் பாராட்டுகிறான்.  அவ்விடத்தும் பாஞ்சாலியின் நகைப்பையே நினைத்துப் பார்க்கிறான்:

“என்துயர் தீர்த்தாயடா! – உயிர் மாமனே!
ஏளனம் தீர்த்து விட்டாய்.
அன்று நகைத்தாளடா! – உயிர் மாமனே!
அவளை என் ஆளாக்கினாய்.
என்றும் மறவேனடா! –உயிர் மாமனே!
என்ன கைம்மாறு செய்வேன்?
ஆசை தணித்தாயடா! – உயிர் மாமனே!
ஆவியைக் காத்தாயடா!...”
  -பாரதியாரின் ‘பாஞ்சாலி சபதம்’  (54:249,250).

ஓர் ஆண், இன்னொரு ஆணால் இகழப்பட்டால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டான். ஆனால், ஒரு பெண்ணால் அவமதிக்கப்பட்டால் அவன் மனம் அடிபட்ட புலிபோல் பழிவாங்கத் துடிக்கும். துரியோதனனுக்கு மட்டுமல்ல, நம்மைப் போன்ற ஆண்களுக்கும் இதுதானே இயற்கை!  ஓர் உண்மைக்கதை சொல்லட்டுமா?
****
நான் வெளியூரில் பணியில் இருந்த சமயம் அது. தனியாக அறை எடுத்துத் தங்கியிருந்தேன். ஒருநாள், அந்தி மயங்கும் வேளையில்  எனது நண்பரின் மனைவி மெல்லிய குரலில் தொலைபேசியில் அழைத்தார். “உங்களுடன் யாராவது இருக்கிறார்களா?” என்றார். ‘இல்லை’ என்றேன். “நீங்கள் இப்போது ஃப்ரீயா?” என்றார். ‘ஆம்’ என்றேன். “சந்திக்கலாமா?” என்றார்....(உடனே கற்பனைக்குள் மூழ்கிவிடாதீர்கள். அவருக்கு என்னைவிட வயது அதிகம்.)

ஏதோ முக்கிய விஷயமாம். உடனே வரச் சொன்னார். எனக்கும் சேர்த்து இரவுச் சாப்பாடு தயாரித்து வைக்கிறாராம். –இதுதான் தகவல்.

கிளம்பினேன். அதிக தூரமில்லை. நடந்துபோனாலும் பதினைந்து நிமிடங்களுக்குமேல் ஆகாது. ஆனால் சாப்பாடு விஷயம்தான் கொஞ்சம் சங்கடமாயிருந்தது. அவரது கைவண்ணத்தில் (ஒரே) ஒருமுறை காப்பி குடித்திருக்கிறேன். அது காப்பியல்ல, கஞ்சி என்று சிலநாள் கழித்து அவரே சொல்லித்தான் தெரிந்தது. இப்போது சாப்பாடே போடுகிறார் என்றால்..? சரி இதெல்லாம் தொழில்சார்ந்த ஆபத்துக்கள் ( Occupational Hazards) என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். 

கதவைத் திறந்தவரின் முகத்தைக் கண்டதும் அதிர்ந்து போனேன். எப்போதும் மங்கலமாகக் காட்சியளிக்கும் மலர்ந்த முகத்தில் அன்று சோகக்களை படிந்திருந்தது. அழுதிருக்கவேண்டும். சிரமத்துடன் புன்னகையை வரவழைத்துக்கொண்டு “வாருங்கள்” என்றார். அமர்ந்தேன். காப்பி வந்தது. குடித்தேன். பரவாயில்லை. காப்பியேதான்.

“உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும். ஆனால் அது யாருக்கும் தெரியக் கூடாது” என்று சொல்லிக்கொண்டே கதவைத் தாழிட்டார்.  அதிர்ச்சியை வெளிக்காட்ட முடியாமல் நான் தவித்தேன். அதற்குள் எதிரில் ஒரு ஸ்டூலைப் போட்டு அமர்ந்தார். நல்லவேளை, ஜன்னல்கள் இரண்டும் திறந்தே இருந்தன.

கவலையோடு அவர் முகத்தை நோக்கினேன்.  “சார் இல்லையா?” என்றேன், சற்றே எச்சரிக்கையோடு.

“இல்லை. அவர் திருப்பதி போயிருக்கிறார். மனசே சரியில்லை...” என்றார்.

“என்ன விஷயம் ?” என்று தணிந்தகுரலில் கேட்டேன்.

அவர் இன்னும் சற்று நெருங்கிவந்தார். “அதைச் சொல்லத்தானே உங்களைக் கூப்பிட்டேன். ஆனால்  நீங்கள் ரகசியமாக வைத்துக்கொள்ளவேண்டும். சரியா?”

“என்னை நீங்கள் நம்பலாம்” என்றேன் மெல்லிய புன்னகையுடன். “இதோ வருகிறேன்” என்று உள்ளே போனவர், கையில் ஒரு நாற்பதுபக்க நோட்டுப் புத்தகத்தைக் கொண்டுவந்தார்.

“இதில் அருணின் ஜாதகம் இருக்கிறது. நீங்கள் அடுத்தமுறை சென்னை போகும்போது இதை ஒரு நல்ல ஜோதிடரிடம் காட்டி அவனுக்கு இப்போது எப்படி இருக்கிறது என்று தெரிந்துவந்து சொல்லவேண்டும். ரொம்ப அவசரம்” என்றார். அருண் அவரின் ஒரே மகன்.

நான் விருட்டென்று எழுந்தேன். “அவ்வளவு அவசரமானால், இன்று இரவு ரயிலில் என் நண்பர் சென்னை போகிறார். அவர்மூலம் என் மனைவியிடம் கொடுத்துவிட்டால் வேண்டியதைச் செய்துவிடுவார்” என்றேன்.

“ஊஹூம்..கூடவே கூடாது. கொஞ்சம் தாமதமானாலும் பரவாயில்லை. நீங்களே நேரில்போய் முடித்து வந்துவிடுங்கள். உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியவேண்டாம். முக்கியமாக வேறு பெண்களுக்குத் தெரியவே கூடாது” என்றார் அவர்.  

பெரிய சிக்கல் வந்தாலொழிய ஜாதகத்தை யாரும் எடுப்பதில்லையே! அருணுக்கு அப்படி என்ன பிரச்சினை என்பது தெரியவில்லை. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான் என்று கேள்வி. என்ன படிக்கிறான் என்று தெரியாது.

“அப்படியானால், மாதக் கடைசியில் நானே போகிறேன். நல்ல ஜோதிடர் ஒருவர் இருக்கிறார்.  சரி, என்ன பிரச்சினை என்று அவரிடம் சொல்வது?” என்றேன். சொன்னார்.
*****
அவர் மகன் அருண் தினமும் காலை ஏழுமணிக்கு புத்தகப்பை, தண்ணீர் பாட்டில், சாப்பாட்டுப் பை இவற்றுடன் தனது மோட்டார்பைக்கில் கல்லூரிக்குக் கிளம்புவது வழக்கம். சுமார் இருபது மைல் தொலைவில் இருந்தது கல்லூரி. இரவு ஏழுமணிக்குள் திரும்பிவிடுவான். கடந்த ஆறு மாதங்களாக இதுதான் வாடிக்கை.

கல்வியாண்டின் நடுவில், வெளியூரிலிருந்து மாற்றலாகிவந்த ஒருவரின் மகனுக்கு அதே கல்லூரியில் இடம் கிடைக்குமா என்று கேட்பதற்காக இவர் போயிருந்தபோதுதான் அந்த அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. கல்லூரி முதல்வருக்கு இவரை ஓரளவு தெரியும். “என்ன மேடம், உங்கள் மகன் சுமார் மூன்று மாதங்களாகக் கல்லூரிக்கே வருவதில்லை என்கிறார்களே!  உடல்நிலை சரியில்லை என்றால் மெடிக்கல் சர்டிபிகேட் அனுப்பியிருக்கலாமே! இன்னும் பத்து நாளில் செமிஸ்டர் எக்ஸாம் வருகிறதே!” என்றாராம்.

எப்படி இருந்திருக்கும் இவருக்கு? வேர்த்து விறுவிறுத்துப் போய், தள்ளாடும் நிலைக்கு வந்துவிட்டார். ஒருவாறு சமாளித்துக்கொண்டு, “ஆமாம் சார்... அவனுக்கு இப்போது பரவாயில்லை. எனக்குத்தான் திடீரென்று BP  அதிகமாகிப் படுத்த படுக்கையாகிவிட்டேன். இன்றுகூட முடியாமல்தான் வந்தேன். வரும் திங்கட்கிழமையிலிருந்து ஒழுங்காக வந்துவிடுவான். கொஞ்சம் மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று பணிவாகப் பொய் சொன்னார்.

“டேக் கேர்! ஏதாவது டியூஷன் வைத்தாவது அவனைச் சரியாகத் தயார்ப்படுத்துங்கள். இல்லையென்றால் கஷ்டம்...” என்று அவளுக்கு விடை கொடுத்தார் முதல்வர்.

இவருடைய சகோதரிக்குத் தெரிந்த ஒருவர், போலீஸ் அலுவலகத்தில் பணிபுரிபவர். அவர்மூலம் அருணுடைய நண்பர்குழாத்தில் உரிய முறையில் விசாரித்தபோது, அந்தக் கல்லூரியில் போதை மருந்துப் பழக்கம் அதிகமாகிக்கொண்டு வருவதாகவும், அடிக்கடி ஹாஸ்டல்களில் போலீசார் சோதனை மேற்கொண்டுவருவதும், வசதியான வீட்டுப் பையன்கள் சிக்குவதும் தெரிந்தது. அருண் சிலமுறை அப்படிச் சிக்கியதாகவும், போலீசுக்குப் பணம்கொடுத்துத் தப்பி வந்ததாகவும் தெரிந்தது.  அந்த நண்பர் குழாத்தில் யாரும் கல்லூரிக்கு ஒழுங்காகச் செல்வதில்லையாம். இருசக்கர வண்டிகளில் கும்பலாக ஒரு காட்டுப்பகுதிக்குச் சென்று போதையில் ஆழ்ந்துவிட்டு இரவில் வீடுபோய்ச் சேருவார்களாம்.

இவருடைய இதயம் அப்படியே நின்றுவிடும்போல் ஆனது. அவனுக்கு எது பணம்? அப்பா கண்டிப்பானவர். பாக்கெட் மணி தரமாட்டாரே!

இவருடைய ஐந்து பவுன் சங்கிலியொன்று லாக்கரிலிருந்து காணாமல் போனது நினைவுக்கு வந்தது. மூளையைக் கசக்கிக்கொண்டு பார்த்தபோது, தன்னுடைய மோதிரத்தைக் காணோம் என்று அருண் லாக்கர் முழுதையும் ஒருமணிநேரம் தேடியதும் ஞாபகம் வந்தது. அதன்பிறகே அந்தச் சங்கிலி தொலைந்துபோனது. ஒருவேளை..?

அருணா இப்படியெல்லாம் செய்வான்? இருக்காது. தாயின் சங்கிலியைத் திருடிக்கொண்டுபோகும் அளவுக்கு அவன் கெட்டவனில்லை. கேட்டிருந்தால் அப்பாவுக்குத் தெரியாமல் இவரே பணமாகக் கொடுத்திருப்பாரே!

அன்று மாலை இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு நகைக் கடையிலிருந்து தொலைபேசி அழைப்பு. “மன்னிக்கவேண்டும் அம்மா! உங்கள் மகன் ஒரு சங்கிலியை அடகு வைத்துப் பத்தாயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டார்.  பதினைந்துநாளில் நீங்கள்வந்து மீட்டுக்கொள்வீர்கள் என்று சொல்லியிருந்தார்.  ஆனால் இன்றுவரை நீங்கள் வரவில்லை. பொதுவாக மாணவர்களை நம்பி நாங்கள் அடகு பிடிப்பதில்லை. உங்கள் பெயருக்காகத்தான் கொடுத்தோம்... எங்களுக்கு எதுவும் அவசரமில்லை....” என்றது தகவல்.

இவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. கண்கள் இருண்டு மயக்கம் வருவதுபோல் ஆகியது. என்ன பேசுகிறோம் என்றே புரியாதவராக, “ஆமாம்...இன்னும் ஒரு மாதம் பொறுத்துக்கொள்ளுங்கள். மீட்டுக்கொள்கிறேன்..” என்று முடித்தார்.

***
“இதுதான் விஷயம். இப்போது அவனை டில்லிக்கு அனுப்பியிருக்கிறேன். அவனுடைய சித்தப்பா வீட்டிற்கு. படிப்பு போனால் போகட்டும். அவனுடைய ஆரோக்கியம்தானே முக்கியம்! அங்கு நல்லதொரு போதைதடுப்பு நிலையத்தில் சேர்த்திருக்கிறோம். இரண்டு மாதத்தில் சரியாகிவிடும் என்று சொல்லியிருக்கிறார்கள். தயவு செய்து ஜோதிடரிடம் அவனுக்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும் என்று கேளுங்கள். ஒரே மகன் இப்படிக் கெட்டுப்போனால் நான் என்னதான் செய்வேன்? அவருக்கு அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை. டிரான்ஸ்பர் கேட்டிருக்கிறார். எல்லாருக்கும் விஷயம் தெரிந்து விசாரிக்க வந்துவிடுவார்களே!.. இனிமேல் இவனுக்குப் படிப்பு வருமா வராதா என்றும் கேட்டு வாருங்கள்..” என்று கண்ணீருடன் கூறினார் அவர்.

“சரி. நீங்கள் கவலைப்பட வேண்டாம். எல்லாம் நல்லபடியாக முடியும்” என்று ஆறுதல் சொல்லிவிட்டு அந்த நாற்பதுபக்க நோட்டுடன் கிளம்பினேன். சாப்பிடச்சொல்லி அவர் வற்புறுத்தினாலும், எனக்கு ‘மூட்’ இல்லையே!
****
சென்னை வந்தேன். 

அடுத்தநாள் வீட்டில் ஏதோ ஒரு சடங்கு. ஆகவே, ரங்கநாதன் தெருவில் வாழையிலை  முதல் சேப்பங்கிழங்குவரை பதினைந்து பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பும்போது சிவா விஷ்ணு கோயில் வாசலைக் கடந்து பஸ்நிலையம் போக முற்பட்டேன். கோவிலுக்கு அடுத்த சந்தில் ஒரு ஜோதிட நிலையம் கண்ணில் பட்டது. 

அவர் ஒரு பெண் ஜோதிடர். அவரது தந்தையார் பிரசித்தி பெற்ற ஜோதிடர். பல சம்ஸ்கிருத பக்தி இலக்கியங்களை உரையுடன் பதிப்பித்திருக்கிறார். இந்தப் பெண்மணியும் தந்தையைப் போலவே புகழ்பெற்றிருந்தார். வாரப் பத்திரிகைகளில் அடிக்கடி விளம்பரம் செய்வார். எனவே அவருடைய பெயர் என் மனதில் பதிந்திருந்தது. நல்லவேளை, அருணின் ஜாதகம் கையில் இருந்தது. ஆனால் அப்போது மாலை நான்குமணி ஆகிவிட்டிருந்தது. பொதுவாகவே (நல்ல) ஜோதிடர்கள், பகல் பன்னிரண்டு மணிக்கு மேல் ஜாதகம் பார்க்கமாட்டார்கள். இவர் எப்படியோ தெரியாது. இருந்தாலும் கேட்டுப் பார்க்கலாமே என்று அழைப்பு மணியை அழுத்தினேன். ஓர் இளம்பெண் – அவரது செயலாளராக இருக்கலாம் – திறந்தார்.

வந்தவர் என்னைப் பார்த்து ஆச்ச்சரியப்பட்டதுபோல் தோன்றியது. ஒரு நீண்ட துணிப்பையில் சுருட்டிய வாழைஇலைகளும், இன்னும் இரண்டு பைகளில் காய்கறிகளும் என் வலது தோளில் அழுத்திக்கொண்டிருக்க, அதிக வெளுப்பில்லாத வேட்டியில் நான் நின்றகோலம் அவருக்கு என்ன கூறியதோ! விரைந்து வந்தவர், “காரை எங்கு பார்க் செய்திருக்கிறீர்கள்?” என்றார்.

“நான் காரில் வரவில்லை. மேற்கு மாம்பலத்திலிருந்து வருகிறேன். ரயில்வே ஸ்டேஷன் படிகளில் இறங்கிவந்தேன். ஆகவே நடந்துதான் வந்தேன்” என்று சொன்னேன்.

“அம்மாவைப் பார்க்க வேண்டுமா? ஜாதகம் கொண்டுவந்திருக்கிறீர்களா?” என்றார்.

“ஆமாம்.”

உள்ளே போனார்.

பத்து நிமிடம் அங்கேயே நின்றுகொண்டிருந்தேன். உள்ளே நான்கைந்து நாற்காலிகள் இருந்தன. அமரச் சொல்லி இருக்கலாம். சொல்லவில்லை.

பெண் ஜோதிடர், பெரிய குங்குமப் போட்டும் சிரித்த முகமுமாக வந்தார். “நான் இன்னும் ஒரு வாரம் பிஸி. அதன் பிறகு சொந்த ஊருக்குப் போகிறேன். நீங்கள் அடுத்த மாதம் வாருங்கள்” என்று அலட்சியமாகச் சொன்னார்.

“மன்னிக்கவேண்டும் அம்மா! ஒரு அவசர விஷயம். எனது நண்பரின் மகனைப் பற்றியது. நான் பெங்களூரிலிருந்து வருகிறேன். நாளை அல்லது மறுநாள் வேண்டுமானாலும் வருகிறேன். பார்த்துச் சொல்லுங்கள்” என்று கேட்டேன். அருணின் அம்மாவின் அவசரம் எனக்குத்தானே தெரியும்!

ஜோதிடரும் செயலாளரும் ஏதும் சொல்லாமல் உள்ளே சென்றுவிட்டனர். அங்கிருந்து பெருத்த குரலில் இருவரும் சிரிப்பது கேட்டது. நான் நின்றுகொண்டே இருந்தேன். ஜாதகம் பார்க்க வருபவர்கள் எப்போதுமே அவசரத்துடன்தான் வருவார்கள் என்பது இந்த அம்மணிக்குத் தெரியாத விஷயமா?  எதற்காக இந்த ஏளனச் சிரிப்பு?

சிறிது நேரம் கழித்து செயலாளப் பெண்மணி வந்தார். “இன்னுமா நிற்கிறீர்கள்?” என்று வியப்புடன் கேட்டார். முகத்தில் இன்னும் சிரிப்பு மறையவில்லை.  “அம்மாவிடம் ஜாதகம் பார்க்க வருபவர்கள் காரில்தான் வருவார்கள். ஏனென்றால் இவர்களிடம் ஃபீஸ் அதிகம். உங்களுக்குப் பரவாயில்லை என்றால்  நாளை மறுநாள் பத்து மணிக்கு வாருங்கள். ஐந்நூறு ரூபாய்க்கு மூன்று கேள்விகள். அதற்குமேல் மூன்று கேள்விகள்வரை இன்னொரு ஐந்நூறு ரூபாய். உங்களுக்கு வசதிப்படுமா?” என்றார்.

கடைசியில் விஷயம் இவ்வளவுதானா என்று அவளை அலட்சியமாகப் பார்த்தேன். வந்தவர்களை உட்காரச் சொல்லவும் பண்பாடு இல்லாத ஒருவரிடம், கலைமகள் எப்படிக் குடியிருப்பாள்? இந்த ஜோதிடப் பெண்மணி வெறும் வேத்துவேட்டாகத்தான் இருக்கவேண்டும். தந்தையின் பெயரை வைத்துக்கொண்டு விளம்பர வெளிச்சத்தில் பணம் உறிஞ்சிடும் பிராணி. காரில் வராதவர்களை ஏளனமாகப் பார்த்துச் சிரிக்கும் அற்பப் பிறவி. இவளிடமா நான் ஜாதகம் பார்க்கவேண்டும்?
  
இருந்தாலும் இவளுக்குக் கொஞ்சம் போக்குக் காட்டவேண்டும் என்று தீர்மானித்தேன். “ரொம்ப நன்றி அம்மா! இந்த ஜாதகருடைய தந்தை பெரிய பணக்காரர். சில அடிப்படை கேள்விகளை என்னிடம் கேட்டுவரச் சொன்னார். பிறகு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்கொண்டு அவரே வருவார். அவரிடம்போய் இப்படி ஐந்நூறு, ஆயிரம் என்றெல்லாம் சொல்லிவிடாதீர்கள். உங்களை ரொம்ப சீப்பாகக் கருதிவிடுவார். அவர் பத்தாயிரம், லட்சம் என்று வாங்கும் ஜோதிடர்களைத்தான் நம்புவார்....” என்று இழுத்தேன்.

அந்தப் பெண்ணின் முகத்தில் ஜோதி தெரிந்ததை நீங்கள் பார்த்திருக்கவேண்டும்! “மன்னிக்க வேண்டும் சார்!” என்றாள். அவள் போட்ட முதல் ‘சார்’ அதுதான். “நீங்கள் நாளை மறுநாள் வந்துவிடுங்கள். நான் அம்மா நோட்டில் குறித்து வைத்துவிடுகிறேன். உங்கள் போன் நம்பரும் கொடுங்கள்” என்று கேட்டுவாங்கிக்கொண்டார்.

ஜோதிடர் என்ற பெயரில் பந்தாவா பண்ணுகிறீர்கள்? நாளை மறுநாள் என்ன நடக்கப் போகிறது பாருங்கள் – என்று மனதில் நினைத்துக்கொண்டேன். அவர்களின் சிரிப்பு மட்டும் மனதை  உறுத்திக்கொண்டே இருந்தது. “அன்று நகைத்தாளடா! – உயிர் மாமனே!..” என்ற துரியோதனன் குரலும் விடாமல் ஒலித்துக்கொண்டே இருந்தது.
(தொடரும்)
© Y Chellappa


39 கருத்துகள்:

  1. /// அது காப்பியல்ல, கஞ்சி என்று... // ஹா... ஹா...

    நடந்த "sum"பவம் வெகு சுவாரஸ்யம்...!

    நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் ஐயா...

    ஆமாம் நாளை மறுநாள் என்ன நடந்தது...?

    பதிலளிநீக்கு
  2. இதென்ன செல்லப்பாவின் சபதமா சார் ,பாஞ்சாலி சபதத்தை விட நல்லாயிருக்கே ?

    பதிவுகளில் செஞ்சுரி போட்டதற்கு வாழ்த்துக்கள் !
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. நாரதர் கலகம் நன்மையில்தானே முடியும்! பொறுத்திருங்கள். நன்றி.

      நீக்கு
  3. நல்ல அனுபவம் சார்....ஜோசிய அனுபவங்கள் பண வைபவங்களாய் (அதான் பரிகாரங்கள் அப்படினு...பூஜை அது இது எல்லாம் ..) மாறுவதுதான் நடக்கின்றது அழகாக சுவைபட சொல்லியிருக்கின்றீர்கள்.....ஒரு வேளை அவர்கள் கொடுத்தது "காஃபி" என்று தெரிந்ததுனாலயோ".....தொடரும்னு போட்டு இப்படி சஸ்பென்ஸ் வைத்துவிட்டீர்களே.....//நாளை மறுநாள் என்ன நடக்கப் போகிறது பாருங்கள்// தங்கள் சூளுரை வெற்றியா இல்லை வெத்து வேட்டா என்று தெரிந்து கொள்ள அடுத்த பதிவு வரை காத்திருக்க வைத்துவிட்டீர்களே......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல மாதிரியான ஜோதிடர்களும் உண்டு. பொறுத்திருங்கள்.

      நீக்கு
  4. சார் பேனாவ....ஸாரி...ஸாரி....இப்பல்லாம் யாரு பேனா உபயோகிக்கின்றார்கள்....கம்ப்யூட்டர் கீபோர்டை உயர்த்தி காமிச்சு (அப்படித்தான் கிரிக்கெட் விளையாடுகிறவர்கள் செய்கின்றார்கள்) ஒரு ஃபோட்டோ கூட போட்டுருக்கலாமே சார்!!!!!!

    வாழ்த்துக்கள் சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாருடைய போட்டோவை? ஜோதிடருடையதா, அவரது செயலாளருடையதா? கொடுப்பார்களா அவர்கள்?...

      நீக்கு
  5. தங்களது பதிலடி என்ன என்று அறிவதற்குள் தொடரும் போட்டு விட்டீர்களே!
    சுவாரஸ்யம்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வப்பொழுது இப்படியெல்லாம் செய்தால்தான் எழுத்தாளர் என்று ஒப்புக்கொள்வார்கள் தம்பி!..(என்று சொல்லவில்லை; சில நேரங்களில் இம்மாதிரியும் எழுதவருகிறது! அவ்வளவே. தங்கள் வருகைக்கு நன்றி.)

      நீக்கு
  6. நல்ல இடத்தில் நிறுத்திட்டீங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானா நிறுத்தினேன்? அந்த ஜோதிடரம்மா அல்லவா நிறுத்திவிட்டார்கள்? தங்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  7. நூறுக்கு வாழ்த்துக்கள். முதல் பகுதிக்கும் இரண்டாவது பகுதிக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தி விட்டீர்கள். அந்த ஜோதிடரின் நிலையை அறிய ஆவல்

    பதிலளிநீக்கு
  8. எப்படி பதில் கொடுத்தீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன். பாஞ்சாலி சபதம் உவமை அருமை.

    பதிலளிநீக்கு
  9. நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் ஐயா
    தம 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம், தங்களைப் போன்றவர்களின் தொடர் முயற்சியைப் பார்த்து அடைந்த உத்வேகம்தான்! நன்றி நண்பரே!

      நீக்கு
  10. வணக்கம்
    கவிஞர்(ஐயா)

    அனுபவப் பதிவுகள் பல தந்து என்னையும் அனுபவசாலியாக்கிவிட்டீர்கள்.... 100வது பதிவுக்கு பாராட்டுக்கள் ஐயா. இன்னும் பல 100 பதிவுகள் மலர எனது வாழ்த்துக்கள்
    த.ம 8வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  11. அடுத்து என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்க ஆவலாய் இருக்கேன்

    பதிலளிநீக்கு
  12. அப்புறம் நூறுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! நாளை காலை அடுத்த பதிவு வரும்.

      நீக்கு
  13. வாழ்த்துக்கள் ஐயா.

    ஆவலுடன் தொடருகிறேன்.

    பதிலளிநீக்கு
  14. அருமை அய்யா... ஆவலுடன் அடுத்த பதிவை நோக்கி...

    பதிலளிநீக்கு
  15. 100 க்கு வாழ்த்துகள் அது ஆயிரம் பத்தாயிரமாக வளர வாழ்த்த மாட்டேன் உங்கள் உடலில் உயிரும் மனதும் உடல் திறனும் இரூகும் வரை தொடர்ந்து எழுதிவாருங்கள் வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  16. தங்களது பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் நூல் மூலமாக தங்களது எழுத்து மெருகேறி வருவதைக் கண்டேன். தாங்கள் இன்னும் மென்மேலும் பல பதிவுகளைப் பதிய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அருமையான பதிவைத் தொடர்ந்து படிக்கும்போது தொடரும்...என்று கூறிவிட்டீர்கள். காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  17. பதிவு ரொம்ப நீளமா. இல்லை ஒரு சுவாரசியத்துக்காகத் தொடரும்னு போட்டீர்களா.தன்னம்பிக்கை இல்லாதவர் தேடும் ஆதரவூ இந்த ஜோசியம் என்று தோன்றுகிறது. கதை இண்டெரெஸ்டிங். நூறுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  18. தங்கள்
    நூறாவது பதிவிற்கு
    எனது
    வாழ்த்துகள்!
    சிறந்த தொடர்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  19. Her Father had written some of the best books on Astrology and certainly would help.
    -Surya

    பதிலளிநீக்கு
  20. நூறாவது பதிவுக்கு தகுந்த சுவாரஸ்யமான சம்பவம் !... அடுத்த பாகத்தை படிக்க போகிறேன் !

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு